சொல்லத் துணிந்தேன் – 79

சொல்லத் துணிந்தேன் – 79

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 

19.06.2021 அன்று ‘அரங்கம்’ மின்னிதழில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எஃவ்) முன்னாள் செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபா அவர்களின் 31 ஆவது நினைவு தினத்தையொட்டி அன்னார் பற்றிய எனது மனப்பதிவுகளைக் கட்டுரையாக வடித்திருந்தேன். 

இக்கட்டுரைக்கு எதிர்வினையாக, ‘பரமதேவா இராமலிங்கம்’ எனும் முகநூலில் ‘அரைப் பார்க்கின்சன் நோயால் அவதியுறும் அரசியல் (வாதிகள்) விமர்சகர்கள்’ என்ற தலைப்பில் மார்க்கண்டேயன் என்பவர் தனது மனவேக்காடுகளை வெளிப்படுத்தியுள்ளார். 

‘அரங்கம்’ மின்னிதழில் வெளிவந்த ஆக்கமொன்று குறித்த தனது உணர்வு வெளிப்பாட்டை நாகரிகமான மொழியில் அதே இதழில் வெளிப்படுத்துவதே முறையானது. ஆனால் இந்த முகநூல் அன்பரான மார்க்கண்டேயன் அவ்வாறில்லாமல் தனது முகநூலில் எனது கட்டுரையின் மையப் பொருளிலிருந்து விலகி என்னைப் பற்றியும் எனது தமிழ்த் தேசிய அரசியல் ஈடுபாடு பற்றியும் அரைகுறையாகத் தெரிந்து வைத்துக் கொண்டு பல தவறான தகவல்களுடன் ஆங்காங்கே என் மீது தனிநபர் தாக்குதல்களையும் தொடுத்துள்ளார். அவரது என்மீதான தனிநபர் தாக்குதல்களுக்கு அவர் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளையும் வாக்கியங்களையும் அவை வெளிப்படுத்த முயலும் வீணான அவதூறுகளையும் அலட்சியம் செய்துவிட்டு, அவரது முகநூல் பதிவில் இடையீடாகக் காணப்படும் அரசியல் சார்ந்த விடயங்களுக்கு மட்டும் எனது பதிலை இப்பத்தியில் பதிவிடுகிறேன்.  

இம்முகநூல் பதிவு தற்செயலாக என் பார்வைக்குக் கிடைத்ததால் இப்பதிலை எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. இல்லாவிட்டால் அந்த வாய்ப்புத் தவறியிருக்கும். எனவே இந்முகநூல் அன்பரான மார்க்கண்டேயனை நான் வினயமாக வேண்டிக் கொள்வதென்னவெனில் எனது’சொல்லத் துணிந்தேன்’ பத்தித் தொடர் பற்றிய விமர்சனங்களை அவர் முன் வைக்க விரும்பினால் ‘அரங்கம்’ மின்னிதழே சரியான களமாகும். ‘பரமதேவா இராமலிங்கம்’ எனும் முகநூல் அல்ல. 

முகநூல் அன்பரான மார்க்கண்டேயன் என்னை ஈ.பி.ஆர்.எல்.எஃவ். இயக்கத்தின் முன்னாள் போராளி அல்லது ஈ.பி.ஆர்.எல்.எஃவ். என்ற அரசியல் கட்சியின் உறுப்பினர் என்று கற்பிதம் செய்து கொண்டே தனது கூற்றுக்களை வெளிப்படுத்தியுள்ளார். இது தவறானதொரு புரிதலாகும். எனவே முதலில் அதனைத் தெளிவுபடுத்த வேண்டும். 

நான் எனது பதினெட்டு வயதிலேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினனானவன். தமிழ்த் தேசிய அரசியலின் பால் கொண்ட ஈர்ப்புக் காரணமாக அரசாங்க ஊழியனாக இருக்கும்போதே அதில் ஈடுபட்டு உழைத்தவன். விரிவஞ்சி அவற்றை விவரிக்க விரும்பவில்லை. 1968இல் இருந்து 1976வரை தமிழரசுக் கட்சியைச் சார்ந்தும், 1976லிருந்து 1989வரை தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சார்ந்தும் செயற்பட்டவன். தமிழரசுக்கட்சியின் தற்போதைய தலைவர் மாவை சேனாதிராசாவுக்கும் முன்னாள் செயலாளர் துரைராஜசிங்கத்திற்கும் எனது தமிழ்த்தேசிய அரசியல் பின்னணி குறித்து நன்கு தெரியும்.  

தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்ந்து நான் செய்யப்பட்டிருந்தாலும் இடதுசாரிச் சித்தாந்தங்களின் மீது சிறுவயதிலிருந்தே எனக்கிருந்த ஈர்ப்புக் காரணமாக தமிழ்ப் போராளி இயக்கங்களான ஈரோஸ் மற்றும் ஈபிஆர்எல்எஃவ் ஆகியவற்றின் அரசியற் செயற்பாடுகளுடன் குறிப்பாக இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் (1987) அந்த ஒப்பந்தத்தை அனுசரித்துச் செயற்பட முன் வந்த தோழர் பத்மநாபாவின் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியுடன், மாகாண சபை முறைமையை வலுப்படுத்துவதினூடாகத் தமிழ் மக்களுக்கு அதனால் விளையக்கூடிய சமூக பொருளாதார அரசியல் அனுகூலங்களை அதிகபட்சம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நெருக்கமாக இணைந்து இயங்கினேன். இதனாலேயே 1989ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈபிஆர்எல்எஃவ், ரெலோ, ஈஎன்டிஎல்எஃவ் என்பன இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் ‘உதயசூரியன்’ சின்னத்தின்கீழ் போட்டியிட்டபோது திகாமடுல்ல (அம்பாறை) தேர்தல் மாவட்டத்தில் உதயசூரியன் சின்னத்தின் கீழான தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் பட்டியலில் ஈபிஆர்எல்எஃவ் சார்பில் நானும் இடம்பெற்றிருந்தேன். இதனை அன்று நான் சார்ந்திருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய செயலாளர் நாயகம் அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களும் அங்கீகரித்திருந்தார். மட்டக்களப்பு மாவட்டத் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர் பட்டியலில் என்னைப்போல் ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சி பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சார்ந்த சாம் தம்பிமுத்து அவர்கள் ஈபிஆர்எல்எஃவ் சார்பில் இடம்பெற்றிருந்தார். அதேபோல் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் பட்டிருப்புத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.இராசமாணிக்கம் அவர்களின் மருமகனான அல்பேர்ட் சீவரட்ணம் (சாணக்கியனின் மாமா- சாணக்கியனின் தந்தையின் சகோதரியின் கணவர்) ஈ.என்.டி.எல்.எஃவ். சார்பில் வேட்பாளராக இடம்பெற்றிருந்தார். இதேபோல்தான் நானும் திகாமடுல்ல (அம்பாறை) தேர்தல் மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர் பட்டியலில் ஈபிஆர்எல்எஃவ் சார்பில் இடம் பெற்றிருந்தேன். அப்போதைய வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைந்த வடகிழக்கு மாகாண அரசுக்கு அனுசரணையாக இயங்கக்கூடிய ஒரு பாராளுமன்ற அணி மத்தியில் இருக்க வேண்டுமென்பதுவே இத்தேர்தலில் ஈபிஆர்எல்எஃவ் சார்பில் போட்டியிட நான் முன்வந்ததற்கான அரசியல் காரணம். 

மேலும், இலங்கைத் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் ஆத்மார்த்தமான ஈடுபாட்டைக் கொண்டிருந்தவனானாலும் தமிழ்ப் போராளி இயக்கங்கள் எதுவானாலும் அவை மேற்கொண்ட அரசியல் படுகொலைகள் – அப்பாவித் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் மீதான கொலை தாக்குதல்கள்- சகோதரப் படுகொலைகள்- வன்முறைகள்- சமூக விரோதச் செயற்பாடுகள் எவற்றுடனும் ஒருக்காலும் எனக்கு உடன்பாடு கிடையாது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரை நான் ஓர் அரசியல் செயற்பாட்டாளனே தவிர ஆயுதப் போராளியல்ல. ஆயுதமேந்திய எந்த இயக்கத்திலும் நான் உறுப்பினனாக இருந்தவனுமல்ல. தமிழ்ப் போராளி இயக்கங்கள் புரிந்த எந்த அரசியல் படுகொலைகளையும் நான் ஆதரித்தவனுமல்ல. கொலைகள் என்று வரும்போது எந்தப் போராளி இயக்கமும் ‘புனிதன்’ அல்ல. இந்த விடயத்தில் எந்த இயக்கத்திற்காகவும் நான் வக்காலத்து வாங்கவுமில்லை. 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அண்மைக்காலமாக நான் அதிகம் விமர்சிக்கக் காரணம் அவ்வியக்கத் தலைமை கொண்டிருந்த பாசிசப் போக்கே (தமிழ்ப்பாசிசம்). இன்றைய தென்னிலங்கை- இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியல் – பூகோள அரசியல் களநிலையில் புலிகளால் மூளைச்சலவை செய்து ஊட்டப் பெற்ற தமிழ்ப் பாசிச வாதப் போதைலிருந்து இலங்கைத் தமிழ்ச் சமூகம் மீண்டெழுந்தால் மட்டுமே தமிழ்த் தேசிய அரசியல் சரியான தடத்தில் பயணிப்பதற்கான பாதை திறக்கும். 

அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) உட்படத் தமிழ்த் தேசியக் கட்சிகளையும் நான் அதிகம் விமர்சிக்கக் காரணம் தேர்தல் அரசியலுக்கான வாக்கு வங்கியை மட்டுமே குறிவைத்து இக்கட்சிகள் காவித்திரிகின்ற ‘போலி’த் தமிழ்த் தேசிய அரசியலே. மட்டுமல்லாமல் இக்கட்சிகள் இப்போதும்கூட புலிகளின் புகழ் பாடுவதால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளும் விளையப் போவதில்லை. தமிழ்த்தேசியம் என்ற போர்வையில் இக்கட்சிகள் முன்னெடுப்பது குறுந் தமிழ்த் தேசியவாதமாகும். 

1987இல் கைச்சாத்தான இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்தைப் புலிகள் அனுசரித்துப் போகாமையும், ஈபிஆர்எல்எஃவ் தலைமையில் அமைந்த அப்போதைய வடகிழக்கு மாகாண அரச நிர்வாகத்தைப் புலிகள் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவுடன் கூட்டு வைத்துக் குழப்பியமையும், இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றவென வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதி காக்கும் படையினர் (INDIAN PEACE KEEPING FORCE) மீது புலிகள் போர் தொடுத்தமையும், புலிகள் அமிர்தலிங்கத்தைப் படுகொலை செய்தமையும், இந்திய மண்ணில் வைத்து தோழர் பத்மநாபா உட்படப் பதின்மூன்று சக தோழர்களையும் புலிகள் படுகொலை செய்தமையும், முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மீது புலிகள் மேற்கொண்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் கொலையும், 13.07.1989 அன்று நடைபெற்ற அமிர்தலிங்கத்தின் கொலை மரணத்தின் பின்னர் உயிருக்குப் பயந்து தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் தங்கள் சமூகப் பொறுப்பையும் தார்மீகக் கடமையையும் மறந்து உடனடியாக உயிரைக் காத்துக் கொள்ளவும் பின்னர் பதவி நாற்காலிகளுக்காகவும் புலிகளின் வாலைப் பிடித்துத் தொங்கியமையுமே தமிழ்த் தேசிய அரசியல் பயணம் தடம் புரளுவதற்குக் காரணங்களாகும். புலிகளைத் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் (2001) தமிழ்த் தேசிய அரசியலின் தத்துவார்த்த ரீதியான பின்னடைவாகும்.  

அமிர்தலிங்கம் அவர்களின் மரணத்தின் பின்னரான தமிழர் விடுதலைக் கூட்டணியின் போக்கு எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதால் அக்கட்சியிலிருந்து என்னை நானே அந்நியப்படுத்திக் கொண்டேன். தோழர் பத்மநாபாவின் மறைவுக்குப் பின்னரும் 1990லிருந்து 2000 வரை, ஈபிஆர்எல்எஃவ் கட்சியின் உத்தியோகபூர்வமான உறுப்பினராக இல்லாதிருந்தபோதிலும், அக்கட்சியின் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்பட அக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களுடனும் முக்கியமான தோழர்களுடனும் மிக நெருக்கமாக இணைந்து கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ஒருவருக்குச் சமதையாக உத்தியோகப்பற்றற்ற முறையிலே பணியாற்றினேன். பின்னர் ஈபிஆர்எல்எஃவ் இரண்டாக உடைந்து சுரேஷ் அணி, பத்மநாபா அணி (வரதர் அணி) என ஆகிய போது நான் பத்மநாபா அணியையே ஆதரித்தேன். சுரேஷ் அணியின் பக்கம் சுயநலமும் பத்மநாபா அணியின் பக்கம் நியாயமும் இருப்பதாக எனக்குப்பட்டது.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திலும் (2001) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளைத் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்ட விடயத்திலும் மொத்தத்தில் ‘தமிழ்த் தேசியம்’ என்ற பெயரில் புலிகள் மேற்கொண்ட பாசிச நடவடிக்கைகளுடன் அரசியல் தத்துவார்த்த ரீதியாக எனக்கு உடன்பாடில்லை.  

2001 இலிருந்து 2015 வரை அதாவது கலாநிதி கா.விக்னேஸ்வரன் தலைமையிலான அகில இலங்கை தமிழர் மகாசபை எனும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் செயலாளராக ஆகும்வரை கட்சி அரசியல் நடவடிக்கைகள் எதிலும் பகிரங்கமாக ஈடுபடாமல் தமிழ்த் தேசிய அரசியலில் அமைதியாக ‘அஞ்ஞாத வாசம்’ மேற்கொண்டேன். 

06.01.2018 அன்று நிகழ்ந்த ‘கிழக்குத் தமிழர் ஒன்றியம்’ என்ற அமைப்பின் உருவாக்கத்துடன் (இணைத் ஸ்தாபகர்களுள் நானும் ஒருவன்) மீண்டும் என்னை தீவிர அரசியல் செயற்பாட்டாளனாக ஆக்கிக் கொண்டேன்.  

தற்போது நான் ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ என்னும் அரசியல் கூட்டணியின் (POLITICAL ALLIANCE) தலைவர். அகில இலங்கை தமிழர் மகா சபையின் செயலாளர். 09.04.2021 அன்று கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள ‘அதிகாரப் பகிர்வு’ இயக்கத்தின் (MOVEMENT FOR DEVOLUTION OF POWER) நிறைவேற்றுக் குழு உறுப்பினர். 

இந்தப் பின்னணியிலேயே முகநூல் அன்பர் மார்க்கண்டேயனின் சில குறிப்பிட்ட வரிகளுக்குப் பதில் தரவுள்ளேன். 

(1) மார்க்கண்டேயனின் முகநூல் வரிகள். 

‘தயாகமகே என்ற ஐக்கிய தேசியக் கட்சிச் சார்பில் தெரிவான மாகாண சபை உறுப்பினரைக் கிழக்கு மாகாண முதல்வராகத் தெரிவு செய்யும்படி தான் விடுத்த கோரிக்கையினை அலட்சியப்படுத்தியது தமிழருக்கு இரா.சம்பந்தன் இழைத்த மகா துரோகம் என நிறுவப் படாதபாடுபட்டவர் இவர் (தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்)’- 

எனது பதில்: 

இப்படியானதொரு கோரிக்கையை நான் இரா.சம்பந்தனிடம் விடுக்கவேயில்லை. உண்மையில் நடந்தது என்னவென்றால், 08.09.2012 இல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற ஆசனங்கள் வருமாறு:  

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு UPFA -14 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு TNA – 11 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் SLMC – 07 

ஐக்கிய தேசியக் கட்சி UNP – 04 

தேசிய சுதந்திர முன்னணி NFF – 01 

மொத்தம் – 37 

11 ஆசனங்களைப் பெற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தந்திரோபாய ரீதியாக 14 ஆசனங்களைக் கொண்டிருந்த – மத்தியில் ஆட்சி அதிகாரத்திலிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைப்பதை விட்டுவிட்டு 07 ஆசனங்களைக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மூக்குடைபட்டது. இறுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் உடன்பாட்டிற்கு வந்து கிழக்கு மாகாண சபையின் முதல் இரண்டரை வருட காலத்திற்கு UPFA ஐச் சேர்ந்து நஜீப் மஜீத் முதலமைச்சரானார். இது முதலாம் கட்டம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முஸ்லிம் காங்கிரஸ் தங்களை ஏமாற்றிவிட்டதாகப் புலம்பினர். 

இரண்டாம் கட்டம்தான் 2015 ஜனவரி 08இல் மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாகிய பின்னர் ஏற்பட்டது. இப்போது புதிய ஜனாதிபதியை அணுகி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் சேர்ந்து மாகாணசபையில் ஆட்சி அமைப்பதற்குத் தந்திரோபாய ரீதியாகச் செயற்படாமல் முன்பு அதாவது முதலாம் கட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸிடம் மூக்குடைபட்ட அனுபவத்தையும் மறந்து மீண்டும் அதே முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இழுபறிப்பட்டுக்கொண்டிருந்த வேளையில்தான், பிள்ளையானும் மாகாண அமைச்சர்களான உதுமாலெப்பையும் விமலவீர திஸாநாயக்காவும் இரா.சம்பந்தனை அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து “எங்களுக்கு எந்தப் பதவிகளும் வேண்டாம். எந்த நிபந்தனைகளுமின்றி TNA கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பதற்கு UPFA ஆதரவு வழங்கத் தயார்” என்று முன்வந்தும்கூடச் சம்பந்தன் இதனைத் தட்டிக் கழித்தார். தந்திரோபாய ரீதியாக இதற்குச் சம்மதித்திருக்கலாம். அதுவும் நடைபெறவில்லை. 

இதன்போதுதான் UNP கட்சியைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயாகமகே TNA இன் 11 ஆசனங்களுடன் UNP யின் 04 ஆசனங்களும் சேர்ந்து ஆட்சியமைப்பதற்குத் தேவையான மிகுதி ஆசனங்களைத் தான் தேடிக் கொள்வதாகவும்- ஆறு மாதத்திற்குத் தன்னைக் கிழக்கு மாகாண முதலமைச்சராக்கும்படியும்- ஏனைய நான்கு மாகாண அமைச்சுப் பதவிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வழங்குவதாகவும்- 06 மாத காலத்தின் பின்னர் அந்த வருடம் (2015) ஆகஸ்டில் தான் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும்- அப்போது முதலமைச்சர் பதவியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே கையளிப்பதாயும்- தான் முதலமைச்சராகப் பதவி வகிக்கும் ஆறு மாத காலப் பகுதிக்குள் மத்தியிலுள்ள தேசிய அரசாங்கத்தின் அமைச்சுக்களிடமிருந்து கிழக்கு மாகாண அபிவிருத்திக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுத் தந்துவிட்டே செல்வதாகவும் வாக்குறுதியளித்து, ஆட்சி அமைப்பதற்காக TNA இன் ஆதரவைக் கோரி நின்றார். இம் முயற்சி மட்டக்களப்பு சிவில் அமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு சிவில் அமைப்பின் தலைவர் எஸ். மாமாங்கராஜா இதற்குச் சாட்சியாக உள்ளார். இதற்கான ஒரு கூட்டம் திருகோணமலையில் ஆயர் வணக்கத்துக்குரிய கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களின் ஏற்பாட்டில் கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் மட்டக்களப்பு சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், தயாகமகே மற்றும் அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் விளங்கிய தண்டாயுதபாணியும் கலந்து கொண்டிருந்தனர். இதையேதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) அவர்கள் கிழக்கிலங்கையிலிருந்து ஒளிபரப்பாகும் ஒரு தொலைக்காட்சிச் சேவைக்கு வழங்கிய பேட்டியில் திரு. இரா.சம்பந்தன் அவர்கள் இந்த வாய்ப்பை எவ்வாறு தப்பிதம் செய்தார் என்று தெளிவாகக் குறிப்பிட்டுமுள்ளார். கிழக்கு மாகாணசபையில் அப்போதிருந்த 11 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்களில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தவிர்ந்த ஏனைய பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்களெல்லோரும் இந்த ஏற்பாட்டுக்குச் சாதகமான சமிக்ஞைகளையே வழங்கியிருந்தனர். ஆனால் இதற்கும் இரா.சம்பந்தன் தடை போட்டார். 

இச்சம்பவம் இலங்கையில் நடைபெற்றபோது நான் வெளிநாட்டிலிருந்தேன். ஆனாலும், இந்த விடயங்களைக் கேள்வியுற்ற நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களாகவிருந்த 11 பேரில் ஒருவரான ஈபிஆர்எல்எஃவ் ஐச் சேர்ந்த இரா.துரைரட்ணத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தயாகமகேயின் கோரிக்கையைச் சாதகமாகப் பரிசீலிக்கும்படி ஆலோசனை கூறினேன். 

(என்றென்றும் 16 வயதே உடைய) அறிவு முதிர்ச்சி அடையாத முகநூல் நண்பர் மார்க்கண்டேயன் இந்த விடயங்களை முழுமையாக அறியாமல் அல்லது அறிந்து கொள்ள முயற்சிக்காமல் நுனிப்புல் மேய்ந்துவிட்டுத் தன் முகநூல் பதிவையிட்டுள்ளார். 

அரசியல் ஒரு சமூக விஞ்ஞானம். அதில் பரிசோதனை முயற்சிகளும் தேவை. ஆறு மாதங்களுக்கு மட்டுமே தயாகமகேவை கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சராக்கி அதன்மூலம் கிழக்குத் தமிழர்களுக்குக் கிடைக்கக்கூடிய சமூக பொருளாதார அரசியல் நன்மைகளைப் பெற்றிருக்கலாம். தந்திரோபாய ரீதியாக இது விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டிருக்க வேண்டுமென்பதே எனது அபிப்பிராயம். ஆனால் கிழக்கு மாகாணத் தமிழர்களின் நலன்களைவிட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முகம் கோணாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்ற கடைந்தெடுத்த சுயநலம்தான் இரா.சம்பந்தன் இந்த முயற்சிக்குத் தடை போட்டதன் காரணம். 

இதே சம்பந்தன்தான் முன்பு 2008ல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தலின்போது அத்தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாத போதிலும் பிள்ளையான் முதலமைச்சராக வருவதைத் தடுப்பதற்காகச் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமை முதலமைச்சராக்கத் திரைமறைவில் முயற்சித்துத் தோல்வி கண்டவர். 

தயாகமகேவை முதலமைச்சராக்கும் கோரிக்கையைப் புறக்கணித்ததற்கான காரணமாகத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கூறியது என்னவென்றால் “ஒரு சிங்களவரைக் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக்க மாட்டோம்” என்பதாகும். இது உண்மையில் தமிழ்த் தேசியவாதம் அல்ல. இனவாதம் ஆகும். 

இறுதியில் என்ன நடந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தண்ணி காட்டிவிட்டு முன்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் UPFA உடன் வைத்துக் கொண்ட உடன்படிக்கையைப் பயன்படுத்தி மீண்டும் UPFA உடன் இணைந்து மிகுதி இரண்டரை வருட காலத்திற்கும் SLMC ஐச் சேர்ந்து நசீர் அகமட் டை முதலமைச்சராக்கியது. கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்ததுதான்TNA இன் அரசியலானது. இறுதியில் TNA ஆனது SLMC யிடம் யாசித்து இரு மாகாண அமைச்சுப் பதவிகளையும் சபையின் பிரதித் தவிசாளர் பதவியையும் பிச்சையாகப் பெற்றுக்கொண்டது. அதிலும், பெற்றுக்கொண்ட அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைவாய்ப்புக் ‘கோட்டா’க்களை மீண்டும் முதலமைச்சர் நசீர் அகமட்டிடமே கையளித்து உரிய ‘கைம்மாறு’களையும் பெற்றுக்கொண்டதாகவும் அப்போது கதை அடிபட்டது . இது சில வேளைகளில் உண்மையாகவும் இருக்கலாம். ஏனெனில், அதனால்தானோ என்னவோ இவர்களின் சிபார்சுக் கடிதங்களால் முஸ்லீம் இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்புப் பெற்றுத் தமிழர் பிரதேசக் காரியாலயங்களெங்கும் வியாபித்திருந்தனர் போலும். இந்தச் ‘சங்கதிகள்’ ‘கோமா’ விலிருந்து விழித்தெழுந்தவர் போன்ற முகநூல் அன்பரான மார்க்கண்டேயனுக்குத் தெரியவில்லையா? 

(2) மார்க்கண்டேயனின் முகநூல் வரிகள்:- 

“அம்பாறை மாவட்டத்தில் தமிழரின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற ஓரணியாகப் போட்டியிட வேண்டுமென 2000ஆம் ஆண்டுத் தேர்தலில் ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சகல தரப்பினரையும் இணைத்தாலும் ஒரே ஒரு ஆசனந்தான் கிடைக்கும். தமிழரின் நலன் என்பதை முன்னிறுத்துவதுடன் கட்சி சார்பில்லாமல் வெற்றி பெறுபவர் செயற்படுவார் என்ற எதிர்பார்ப்புடன் தமிழ்த் தலைமை இக் கோரிக்கைக்குச் சம்மதித்தது. ஈபிடிபி சார்பில் போட்டியிட்ட சங்கர் என்பவர் மற்றயோரைவிட வாக்குகள் கூடப் பெற்றமையால் எம்.பி. ஆனார். உடனே அவர் தான் ஈ.பி.டி.பி. என அறிவித்துவிட்டு அரசில் இணைந்து கொண்டார். அந்தக் காலத்தில் இது தமிழர் நலனுக்கு எதிரானதே. இது தொடர்பாக கோபாலகிருஷ்ணன் வஞ்சக மௌனம் சாதித்தார். இது தவறு என சங்கருக்குச் சுட்டிக்காட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது” 

எனது பதில்: 

(இதற்குரிய எனது பதில் அடுத்த பத்தியில் (சொல்லத் துணிந்தேன்-80) இடம் பெறும்.)