கொடுத்ததை பறிக்கும் மத்தியும், பாராமுகமாக இருக்கும் தமிழ் தலைமைகளும்

கொடுத்ததை பறிக்கும் மத்தியும், பாராமுகமாக இருக்கும் தமிழ் தலைமைகளும்

 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — 

“புத்திமான் பலவான்” என்று சொல்வார்கள். அதைத் தொடர்ந்தும் சிங்களத்தரப்பு நிரூபித்துக் கொண்டிருக்கிறது. அவர்களுடைய இந்தப் புத்திபூர்வமான நடவடிக்கையில் இப்பொழுது வட மாகாணசபையின் கீழுள்ள முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய நான்கு மாவட்ட மருத்துவமனைகளும் மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லப்படவுள்ளன. இதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தை அவர்கள் எடுத்துள்ளனர். இதற்கான ஆதரவை அமைச்சர் டக்ளஸ்தேவானந்தாவும் வழங்கியிருக்கிறார். அதாவது “மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் சுயாட்சி” என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஈழமக்கள் ஜனநாயக் கட்சி (EPDP) எந்த அடிப்படையில் மாகாணத்தில் சுயாட்சியைக் கோருகிறது? 

இது ஒரு புறமிருக்க, கடந்த 14.06.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மருத்துவமனைகளோடு தென்பகுதிகளில் உள்ள சில மருத்துவமனைகளும் உள்ளெடுக்கப்பட்டிருக்கின்றன. தனியே வட மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளை மத்தியின் கீழ் உள்ளீர்த்தால் அது சர்ச்சைக்குரியதாகிவிடும். குறிப்பாக மாகாணசபையின் தாயாகிய இந்தியா இதையிட்டு முகம் சுழிக்கலாம் என்பதால் இது நாடு தழுவிய திட்டம் என்று காட்டுவதற்காக அவற்றையும் சேர்த்து உள்ளெடுக்கப்பட்டுள்ளது. 

இதற்குச் சொல்லப்பட்ட காரணம், சிரிப்புக்குரியது. மாவட்டத்துக்கு ஒரு மருத்துவமனையை அனைத்து வசதிகளோடும் இயங்க வைப்பதற்கான திட்டம் இது என்று இதற்கு விளக்கம் கூறப்படுகிறது. இந்தக் காரணத்தை எப்படி ஏற்றுக் கொள்வது? எப்படிப் புரிந்து கொள்வது? 

வேண்டுமென்றால், இதேவிதமாக இந்த மாவட்ட மருத்துவமனைகளை மாகாணசபைகளுக்கூடாகப் பலப்படுத்தி வளமாக்கியிருக்கலாம் அல்லவா! அதுவே சரி. ஏனென்றால் மாகாண சபைக்குரிய நிதியை வழங்குவதே மத்திய அரசுதானே. ஆகவே அது அதற்கான நிதியை அளித்து நடைமுறைப்படுத்தியிருக்கலாம். ஆனால் அரசாங்கம் அதைச் செய்யவில்லை. அப்படிச் செய்யப்போவதுமில்லை. இதற்கு மத்திய அரசாங்கம் மட்டும் பொறுப்பில்லை. மாகாணசபையின் சீரழிவும் மாகாண நிர்வாகத்தின் பலவீனமும் ஒரு காரணமாகும். 

அதாவது அரசாங்கத்தின் அதிகாரப் பறிப்பு என்ற உள் நோக்கத்துக்கு மாகாண நிர்வாகம் தாராளமான வாய்ப்புகளை வழங்கியுள்ளது. அந்தளவுக்கு மாகாண நிர்வாகம் மிகக் கேவலமான முறையில் பலவீனப்பட்டுள்ளது. திட்டமிடற் குறைபாடுகள், ஆளணி முகாமைத்துவக் குறைபாடுகள், அதன் விளைவாகத் தொடரும் பிரச்சினைகள், பாராட்சமான நடவடிக்கைகள், ஒரே ஆட்களே 20 ஆண்டுகள் வரையில் ஒரு சுழற்சிக்குள் நின்று பொறுப்பான பதவிகளில் (செயலாளர்களாகவும் பணிப்பாளர்களாகவும்) அதிகாரம் செய்வது என்று ஏராளம் தவறான நிலைமைகள் மத்திய அரசுக்குப் பெரிய வாய்ப்புகளை அளித்துள்ளன. 

இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தியே கடந்த மாதங்களில் மாகாணசபையின் கீழுள்ள பல பாடசாலைகளும் மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லப்பட்டுள்ளன. வடக்கில் மட்டும் இவ்வாறு 34 பாடசாலைகள் மத்தியின் கீழ் சென்றுள்ளன. இதற்கு ஆரம்பத்தில் சொல்லப்பட்ட காரணம், பிரதேசத்துக்கு ஒரு பாடசாலையை வளப்படுத்துவதற்கு தெரிவு செய்யுங்கள் என்று. இந்த வாக்குறுதியை நம்பி (புத்திசாலித்தனமான தந்திரோபயத்தைப் புரிந்து கொள்ளாமல்) பாடசாலைகளைத் தெரிவு செய்து மாகாண நிர்வாகம் அனுப்பி வைத்தது. இதைக் குறித்து தமிழ் அரசியற் கட்சிகளோ, அரசியல்வாதிகளோ சிந்திக்கவே இல்லை. இறுதியில் அடையாளப்படுத்தப்பட்ட பாடசாலைகள் தேசியப்பாடசாலைகள் என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வந்தபோதே நிலைமை என்ன என்று தெரியவந்தது. அதைக்கூட அரசாங்கம் மிகத் தந்திரோபாயமாக – மிக நுட்பமாகச் செயற்படுத்தி வருகிறது. 

எப்படியென்றால் இந்தப் பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாகவே அடையாளப்படுத்தப்படும். ஆனால் முந்திய தேசியப் பாடசாலைகளைப் போலன்றி, இவற்றின் ஆளணி இடமாற்றங்கள் மாகாணக் கல்வி அமைச்சின் கீழிருக்கும். ஏனைய வளங்கள், நடவடிக்கைகள் அனைத்தும் மத்தியின் கீழ். அதாவது நாடு முழுவதிலுமுள்ள “மகிந்தோதய” ஆய்வு கூடங்களுக்கு ஒரே மாதிரித்தன்மை (comon model) எப்படி உள்ளதோ அதை ஒத்த தன்மை இந்தப் பாடசாலைகளுக்கிடையில் பேணப்படும் என. இதற்கு சொல்லப்பட்ட விளக்கம் என்னவென்று தெரியுமா? நீங்கள் இப்பொழுது ஏதாவதொரு கார்கில் ஃபூட் சிற்றிக்குள் போனாலும் அவை எல்லாவற்றினதும் உள் அமைப்பு மற்றும் தொழிற்பாடுகள் ஒரே மாதிரி இருக்கும் அல்லவா. அதைப்போன்றதொரு ஒத்த நிலையினை (Generality) இந்தப் பாடசாலைகள் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தைக் குறித்து பலரும் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிகிறது. இதில் ஒன்றை நாம் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த ஆளணியை நிரப்புதல் என்பதை மட்டும் நம்பிக்  கொண்டு – “நமக்குப் பாதி அதிகாரம் மீதியாக உள்ளது. அது போதும்” என்று மாகாணத்தினர் இப்போதிருப்பர். காலப்போக்கில் அதையும் ஏனைய தேசியப் பாடசாலைகளின் நடைமுறையைப்போல இசுருபாயவே (தெற்கே) நடைமுறைப்படுத்தும். அது நடந்தே தீரும். என்பதால்தான் இதை ஒரு புத்திபூர்வமான நடவடிக்கையாக சிங்களத்தரப்பு – அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது என்கிறேன்.  

இப்போது எப்படியோ வடக்கிலும் கிழக்கிலுமாக ஐம்பதுக்கு மேற்பட்டசாலைகள் மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டு செல்லப்பட்டாயிற்று. இது “தோலிருக்க சுளையைப் பிடுங்கும்” செயலாகும். 

ஏற்கனவே மாகாணத்திற்குரிய அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏராளம் முட்டுப்பாடுகள். தவிர, காணி, பொலிஸ் அதிகாரம் வேண்டும் என்ற கோரிக்கைகள் இன்னொரு புறமான கோரிக்கை. இந்த நிலையில் இருக்கின்ற அரை குறை அதிகாரங்களும் பறி போகின்றன என்றால்…? 

இதற்கெல்லாம் அப்பால் தொல்பொருள் மையங்கள் என்ற அடையாளப்படுத்தல்களின் வழியாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல ஏக்கர் காணிகளை – சில பிரதேசங்களை – மத்தி தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகிறது. பலத்த எதிர்ப்புகளின் மத்தியிலேயே இதை அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. நாட்டிலே செய்ய வேண்டிய விடயங்கள் ஏராளமாக உண்டு. அவசரப்பணிகள் நிறைய உள்ளன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு இதற்கு நிதி ஒதுக்கி, ஆளணியைப் பிரயோகித்து, அரசியல் சிக்கலுக்குரிய விடயமாக்கி இதைச் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இதைக்குறித்து அரசாங்கத்தோடு இணைந்து நிற்கும் வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ், முஸ்லிம் தலைவர்கள், கட்சிகளின் நிலைப்பாடென்ன? 

இதெல்லாம் அதிகாரங்களைப் பகிர்வதற்குப் பதிலாக அதிகாரங்களைக் குறைத்து மத்தியில் குவிக்கும் முயற்சிகள் அல்லவா? அதாவது அதிகாரங்களைப் பரவலாக்குவதே உலக நடைமுறை. இலங்கையின் இனமுரண்பாடே அதிகாரப் பரவலாக்கம் இல்லை என்பதிலிருந்தே உருவாகியது. இந்த அதிகாரப் பரவலாக்கல் இழுபறியே பிணக்கு முற்றுவதற்கான காரணமாகத் தொடர்கிறது. இதனால்தான் 1987இல் இந்தியா தலையீட்டைச் செய்து மாகாணசபை முறைமை என்ற அதிகாரப் பரவலாக்கல் முறை வந்தது. இப்பொழுது அதை இல்லாமல் செய்வது என்பது அல்லது அதைப் பலவீனப்படுத்துவதென்பது வரலாற்றில் பின்னோக்கிச் செல்லல் என்றல்லவா அமையும்? இது இலங்கையை எங்கே கொண்டு போய் விடப் போகிறது? 

இந்த மாதிரியான ஒரு தந்திரோபாயத்தை முந்திய நல்லாட்சி (ரணில் – மைத்திரி) அரசாங்கமும் செய்தது. உள்ளுராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மட்டுப்படுத்தி அவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டையும் வேலைத்திட்டங்களையும் விசேட செயற்றிட்டம் ஒன்றாக மாற்றி மாவட்டச் செயலகங்களுக்கூடாக மத்திய அரசாங்கம் செய்தது. கிராமிய அபிவிருத்தி என்ற போர்வையில் இது செயற்படுத்தப்பட்டது. இதைப்போல மாகாண சபைகளுக்கான நிதி ஒதுக்கீட்டையும் வேலைத்திட்டங்களையும் கூட மாவட்டச் செயலங்களின் வழியாக ரணில்– மைத்திரி அரசாங்கம் செய்தது. குறிப்பாக அந்தத் திட்டத்தில் பல பாடசாலைக் கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டன என்பதை இங்கே சுட்டிக் காட்ட முடியும். அதை அப்போது அரசாங்கத்துடன் பங்காளி நிலையிலிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் போன்றவை கண்டும் காணாதிருந்தன. ஏனென்றால் அது அவர்கள் விரும்புகின்ற அரசாங்கம் அல்லவா. 

ஆகவே இவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் அதிகாரப் பரவலாக்கத்துக்கும் மாகாணசபை முறைமைக்கும் எதிரானவர்களே. தேர்தல் அரசியலுக்காக அப்படி இப்படிக் கதைப்பார்களே தவிர, அடிப்படையில் அதிகாரப் பகிர்வு, பரவலாக்கம், மக்கள் நலன், ஒடுக்கப்பட்டோர் உரிமை போன்றவற்றில் கரிசனையற்றோரே. இல்லை என்றால் இந்த மருத்துவமனைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு வரும் திட்டத்தையே இவர்களால் முறியடிக்க முடியும். மாகாணசபையின் சம்மதமின்றி இவற்றை மத்தி உள்ளெடுக்க முடியாது. இப்பொழுது மாகாணசபை இயங்கவில்லை என்றால் அந்த அதிகாரம் – சம்மதம் தெரிவிக்கும் பொறுப்பு ஆளுனருக்கே உண்டு. ஆளுனரின் ஒப்புதலின்றி ஒன்றும் செய்ய முடியாது. ஆளுநரை இவர்கள் சரியான முறையில் நாடலாம். அப்படிச் செய்வார்களா? ஆளுநர் அதற்கு என்ன பதில் சொல்வார்? 

இலங்கையில் இப்போதுள்ள அரசாங்கம் மூடுண்ட ஒரு அமைப்பு. அது பலமாக வேறுள்ளது. இது எதிர்காலத்தில் உண்டாக்கப்போகும் தீய விளைவுகள் பாரதூரமானவையாகவே இருக்கப்போகின்றன. 

அது சரி, ஒரு நாடு இரு தேசம், தனிநாட்டுக் கோரிக்கை, சமஸ்டி என்பவற்றின் கதி என்ன? 

புத்திமான்களுடன் யார் நிகராக விளையாடப் போகிறார்கள்? எப்படியாக விளையாடப் போகிறார்கள்?