— ஓம் கவுர் (“தெய்னிக் பாஸ்கர்” என்ற இந்திப் பத்திரிகையின் தேசிய ஆசிரியர்) எழுதிய இந்திக் கட்டுரை ஆங்கிலத்தில் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியானது. தமிழில் தருகிறார் திருமலை மணிவண்ணன் —
லக்னோ ( இந்தியா)..
கங்கை இந்தியாவின் புனித நதிகளில் மிகப் புனிதமானது. அந்த நதியில் குளித்தால் ஆத்மா சுத்தமடையும் என்று பெரும்பான்மையான இந்துக்கள் நம்புகிறார்கள். ஆனால் கோவிட்-19ன் இரண்டாம் அலை இந்த ஆண்டு வசந்த காலத்தில் தாக்கியபோது, இந்த நதி, மோடி அரசின் தோல்விகள், மற்றும் ஏமாற்று வேலைகளுக்கு எதிரான முதல் சாட்சியாகிவிட்டது.
வட இந்திய மாநிலமான, பிகார், சமீபத்தில், ஏப்ரல்-மே மாதத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையை 5,424 என்ற எண்ணிக்கையிலிருந்து 9,375 ஆக திருத்தியது.
வட இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் பல லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்து மத விழாவான கும்பமேளாவில் நடத்தப்பட்ட கொரொனா தொற்று பரிசோதனைகளை நடத்தும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்த தனியார் நிறுவனங்கள் சுமார் ஒரு லட்சம் சோதனை முடிவுகளைப் பொய்யாகத் திரித்து வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கும்பமேளா கொரொனா தொற்றை பெரும் அளவு பரப்பிய ஒரு நிகழ்வாக முடிந்தது.
கொரொனா இரண்டாம் அலை ஓய்ந்து கொண்டிருப்பது போல் தெரிகிறது. ஆனால் இது விளைவித்த சாவு எண்ணிக்கையை நாடு இன்னும் கணக்கிடத் தடுமாறிக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் உள்ளூர் மற்றும் மத்திய ஆட்சியாளர்கள் தொடர்ந்து செய்து வரும் மூடி மறைப்பு வேலைகள்தான்.
சுமார் 3,80,000 பேர் இறந்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலோனோரின் இறப்பு இந்த ஆண்டு மார்ச்சில் தொடங்கி நிகழ்ந்தவை.
ஆனால் புனித கங்கை பொய் சொல்வதில்லை.
மே மாதம் 12ம் தேதி, பிஹாரின் பக்சார் மாவட்ட கிராமவாசிகள், “உருக்குலைந்த சடலங்கள் கங்கை நதியில் மிதந்து வருவதை”க் கண்டனர்.
அங்கும் அதற்கு மேற்பகுதியில் இருக்கும் காஸிப்பூர் மாவட்டத்திலும் சுமார் 100 சடலங்கள் மீட்கப்பட்டன; இந்த சடலங்கள் இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்திலிருந்து மிதந்து வந்தவை என்று உள்ளூர் மூத்த போலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்தியாவின் சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள வாசகர்களால் படிக்கப்படும் “தெய்னிக் பாஸ்கர்” என்ற இந்தி பத்திரிகையின் தேசிய ஆசிரியர் நான். இந்தப் பத்திரிகை சுமார் 55 லட்சம் பிரதிகள் விற்கிறது.
இந்தப் பகுதிகளில் கொரொனா பெருந்தொற்று ஏற்படுத்திய பேரழிவைப் பற்றி இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள, நாங்கள் 30 செய்தியாளர்களையும், புகைப்படச் செய்தியாளர்களையும், உத்தரப்பிரதேசத்தில் கங்கை நதி பாயும் முக்கிய மாநகரங்கள் மற்றும் மாவட்டங்களில் ஆற்றின் கரைகளில் நடந்து சென்று உண்மையைக் கண்டறிய அனுப்பினோம்.
நதிக்கரை நெடுகே சுமார் 700 மைல் பயணித்த எங்கள் செய்தியாளர்கள் மே மாதம் 12 மற்றும் 13ம் தேதிகளில் மட்டும் சுமார் 2,000 சடலங்களைக் கணக்கிட்டனர். இந்த சடலங்கள் கங்கையில் மிதந்து போய்க்கொண்டிருக்க மட்டுமில்லை. சில நாட்களில் 65 அல்லது 70 சடலங்கள் நதிக்கரைகளில் ஒதுங்கின. ஆனாலும், அதிகாரபூர்வ புள்ளிவிவரத் தரவுகளின் அடிப்படையில் நாங்கள் கணக்கிட்டபடி பார்த்தால், மாநில அதிகாரிகள் ஏப்ரல் 1லிருந்து மே 13ந்தேதி வரை கொரொனாவால் 7,826 பேர் மட்டுமே இறந்ததாகக் கூறியிருக்கிறார்கள்.
தெற்கு உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் சிறிய கிராமம் ஷ்ரிங்க்வெர்பூர்… ராமாயண நாயகன் ராமனுடன் கொண்ட தொடர்பால் புனிதமாகக் கருதப்படும் ஊர்.
அங்கு ஒரு கஜ இடைவெளியில் பல சடலங்கள் புதைக்கப்பட்டிருந்ததை எங்கள் செய்தியாளர்கள் கண்டனர்.
காவித் துணி போர்த்தப்பட்ட பல சடலங்கள் பூமியிலிருந்து வெளியே தெரிந்தன.
தங்கள் குடும்ப உறுப்பினர்கள் இறந்த போது, அவர்கள் உடல்களை எரியூட்ட விறகு வாங்க வசதியில்லாத பல ஏழைக் கிராமவாசிகள் ஒரு புனித தலத்தின் அருகே அந்த சடலங்களைப் புதைத்து ஏதோ ஒருவகை ஆறுதல் தேடினர்.
மேலும் சில நாட்கள் செய்தி வெளியிட்ட பின்னர், ஏப்ரல் மாத மத்தியிலிருந்து மே மாத மத்தி வரை, கங்கை நதிக்கரையின் ஒரு சிறிய, ஒரு மைலுக்கும் குறைவான பகுதியில் மட்டும், ஆழமாகத் தோண்டப்படாத குழிகளில் சுமார் 4,000 சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் மதிப்பிட்டோம்.
கால நிலை உதவியிருக்காவிட்டால் இந்தத் துயரத்தைப் பற்றி நாம் அறிந்திருக்கவே மாட்டோம். மே மாதத் தொடக்கத்தில் பெய்த மழை கங்கை ஆற்றில் வெள்ளத்தை உருவாக்கி, சடலங்களை மேல் மட்டத்திற்கும், கரைகளுக்கும் கொண்டுவந்தது.
கரைகளைக் கழுவிய நதி நீர், அங்கு புதைக்கப்பட்டிருந்த சடலங்களையும் வெளியே கொண்டுவந்தது.
கிராமப்புற சுகாதாரச் சேவையை பலப்படுத்துவதிலும், தேவையான அளவு தடுப்பூசிகள் போடுவதிலும் அரசின் பெருந்தோல்வியையும், அதன் போதாமைகளுக்கு பொறுப்பேற்றுக்கொள்ளாத தன்மையையும், இந்த மழை அம்பலப்படுத்தியது.
உபி மாநிலத்தை பிரதமர் மோதியின் கட்சியான பாஜகதான் 2017 மார்ச்சிலிருந்து ஆள்கிறது. சாமியாராக இருந்து அரசியல்வாதியான யோகி ஆதித்யநாத் முதல் அமைச்சர்.
ஏப்ரலில் உபி மாநிலம் முழுவதும் ஆக்சிஜன், சுவாசக் கருவிகள், தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகள் பற்றாக்குறை நிலவுவதாக செய்திகள் வந்த போதும், இடுகாடுகளிலும் சுடுகாடுகளிலும் சடலங்களுடன் கூட்ட நெரிசலைக் காட்டும் காணொளிகள்/ படங்கள் வந்த போதும், யோகி ஆதித்யனாத் எடுத்த நடவடிக்கை மறுப்பு வெளியிடுவது, மிரட்டுவது என்பதுதான்.
வதந்திகளைப் பரப்பியதாக அவர் குற்றம் சாட்டும் மக்களை பயங்கரவாத சட்டங்களைப் பிரயோகித்து மக்களின் சொத்துக்களைப் பிடுங்க மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் யோகி ஆதித்யநாத்.
உத்தரப்பிரதேச அரசு, மருத்துவமனைகளில் நிகழ்ந்த மரணங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
ஆனால், மருத்துவ வசதி குறைந்த கிராமங்களில் பலர் தங்கள் வீடுகளில் இறந்து கொண்டிருக்கிறார்கள்.
காஸிப்பூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 70,000 மக்கள் தொகை கொண்ட நகரம் ரியோடிபூர். அங்கு ஒரே ஒரு டாக்டர்தான் இருக்கிறார். மே மாத மத்தியில் அவர் எம் செய்தியாளர் ஒருவரிடம் பேசும்போது, அந்த நகரில் சுமார் 850 பேர் கொரொனா தொற்று சோதனையில் பாசிடிட்டிவ் என்று தெரியவந்திருப்பதாகச் சொன்னார். அந்த ஊரில், ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 200 பேர் இறந்ததாக உள்ளூர்வாசிகள் எமது நிருபரிடம் சொன்னார்கள்.
“நாங்கள் வசதியில்லாதவர்கள்”, என்று எம் செய்தியாளரிடம் கூறினார் மஹெந்திரனாத் உபாத்யாய். அவர் குடும்பத்தில் மூன்று பேர் கொரொனா தொற்றால் இறந்துவிட்டனர். “நாங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறோம். மருத்துவ சிகிச்சைக்கெல்லாம் எங்களிடம் பணமில்லை” என்றார் உபாத்யாய்.
இந்த கிராமப்புற வறுமை, கொரொனா இரண்டாம் அலையின் விளைவுகளை மேலும் மோசமாக்கியிருக்கிறது. ஆனால் மோடி அரசின் கொடூரமான அலட்சியப்போக்குதான் இந்த இரண்டாம் அலையை தூண்டியது.
மார்ச் மாதத்தில் (வசந்த காலத்தில்) உலகின் மிகப்பெரும் மதக் கூட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் “கும்ப மேளா” யாத்திரையை ஆட்சியாளர்கள் அனுமதித்தனர். உத்திரப்பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் தேர்தல்கள் நடக்கவும் அனுமதித்தனர். (உபியில் உள்ளாட்சித் தேர்தல்கள்).
இப்போது இந்தியர்களில் 3.4 சதவீதத்தினருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், கொரொனா மூன்றாவது அலையும் வீசும் என்ற அச்சத்துக்கு நல்ல காரணம் இருக்கிறது.
2014 நாடாளுமன்றத் தேர்தலில், தான் பிரதமராக வருவதற்கு பிரசாரம் செய்த மோடி, உத்தரப்பிரதேசத்தில் கங்கை நதிக்கரையோரம் அமைந்திருக்கும் புனித நகரான வாரணாசி தொகுதியில் போட்டியிட்டார்.
“கங்கா மாதா என்னை வாரணாசிக்கு அழைத்தாள் என்று உணர்கிறேன்” என்று அப்போது சொன்னார் மோடி.
இன்று அதே கங்கா மாதாதான் அவரை அம்பலப்படுத்தியிருக்கிறாள்.
(நன்றி : நியுயார்க் டைம்ஸ்)