இந்தியாவில் மதம் பற்றிய மனோநிலை – ஒரு ஆய்வு
— திருமலை மணிவண்ணன் (பிபிசி தமிழோசையின் முன்னாள் ஆசிரியர்) —
இந்தியாவில் மதம் பற்றிய மக்களின் கண்ணோட்டம், மனோநிலை பற்றிய ஒரு குறிப்பிடத்தக்க ஆய்வு, பிரபல சர்வதேச சமூக அறிவியல் ஆய்வு நிறுவனமான “ப்யூ” ஆய்வு மையத்தால் (Pew Research Centre) சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.
பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் இது பற்றி செய்தி வந்தது. ஆனால் பெரிதாக விவாதிக்கப்பட்டது போல் தெரியவில்லை.
ஆனால் இந்தியாவில் மத அரசியல் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் இந்த ஆய்வு காட்டும் முடிவுகள் முக்கியமானவை, பரிசீலிக்கப்படவேண்டியவை.
ஆய்வு 2019 இறுதியிலிருந்து 2020 தொடக்கப்பகுதியில் இந்தியாவில் ஏறக்குறைய எல்லா மாநிலங்கள் மற்றும் ஒன்றிய நிலப்பரப்புப் பகுதிகளில் வசிக்கும் 29,999 பேரிடம், 17 மொழிகளில் நடத்தப்பட்டிருக்கிறது.
மத அடையாளம், தேசியவாதம், சகிப்புத்தன்மை போன்ற முக்கியமான பிரச்சனைகளை இந்த ஆய்வு கையாண்டிருக்கிறது.
இந்த ஆய்வு பற்றி ஊடகங்களில் வந்த பெரும்பாலான செய்திகள் பொதுவாக மதப் பிரிவினருக்கிடையே கலப்பு மணம் பற்றி மக்கள் மனோநிலை பற்றியதாகவே இருந்தது. ஆனால் வேறு பல சுவாரஸ்யமான விஷயங்களும் இந்த ஆய்வு முடிவுகளில் வெளிவந்திருக்கின்றன.
முதலில் மதத்தை “மதிப்பது” பற்றி பெரும்பாலான இந்தியர்களிடையே சாதகமான கருத்து இருக்கிறது (இது ஒன்றும் ஆச்சரியமில்லைதான்!). ஒட்டுமொத்தமாக ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 84% பேர் “உண்மையான இந்தியராக இருப்பதற்கு எல்லா மதங்களையும் மதிப்பது முக்கியமானது” என்று கூறியிருக்கிறார்கள்.
இந்தக் கேள்விக்கு பதிலளித்தவர்களில் இந்துக்களில் 85 விழுக்காட்டினர், முஸ்லீம்கள் 78%, கிறித்தவர்கள் 78%, சீக்கியர்கள் 81% என்று தெரிகிறது. ஆனால் இந்த மற்ற மதங்களை மதிக்கும் தன்மை ஒரு கொள்கையளவில் நின்று போய்விடுகிறதா?
வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் தனித்தனியாகத்தான் வாழவேண்டும், ஒன்றாக கலக்க முடியாது என்று கூறுபவர்கள் அதிகம். ஆய்வில் கலந்து கொண்ட இந்துக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் மதக் கலப்பு மணங்களுக்கு எதிரான கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
முஸ்லீம்களில் இந்த நிலை இன்னும் மோசம். ஆய்வில் பங்கேற்ற முஸ்லிம்களில் 75 சதவீதத்துக்கு மேலானவர்கள், மதக் கலப்புத் திருமணங்களுக்கு எதிரான கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
மொழி, தேசிய அடையாளம்
அடுத்ததாக தேசிய அடையாளம் பற்றிய பிரச்சனை.
உண்மையான இந்தியனாக இருப்பதற்கு, இந்துவாக இருப்பது மிகவும் முக்கியமானது என்று, ஆய்வில் கலந்து கொண்ட இந்துக்களில் 64 விழுக்காட்டினர் கூறியிருக்கின்றனர்.
இந்த “இந்துவாக இருந்தால்தான் இந்தியன்” என்ற கருத்தை தெரிவித்திருக்கும் 64%ல், இந்தி பேசுவதுதான் உண்மையான இந்தியனாக இருப்பதற்கு மிகவும் முக்கியமானது என்று கருதுபவர்கள் 80 சதவீதம்!
தென் மாநிலங்களில் கூட “இந்திய அடையாளத்தை, இந்து அடையாளத்துடன் இணைத்துப் பார்ப்பவர்கள் (ஆய்வில் கலந்து கொண்டவர்களில்) 42% பேர் என்பது வியப்பான விஷயமல்ல. கர்நாடகாவில் பாஜக பலமாக இருப்பதைக் கவனிப்பர்களுக்கு இது புரியும்.
ஆனால், இந்து- இந்தி- இந்திய அடையாளத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பவர்களில் 60 விழுக்காட்டினர் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்திருக்கின்றனர் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
பசுவும் பன்றியும்
சாப்பாட்டுச் சண்டையும் தெரிந்த விஷயம்தான்.
பசு மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் இந்துக்களாக இருக்க முடியாது என்று கூறுபவர்கள் (ஆய்வில் கலந்துகொண்ட) இந்துக்களில் 72%.
பன்றி இறைச்சி சாப்பிடுபவர்கள் முஸ்லீம்களாக இருக்க முடியாது என்று கூறும் முஸ்லீம்கள் (ஆய்வில் கலந்து கொண்டவர்களில்) 77 %.
கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் உண்மையான இந்துவாகவோ அல்லது முஸ்லீமாகவோ இருக்க முடியாது என்று கூறுபவர்கள் எண்ணிக்கையைவிட இது அதிகம்! கோயிலுக்குப் போகாத இந்துக்கள் உண்மையான இந்துக்கள் இல்லை, மசூதிக்குப் போகாத முஸ்லீம்கள் உண்மையான முஸ்லீம்கள் இல்லை என்று கூறுபவர்களையும் விட, இந்த “பசு/பன்றி” சமாசாரத்துக்கு முக்கியத்துவம் தருபவர்கள் அதிகம்!
“சோற்றுக்குள் இருக்கிறான் சொக்கநாதன்” என்ற சொல்லடை இப்படி விபரீதமாகத்தான் புரிந்துகொள்ளப்படுகிறது போல!
தனிச் சிவில் சட்டம் வேண்டும் என்று கோரும் முஸ்லீம்கள்தான் பெரும்பான்மை. வியப்பில்லை.
சுதந்திரத்தின் போது இந்தியப் பிரிவினை இந்தியாவில் மத நல்லிணக்கத்தைக் கெடுத்த விஷயம் என்றுதான் பொதுப்புத்தியில் புரிதல் இருக்கிறது. ஆய்வில் கலந்து கொண்ட இந்துக்களில் 43% பேர் பிரிவினை நல்ல விஷயம்தான் என்பதும், முஸ்லீம்களில் 48% பேர் அதை ஒரு மோசமான விஷயம் என்றும் கூறுகிறார்கள்.
சாதி: 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் சாதி கடந்த திருமணங்களை எதிர்க்கிறார்கள். சமூகத்தில் சாதியின் பிடிமானம் தளர இன்னும் நீண்ட தூரம் கடக்க வேண்டியிருக்கிறது.
மத மாற்றம்: பாஜகவும் சங்க பரிவார இயக்கத்தினரும் பூதாகரமாக எழுப்பும் பூச்சாண்டி. ஆய்வு முடிவுகளில் பார்த்தால் இந்து சமுதாயத்திலிருந்து மதம் மாறுபவர்கள், வேறு மதங்களிலிருந்து இந்துவாக மாறியவர்கள் சதவீதக்கணக்கு ஏறக்குறைய சமமாகத்தான் இருக்கிறது.
என்னைப் பொருத்தவரை மிகச் சுவாரஸ்யமான அம்சம் நாத்திகம் பற்றியதுதான்.
இந்தியர்களில் வெறும் 3 விழுக்காட்டினரே கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என்று இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
இதில் மத ரீதியாகப் பார்த்தால், இறை நம்பிக்கையை மையமாகக் கொள்ளாத புத்த மதத்தில்தான் மூன்றில் ஒரு பங்கினர் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாகக் கூறியிருக்கின்றனர். அடுத்து வருவது முஸ்லீம்கள் (6%), கிறித்தவர்களிலும், இந்துக்களிலும் 2 சதவீதத்தினர்தாம் இறை மறுப்பாளர்களாகக் கூறியிருக்கின்றனர்.
முஸ்லீம்களில் இறை நம்பிக்கை இல்லாதவர்கள் இருக்க முடியாது, இந்துக்களில் நாத்திகர்கள் இருக்க முடியும் போன்ற அரசியல் சாயம் பூசப்பட்ட கருதுகோள்கள் இங்கே உடைவது சுவாரசியமான விஷயம்.
அதைப்போல கர்மா, விதி, மறுபிறப்பு போன்ற கொள்கைகள் மதங்களைக் கடந்து எல்லா மக்களிடமும் தாக்கம் செலுத்துவதை இந்த ஆய்வு காட்டுகிறது.
வடக்கு தெற்கு
மதம் பற்றிய அணுகுமுறையில் வடக்கிலும், மத்தியிலும் உள்ள (இந்தி பேசும்) மாநிலங்களுக்கும், தென் மாநிலங்களுக்கும் இடையே பெருத்த வேறுபாடு இருப்பது புலனாகிறது.
உதாரணமாக, மதம் எங்களுக்கு மிகவும் முக்கியம் என்று சொல்பவர்கள் மத்திய மாநிலங்களில் 92%, வட மாநிலங்களில்86%, ஆனால் தென் மாநிலங்களில் 69%தான்.
ஒரு முஸ்லீமை பக்கத்து வீட்டுக்காரராக ஏற்றுக்கொள்வேன் என்று பதிலளித்த இந்துக்களில், தென்னிந்தியாவில் 75%, மத்திய இந்தியாவில் 46%, வட இந்தியாவில் 56% பேர்.