— எழுவான் வேலன் —
சாதி என்பது தமிழர் மத்தியில் பழங்கதை அல்ல!
‘பிரதேசவாதமா ஜனநாயகப் பற்றாக்குறையா? (தமிழ் அரசியலை முன்னோக்கி நகரவிடாது தடுக்கும் உள்முரண்பாடுகள்)‘ எனும் வி.சிவலிங்கம் அவர்களுடைய கட்டுரை அரங்கம் மின்னிதழ் 06.06.2021 அன்றைய இதழில் பதிவிடப்பட்டிருந்தது (https://arangamnews.com/?p];uP5235) அக்கட்டுரைக்கான கருத்தாடல் களம் 03 இதுவாகும்.
20.06.2021 ம் திகதிய அரங்கம் மின்னிதழில் பதிவான கருத்தாடல் களம் – 02 இல் பிரதேசவாதம் யாழ் வேளாளப் பண்பாட்டிலிருந்து உருவானது என்பதை வரலாற்றினடியாக எடுத்துக் கூறியிருந்தேன். இருந்த போதிலும் சிவலிங்கம் அவர்கள் மேற்குறிப்பிடப்பட்ட கட்டுரையில்,
‘சாதி ஆதிக்க சக்திகள் மத்தியில் அவ்வாறான போக்கு இல்லை என மறுதலிக்க முடியாவிடினும், இப் பிரதேசவாத சிந்தனையை தமிழ் மக்களின் ஒட்டுமொத்த சிந்தனையாக தொடர்ந்தும் இன்றுவரை முன்வைப்பது, அங்கு எழுந்து வரும் போராட்ட உணர்வுகளை இவ்வாறான சிறு வரையறைக்குள் அடக்க முயற்சிப்பது பரந்த அரசியல் விவாதத்திற்கு உதவாது.
கிழக்கிற்கென புதிய அரசியல் வியூகத்தைத் தோற்றுவிக்க யாழ் மேலாதிக்கத்தை முன்னிலைப்படுத்துவது மிக மலிவான அரசியல் மட்டுமல்ல, அம் மக்கள் தொடர்பான முற்போக்கு இயங்கு நிலையை அவமானப்படுத்துவதாகும்.‘
எனும் அவருடைய கருத்தினை அலட்சியம் செய்யமுடியாது.
இன்னும் சிலர் ‘இந்தப் பழங்கதைகள் எல்லாம் முடிந்து போன விடயங்கள்,தற்போது அவற்றைப் பற்றிக் கிண்டிக் கிளறி பேசிக்கொண்டிருப்பது தமிழர்களின் ஒற்றுமையைக் குலைத்து சிங்களப் பேரினவாதத்துக்குத் துணைபோகும் செயலாகும். இளையதலைமுறையினர் இந்தத் தளத்தில் இயங்கவும் இல்லை. அதனால் அவர்களுக்கு விசத்தை ஊட்டாமல் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படலாம் என்று பேசுவதே தமிழர்களுக்குத் தேவையான விடயமாகும்‘. என்றும் கூறலாம்.
இந்தவிடயத்தினை நாங்கள் புரிந்து கொண்டிருந்தபோதும் நாங்கள் அதனை ஏன் பேச வேண்டும் என்பது முக்கியமான விடயமாகும். ஏனென்றால் மாக்சிசம் கூறுகின்ற வர்க்கம், வர்க்க உணர்வு என்பவை எம்மிடம் இருந்தாலும் மேலைத்தேய சமூகத்தைப் போல் நாம் வர்க்கங்களாகப் பிரிபட்ட சமூகம் அல்ல. நாம் சாதிகளாகப் பிரிபட்ட சமூகம். இங்கு சாதிய உணர்வுக்குள்ளால்தான் வர்க்க உணர்வு செயற்படுகின்றது. அதாவது வர்க்க உணர்வை விட சாதி உணர்வே மேலோங்கிக் காணப்படுகின்றது. உதாரணத்துக்கு இன்று புலம்பெயர்ந்து வாழுகின்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்த ஒருவர் உயர் வர்க்கமாக மேலெழுந்திருந்தாலும் அவர் அதே உயர்வர்க்கத்தைச் சேர்ந்த வேறு சாதிகளுக்கிடையில் திருமண உறவினை ஏற்படுத்திக் கொள்ளமுடியாது. இங்கு வர்க்கம் ஒன்றாக இருந்தாலும் சாதி வேறுபட்டிருப்பதனால் இது சாத்தியமற்றுப் போகின்றது. இதற்கு மாறாக ஒரே சாதியைச் சேர்ந்தவர்களில் ஒருவர் உயர் வர்க்கமாகவும் இன்னொருவர் நடுத்தர வர்க்கமாகவோ அல்லது தொழிலாளர் வர்க்கமாகவோ இருப்பாரேயானால் அங்கு திருமண உறவு சாத்தியமானதாகும். இலங்கையிலிருந்து புலம்பெயர் நாடுகளுக்கு மணமகன்/ மணமகள் ஏற்றுமதி செய்யப்படுவது இந்த அடிப்படையிலேயாகும்.
சாதிய உணர்வும் அதுசார்ந்த வர்க்க உணர்வும்
எனவே எமது சமூகத்தை விளங்கிக் கொள்ள சாதிய உணர்வும் அதனுடைய பொருளாதார நலன்களை விளங்கிக் கொள்ள வர்க்க உணர்வும் அவசியமானதாகும். இது மேலைத்தேய சமூகத்தை விடச் சிக்கலானதாகும். இந்தச் சிக்கலை விளங்காது நாம் முற்போக்கான அரசியல் பற்றிப் பேச முற்படக் கூடாது. அவ்வாறு பேசுவது பாரிய தவறுகளுக்கும் வழிவகுக்கும். உதாரணத்துக்கு இலங்கையில் வளர்ந்து வந்த இன உணர்வினைக் கணக்கிலெடுக்காது, வர்க்க அரசியல் பற்றிப் பேசிய இடதுசாரிகள் இறுதியில் தவிர்க்கமுடியாத வகையில் இன உணர்வுக்கு உள்ளாகி இனவாதிகளாக மாறியதையும், இடதுசாரிக் கட்சிகளை மிதவாதக் கட்சிகள் விழுங்கி விட்டதைளும் எமக்கு வரலாறு காட்டிநிற்கின்றது.
அதனால்தான் இந்தச் சிக்கலை விடுவித்து முற்போக்கான அரசியலை உண்மையாகப் பேசுவதற்காக நாம் சாதிய அடக்குமுறைகளையும், அதனை அடிப்படையாகக் கொண்டு கிழக்கு புறக்கணிக்கப்பட்டதையும், நாம் அந்தப் புறக்கணிப்புக்கள் பற்றிப் பேசினால் அது பிரதேசவாதமாக காட்டப்பட்டதையும் தெளிவுபடுத்துவதற்காகவும் சாதிய உணர்வுபற்றி எப்போதும் விழிப்புடன் செயற்படுவதற்காகவும் மிகச் சூக்குமமாகச் செயற்பட்ட சாதிய உணர்வின் ஒதுக்கற்பாடுகள் பற்றிப் பேசவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகின்றோம்.
எனவே சமூகநிலையில் சாதிய உணர்வினையும் பொருளாதார நலனில் வர்க்க உணர்வினையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு இணைத்துப் பார்க்கின்றபோது அது தனியே வர்க்க உணர்வாக அன்றி சமூகப் பொருளாதார உணர்வாக அல்லது சமூக வர்க்க உணர்வாக நாம் அடையாளம் காணலாம். இந்த அடையாளங்களைக கொண்டிருக்கின்ற ஒருவர் அல்லது ஒரு குழு அல்லது கட்சி தனது சமூகப்பொருளாதார நலனுக்காக எவ்வாறு செயற்படுகின்றது என்பதை விளங்கிக் கொள்ளமுடியும்.
இந்த அடிப்படையில் தமிழர்களுக்குத் தலைமையேற்ற யாழ் வேளாள உயர் வர்க்கம் தமிழர் என்கின்ற இன அடையாளத்தை முன்னிறுத்தி தங்களுக்கான நலன்களை எவ்வாறு பெற்றுக் கொண்டு வந்திருக்கிறார்கள் எனும் வரலாற்று நோக்கு இருந்தால் மட்டுமே இன்று அதே வர்க்க நலனில் செயற்படும் தமிழரசுக் கட்சி அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைய அரசியலை எவ்வாறு தங்களுக்குச் சார்பானதாகப் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள் என்று எம்மால் அறிந்துகொள்ள முடியும். இந்த அறிதல் இருந்தால்தான் நாம் சரியான அரசியல் தலைமைத்துவத்தினை உருவாக்குதல் தொடர்பான கருத்தாடல்களையோ அல்லது செயற்பாடுகளையோ முன்னெடுக்க முடியும்.
1919இன் மனிக் சீர்திருத்தம்
1919ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை தேசாதிபதியாக இருந்த வில்லியம் மானிங்கினால் கொண்டுவரப்பட்ட அரசியல் சீர்திருத்தம் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தினை கணிசமாகக் குறைத்ததை எதிர்த்து தமிழ்த்தலைவர்கள் போராடினார்கள் என்றும் இந்தப் போராட்டத்தில் சிங்களத் தலைவர்களுக்கும் தமிழ்த் தலைவர்களுக்கும் ஏற்பட்ட பிரதிநிதித்துவ உடன்பாட்டை சிங்களத் தலைவர்கள் வழங்க மறுத்ததினால் ஏமாற்றமடைந்த சேர்.பொன். அருணாசலம் விரக்தியுற்று இலங்கைத் தேசிய காங்கிரஸ்சில் இருந்து விலகி, 1921ம் ஆண்டு ‘தமிழர் மகாசனசபை‘ எனும் அமைப்பினை உருவாக்கினார் எனவும் கூறப்படுகிறது. இதனால் சிங்களவர்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்ல என்று என்ற விம்பமும் எமக்குள் கட்டமைக்கப்பட்டது.
இவ்வாறு கூறப்படுகின்ற அனைத்தும் உண்மையல்ல உண்மையில் சிங்களவர்கள் எதை மறுத்தார்கள் என்றால் மேலதிகமாக மேல் மாகாணத்தில் தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளினையே மறுத்தார்கள் என்பதே உண்மையாகும்.
அன்றைய சனத்தொகையில் முப்பத்தி மூன்று இலட்சம் பேர் சிங்களவர்களாகவும் 5 இலட்சத்தி நாற்பதினாயிரம் பேர் தமிழாகளாகவும் இருந்த நிலையில் இரு சிங்களவர்களுக்கு ஒரு தமிழர் என்ற பிரதிநிதித்துவ விகிதாசாரம் தமிழர்களுக்கு அதிகமானதேயாகும். இந்த நிலையில் மேலதிகமாக மேல் மாகாணத்துக்கு ஒரு தமிழ் பிரதிநிதி என்ற கோரிக்கை நியாயமற்றதாகும் என்பதை பொதுநீதி விளங்கிய அனைவராலும் ஏற்றுக் கொள்ளமுடியும். இந்த மேல்மாகாணப் பிரதிநிதித்துவம் அருணாசத்தின் மகன் மாகாதேவா சட்டசபையில் நிரதிநிதியாக வரவேண்டும் என்பதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கை என்பது இதற்குள் மூடிமறைக்கப்பட்ட உண்மையாகும்.
சிங்களவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதிநிதித்துவத்தினை சரியானமுறையில் பயன்படுத்தாமல் இலங்கைத் தேசிய காங்கிரசில் இருந்து விலகி தங்களுடைய சுயநலனுக்காக தமிழர்களை சிங்களவர்களுடன் மூட்டிவிடுகின்ற முதல் வேலையைச் செய்தவராக அருணாசலம் அவர்கள் விளங்குகின்றார்.
1924ம் ஆண்டு மீண்டும் மானிங்கினால் கொண்டுவரப்படட அரசியல் சீர்திருத்தத்தில் மேற்படி சிங்கள தமிழ்த் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதிநிதித்துவ விகிதாசாரம் அமுலாக்கப்பட்டது. அதன் பிரகாரம் சட்டநிருபண சபையில் 16 சிங்களவர்களும் 8 தமிழர்களும் இடம்பெற்றனர். எட்டுத் தமிழ் பிரதிநிதிகளில் ஒருவரை மேல்மாகாணத்துக்கான பிரதிநிதியாக தேர்வு செய்வதற்கான அங்கிகாரத்தினை தேசாதிபதி வழங்கியிருந்தார். மிகுதி ஏழு பேரில் ஐவர் வட மாகாணத்திலிருந்தும் இருவர் கிழக்கு மாகாணத்திலிருந்தும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இவ்விடயம் தொடர்பாக இலங்கையர்களுக்கு சர்வசன வாக்குரிமையினை சிபார்சு செய்த டொனமூர் தனது அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ‘சென்றமுறை யாப்பு மாற்றியமைக்கப்பட்டபோது தமிழர் மேலும் கொழும்பில் ஓர் இடம் தங்கட்கு வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இவ்விடம் மேல் மாகாணத் தமிழ் இடம் என அழைக்கப்பட்டது. இக்கோரிக்கைக்கு இடம் விட்டுக்கொடுக்கப்பட்டது. ஆயின் இது பற்றிய நிலை பின்னர் யாப்பு மாற்றியமைக்கப்படும்போது மீண்டும் ஆராயப்படும் என்ற தெளிவான கட்டுப்பாடுடனேயே இவ்வுறுதி அளிக்கப்பட்டது. பொதுவாகச் சட்டசபையில் விகிதத்திற்கேற்ப இடம் அளிக்கும் விடயத்தில் சிங்களவர் தமிழர்க்குப் பெரிய அளவில் விட்டுக்கொடுக்க ஆயத்தமாயிருந்தனர், உண்மையில் கொடுத்தனர் எனினும் அவர்களின் நாட்டின் மாசபை (இதில் சிங்களவர் பெரும்பான்மையாயிருந்தனர்) மேற்கு மாகாணத்தில் தமிழர்க்கு இடம் அளிக்கப்படுவதை எதிர்த்தது. மேற்கு மாகாண இருக்கை பற்றியும் தமிழர் அதைத் தொடர்ந்து வைத்திருப்பது பற்றியும் உள்ள கேள்வியை இவ்வாணைக்குழு நன்கு ஆராய்ந்துள்ளது. ஆயின் இவ்விருக்கை தொடர்ந்திருப்பதற்குத் தக்க காரணம் ஏதும் காணமுடியாதிருக்கிறது. புவியியல் முறையில் தமிழ் மக்கள் பரவியுள்ள வகையை நோக்குமிடத்து, அவர்கட்குப் போதியளவு இருக்கைகள் கிடைக்கும் என்பதும் உறுதியாகிறது, ஆதலால், சிங்களவர்க்கும் தமிழர்க்கும் எவ்விகித முறையில் இருக்கைகள் அமைய வேண்டுமென்பதுபற்றி மனம் போன போக்கில் ஒழுங்கு செய்ய வேண்டிய தேவை இல்லை, என இவ்வாணைக்குழு கருதுகிறது.‘ (யாப்பினை ஆய்ந்த சிறப்பாணைக் குழுவின் அறிக்கை (தொனமூர் அறிக்கை) என எவ்வித பக்கச்சார்புமின்றி அறிக்கை செய்துள்ளனர்.
இவ்விடயத்தில் சிங்களவர்களும் பிரித்தானியர்களும் தமிழர் நலன் என்ற அடிப்படையில் நோக்கியிருக்கிறார்கள். ஆனால் தமிழர்களான யாழ் உயர் வர்க்கம் அந்த உண்மையை மறைத்து சிங்களவர்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்ல என்று தமிழர்களை நம்பவைத்து ஏமாற்றியது.
இது போன்றே எதிர்காலத்தில் தமிழர்களுடைய உரிமை தொடர்பாக முற்போக்குச் சிந்தனைகொண்ட சிங்களத் தலைவர்களுடனும் பிரித்தானிய அதிகாரத்துடனும் எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற தமிழ்மக்கள் நலன் சார்ந்த பார்வை உயர் வர்க்க தமிழ்த்தலைமைகளிடம் இருக்கவில்லை.
தவறவிடப்பட்ட சமஷ்டி வாய்ப்பு
உதாரணத்திற்கு இலங்கைத் தேசிய காங்கிரஸ்சில் கண்டியை பிரதிநிதித்துவம் படுத்திய முக்கிய பிரமுகர்களான ஏ.எப். மொலமுரே, டி.பி.கொப்பேகடுவ, பி.பி.ரத்னாயக்கா போன்றோர் 1924ம் ஆண்டு தேசிய காங்கிரசிலிருந்து விலகி ‘கண்டிய தேசிய அசெம்பிளி‘ என்ற பிரதேச ரீதியான அமைப்பினை உருவாக்கினர். இவ் அசெம்பிளி இலங்கையில் ஒரு சமஷ்டி அரசு உருவாக்கப்பட்டு அதில் கண்டியர்களுக்குப் பிரதேச சுயாட்சி வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையினை 1927ம் ஆண்டு முன்வைத்தது. இக் கொள்கையில் அவர்கள் தொடர்ந்து ஒரு பத்து ஆண்டுகள் நிலையாக இருந்தனர். இதற்கு எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக ஆதரவளித்த போதும் அன்றைய உயர்குழாத்து தமிழ்த் தலைவர்களும் எவரும் இதற்கு ஆதரவளிக்கவில்லை.
இது எதனைக் காட்டுகின்றது என்றால் அன்றிருந்த சூழலில் சேர்.பொன்.இராமநாதன், சேர்.பொன்.அருணாசலம், முத்தகுமாரசாமி போன்ற தமிழ்த் தலைவர்களை சிங்களத் தலைவர்களும் மக்களும் முழு இலங்கைக்குமான தலைவர்களாகவே நோக்கினார்கள். இந்த தலைமைத்துவ நிலையிலிருந்து இறங்கி பிரதேசத் தலைமைத்துவங்களை ஏற்பதற்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை. இதனால் சந்தர்ப்பம் கிட்டியபோதெல்லாம் தாங்கள் தேசியத் தலைவர்கள் என்று தங்களைக் காட்டிக் கொள்வதற்கும் அவர்கள் தயங்கியதில்லை. இதற்குச் சிறந்த உதாரணம்தான் 1915ம் ஆண்டுக் கலவரத்தின் போது கைது செய்யப்பட்டு மரணதண்டனை வழங்கப்பட்டிருந்த சிங்களத் தலைவர்களை சேர்.பொன்.இராமநாதன் யுத்தகாலத்திலும் அச்சமின்றி பிரித்தானியா சென்று மகாராணியைச் சந்தித்து அவர்களை விடுவித்த நிகழ்வாகும். இந்தக் குறுகிய நலன்களை விடுத்து தமிழ், முஸ்லிம் சிறுபான்மை என்ற தளத்தில் இவர்கள் செயற்பட்டிருப்பார்களேயானால் கண்டிய தேசிய அசெம்பிளியுடனும் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக போன்ற தலைவர்களுடனும் இணைந்து இலங்கையில் ஒரு சமஸ்ட்டி ஆட்சியினைக் கொண்டுவந்திருக்க முடியும். ஆனால் தங்களுடைய சொந்த நலன்களுக்குக் கொடுத்த முக்கியத்துவம் தமிழர்கள் விடயத்தில் இவர்களால் கொடுக்க முடியாமல் போனதற்குக் காரணம் அவர்களின் சமூக வர்க்க குணாம்சமேயாகும்.
கருத்தாடல் களம் – 02 இல் குறிப்பிடப்பட்டுள்ள சர்வசன வாக்குரிமையினை இராமநாதன் குழுவினர் நிராகரித்தமையும் அவர்களின் சமூக வர்க்க குணாம்சத்தினாலாகும்.
டொனமூர் அரசியல் திட்டம் இலங்கைக்கு பூரண சுயாட்சிக்குத் தடையாக இருப்பதனால் டொனமூர்த் திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்த போது ஜி.ஜி.பொன்னம்பலம் தேர்தல் பகிஸ்கரிப்பை ஏற்றுக்கொண்டார். இருந்தபோதும் எஸ்.என்.ஆனந்தன் என்பவர் தேர்தலில் போட்டியிடுவதால் அவரை எதிர்த்து போட்டியிடுவதாகவும் தான் தெரிவு செய்யப்பட்டால் வாக்களர்களினதும் இளைஞர் காங்கிரசினதும் ஆலோசனையைப் பெற்று செயற்படப்போவதாகவும் கூறியிருந்தார். இதனால் அவரை யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் முல்லைத்தீவு – மன்னார் தொகுதியில் ஆதரித்தது. (இது யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் கொள்கைத் தெளிவின்மை என்பது வேறு விடயம்)
இதில் ஜி.ஜி.பொன்னம்பலம் தோல்வியடைந்ததும் பகிஸ்பரிப்பு தவறு என்றும் இப் பகிஸ்கரிப்பினால் தேர்ந்தெடுக்கப்படாது விடப்பட்ட யாழ்ப்பாணத்தொகுதி பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்காக மீண்டும் இடைத்தேர்தலை நடாத்த வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து மகஜர் அனுப்பியவர்களில் ஜி.ஜி.பொன்னம்பலம் முக்கியமானவராக இருந்தார்.
இவ்வாறு தனது பதவிக்காக தமிழ்மக்களின் அரசியலைப் பயன்படுத்தியவராகத்தான் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களைக் காண்கின்றோம்.
50:50 என்ற ஏமாற்று
இது போன்றே 1944ம் ஆண்டு அரசியல் சீர்திருத்தத்துக்காக வருகை தந்த சோல்பரி ஆணைக்குழுவிடம் டொனமூர் அரசியல் திட்டத்தின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி சிறுபான்மையினருக்கு சமஸ்டி அரசியல் அமைப்பே பொருத்தமானது என்று கேட்கத் துணியவில்லை; காரணம் சிங்களத் தலைவர்களால் சமயோசிதமாக வழங்கப்பட்ட சலுகைகளைப் பெற்று சுகபோகங்களை அனுபவித்தமையினால் குறைகளை எடுத்துக்காட்டுவதற்குரிய தார்மீகத்தினை இழந்திருந்தமையினாலாகும். இதனால் 50:50 எனும் கோரிக்கையினை நடைமுறைச் சாத்தியமான கோரிக்கையாக பிரித்தானிய அரசிடம் முன்வைத்து மக்களை ஏமாற்றினர்.
சிறுபான்மையினருக்கான 50 வீத பிரதிநிதித்துவத்தை விகிதாசார அடிப்படையில் முஸ்லீம்களுக்கு வழங்க மறுத்தமையினால் முஸ்லீம் லிக் தனது ஆதரவினை வழங்கவில்லை. மொத்த சனத்தொகையில் 75 வீதமாக இருக்கும் சிங்கள மக்களுக்கு 50 வீதமான பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்த ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் சிறுபான்மையினருக்கான 50 வீதத்தில் மற்ற சிறுபான்மையினருக்கு விகிதாசார அடிப்படையில் வழங்க மறுத்திருப்பது அவருடைய அரசியல் நேர்மையீனத்தக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாகும்.
இருந்த போதும் அன்றைய முக்கிய சிங்களத் தலைவராயிருந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா அவர்கள் 50:50 கோரிக்கைக்குப் பதிலாக 60:40 என்ற பிரதிநிதித்துவம் தொடர்பாக பேசுவதற்கு முன்வந்த போதும் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அப்போது தேசாதிபதியாக இருந்த சேர்.அன்றூ கல்டிகொட் 50:50 கோரிக்கையினை ஏற்றுக்கொள்ளாதவராகவே இருந்தார்.
50:50 நிராகரிக்கப்பட்டால் மாற்றுவழியாக எதை முன்வைப்பது என்பது தொடர்பாகவும் தமிழர்கள் “தலைசிறந்த அறிவாளிகள்” எனக் கருதிய இந்த அறிவாளிகளிடம் மாற்று இருக்கவில்லை.
50:50 குறித்து தந்தை செல்வா
தமிழ் காங்கிரசில் இருந்து பிரிந்து தமிழரசுக் கட்சியை ஆரம்பித்ததன் பின் நடந்த முதலாவது பொதுக்கூட்டத்தில் தந்தை செல்வநாயகம் 50:50 கோரிக்கை தொடர்பாக பின்வருமாறு உரையாற்றினார். ‘தமிழ்த் தலைவர்கள் இதுகால வரை ஸ்திரமற்ற எதிர்மறைக்கொள்கையையே பின்பற்றி வந்தனர். குறைந்த விகிதாசாரத்தையுடைய சிறுபான்மை மக்களுக்கு கூடிய விகிதாசாரப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று கோரினார். நாங்கள் சிங்களவராகப் பிறந்திருந்தால் அக்கோரிக்கைக்கு இணங்கியிருப்போமா? நான் நிச்சயமாக இணங்கியிருக்கமாட்டேன். தமிழர்கள் இந்த நாட்டில் பெரும்பான்மையினராக இருந்து, சிங்களவர் சிறுபான்மையினராக இருந்து, சிங்களவர்கள் எமது தலைவர்கள் கோரிய ஐம்பதுக்கைம்பதைக் கோரியிருந்தால் நாங்கள் அதற்கு இணங்கியிருப்போமா? நிச்சயமாக இணங்கியிருக்கமாட்டோம். ஐம்பதுக்கைம்பது நியாயமான கோரிக்கையுமல்ல. நடைமுறைப்படுத்தத்தக்க கோரிக்கையுமல்ல. அப்போதைய தமிழ் தலைவர்கள் நடைமுறைக்கொத்த மாற்றுத் திட்டத்தை முன்வைத்திருந்தார்களானால் பிரிட்டிஷ் அரசு அதை ஆதரவுடன் பரீசீலித்திருக்கும்‘ —(மேற்கோள்.த.சபாரெத்தினம்)
இவ்வாறு யதார்த்தபூர்வமாக உரையாற்றிய எஸ்.ஜே.வி.செல்வநாயம் அவர்கள்தான் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களது 50:50 கோரிக்கைக்கு பக்கபலமாக இருந்ததோடு திரு.பொன்னம்பலத்துடன் இணைந்து சோல்பரி ஆணைக்குழுவினரிடம் அக் கோரிக்கையினை முன்வைத்து சாட்சியமளித்தும் இருந்தார்கள். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதும் அது நடைமுறைக்கு உதவாத ஒரு திட்டம் என செல்வநாயகம் அவர்கள் கூறுவது அவருடைய அரசியல் நேர்மையீனத்தை அல்லது தமது தவறை சுயவிமர்சனம் செய்யாத நிலையினைக் காட்டுகின்றது.
தமிழ் உயர் வர்க்கத்தினர் எப்போதும் மற்றவர்களை விட தாம்தான் அறிவாளிகள், திறன்மிகுந்தவர்கள் என்ற கற்பனை மிகுதியில் வாழ்ந்துகொண்டு தமது ஆதிக்க மனோபாவத்தை நிலைநாட்டுவதில் அக்கறையாக இருக்கிறார்களே தவிர சந்தர்ப்பத்துக்கு ஏற்ப அகப் புறச் சூழ்நிலைகளை கையாண்டு தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதில் எப்போதும் தவறிழைத்தே வந்திருக்கிறார்கள் என்பதற்கு சோல்பரிக் குழுவினர் விடயத்தில் அவர்கள் நடந்து கொண்டமையும் ஒர் உதாரணமாகும். இதற்குக் காரணம் தமிழர்களின் தலைமையினை ஏற்றவர்களின் சமூக வர்க்க குணாம்சமேயாகும். இந்த சமூக வர்க்க குணாம்சங்களின் சுயநல நடவடிக்கைகளின் தொடர்ச்சிளை அடுத்த பதிவிலும் பார்க்கலாம்.
(தொடரும்………………….)