— என்.செல்வராஜா, நூலகவியலாளர் —
தமிழகத்தின் பிரபல கட்டடக் கலைஞர் வி.நரசிம்மனின் வரைபடத்தை அடியொற்றி 1954இல் கட்டமைக்கப்பட்ட யாழ்ப்பாணப் பொதுநூலகம் ‘எச்’ வடிவ வெளித்தோற்றத்தில் தரைத் தளத்தையும், முதலாம் மாடியையும், உச்சியில் ஒரு சிறு குவிமாடத்தையும் கொண்டிருப்பதாகத் தோற்றினாலும், அக்கட்டிடத்தின் உள்ளே இரண்டு தளங்களுக்கு மிடையில் ‘இடைத்தளம்’ ஒன்றையும் கொண்டுள்ளது. இவ்விடைத்தளம் முன்னர் கேட்போர் கூடமாகவும் (பொது மண்டபம்) பின்னர் சுவடிகள் காப்பகப் பிரிவாகவும் பயன்படுத்தப்பட்டு இப்பொழுது மறை அலுவலகப் பிரிவாக (back office) ஆவணங்களின் பகுப்பாக்கம், பட்டியலாக்கம், மட்டைகட்டல், போன்ற அடிப்படைச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் சுறுசுறுப்பான இடமாகவும் அதில் ஒரு பகுதி புதிய/ பழைய நூல்களினதும் பிற ஆவணங்களினதும் பண்டக வைப்பறை (store)யாகவும் பயன்படுத்தப்படுகின்றது.
மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடத் தோற்றம் சிக்கலற்றது. தரைத்தளம், முதலாம் தளம், இரண்டாம் தளம் என மூன்று தளங்களைக் கொண்டுள்ளது.
யாழ்ப்பாணப் பொது நூலகத்தை போலவே இதுவும் எச் வடிவக் கட்டிடமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் யாழ்ப்பாணப் பொது நூலகத்தை விட ஒரு மாடித்தளம் அதிகமாக உள்ளது. இதனால் இக்கட்டிடப் பணிகள் நிறைவெய்தியதும் இலங்கையின் பொது நூலகங்களில் விஸ்தாரமான நூலகங்களின் பட்டியலில் இது முக்கிய இடத்தினை வகிக்கக்கூடும். நிச்சயமாக மட்டக்களப்பில் ஒரு குறியீட்டுக் கட்டிடமாக கம்பீரமாக எழுந்து நிற்கும் என்று நம்பலாம்.
இத்தகைய பின்புலத்தில் பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டு வரும் இந்த அறிவாலயத்தின் பெருமையை உலகறியச் செய்ய அதன் வெளிக்கட்டமைப்பு மட்டுமல்ல, அதன் உட்கட்டுமானமும், அந்நூலகம் உள்ளடக்கப்போகும் பெறுமதிமிக்க நூற்றொகையின் அருமையும், பெருமையும், எண்ணிக்கையும், அது சமூகத்திற்கு வழங்கவிருக்கும் சேவையின் விசாலிப்பும், அதன் பயன்பாடுமே கணக்கெடுக்கப்படும் என்பதை நாமனைவரும் மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.
மட்டக்களப்புப் பொது நூலகத்தின் ஒவ்வொரு தளத்திலும் இயங்கக்கூடிய பிரிவுகளை இனித் தொடர்ந்து அவதானிப்போம்.
ஒவ்வொரு தளமும் ஆங்கில எழுத்தான எச் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தரைத்தளத்தில் கட்டிடத்தினுள் ஒருவர் நுழைந்ததும் அவரை எதிர்கொள்வது பாரிய வரவேற்பறையாகும். வரவேற்பாளரின் மேசை பெரும்பாலும் கட்டிடத்தின் மத்தியில் வளைய உருவில் காணப்படும்.
அந்த வரவேற்பறையின் பயன்பாடு பற்றி இத்தொடரின் 3ஆவது பகுதியில் காட்சிக்கூடம் என்ற பிரிவில் சிறிதளவு விளக்கியிருந்தேன். பின்னர் விரிவாக மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இப்பகுதி பற்றி மீண்டும் கவனத்தைக் குவிக்கலாம்.
வரவேற்பறையின் வலது புறம் இரவல் வழங்கும் பிரிவும், இடது புறம் பத்திரிகை/ சஞ்சிகை வாசிப்பறையும் இருக்கும். இவை பற்றி தனித்தனியாக பிறிதொரு பாகத்தில் விபரிக்கின்றேன்.
வரவேற்பறையைக் கடந்து தொடர்ந்து முன்நோக்கிச் சென்றால் வரும் நடைபாதையின் (கொரிடோர்) வலது புறம் கழிவறைத் தொகுதிக்கான பாதையும், இடது புறம் மாடிப் படிக்கட்டுகளுக்கானதும் இயங்கு ஏணித் தொகுதிக்கானதுமான (lift) பகுதியும் அமைந்திருக்கும். மூன்று தளங்களிலும் இதே ஒழுங்கில் தான் இவ்விரு சேவைப்பகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
கழிவறைத்தொகுதி
மட்டக்களப்புப் பொது நூலகத்தை திட்டமிட்ட கட்டடத்துறை அறிஞர்கள் நூலகத்தின் மூன்று மாடியிலும் கழிவறைத் தொகுதிகளை அமைக்கத் தீர்மானித்துள்ளமை வரவேற்கத் தக்கதும் பயனீட்டாளர் வசதிக்கு முக்கியத்துவம் வழங்கியிருக்கின்றதுமான விடயமாகும்.
கழிவறை வசதி என்பது இலங்கையின் பொதுமக்களுக்கான சேவைப் பரப்பில் கவனிக்கப்படாத ஒரு பக்கமாகும். கவனிக்கப்படாத பக்கம் என்பதைவிட நிர்வாகத்தினரால் உதாசீனப்படுத்தப்பட்ட ஒரு சேவைப் பரப்பாகும்.
இன்று இலங்கையின் சனத்தொகையில் 8.5 சதவீதத்தினர் நீரிழிவு நோயாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக (International Diabetes Federation (IDF) வெளியிட்டுள்ள அண்மைக்கால அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது. (The IDF has estimated that 6.8–10.8% of the adult population is suffering from DM in the South-East Asian countries. The prevalence of DM in Sri Lanka, a developing South Asian country, was 7.9% in 2016). இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஒவ்வொரு 12 பேரிலும் ஒருவர் நீரிழிவுநோயின் தாக்கத்துக்குள்ளானவராக இருப்பதாகவே இவ்வறிக்கை குறிப்பிடுகின்றது. இந்த நிலைமை பரவலாகக் காணப்படுகின்ற போதிலும், அவர்களுக்கான இயற்கை உபாதைகளுக்கான தீர்வு பற்றி மாநகர சபை நிர்வாகமோ, மத்திய அரசோ கவனிப்பதில்லை.
குறிப்பாக எமது நூலகங்களின் பொதுக் கழிப்பிடங்கள் உரிய பராமரிப்பின்றியும், பாதுகாப்பின்றியும், சுகாதாரச் சீர்கேடுகள் மலிந்ததாயும் காணப்படுவதை நாம் அன்றாடம் கண்டு வருகின்றோம். பொது நிர்வாக அலுவலகங்களைப் போன்று சில பொது நூலகங்களில் ஊழியர்களின் தேவைக்கு மாத்திரம் கழிப்பறைகளைப் பராமரித்து வருகின்ற நிலைமையும் காணப்படுகின்றது. நூலகங்களின் கழிவறைப் பராமரிப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களில் பலர் தமக்குரிய பணிகளில் ஈடுபடாமல் நூலக சிற்றூழியர்களாக பணியாற்றி வருவதையும் கழிவறைகள் பயன்படுத்தப்படாமல் பூட்டுப்போட்டு மூடப்பட்டிருப்பதையும் சில நூலகங்களில் காணக்கூடியதாக உள்ளது.
பொது நூலகங்களின் கழிப்பறைப் பயன்பாடு பற்றி ஒருவர் கள ஆய்வு செய்ய முன்வந்தால் அவருக்கு இங்கு குறிப்பிட்டுள்ளதை விடவும் அதிர்ச்சியும், அதிசயமும் தரும் பல செய்திகளை எதிர்கொள்ளவேண்டி வரலாம்.
அந்தவகையில் மட்டக்களப்புப் பொது நூலகத்தின் மூன்று தளங்களிலும் விஸ்தாரமான கழிவறைத் தொகுதிகள் திட்டமிடப்பட்டுள்ளமை போற்றுதற்குரிய செயற்பாடாகும்.
எதிர்காலத்தில் கட்டிடத்தின் பணிகள் பூர்த்தியாக்கப்பட்டு சேவைப் பகுதிகளை தீர்மானிக்கும் வேளையில் கழிவறைத் தொகுதிகளை பாவனைக்கு ஒதுக்கும் வேளை தரைத்தளத்தில் உள்ள கழிவறைத் தொகுதியை மாற்றுத் திறனாளிகளுக்கும் சிறப்புத் தேவையுடைவர்களுக்கும், முதியோருக்குமான கழிவறைத் தொகுதியாக உரிய சுகாதார விதிமுறைகளைக் கவனத்திற்கெடுத்து வடிவமைக்கலாம். இதற்கு உகந்ததாகவே தரைத்தளத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான நூலகப் பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளமையும் அவதானிக்க முடிகின்றது.
பொது நூலகத்தின் நுழைவாயிலினூடாக வரவேற்பு மண்டபத்தினுள் நுழைந்ததும் குறுகிய தூர நடைப்பயணத்திலேயே மாற்றுத் திறனாளிகளுக்கான நூலகப் பிரிவை (Disabled Study) சென்றடையக்கூடியதாக உள்ளது. தரைத்தளத்தில் சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் இயற்கை உபாதைகளின்போது எளிதாக தரைத்தளத்திலுள்ள கழிவறைப் பகுதிக்குள் நுழையக்கூடிய வகையில் சாய்பாதைகளும், கைப்பிடிகளும் பொருத்தப்படவேண்டும். மாற்றுத்திறனாளிகள், சிறப்புத் தேவையுடையோருக்கான கழிப்பறைகளை உருவாக்குவதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கவும், அவ்வறைகளில் பொருத்துவதற்கான சிறப்பு கட்டுமானம் மற்றும் பொருத்து பொருட்களுக்கான (Fictures) விநியோகத்தர்கள் பற்றிய தகவல்களை பெறவும், சமூக நல நிறுவனங்கள், சுகாதாரத் திணைக்களம், பல்கலைக்கழக சமூக மருத்துவ பீடங்களின் வெளியீடுகளையும் அறிவார்ந்த துறைசார் ஆலோசனைகளையும் பெற்றுப் பயன்படுத்தலாம்.
அவ்வாறே முதலாம் தளத்திலுள்ள கழிவறைத் தொகுதியை பெண்களுக்கும், இரண்டாம் தளத்திலுள்ள கழிவறைத் தொகுதியை ஆண்களுக்கும் என வடிவமைப்பது பொருத்தமானதாகும். இதனால் பல்வேறு அவசியமற்ற சமூகவியல், உளவியல், மற்றும் ஒழுக்கவியல் பிரச்சினைகளை நூலக வளாகத்தில் தவிர்த்துக்கொள்ளமுடியும்.
கழிவறைகளை உரிய முறையில் பேணும் வகையில் ஒவ்வொரு கழிவறையினுள்ளும் துடைப்பங்கள், துப்பரவாக்கும் உபகரணங்கள், கைதுடைப்பான்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான கையுறைகள், அவர்களுக்கான தொழில்சார் மேலாடைகள் வைப்பதற்கான தட்டுகள் என்பனவற்றுடன் கூடிய சிறிய பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகப் பிரிவு
வரவேற்பு மண்டபத்தினைக் கடந்ததும் வரும் நடைபாதையை ஊடறுத்துச் சென்றால் மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகப் பிரிவு காணப்படுகின்றது. அத்தளத்திலேயே நூலகருக்கான அறையும் அவ்வறையை ஒட்டியதாக பகுப்பாக்க/ பட்டியலாக்கப் பிரிவும் திட்டமிடப்பட்டுள்ளதை அறியமுடிகின்றது.
பொதுவாக நூலகருக்கான அறையை ஒட்டியே பகுப்பாக்கப் பிரிவும், பட்டியலாக்கப் பிரிவும், மட்டைகட்டல் பிரிவும், நூலக நிர்வாகப் பிரிவும் இடம்பெறுவது வழமையாகும். இப்பிரிவுகள் எவையும் தனித்தனி அறைகளாகவன்றி, நூலகரின் அறைக்கு அணித்தாக திறந்த வெளி அலுவலகமாக இருப்பதே நூலக நிர்வாக முறையில் பொருத்தமானதாகும்.
இப்பிரிவிலேயே நூலகத்திற்கான பண்டகசாலை அறைக்கான storage வசதிகளும் காணப்படுவதுண்டு. நூலகருக்கான அறையையொட்டியே cctv பாதுகாப்பு அறையும் இடம்பெறுவதுண்டு. இவை இரண்டும் நூலகரின் நேரடி கண்காணிப்பில் இருக்கவேண்டிய தனி அறைப் பிரிவுகளாகும். எனவே மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகப் பிரிவின் ஒரு சிறு பகுதியில் இப்பெரும் சேவைப் பரப்பிற்கான இடத்தை ஒதுக்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் பின்னாளில் ஏற்படும். இவ்விடயத்தில் நூலகத் திட்டமிடல் அதிகாரிகள் மீளவும் சிந்திப்பது விரும்பத்தக்கது.
புதிய நூலகக் கட்டிடத்தின் முதலாம் தளத்தின் பின்பகுதித் தளத்தில் ஒதுக்கப்படவுள்ள மாணவர் வாசிப்பறையையும் மின்- நூலகத்திற்கென ஒதுக்கப்பட்ட நடுவறையையும், மேற்கூறிய நூலகருக்கும், நூலக back office நிர்வாகத்தினருக்கும் உரிய அலகுக்கு ஒதுக்குவதே பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றேன். அதே தளத்தில் இடது பக்க முனையங்களில் ஏற்கெனவே கட்புல செவிப்புல சாதனப்பிரிவு, cctv அவதானிப்புப் பிரிவு, வீடியோ கருத்தரங்க கூடம், சேர்வர் அறை (server room) ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளதால், நூலகரினதும் அவரது தொழில்நுட்ப செயலணியினரையும் நகர்த்துவது எளிதாகவிருக்கும்.
இவ்விட அமைவு முன்னையதை விட நூலகரது கண்காணிப்புக்கும், தொடர்பாடலுக்கும் வசதியாக இருக்கும். முதற்தளத்தில் சுவடிகள் காப்பகத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள முன்னரங்கப் பகுதியின் இடது பக்க மூலையில் உள்ள மட்டை கட்டல் பிரிவையும் நூலக நிர்வாகப் பிரிவுக்குள் கொண்டு செல்வதன் மூலம், அப்பிரிவில் திட்டமிடப்பட்டுள்ள பண்டகசாலை அறையை (store), சுவடிப் பிரிவின் மிகவும் பாதுகாப்பான (closed accessed Secured Archives) அரும்பாவனைப் பிரிவாக இயங்கவைக்கலாம். இந்த முனையம் 24 மணிநேர குளிரூட்டல் வசதியுடன் பேணப்படல் வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகப் பிரிவின் Disabled Study) நுழைவாயில் மாற்றுத்திறனாளிகள் தமது சக்கர வண்டிகளிலிருந்தபடியே நூலகத்துக்குள் உட்செல்ல, சற்றே சாய்வான நிலத்தளம் கொண்ட சாய்வளைவு வசதிகள் கொண்டதாகவும், செறிவற்றதும் தெளிவாக அடையாளப்படுத்தக்கூடியதுமான தளபாடங்களைக் கொண்டதாகவும் அமைக்கப்படுதல் அவசியமாகும். இப்பாதை வசதி பொது நூலகத்தின் லிப்ட் பகுதி, வாசிகசாலைப்பகுதி, சிறுவர்பகுதி, இரவல் வழங்கும் பகுதி, கேட்போர்கூடம் ஆகிய பகுதிகளுக்கும் விரிவாக்கப்படுவதும் வரவேற்கத்தக்கது. மாற்றுத்திறனாளிகளுக்கான சுதந்திரமானதும் பாதுகாப்பானதுமான உள்ளக நடமாட்டத்தை எளிதாக்கும் வகையில் இச்சேவைப் பிரிவில் பெரும்பாலும் ஒரேஞ் வண்ணங்களிலான கோடுகள் பயன்படுத்தப்பட வேண்டியிருக்கும்.
விழிப்புலன் இழந்தோருக்கான பகுதி
மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகப் பிரிவின் ஒரு பகுதி விழிப்புலன் இழந்தோருக்கான பகுதியாக ஒதுக்கப்பட்டு, அதன் சுவர்களை ஒலிக்கட்டுப்பாட்டுடனான கட்டிடப் பொருட்களின் உதவியுடன் வடிவமைக்கவேண்டும். வெறும் கண்ணாடித் தடுப்புகள் திருப்திகரமான பயனைத் தரமாட்டாது. ஒரு பொது நுலக சேவையில் பொதுவான மாற்றுத் திறனாளிகளிலிருந்து விழிப்புலன் இழந்தோரை (Visually impired) வேறுபடுத்துவதன் முக்கிய நோக்கம் அவர்கள் பெரும்பாலும் ஒலி நூல்களையும் (audio books) கணினியின் விழிப்புலன் இழந்தோருக்கான நிகழ்ச்சிகளையும், கனதியான பிரெய்ல் நூல்களையும் பயன்படுத்தவேண்டியவர்களாக இருப்பார்கள் என்பதாகும். அவர்கள் ஒலிவடிவிலான நூல்களை பயன்படுத்தும்போது, மற்றைய மாற்றுத்திறனாளிகளின் வாசிப்பில் குறுக்கீடுகள் ஏற்படுவதைத் தவிர்க்க விழிப்புலன் இழந்தோருக்கான சிறப்பு சாதனங்களுடன் அவர்களுக்கான தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட கூம்பகங்களை (Cubicle) அல்லது அறைகளை அவர்களுக்கான பிரெய்ல் நூல் சேர்க்கைப் பகுதியுடன் தனியாக வழங்குவது வரவேற்கத்தக்கதாகும்.