‘கிழக்கை கையாள ஏஜண்டு தேவை?’ (காலக்கண்ணாடி 46)

‘கிழக்கை கையாள ஏஜண்டு தேவை?’ (காலக்கண்ணாடி 46)

— அழகு குணசீலன் — 

கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதில் ஏதையா….! 

கிழக்கை கையாள்வதில் தோல்வியடைகிறதா தமிழ்த்தரப்பு…? 

கடந்த பாராளுமன்ற பொதுக் தேர்தலுக்குப் பின்னர் கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னை தக்க வைத்துக் கொள்வதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கூட்டமைப்புக்குள்- கூட்டாளிக் கட்சிகளுக்கிடையே நிலவும் குத்துவெட்டுக்களும், தமிழ்த்தேசிய மும்மூர்த்திகளுக்கு இடையிலான ஒற்றுமையின்மையும், கொழும்பு, புதுடெல்லி அரசாங்கங்களின் நகர்வுகளுக்கு ஏற்ப காய்களை நகர்த்த முடியாத பலவீனமான நிலையும் இந்த விவகாரத்தை மேலும் இடியப்பச் சிக்கலாக்கி இருக்கிறது. 

தமிழ்த்தேசியத் தலைமைகளின் இந்த போக்குக்குறித்து உள்ளும், வெளியும் பல்வேறு விமர்சனங்களும் ஆலோசனைகளும் ஊடகங்களாலும், ஆய்வாளர்களாலும் முன்வைக்கப்படுகின்ற இன்றைய சூழலில் திரு.சி.அ.யோதிலிங்கம் அவர்கள் சமூக ஊடகமொன்றில் சில ஆலோசனைகளை(?) முன் வைத்துள்ளார்.  

“கிழக்கை கையாள்வதில் தோல்வியடைகிறதா தமிழ்த்தரப்பு? என்ற கேள்விக்கு பதிலளித்தார் யோதிலிங்கம்” என்பது, அவரின் கருத்துக்களுக்கு இடப்பட்டிருந்த தலைப்பு. 

கிழக்கின் தனித்துவம், அரசியல் தலைமைத்துவம், எழுச்சி தொடர்பாக இவரால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களின் பக்கம் இவ்வார காலக்கண்ணாடி திரும்புகிறது. 

யோதிலிங்கம் பேசும் மேதகு அரசியல்:  

#குறிப்பு: இது தமிழக சினிமாக்காரர்களின் மேதகு அரசியல் வியாபாரம் அல்ல. மாறாக யாழ்.மேலாதிக்கத்தின் மேட்டுத் தமிழ்க்குடி அரசியலை இங்கு குறித்து நிற்கிறது மேதகு #. 

 மேதகு  1:  

“கிழக்கிலே வலுவான சொந்தக்காலில் நிற்க்கூடிய ஒரு தலைமையை உருவாக்கி, கிழக்கின் விவகாரத்தை கிழக்கு பார்ப்பதாகவும், வடக்கின் விவகாரத்தை வடக்கு பார்ப்பதாகவும், மொத்த தேசிய விகாரத்தை இரு தரப்பும் இணைந்து பார்ப்பதாகவும் ஒரு நிலையை நோக்கி நாங்கள் கிழக்கு அரசியலை நகர்த்த வேண்டும். அதனூடாகத்தான் இந்த பிரதேசவாதத்திற்கு ஒரு முடிவுகட்டலாம்”. 

இதற்கு தமிழ்த்தேசிய கிழக்கு முகவராக யோதிலிங்கத்தின் “சாணக்கியம்” நிறைந்த சிபார்சு – சாணக்கியன். 

மேதகு 2: 

“உண்மையில் வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை என்றால் தமிழர் தாயகம் இல்லை. தமிழர்தாயகம் இல்லை என்றால் தமிழ்த்தேசியம் இல்லை”. 

மேதகு 3: 

“தமிழ் முஸ்லீம் உறவு முரண்பாட்டை முழுத்தந்திரோபாயங்களை வகுத்து செயற்படுவதில் எங்களுடைய மரபு ரீதியான அரசியல் தோல்வி அடைந்திருக்கிறது. கிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் முஸ்லீம்களோடு ஒரு பகை முரண்பாடு இருக்கின்ற நிலையில் சுமந்திரன் அவசரப்பட்டு அவர்களோடு ஒரு ஐக்கியத்திற்குப் போகப்போகிறோம் என்று சொல்லி ஊடகவியலாளர் மாநாடு வைத்து தெரிவித்தது கிழக்கில் தமிழ் மக்களை அந்நியப்படுத்தி இருக்கிறது”. 

மேதகு 4: 

“அரசாங்கத்தோடு, சிங்களத்தரப்போடு இணைந்தாவது கிழக்குமாகாணத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற போக்கும் அதற்காக சிங்கள முதலமைச்சரைக் கூட கொண்டு வரவிரும்புகின்ற நிலைமையும் காணப்படுகிறது. பிள்ளையான், வியாழேந்திரன் போன்றவர்கள் அந்த முயற்சியில் தான் செயற்படுகிறார்கள். 

ஒட்டுமொத்தமாக ஆலோசனைகள் கூறுவது என்ன? கிழக்கை யாழ்.மேலாதிக்க தலைமையின் கீழ் கொண்டுவருவதற்கான தந்திரோபாயம். அதாவது “சுயாதீன தலைமைத்துவம்” நோக்கி சென்று கொண்டிருக்கும் கிழக்கை தன்னிச்சையாக இயங்கவிடாமல் சாணக்கியனை முகவராக நியமித்து கணு நாட்டி வளையப்போடுதல் (நீளக் கயிற்றில் கட்டிப்போடுதல்). வெளிப்பார்வைக்கு சுயாதீன செயற்பாடு போல் தோற்றமளிக்கும் ஆனால் மேதகு கயிறு கட்டப்பட்டுத்தான் இருக்கும்.  

பலாப்பழத்தை பழுக்க வைக்க முள்ளைப்பிடுங்கி கட்டையை அடி. தானாகக் கனியாததை தட்டிக் கனிய  வை. அதாவது தமிழ்த்தேசியம் கிழக்கில் முற்றிப்பழுக்கும் வரை காத்திருந்தால் இலவுகாத்த கிளியின் கதையாகிவிடும். இதனால் தானே கனியாததை தட்டிக் கனிய வைக்க முள்ளைப் பிடுங்கி கட்டையை அடிக்கிறார் யோதிலிங்கம்.  

கிழக்கில் யாழ். மேலாதிக்க முகவர் அரசியல்: 

கிழக்கு மக்களின் பிரச்சனைகளை, அவர்களின் கோரிக்கைகளை, அவர்களின் அபிலாஷைகளை யோதிலிங்கம் விளங்கித்தான் பேசுகிறாரா? அல்லது விளங்கியும் விளங்காததுபோல் பிரச்சினையின் மையப் புள்ளியில் இருந்து வேண்டுமேன்றே விலகி நின்று பேசுகிறாரா? 

என்பது அவருக்குத்தான் வெளிச்சம். 

ஐயா! யோதிலிங்கம் அவர்களே! கிழக்கு மக்கள் இந்த முகவர் அரசியலை (AGENT POLITICS) எப்பவோ தூக்கி எறிந்து விட்டு தனிவழியில் போய்க் கொண்டிருக்கிறார்கள். 1977இல் இராசதுரையை வெற்றிபெறச் செய்து காசி ஆனந்தன் என்ற முகவரைத் தோற்கடித்ததையும் சம்பந்த மூர்த்தியை தவிர்த்து தேவநாயகத்தை தெரிவு செய்ததையும் இங்கு குறிப்பிடலாம்.  

2020 தேர்தலில் மாற்றுத் தலைமைத்துவத்தை தமிழ்த்தேசியத்திற்கு எதிராக வெற்றி பெறச் செய்திருப்பதன் மூலமும் அவர்களின் மொழியில் பேசியிருக்கிறார்கள். ஆயுத மொழிப் புலமையுள்ள உங்களுக்கு ஜனநாயக மொழியை புரிந்து கொள்வதில் சிரமங்கள் இருக்கலாம். அதற்காக உங்கள் பாஷையில் மக்கள் பேச முடியுமா என்ன? 

கிழக்கில் தமிழ்த் தேசியத்தின் தோல்வி என்பது உண்மையில்” முகவர் அரசியலின்” தோல்வி என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ளாதவரை அதை இறப்பில் தூக்கிப் போடவேண்டியதுதான். அற்புதமான ஆலோசனை ஒன்றை முன்வைத்திருக்கிறீர்கள் சாணக்கியனை முகவராக்கல். அவர் இப்போது செய்வதும் அதுதான். சிங்கள பௌத்த பேரினவாத முகவராக இருந்த  அனுபவங்களுடன் ஒருவரை சிபார்சு செய்திருக்கிறீர்கள். அவரது பாட்டனார் இராசமாணிக்கமும் இந்த “இருமுகவர்” அனுபவம் கொண்டவர். மேலாதிக்க அரசியல் போடுகாயாக தமிழரசு கட்சியின் தலைவராக இருந்தபோதே 1970இல் அவரை மக்கள் வீட்டுக்கனுப்பினார்கள். 

அது சரி. நீங்கள் பேசுகின்ற இந்த நிர்வாகப் பகிர்வு விடயம் கிழக்கில் ஒன்றும் புதிதல்ல. நீங்கள் பழைய கள்ளை புதிய போத்தலில் அடைக்கிறீர்கள். இதைத்தானே கருணா அம்மான் உங்கள் தலைவரிடம் கேட்டிருந்தார். அதற்கு “துரோகி” லேபல் ஒட்டிய நீங்கள். இப்போது மட்டும் என்ன கருணா அரைத்தமாவை திருப்பி அரைத்து பதிதாக பக்கட் பண்ணி புதுலேபல் ஒட்டுகிறீர்கள்.? காலம் கடந்த ஞானம்!  

பிள்ளையான் ஆரம்பத்தில் இருந்தே கூறிவருவதும் இதுதான். இரு மாகாணசபைகளும் தனித்தனியாக சுயாதீனமாக இயங்குதல். வடக்கு கிழக்கு பொது விடயங்களில் இணைந்து செயற்படுதல். ஒற்றுமையிலும் வேற்றுமை. வேற்றுமையிலும் ஒற்றுமை. அதற்கு உங்கள் அதிகாரப் பசி ஒத்துழைக்க மறுத்தது. இப்போது கிழக்கு மக்களின் அபிலாஷைகளை அங்கிகரிக்காமல் தமிழ்த்தேசிய கட்சி அரசியலை தக்கவைக்க போடும் தந்திரம் இது. 

கிழக்கில் ஏற்பட்டுவரும் எழுச்சி புளியைக் கரைக்கிறது. கிழக்கின் அரசியல் பலமும், தமிழ் தேசியத்தின் பலவீனமும் நாளுக்கு நாள் வெளிச்சத்திற்கு வருகிறது. முகவரை நியமித்து எழுச்சியை மழுங்கடிக்கும் திட்டம் தயாராகிறது. அமிர்தலிங்கத்தின் மேலாதிக்க வாரிசு.. 

உங்களின் மேதகு கருத்தின் தலைப்பு முதல் உள்ளடக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ள வார்ததைகளில் மேதகு குணாம்சம் பட்டென்று பளிச்சிடுகிறது. 

*”கிழக்கை கையாள்வதில் தோல்வியடைகிறதா தமிழர் தரப்பு*”  

*”நாங்கள் கிழக்கு அரசியலை நகர்த்த வேண்டும்*” 

 *”பிரதேசவாதம்*” (காலக்கண்ணாடி: 44 யோதிலிங்கத்திற்கு சமர்ப்பணம்) 

 *”எங்களுடைய மரபு ரீதியான அரசியல்*”. 

 *”கிழக்கில் நாங்கள் ஒரு தலைமையை உருவாக்க வேண்டும்*” 

இவை காலக்கண்ணாடியின் பெரும் கவன ஈர்ப்பைப் பெற்றவை. 

கையாள்தல் என்பது ஒருதரப்பு இன்னொரு தரப்பைக் கையாள்தல். 

ஆக, வடக்கு கிழக்கு தமிழர்கள் ஒரே தமிழ் தரப்பு அல்ல, இரு வேறு தரப்பு என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. “எங்களை” கிழக்காரை “நீங்கள்” வடக்கார் கையாளப் போகிறீர்கள் என்பதுதானே அர்த்தம். இதில் தோல்வியடைகின்ற தமிழ் தரப்பு யார்? நிட்சயமாக ஒட்டு மொத்த தமிழ் மக்களை இது குறிக்கவில்லை. நீங்கள் யாழ்.மேலாதிக்கம் தோல்வியடைவதைத்தானே குறிப்பிட்டிருப்பீர்கள். அதுதான் உங்கள் கவலை. 

இன்னும் சற்று விரிவாக நோக்கினால் HANDLE பண்ணுதல் என்பது உபயோகி, கையாளு, சமாளி என்ற வகையில் விரிவடைகிறது. அதாவது கிழக்கின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பதிலாக அதை உபயோகித்து, கையாண்டு, சமாளிக்கப் பார்க்கிறீர்கள் அப்படித்தானே? அதாவது “THAT PART OF ANYTHING BY IT IS HELD IN THE HAND” ஆக, கிழக்கை உங்கள் கைக்குள் வைத்துக் கொள்ளப் பார்க்கிறீர்கள். இது வடக்கையும் கிழக்கையும் சமமாக, ஒரே தமிழ் இனமாக, ஒரே தேசமாக பார்க்கும் சீத்துவமா? 

இன்னும் விரிவாக ஆராய்ந்தால் “கையாளுதல்” கையில் எடுத்து ஆளுதல். கிழக்கை உங்கள் மேலாதிக்க கையில் எடுத்து ஆளப்போகிறீர்கள் அப்படித்தானே? கையாளுதல் என்பது பறித்தல் என்றும், பலாத்காரம், வன்முறை என்றும் பொருள் கொள்ளக் கூடியது. 

“நாங்கள்” கிழக்கு அரசியலை நகர்த்த வேண்டும். இந்த “நாங்கள்” என்பது யாரைக் குறிக்கிறது? எங்களைத் தவிர்த்த உங்களைத்தானே. 

எங்களின் கிழக்கு அரசியலை நகர்த்த நீங்கள் யார்? கிழக்கின் அரசியலை என்ன குத்தகைக்கு எடுத்திருக்கிறீர்களா? 

இன்னொரு விடயம் கிழக்கில் நாங்கள் ஒரு தலைமையை உருவாக்க வேண்டும் என்று பேசுகிறீர்கள். கிழக்கின் தலைமையை நீங்கள் ஏன் உருவாக்க வேண்டும். 

அது கிழக்கின் தலைமை அதை கிழக்கு மக்கள் பார்த்துக் கொள்வார்கள். 

உங்களுக்கு தெரியுமா? தலைமை என்பது உருவாக்கப்படுவதல்ல சமூக, பொருளாதார, அரசியல் சூழலில் இயல்பாக உருவாகுவது. பிரபாகரனை நீங்கள்தான் உருவாக்கினீர்களா?அல்லது அவரது தலைமைத்துவம் சூழ்நிலைகளின் இயல்பான தோற்றமா? இதற்குப் பெயர்தான் அரசியல் சுத்த சூனியம்.  

சிங்கள முதலமைச்சர்: 

சிங்கள முதலமைச்சர் ஒருவரைக் கொண்டு வருவதற்கு முஸ்லீம் காங்கிரஸின் கிழக்கு மாகாண எம்.பி.க்கள் முயற்சிக்கிறார்கள் என்றும், அதற்காகத்தான் அவர்கள் 20ஐ ஆதரித்தார்கள் என்றும் பாராளுமன்றத்தில் சாணக்கியன் உறுமியதையும், நாய், புலி விவாதம் இடம்பெற்றதையும் மறந்து விட்டீர்களா? கன்ஷாட் பதிவுகளைப் படியுங்கள்.  

இப்போது பிள்ளையானும், வியாழேந்திரனும் முயற்சிக்கிறார்கள் என்று பாட்டை நீங்கள் மாற்றிப் பாடுகிறீர்கள். எது எப்படியோ கிழக்கு மாகாணம் மூவின மக்களும் ஏறக்குறைய சமமான அளவில்  வாழ்கின்ற ஒரு மாகாணம். சிங்களவர் ஒருவருக்கு முதலமைச்சராக வருவதற்கு உரிமை இல்லை என்று நினைக்கிறீர்களா? உங்கள் மேலாதிக்க குணாம்ச வரலாற்றில் இது ஒன்றும் புதுமை இல்லைத்தான். கிழக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள சிறுபான்மையின் உரிமையை மிதிக்கின்ற உங்களுக்கு தமிழ்த் தேசிய சிறுபான்மையினர் உரிமைபற்றிப் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது? கொழும்பு மாநகர சபையின் முதல்வர்களாக தமிழ், முஸ்லீம் நபர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  

கிழக்கு மாகாணத்திற்கான மாகாணசபைத் தேர்தலில் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், அதே ஜனநாயக முறையில் ஒருவரை முதலமைச்சராக தேர்வு செய்வதில் என்ன தவறு இருக்கிறது?  

அவர் சிங்களவராக, முஸ்லீமாக, அல்லது தமிழராக இருக்கமுடியும். 

ஜனநாயகம், மனிதஉரிமை, கருத்துச் சுதந்திரம் எல்லாவற்றையும் மேலாதிக்க கருத்தியலிலும், கற்பிதத்திலும் பார்ப்பதைத் தவிர்த்து இனமுரண்பாட்டால் ஏற்பட்டுள்ள சமூகங்களுக்கிடையிலான பிளவுகளை விரிவபடுத்துவது பிற்போக்கு குறுந்தேசியவாதம். இது ஒரு கட்டத்திற்கப்பால் கடிவாளமற்று தாண்டவமாடியதையும், அதன் விளைவுகளையும்  மக்கள் அனுபவித்தவர்கள். கிழக்கு மக்களுக்கு அதன் வலி தெரியும். 

சிங்கள பாராளுமன்றத்தில் ஜனநாயக ரீதியாக தமிழ்த்தேசிய பிரதிநிதி சிறிலங்கா அரசியலமைப்பை தீயிட்டுக் கொளுத்தி, தனிநாடு கேட்டுக்கொண்டு, தீயிட்டதையே சத்தியம் செய்து ஏற்று விசுவாசமான எதிர்க்கட்சித் தலைவராக இருக்கவில்லையா?  

சிங்கள பாராளுமன்றத்தில் உங்களுக்கு என்ன அலுவல்? தமிழ் ஈழப்பாராளுமன்றத்திற்கு போங்கள் என்று சிங்களவர் என்ன திருப்பி அனுப்பினார்களா? 

1983 கலவரத்திற்குப் பின்னர் தமிழர் விடுதலைக்கூட்டணியின் -அமிர்தலிங்கத்தின் கோரிக்கையில் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன தலைவராக இருந்த லயனல் பெர்ணாண்டோ யாழ்.அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டது தெரியுமா? நீங்கள் தமிழ்த்தேசியம், விடுதலைப்போராட்டம், இனவாதம் எல்லாவற்றிலும் குறைகுடமாக தளம்பிக்கொண்டே இருக்கிறீர்கள்.  

கிழக்கு மாகாண தமிழர்களுக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பதற்கு இருக்கின்ற உரிமையில் எள்ளளவும் குறையாத உரிமை அரசியலமைப்பிலும், 13வது திருத்தத்திலும் முஸ்லீம்களுக்கும், சிங்களவருக்கும் இருக்கின்றதா இல்லையா? 

தமிழ்த்தேசியம் சிங்களவரோடு, முஸ்லீம்களோடு கூட்டுச் சேரலாம், முட்டுக்கொடுக்கலாம், கிழக்கு தமிழ், முஸ்லீம் தலைமைகள் அதைச்செய்தால் தவறா? கிழக்கு மூன்று இனங்களையும் அரவணைத்து மாகாண ஆட்சியை நடாத்தி முழுநாட்டிற்கும் முன்மாதிரியாக இருந்திருக்கிறது. 

முஸ்லீம் உறவுக் குள்ளத்தனம்: 

உண்மையில் அவர் மீதான விமர்சனங்களுக்கு அப்பால் இது விடயத்தில் சுமந்திரனின் அணுகுமுறையில் ஒரு வெளிப்படைத்தன்மை இருந்தது. இது ஜனநாயக அரசியலின் அடிப்படை. என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு வெளிப்படுத்தல். அது உங்களின் குள்ளத்தன அரசியலைக் குழப்பிவிட்டது என்பதால் ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறது.  

தந்திரோபாயம் பற்றி பேசுகிறீர்கள். அரசியல் எதிரியுடன் பேசுவதற்கு தந்திரோபாயங்களை வகுத்து காய்களை நகர்த்த வேண்டிய தேவை இருக்கிறது. இங்கு நீங்கள் யாரோடு பேசப்போகிறீர்கள்? “நாங்கள் மதத்தால் வேறுபட்டாலும் மொழியால் ஒன்றுபட்டவர்கள்” என்று நீங்களே சொல்பவர்களுடன், “நாங்கள் தமிழ்பேசும் மக்கள்” என்று P2Pக்கு வலுசேர்த்தவர்களுடன், “சிங்கள பேரினவாத அடக்குமுறைக்கு எதிராக அணி திரள்வோம்” என்று நீங்கள் அழைப்புவிட்ட முஸ்லீம்களுடன். இவர்களை எதிரியோடு பேசுவது போன்று சகுனித் தந்திர உபாயங்களை வகுத்து பேசும் ஏமாற்று அரசியல் தேவையா? 

இங்கு யோதிலிங்கம் கூறும் தந்திரோபாயம் எதற்கு. வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லீம்களை தமிழ்த்தேசியம் எப்படிப் பார்க்கிறது என்பதற்கு யோதிலிங்கத்தின் கபடத்தனம் ஒரு அடையாளம். முஸ்லீம்கள் தொடர்பான தமிழ்த்தேசிய மேலாதிக்கக் கருத்தியல் என்ன என்பதை யாழ்ப்பாணத்லில் இருந்து சொப்பிங் பையுடன் துரத்திய பின்னரும் முஸ்லீம்கள் அறிந்திருக்கவில்லை என்று நீங்கள் நினைப்பது அரசியல் அறியாமை. யாழ்.மேலாதிக்கம் கிழக்கு சமூகங்களை சமநிலையில் அங்கீகரித்து அரசியலில் ஈடுபடத்தயாரில்லை என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. 

வடக்கு கிழக்கு இணைப்பு: 

என்ன சொன்னீர்கள்? வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை என்றால் தமிழர்தாயகம் இல்லை. தமிழர் தாயகம் இல்லை என்றால் தமிழ்த்தேசியம் இல்லை. 

திம்புப் பேச்சுவார்த்தை முதல் பேசப்படுகின்ற சுயநிர்ணயக் கோட்பாடு கூட கிலோ என்ன விலை என்ற நிலையில்தான் உங்களுக்கு உள்ளது. பிரித்தானிய காலத்திலும், சுதந்திர இலங்கையிலும்  உள்ள நிர்வாகப்பிரிவு தனித்தனியாக வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம். 

இவை அரசியல் அமைப்பின் 13வது திருத்தம் ஊடாக இந்திய -இலங்கை சமாதான உடன்பாட்டின் படி தற்காலிகமாக இணைக்கப்பட்டவை. பின்னர் குறுகிய காலத்தில் தனித்தனியாக மீண்டும் பிரிக்கப்பட்டவை. 

காலக்கண்ணாடி இங்கு எழுப்புகின்ற கேள்வி என்னவென்றால், இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு முன்னர் தமிழர் தாயகம் என்ற ஒன்று இருந்ததா இல்லையா?  

இல்லை என்றால், இல்லாத தமிழர் தாயகத்தையா வட்டுக்கோட்டைத் தீர்மானம் பிரகடனம் செய்தது?  

இல்லாததற்காகவா திம்பு பேச்சு முறிந்தது?  

ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கும் போது வடக்கும் கிழக்கும் இணைந்து இருந்ததா? இல்லை, அப்போது தமிழர் தாயகம் இருக்கவில்லையா? 

மேதகு ஐயா யோதிலிங்கம் அவர்களே ! 

1. வடக்கும் கிழக்கும் இணந்தால் என்ன, பிரிந்தால் என்ன இது தமிழ் முஸ்லீம் மக்களின் பாரம்பரிய வாழ்விடம்.  

2. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் என்பது வெறும் நிர்வாக பிரிவு. இங்கு தமிழ் முஸ்லீம் மக்கள் பாரம்பரியமாக வாழ்கிறார்கள் என்றால் அது வரலாற்று ரீதியில் ஒரு பாரம்பரிய பிரதேசத்தை வரையறை செய்கிறது.  

3. கிழக்கு மாகாணத்தின் பெருநிலப்பரப்பு ஒருபோதும் யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆள்பலத்திற்குள் இருக்கவில்லை என்பதையும்,அது கண்டி இராச்சியத்தின் ஆள்புலத்திற்குள் இருந்தது என்பதும் வரலாறு.  

4. தமிழ்தேசியத்திற்கு வடக்குக்கும் கிழக்குக்கும்  தனியான முகவர் நியமிக்கவேண்டும் என்று கூறும் நீங்கள் முன்னுக்குப் பின் முரணாக வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை என்றால் தாயகம் இல்லை, தேசியம் இல்லை என்கிறீர்கள். ஆக, உங்கள் முகவர் ஆலோசனை நீங்கள் வலியுறுத்தும் இணைப்பு, தாயகம், தேசியம் எல்லாவற்றையும் மறுதலித்து நிற்கிறதா இல்லையா? எந்த அரசியல் சித்தாந்தமும் அற்ற வெறும் மேலாதிக்க அரசியல் பித்தலாட்டம். 

ஆக, 

உள் ஒன்று வைத்து, புறம் ஒன்று பேசி முள்ளைப் பிடுங்கி கட்டையை அடிப்பதால் கிழக்கு மக்களின் இதயங்களில் ஏற்பட்ட காயங்ளை ஆற்றமுடியாது.   

கிழக்கின் தனித்துவ சுயாதீன அரசியல் தலைமைத்துவம் ஒரு வரவாற்று நியதி மட்டுமல்ல   ஒரு சமூக நீதியும் கூட. 

இறுதியாக, 

“…இல்லாத மேடையினில் எழுதாத நாடகத்தை நாம் எல்லோரும் பார்க்கின்றோம்…!” 

“… நாமே எல்லோரும் நடிக்கின்றோம் ..நாமே எல்லோரும் நடிக்கின்றோம்…!”