மாகாணசபை : யாருக்கும் வெட்கமில்லை

மாகாணசபை : யாருக்கும் வெட்கமில்லை

— கருணாகரன் — 

மாகாணசபையை நிராகரிக்கும் அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டோர், மாகாணசபைத் தேர்தலில் ஆர்வமாக இருப்பதும் அந்த அதிகாரத்துக்குப் போட்டியிடுவதும் எதற்காக?; சனங்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொண்டு தாங்கள் இன்னொரு விதமாக செயற்படுவது ஏன்?இதைப்பற்றிச் சனங்கள் கூட அறியாமல் இவர்களுடைய ஏமாற்றுகளுக்கு (பம்மாத்துகளுக்கு) எடுபடுவது எதற்காக? மாகாணசபையை ஏற்றுக் கொள்ளாத அரசியல் ஆய்வாளர்கள் கூட மாகாணசபைத் தேர்தல் என்று வந்து விட்டால் இந்தத் தரப்புகளின் பக்கம் நின்று கூவுவது ஏன்?” என்ற கேள்விகளை நீண்டகாலமாகவே எழுப்பிக் கொண்டிருக்கிறார் நண்பர் ஒருவர். அவருடைய கேள்விகள் நியாயமானவையே! ஆகவே இதைப்பற்றி நாம் பொது வெளியில் சற்று விரிவாகப் பேசியே ஆக வேண்டும். அதற்கு முன் இந்த நண்பரைப்பற்றியும் அவருடைய நிலைப்பாட்டைப் பற்றியும் ஒரு சிறிய குறிப்பு. 

இந்த நண்பர் மாகாணசபையை 1987லேயே ஏற்றுக் கொண்டவர். முழுமனதாக அதை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் ஈழப்போராட்டத்தைப் பொறுத்தவரையிலும் இலங்கைச் சூழலிலும் இதற்கப்பால் உடனடியாக நகர முடியாது என்ற அடிப்படையில் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு ஏற்றவர். இதற்காக அவர் வடக்குக் கிழக்கிலிருந்து அல்லது பலரும் சொல்வதைப்போல தமிழர் தாயத்திலிருந்து வெளியேறி வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது. அன்று வடக்குக் கிழக்கில் அவருடைய இந்தக் கருத்துக்களை மையப்படுத்திப் பொது வெளியில் யாரும் பேச முடியாத சூழ்நிலை நிலவியது. மாகாணசபையை இந்திய அரசாங்கத்தின் அனுசரணை, ஆசீர்வாதத்துடன் ஏற்றுக் கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் என்ற மாபெரும் இயக்கமே தாக்குப் பிடித்து நிற்க முடியாத சூழல் இருந்தபோது இந்த மாதிரிச் சாமானியர் ஒருவர் எப்படித் தாக்குப் பிடித்து நிற்க முடியும்? அன்றென்ன, அதற்குப் பின்னான 20 ஆண்டுகளும் அப்படியான இறுக்கமான சூழலே நிலவியது. 

ஆனால், இன்று நிலைமை வேறு. எல்லாமே தலைகீழாக மாறி விட்டன. மாகாணசபை ஏற்றுக் கொள்ளத் தயங்கியோரும் மாகாணசபையை முற்றாகவே மறுதலித்த புலிகளின் வாரிசுகளாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோரும் மாகாணசபை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதிலே போட்டியிடுகிறார்கள். போட்டியிட்டு வெல்லத் துடிக்கிறார்கள். அந்த அதிகாரத்தைப் பெறுவதற்காக ஆவலாதிப்படுகிறார்கள்.  

அது அரை குறை அதிகாரம் என்று சொல்லிக் கொண்டே அந்த அதிகாரத்தின் மூலமாகத் தங்களுடைய அரசியல் இருப்பைத் தக்க வைப்பதற்காகப் பிரயத்தனப்படுகிறார்கள். பச்சையாகச் சொன்னால் உள்ளொன்று புறமொன்றாகப் பேசி நடந்து கொள்கிறார்கள். மாகாணசபையைத் தங்களுடைய அதிகாரக் கட்டமைப்பு என்ற நம்பிக்கையோடுதான் இதில் கலந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். இதன் மூலமாக தங்களுடைய நலன்களையும் சலுகைகளையும் பெற்றுக் கொள்ளத் துடிக்கிறார்கள்.   

இவர்கள் வேறு யாருமல்ல. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் விடுதலை முன்னணி போன்றவற்றின் தரப்பினரே. இதிலே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இதுவரையிலும் மாகாணசபை தேர்தலில் போட்டியிடவில்லை. அவர்கள் “ஒரு தேசம் – இரு நாடு” என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதால் அதிகாரமில்லாத மாகாணசபையில் போட்டியிடுவதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் மாகாணசபைகளின் கீழுள்ள உள்ளுராட்சி மன்றுக்களுக்கான தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் எதிர்காலத்தில் மாகாணசபைத் தேர்தலிலும் சங்கமிப்பார்கள் என்று நம்பப்படுகிறது. இதை அவர்களுடைய தரப்பின் முக்கியஸ்தர்களும் உறுதிப்படுத்துகின்றனர். 

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கதையைச் சொல்லவே வேண்டியதில்லை. அது வழமையைப்போல ஒரு கதம்ப அரசியலை மேற்கொள்ளும் அமைப்பு என்ற வகையில் அதனிடம் எதைப்பற்றியும் திட்டவட்டமான –தெளிவான நிலைப்பாடுகளில்லை. எனவே அவர்கள் மாகாண சபையைக் குறி வைப்பதிலும் ஆச்சரியமில்லை. கடந்த தடவை ஆட்சியிலிருந்தபோது –அதிகாரத்திலிருந்தபோது – அவர்கள் நடந்து கொண்ட முறைமைகளையும் போட்ட ஆட்டங்களையும் யாரும் எளிதில் மறக்கவே முடியாது. அரசாங்கத்துக்கு ஒரு பக்கம் சவால் விட்டுக் கொண்டே அதே அரசாங்கத்திடம் தமக்கான பல சலுகைகளைக் கோரியிருந்தது உள்பட ஏராளம் கூத்துகளும் குத்து வெட்டுகளுமாக ஐந்து ஆண்டுகளைக் கழித்தனர். அந்த ஐந்து ஆண்டுகளும் குப்பைக் கூடையில் போடக் கூடிய சமாச்சாரங்களே நடந்தன. அப்போது நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளில் 90 வீதமும் கால நகைப்புக்குரியன. அதில் முக்கியமானது, மாகாணசபை உறுப்பினர்களுக்கான வாகன உரிமப்பத்திரத்துக்கான கோரலாகும். 

இதையெல்லாம் சனங்களும் பொருட்படுத்துவதில்லை. அதனால் இதைத் தமக்கு வாய்ப்பாக எடுத்துக் கொண்ட மேற்படி தரப்புகள் மாகாணசபையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. இவர்களில் யாருக்கும் வெட்கமில்லை. அப்படி வெட்கப்படுவதாக இருந்தால் இவர்கள் புலிகளின் தொடர்ச்சி தாங்கள் என்றோ புலிகளின் பிம்பமாகத் தாமே உள்ளோம் என்றோ காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் புலிகள் இறுதிவரையில் மாகாணசபையை ஏற்றுக் கொள்ளவே இல்லை. அப்பொழுது வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணசபையே இருந்தது. அதனையே முற்றாகவே நிராகரித்தனர். 1990 தொடக்கம் பின்னர் இலங்கை அரசாங்கத்துடன் நடந்த அத்தனை பேச்சுவார்த்தைகளிலும் அவர்கள் மாகாணசபையைப் பற்றிப் பேசவேயில்லை. அதனுடைய அதிகாரப் போதாமைகளைக் குறித்து ஒரு சொல் கூடப்பிரஸ்தாபிக்கவில்லை. அதைக் கடந்த ஒரு தீர்வை – அதிகாரத்தையே அவர்கள் கோரிநின்றனர். 

ஆனால் அவர்கள் மாகாணசபையை முழுதாகப் பயன்படுத்தினார்கள். மாகாணசபையை தமது வலுவின் மூலமாகத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து இயக்கினார்கள். இது சட்டத்துக்கும் அப்பாலான ஒரு யதார்த்தமாக இருந்தது. இதை மறுக்க முடியாத நிலையில் அரசாங்கமும் இருந்தது. அதாவது தெரிந்தும் தெரியாததைப்போல இந்த விடயத்தில் அரசாங்கம் நடந்து கொண்டது. வேறு வழியிருக்கவில்லை. அது வேறு நிலைமை. வேறான சூழல். 

இப்போதுள்ள நிலைமையும் சூழலும் வேறு. இதில் அந்த மாதிரியாக விளையாட்டுக் காட்ட முடியாது. அப்பொழுது மாகாணசபைக்கான தேர்தலையே வடக்குக் கிழக்கில் நடத்த முடியாமலிருந்தது அல்லவா! ஆனால் பின்னாளில் இந்த மாகாணசபையை இரண்டாக உடைத்து, அவற்றுக்குத் தனித்தனியாகத் தேர்தல் வைக்கப்பட்டது. இரண்டின் தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டது. தேர்தலை நடத்திய அரசு அதன் அதிகாரங்களை நடைமுறை ரீதியாகக் குறைத்தது. இப்பொழுது மாகாணசபையின் கீழ் அடங்கும் கல்வி, மருத்துவம் போன்றவற்றிற் கூட கை வைக்கத் தொடங்கியுள்ளது. ஆக தேர்தலே நடத்த முடியாமலிருந்த மாகாணசபையைப் புலிகள் தமது தேவைக்குப் பயன்படுத்தினார்கள். ஓரளவு வினைத்திறனோடு இயங்க வைத்தனர். தேர்தல் நடத்தப்பட்டுத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளோடு இயங்கும் மாகாணசபையில் அதிகாரங்கள் பிடுங்கப்படுகின்றன. மாகாணசபை நிர்வாகமும் சீரழிந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் நாம் மாகாணசபைத் தேர்தலை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். 

ஏனென்றால்….? அதுதான் நாங்கள். அதாவது ஒரு பக்கம் மாகாணசபையை நிராகரித்த – அதற்கு மேல் அதிகாரத்தைக் கேட்கும் புலிகள். மறுபக்கம் மாகாணசபையென்ன மாவட்ட சபையோ உள்ளுராட்சி சபையோ கூடக் கிடைத்தால் போதும் என்று நடந்து கொள்ளும் எலிகள். 

இந்த புலி வேசமும் எலி நடத்தையும்தான் நம்முடைய நண்பருக்கு ரத்தக் கொதிப்பை (BPஐ) ஏற்றுகிறது. இந்த இரட்டை முக அரசியலே இன்றைய தமிழ்த்தேசிய அரசியலாகி வளர்ந்து கொண்டிருக்கிறது. இதற்குள்ளே ஏராளம் உட்சிதைவுகள், சாதியென்றும் பிரதேச வாதமென்றும் இனவெறுப்பென்றும் பால் ஒடுக்கு முறை என்றும் வர்க்க வேறுபாடுகள் என்றும்…பலப்பலவாக. 

ஆனால் இதிலே உள்ள வேடிக்கையும் கேவலமும் என்னவென்றால் அன்று (1987இல்) இணைந்த மாகாணசபையை ஏற்றுக் கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் இப்போதும் துரோகிப் பட்டியலின் கீழே வைக்கப்பட்டிருப்பதுதான். இதை தமிழ் ஊடகங்களும் தமிழ் அரசியல் ஆய்வாளர்களும் தமிழ்ப் பெருமக்களும் தமிழ் அரசியற் பரப்பும் மிகக் கச்சிதமாகச் செய்கின்றன. 

இன்றுள்ள அரசியற் தரப்புகளிலே மாகாணசபையை வினைத்திறனுடன் செயற்படுத்தக் கூட அனுபவமும் அக்கறையும் அரசியல் ஒழுக்கமும் வினைத்திறனும் உடைய தரப்பு ஈ.பி.ஆர்.எல்.எவ் மட்டும்தான். அவர்களுடைய கடந்த கால அரசியல் குறித்த விமர்சனங்கள் யாருக்கும் இருக்கலாம். அப்படியென்றால் எல்லோருக்கும் ஒரு மோசமான கடந்த காலம் உண்டு என்பதை யாரால் மறுக்க முடியும்? ஆகவே ஈ.பி.ஆர்.எல்.எவ்வைப் புறக்கணித்து விட்டு மாகாணசபையைப் பற்றி நாம் பேச முடியாது. இங்கேயும் ஒரு சிக்கல் உண்டு. எந்த ஈ.பி.ஆர்.எல்.எவ்வைப் பற்றி நீங்கள் சொல்கிறீர்கள்? என்ற கேள்வி இங்கே எழும். நிச்சயமாக. 

பத்மநாபா தலைமையில் 1987இல் வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணசபையைப் பொறுப்பேற்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் இன்று இரண்டாகி விட்டது. ஒரு அணிக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமை தாங்குகிறார். சட்டபூர்வமாக இந்தத் தரப்பே ஈ.பி.ஆர்.எல்.எவ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அணி சுகு ஸ்ரீதரன் தலைமையிலானது. இது ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணி என்ற பேரில் இயங்கி, இப்பொழுது தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி என்ற பேரில் இயங்குகிறது. இவை இரண்டும் ஒன்றிணையுமானால் நிலைமை வேறு. இப்போதுள்ள நிலையில் ஆகக்குறைந்தது இந்த இரண்டு தரப்பில் ஒன்றுக்கே வரலாற்றுத் தகமையும் நிகழ்காலத் தகமையும் உண்டு. இதைப்பற்றி ஈ.பி.ஆர்.எல்.எவ்வினர் சிந்திக்க வேண்டும். கூடவே தமது கடந்த காலத்தை மீள் பரிசீலனை செய்து புதுப்பித்துக் கொள்வது அவசியம். முக்கியமாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தரப்பு இந்த வாய்ப்பை மற்றவர்களுக்குக் கொடுத்து வீணாக்காமல் ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்பு எடுப்பதைப் பற்றிச் சிந்திப்பது நல்லது. 

ஏனையவற்றுக்கு அடிப்படைத்தகுதியே இல்லை. ஆனால் அவைதான் வாலாட்டுகின்றன. அவைதான் வரலாற்றில் தப்புத் தாளம் செய்து ஒட்டு மொத்தக் குத்தகையே எடுக்கின்றன. இதை இனங்காண வேண்டிய பொறுப்பு மக்களுக்குரியது.