‘ஐயோ சீனா நுழைகிறதே…இது நியாயமா?’

‘ஐயோ சீனா நுழைகிறதே…இது நியாயமா?’

  — கருணாகரன் — 

“கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரி –கௌதாரிமுனைக் கடலில் சீனர்கள் வந்து தொழில் செய்கிறார்கள். உங்களுக்கு இதைப்பற்றி ஏதாவது தெரியுமா?” என்று கேட்டார் கொழும்பிலிருந்து ஒரு மூத்த தமிழ் ஊடகவியலாளர். 

“ஐயா நான் நான்கு ஐந்து வயதிலேயே எங்கள் வீட்டில் வைத்தே சீனர்களிடம் உடுபுடவைகளை வாங்கியவன். (அப்பொழுது – 1960 – 1975 வரையில் –சீனத்துத் துணி வியாபாரிகளும் பீங்கான் விற்பனையாளர்களும் ஊர்களில் சர்வசாதாரணமாகத் திரிவார்கள்) அப்படியிருக்க ஏதோ இப்பதான் சீனர்கள் வந்திருப்பதைப்போலக் கதைக்கிறியள்! அதுபோக கௌதாரிமுனையில் சீனர்கள் தூண்டில் போடுற செய்தியைச் சொல்லும் நீங்கள்தான் அதனுடைய மேலதிக விளக்கத்தையும் சொல்ல வேணும்” என்றேன். 

“அந்தக் காலம் வேறு. அப்போது சீனாவின் தன்மையும் வேறு. இலங்கை இருந்த நிலையும் வேறு. இது வேறு. இப்ப நடக்கிறது அத்தனையும் அரசியல் விவகாரங்கள். பொருளாதார விஸ்தரிப்புவாதத்திற்கான சுரண்டல். இதுதான் பிரச்சினை. இதை நாங்கள் சும்மா விடேலாது. லேசில கடந்து போகேலாது” என்று பெரியதொரு விளக்கத்தை அளிக்கத் தொடங்கினார் நண்பர். வரவர அவருடைய குரலில் சூடேறியது. 

“ஐயா, சற்று அமைதியடையுங்கள். முதலில் பொறுதியாக சில விசயங்களை நோக்க வேணும். சீனா 1950, 60 களிலேயே உலகம் முழுவதிலும் ஊசியை விற்கத் தொடங்கிவிட்டது. அப்பவே அது நீண்ட கால நோக்கிலான பொருளாதார விஸ்தரிப்பு நடவடிக்கையிலேயே ஈடுபட்டது. தலையில் துணி மூட்டையைச் சுமந்து கொண்டு ஊர் ஊராகத் திரிந்த ஒவ்வொரு சீனரும் சீனாவின் வளர்ச்சிக்காகவே –விஸ்தரிப்புக்காகவே உழைத்தார்கள். அவர்கள் ஏறிய ஏணிகள் ஏராளம். எட்டிய தூரமும் அதிகம். சரி, நீங்கள் சொல்வதைப்போல அரசியல் ரீதியாக நேரடியாக சீனா அப்போது இந்தளவுக்குச் செயற்பட்டதா என்றால் கூட, ஓம். அப்படிச் செயற்பட்டது என்றே சொல்ல வேண்டும். இப்போதிருக்கும்  பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் அதற்கொரு அடையாளம். 1970களின் சு.க ஆட்சியில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, பண்பாட்டு உறவுகள் வலுவாகவே காணப்பட்டன. பிறகு யுத்தத்தின்போது சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் சீனாவுடன் நெருக்கம் கூடியது. யுத்தத்திற்குச் சீன உதவிகள் பெருமளவில் பெறப்பட்டன. தாங்கிகள், துப்பாக்கிகள், குண்டு வீச்சு விமானங்கள், மோட்டர்ப்பீரங்கிகள் என வகை தொகையில்லாமல் சீனா அள்ளி அள்ளிக் கொடுத்தது. அல்லது சீனாவிடம் வாங்கித் தள்ளினார்கள். அப்போதெல்லாம் இது ஒரு அரசியற் சிக்கலாக முடியும் என்று ஏன் யாரும் யோசிக்கவில்லை?…” என்று அவருக்குச் சில விளக்கங்களைச் சொல்ல முற்பட்டேன். 

இடையில் வழிமறித்த நண்பர், “அப்படியென்றால் சீனாவின் இன்றைய இந்த ஆதிக்கத்தையும் அடாவடித்தனத்தையும் நீங்கள் ஆதரிக்கிறியளா? அரசாங்கம் இதையெல்லாம் அனுமதிப்பதை ஏற்றுக் கொள்கிறீங்களா?” என்று குறுக்கு வழியால் வந்து மறித்தார். 

எனக்கு சிரிப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. பிரச்சினையை அதன் அனைத்துப் பரிமாணங்களோடும் புரிந்து கொள்ள முற்படாமல் தங்கள் மையத்திலிருந்து சிந்திப்பவர்களுடன் தொடர்ந்து பேச முடியாது. அவர்கள் எதையும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். புரிந்து கொள்ளப் போவதுமில்லை. பதிலாக தீவிரமடைந்து வெறுப்பையே உமிழ்வார்கள். ஒரு கட்டத்தில் எதுவும் செய்ய முடியாமல் ஆற்றாமையை வெளிப்படுத்திப் புலம்புவார்கள். அதனால் எந்தப் பயனும் ஏற்படாது என்பதைக் கூட இறுதி வரையில் புரிந்து கொள்ள மாட்டார்கள். 

நான் எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்ததைக் கவனித்தவர், “பார்த்தீர்களா! உங்களாலேயே இதற்குப் பதிலளிக்க முடியவில்லை. இது பச்சைச் சுரண்டல். ஒரு கொம்யூனிஸ நாடு இப்படி ஒரு வறிய நாட்டில் கை வைக்கிறது என்றால் அது எவ்வளவு கேவலமானது…?” என்று ஏதொவெல்லாம் சொல்லிக் கொண்டே போனார். 

சரிதான். ஒரு தமிழ் மூத்த ஊடகவியலாளர் இப்படித்தானே சிந்திப்பார்? இதை விட வேறு எப்படி அவரால் மாற்றாகச் சிந்திக்க முடியும்? அப்படி மாறுதலாகச் சிந்திக்கக் கூடியவராக இருந்தால் அவர் எப்போதே தமிழ் ஊடகப் பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பார். அல்லது தானாகவே வெளியேறியிருப்பார். 

எனவே அவரிடம் எதையும் விவாதிப்பதில் அர்த்தமில்லை. என்றாலும் பழகிய நண்பர் என்பதால், ஒரு சேதியை மட்டும் அவருக்கு நினைவூட்டிக் கொள்ள விரும்பி, “ஏன், இந்தக் கடல் அட்டை விசயத்தையே பாருங்கள். இதைப்பற்றி  – 

 “60 வருடங்களுக்கு முன்பும் சீனர்கள் வந்தார்கள். உங்கள் வளங்களில் தேடுவாரற்றுப் பெருகிக் கிடக்கும் கடலட்டைகளை எடுத்து எமக்குப் பதனிட்டு அனுப்புங்கள் என்றார்கள். அவற்றைப் பதனிடும் அரிய முறைகளை சில தினங்களில் சொல்லியும் தந்தார்கள், போய்விட்டார்கள். 

நாங்கள் எங்கள் வளங்களிலிருந்து அறுவடைகளைப் பாதகமற்ற முறையில் செய்து கப்பலேற்றி அனுப்பினோம். பங்கமில்லை. நல்ல வருவாய்கி கிடைத்தது. ஒவ்வொரு தொழிலாளரும் தமது கடலின் வளங்களை சகல உரிமைகளுடனும் பயன்படுத்தினார்கள், எல்லாவற்றுக்கும் மேலாக கடலைப் பாதுகாத்தார்கள். 

இப்போதும் சீனர்கள் வந்திருக்கிறார்கள். அல்லது அழைக்கப்பட்டிருக்கிறார்கள். “கடல் உங்களது. வளங்களும் உங்களதுதான். ஆனால் அறுவடையை நாங்களே செய்கிறோம், பயன் பாடுகளை நாங்களே கொண்டு செல்கிறோம், நீங்கள் சற்றுத் தள்ளியே நில்லுங்கள்” என்கிறார்கள். 

அது எப்படி?” என்று கேட்டால்…., 

“வேண்டுமானால், தூக்க சுமக்க சிலர் வாருங்கள் கைக்கூலி தருகிறோம்” என்கிறார்கள்” –  என நல்லதொரு கடலோடியான தமயந்தி (விமலராஜன்) எழுதியிருக்கிறதைப் பார்த்தீங்களா?” என்று கேட்டு விட்டு அமைதியானேன். 

“இதைத்தானே நானும் சொல்கிறேன்” என்றார் நண்பர் விடாப்பிடியாக. 

நான் அவருக்கு முடிவாகச் சொன்னேன், “1960 களிலேயே சீனர்கள் தங்கள் நோக்கில் தெளிவாகவே வந்தார்கள். அந்தத் தெளிவோடுதான் வேலையைச் செய்தார்கள். அதன் வளர்ச்சி இன்று இப்படியாகி உள்ளது. இதுதான் வல்லாதிக்க சக்திகளின் பொதுவான பண்பு. இதில் சீனா வேறு. அமெரிக்கா வேறு. இந்தியா வேறு. இங்கிலாந்து வேறு என்று பார்த்தால் அதைப்போல ஏமாளித்தனம் வேறில்லை. 1960களிலேயே நீண்டகாலக் கண்ணோட்டத்துடனும் திட்டத்துடனும் சீனா தன்னை விரித்துச் செயற்பட்டது. நாமோ நிகழ்காலத்துக்கே திட்டமேதும் இல்லாமல் வானத்து நட்சத்திரங்களெல்லாம் எங்கள் வாசலுக்கு வந்து ஒளியூட்டும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். இதுக்கு மேல நான் எதையும் பேச விரும்பவில்லை. ஆனால் நானும் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் எதையும் உடனடியாகச் செய்ய முடியாத நிலையிலேயே இருக்கிறோம். இதை முறியடிப்பதாக இருந்தால் நாம் எல்லோரும் இலங்கையர்களாக உணர்ந்து செயற்பட வேண்டும். அதற்கு வாய்ப்புக் குறைவு. ஆளாளுக்கு தமிழரென்றும் சிங்களவரென்றும் முஸ்லிம்கள், மலையக மக்கள் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் சீனர்களுக்கு மட்டுமல்ல அத்தனை வெளியாட்களுக்கும் வாய்ப்பாகியிருக்கு. நாங்கள் எங்களுக்குள் உடன்பாடு காண மாட்டோம். எங்களுக்குள் அதிகாரங்களையும் வளங்களையும் பகிர்ந்து கொள்ள மாட்டோம். ஆனால், வெளியாருக்குத் தாராளமாக எல்லாவற்றையும் தாரை வார்ப்போம்…” என்று சொல்லி விட்டு என்னுடைய வேலையைப் பார்க்கத் தொடங்கினேன். 

நண்பர் எதுவும் பேசவில்லை. “பின்னர் இதைப்பற்றி விரிவாகப் பேச வேண்டும்” என்று சொல்லிக் கொண்டு தொடர்பைத் துண்டித்தார். 

நண்பருடைய கவலைகளையும் நியாயத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இது இன்றொரு பெரிய சிக்கலான அரசியற் பொறியாக வளர்ச்சியடைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதை விரிவஞ்சிச் சுருக்கமாகப் பார்ப்பதாக இருந்தால் – 

1. சீன ஆதிக்கம் எப்படியெல்லாம் விரைவாக நிகழ்கிறது. எந்தெந்த வகையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது. 

2. இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையிலான போட்டியில் யார் முன்னிலை வகிக்கிறார்கள் என்பது. 

3. சீனா தன்னுடைய விரிவாக்க நோக்கில் எவ்வளவு நுட்பமாக –நீண்டகால வேலைத்திட்டத்தில் பன்முக நோக்கில் செயற்படுகிறது என்பது. 

4. கடல் அட்டை வளர்ப்பில் இதுவரையில் ஈடுபட்டு வந்த கடற்றொழிலாளர்கள், அவர்களுடைய தொழில் முறைகள், நம்முடைய கடல் வளப்பாதுகாப்பு போன்றவற்றுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி என்பது. 

5. உள்ளுர் தொழிலையும் வளத்தையும் வெளியார் வந்து நேரடியாகச் சுரண்டவும் ஆதிக்கம் செலுத்துவும் முற்படுவது என்பது. 

6. இலங்கையின் இறைமை –தமிழீழத் தனியரசுக் கனவு போன்றவற்றின் நிலை எப்படி என்பது. 

7. கடற்பிராந்திய நடமாட்டத்தில் எதிர்காலத்தில் சீனர்களும் இந்தியர்களும் மோதிக்கொள்ளக் கூடிய நிலைமைகள் கனிந்து கொண்டிருக்கின்றன என்பது. 

8. இலங்கை அரசாங்கமும் தமிழர்களும் கற்றுக்கொள்ள வேண்டிய யதார்த்தமும் உண்மையும் என்ன என்பது? 

9. நிலைமை ஆபத்தானதாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை இன்னும் புரிந்துகொள்ளத் தவறுகிறோம் என்ற முட்டாள் தனம் பற்றியது. 

இப்படி ஒரு பெரிய கவனப் புள்ளிப் பரப்பு உண்டு. இதையெல்லாம் யார்தான் புரிந்து கொள்வார்கள்? ஏதோ எல்லோரும் புத்திசாலிகளைப்போலவும் ஒவ்வொருவரும் தாமே கெட்டிக்காரர்கள் எனவும் நடந்து கொள்ள முற்படுகின்றனர். 

ஆனால், இலங்கை மணித்தீவோ சொந்தப் பிள்ளைகளால் பிறத்தியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. யார் வருவார் மீட்பராக? அல்லது நாமே மீட்பர்களாக மாறுவோமோ?