— வேதநாயகம் தபேந்திரன் —
”றீகல் சவுண்ட்ஸ்.. சேவிஸ், சேவிஸ், சேவிஸ்…”லோகேசின் அந்த வசீகரக் குரல் ஒலித்து, எமது மனதைக் கவர ஆரம்பித்தது.
உடனேயே நாம் கைகளைத் தட்டிப்பரவசம் அடைந்தோம். மேடையில் இசை நிகழ்ச்சி ஆரம்பமானது.
வட பிரதேசத்தின் வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு ஒலிபரப்புச் சகாப்தம் தான் “றீகல் சவுண்ட் சேவிஸ்”.
இன்று கூடப் புலம் பெயர் தேசங்களில் உள்ள எம்மவர் சிலர் சத்தம் போடும் முதலாளி வேலை இடத்திற்கு வரும் நாட்களைச் சிலேடையாக ”நாளைக்கு றீகல் சவுண்ட்ஸ் ..” எனத் தமக்குள் கதைப்பார்களாம்.
யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பிரதேசமான ஈச்சமோட்டையில் இயங்கியதே றீகல் சவுண்ட்ஸ் சேவிஸ்.
1980களுக்கு முன்பதாக ரி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் போன்ற பிரபலபாடகர்கள் எல்லாம் யாழ்ப்பாணம் வந்து இசைக் கச்சேரிகளை நடத்தும் போது றீகல் சவுண்ட்சின் ஒலிபெருக்கிகள் நூற்றுக்கு மேல் ஒலி அமைப்பை வழங்கும்.
நிகழ்ச்சியின் தரத்தை எள்ளளவும்க குறைய விடாமல் அவை ஒலியை வழங்கும்.
ஸ்பீக்கர்கள் தேவையான அளவிலும், பொக்ஸ்கள் தேவையான அளவிலும் ஒலியை வழங்கும்.
ஒருமுறை ரி.எம்.சௌந்தராஜன் யாழ் கோட்டைக்கு முன்பாக உள்ள முற்றவெளியில் இசை நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கும் போது குரலில் ஒரு பிசிறு வர சவுண்ட் சிஸ்ரத்தில் ஏதோ பிரச்சினை போலவெனச் சமாளிக்கமுற்பட ”எங்கட றீகலைப் பற்றிக் குறைசொல்லாதே” என ரசிகர்கள் சிலர்கத்தினார்களாம்.
அந்தளவுக்கு றீகலின் மதிப்பு இருந்தது.
1976ஆம் ஆண்டாக இருக்க வேண்டும், ஆவரங்காலில் தமிழரசுக் கட்சியின் மகாநாடு நடைபெற்ற போது றீகலின் ஸ்பீக்கர்கள் நூற்றுக்கு மேலாக ஒலியை வழங்கிச் சிறப்பித்தன.
திருகோணமலையில் பொசன் பௌர்ணமிக்கு வருடாவருடம் றீகல் சவுண்ட் சேவிசை அழைத்துத் தான் சிங்களவர்கள் கொண்டாடிய காலம் ஒன்று இருந்தது. றீகலின் உரிமையாளர் சின்னையா கனகசபை ஒரு பிரமுகருக்குச் சமனாக மதிக்கப்பட்டார்.
யாழ்ப்பாணத்தில் கோயில் திருவிழாக்கள் இரவிரவாகக் கோலோச்சிய காலத்தில் றீகலின் ஸ்பீக்கர்கள், பொக்ஸ்கள் ஒரே நேரத்தில் பல கோயில்களில் இசை வெள்ளத்தை வழங்கிப் பல்லாயிரம் பக்தர்களை மகிழ்வித்தன.
வட மாகாணத்தின் அனைத்துப் பெரிய நிகழ்வுகளும் றீகல் இல்லாமல் இல்லை.
1978ஆம் ஆண்டைத் தொடர்ந்து ரி.வி, டெக், படக் கொப்பி யுகம் வேகமாக உருவெடுத்தது. றீகல் அத் துறையிலும் புகுந்தது. வெற்றிக் கொடி நாட்டினார்கள். ஜப்பானிய சொனி ரி.வி பிரபலமாக இருந்தது.
சைக்கிள், மோட்டார் சைக்கிள்களில் சாக்கு வைத்து அதன் மேலாக ரி.வி, டெக்கை வைத்துக் கட்டிக் கொண்டு வாடகைக்கு எடுப்பதற்காகப் பலர் நாளாந்தம் வருவார்கள்.
அத்துடன் றீகல் ஒளிபரப்புச் சேவையெனத் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றையும் உருவாக்கினார். நாள் ஒன்றுக்கு 3 வேளையும் தமிழ் திரைப்படங்கள் ஒளிபரப்பினார்கள். வீடுகளுக்குக் கார்ட் கொடுத்துப் பதிந்து வாரா வாரம் காசுவாங்கினார்கள்.
றீகல் வீடியோ சேவிஸ் என்ற பெயரில் மங்கல நிகழ்வுகளைப் படமாக்கி வீடியோ கசெற்றை வழங்கினார்கள்.
1996ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திற்கு தொலைத் தொடர்பு வசதிகள் வந்தபோது றீகல் கொம்யூனிகேசன் என்ற பெயிரில் தொலைபேசி வசதிகளை வழங்கி உழைத்தார்கள்.
டெக் யுகம் மறைந்து சீடி, டிவிடி வந்தபோது அந்தத் துறையினுள்ளும் இறங்கி வெற்றிக்கொடி நாட்டினார்கள்.
தற்போது வீடியோப் படப்பிடிப்பு, பந்தல்செற், சோடனைகள் எனக் காலத்திற்கேற்ப றீகல் தன்னை உருமாற்றம் செய்து வெற்றிநடை போடுகிறது.
றீகல் என்ற அந்த ஒற்றைச் சொல் எம்மவரைக் கட்டிப் போட்டு மயக்கியதும் ஒரு வரலாறு தான்.