–— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்—
சென்ற பத்தியில் (சொல்லத் துணிந்தேன்-77) 19.06.2021 அன்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எஃப்) முன்னாள் செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபா அவர்களின் 31 ஆவது நினைவு தினத்தையொட்டி அவர் பற்றிய எனது மனப்பதிவுகளைப் பதிவிட்டிருந்தேன்.
19.06.2021 அன்று இலங்கை நேரம் 7.30 pm க்கு தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில், 31வது ‘தியாகிகள் தினம்’, ‘மெய்நிகர் செயலி’த் தொழில் நுட்பத்தின் மூலம் (zoom meeting) அனுஷ்டிக்கப்பட்டது. நான்கு மணித்தியாலங்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில் உலகின் பல பாகங்களிலும் நடைபெற்ற தியாகிகள் தின அஞ்சலி நிகழ்வுகள் காண்பிக்கப்பட்டதுடன் உரைகளும் இடம்பெற்றன. தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவரான தோழர் ஸ்ரீதரன் (தோழர் சுகு) அதன் நட்புக் கட்சியாகிய அகில இலங்கை தமிழர் மகாசபையின் செயலாளரான என்னையும் இக்கூட்டத்தில் உரையாற்றக் கேட்டிருந்தார். நான்கு நிமிடங்களே நான் ஆற்றிய உரையைச் சற்று விரிவுபடுத்தி ‘அரங்கம்’ வாசகர்களுக்கு அளிக்கலாமென அவாக்கொண்டேன்.
தமிழர் அரசியலில் ‘தந்தை செல்வா’ என வர்ணிக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள், தான் அங்கம் வகித்த ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி 1949இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்த பின்னர்தான், அதிலும் குறிப்பாக, 1951இல் திருகோணமலையில் நடைபெற்ற அக்கட்சியின் முதலாவது தேசிய மகாநாட்டின் பின்னர்தான் தமிழ் அரசியல் பொதுவெளியில் தேசியம்- தாயகம்-சுயநிர்ணயம் என்ற கோட்பாடுகள் பரவலாகவும் உரக்கவும் பேசப்படும் பொருளாகின என்பது என்னவோ உண்மைதான்.
ஆனால், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அதன்பின் 1972இல் தமிழர் கூட்டணியாக உருவாகிப் பின் 1976இல் வட்டுக்கோட்டை மாநாட்டில் தமிழர் விடுதலைக் கூட்டணியாகப் பெயர் மாற்றம் பெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக் (Tamil United Liberation Front- T.U.L.F.) கட்சியும் தமிழின விடுதலைப் போராட்டத்தை அல்லது உரிமைப் போராட்ட அரசியலை முற்போக்கான- புரட்சிகர சிந்தனைகளின்மீது கட்டமைக்காமல் வெறுமனே ‘குறுந்தமிழ்த் தேசியவாத’ச் சிந்தனைகளின் மீதே கட்டி எழுப்பின.
அதற்குத் தமிழரசுக் கட்சியினதும் தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் அவை தோற்றம் பெற்ற விளை நிலப் பின்புலத்தின் வர்க்கக் குணாம்சம் அல்லது மேட்டுக்குடி மேலாண்மை காரணமாயிருக்கலாம்.
பௌத்த-சிங்களப் பேரினவாத மேலாண்மைக்கு எதிராக- அதன் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக விடுதலை வேண்டி நின்ற இலங்கைத் தமிழினத்தைப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சியும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் இட்ட குறுந்தமிழ்த் தேசியவாத அரசியல் அத்திபாரம் தத்துவார்த்த ரீதியாகப் பலவீனமானதாகும்.
தமிழரசுக் கட்சியினாலும் பின்னர் வந்த தமிழர் விடுதலைக் கூட்டணியாலும் கட்டமைக்கப்பட்ட குறுந்தமிழ்த் தேசியவாதத்தைப், பின்னர் 1980களில் தோற்றம் பெற்று வளர்ந்த தமிழர்களின் ஆயுதப் போராட்ட காலத்தில் ஏனைய சக போராளி இயக்கங்களின் மீது சகோதரப் படுகொலைகளை நிகழ்த்த ஆரம்பித்து இறுதியில் அவற்றை ஓரம் கட்டுவதிலும் ஒழித்துக் கட்டுவதிலும் தன் நோக்கம் நிறைவேறி இராணுவ வல்லாண்மையைப் பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் ‘தமிழ்ப் பாசிசவாத’மாகக் கட்டியெழுப்பினார். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் இன்றைய கையறு நிலைக்கும் இதுவரை ஏற்பட்ட பேரழிவுகளுக்கும் காரணம் மேற்கூறப்பெற்ற குறுந்தமிழ்த் தேசியவாதக் குணாம்சமும் புலிகளின் பாசிசப் போக்குமேதான்.
தோழர் பத்மநாபா இவற்றிலிருந்து வேறுபடுகிறார். தோழர் பத்மநாபா அவர்கள் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை முற்போக்கான – விளிம்புநிலை மக்களின் விடுதலை நோக்கிய புரட்சிகரச் சிந்தனைகளின்மீதும் சித்தாந்தத்தின்மீதும் கட்டமைத்தார் அல்லது கட்டமைக்க முயற்சித்தார். அதனால்தான் அவர் ஏனைய சக சகோதர இன மக்களுடன் நல்லுறவைப் பேணி அவர்களுடனும் ஊடாடினார். ஆனால், புலிகளின் பாசிசமும் அதற்குப் பக்கப் பாட்டுப் பாடிய குறுந் தமிழ்த் தேசியவாதமும் தோழர் பத்மநாபாவின் பயணத்தைத் தடை செய்துவிட்டன. இதுவே தோழர் பத்மநாபாவின் வாழ்வும் பணிகளும் எமக்கு விட்டுச் சென்றுள்ள அனுபவமாகும்.
1989 ஜூலை 29இல் கைச்சாத்தான இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் முழுமையான அமுலாக்கலை, இந்தியாவுக்கெதிராகப் பிரபாகரன் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவுடன் கூட்டு வைத்தும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ‘கைத்தடி’யாக மாறியும் குழப்பாமல் விட்டிருந்தால் இன்று அதி குறைந்த பட்சம் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த ஒற்றை மொழிவாரி மாகாணம் -சமஷ்டித் தீர்வு சாத்தியமாகி இருந்திருக்கும். (நிலைமைகள் சிலவேளை தனி நாட்டை நோக்கித் தள்ளியும் இருக்கலாம்).
இச்சந்தர்ப்பத்தைக் கோட்டைவிட்ட அனுபவத்திலிருந்தும்- இதுகால வரையிலான உயிர், உடைமை அழிவுகளிலிருந்தும் பாடங்களைப் படித்துக் கொள்ளாத தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளும் தமிழ்ச் சமூகமும் குறுந் தமிழ்த் தேசியவாதப் போதையிலிருந்தும் பாசிசப் புலிகளைப் போற்றும் போக்குகளிலிருந்தும் இன்னும் மீளவேயில்லை என்பதைத் தற்காலத் தமிழ்த் தேசிய அரசியலின் போக்கு சுட்டி நிற்கிறது. இந்தப் பிற்போக்குச் சிந்தனைகளிலிருந்து ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமூகமும் மீளும்போது மட்டுமே தமிழ்த் தேசிய அரசியல் எதிர்காலத்திலாவது சரியான தடத்தில் பயணிக்கும் என்பதையே தோழர் பத்மநாபாவையும் அவரோடிணைந்த ஏனைய தோழர்களையும் நினைவுகூரும் இன்றைய தியாகிகள் தினத்தில் அழுத்திக் கூற விரும்புகிறேன்.
வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளாத ஒரு சமூகம் முன்னுக்கு வந்ததாக வரலாறில்லை. இந்த வரலாற்று உண்மை எதிர்காலத்திலாவது இலங்கைத் தமிழர்களுக்கு வழி காட்டட்டும். இதுவே நான் ஆற்றிய நான்கு நிமிடச் சிற்றுரையின் சாராம்சமாகும்.
மேலும், தமிழ் அரசியல் பொது வெளியில் ‘ஒற்றையாட்சி’, ‘சமஸ்ட்டி’ என்ற சொற்கள் அடிக்கடி உச்சாடனம் செய்யப்படுகின்றன. சமஸ்டித் தீர்வுக் கோரிக்கையை முன்வைத்த தந்தை செல்வாதான், 1957இல் கைச்சாத்தான பண்டா- செல்வா உடன்படிக்கை மூலம் ‘பிராந்திய சபை’களையும், 1965ல் கைச்சாத்தான டட்லி-செல்வா உடன்படிக்கை மூலம் ‘மாவட்ட சபை’களையும் அதிகாரப்பகிர்வு அலகாக ஏற்றிருந்தார். இவ்வொப்பந்தங்கள் சட்டமாக்கப்படாமல் குப்பைக் கூடைக்குள் போடப்பட்டன என்பது வேறுவிடயம். ஆனால் இவ்வொப்பந்தங்கள் அமுல் செய்யப்பட்டிருந்தால் ஒற்றையாட்சி அரசியலமைப்புக் கட்டமைப்புக்குள்ளேயே அவை நிறைவேறியிருக்கும்.
இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் வாயிலாக கொண்டுவரப்பெற்ற 13-வது அரசியல் சட்டத் திருத்தமும் அதன் கீழ் ஏற்படுத்தப்பெற்ற மாகாண சபைகள் முறைமையும் இவ் ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள்ளேதான் நிறைவேறியிருக்கின்றன. இங்கே அதிகாரப்பகிர்வுதான் முக்கியமே தவிர ஒற்றை ஆட்சியா? சமஷ்டியா? என்ற சொற்பதங்கள் அல்ல. பாத்திரத்தில் என்ன இருக்கிறது என்பது முக்கியமே தவிர பாத்திரத்தின் வகை முக்கியமல்ல.
அத்துடன், இலங்கைத் தமிழர்களுடைய உரிமைப் போராட்ட அரசியல் வரலாற்றில் பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டு ஒரு நடைமுறை வடிவம் கொடுக்கப்பட்டதென்றால் அது இந்திய- இலங்கைச் சமாதான ஒப்பந்தம் மட்டுமே. இதைச் சாத்தியமாக்கியது தோழர் பத்மநாபாவின் அரசியல் செல்நெறியே. இன்று இலங்கை அரசாங்கம் இதனை மாற்ற நினைத்தாலும் அல்லது இல்லாமற் செய்ய நினைத்தாலும் அது எளிதில் இயலாத காரியமாகவே இருக்கிறது.
இந்த நிலையில், இந்தியாவின் அனுசரணையுடன் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலை ஆரம்பப் படியாகக் கொண்டு அதிகாரப்பகிர்வுக்காக உழைப்பதை விட்டுவிட்டுத் தமிழ்த் தேசியக் கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‘புதிய அரசியலமைப்பு’க் கனவையும் -தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ‘இரண்டு தேசம் ஒரு நாடு’க் கனவையும்- தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த ‘சமஸ்டி’க் கனவையுமே காட்டித் தங்கள் அரசியல் பிழைப்பு வாதத்தைக் கொண்டு செல்கின்றன.
இத் தமிழ்த் தேசியக் கட்சிகளால் இலங்கைத் தமிழர்களுக்கு எதுவும் ஆகப்போவதில்லை.
மேலும், இத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தெருத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதைப் போல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம்- ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கும்படி இலங்கையைக் கோரும் தீர்மானம்- அண்மையில் அமெரிக்க காங்கிரஸில் முன் வைக்கப்பட்டிருக்கும் ‘இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இலங்கைத் தமிழர்களின் பூர்வீக தாயகம்’ என்ற பிரேரணை, இவையெல்லாம் தங்களால்தான் வந்தது போலத் தம்பட்டம் அடிக்கும் ஊடக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. இவர்களுக்கு ஒத்தூதும் ஊடகங்களும் இவை போதாதென்று அவர்களுக்கு ஆதரவாக அரசியல் ஆரூடகங்களையும் வெளியிட்டு வருகின்றன. இவையெல்லாம் இப்பத்தித் தொடரில் முன்பு குறிப்பிட்டது போல ‘மாடு வாங்க முதல் நெய்க்கு விலை பேசிய’ தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளின் வழமையான பாணிதான். ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுப்பதும்’, ‘நுணலும் தன் வாயால் கெடுவதும்’ ஆன அரசியல் செயற்பாடுகளைத்தான் இத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தொடர்ந்தும் செய்யப் போகின்றன.
உலகில் இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து எங்கு என்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் இந்தியாவை மீறி எதுவும் நடைபெறப் போவதில்லை. தங்கள் புவிசார் அரசியல், வர்த்தக மற்றும் இராணுவ நலன்களைக் குறிவைத்து இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காக மேற்குலக நாடுகளால் அவ்வப்போது நிறைவேற்றப்படும் இத்தகைய தீர்மானங்கள் யாவும் இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை ‘முசுறுக்கடி’ யே. அவை எந்தத் தாக்கத்தையும் விளைவிக்கப் போவதில்லை. வேண்டுமானால் இத் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஐ.நா.வைக்காட்டி- ஐரோப்பிய ஒன்றியத்தைக் காட்டி- அமெரிக்க காங்கிரஸைக் காட்டி தங்கள் தமிழ்த் தேசிய அரசியல் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு வெற்றிகரமாகக் கொண்டு செல்லலாம். அதனால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளும் நடைபெறப் போவதில்லை.
அன்றியும், இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து மேற்குலக நாடுகளாலும் மேற்குலக நாடுகளின் செல்வாக்குக்குட்பட்ட நிறுவனங்களாலும் இப்போது நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அந்த மேற்குலக நாடுகளுக்குச் சார்பான ஆட்சி மாற்றம் இலங்கையிலே நிகழுமாயின் இத்தீர்மானங்கள் யாவும் கோப்புகளில் ‘கோடை நெடுந் தூக்கம்’ கொண்டுவிடும்.
1981இல் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் தலைமையிலே ஏற்படுத்தப்பட்ட முதலாவதும் (வடக்குக்கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைந்த) கடைசியானதுமான வடகிழக்கு மாகாண அரசு 1990இல் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அரசாங்கத்தினால் கலைக்கப்பட்ட பின்னர், தமிழ் அரசியல் பொது வெளியில் பதின்மூன்றாவது அரசியல் சட்டத்தைப் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களுடன் முழுமையாக அமுல்படுத்தி மாகாண சபை முறைமையை வலுப்படுத்தும் எந்தவிதமான அரசியல் அழுத்தங்களும் தமிழர் தரப்பிலிருந்து கொடுபடவில்லை. இதுவே பின்னர் வந்த அரசாங்கங்கள் யாவும் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை ஐதாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் காரணமாகும். ஒரு பொருளுக்கான ‘கேள்வி’ இல்லாதபோது அப்பொருள் ‘மலினம்’ ஆகிவிடும். இதுதான் நியதி. அதிகாரப் பகிர்வு விடயத்தில் அதுதான் நடந்திருக்கிறது. அதன் விளைவுதான் அல்லது நீட்சிதான் தற்போதைய பொதுஜன பெரமுன அரசாங்கம் மாகாண சபைகளின் கீழுள்ள பாடசாலைகளைத் தரமுயர்த்தல் எனும் போர்வையில் தேசிய பாடசாலைகளாக ஆக்கி மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருதலும், வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்துக்குட்பட்ட மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டப் பொது வைத்திய சாலைகளை மத்திய சுகாதார அமைச்சின் நேரடி நிர்வாகத்தின்கீழ்க் கொண்டு செல்வதும் ஆகும். தமிழ்த் தேசிய அரசியல் தலைமை குறிப்பாக தமிழரசுக் கட்சியும்- (அப்போதைய) தமிழர் விடுதலைக் கூட்டணியும்- 2001ல் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் 1990ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சுமார் முப்பது வருடங்கள் அதிகாரப்பகிர்வு விடயமாகக் கண்ணை மூடிப் படுத்துக் கிடந்து விட்டு பயிரின் பெரும்பகுதியை மாடு மேய்ந்த பின்பு எழுந்து நின்று குரைக்கும் நாய் போல இப்போது கூக்குரல் இடுகின்றன. இக்கூக்குரல்கள் எல்லாம் அரசாங்கத்தைப் பொறுத்தவரை செவிடன் காதில் ஊதிய சங்குகள்தான்.
மேலும், 1989இல் நிலவிய பிரேமதாச- பிரபாகரன் கூட்டின் போது அப்போது அமுலிலிருந்த வடகிழக்கு மாகாண அரசுக்குப் பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டாமென்று புலிகள் கூறியதாகவும் தகவலுண்டு. பின்னர் 2006இல் கிழக்கு மாகாண நிர்வாகம் தனியாக ஆக்கப்பட்டு 2008இல் சிவனேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையானை) முதலமைச்சராகக் கொண்டு கிழக்கு மாகாணசபை அமைந்த போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபைக்குப் பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டாமென அரசாங்கத்தைக் கேட்டது. அப்போதெல்லாம் வாய்மூடி மௌனமாயிருந்த இப் ‘போலி’ த் தமிழ்தேசியவாதிகள் இப்போது மாகாணசபை அதிகாரங்கள் பறி போகின்றதே என்று முதலைக் கண்ணீர் வடிப்பது சந்தர்ப்பவாத அரசியலே தவிர உளப்பூர்வமானதல்ல. ஒரு பக்கம் இந்தியாவை விமர்சித்துக் கொண்டு மறுபக்கம் புலிகளின் புகழ் பாடிக்கொண்டு இன்னொரு பக்கம் மாகாணசபை அதிகாரங்கள் பறிபோகிறது என்று புலம்புவது முரண்பாடான பலவேட அரசியலாகும். இது மக்களை ஏமாற்றும் அரசியலாகும். நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை செய்யும் வாய்ச்சொல் வீர அரசியலாகும்.
எனவே, தோழர் பத்மநாபாவின் மரணத்தின் பின் தமிழ்த் தேசிய அரசியலில் தேக்கமடைந்திருக்கும் அதிகாரப் பகிர்வுக்கான செயற்பாடுகளை உத்வேகத்துடன் முன்னெடுக்கும் நோக்கில், அரசியல் தத்துவார்த்த ரீதியாகப் புலிகளுக்கு எதிரானதும்- இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை உளப்பூர்வமாக அனுசரித்துப் போவதுமான தமிழ் அரசியல் கட்சிகளும், வெகுஜன அமைப்புகளும், அரசியல் ஆர்வலர்களும் ஆய்வாளர்களும் துறைசார்நிபுணர்களும் எழுத்தாளர்கள் கலைஞர் இலக்கியவாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களும் தொழிலாளர் அணிகளும் இணைந்து தேர்தல் அரசியலுக்கு அப்பால் ‘அதிகாரப் பகிர்வு இயக்கம்’ ஒன்றினைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும். அவசியம் ஏற்பட்டால் இப்படியானதொரு அதிகாரப் பகிர்வு இயக்கத்திற்கு அதன் பணிகளை முன்கொண்டு செல்ல அரசியல் அங்கீகாரம் வழங்க ஒட்டுமொத்தத் தமிழர்களும் தயாராகவும் வேண்டும். தலைவர்கள் திருந்தாவிட்டால்- மாறாவிட்டால் மக்கள் மாறுவதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை.
சொல்லத் துணிந்தேன்-75 பத்தியில் குறிப்பிட்டவாறு இத்தகைய அதிகாரப்பகிர்வு இயக்கத்திற்கான பிள்ளையார்சுழி ஏற்கெனவே இடப்பட்டுவிட்டது. ஆம்! 09.04. 2021 அன்று கொழும்பில் அகில இலங்கை தமிழர் மகா சபையின் ஏற்பாட்டில் அதிகாரப் பகிர்வு இயக்கம் (MOVEMENT FOR DEVOLUTION OF POWER) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. அதனைக் கட்டியெழுப்ப அனைவரும் அணிதிரள்வோமாக.