— அழகு குணசீலன் —
இலங்கைக்கும் சீனாவுக்குமான உறவுகள் இறுக்கமடைந்தும், இந்தியாவுடனான உறவு சற்று தொய்வுற்றும் இருக்கும் இன்றைய சூழலில் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சர்வதேசமும், பிராந்தியமும் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தங்கள் மூக்கை நுழைக்கத் தொடங்கியுள்ளன..
கடந்த சில வாரங்களாக அமெரிக்க காங்கிஸிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் அரசியல் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. கனடாவில் இன அழிப்பு, கல்வி வாரம் என்று அது பிசுபிசுத்துப்போன கதைவேறு. மறுபக்கத்தில் இந்தியாவிலும் சில சக்திகள் காய் நகர்வுகளை ஆரம்பித்துள்ளன.
இந்து ஈழம் என்றும், 8 கோடி தமிழர்களின் அபிலாஷை அல்ல 150 கோடி இந்துக்களின் அபிலாஷை என்கிறார் இந்து மக்கள் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் அர்ஜுன் சம்பத். இது போதாதென்று சிவசேனையின் இலங்கைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் யாழ்ப்பாண கடைசி மன்னன் சங்கிலியனை “சைவத்தமிழ் மன்னன்” என்று அர்ச்சனைப் பூஜை செய்து காளாஞ்சி வழங்குகிறார்.
சர்வதேச மட்டத்தில் ஜெனிவா மனித உரிமைகள் விவகாரத்திற்கு பின் சற்று அமைதி நிலவியது. ஆனால் அது நீடிக்க வில்லை. தலைமை மாடு அமெரிக்கா முன்னால் போக 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியப் பட்டி பின்னால் போகிறது. இந்திய புனிதப் பசுவும் பட்டியில் இணைவதா? இல்லையா? என்ற இரண்டும் கெட்டான் நிலையில் நிற்கிறது.
அமெரிக்கா தமிழ் டயஸ்போராவுக்கு விடுத்த அழைப்பை தொடர்ந்து, அமெரிக்க காங்கிரஸில் தமிழர் தாயகத்தை அங்கீகரித்தும் புலிகள் அதற்காக போராடினார்கள் என்றும் பாட்டை மாற்றிப்பாடும் அரசியல்.
பயங்கரவாதிகள் என்ற அதே வாய்கள் போராளிகள் என்கின்றன. யாரின் நலன்களுக்காக இந்த மாறாட்டம்? இந்த ஞானம் அமெரிக்க அரசியலுக்கு அப்போது வராதது ஏன்?
ஜெனிவாவில் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்தன. மனித உரிமைகள் பேணப்பட வேண்டும் என்ற கோரிக்கையிட்டன. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கை ஏற்றுமதிகளுக்குள்ள வரிச்சலுகையை நீக்குவோம் என்று மிரட்டுவதுடன், பயங்கரவாதவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறும் கோருகின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் தலைமை மாடும், பட்டியும் சொந்தமாக பயங்கரவாதத் சட்டத்தை சுமந்து கொண்டுதான் இக் கோரிக்கையை இலங்கைக்கு வைக்கின்றன.
தீர்மானங்கள், கோரிக்கைகளின் அரசியல்
அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்தை தமிழ் ஊடகங்கள் தமிழீழம் கிடைத்தது போன்று கொண்டாடின. போதாக்குறைக்கு பழ.நெடுமாறனும், தமிழ்தேசிய அரசியல்வாதிகளும் சும்மா இருந்த வாய்க்கு அவல் கிடைத்த மாதிரி அறிக்கை அறிக்கையாக விட்டார்கள். இந்த ஊடகங்களினதும், தமிழ்தேசிய, தமிழீழ ஆதரவாளர்களதும் சர்வதேச அரசியல் ஜதார்த்தம் குறித்து அனுதாபப்படுவதைத்தவிர வேறு என்னதான் செய்யமுடியும். நித்திரை செய்பவனை எழுப்பலாம், நித்திரை செய்வது போல் பாசாங்கு செய்பவனை எழுப்ப முடியாது.
இறைமையுள்ள ஒரு நாட்டின் அரசியல் விவகாரங்கள் குறித்து மற்றொரு நாடு எந்த தீர்மானங்களையும் எடுக்கலாம். பிரேரணையில் எதையும் உள்வாங்கிக் கொள்ளலாம். அதற்குப் பின்னரான நடைமுறை ஜதார்த்தம் என்ன? வைகுந்தவாசன் ஐ.நா.வில் பிரகடனம் செய்தார், தமிழ்தேசியம் ஒவ்வொரு பொங்கலுக்கும் செய்தது, வரதராஜப் பெருமாளும் செய்தார் ஆக, எத்தனை பிரகடனங்கள்? எத்தனை ஈழம்கள். ஒவ்வொரு தடவையும் இந்த பேர்வழிகள் இப்படித்தான் கொண்டாடினார்கள்.
அமெரிக்கா தமிழீழத்தை பிரித்து தரப்போகிறதா? இதை இந்தியா பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா? இலங்கையில் சீனா கால்பதித்தால் மட்டும்தான் இந்தியாவுக்கு ஆபத்தா? அமெரிக்கா கால்பதித்தால் அது இந்தியாவுக்கு பாதுகாப்பா? எல்லாமே வலியவன் எளியவனை கட்டிப்போட எடுக்கும் தந்திரங்கள்.
இந்த தீர்மானங்கள் எதுவும் ஈழத்தமிழர் நலன் சார்ந்தவை அல்ல. இந்து சமுத்திரப் பிராந்திய பூகோள அரசியலில் சர்வதேச, பிராந்திய வல்லரசுகளுக்கான போட்டியின் வெளிப்பாடு. அவர்களின் அரசியல், பொருளாதார நலன் சார்ந்தது. சீனாவுக்கு நேரடியாக அடிக்க முடியாது என்பதால் இலங்கைக்கு அடிக்கிறார்கள். அவர்கள் நினைக்கிறார்கள் அது சீனாவுக்கும் வலிக்கும் என்று. சீனா ஒரு புரட்சியை பிரசவித்த வேதனையை அனுபவமாகக் கொண்டது என்பதை இவர்கள் மறந்துவிடுகிறார்கள்.
இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்து, சீன முதலீட்டை ஆபத்துக்குள்ளாக்குதல். இலங்கையின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதிகளுக்கு வரிச்சலுகையை நீக்கி, ஐரோப்பிய சந்தையில் இலங்கை ஏற்றுமதிகளுக்கான விலையை உயரச்செய்து கேள்வியை குறைத்தல். இலங்கைக்கு கடன் வழங்கும், முதலீடு செய்யும் நாடுகளுக்கு இலங்கை பொருளாதாரம் குறித்த சந்தேக ஊகங்களை ஏற்படுத்தல். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போது இவை பொருளாதாரம் சார்ந்தவை போன்று தென்படும்.
உண்மையில் இவை அனைத்தும் அரசியல் மாயமான்கள்.
இந்த மாயமான்களை கவனிக்க பைடனின் தேர்வு இலங்கை- மாலைதீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக JULIE JIYOON CHUNG. .
ஜேர்மனியின் டபிள் கேம்
ஜெனிவாவில் இலங்கை மனித உரிமைகள் பிரேரணைக்கு ஆதரவளித்தது மட்டுமன்றி ஜேர்மனி ஒரு இணைப்பு நாடாகவும் இருந்தது. மனித உரிமைகள் சார்ந்து அழுத்தம் கொடுத்த அடுத்தடுத்த வாரத்தில் ஒரு தொகுதி ஈழத்தமிழ் அகதிகளை ஜேர்மனியும், சுவிஸும் இலங்கைக்கு நாடு கடத்தின.
தற்போது பயங்கரவாதச் சட்டத்தை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோருவதன் பின்னணியும் அதுதான். நாடு கடத்தப்படவுள்ள அகதிகள் இச் சட்டத்தை காரணம் காட்டி வாதாடுகின்றனர். நாட்டிற்கு திரும்ப மறுக்கின்றனர். இதை நீக்கவைப்பதன் மூலம் அகதிகள் நாடு கடத்துவது இலகுவாக இருக்கும். இத் தீர்மானம் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிறைவேற்றப்பட்டு சில நாட்களில் இரண்டாவது தொகுதி அகதிகள் கொழும்பில் இறக்கப்பட்டுள்ளனர்.
மேற்குலக சமாதான முயற்சிகள் இலங்கையில் தோல்வியடைந்ததற்கு இதுவும் ஒரு காரணம். இந்த நாடுகளுக்கு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதை விடவும், பிரச்சினையை அரைகுறையாக தீர்த்து வைத்து, அகதிகளைத் திருப்பி அனுப்புவதற்கான சூழ்நிலையை உருவாக்கி அகதிகளை திருப்பி அனுப்புவதே இவர்களின் திட்டமாக இருந்தது.
இந்த டபிள் கேம் அரசியலை புரிந்து கொள்ள முடியாத டயஸ்போரா தமிழ்தேசியம் ஜேர்மனிக்கு ஆதரவாக ஜெனிவாவில் கொடிபிடிக்கின்றது. மறுநாள் பிராங்போர்ட் விமான நிலையத்தில் எதிர்த்துக் குரல் கொடுக்கின்றது. கோஷம் போடுகிறது. தேசிய விடுதலைக்கு போராடிய ஒரு இனத்தின் அரசியல் அறியாமை. அரசியல் மயப்படுத்தலை விடவும் அவர்களுக்கு தேவைப்பட்டது யூரோவும், டொலரும்.
கடந்த பதின்மூன்றாம் திகதி சுவிஸில் பயங்கரவாதச் சட்டத்தை மேலும் கடினமாக்குவதற்கான சர்வஜன வாக்கெடுப்பு வெற்றி பெற்றுள்ளது. இது பற்றி பேசாத ஐரோப்பா இலங்கை பற்றி மட்டும் பேசும் தந்திரோபாயத்தின் பின்னணி என்ன? இலங்கையில் ஜனநாயகச்சூழல் ஒன்று உருவாக இச்சட்டம் தடையாக இருப்பதாக கூறப்படுவதால் இக் கேள்வி எழுகிறது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், சுவிஸிலும் இதனால் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகிறதா?
அமெரிக்கா, ஐ.நா.வின் அனுசரணையோடுதான் இச் சட்டத்தினை நாடுகள் அறிமுகப்படுத்தின. இதனால் ஒட்டுமொத்த ஐ.நா. தீர்மானம் ஒன்றின் மூலம் சகல நாடுகளிலும் இதனை நீக்குவது அல்லது இலகுபடுத்துவது அல்லது அதன் செயற்திறன் குறித்து விவாதிப்பதே அரசியல் விருப்பு வெறுப்பற்ற சரியான அணுகுமுறையாகும். இதை விடுத்து அரசியல் எதிரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு தேர்வு செய்து பயன்படுத்துவதே ஜனநாயக துஷ்பிரயோகம்.
திண்டாட்டத்தில் இந்திய புனிதப்பசு
இலங்கைக்கு எதிரான பட்டியின் அழுத்தங்களை சீனாவுக்கானவை என்பதால் அதில் புல்லுத்தின்ன நினைக்கிறது புனிதப்பசு. அதேவேளை இலங்கைக்கு மிரண்டு குத்தும் நிலையிலும் அது இல்லை. “போரரடித்தால்” இலங்கையை சீனாவிடம் தாமாகவே துரத்தியதாகிவிடும்.
இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்கு இந்தியாவுக்கு இருக்கிற ஒரே ஒருவிடயம் தமிழர் பிரச்சினைதான். இந்தியத் தரப்பின் கடந்த கால “குரல்” இது விடயமாக கடுமையானதாக இல்லை. காரணம் இது விடயத்தில் இந்தியா பலவீனமடைந்துள்ளது. இன்னொரு நாட்டின் இறைமையில் இந்தியா தலையைப் போடுகிறது என்று ரஷ்யாவும், சீனாவும் அறிவித்தால் அது இந்திய இராஜதந்திரத்தின் படுதோல்வியாக அமையும்.
ஜெனிவாவில் ஜோபைடனை சந்திப்பதற்கு முன்னர் மொஸ்கோவில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் புட்டின் கூறிய கருத்து இங்கு இலங்கை – இந்திய – சீன உறவுகளுக்கு பொருந்திப்போகிறது. புட்டின் என்ன கூறினார்?
“ஒவ்வொரு இறைமையுள்ள நாட்டிற்கும் எந்த, எந்த நாடுகளுடன் நட்புறவைப் பேணவேண்டும் என்று தீர்மானம் எடுக்கின்ற உரிமை உண்டு. நான் நினைக்கிறேன் இரு நாடுகள் இன்னொரு நாட்டிற்கு எதிராக நட்புறவு கொள்வதில்லை” என்றார் புட்டின்.
கடந்த வாரம் ஜெனிவாவில் ஜோ பைடனுக்கும், புட்டினுக்கும் இடையிலான பேச்சுக்களில் பைடன் நிர்வாகத்தின் பலவீனம் தெளிவாக தெரிந்தது. சர்வதேச ஊடகங்கள் பேச்சுக்கள் ரஷ்ய இராஜதந்திரத்திற்கும், புட்டினுக்கும் கிடைத்த வெற்றியாகவே செய்தி வெளியிட்டுள்ளன.
உக்கரைன் விவகாரத்திற்கும், ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதியின் விவகாரத்திற்கும் பதில் அளித்த புட்டின் “அதற்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை. அது எங்கள் நாட்டுப் பிரச்சினை அதை நாங்கள் பார்த்துக் கொள்வோம் “என்று பைடனின் முகத்தில் அறைந்தாற் போல் சொல்லிவிட்டார். இந்த நிலைப்பாடுதான் இலங்கை விடயத்திலும் ரஷ்யாவின் நிலைப்பாடு.
இந்தியா தன்னை பிராந்தியத்தில் நடுநிலையாகக் காட்ட படாதபாடு படுகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதி ராஜபக்ஷவுடனான சந்திப்பு கை நழுவிய நிலையில் கால் தவறி ஜனாதிபதி மாளிகைக்குப் பதிலாக இந்திய இல்லத்தில் விழுந்துள்ளனர். இந்தியத்தூதுவர் கோபால் பாக்லேயைச் சந்தித்துள்ளனர்.
கடந்த கால சந்திப்புக்கள் போலன்றி இந்தியா மிகவும் அடக்கியே வாசித்திருக்கிறது. இந்தியத்தூதுவர் பயன்படுத்திய வார்த்தைப் பிரயோகங்கள் இங்கு கவன ஈர்ப்பைப் பெறுகிறது. இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது.
“தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் இலங்கையின் நல்லிணக்கத்திற்கு இந்தியாவின் நிலையான ஆதரவை வழங்குவோம்”
இதன் மறுவாசிப்பு: இலங்கை நல்லிணக்கத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்கையில் அதற்கு இந்தியாவின் ஆதரவு இருக்கும். ஆக, செய்ய வேண்டியது இலங்கை. இந்தியா அதற்கு ஆதரவளிக்கும்.
“13 வது திருத்தத்திற்கு அமைவாகவும், ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும், சமத்துவம், நீதி, சமாதானம், மற்றும் கௌரவம் ஆகியவற்றிற்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் இலங்கையின் நல்லிணக்கத்திற்கு இந்தியாவின் நிலையான ஆதரவு கிடைக்கும்”
இந்தத் தடவை ஒற்றைச் சுட்டு விரலைக்காட்டி எச்சரிக்கை செய்கின்ற சம்பந்தன் ஐயாவின் அரசியல் வாணவேடிக்கைக்கு வேலையில்லாமல் செய்துவிட்டார் இந்தியத்தூதுவர்.
திருச்சி சிறைக்கைதிகளை பேச்சுக்களின் போது கூட்டமைப்பினர் வசதிக்காக மறந்தார்களா? யூன் 9ம் திகதி முதல் தமிழ்நாடு திருச்சி மத்திய சிறையில் 76 இலங்கைத் தமிழர்கள் தங்களை “விடுதலை செய் அல்லது கருணைக்கொலை செய்” என்று போராட்டம் நடாத்துகின்றனர்.
இவர்களை விடுதலை செய்யுமாறு அடைக்கலநாதன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வந்தன.
இந்தியத்தூதுவர் உடனான இந்த சந்திப்பில் இதுவிடயத்தில் இவர்கள் “கப்சிப்” ஆனது ஏன்? ஒரு பத்தி எழுத்தாளர் குறிப்பிட்டது போல் மறதி வியாதியா? கடிதம் எழுதிய அடைக்கலநாதன் கூட இந்த வயதில் மறந்து போனாரா? எல்லாமே வசதி கருதித்தான்.
தமிழ்த்தேசிய அரசியலும் ஒரு பட்டி அரசியல் தான். தமிழரசும், சம்பந்தன் ஐயாவும் முன்னால் நடக்கிறார்கள். பட்டிக் கூட்டாளிகள் பின்னால் தொடர்கிறார்கள். ஏதோ….? கிணற்றுக்குள் விழாமல் இருந்தால் சரி…!