— அகரன் —
ஒரு பெண்ணை அனுமதி இன்றி தொட்டது தவறு. அதை நான் செய்திருக்கக்கூடாது. 5 வருட கடுங்காவல் தண்டணையும், ஒரு லட்சம் யூரோ அபராதமும் தண்டனையாகப் பெற்றேன். Versailles இல் இருக்கும் உயர் நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பை 40 வயதை ஒரு போதும் எட்டமுடியாத அழகான பெண் நீதிபதி வாசித்தார்.
எனக்கு இந்தத் தீர்ப்பு கிடைக்கும்! – என்று என் தரப்பில் அரசாங்கத்தால் இலவசமாக வாதாட அனுப்பிய குட்டி வெள்ளை யானை தோற்றத்தை வைத்திருந்த பிரான்ஸ்சுவா சொல்லிவிட்டார்.
எனக்கு புரியாத மொழியில் நிறைய சட்டங்களை வாசித்து தீர்ப்பை வழங்கிய நீதிபதியை நான் உண்மையில் மனதார விரும்பிவிட்டேன். அவ்வளவு அழகு.
தமிழில், ‘கொவ்வைப்பழ உதடுகள்’ என்று புலவர்கள் புளுகுவார்கள். எனக்கு அப்போது சிரிப்புதான் வரும். அதை நான் இலங்கையிலோ, அகதியான எந்த நாட்டிலுமோ காணவில்லை. அந்த இளம் நீதிபதியிடமே கண்டேன்.
என்னிடம் அவருக்கு கருணை இருந்தது தெரிந்தது. “குற்றவாளியின் சூழ்நிலையையும், குற்றம் நிகழ்ந்த சூழலையும் கருத்தில் கொண்டு ஒரு லட்சம் யூரோ தண்டப் பணத்தை நீக்குவதாக” தீர்ப்பின் முடிவை அவர் வாசித்தார்.
அப்போது நீதிபதியை கட்டி அணைக்க வேண்டும் போல் இருந்தது. தண்ட பணத்தை “ஆயுள்காலம் முழுவதிலும் நான் கட்டமாட்டேன்” என்று என் வங்கி தரவுகள் ஏற்கனவே சொல்லியிருக்கும்.
இருந்தபோதும், “என்னை அந்த நீதிபதி விரும்புகிறார்” என்று நினைத்துக்கொண்டேன். ஐந்து ஆண்டு கழிந்ததும் நாம் காதலர்களாக கூட மாறலாம்.
இப்படியான கடுமையான நிலையில் கற்பனைகளை கூராக்கி வைத்திருந்தால் மட்டுமே சிறை வாழ்க்கையை கடக்கமுடியும்.
அந்த வெட்கக்கேடான சம்பவம் பாரிசில் உள்ள pigalle என்ற இடத்தில் இரவு இரண்டு மணிக்கு நடந்தது. என்னால் பாதிக்கப்பட்ட பெண் இருபது வயதை எட்ட காத்திருந்த Mathilde. அந்த வேளையில் அவளின் தோழி catchy யும் உடன் இருந்தாள். அந்த பாதகத்தியால் அதை தடுத்திருக்க முடியும்.
அவர்கள் பெயர்களை நீதிமன்றத்தில்தான் நான் அறிந்தேன். நீதிமன்றத்தில் என் பிணக்கில் சம்பந்தப்பட்ட எல்லோரும் அழகாக இருந்தார்கள். இந்த அழகு செய்யும் வேலை, கொஞ்ச நஞ்சமில்லை.
Pigalle என்ற பகுதி இன்று நேற்றல்ல, மன்னர் காலம் தொட்டு அழகிகள் உலவும் பகுதி. விளக்கமாகச் சொன்னால் ஐரோப்பிய சொப்பனசுந்தரிகள் ஆடை துறந்து அழகை மீட்டும் அழகிகள் சந்தை அது.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்து இருந்த காலத்தில் கூட இந்திய மன்னர்கள் இங்கு வந்து சல்லாபித்திருக்கிறார்கள். ஒருபடி மேலே போய் ஐரோப்பிய அழகிகளின் போதையில் நாறிக்கிடந்ததை வரலாறு பதப்படுத்தி வைத்திருக்கிறது.
இப்படிப்பட்ட இடத்தில்தான் என் வாழ்வின் மோசமான காரியத்தை நான் செய்தேன். அதிலும் ‘பெண்கள் பாதுகாப்பில் உலகின் முதல் நாடு’ என்று எல்லாத் தரவுகளும் சொல்லும் பிரான்சில் அதைச் செய்தது, இராவணன் வீட்டில் வீணையை உடைத்த கதையாகிப்போனது.
நான் என்ன செய்ய? என் உணர்வுகள் ஆயிரம் வோல்டேஜ் மின்சாரம் தாக்கியவனின் செய் காரியமாக ஒரு நொடியில் ஏற்பட்ட ஒன்று.
என்னை, “திட்டமிட்ட கெட்டவன்” என்று நீங்கள் நினைக்க வேண்டாம். இயற்கையான உணர்வுகளை செயற்கை வாழ்வு கட்டுப்படுத்த முடியாது.
நான், சிறுவயதில் உலகின் உயர்ந்த புத்திமதிகளால் வளர்க்கப்பட்டவன். அதை அட்டவணைப்படுத்தினால் நவீன ஆத்திசூடி எழுதலாம். அந்த புத்திமதிப் புலவர் என் அம்மாதான். இரண்டு தலைப்பில் அம்மா அவற்றை பாடுவார். ஒன்று, அப்பா இல்லா பிள்ளை சரியாக வளரவில்லை என்று யாரும் சொல்லக்கூடாது. இரண்டாவது, வாழ்க்கையில் கோர்ட், பொலீஸ் ஸ்ரேசன் என்று ஒருபோதும் கால்வைக்கக்கூடாது.
இலங்கை தமிழனாக இருந்தும் என் கால்கள் அம்மாவின் கட்டளைகளுக்கு சிறு குறையும் ஏற்படாமல் பாதுகாத்தன. அதற்கு ஒரு பெரிய வாய்ப்பு இருந்தது. அப்போது எங்கள் பகுதியில் இலங்கை போலீஸ் நுழையவே முடியாது. ஏன் உலகப் போலீஸ் கூட தொடமுடியாத பாதுகாப்பில் நான் இருந்தேன்.
என்ன செய்ய? நானாக வந்து பாரிஸ் போலீசின் வாசலையும், நீதிமன்றத்தையும், எல்லாவற்றிற்கும் மேலாக உயர்ந்த நாடொன்றின் சிறையையும் என் கால்கள் தொட்டுவிட்டன. அம்மாவை எப்படி எதிர்கொள்வதென்று தெரியவில்லை.
இதற்குள் தமிழ் சினிமா எனக்கு செய்த துரோகம் ஒன்றுதான் மகிழ்ச்சியை தந்தது. நீதிமன்ற நீதிபதிகளை வயதானவர்களாக கல்லில் செய்யப்பட்ட பூசணிக்காய் போலவும், ஆண்களாகவும் மட்டுமே காட்டுவார்கள். நானும் அதை நம்பி பயந்து போயிருந்தேன்.
Versailles உயர்நீதிமன்றம் ஏதோ இயேசு கோவிலில் மாதா சிலை போல அழகி ஒருத்தியை நீதிபதியாக வைத்திருந்தது. குற்றவாளிகள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்? வெளியில் இருப்பவர்களுக்கு இந்தக் காட்சி கிடைக்குமா என்ன?
என்னை மிருகமாக மாற்றிய அந்த நிகழ்வுக்கு நீரூற்றி என் ஆசைகளை வளர்த்து, சுட்ட தேங்காய் துண்டின் வாசத்தால் பொறியில் மாட்டிய எலி போல் என்னை மாற்றியவனைப்பற்றி உங்களுக்குச் சொல்லவேண்டும். அப்படிப்பட்டவர்களிடம் அவதானமாக இருக்கவேண்டும்.
அவன் பெயர் “சஞ்சீவ்”. அவனை பாரிசின் மின்வண்டி நிலையத்தில் சந்தித்தேன். “அண்ணா நீங்கள் தமிழா?” என்றான். என் கையில் அ.மு எழுதிய ‘நாடற்றவன்’ புத்தகம் இருந்தது.
என்னை தமிழனாக அவன் தீர்மானிக்க நிறைந்த அங்க வஸ்திரங்கள் என்னிடம் இருந்தது. ஆனால் அவன் தமிழ் பேசியது எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. ஆபிரிக்கர்கள் தமிழ் பேசி நான் பார்த்ததில்லை. என்னருகே வந்து முதலில் கையை நீட்டினான். என் மூளை வலது கைக்கு தகவல் அனுப்ப மறந்த சில நொடிகளுக்கு பின்னர் கைகொடுத்தேன்.
மின்வண்டி வந்ததும் என்னோடு அருகில் வந்து அமர்ந்தான். நான் நேராகவே சொன்னேன் “தம்பி, நான் தமிழனாக இருப்பது பார்த்தால் தெரிந்துவிடும். ஆனால் நீ தமிழ் பேசியதுதான் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. உன் முடி சுருளாமல் இருப்பதால் நான் நம்புகிறேன்.”
கோபப்படுவானோ? என்ற பயம் இருந்தது. ஆனால் 32 பற்களையும் கண்காட்சிக்கு விட்டதுபோல் காதுவரை பற்கள் தெரிய வெடித்து சிரித்தான். அந்த சிரிப்பில் தான் எனக்கு வெடி வைத்தான். நாடற்றவனை மூடி வைத்துவிட்டு. மின்வண்டியின் வேகம் போல சக நாடற்றவனின் கதைகளை கேட்க ஆரம்பித்தேன்.
அவனுக்கு 28 வயது. இலங்கையில் எந்த ஊர் என்றால் ஐந்து ஊர்களை கூறினான். எல்லா இடங்களிலும் இருக்கும் பேறு 28 வயதில் அவனுக்கு வாய்த்துவிட்டது. தாயின் பெயர் இந்திரா. தந்தை காமராசு. அண்ணன் இராசீவ், தங்கை பிரியங்கா. என்றான்.
“தம்பி உங்க குடும்பம் என நேரு குடும்பமோ?” என்றேன். அவனுக்கு புரிபடவில்லை. யார் நேரு? என்றான். இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் குடும்பப் பெயர்களை சொன்னேன். அப்படியா? அப்படியா? என்று வாயை மூட மறந்துவிட்டான். எங்களோடு பயணம் செய்த ஈ ஒன்று மணிக்கூட்டு திசையில் அவன் வாய்க்குள்ளால் சத்தமிட்டவாறு கடந்தது.
இந்திய ராணுவம் யாழ்ப்பாணத்தில் சுட்டு விளையாடியதற்கு முதல் (1987) தமிழர்கள் தங்களை இந்தியர்கள் ஆகவே உணர்ந்து இருப்பதை அவன் குடும்பப் பெயர்கள் எனக்கு அறைந்து சொன்னது.
பேசிக்கொண்டே நான் என் வேலை இடம் வந்து விட்டது என்று இறங்கிய போது அவனும் இறங்கினான். “தம்பி எங்க வேலை? என்றேன். முகத்தை மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் போல் மாற்றிக் கொண்டு” அண்ண, எனக்கு விசா இல்லை. வேலையும் இல்லை. உங்களுடன் வேலை செய்யலாமா?” என்றான். நான் இலகுவில் ஏமாந்துவிடும் பேர்வழி.
ஏதோ பெரிய உதவியாளன் என்று என்னை நானே புளுகியவாறு “வாங்கோ தம்பி என்ர முதலாளியிடம் பேசிப் பார்ப்போம்.” என்றேன். அவன் நடிப்பு வேலை செய்தது. வேலை கிடைத்தது.
ஒருநாள், என்னோடு என் அறைக்கு ஒரு முறை வர விரும்புவதாக சொன்னான். அழைத்துப் போனேன். அடுத்த நாள் நான் அழைக்காமல் ஒரு சிறிய கறுத்த அரைவாசிவரை பூட்ட முடிந்த சிப் வைத்த முதுகு பையோடு என் அறைக்கு வந்தவன் இன்னும் திரும்பவில்லை.
மெதுவாக ஒரு நாள், “தம்பி இது சின்ன அறை. இன்னொரு கட்டில் போட முடியா…” என்று வசனத்தை முடிக்க முதல் “அண்ண இது காணும். எனக்கு கட்டில் கிட்டில் வேண்டாம்.” என்றுவிட்டு பதிலை எதிர்பாராமல் ஓய்வு இருக்கையில் தன் 33 முள்ளந்தண்டு சில்லுகளையும் சுருட்டி அட்டை சுருண்டுகிடப்பதுபோல படுத்து தூங்கிப்போனான்.
அவனை சந்தித்து பூமி சூரியனை சுற்றிமுடித்த ஒருநாள் அவனுக்கும் வதிவிட உரிமை கிடைத்தது. ஒரு அதிகாலையில் “அண்ண நான் வேலையை விடுகிறேன்” என்று விட்டு என் அறையில் இருந்து காணாமல் போனான்.
நான் ஊரில் பலகை அடித்தவனின் தோற்றத்தில் சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது “அண்ணா! என்று ஒரு தமிழ்ச்சத்தம் கேட்டது. திரும்பினேன். அழகிய கனவான் போன்ற தோற்றத்தில் பற்களால் வெளிச்சமிட்டுக்கொண்டு நின்றான். திடீரென தோன்றிய வால் தட்சத்திரம்போல் அவனை பார்த்துக்கொண்டிருந்தேன். காரணம் இல்லாமலில்லை. அவன் ரை (கழுத்துப்பட்டி) கட்டி இருந்தது என்னை வேகாமையின் வெப்பத்தில் நிறுத்தியது.
“என்னடா ஆளேமாறிவிட்டாய்?”
“அண்ணா ஏன் இப்படி கஷ்டப்படுகிறீர்கள்? நான் taxi ஓடுறன். அதன் பெயர் uber. அமெரிக்கனின் மூளை வேலை செய்ததால், நான் மாதம் 5000 யூரோ உழைக்கிறேன்.” என்றான்.
“என்னடா சொல்லுறாய் ?” என்று என் மூளை வாய்போல் விரிந்தது. அந்தத் தொகையைப்பெற நான் முழுமையாக மூன்று மாதங்கள் வேலை செய்ய வேண்டும்.
என்னை ஆச்சரியத்தின் உச்சியிலே வைத்திருக்க விரும்பியவன்போல தனது வாகனத்தை கொண்டுசென்று காட்டினான். அது கனவான்கள் பாவிக்கும் Mercedes-Benz. என் வாழ்நாளில் அதுவரை அப்படி ஒரு வாகனத்தை தொட்டதே கிடையாது.
“உடனடியாக உந்த வேலையைவிடுங்கள்! நான் மாதம் 5000 யூரோ உழைப்பதோடு நல்ல வாகனத்தின் உரிமையாளர் ஆக்குவேன். நீங்கள் நினைத்த நேரம் வேலைசெய்யலாம். வேலை செய்த உடனேயே உங்கள் வங்கியில் பணம் கொழுக்கும். என்றுவிட்டு தன் வங்கிக்கணக்கை கைபேசியில் திறந்தான். கைபேசி வேறு ஆதாம் சாப்பிட்ட அடையாளத்தின் நவீன வடிவமாய் இருந்தது.
அப்படித்தான் ஐந்து வருடமாக ஒருநாளும் ஓய்வெடுக்காத ‘சமையலாளன்’ பதவியை இந்தியாக்கு சுதந்திரம் கிடைத்ததுபோல நடுச்சாமம் விட்டெறிந்தேன்.
மனது, சின்ன வயதில் அம்மா சொன்ன அறிவுரையை நினைத்தது. ஒருவருக்கு சிறிய உதவி செய்தால் அது நமக்கு பல மடங்காகத் திரும்பிவரும் !
நேருவின் குடும்பத்தில் வந்த இந்திரா காந்தியின் இளைய மகனின் பெயரை வைத்திருந்த சஞ்சீவால் என் வாழ்வு வானத்தில் பறக்கப் போகிறது. என்பதை மனம் படம் போட்டபடி இருந்தது.
Infinity Q50 என்ற தரையில் பறக்கும் புட்ப விமானத்தை ஐந்து வருட கட்டணத்தில் வாங்கினேன். அனுமதிப்பத்திரம், உபர் செயலியின் அனுமதி, அதை பயன்படுத்தும் முறை என திருமணத்துக்கு தயாராகும் மாப்பிள்ளைபோல் வேகமாக எல்லாம் நடந்து முடிந்தது.
முதல் மாதம் முடிந்தபோது 5000 யூரோ என் வங்கிக்கணக்கை நிறைத்தது. இரண்டாம் மாதம் சஞ்சீவ் பொய் சொல்லவில்லை. உண்மையை மறைத்தது தெரியவந்தது. வருமான வரி, தண்டப்பணம், காப்புறுதி, என்று விபரம் தெரியாத எல்லாம் தின்றுவிட எஞ்சிய தொகை யாணையொன்று ஒட்டகச்சிவிங்கி போலானது போல வங்கி 1000 யூரோக்களை மட்டுமே காட்டியது.
ஒரு மணிநேரத்திற்கு 15€ பெற்ற என் வேலையை விட்டுவிட்டு மணிக்கு 5 யூரோவுக்கும் குறைவாக பெறும் நிலையை அந்த அமெரிக்க நிறுவனம் தந்தது. அது அழகான சுரண்டல்.
‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ அப்போது நான் படித்திருக்கவில்லை. அதனால் சூழ்ச்சிகளின் அழகை அறியாமல் இருந்தேன்.
புலம்பி என்ன செய்வது? இருக்கும் தொழிலை செய்தே ஆகவேண்டும் பல வயிறுகள் காத்திருக்கும்தானே?
Uber சாரதியாகி இரண்டாவது மாதம், மூன்றாவது சனிக்கிழமை இரவுதான் வாழ்நாளை மாற்றிய சம்பவம் நடந்தது.
அன்று அருமையான வாடிக்கையாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தேன். எவரும் வெறுப்பு காட்டவில்லை. வெறுப்பு ஊட்டவுமில்லை. அதிகமாக பெண் வாடிக்கையாளரையே uber தந்து கொண்டிருந்தது. அரிவை, தெரிவை, மங்கை, மடந்தை, பேரிளம்பெண், உதட்டு சாயங்களாலும் விலையுயர்ந்த பாரிஸ் வாசனைத் திரவியங்களாலும் சாவை விரட்டிக்கொண்டிருந்த பாட்டிகள். எனக்கும் உற்சாகம் தாங்க முடியவில்லை. பெண்களுக்கு பணிசெய்வது எவ்வளவு பேறு!
இரவு இரண்டு மணி இருக்கும் சற்று ஓய்வு எடுப்போம் என்று யோசித்தேன். அப்போது பிரபலமான sacré coeur (‘இரகசிய இதயம்’ என்ற வெண்தேவாலயம்) அருகில் நின்றேன். “இல்லை இன்னும் ஒரு சவாரியை அனுமதித்து விட்டு ஓய்வு எடுப்போம்.” என மனம் ஆசைவீசியது. அப்படித்தான் தவறான சவாரிக்கு அனுமதி அளித்தேன்.
புவிப் பாதை காட்டி(gps) தானாக இயங்கி வழிகாட்டியது. என் Infinity Q50 தனக்கே உரிய மிடுக்கோடு சென்று நின்ற இடம் pigalle.
என் வாடிக்கையாளருக்காக காத்திருந்தேன். காத்திருத்தலின் நேரம் முடிந்த பின்னரும் யாரும் வரவில்லை. வாடிக்கையாளரின் இலக்கத்தை uber தந்தது. அதை அந்த நிறுவனம் அழகுறச்செய்தது.
அழைப்பெடுத்தேன். காதருகே கன்னிக்குரல் போதையை நிறைத்த பிரஞ்சு மொழியில் j’arrive.. J’arrive.. (வருகிறேன்.. வருகிறேன்..) என்றுவிட்டு, பிரபலமான வசவு வார்த்தையையும் இலவசமாக தந்தது. அது, sa.. Lo.. Pe..(சலோப்) (எல்லோரோடும் படுப்பவன்). எனக்கு வாழ்வில் கிடைத்த இளம் வசவு. அதை வைத்துக்கொண்டு காத்திருந்தேன். உடலின் மெல்லிய பகுதிகளில் வியர்வை உருவானது.
வீதி விளக்கின் ஒளியில் இளம் வெண்ணிறப் பெண்கள் இருவர், பிறந்த மாட்டுக்கன்று எழுந்திருக்க முயன்றதுபோல் கடும் முயற்சியால் வந்தடைந்தார்ககள். இரண்டு பகுதிகளை மட்டும் உலோபி போல மறைத்திருந்தனர். அதனால் அவர்கள் எல்லாவற்றிலும் வள்ளல் தன்மையோடு இருந்தனர்.
கணக்கு வாத்தியாருக்கு வாய்ப்பாடு சொன்னதுபோல என் வண்டி(கார்) இலக்கத்தை சொன்னார்கள். “Dx714kv.”
இறங்கி, கதவை திறந்து வரவேற்றேன். வலதுபக்கம் ஏறியவள் கட்டிலில் தூக்கத்துக்கு சென்றதுபோல் விழுந்து நுழைந்தாள். இடதுபக்கம் ஏற முயன்றவள் (maththilde) தனது காலைதூக்க முடியாமல், வலது கைவைத்திருந்த beer குவளையை ஏதோ வைரம் சிந்தாமல் காப்பதுபோல் காத்தவாறு காற்றில் பல கெட்டவார்த்தைகளை பாடினாள். அவளை உள்ளே கொண்டு சென்று சேர்ப்பதற்கு பத்து நிமிடங்கள் தேவைப்பட்டது.
இருவருமே இந்த பூமியில் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. ஏலியன்களோடு இதற்கு முன்னர் நான் பேசிய அனுபவம் இல்லை. பழுதான பழைய ஒலிநாடா போல வசவு வார்த்தைகளால் Infinity Q50 நிறைந்தது.
பட்டியை கொழுவுமாறு கூறினேன். அவர்கள் கண்டுகொள்ளவில்லை. நீங்கள் பட்டியை கொழுவினால் மட்டுமே புறப்படலாம். என்ற போது, கையில் பீர் வைத்திருந்தவள் கேட்டாள் “வீடு வந்து விட்டதா எருமையனே?” எருமையன் என்பதுகூட உண்மையாய் இருக்கலாம். புறப்படமுதல் வீடு வந்துவிட்டதா? என்பதை தாங்க முடியவில்லை. இரவு இரண்டு மணிக்கு கழுத்துப்பட்டியோடு வேலைசெய்யும் கனவானுக்கு ஏற்பட்ட நிலை அது.
மெதுவாக அவர்களை தொடாமல் பட்டியை இழுத்து கொழுவினேன். டிக்..டிக்.. அவர்கள் சுவாசம் என் மூக்கில் எரிந்துகொண்டு நுழைந்தது. அந்த நாற்றம் கற்பூரமல்ல, கமலப்பூவல்ல, கூவம் ஆறு!
“O.. La.. La.. நீ என்ன செய்துவிட்டாய்?” என்றேன்.
“மூளையற்றவனே! நான் வாந்தி எடுத்துவிட்டேன்” என்றாள். இந்த வார்த்தைக்கு விழா எடுப்பவள்போல மற்றவள் சிரித்தாள்.
இத்தகைய நிலையிலும் பிளாஸ்ரிக்கு வளையில் வைத்திருந்த பீரை அவள் சிந்தவில்லை.
“கார் யன்னலை திற நான் இனிவெளியே வாந்தி எடுக்க முயல்கிறேன்” என்றாள்.
நான், காரை நிறுத்திவிட்டு “நீங்கள் வெளியே சென்று வாந்தி எடுத்துவிட்டுவாருங்கள். நான் காத்திருக்கிறேன்” என்றேன்.
“பெரிய வேசைக்காரனே! நீ முதல்காரை ஓட்டு!” என்னைப்பற்றி அவ்வளவு அறிந்து வைத்திருக்கிறாள்!
நான் பண்பாக, “இளம் பெண்ணே, அது என்னால் முடியாது!” என்றேன்.
தன் கையில் எந்த நிலையிலும் சிந்தாமல் காத்து வைத்திருந்த பீரால், பசுவில் பால் கறப்பதற்குமுன் முலைகளை கழுவ நீரை பீச்சி அடிப்பதுபோல அவள் வாந்தி வடிந்துகொண்டிருந்த என் முகத்தில் அடித்தாள்.
என்னில் 1000w மின்சாரம் பாய்ந்தது. காரை விட்டு இறங்கி அவள் கரங்களை பிடித்து இழுத்து வெளியேற்றினேன். அவள் என்னை வசவு வார்த்தைகளோடு நெருங்கினாள். ஒரு கையால் தள்ளினேன் பாதையின் மறுபக்கம் சென்று விழுந்தாள். என்னிடம் கொடிய விலங்கின் சுவாசம் வெளிப்பட்டது. அது மின்னல் வந்துபோன நேரத்தில் நடந்துமுடிந்தது.
வீதியின் ஒதுக்கும்புறம் வெளிச்சத்தை அணைத்துவிட்டு இருந்த பிரஞ்சுப் போலீசார் நான்குபேர் என்னை நெருங்கினர்.
தீர்ப்பு வழங்கப்பட்டதும், எல்லோரும் சென்றுவிட, போலீசின் அனுமதியைப்பெற்று Mathilde இன் பெற்றோர் என்னிடம் வந்தனர். கயல்மீனின் முட்கள் போல முதுமையின் முகச்சுருக்கங்களை வைத்திருந்த அவர்கள் கூறிய வார்த்தை, மேன்மக்கள் வார்த்தை. தண்டனையின் வெப்பம் பனிக்கட்டியாகி இதயத்தில் இறங்கியது.