Lockdown காலக் காட்சிகள்

Lockdown காலக் காட்சிகள்

— சிக்மலிங்கம் றெஜினோல்ட் — 

அரசாங்கத்தின் அறிவிப்பு ஒன்றாக இருக்க நடைமுறை வேறொன்றாக இருப்பதென்றால்? இதைப்பற்றி யாரிடம் முறையிடுவது? தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் Lockdownனினால் தொழில் வாய்ப்பும் உழைப்பும் இல்லாதிருக்கும் வறிய நிலைக்குடும்பங்களுக்கு உதவியாக ஐயாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. இந்த ஐயாயிரம் ரூபாய் இன்றைய விலைவாசியில் எத்தனை நாட்களுக்குக் காணும்? அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் நாளொன்றுக்குச் செலவழிக்கின்ற செலவையும் மக்களுக்கு வழங்கப்படும் உதவிப்பணத்தின் அளவையும் தெரிந்தவர்களுக்குத் தெரியும், மக்களை அரசாங்கமும் மக்கள் பிரதிநிதிகளும் எந்தளவுக்கு மதிக்கின்றார்கள் என்று. 

சரி, ஏதோ புண்ணியமாக இந்த ஐயாயிரத்தையாவது கொடுக்கிறார்கள் என்று பார்த்தால், அதிலும் ஏகப்பட்ட குழப்பங்கள். இறுதியில் அந்த ஐயாயிரம் ரூபாய் வழங்கும் நடவடிக்கையும் இந்தப் பத்தி எழுதப்படும்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பின்படி முதற்தொகுதி ஆட்களில் சிலருக்கு ஐயாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அப்படி வழங்கிய சிலருடைய பணம் அடுத்த நாளே திரும்பப் பெறப்பட்டும் இருக்கிறது. இது ஏனென்று கேட்டால் ‘அவர்களுக்கு முதியோர் உதவிப்பணம் கிடைக்கும். அல்லது, சமூக சேவைகள் உதவிப்பணம் கிடைக்கும். எனவேதான் இந்தப் பணத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறார்கள்’ என்கிறார் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர். 

ஆனால் இதிலுள்ள நடைமுறைப்பிரச்சினைகளை அதிகாரிகளோ திட்ட வகுப்பாளர்களோ கணக்கிற் கொள்ளவில்லை. உதாரணமாக, சமுர்த்தி உதவி மூலமாகக் கிடைத்த ஐயாயிரம் ரூபாயைக் கொண்டு போய் அவர்கள் பொருட்களை வாங்கி விட்டனர். அப்படிப்  பொருட்களை வாங்கியோரிடம் போய் தந்த காசைத்திருப்பித் தாருங்கள் என்று கேட்டால் அவர்கள் அதற்கு என்ன செய்வார்கள்? எங்கே போவார்கள்? பொதுவாகவே சமுர்த்தி உதவியைப் பெறுவோர் மிக வறிய நிலையில் உள்ளவர்கள். அவர்களுடைய கையில் பணம் கிடைத்தால் உடனே அதைக் கொண்டு போய் தமக்குத் தேவையானவற்றை வாங்குவர். அதற்குப் பிறகு அந்தக் காசைத் தாருங்கள் என்று கேட்டால், அந்தப் பொருட்களைத் திரும்பக் கொண்டு போய் கடையில் கொடுத்தே மீளப் பணத்தை வாங்கிக் கொடுக்க முடியும். இதற்கு கடைகள் சீராக இயங்க வேண்டும். அந்த நிலை இல்லை. அதை விட கடைக்காரர் ஒத்துழைக்க வேண்டும். எல்லாவற்றையும் விட வாங்கிய பொருட்களை மக்கள் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். 

இப்படிச் சிக்கலான ஒரு நிலையில் காசைத்திருப்பிக் கொடுக்க முடியாமல் சனங்கள் படுகின்ற சிரமம் கொஞ்சமல்ல. சனங்கள் மட்டுமல்ல அடி நிலை உத்தியோத்தர்களுக்கும் இது பெரும் சிரமமே. நடவடிக்கைத் தவறுகளால் இந்த உத்தியோத்தர்களும் சனங்களும் மோதிக் கொண்டிருக்கிறார்கள். கசப்பு வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த அலைச்சல், அவலம் இந்தக் கொரோனா அபாயத்திற்குள்ளால் நடப்பது என்பது எவ்வளவு தவறானது? இதற்கான பொறுப்பை யார் ஏற்பது? 

இது ஒரு புறம் என்றால் இப்பொழுது பணத்தை வழங்கும் நடவடிக்கையே இடை நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாகக் காத்திருப்புப் பட்டியலில் உள்ளோர் எதுவரை காத்துக் கொண்டிருப்பதென்று தெரியவில்லை. இனி மறுபடியும் கொடுப்பனவுக்கான உத்தரவு எப்போது எந்த வடிவத்தில் வரும் என்றும் யாருக்குமே தெரியாது. கேட்டால் மீதிப்பணம் இன்னும் வந்து சேரவில்லை என்று சொல்கிறார்கள். அது எப்போது வரும் என்றால் உதட்டைப் பிதுக்கிக் கைகளை விரித்து கண்ணால் மேலே காட்டுகிறார்கள். 

எல்லாம் அவன் செயல்! 

இதைப்பற்றியெல்லாம் அரச தரப்பு எம்பிமார், அமைச்சர்களும் வாய் திறக்க மாட்டார்கள். எதிர்த்தரப்பு –தமிழ்த்தேசிய நிலை அரசியல்வாதிகளும் பேசமாட்டார்கள். அடி நிலை மக்களைப் பற்றி யாருக்குத்தான் கவலை? அவர்கள் எல்லாவற்றையும் உத்தரிக்கப் பிறந்தவர்களல்லவா! 

உண்மையில் இப்போதைய Lockdownதான் நெருக்கடியானது. அதிக தொற்றாளர்கள். அதிக தொற்றுப் பிரதேசங்கள். அதிக உயிரிழப்புகள். இப்படியெல்லாம் இருந்தால் மருத்துவமனைகள் தொடக்கம் வெளிச் சூழல் வரையில் எங்கும் ஏகப்பட்ட சிக்கல்கள். பிரச்சினைகள் இருக்கும் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டியது. 

இந்த இரண்டாவது Lockdown இல் உதவிகள் கிடைத்திருப்பதும் குறைவு. இப்பொழுதுதான் நிலைமையின் தீவிரம் உணரப்பட்டு புலம்பெயர் சமூகத்தினரும் உதவ முன்வந்திருக்கின்றனர். அவர்களுக்கு இது வரையறைக்குட்பட்டதாகவே இருக்கும். ஏனென்றால் அவர்களும் இடர் காலத்திற்குள்ளே சிக்கியிருக்கிறார்கள். 

ஆகவே வறிய நிலையில் உள்ளோரின் நிலை மிகக் கஸ்ரமானது. அவர்கள் நாளொன்றை எப்படிப் போக்குவது என்றே தெரியாத நிலையில் தவிக்கின்றனர். விலை வாசி வேறு உயர்ந்துள்ளது. இந்த Lockdown மேலும் நீடிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. உண்மையில் இதை ஒரு சரியான Lockdown என்று சொல்ல முடியாது. அதனால்தான் இதை அரசாங்கம் பயணத் தடை என்கிறது. மருத்துவமனைக்குச் செல்லும்போது பார்த்தேன், கடைகள் மூடப்பட்டு, பொதுப் போக்குவரத்து தடுக்கப்பட்டுள்ளதே தவிர, மற்ற அனைத்தும் நடக்கின்றன. வீதி நிறையச் சனங்கள். எனவேதான் இந்தப் பயணத்தடை மேலும் நீடிக்கப்பட்டிருக்கிறது. இதை விட இதை ஊரடங்கு உத்தரவாக மாற்றக் கூடிய நிலை உண்டென்று கூறுகிறார்கள். அப்படியென்றால் பொருட்களுக்கான தட்டுப்பாடு அதிகரிக்கும். விலையும் மேலும் கூடும். அப்படியென்றால் நிலைமை எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இப்பொழுதே எரிபொருட்களின் விலை படு பயங்கரமாக ஏற்றப்பட்டுள்ளது. 

இதற்குள் விவசாயிகளும் மீனவர்களும் தங்கள் உற்பத்திகளைச் செய்யலாம் என்று அனுமதிக்கப்பட்டிருக்கிறது. உணவு என்ற அத்தியாவசியத் தேவைக்காக அனுமதிக்கப்படுவது சரி. தவிர்க்க முடியாததே. ஆனால் இதைப்போல சலூன் தொழிலாளர்கள், ஆடை அலங்கரிப்பாளர்கள், பனை, தென்னைத் தொழிலாளர்கள், மேசன் மற்றும் கூலிகள், கடைச்சிப்பந்திகள் என சமூக மட்டத்திலுள்ள ஏராளம்பேரின் வாழ்க்கை? இவர்களுக்குத்தான் சமுர்த்தி உதவி ஐந்து ஆயிரம் வழங்கப்படுகிறது என்று நீங்கள் சொல்லக் கூடும். அதைத்தான் முன்பே சொல்லியிருக்கிறோமே, அது எப்படியாக இருக்கிறது என்று. தவிர, எல்லோருக்கும் சமுர்த்தி உதவியும் இல்லை. அதுவும் சுயதொழில் உள்ளவர்களுக்கு. 

அப்படியென்றால் இந்த மாதிரிச் சனங்களின் நிலை? 

இதேவேளை முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கப்படும் என்று பிரதிக் குழுக்களின் தலைவர் அங்கயன் ராமநாதன் பெருமிதம் தெரிவித்துள்ளார். இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயின் இன்றைய பெறுமதி என்ன? இது ஒரு கொடுப்பனவா? நாளொன்றுக்கு அங்கயன் இராமநாதனின் குடும்பத்துக்கு தனிப்பட எவ்வளவு பணம் வேண்டும்? அவருடைய பணிகளுக்கோ பணித் தொகுதியினருக்கோ அல்ல. 

ஆக உங்களுக்கு ஒரு மாதிரியும் மற்றவர்களுக்கு இன்னொரு மாதிரியும் என்றா உங்கள் சிந்தனை உள்ளது? 

இப்படிச் சிந்தித்துத்தான் இந்த நாடு இப்படி உருப்பட முடியாமல் சீரழிந்து கிடக்கிறது. உரிமைகள், தேவைகள், தகுதிகள், உணர் நிலைகள், பசி, வாழ்க்கைப் பிரச்சினைகள், வாழ்க்கைத் தேவைகள் எல்லாம் எல்லோருக்கும் பொதுவானவை. யாருக்கும் சிறப்புத் தகுதி என்றிருக்கத் தேவையில்லை. பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளும் நிர்வாணமாகவே பிறக்கின்றன. அப்படியென்றால் இயற்கையின் நியதி அனைவருக்குமான ஒரு பொதுமைப்படுத்தலை – அதை மேம்படுத்தும் ஜனநாயகச் சூழலை ஒரே மாதிரியே வைத்திருக்கின்றன. 

ஆகவே எதையும் நிதானமாகச் சிந்தித்து முடிவெடுங்கள். குறிப்பாகச் சாமானிய மக்களின் நிலை நின்று. அவர்கள்தான் நாட்டின் அத்தியாவசிய உழைப்பாளிகள். அவர்களே குரலற்றவர்கள். அவர்கள்தான் நம்மையெல்லாம் உயிரோடு வைத்திருக்கிறார்கள். உணவாகவும் பாதுகாப்பாகவும் வாழ்க்கை வசதிகளாகவும் நம்முடைய கனவுகளுக்கெல்லாம் வளம் சேர்ப்பதாகவும். 

ஆதலால், அவர்களை விட்டு யாரும் சிந்திக்க முடியாது. கொவிட் 19 க்கான தடுப்பு ஊசியிற் கூட மக்கள் கவனியாப் பொருளாகவே இருப்பது போலப்படுகிறது. ஏதோ வரும்போது போட்டுக் கொள்ளலாம் என்ற மாதிரி. இல்லை. எங்கள் மக்களை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்பை –அதற்கான அர்ப்பணிப்பைக் காணமுடியவில்லையே.