— அழகு குணசீலன் —
கடைக்காரனும்….! கமக்காரனும்…..!!
கிழக்கின் தனித்துவ உறவுப் பாரம்பரியம்.
கிழக்கில் தமிழ் -முஸ்ஸிம் சமூக உறவு தொடர்பாக நிறையவே எழுதப்பட்டும், பேசப்பட்டும் வரும் காலம் இது. இந்த நிலையில் “அரங்கம்” பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பூபாலரெட்ணம் சீவகன் அவர்கள் ஈஸ்டர் தாக்குதலை அடுத்து ஊடகமொன்றுக்கு வழங்கிய காணொளிப் பேட்டியொன்றை பார்க்கவும், கேட்கவும் கிடைத்தது.
அந்த பேட்டியில் சீவகன் பயன்படுத்திய ஒரேயோரு வார்த்தையே இப்பதிவை காலக்கண்ணாடியில் இடத் தூண்டியது. அது என்ன வார்த்தை? அதில் ஒழிந்து, மறைந்து கிடக்கின்ற தனித்துவங்கள் எவை?
அதுதான் “பாரம்பரியம்”. தொன்று தொட்டு நிலவும் தமிழ் முஸ்லீம் உறவை அவர் கிழக்கின் தனித்துவ பாரம்பரியம் என்று அடையாளப்படுத்துகிறார். இந்த பாரம்பரியத்தில் சமூக, பொருளாதார, அரசியல் சார்ந்த ஹாஜியார், வண்ணக்கர் உறவு முதல் வியாபாரி, வேளாண்மைக்காரன் உறவுவரை விரிந்து பரந்து இருக்கின்ற பாரம்பரியம் இது. இரு சமூகங்களினதும் பல்வேறு சமூக உட்கட்டமைப்பு உறவுகளினூடாக ஆண்டாண்டுகாலமாக கட்டியெழுப்பப்பட்ட உறவுப்பாலம்.
மிக….மிக அருகருகேயும், கலந்தும் வாழ்கின்ற இந்த இரு சமூகங்களினதும் உறவு போர்த்துக்கேயரால் துரத்தப்பட்டபின் வந்து குடியேறியதால் மட்டும் ஏற்பட்டதல்ல. 16ம் நூற்றாண்டுக்கும் முந்தியது, பழைமை வாய்ந்தது. பாரசீகக் குடா – அரபுக்கடலூடான பட்டாணிகளின் பட்டுவீதி வியாபாரம் இதன் ஆரம்பம்.
சமூக தனித்துவங்களும், பொருளாதார கொடுக்கல் வாங்கல்களும், அரசியல் செயற்பாடுகளும் இரண்டறக்கலந்த அந்த மனித வாழ்வியலை இரு சமூகங்களும் கல்முனை, மற்றும் வாழைச்சேனை பிரதேசசபை கட்சி அரசியல் காழ்ப்புணர்ச்சியை மட்டும் கொண்டு மதிப்பிடுவது அல்லது காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதலையும், மட்டக்களப்பு சியோன்தேவாலய ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலையும் மட்டும் கொண்டு எடைபோடுவது வரலாற்று தவறாக அமைந்து விடும்.
பாராளுமன்ற அரசியலில் புலியாகவும்,நாயாகவும் இருப்பதில் பெருமை கொள்கின்ற தமிழ், முஸ்லீம் அரசியல்வாதிகள் மனிதனாக இருப்பதில் சிறுமை கொள்கிறார்கள்(?). அரிது ….அரிது ..நாயாய்ப்…… புலியாய்ப் பிறப்பதரிது…….! இதனால் தானோ என்னவோ இருதரப்பு அரசியல்வாதிகளாலும், மதத்தலைவர்களாலும் இந்த உடைந்த உறவை கட்டியெழுப்ப முடியாது என்று அடித்துச் சொல்கிறார் அரங்கம் ஆசிரியர்.
இரு சமூகங்களுக்கும் இடையிலான இந்த உறவானது வேளாண்மை -வியாபார உறவாக, கல்லூரி -தொழில்சார் -அயலவர் உறவான நட்புறவாக, தாய்வழி மரபுகள், வழக்குகள் சார்ந்த சமூக உறவாக, இவை அனைத்தையும் தாண்டிய தமிழ் இலக்கிய உறவாக விரிந்து, பரந்து கிடக்கிறது. இந்தப் பன்மை தொன்மைப் பண்புகள் குறித்து கிழக்கின் இருசமூகங்களும் ஒருவருக்கொருவர் தங்கள் தோள்களைத் தட்டிக் கொடுத்து பெருமை கொள்ள முடியுமா? இல்லையா?
1980களிலும், தமிழ் – முஸ்லீம் உறவுகள் பெரிதும் சீரழிந்த 1990களிலும் அதற்குப் பின்னரும் பிறந்தவர்களுக்கு ஆயுத அரசியலின் வடுக்களும், நாய், புலி அரசியலின் எச்சங்களும் தான் தெரியும். எனவே இரு சமூகங்களையும் சேர்ந்த இந்தப்பிரிவினருக்கு சமூக விழுமியங்கள், மதம்சார்ந்த புரிந்துணர்வு, ஒருங்கிணைந்த வாழ்வியல் போன்ற விடயங்களில் கல்வி யூட்டவேண்டிய தேவை இருக்கிறது.
இக்கல்வியை பாடசாலைகளிலும்,கிழக்கின் பல்கலைக்கழகங்களிலும் வழங்குவதன் மூலம் ஒவ்வொரு வீட்டுக் கதவையும் இச் சமாதானச் செய்தி தட்டவும், எட்டவும் செய்ய முடியும். இந்த வரலாற்றுப் பணிக்கு முதலில் மணிகட்டவேண்டியவர்கள் இருதரப்பிலும் உள்ள சாதாரண சாமானிய மக்கள். அவர்கள் தான் இந்த உறவின் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள், உணர்ந்தவர்கள், அனுபவித்தவர்கள். இந்த உறவுப் பாலம் “இன வன்முறைக்குண்டு” வைத்து தகர்க்கப்பட்டதன் வாழ்வியல் துயரங்களை அனுபவித்தவர்கள்.
(*) பொருளாதாரம் சார்ந்த தொழில் உறவு:
ஹாஜியாரும், வண்ணக்கரும் மட்டுமன்றி, விதானையார், உடையார், போடியார், மற்றும் பைசிக்கிளில் பெட்டிகட்டி வீட்டுக்கு வீடு மிளகாய், வெண்காயம், கருவாடு என்று கூறிவிற்று அதற்குப்பதிலாக கூப்பன் அரிசியை, மாங்காய், தேங்காய், வாழைக்காயை பண்டமாற்றுச் செய்த தமிழ்க்கிராமங்களின் அம்மாக்களுக்கும், காத்தான்குடி நானாக்களுக்கும் உள்ள உறவும் தொடர்பும் இது.
நெல் வயல் விதைப்புக்கு விதைநெல்லையும், உழவு இயந்திரத்தையும் போடியார் /விதானையார்/ உடையார் இவர்களிடம் இருந்து பெற்று அதற்குப்பதிலாக இரசாயன பசளைகளையும், கிருமிநாசினிகளையும் ஹாஜியாரும், மௌலவியும் பரிமாறிக்கொண்ட எழுத்து மூலமான உறுதிப்படுத்தல்கள் அற்ற அற்புதமான நம்பிக்கையில் இந்த பாரம்பரிய உறவுகட்டடப்பட்டது.
நெல்லை மூடை மூடையாக வாங்கி தமிழ்க்கிராமங்களில் சேகரித்து பின்னர் மாட்டுவண்டியில் /உழவுஇயந்திரத்தில் ஏற்றி மில்லுக்கு கொண்டுபோகச் சொன்ன சொல்லுக்கு இலக்கணம் வகுத்த உறவு. வாரத்தில் ஒருதடவை காத்தான்குடிக்குப்போய் காசு கொடுக்காமலே கணக்கை வைத்துக்கொள்ளுங்கோ முதலாளி, என்று வேளாண்மைக்காரன் காற்றாடி கட்டி சாமான்கள் காவி உடையார் வீடுவந்து சேர்ந்த கதை இந்த உறவுப்பாலம்.
ஒல்லிக்குளத்துக் காக்கா உடுப்புக்கட்டிய சைக்கிளில் ஊர், ஊராய்ச் சுற்றுவார். கொஞ்சிக்காயன் கொன்னை அகம்மது கொ…கொ…கொச்சிக்காய் என்று கூவ, மறுபக்க குறுக்கு ஒழுங்கையில் காசிம்பாவாவின் கருவாட்டுக் குரல் கேட்கும். ஐஸ்பழக்காரன் ஊதும்குழல் கேட்டு “கடப்படிக்கு” ஓடுகையில் காசுக்கவலையின்றி ஐஸ்பழத்தைத் தந்து அடுத்த முறை “உம்மாட்ட” வாங்கிக்கிறன் என்று சொல்வான் இஸ்மாயில்.
படுவான்கரை மற்றும் எழுவான் கரை உடையார், விதானையார் போன்றவர்களுக்கு கல்முனை கரவாகு வட்டையில் நெற்காணிகள் இருந்தன. இக் காணிகளை அவர்கள் அப்பகுதி முஸ்லீம்களுக்கே குத்தகைக்கு கொடுத்திருந்தார்கள். வருடா வருடம் வேளாண்மை வெட்டி முடிந்த பின்னர், அனேகமாக சித்திரை புதுவருடத்தை அண்டியநாட்களில் வாடகைக்கார்கள் உடையார் / விதானையார் வீட்டுக் கடப்படியில் நிறுத்தப்பட்டிருக்கும்.
வாழைக்குலைகள், அரிசிமூடைகள், கடல்மீன், கருவாடு, வட்டிலப்பம் உள்ளிட்ட பல்வேறு தின்பண்டங்கள் கொண்டு வந்து குவிக்கப்படும். இவ்வாறு ரம்ழான் பெருநாளுக்கு உடையாரும், விதானையாரும் கார் பிடித்து கரவாகு வட்டைக்கிராமங்களுக்கு பயணிப்பார்கள். கூடவே தயிர், தேன், உன்னிச்சை கருவாடும், ஆடும், பாணிச்சேவலும் காரில் ஏற்றப்படும்.
இன்று இருதரப்பும் மனிதம் நிறைந்த இந்தமானிட உறவைத் தொவைத்து விட்டு ஆற்றில் போட்டதை குளத்தில் தேடுகிறோம். இது பொருளாதார உறவுதான் ஆனால் பணம் அல்ல மனம் முதன்மையாயிற்று.
(*) சமூக மரபுகள் வழக்குகள் சார்ந்த உறவு:
கிழக்கிலங்கையின் தமிழ், முஸ்லீம் உறவின் தனித்துவத்தையும், பாரம்பரியத்தையும் அதன் பெறுமதியையும் வெகுமதியையும் சம்பந்தப்பட்ட அந்த மக்களால் மட்டுமே உணர்வு ரீதியாக உணர்ந்து கொள்ள முடியும். இரண்டறக்கலந்த இந்த இரு சமூகங்களும் பல பொதுப் பண்பாட்டு பாரம்பரிய விழுமியங்களை தன்னகத்தே தாங்கி நிற்கின்றன.
தாய்வழி சமூகம் இதன் முக்கிய குறிகாட்டியாக உள்ளது. திருமண சம்பிரதாயங்களில் இந்த பாரம்பரியங்கள் நிறையவே உள்வாங்கப்பட்டுள்ளன. திருமணத்தின் பின் மாப்பிள்ளை பெண்வீட்டில் வசித்தல், சீதன கொடுக்கல்வாங்கல்கள், கால்மாறிப்போதல், தாலிகட்டுதல் போன்றவை இங்கு குறிப்பிட்டுக் கூறக்கூடியவை. இத்தனைக்கும் இந்த கொடுக்கல் வாங்கல்கள் இஸ்லாத்தில் ஹராம்.
அதேபோல் அரபுக்கலாச்சாரத்தில் பெண் திருமணத்தின் பின் ஆண் வீட்டிலையே இருப்பது வழக்கம்.
வரலாற்று ரீதியில் கோரளை, மண்முனை, கொட்டியாரம், கரவாகு பற்றுக்கள் கிழக்கு முஸ்லீம்களின் பூர்வீக கிராமங்களைக் கொண்டவை.
கல்முனைக்குடி, சாய்ந்தமருது, சம்மாந்துறை, காங்கேயன் ஓடை, பழையகாத்தான்குடி, ஏறாவூர், மூதூர் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இவை அனைத்தும் பெரும்பாலும் தமிழ்க்கிராமங்களால் சூழப்பட்டு அவற்றின் மத்தியில் அமைவிடத்தை கொண்டவை என்பதும் ஒரு தனித்துவ சிறப்பம்சம்.
இந்தக் கிராமங்களில் கிழக்கு தமிழ்ச் சமூகத்தில் நிலவுகின்ற தாய்வழிக் குடிமுறை இன்றும் உள்ளது. பல குடிகளின் பெயர்கள் தமிழ்ச் சமூகத்தில் உள்ள குடிப்பெயர்களாகவே உள்ளன. ஆட்களைப் பொறுத்தமட்டில் மூத்ததம்பி, சீனித்தம்பி, வெள்ளத்தம்பி, முகமத் தம்பி போன்ற ஆண்பெயர்களும் சின்னம்மா, வெள்ளம்மா, காத்தம்மா (…..உம்மா) போன்ற பெயர்களும் மூத்த தலைமுறையில் இன்றும் உள்ளன.
சைவக் கோயில்களுக்கும், பள்ளிவாசல்களுக்கும் இடையே நல்லுறவு நிலவியது. கொக்கட்டிச்சோலை தான்றோன்றீஸ்வரர் ஆலயத்தில் உற்சவகாலத்தில் “பட்டாணிமடை” வைத்து பூசை செய்யப்பட்டு முஸ்லீம்கள் காளாஞ்சி வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். தேர் இழுப்பிலும் முஸ்லீம்கள் பங்கு கொண்டார்கள். நேர்த்திக்கடன்களை வைத்து அதை தீர்க்க நெல், ஆடு, மாடுகளை வழங்கிய வரலாறும் உள்ளது. அதேபோன்று தமிழர்கள் பள்ளியில் நேர்த்திக்கடன்களை வைத்தார்கள்.
கோயில் திருவிழாக்கள், பண்டிகைகள், கொண்டாட்டங்களின்போது நல்லுறவும், நட்புறவும், வீடுகளுக்கு அழைத்து விருந்து வைக்கும் வழக்கும் இருந்திருக்கிறது. ஒருவருக்கொருவர் அவரவர் பாரம்பரிய பண்பாடுகளை மதிக்கின்ற, ஏற்றுக்கொள்கின்ற பெருந்தன்மையும் சமூக அங்கிகாரமும் நிலவியது.
இந்தத் தமிழ் -முஸ்லீம் உறவுத் தேன்கூட்டில் கல் எறிந்து கலைத்தவர்கள் யார்? யாரின் நலன்களுக்காக அவர்கள் கல் எறிந்தார்கள்?
( *) இனங்களைக் கடந்த கட்சி அரசியல் உறவு:
கிழக்கில் கட்சி அரசியலே முதன்மை பெற்றிருந்தது. தமிழரசுக்கட்சியை ஆதரித்த முஸ்லீம்கள் இருந்தார்கள். தேசியக்கட்சிகளில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களை முஸ்லீம்களும், முஸ்லீம் வேட்பாளர்களை தமிழர்களும் ஆதரித்தார்கள். தேர்தல் தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறையில் கட்சி, அரசியலும், சமூகங்களுக்கிடையிலான உறவும் பேணப்பட்டது. மாவட்ட ரீதியான தேர்தல் முறையானது கட்சிக்கப்பால், தனிநபர்களையும், சமூகங்களையும் முதன்மைப் படுத்துவதனால் இனங்களுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
கிழக்கின் சமூக விரிசலுக்கு மாவட்டரீதியான தேர்தல் முறையும் காரணம்.
1977இல் கூட இந்த கட்சி அரசியல் உறவு நிலவியது. கே.டபிள்யூ.தேவநாயகம், இராஜன் செல்வநாயகம் ஆகியோரை கட்சிசார்ந்து முஸ்லீம்கள் ஆதரித்தார்கள். செ.இராசதுரையை, சம்பந்தமூர்தியை ஆதரித்த முஸ்லீம்கள் இருந்தார்கள். பரீட்மீராலெப்பையை கிரான்குளம், தாழங்குடா போன்ற தமிழ்க்கிராமங்கள் வெளிப்படையாகவே ஆதரித்த வரலாறும் இங்கு பதியப்பட வேண்டியது. தேவநாயகம் ஓட்டமாவடி வாக்குகளால்தான் சம்பந்தமூர்த்தியை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காசி ஆனந்தனின் உறவினர்கள் கூட அவருக்கு ஆதரவளிக்காது ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் பரீட்மீராலெப்பையை ஆதரித்தார்கள்.
தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் மூதூரில் எஸ்.எம் மக்கீன், புத்தளத்தில் ஐ.எம்.இலியாஷ், சம்மாந்துறையில் ஏ.எல்.எம். ஹாசிம், கல்முனையில் ஏ.எம்.சம்சுதீன் ஆகியோர் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தார்கள். பல முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழரசுக்கட்சியில் அரசியல் கற்றவர்களாக இருந்தார்கள். மன்சூர் மௌலானா, உதுமாலெப்பை போன்றவர்கள் தமிழரசுக் கட்சிமேடைகளில் ஏறிப்பேசினார்கள்.
இந்த அரசியல் ஐக்கியத்திற்கு, தமிழ் ஈழக்கோரிக்கையும், ஆயுதப்போராட்டமும் வேட்டுவைத்தன. இருதரப்பு அரசியல்வாதிகளும், இயக்கங்களும் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றினார்கள்.
விளைவு : தமிழ் முஸ்லீம் சமூகங்கள் தவறான வழிநடத்தலால் தங்களுக்குள் மோதிக்கொள்கின்றன. தமிழ்த்தேசியம் தோற்றது. பிரித்தாளும் சிங்கள தேசியம் வென்றது. படிப்பினைகளில் இருந்து கற்றுக்கொள்ள தமிழ், முஸ்லீம் பாராளுமன்ற தலைமைகள் இன்னும் தயாராக இல்லை. கதிரை வேண்டும், சாகும்வரையும் ஆயுட்காப்புறுதி செய்து, சமூகங்களை மோதவிட்டு, பலிகொடுத்தாவது சிம்மாசனம் ஏறவேண்டும்.
மாகாணசபை தேர்தல் திருவிழாவை எதிர்பார்த்து ஒருதரப்பை மறுதரப்பு ஏமாற்றும் போலி கதிரை அரசியல் தொடர்கிறது. இவர்கள் அனைவருமே கதிரைச்சின்னத்தில் கட்சி பேதமின்றி போட்டியிடுவது நல்லது. ஒரே ஒரு கட்சி! பெயர் கதிரைக்கட்சி!! ஒரு வகையில் ஏகபோகமும் கூட.
(*) தமிழ்மொழிசார் கலை இலக்கிய உறவுப் பாரம்பரியம்:
தென் இலங்கையில் தமிழ்மொழியை வளர்தவர்கள் முஸ்லீம்களும், மலையக மக்களும் என்பது தெரிந்தவிடயம். அது போன்று கிழக்கிலங்கையில் தமிழ் மொழியை வளர்த்த பெருமையில் முஸ்லீம்களுக்கும் சம பங்குண்டு.
இது விபுலாநந்தர், உமறுப்புலவர் காலத்திற்கும் மேலான வரலாற்றைக்கொண்டது. கரவாகுப்பற்றின் பட்டி தொட்டிகளில் ஒலிக்கும் நாட்டுப்பாடல்கள் தமிழ் கலை இலக்கியத்திற்கு முஸ்லீம் சமூகம் வழங்கிய மாபெரும் பங்களிப்பில் ஒருதுளி.
இந்த இடத்தில் லேக்கவுஸ் தினகரன் நாள், வார இதழ்களின் பங்கு அளப்பரியது. மற்றைய பத்திரிகைகள் முஸ்லீம்களின் ஆக்கங்களுக்கு ஒப்பீட்டளவில் குறைந்த வாய்ப்பையே வழங்கின. இதனால் தினகரன் முஸ்லீம்களின் பேப்பர் என்று கூறப்பட்ட காலம் ஒன்றும் இருந்தது. புலவர்கள், கவிஞர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் என்று பலநூறு பேர் கிழக்கிலங்கையில் தமிழ் மொழிவளர்ச்சிக்கு பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார்கள். பேராசிரியர் நுஃமான் தலைமையிலான ஒரு கலை இலக்கிய களம் பெண், ஆண் படைப்பாளிகளை கல்முனைப் பிராந்தியத்தில் உருவாக்கி காத்திரமான பங்களிப்பை இன்னும் வழங்கிக்கொண்டே இருக்கிறது. மறுபக்கத்தில் பேராசிரியர் மௌனகுரு வின் பங்கும் இதற்கு சமமாக குறிப்பிடக்கூடியது.
முஸ்லீம்களின் தமிழ் மொழிக்கான பங்களிப்பில் ஓட்டமாவடி பிரதேசத்தில் எஸ்.எல்.எம். ஹனிபாவினதும், அவரது உற்ற நண்பர் அகமட் அவர்களது பங்கையும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.
இங்கு எஸ்.எல்.எம்.க்கு ஒரு தனித்துவம் இருக்கிறது.
தமிழர் தரப்பில் போன்றே முஸ்லீம் தரப்பிலும் நமக்கு ஏன்? வீண்வம்பு என்று சும்மா இருப்பதே சுகம் என்று நினைக்கின்ற புத்திஜீவிகள் மத்தியில் இந்த பாரம்பரிய உறவை தொடர்ந்தும் கட்டிக்காப்பதில், தனது உடல் ஆரோக்கியம் முழுமையாக இடம்கொடுக்காத போதும் துணிச்சலுடன் கருத்துக்களை பக்கச்சார்பற்று இன்றும் சொல்லுகின்ற வல்லமை கொண்டவராக இருக்கிறார் எஸ்.எல்.எம்.
கிழக்கில் ஒரு முஸ்லீம் படைப்பாளியாக, இலக்கிய கர்த்தாவாக எஸ்.எல்.எம். ஐத் தவிர வேறு எவரும் இந்த பணியைச் செய்யவில்லை. காத்தான்குடியில் இந்த உறவுப் பாரம்பரியத்தை நன்கு அறிந்து அதற்காக உழைத்தவர் மறைந்த அகமட்லெப்பை அவர்கள். அவரின் பங்களிப்பு சமூக, அரசியல் தலைவர் என்ற வகையில் வேறுபட்டதாக இருந்தது.
எஸ்.எல்.எம். அவர்களின் உறவுப்பாரம்பரியப்பணி தொடர வேண்டும்.
உமர்முக்தாவின் மூக்குக்கண்ணாடியால் கடாபி லிபியாவைப் பார்த்தான், பசுமைப்புரட்சி வெடித்தது. அதை போல் உங்கள் மூக்குக்கண்ணாடியை இன்றைய தலைமுறைக்கு கையளியுங்கள்.
அவர்கள் இந்த தனித்துவம் மிக்க பாரம்பரிய உறவு தொடர்பாக தெளிவு பெறட்டும். உங்கள் பணியைத் தொடரட்டும். இன்ஷா அல்லாஹ்.
(*) குரங்கின் கையில் சிக்கிய பூமாலை:
இந்த உறவுப் பாரம்பரியத்தை ஆயுதப்போராட்டமே சிதைத்தது என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கமுடியாது. தமிழர்கள், முஸ்லீம்களை தனியான ஒரு சிறுபான்மையாக அங்கிகரிக்காதுநீங்களும் தமிழர்கள்தான் என்று அரசியல் செய்ததன் தவறு இது.
முஸ்லீம்களை தமிழர்கள் என்றும், தமிழ்பேசும் மக்கள் என்றும் அடையாளப்படுத்திய தலைமைகள் தமிழ்ஈழம் தமிழர்களுக்கானது, தமிழ்பேசும் மக்களுக்கானது என்று அடையாளப்படுத்தினர். இது முஸ்லீம்கள் மத்தியில் சந்தேகங்களையும், நியாயமற்ற உணர்வையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. தமிழ்தரப்பு தமது தனித்துவங்களை அங்கீகரிக்காது தமிழுக்குள் விழுங்கப் பார்க்கிறது என்பதை உணர்வதற்கு முஸ்லீம்களுக்கு நீண்டகாலம் தேவைப்படவில்லை.
இயக்கப்பெயரில் தமிழைத் தவிர்த்து ஈழத்தை முதன்மைப்படுத்திய அமைப்புக்கள் முஸ்லீம்களை மொழிசார்பற்ற ஈழத்தவர்கள் என்று அடையாளப்படுத்தின. ஈ.பி.டி.பி., ஈ.பி.ஆர்.எல்.எப், ஈழப்புரட்சி அமைப்பு (ஈரோஸ்) இதற்கு உதாரணம். ஈரோஸ் ஒருபடி முன்னேறி ஈழம் வாழ் மக்கள் அனைவரும் ஈழவர் என்று ஈழவர் ஜனநாயக முன்னணியை உருவாக்கினர். தமிழ் ஈழத்தை தனது பெயரில் கொண்டிருந்த புளட் அமைப்பு ஆரம்பத்தில் ஓரளவுக்கு இக்கொள்கை சார்ந்து இயங்கியபோதும் நீண்ட காலம் அந்த கொள்கையில் அது பயணிக்க முடியவில்லை.
இந்தக் கோட்பாட்டு வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் புலிகளின் ஏகபோகம் அனைத்து ஜனநாயகச் சக்திகளையும், தலைமைகளையும் அழிக்க ஆரம்பித்தபோது அவர்கள் முஸ்லீம் சமூகத்தையும் உள்ளூர் தலைமைகளையும் விட்டு வைக்கவில்லை. இதன் மூலம் தமிழ் – முஸ்லீம் உறவில் காலம்காலமாக கிழக்கில் கட்டப்பட்டிருந்த உறவுப் பாலத்தை புலிகள் தகர்த்தார்கள். காத்தான்குடி பள்ளிவாசல் உட்பட பல முஸ்லீம் எல்லைக்கிராமங்கள் புலிகளால் தாக்கப்பட்டன. இதற்குப் பதிலாக முஸ்லீம் ஆயுததாரிகள் சிங்கள அரசின் உதவியுடன் தமிழ்கிராமங்களை தாக்கினார்கள்.
இந்தச் சூழல் பாசிச சக்தி ஒன்றுக்கு எதிராக தற்காப்புக்கு ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாயத்தை முஸ்லீம் இளைஞர்களுக்கு ஏற்படுத்தியது. சிங்கள பாசிச சக்திகளுக்கு எதிராக தமிழர்களின் தற்காப்புக்காகவே நாம் ஆயுதங்களை ஏந்தியிருக்கிறோம், நாங்கள் ஆயுதத்தைப் பூசிப்பவர்கள் அல்ல என்ற தமிழ் இயக்கங்களின் வாதத்தை முஸ்லீம் இளைஞர்களும் பதிலாக திருப்பிச் சொன்னார்கள். தங்கள் வன்முறைகளை புலிகளைப்போன்று நியாயப்படுத்த முனைந்தார்கள்.
பிரித்தாளும் சிங்களபேரினவாத அரசின் தந்திரோபாயத்திற்குள் இருதரப்பும் வீழ்ந்தபோது, போதாக்குறைக்கு சமாதானம் செய்ய வந்தவர்கள் முஸ்லீம்களை “பாகிஸ்தானி” என்று அழைத்து தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தினர். தமிழ்த்தேசிய இராணுவத்திற்கு இந்திய இராணுவத்தின் உதவியுடன் ஆள்பிடித்த “திறிஸ்டார்” கொண்ட கொள்கையை மறந்து முஸ்லீம்களை கொலைசெய்தது.
பாவற்கொடிச்சேனை முஸ்லீம் குடியேற்றக்கிராமம் முற்றாக அழிக்கப்பட்டது. கட்டுக்கடங்காத நிலையில் இருசமூகங்களின் ஆயுததாரிகளும் ஏட்டிக்குப் போட்டியாக மோதிக்கொண்டனர். இரு சமூகங்களையும் சேர்ந்த தலைவர்கள், புத்திஜீவிகள், அன்றாடம் அடுப்பெரிய தமிழ், முஸ்லீம் கிராமங்களுக்கூடாகப் பயணித்த கூலியாட்கள் என பலரும் கொல்லப்பட்டார்கள். தமிழ்த்தேசியவாதம் குறுந்தேசியவாதமாக தன்னைத்தானே பிரகடனம் செய்தது.
விளைவு : காலாதிகாலமாக கட்டிக்காக்கப்பட்ட கிழக்கின் பாரம்பரியத்தை, அதன் மகிமையை, பெருமையை உணராதவர்கள் பாரம்பரிய உறவை குரங்கின் கையில் கிடைத்த பூமாலையின் கதையாக்கினார்கள்.
(*) பின்னணியில் மறைகரங்கள்:
தமிழ் முஸ்லீம் பாரம்பரிய உறவைச் சிதைத்ததில் ஆசியப்பிராந்திய அரசியலுக்கும் பங்குண்டு. இந்தியாவின் மதசார்பற்ற போக்கை பாரதிய ஜனதா கேள்விக்குட்படுத்தியது. அதைபோல் ஈரானியப் புரட்சி அராபிய கலாச்சார ஊடுருவலுக்கும், இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்தது. இவை இரண்டும் கிழக்கில் சமூக உறவுகளை தகர்ப்பதில் கணிசமான பங்கை வகிக்கின்றன.
பாரதிய ஜனதாவின் அல்லது அத்வானியின் அயோத்தி இராமர் கோயில் சர்ச்சை இந்துக்களை சிறுபான்மை மதங்களுக்கு எதிராக தூண்டிவிட்டது. சிவசேனை, விஷ்வஹிந்துபரிஷத், போன்ற இந்து அடிப்படைவாத அமைப்புக்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.
இதன் ஒரு விரிவுபடுத்தலாகவே யாழ்ப்பாணம் சிவசேனை மற்றும் பாரதியஜனதாவை பார்க்க வேண்டி உள்ளது. இவர்கள் இஸ்லாம் மதத்திற்கு எதிராக மட்டுமன்றி கிறிஸ்தவ மதத்திற்கு எதிராகவும் களத்தில் இறங்கி உள்ளனர். மன்னார் நிகழ்வுகள் இந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலானவை என்ற சந்தேகமும், ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த சந்தேகமும் நிலவுகிறது.
தனிநாட்டுப் பிரகடனத்தில் சமதர்ம தமிழீழம் என்ற வாசகத்தை மறைத்து, இவர்கள் இந்துக்களின் தமிழ் ஈழம் என்றும், சங்கிலியன் சைவத்தமிழ் மன்னன் என்றும் இவர்கள் பேசுவதன் தாற்பரியம் இதுதான்.
ஈழத்தமிழர்கள் புனிதப் பசுத்தோல் போர்த்த புலி ஒன்றினால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். தமிழ்த்தேசிய தலைமைகளோ எந்த சாணக்கியமும் அற்று எல்லாவற்றையும் வெள்ளையாகப் பார்க்கிறார்கள்.
ஈரானிய புரட்சிக்குப் பின்னர்தான் அராபியக்கலாச்சாரம், மொழி சார்ந்த விழிப்புணர்வு முஸ்லீம்கள் மத்தியில் பரப்பப்பட்டது. அடிப்படை வாதம் சார்ந்த ஷரியா சட்ட ஒழுங்கு முறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. எனவே ஆகம மயப்படுத்தப்பட்ட இந்துத்துவ அடிப்படை வாதமும், அரபுமயப்படுத்தப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதமும் கிழக்கிற்கே உரித்தான தனித்துவ பாரம்பரிய தமிழ் — முஸ்லீம் உறவை சீர்குலைப்பதில் ஒரு மறைகரமாக, வெளிநாட்டு சக்திகளின் ஊடுருவலாக அமையவாய்ப்புண்டு. இதற்கு இருதரப்பு சமூகங்களும் பலிக்கடாவாக்கப்படுகின்றனர்.
இந்த மறைகரங்களின் செயற்பாடுகள் விரிவுபடுத்தப்படும் கற்கும், மேலும் மேலும் கிழக்கில் மாத்திரமன்றி தென் இலங்கையிலும் மதரீதியான முரண்பாடுகள் அதிகரிப்பதற்கும் நிறையவே வாய்ப்புகள் உள்ளன. இந்த விரிவாக்கம் தனியே தமிழர்களையும், முஸ்லீம்களையும் இன ரீதியாக அந்நியப்படுத்துவதை மட்டும் குறியாகக் கொள்ளவில்லை மாறாக கிறிஸ்தவம், பௌத்தம் என்பனவற்றையும் உள்வாங்கி மதரீதியான விரிசலை விரிவு படுத்தக்கூடியது. இலங்கையின் கத்தோலிக்க திருச்சபையை இரண்டாக்கி தமிழ், சிங்கள கத்தோலிக்கர்கள் என்ற பாகுபாட்டை ஏற்படுத்துவதில் இந்த மறைகரம் வெற்றிகண்டிருக்கிறது .
(*) மனிதம் பேசும் உண்மையின் சாட்சியம்:
படுவான்கரையின் சாமந்தியாறு. நெல் வயல்களைக் கொண்ட ஒரு வட்டை. காத்தான்குடியைச் சேர்ந்த ஹனிபா என்ற பலசரக்குக்கடைக்காரருக்கு ஆறு ஏக்கர் நெற்காணி அந்த வட்டையில் இருந்தது. புலிகளின் ஆட்சியில் அங்கு முஸ்லீம்கள் வயல் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
முஸ்லீம்களின் காணிகளை புலிகள் தங்களின் போராளிகள், மாவீரர் குடும்பங்களுக்கு குத்தகை இன்றி செய்வதற்கு வழங்கினார்கள்.
காணியற்ற பொதுமக்களுக்கு இக் காணிகள் வழங்கப்படவில்லை.
புலியாய் இருப்பதே காணி பெற தகுதியாயிற்று.
ஒரு புலிப்போராளியின் தந்தை தனக்கு கிடைத்த அந்த வயலில் வேளாண்மை செய்துள்ளார்.
அவருக்கு இந்த காணியின் சொந்தக்காரர் ஹனிபா என்பது அயலவர்களால் தெரியவருகிறது. ஹனிபாவுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட அவர், புலிகளுக்கு தெரியாமல், தனது மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் வருடாவருடம் ஹனிபாவுக்கு தன்னால் இயன்ற குத்தகையை கொடுத்து வந்தார். காத்தான்குடிக்குப் போகும்போது ஹனிபாவின் கடைக்கும் போக அவர் தவறுவதில்லை.
புலிகளின் ஆயுத மௌனிப்புக்கு பின்னர் ஹனிபா காணியை விற்க விரும்பினார். பலரும் போட்டி போட்டு தமக்கு விற்குமாறும் கூடிய விலைதருவதாகவும் கேட்டார்கள். ஹனிபாவோ போராளியின் தந்தை தன்னுடன் நேர்மையாக பழகியவர் அவருக்கே மற்றவர்கள் கேட்ட விலையைவிடவும் குறைந்த விலைக்கு காணியை விற்றார்.
நாயாய், புலியாய் இருப்பதில் பெருமைப்படும் தலைவர்களே!
ஒரு கடைக்காரனும், கமக்காரனும் மனிதர்களாக….., சமாதான சகவாழ்வின் குறியீடுகளாக….., தூதுவர்களாக…..,
மனிதம் இன்னும் மரணிக்கவில்லை..!!