ரெலோ முயற்சி – புதிய போத்தலில் பழைய கள்ளு

ரெலோ முயற்சி – புதிய போத்தலில் பழைய கள்ளு

 — கருணாகரன் — 

தமிழ் அரசியற் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் தமிழ் மக்களுக்கு அவ்வப்போது ஏதாவதொரு புதுக்கதையைச் சொல்வதுண்டு. சற்று உன்னிப்பாகப் பார்த்தால் அதொன்றும் புதிய கதையாக இருக்காது. சலித்துப்போன பழைய கதையைச் சற்று உருமாற்றிச் சொல்லியிருப்பார்கள். அவ்வளவுதான். ஆனால் அதை எப்படியே சனங்கள் நம்புகிறமாதிரிச் செய்து விடுவார்கள். இதில் அவர்கள் மகா கெட்டிக்காரர்கள். உண்மையில் இதில் இவர்கள் பலே கில்லாடிகள். நிபுணர்கள். இல்லையென்றால் எந்தப் பயனையுமே தராத – எதிர்விளைவுகளையே உற்பத்தி செய்து கொண்டிருக்கின்ற – தமிழ் (தேசிய) அரசியல் இன்னும் சூடு குறையாமல் இருக்குமா? 

இந்தப் பழைய கதைகளைப் புதிசாகக் காட்டும் அரசியல் நாடகத்துக்கு இவர்களுக்கு ஆதரவாகவும் அனுசரணையாகவும் இருப்பது தமிழ் ஊடகங்கள். அதோடு கூடவே அவ்வப்போது உருவாகிக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களும் அரசியல் பத்தி எழுத்தாளர்களும் ஆய்வாளர்கள் எனக் கூறிக் கொள்வோருமாகும். ஆக மொத்தத்தில் ஒரு பெரிய அணி, கூட்டணியாகி இந்த அரும்பெரும் நாடகத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டேயிருக்கிறார்கள். 

அதாவது எல்லோரும் ஒன்று சேர்ந்து சனங்களை முட்டாள்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 

இதை ஏன் இங்கே இப்போது சொல்லவேண்டியிருக்கிறது என்றால், கடந்த வாரம் ரெலோ ஒரு புதிய கதையை (புருடாவை) விடத் தொடங்கியுள்ளது. “ஓரணியாக நின்று தீர்வுக்காகச் செயற்பட தமிழ்த்தேசியக் கட்சிகளின் தலைமைகளுக்கு அழைப்பு” என்பதுதான் இந்தக் கதையின் (நாடகத்தின்) தலைப்பு. இதைச் சனங்களுக்கு வலிந்து பிரசித்தம் பண்ணிக் கொண்டிருக்கிறது யாழ்ப்பாணத்தின் பத்திரிகை ஒன்று. 

முதலில் இதைப் பற்றிச் சற்றுப் பார்க்கலாம். ரெலோ, ஏற்கனவே ஒரு கூட்டணியில் உள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில். ஆகவே அந்தக் கூட்டமைப்பிற்குள்ளேயே இதைக்குறித்துப் பேசி ஒரு நிலைப்பாட்டுக்கு ரெலோ வந்திருக்க வேண்டும். கூட்டமைப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகியனவே உள்ளன. என்பதால் ஏனைய இரண்டு கட்சிகளோடும் பேசி உடன்பாடு கண்டிருக்க வேண்டும். அப்படி உடன்பாடு காண்பது அவசியமாகும். 

அதாவது தங்களோடு பல வகையிலும் ஒன்றிணைந்திருக்கும் கூட்டமைப்பை ஒரு நிலைப்பாட்டுக்கும் உடன்பாட்டுக்கும் கொண்டு வந்திருக்க வேண்டும். பிறகே ஏனைய தரப்பினரை அழைத்திருக்க வேண்டும். அல்லது கூட்டமைப்புக்கு வெளியே வந்து இந்தப் பொது அழைப்பை விடுத்திருக்கலாம். 

அப்படியெல்லாம் ரெலோ செய்யவில்லை. பதிலாக ரெலோவின் அழைப்பை தமிழரசுக் கட்சிகூட ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன் அது பொருட்படுத்தவேயில்லை. இதை, குறித்த பத்திரிகையே உள் வீட்டுச் சங்கதி என்ற வகையில் எழுதியிருக்கிறது. குறிப்பாக ரெலோவின் இந்த அரிய முயற்சியை (அப்படித்தான் இந்தப் பத்திரிகை குறிப்பிட முனைகிறது) தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தன்னுடைய தனிப்பட்ட நலன்களுக்காக நிராகரித்து உதாசீனப்படுத்திருக்கிறார் என. 

அப்படியென்றால் மாவை சேனாதிராஜாவை அம்பலப்படுத்தி சனங்களின் மத்தியில் அவரைக் கீழிறக்கம் செய்வதற்காகவா இந்த ஏற்பாடு? அல்லது, தமிழரசுக் கட்சி தீர்வு முயற்சிக்கு எதிராகச் செயற்படுகிறது என்று காட்டுவதற்காகவா இந்த முயற்சி? அப்படித்தான் என்றால், தமிழரசுக் கட்சியின் ஏனைய தலைவர்களான சம்மந்தன், சுமந்திரன் தொடக்கம் கீழ் மட்டத் தலைவர்களான சிறிதரன், சாணக்கியன் வரையில் இதைக்குறித்து என்ன சொல்கிறார்கள்? ரெலோவின் இந்த நன்முயற்சியைப் பற்றி இவர்களுடைய – தமிழரசுக் கட்சியின் – நிலைப்பாடு என்ன? 

அடுத்தது ரெலோவின் இந்த முயற்சியைப் பற்றி புளொட்டும் பெரிதாக அக்கறை காட்டவில்லை. அது எப்போதையும் போலு சுயமாக முடிவெடுக்காமல், தமிழரசுக் கட்சி என்ன செய்கிறது என்பதையே அவதானித்துக் கொண்டிருந்தது. இதைப்பற்றி சித்தார்த்தனிடம் சிலர் கேட்டபோது அவர் வழமையைப்போல கலங்கலாகவே– பிடிகொடுக்காமல் பதிலளித்திருக்கிறார். என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்ற மாதிரி. ஆனால், குறைந்த பட்சம் புளொட்டையாவது தன்னுடைய முயற்சியில் இணைத்திருக்க வேண்டும் ரெலோ. அதைச் செய்வதற்குத் தவறியிருக்கிறார் செல்வம். 

இறுதியில் ரெலோவின் அழைப்பை ஏற்றுக்கொண்டவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மட்டும்தான். ஐங்கரநேசன், மாவை சேனாதிராஜா, அனந்தி சசிதரன், விக்கினேஸ்வரன், சிவாஜிலிங்கம் என யாருமே கலந்து கொள்ளவில்லை. அப்படி இவர்களெல்லாம் கலந்து கொண்டிருந்தாலும் எந்தப் புதிய ஆச்சரியங்களும் ஏற்பட்டிருக்காது. எந்தச் சிறந்த முடிவும் எட்டப்பட்டிருக்காது. குறைந்த பட்சம் எந்தப் புதிய தொடக்கம் கூட நிகழ்ந்திருக்காது. 

ஏனென்றால், அப்படியொரு சிந்தனையோ அக்கறையோ நோக்கமோ இவர்களுடைய இதயத்திலும் இல்லை. மூளையிலும் இல்லை. 

இதை நாம் உறுதியாகவே கூற முடியும். ஏனென்றால் இப்படிப் பல வரலாற்றுப் புருடாக்கள் ஏற்கனவே தொடர்ச்சியாக –நீண்ட காலமாகவே நடந்துள்ளன. இதைச் சற்றுப் பின்னோக்கிப் பார்த்தாலே தெரியும். 

தமிழ் மக்கள் சந்தித்து வருகின்ற நெருக்கடிகளோ ஏராளம். பிரச்சினைகளும் ஏராளம். தேர்தல் தொடக்கம், நினைவு கூருதல்கள், அரசியற்கைதிகள் விவகாரம் வரை பல. இதன்போதெல்லாம் இந்தக் கட்சிகளும் தலைவர்களும் ஒன்று பட வேண்டும் என்ற குரல்கள் எழும். ஒன்றுபடுத்துத்துவதற்கான முயற்சிகளும் சிலரால் மேற்கொள்ளப்படும். அதற்கான நியாயங்களும் கூறப்படும். இதில் பல்கலைக்கழக மாணவர்கள் தொடக்கம் புலம்பெயர் அமைப்புகள், தனி நபர்கள் எனப் பல தரப்புகள் முயற்சிப்பதுண்டு. எல்லாமே அந்தந்த நேரத்துத் தேவையோடு முடிந்து விடும். 

பிறகு வேதாளம் முருங்கையில் ஏறிய கதைதான். யாரும் ஒற்றுமையைப் பற்றியோ ஓரணியைப் பற்றியோ சிந்திப்பதில்லை. 

மறுவளமாக இந்த ஒற்றுமை –ஓரணியில் திரள்வதற்குப் பதிலாக கடந்த பத்தாண்டுகளுக்குள்ளேயே இந்தத் தரப்புகள் முரண்பட்டு, உடைந்து உடைந்து பலவாகச் சிதறுண்டிருக்கின்றன. இப்படி பல உடைவுகள் நடக்கும்போதும் உடைவுகளுக்குக் காரணமான உள்முரண்பாடுகள் வலுத்தபோதும் ரெலோ எந்தப் பெரிய சமாதான முயற்சிகளையும் செய்யவில்லை. பொருத்தமான தீர்மானங்களையும் வலியுறுத்தல்களையும் மேற்கொள்ளவில்லை. ஏன் ரெலோவே உடைந்திருக்கிறது. இதற்கெல்லாம் காரணம், ஜனநாயகக் குறைபாடும் கொள்கைப் பற்றில் உள்ள குழப்ப நிலையுமே. இதைக்குறித்து ரெலோ கூடச் சிந்திக்கவில்லை. 

இப்படி ஆயிரம் குறைபாடுகளை வைத்துக் கொண்டு புதிதாக ஐக்கியம் பற்றியும் ஓரணியில் திரள்வதைப் பற்றியும் கதை விடுகிறார்கள் என்றால் அதன் அர்த்தம் என்ன? 

இதற்குக் காரணம், சரிந்து கொண்டிருக்கும் நம்பிக்கையையும் மதிப்பையும் தூக்கி நிறுத்துவதற்கான ஒரு தற்காலிக ஏற்பாடே. இது போல முன்பும் பல அரசியற் கூத்துகள் நடந்துள்ளன என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். 

அண்மைய உதாரணங்களில் ஒன்று, தமிழ் மக்கள் பேரவை. கொஞ்சக் காலம் இந்தப் பேரவையைப் பற்றிய சேதிகளே ஊடகங்களிலும் உரையாடற் பரப்பிலும் நிறைந்திருந்தன. மிகப்பெரிய நம்பிக்கை என்றொரு தோற்றப்பாட்டை பேரவை பலரிடத்திலும் உண்டாக்கியது. இன்று பேரவையைப் பற்றிய பேச்சையே காணவில்லை. 

அதற்கு முன்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒரு பெரிய சக்தியாக உணரப்பட்டது. குறிப்பாக 2009க்குப் பின்னர். இன்று கூட்டமைப்பு உடைந்து பலவாகச் சிதறி விட்டது. இப்பொழுது அது மேலும் உள் முரண்டாடுகளால் உட்சிதைவுக்குள்ளாகியுள்ளது. தேர்தலை எதிர்கொள்வதற்கான ஒரு கட்டமைப்பு என்பதற்கு அப்பால் அதனிடம் எந்தப் பெறுமதிகளும் இல்லை என்றாகி விட்டது. 

இதற்கு முன்பும் ஒரு தோற்றப்பாடும் நம்பிக்கையும் ஊட்டப்பட்டது, 1970களில் தமிழர் விடுதலைக் கூட்டணி என. அதற்கு முன்பிருந்த தமிழரசுக் கட்சியின் இயலாமை – மக்களுக்கு அதனிடத்தில் எழுந்த நம்பிக்கையீனம் போன்றவற்றைச் சமாளித்துப் போக்கிக் கொள்வதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற ஒரு புதிய தோற்றத்தை – புதிய கதையை அவிட்டு விட்டனர். ஆனால் அடிப்படையில் தமிழரசுக் கட்சிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையில் எந்த வேறுபாடுகளும் இருக்கவில்லை. ஆட்களும் ஒன்றுதான். அவர்களின் கதையும் ஒன்றுதான். 

இப்படிக் காலத்துக் காலம் பழைய கள்ளை புதிய போத்தலில் விட்டுக்கொடுக்க முயற்சிக்கும் அங்கிடுதத்தித்தனம் இந்தத் தரப்பினால் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. செயற்பாட்டு அரசியலை முன்னெடுக்க முடியாதவர்கள் – வக்கற்றவர்கள் –செய்கின்ற தந்திரோபாயம் என்ற அயோக்கியத்தனம் இதுவாகும். இதை சனங்களுக்குக் கொண்டு சென்று பிரசித்தம் செய்வதில் தொடர்ந்து தமிழ் ஊடகத்துறையினரில் பெரும்பாலோனோரும் அவ்வப்போது தோன்றும் அரசியல் ஆய்வாளர் என்ற அவதார புருசர்களும் முன்னின்றனர். 

2009க்குப் பின்னர் கூட – பெரும் பேரழிவுக்குப் பிறகும் இந்தத் தமிழ்க்கட்சிகள் நோகா அரசியலையே மேற்கொண்டன. இது உருப்படாது. புதிய சூழலை எதிர்கொள்வதற்கான விஞ்ஞான பூர்வமான சிந்தனையோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கக் கூடிய திராணியோ விடுதலை அரசியலுக்கான அர்ப்பணிப்போ இவர்களிடம் இல்லை என்று மிகச் சிலரே தொடர்ந்து கூறி வந்தோம். அப்போதெல்லாம் நமது குரல் பரிகசிக்கப்பட்டது. தவறாக மக்களுக்கு அடையாளம் காட்டும் முயற்சிகள் எல்லாம் நடந்தன. 

ஆனால் வரலாறு மாற்றமடைந்து இப்பொழுது உண்மைகளை ஏற்றுக் கொள்ள வைத்துள்ளது. இதுவரையும் இந்தத் தரப்புகளை ஆதரித்துக் கொண்டாடியோரில் பலர், முக்கியமாக அரசியல் கருத்துருவாக்கிகள் இந்தத் தரப்புகளால் ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது என்று சினக்கத் தொடங்கியுள்ளனர். வெட்கத்தை விட்டு உண்மையை ஏற்க முன்வந்துள்ளனர். அப்படியென்றால் இதுவரையான இந்த ஏமாற்றுகளுக்கும் தவறுகளுக்கும் கால விரயத்துக்கும் இவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.  அதுவே நேர்மையானது. சரியானது. 

ஆனால் இவர்களையும் கடந்தே இந்தப் புதிய ஒற்றுமை – ஓரணிப் புருடாக்கள் தொடருகின்றன என்பதை நாம் புரிந்து கொள்பது அவசியம். சரியும் மதிப்பை எப்படியாவது தூக்கி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற எத்தனம். நாடகம். இப்படி எத்தனை நாடகங்களைக் கண்டு வந்திருக்கிறோம்!