புலம் பெயர்ந்த சாதியம் 10

புலம் பெயர்ந்த சாதியம் 10

 — அ. தேவதாசன்  

தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழ பிரகடனம் செய்த போது பெரும்பாலான ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் இது தமக்கானது அல்ல என்கிற கருத்தோடு தீண்டாமைக்கு எதிரானதாகவும், கல்வி, பொருளாதார வளர்ச்சியிலும் கவனம் செலுத்தினர். 1978ல் சகல வல்லமையும் பொருந்திய ஜனாதிபதி ஆட்சி முறை சிறுபான்மை இனங்களை ஒடுக்குவதற்கு சாதகமான வழியை ஏற்படுத்தியது. ஜெயவர்தன தலைமையிலான அரசு எடுத்த இனவாத நடவடிக்கையும், இராணுவ முன்னெடுப்பும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மத்தியில் நாங்களும் தமிழர்கள்தான் எனும் சிந்தனைப் போக்கை உருவாக்கியது.  

ஜெயவர்தன அரசு சிங்கள மக்களின் கல்வி பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு பதிலாக தமிழ் பேசும் மக்களின் கல்வி பொருளாதாரத்தை அழிப்பதற்கே திட்டமிட்டு செயற்படுத்தியது. இடதுசாரிக் கட்சிகளின் வளர்ச்சியும், இலங்கை தேசிய பொருளாதார வளர்ச்சியும் தீவிர வலதுசாரி கொள்கையுடைய ஐக்கிய தேசியக் கட்சிக்கும், அதன் எஜமானர்களுக்கும் ஏற்படுத்திய அச்சுறுத்தலாலேயே ஜெயவர்தன ஆட்சி இனவாதத்தை கையில் தூக்கியது. அதில் வெற்றியும் கண்டது. சிங்கள இனவாத செயற்பாடுகள் தமிழ் இனவாதிகளுக்கு மிகவும் சாதகமான சூழலை ஏற்படுத்தியது.  

தமிழர் விடுதலைக் கூட்டணி அதனை தக்க வைக்கத்தவறியதால் நம்பிக்கை இழந்த இளைஞர்கள் பல ஆயுதப்போராட்ட இயக்கங்களை உருவாக்கினார்கள். இவ்வியக்கங்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் இளைஞர்கள் பெருமளவு தங்களை இணைத்துக் கொண்டனர். ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் மிகவும் குறைந்த இளைஞர்கள் இணைந்து கொண்டாலும் அனைத்து இயக்கங்களும் புலிகளால் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்கள் புலிகளில் இணைந்து கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.  

தமிழீழ பிரகடனத்திற்கும் பின்னர் ஆயுதப்போராட்டமே ஒரே வழி என முன்னின்று போராடிய யாழ்ப்பாண ஆதிக்க சாதி இளைஞர்கள் மெல்ல மெல்ல அதிலிருந்து நழுவி, 1990களுக்குப் பின்னர் அவர்களது பொருளாதார பலத்தின் காரணமாகவும், எதிரியோடு எதிர்த்து நின்று போராட திரணியற்ற வர்க்க குணாம்சம் காரணமாகவும் மேற்குலக நாடுகளை நோக்கி தஞ்சம் புகுந்தனர். தஞ்சம் புகுந்த இவர்களில் பலர் தமது சொந்த வாழ்வின் வளர்ச்சிக்காகவே “தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்” என்கிற கோசங்களை மட்டும் உயர்த்திப் பிடித்தனர்.

தேசிய கோசங்களை போடும் பலர் தமது சொந்த பந்தங்கள் என அனைவரையும் மேற்குலக நாடுகளுக்கு அள்ளிக்கொண்டு வந்தனர். அவர்களுடன் சாதிய கட்டுமானங்களையும் காவி வந்தனர். சிலர் மட்டும் எனக்குத்தெரிய தேசிய கோசத்திற்கு விசுவாசமாக தங்கள் வாழ்வை தொலைத்தனர் என்பதும் உண்மையே!..

பொருளாதார பலம் பொருந்தியவர்கள் போராட்டத்திலிருந்து தப்பியோட… தப்பி ஓட வழி தெரியாத, வசதி இல்லாத வடக்கு கிழக்கில் வாழ்ந்த ஏழை எழியவர்களே ஆயுதம் ஏந்தி இலங்கை அரசோடு போராட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டனர். களத்தில் அவர்கள் உயிரைக்கொடுத்துப் போராட புலத்தில் இருந்து பலர் அவர்களை வைத்து பெருமுதலாளிகளாகினர். புலம் பெயர்ந்தோர் பொருளாதார பலத்தை மீறி புலிகளாலும் எதுவும் செய்ய முடியவில்லை.
பிரபாகரன் மட்டுமே தனித்து அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார் என்பது போன்ற கருத்து வெளியில் பேசப்பட்டாலும் அதில் முற்றிலும் உண்மையில்லை. களத்தில் இராணுவ ரீதியாக பிரபாகரன் முடிவு எடுப்பது என்பது உண்மையாகினும் சமூக, அரசியல், பொருளாதாரம் சார்ந்து புலம்பெயர் பினாமிகளே முக்கிய முடிவுகள் எடுக்கும் நிலைதான் இருந்தது.

புலிகளின் அதிகாரத்திற்குட்பட்ட காலங்களில் சாதி பேசக்கூடாது என்பதுதான் நடைமுறையாக இருந்ததே தவிர சாதியை அழிப்பதற்கோ, சனாதனத்தை வேரறப்பதற்கோ எந்த ஒரு திட்டங்களும் தீட்டப்பட வில்லை. பல பரம்பரையாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றிய புலிகளால், சகோதர இயக்கங்களை அழித்த புலிகளால், இந்திய நாட்டின் பெருந்தலைவரை அழித்த புலிகளால், தமிழ் தலைவர்கள்…, சிங்களத்தவர்கள் பலரை அழித்த புலிகளால், சனாதனத்தை அழிக்க முயற்சிக்கவில்லை. இதன் காரணம் ஒன்றே ஒன்றுதான் வேளாளியத்தை எதிர்க்கும் பலம் புலித்தலைமையிடம் இருக்கவில்லை.

வேளாளியம் பிரபாகரனை தலைவராக விரும்பி ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களது தனித்துவ அதிகாரம் பொருந்திய கனவு நாடு உருவாக்க பிரபாகரன் போன்ற கோட்பாடற்ற ஒரு போர் வீரன் அவசியம். அதற்காக பிரபாகரனை எப்படியெல்லாம் புகழ்ந்து தூக்கி நிறுத்த முடியுமோ அந்தளவையும் செய்தார்கள்.

அவர்களது மானசீகமான தலைவன் ஆறுமுக நாவலர் மட்டுமே! அவரால் உருவாக்கப்பட்ட “சனாதனத்தை” நடந்து முடிந்த எந்த கொடூரமான யுத்தங்களிலும் அவர்கள் கட்டிக்காப்பாற்றி உள்ளார்கள். தமிழ் தேசியத்தை தூக்கிப்பிடிக்கும் இவர்கள் கார்ல் மாக்சோ, அம்பேத்கரோ, பெரியாரோ தமிழீழத்திற்கு தேவையில்லை என இப்பொழுதும் பரவலாக பொது வெளியில் எழுதி வருவதற்கு காரணம் ஆறுமுநாவலர் மீதும் சானாதனத்தின் மீதும் எந்த வித கேள்விகளும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே ஆகும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்க் காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகள் தமிழ் மக்கள் உரிமை சார்ந்து எந்த விதமான முன்னெடுப்புக்களையும் எடுக்க மாட்டாது எனத் தெரிந்தும், ஒரு சரியான மாற்றை தேர்வு செய்யாமல் இந்துத்துவ அடையாளமான விக்கினேஸ்வரனை முன்னிறுத்துவதன் நோக்கத்தின் பின்னுள்ள அரசியல் என்பது சனாதனம் இல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்.

வடபகுதியில் ஐம்பது வீதமானோர் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் வாழ்கின்றனர் என பலராலும் பேசப்படுகிறது. இருப்பினும் பாராளுமன்றத்திலோ அல்லது மாகாண சபையிலோ அந்த விகிதத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் மறுக்கப்படுவதற்கான காரணம் கட்டமைக்கப்பட்டுள்ள நாவலரின் சனாதனக் கோட்பாடுதான்.

தமிழர்கள் உரிமை சார்ந்து அல்லது மக்கள் நலத்திட்டங்கள் சார்ந்து அதிகாரம் மிக்க பிரதிநிதித்துவ உறுப்பினர்கள் எண்ணிக்கையை விட தேசியக் கட்சிகளும் அதன் தலைவர்களும் ஆதிக்க சாதிகளாலேயே நிரப்பப்பட்டுள்ளனர். இப்படி இருக்கும் போது எந்தத் தேசியக் கட்சிகளிலும் முக்கியத்துவம் அற்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு மக்கள் பிரதிநிதித்துவம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதைத்தவிர வேறு பதில் இல்லை.

ஒரு ஒடுக்கப்பட்ட சமூகம் தனது மேம்பாட்டுக்காக திட்டமிடவும் அதை முன்னர்த்தவும் அதிகார பலம் அவசியமாகிறது. அதை தமிழ்த்தேசியக் கட்சிகள் எப்போதும் வழங்கப்போவதில்லை. மாறாக தொடர்ந்தும் அவர்களை அதிகாரத்தில் அமரச் செய்து அழகு பார்க்கவும் அடிமைச் சேவகம் செய்யுமே பயன்படுத்தப்படுவார்கள்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் ஒன்றுபட்டு ஓரணியில் நின்றால் தாங்கள் தமிழ்த் தேசியத்தின் துரோகியாகி விடுவோமோ அல்லது அரச கைக்கூலிகள் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகி விடுவோமோ என்கிற தாழ்வுச் சிக்கலே அவர்களின் மிகப்பெரிய எதிரியாக இருக்கிறது. அதுவே வேளாளியத்தின் பலமாகவும் உள்ளது.

1980க்கு முற்பட்ட காலங்களில் இப்படி ஒரு தாழ்வுப் சிக்கலில் துவண்டு போகாமல் நாங்களும் மனிதர்கள்தான் என்கிற மான உணர்வும், மாற்று சிந்தனையும் அவர்களை சமூக நீதியை நோக்கி நகர்த்தின. 1980க்குப் பின்னர் தமிழீழமே அனைத்துக்குமான நிவாரணம் என்கிற கதையாடல்களும், தமிழ்த்தேசியமே அதற்கான மருந்து என்பது போன்ற கற்பிதங்களும் சுய மரியாதையை இழந்து சனாதன சூழ்ச்சிக்கு இரையாக்கிவிட்டன.

குறிப்பாக இலங்கையின் வட பகுதியில் இடதுசாரிக் கட்சிகளின் வளர்ச்சியும் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களும் வேளாளியத்திற்கும் அதன் சனாதனத்திற்கும் பெருஞ்சவாலாக அமைந்ததாலேயே தமிழீழப் பிரகடனம் செய்யப்பட்டது. அதற்கான காரணமாக தேடப்பட்டதுதான் தரப்படுத்தலும், சிங்களக் குடியேற்றமும்… இந்த உண்மையை 1990களுக்கு பின்னரே தனி நாட்டுக்கான போராட்ட நகர்வுகள் எனக்கு உணர்த்தின. ஆனால் சிறுபான்மை தமிழர் மகாசபை தலைவர்களும், தீண்டாமை வெகுஜன இயக்க தலைவர்களும் அன்றே புரிந்து வைத்திருந்தார்கள்….

(தொடரும்……..)