செம்பு

செம்பு

— வேதநாயகம் தபேந்திரன் — 

சிலேடைத் தமிழ் சொற்கள் காலத்துக்குக் காலம் புதுப் பிறப்பு எடுக்கின்றன. ”அவன் அவற்ர செம்பு”என்பதில் ஒருவரின் அடியாள் அல்லது அடிவருடி என்பதைக் குறிக்கச் செம்பு என்ற சொல் வழக்கு அண்மைய காலமாக உலா வருகின்றது. 

காய், சரக்கு, பீலா, அயிற்றம், ஆள் எழுப்பி, பெரிசு, றெக்கி எனக் காலத்துக்குக் காலம் சிலேடை, விகடம் தரும் சொற்கள் புதிதாக வருகின்றன. 

”நாங்கள் செம்பு தண்ணி எடுக்காத பகுதி அல்லோ அது” இப்படித் தமது குலப்பெருமை காட்டும் பழைமைவாதிகள் அன்றும் உள்ளனர். இன்றும் இருந்தனர். 

முப்பது வருடப் போரில் பல இடம்பெயர்வுகள். முள்ளிவாய்க்கால் வரையும் போய்த் திரும்பி வந்தார்கள். ஆனால் திருந்தி வரவில்லை என்பது தான் வரலாற்றின் கொடுமை. 

வீட்டுக்கு வீடு பித்தளைச் செம்புகள் இருந்தது ஒரு காலம். பித்தளைப் பாத்திரங்கள் உடல் ஆரோக்கியத்தைத்தருவன. மூக்குப் பேணி, பித்தளை மண்ணெண்ணை விளக்குகள், சுவாமிப்பட விளக்குகள், தாம்பாளம், தட்டம் என பித்தளையின் வடிவங்கள் நீளமானவை. 

ஆனால் பித்தளைப் பாத்திரங்களுக்கும் யாழ்ப்பாணத்தானுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. புதிதாக வாங்கிய ஒரு பித்தளைப் பாத்திரம் பாவிக்கப் பாவிக்க நாளடைவில் செழும்பு பிடிக்கும். 

செழும்பைப் போக்காட்ட எப்படித் தான் பழப்புளி போட்டு ஊற வைத்துத் தேய்த்தாலும் செழும்பு மென்மையான ஒரு படையாகத் தன்னும் தெரியும். முழுமையாகப் போகாது.  

அது போலத் தான் யாழ்ப்பாணத்தானும் எப்படித்தான் படித்தாலும் உயர்ந்தாலும் சாதி பார்க்கும் மனப்பாங்கு மனதின் ஆழத்தில் இருந்தே தீரும். 

பித்தளை விலை கூடிய உலோகமாக மாறச் எவர்சில்வர் செம்புகள் பாவனைக்கு வந்தன. 1980களின் முற்பகுதியில் எவர்சில்வர் யுகமொன்று வந்தது. எவர்சில்வர் ரம்ளர், குடம், பானை எனச் எவர்சில்வர் அயிட்டங்கள் வீடுகளில் சோக்கேஸை நிறைத்தன.  

சில்வரும் விலை கூடப் பிளாஸ்ரிக் செம்புகளும் வந்தன. ஆனால் பெரிதாக அவை எடுபடவில்லை. 

செம்பு தண்ணீர் கொடுத்து சபையில் பெரியோரைக் கனம் பண்ணி விருந்துக்கு அழைத்தல் எமது பண்பாடு. 

திருமணப் பேச்சு முடிந்ததும் சம்பந்தக்கலப்பு நடைபெறும். பெண் வீட்டார் மணமகன் வீட்டுக்குச் செல்வது முதலில் நடைபெறும். அப்போது பெண்ணின் தாய் தந்தையர் செம்பு நிறையத் தண்ணீரை மணமகனின் தாய் தந்தையரிடம் கொடுத்து சோறு சாப்பிட அழைப்பார்கள்.  

அது போல மணமகன் வீட்டார் பெண் வீட்டுக்குச் சம்பந்தக் கலப்புக்குச் செல்லும் போது மணமகளின் தாய், தந்தையர் செம்பு தண்ணீர் கொடுத்து விருந்துக்கு அழைப்பார்கள். 

இதிலிருந்து தான் செம்பு தண்ணீர் கொடுத்தல் என்பது சம சமூக அந்தஸ்து என்ற கருத்தைத் தந்தது. 

வாழையடி வாழையாக செம்பு தண்ணீர் கொடுக்கும் பண்பாடு தொடர்கிறது. 

ஆனால் இன்றைய ஹோல் மங்கல நிகழ்வுகளில் செம்பு தண்ணீர் கொடுத்து விருந்தோம்ப அழைக்கும் பண்பாடு இருப்பதாகத் தெரியவில்லை. 

மண்டபப் பண்பாடு மரபுகளை மறையச் செய்கிறது போலும். 

இன்றைய நாளில் அந்தியேட்டி நிகழ்வுகளில் வருகை தந்தோருக்குச் எவர்சில்வர் பாத்திரமொன்று கொடுக்கும் பழக்கமொன்று உருவாகியுள்ளது. 

பெரும்பாலும் பெரியதாகவோ சிறியதாகவோ எவர்சில்வர் செம்பு ஒன்று கொடுக்கிறார்கள்.  

இன்றைய காலத்தில் பெரும்பாலான சாப்பாட்டுக் கடைகளில் செம்புகளில் தண்ணீர் வைக்கும் முறை அற்றுப் போய்விட்டது. பதிலாகப் பிளாஸ்ரிக் குடுவையொன்றில் தண்ணீர் வைக்கின்றார்கள். 

கோயில்களில் 108 செம்பு அல்லது 1008 செம்புகளில் தண்ணீர் விட்டு அபிசேகம் செய்யும் முறை தொடர்கின்றது. அங்கும் பித்தளைச் செம்புகள் காணாமல் போய் எவர்சில்வர் செம்புகளே இடத்தைப் பிடித்துள்ளன.  

எம்மவர் பித்தளைப் பாத்திரங்களைச் சுமையாகவும், நாகரிகம் குறைந்தவையாகவும் நினைக்கின்றனர். வேண்டாத பொருளாக அடிமாட்டு விலைக்கு விற்கின்றனர். உலோக வியாபாரிகள் மூலமாகச் சிங்கள மக்கள் இவற்றை வாங்கித் தமது வரவேற்புக்கூடங்களில் பெருமையாக வைக்கின்றனர். எமது செம்பு அவர்களது வரலாற்றின் தொன்மையாக மாறிவிட்டுள்ளது.  

செம்பு தொடர்பாகப் பழமொழிகளும் சினிமாப் பாடல்களும் நாட்டார் பாடல்களும் பல உள்ளன.  

செம்பு தொடர்பாக உங்களுக்கும் பல நினைவுகள் இருக்கும். மனதை அசைபோட்டுப் பாருங்கள்.