— எழுவான் வேலன் —
‘பிரதேசவாதமா ஜனநாயகப் பற்றாக்குறையா? (தமிழ் அரசியலை முன்னோக்கி நகரவிடாது தடுக்கும் உள்முரண்பாடுகள்)’ எனும் வி.சிவலிங்கம் அவர்களுடைய கட்டுரை அரங்கம் மின்னிதழ் 06.06.2021 அன்றைய இதழில் பதிவிடப்பட்டிருந்தது (https://arangamnews.com/?p];uP5235) அக்கட்டுரைக்கான கருத்தாடல் களம் 01 ஆனது, 15.06.2021 அன்று அரங்கம் மின்னிதழில் பதிவாகியிருந்தது அதனுடைய தொடர்ச்சியான கருத்தாடல் களம் 02 இதுவாகும்.
இரண்டாவது பதிவில் சமூகஜனநாயகம் பற்றி எழுதுவதாகக் கடந்த பகுதியில் குறிப்பிட்டிருந்தேன் ஆனால் சிவலிங்கம் அவர்கள் எழுப்புகின்ற பின்வரும் கேள்விகளுக்கு பதிலிறுக்காமல் வேறொரு தளத்துக்கு நகர்வது அவ்வளவு பொருத்தப்பாடானதல்ல என்பதால் அவர் எழுப்பும் கீழ்வரும் கேள்விகள் தொடர்பாக இப்பத்தியில் நோக்கலாம் எனக் கருதுகின்றேன்.
“தற்போதைய விவாதங்களில் பல தனிநபர்களைச் சார்ந்ததாக அல்லது அவர்கள் கட்சிகளின் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட விபரங்களாகவும் கட்சி அரசியலில் ஏற்பட்ட பிணக்குகளை முன்வைப்பதாகவும் உள்ளதே தவிர பிரதேசவாதம் என்பது கட்சியின் தீர்மானங்களில் ஏற்படுத்திய தாக்கங்கள் மற்றும் அதற்கு எதிராக எழுந்த போராட்டங்கள் போன்ற எவையும் அடையாளப்படுத்தப்படவில்லை.
இவை தொடர்பாக சில கேள்விகளை நாம் எழுப்பலாம். எக்காலகட்டத்திலிருந்து இப்பிரதேசவாத அடையாளங்கள் ஆரம்பமாகின? கட்சியின் முக்கிய முடிவுகளில் வெளிப்பட்ட பிரதேசவாத அடையாளங்கள் என்ன? இவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ.ராஜதுரை அவர்களின் விலக்கத்திலிருந்து ஆரம்பமானால் அவர் இப் பிரதேச பாகுபாடு பற்றி எதுவும் பேசவில்லையே ஏன்? காசி ஆனந்தன் இவை குறித்து அவ்வளவாகப் பேசியதில்லையே ஏன்? இவற்றின் பின்னரான காலத்தில்தான் கருணாஅம்மான், பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தன் என்போர் விடுதலைப்புலிகளில் இணைந்து செயற்பட்டார்கள். மிக நீண்ட காலம் செயற்பட்டார்கள். தாம் விலகிய பின்னரே பிரதேச பாரபட்சம் குறித்துப்பேசினர். இதனை இவர்கள் தமக்கென தனித்தனியான கட்சிகளை ஆரம்பிப்பதற்கான போலி நியாயங்களாக ஏன் கருத முடியாது? கிழக்கிலங்கை முஸ்லீம்களும் தமிழரசுக் கட்சியில் செயற்பட்டுள்ளனர். பிற்காலத்தில் தமக்கென தனிக் கட்சியை ஆரம்பித்தனர். இருப்பினும் அவ்வாறான பிரிவின்போது பிரதேசவாதம் குறித்து அம் மக்கள் பேசவில்லையே ஏன்? கட்சிகளில் அல்லது குழுக்களில் சில தனிநபர்கள் புறக்கணிக்கப்பட்டதற்கான நியாயங்களை பிரதேசவாதம் என்ற பரந்த வரையறைக்குள் உள்ளடக்கமுடியுமா?”
என எழுப்பும் அவருடைய கேள்விகள் பிரதேசவாதத்தினை தமிழ் பண்பாட்டின் ஓர் அகவயக் கூறாக நோக்காது அதனை புறவய ரீதியான ஒர் அரசியல் நடவடிக்கையாக மட்டும் நோக்குவதினால் இவ்வாறான கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாததாகின்றது. இந்த நோக்கு நிலை திரு.வி.சிவலிங்கம் அவர்களுக்கு மாத்திரம் உரியதொன்றல்ல மிகக் கணிசமான தமிழ் மக்களுக்கு எமது சமூக நிறுவனங்கள் இவ்வாறே கருத்துமயமாக்கத்தினைச் செய்துள்ளன. இந்த நோக்கில் அந்தக் கேள்விகள் மிக நியாயமான கேள்விகளாக விளங்கிக் கொள்கின்றனர். இது அவர்களுடைய தவறும் அல்ல. பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களைத் தவிர வடகிழக்கில் உள்ள புத்திஜீவிகள் அனைவரும் இதுவரை காலமும் இது பற்றி ஒரு பகுப்பாய்வு முறைமையில் அதிகாரத்துவத்தை கேள்விக்குட்படுத்தும் உரையாடல் எதிலும் ஈடுபடவில்லை என்பது ஒரு கசப்பான உண்மையாகும். இதற்கு அவர்களுடைய வர்க்க குணாம்சமும் மேலாதிக்கத்தை பொதுவெளியில் எதிர்க்க முடியாத அல்லது தங்களைச் சுயவிமர்சனம் செய்துகொள்ள முடியாத நழுவல் போக்குகளும் காரணங்கள் எனலாம்.
இப்போது நாம் இவை பற்றி திறந்த மனதுடன் பொதுவெளியில் உரையாட வேண்டிய வரலாற்றுத் தேவைக்கு உட்பட்டிருக்கின்றோம். அதன் முதற்படியே இக்கருத்தாடலாகும்.
வடக்கும் கிழக்கும் பிரதேச ரீதியாக இரு துருவங்கள் மட்டுமன்றி பண்பாட்டு ரீதியாகவும் இரு துருவங்கள்தான். வடக்கையும் கிழக்கையும் நில ரீதியாக முல்லைத்தீவு கொக்கிழாய், கொக்குத் தொடுவாய் இணைப்பது போல் இன ரீதியாக தமிழ்மொழி, தமிழ் இனம் இணைக்கின்றது. அதாவது இனவழி, மொழிவழி ஒற்றுமையே காணப்படுகின்றதே தவிர பண்பாட்டு ஒற்றுமை இல்லை. இக்கருத்து பலருக்கு ஏற்புடையதாக இல்லாது இருக்கலாம் ஆயினும் இதுவே உண்மையாகும். உதாரணத்திற்கு பின்வரும் அட்டவணையில் சில விடயங்கள் சுட்டிக்காட்டப்படுகிறது.
இல. | விடயம் | வடக்கு | கிழக்கு |
01 | சமூகம் | தந்தைவழிச் சமூகம் | தாய்வழிச் சமூகம் |
02 | பொருளாதாரம் | பணப்பொருளாதாரம் | விவசாயப் பொருளாதாரம் |
03 | மூலதனம் | கல்வி | நிலம் |
04 | சமூக அதிகாரம் | வேளாளர் | முக்குவர் |
05 | நிலம் | உயர்சாதியினருக்குரியது | அனைவருக்கும் உரியது |
06 | சட்டம் | தேசவழமைச் சட்டம் | முக்குவச் சட்டம் |
07 | சாதி பேணல் | வலுவாகப் பேணல் – (தீண்டாமைக் கொடுமைகள்) | நெகிழ்வாகப் பேணல் (தீண்டாமைக் கொடுமை ஒப்பீட்டு ரீதியில் குறைவானதாகும்) |
08 | சமயம் | சைவம் | வீர சைவம் மற்றும் தாய்த்தெய்வ வழிபாடு |
09 | வழிபாட்டுமுறை | ஆகமமுறை | பத்ததிமுறை |
10 | திருமணம் | ஓமம் வளர்த்துத் தாலி கட்டல் | கலத்தில் போடுதல் |
11 | சீதனம் | சீதனம் முக்கியம் | சீதனம் முக்கியமல்ல |
12 | இறப்பு | எரித்தல் | புதைத்தல் |
13 | உணவு | தானியங்களும், மரக்கறிகளும் (பெருமளவு) | மூன்று வேளையும் சோறு, மச்சம், மாமிசம் (பெருமளவு) |
14 | மொழி வேறுபாடு | பேந்து (உதாரணம்) | மறுகா (உதாரணம்) |
15 | மொழியின் தொனி | அதிகாரம் (உதாரணம்) வாரும் | அன்பு(உதாரணம்) வாங்ககா, வாகா |
16 | இலக்கியம் | எழுத்திலக்கியம் | வாய்மொழி இலக்கியம், இரண்டும் கலந்த இலக்கியம் |
17 | அரங்கவடிவம் | இசை நாடகம், பரதநாட்டியம் (வடமோடி, தென்மோடி சிறிதளவு) | வடமோடி, தென்மோடிக் கூத்துக்கள், வசந்தன், கரகம், கும்மி |
18 | இசை | பண்ணிசை, கர்நாடக இசை | சடங்கிசை, கூத்திசை, மக்களிசை |
19 | அறிவு | காலனித்துவ அறிவு | பாரம்பரிய அறிவு (மந்திரம், வைத்தியம் போன்றன) |
20 | சேமிப்பு | சேமிப்பும் சிக்கனமும் அதிகம் கொண்டவர்கள் | சேமிப்பும் சிக்கனமும் இல்லாதவர்கள் |
இது போன்ற பல பண்பாட்டு வேற்றுமைகள் காணப்பட்ட போதிலும் விரிவஞ்சி சிலவற்றையே இங்கு சுட்டிக்காட்டியுள்ளேன். இவை ஒவ்வொன்றும் தொடர்பாக மிக விரிவான உரையாடல்களை எம்மால் நடத்த முடியும். ஆனால் அவை எல்லாம் நாம் எடுத்துக் கொண்ட உரையாடல் பரப்பை மேலும் அகலிக்கும் என்பதால் அவை பற்றி இங்கு நான் விபரிக்க விரும்பவில்லை.
இந்தப் பண்பாட்டு வேற்றுமையில் மிக முக்கியமானது சமூக அதிகாரமாகும். யாழ்ப்பாணச் சாதியமைப்பினை கெனத் டேவிட் ‘உயர் சாதி (high Cast), நல்ல சாதி (Good Cast), குறைந்த சாதி (Low Cast) என மூன்றாகப் பகுக்கின்றார். இப்பகுப்பின் அடிப்படையில் பிராமணர், சைவக்குருக்கள், வெள்ளாளர், கோவியர், சைவச் செட்டி ஆகிய சாதிக்குழுக்களை ‘உயர்சாதியாகவும்’ ஆச்சாரி, தட்டார், கைக்குழார், சேணியர், சாண்டார், முக்குவர், திமிலர், பண்டாரம், நட்டுவர், கரையார், தச்சர், கொல்லர், குயவர் ஆகிய குழுக்களை நல்லசாதியாகவும் நளவர், பறையர், வண்ணார், அம்பட்டர், பள்ளர், துரும்பர் ஆகிய குழுக்களை குறைந்த சாதியாகவும் பகுக்கின்றார்.’ (தங்கேஸ் பரம்சோதி, ‘யாழ்ப்பாண தமிழர் கலாசாரத்தில் சாதியமும் இனத்துவமும் யுத்தம், இடப்பெயர்வு, மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தியால் தூண்டப்பட்டு மாற்றத்துக்குள்ளாகும் அடையாளங்கள்’)
எனவே யாழ்ப்பாணச் சாதியமைப்பில் முக்குவர்கள் உயர்சாதியல்ல. உயர்சாதியல்லாத முக்குவர்கள் அதிகாரம் மிக்கவர்களாக இருப்பதை வேளாள ஆதிக்கம் அனுமதிக்காது. அதனால் ஏற்பட்ட முக்குவ வேளாள முதல் மோதலை வெடியரசன் வரலாற்றிலிருந்து அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
‘வட இலங்கையிலும் கிழக்கிலங்கையிலும் கரையோரப் பகுதிகளிலே வாழ்ந்த தமிழ் மக்களிடையே வெடியரசன் கதை நெடுங்காலமாக செல்வாக்குப் பெற்றிருந்ததாகவும் அக்கதை மக்கள் நிலைப்பட்ட கதை எனவும் பேராசிரியர் பத்மநாதன் கூறுவதாக கலாநிதி சி.சந்திரசேகரம் குறிப்பிடுகின்றார். வெடியரசன் நயினாதீவை இராசதானியாகக் கொண்டு நெடுந்தீவில் கோட்டையமைத்து அரசாண்ட ஒரு முக்குவ அரசனாவான்.
கோவலனார் கதை, சிலம்பு கூறல் ஆகிய இரு படைப்புகளிலும் வரும் கடலோட்டு காதையில் இறுதியிலே வெடியரசனும் அவனுடைய தம்பி விளங்குதேவனும் மீகாமனுடன் ஏற்பட்ட போரின் பின் தமது ஊர் வந்து தமது கப்பல்களையெல்லாம் விற்றுவிட்டு மட்டக்களப்புக்குச் சென்று காடு வெட்டி வயல்கள் உண்டாக்கி, குளங்கள் திருத்தி பயிர்கள் செய்து அரசு செய்து இருந்ததாகப் பாடப்படுகிறது. (சி.சந்திரசேகரம், மொழிதல்)
‘யாழ்ப்பாணத்தில் ஆரியச்சக்கரவர்த்திகளின் செல்வாக்கு அதிகரித்து அவர்களின் சமயக் கருத்தியல்களும் அதிகரிக்க வட இலங்கையில் முக்குவர்கள் செல்வாக்கு இழக்கத் தொடங்கியிருக்கின்றனர். செல்வாக்கிழந்த போதும் தங்களுடைய தனித்துவங்களை விட்டு சமஸ்கிருத மயமாக்கத்துக்குள் சென்று வேளாள மேலாண்மைக்கு கீழப்படிந்து நடப்பவர்களாக இருக்கவில்லை.
வெடியரசனுடைய யுத்தமும் அவனுடைய தோல்வியும் இடப்பெயர்வும் ஆரியச்சக்கரவர்த்திகளினுடைய அதிகாரத்துக்கும் வேளாள மேலாதிக்கத்துக்கும் எதிரானதேயாகும். படை பலமும் சமஸ்கிருத கருத்தியல் தளமும் கொண்ட ஆரியச்சக்கரவர்த்திகளிடம் வெடியரசன் தோற்று யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்து மட்டக்களப்பில் தனக்கான அரசினை நிறுவிக் கொண்டான். இதனால் யாழ்ப்பாணத்தில் வேளாள மேலாண்மையும் மட்டக்களப்பில் முக்குவ மேலாண்மையும் சாத்தியமாயிற்று போலும்.’ (சு.சிவரெத்தினம், கூடல்)
ஆயினும் மட்டக்களப்பிலும் முக்குவர்கள் அதிகாரத்துவம் மிக்கவர்களாகவும் அவர்கள் தனித்துவமான பண்பாட்டுடனும் வழிபாட்டுடனும் இருப்பதை யாழ் வேளாளர்களால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. அதாவது மட்டக்களப்பாரை தமக்குச் சமமானவர்களாக நோக்கவோ அல்லது சமமானவர்களாக நடத்தவோ முடியவில்லை. அதேநேரம் மட்டக்களப்பில் அவர்களின் அதிகாரத்தினைத் தகர்க்கவும் முடியவில்லை. இதனால் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் முக்குவர்கள் பழிதீர்க்கப்பட்டார்கள்.
இந்தப் பழிதீர்த்தல் படலத்தின் முதலாவது அத்தியாயம் பஸ்கோஸ் முதலியின் வருகையில் இருந்து ஆரம்பமாகின்றது. ‘இலங்கை பிரித்தானியரின் நேரடி ஆட்சியின் கீழ் 1802இல் கொண்டு வரப்பட்ட பின் மட்டக்களப்புப் போடிகளின் அதிகாரத்தை வேறு இடங்களிலிருந்து வந்த (குறிப்பாக யாழ்ப்பாணப் பகுதியில் இருந்து தமது மதத்தை விட்டு மாறி அன்னிய மதமான கிறிஸ்தவ மதத்துக்குச் சென்றவர்களிடம் கையளிப்பதில் தீவிர நடவடிக்கை எடுத்தனர். மட்டக்களப்பின் முழு அதிகாரத்தையும் தாமே கைப்பற்றி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. இதை நிறைவேற்றுவதற்கான முதற்படியாகவே யாழ்ப்பாணத்திலிருந்து பஸ்கோஸ் முதலி என்பவனும் பல கிறிஸ்த்தவ மதவாதிகளும் இங்கு கொண்டுவரப்பட்டார்கள்’ மட்டக்களப்புக் கோட்டையில் உள்ள அறிக்கையின் படி பஸ்கோஸ் முதலி பிரித்தானியருக்கு மொழிபெயர்ப்பு முதலியாராக இருந்தானென்று தெரிவிக்கப்படுகிறது. ‘பஸ்கோஸ் முதலி முன்பு முற்குகப் போடிகளுக்குச் சொந்தமாக இருந்த நிலங்களையெல்லாம் பறித்து பிரித்தானிய முடிக்குரிய காணிகளாக ஆக்குவதில் பெரும் பங்கு வகித்தான்’ (ஞா.சண்முகம், மட்டக்களப்பு குகன்குல முற்குகர் வரலாறும் மரபுகளும்)
யாழ்ப்பாண தேசவழமைச் சட்டத்தினையும் மட்டக்களப்பு முக்குவச் சட்டத்தினையும் காலனித்துவவாதிகள் அவ்வாறே அமுல்படுத்தினர். ஆனால் ஆங்கிலேயருடைய ஆட்சியில் 1806இல் தேசவழமைச் சட்டம் இலங்கையின் சட்டவாக்கங்களில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டு முக்குவச் சட்டம் புறக்கணிக்கப்பட்டது. இந்தப் புறக்கணிப்புக்கு ஆங்கிலேயருடைய ஆட்சியில் அரச அதிகாரிகளாக இருந்த பஸ்கோஸ் முதலி போன்றவர்களின் பங்களிப்பு இருந்திருக்கின்றது என்பதே உண்மையாகும். ஆயினும் மட்டக்களப்பின் குடியியல் வழக்குகளில் முக்குவச் சட்டத்தினை எவ்வித இடையூறுமின்றி ஆங்கிலேயர் தொடர்ந்தனர்.
‘1835ம் ஆண்டில் 15ம் இலக்க கட்டளைச் சட்டத்தின் மூலமும் பழைய வழமையின் கீழ் சிவில் நீதி நிர்வாகம் நடத்தும் முறை மாற்றப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து வந்த முக்குவச் சட்டத்தின் அமுலாக்கம் 1876ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட 15ம் இலக்க சொத்துரிமையினை நிர்ணயித்தல் (Intestate succession) சட்டத்தின் மூலம் இல்லாமல் செய்யப்பட்டது.’ (ஞா.சிவசண்முகம்)
முக்குவச் சட்டம் இல்லாமல் செய்யப்பட்ட காலப்பகுதியில் சட்ட நிருபண சபையின் உறுப்பினராக இராமநாதனுடைய மாமாவாகிய முத்துக்குமாரசுவாமி அவர்களே இருந்தார். (1862ம் ஆண்டு தொடக்கம் 1879ம் ஆண்டு வரை) இவர் சமூக அரசியல் அறிவும் சட்ட வல்லுனராகவும் திறமையான பேச்சாளராகவும் இருந்து அரசாங்கத்தின் நன்மதிப்பைப் பெற்றவராக விளங்கியவர். அவருடைய அனுசரணையுடன்தான் முக்குவச் சட்டம் நடைமுறையிலிருந்தும் அகற்றப்பட்டது.
இதேபோன்று, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆ.குமாரசுவாமி அவர்கள் 1833ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட சட்ட நிருபண சபைக்கு உத்தியோகப் பற்றற்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டார். இவருடைய காலத்திலேயே வடகிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக மத்திய நிர்வாக அமைப்பினுள் உள்வாங்கப்பட்டன. அரசாங்கத்தில் மதிப்பு மிக்க தலைவராக இருந்த குமாரசுவாமி அவர்கள் பண்பாட்டு ரீதியில் வேறுபட்டிருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களை வேறுபட்ட மாகாணங்கள் என்ற அடிப்படையில் நோக்கினாரே தவிர மொழிவழி அடிப்படையிலோ அல்லது இனவழி அடிப்படையிலோ அவற்றை ஒரு மாகாணமாக அவர் நோக்கவில்லை. சுருக்கமாகக் எமது பேச்சு வழக்கில் கூறுவதென்றால் ‘அவங்க வேற நாங்க வேற’ என்ற நோக்கு நிலையே இதுவாகும். இதனால்தான் எவ்வித எதிர்ப்புமின்றி இரு மாகாணங்களும் தனித் தனி மாகாணங்களாக உள்வாங்கப்பட்டன. எனவே வடகிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக உருவாவதற்கு ஒரு வகையில் உதவியவராக ஆ.குமாரசுவாமி விளங்குகின்றார்.
‘ஆண்டபரம்பரை மீண்டும் ஒரு முறை ஆளநினைப்பதில் என்ன குறை’ என முழங்கும் தமிழ்த் தேசியவாதிகள் முக்குவச் சட்டத்தை இல்லாமலாக்கிய பஸ்கோஸ் முதலி, முத்துக்குமாரசுவாமி, போன்றவர்கள் பற்றியோ அல்லது வடகிழக்கு மாகாணங்களை தனிதனி மாகாணங்களாக உள்வாங்கிய ஆ.குமாரசுவாமி போன்றவர்களையோ துரோகியாக்கவில்லை என்பதும் அல்லது அவர்கள் தொடர்பான மேற்கூறப்பட்ட நடவடிக்கைகளை இதுவரை விமர்சிக்கவில்லை என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
இவற்றுக்கு அடுத்ததாக, 1927ம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த டொனமூர்க் குழுவினர். இரண்டு முக்கிய சிபார்சுகளை முன்வைத்தனர்.
- கல்வித் தகமை, வருமானம் என்பவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்ட வாக்குரிமையினை நீக்கி 21 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை.
- சட்ட நிருபண சபையில் இருந்து வந்த இனவாரி பிரதிநிதித்துவத்தினை நீக்கி அதற்குப் பதிலாக பிரதேச வாரிப் பிரதிநிதித்துவம்.
மேற்படி இரு சிபார்சுகளையும் கண்டு இவற்றுக்கு எதிராக வெகுண்டெழுந்தவர் சேர்.பொன்.இராமநாதனாவார். தமிழர்களில் ஆங்கிலேயருடைய ஆட்சியைப் பயன்படுத்தி போதிய கல்வித் தகமைகளையும் அதன் மூலம் அரச உத்தியோகங்களையும் பெற்று கூடிய வருமானங்களைப் பெற்றவர்கள் இந்த யாழ் வேளார்களேயாவர். கல்வித் தகமை, வருமானம் நீக்கப்படுமேயானால் தாங்களே தொடர்ந்து ஆள்பவர்களாக இருக்க முடியாது என்ற அச்சமே அவருடைய எதிர்ப்புக்குக் காரணமாகும்.
அதேபோன்று இனவாரிப் பிரதிநிதித்துவம் இருக்கும் வரை தமிழ் இனத்தின் பிரதிநிதிகனாக தாங்களே தொடர்ந்து தமிழர்களை ஏய்க்க முடியும். அது இல்லாமல் போகின்ற போது தனக்குச் சமாந்திரமாக கிழக்கிலிருந்து முக்குவன் வந்து அமர்ந்து விடுவானே என்ற அச்சமும் காரணமாகும் அதனால்தான் இது கும்பலாட்சிக்கு வழிவகுக்கும் என வாதாடினார்.
எனவே சாதாரண மக்கள் குறிப்பாக கிழக்கு மக்களுக்கு வாக்குரிமையும் இருக்கக்கூடாது சட்டசபை பிரதிநிதித்துவமும் இருக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இதனை அவதானித்த டொனமூர் குழுவினர் இது பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றனர்.
‘பொறுப்புவாய்ந்த அரசாங்க அதிகாரத்தைக் கொடுத்தல், அதிகாரத்தில் உள்ளவர் மற்றை மக்களுடைய நலன்களைத்தாம் பாதுகாப்பர் என்னும் வாக்குறுதியின்றி சிலரோராட்சி கையில் முழுவதிகாரத்தையும் விடுவதற்கொப்பாகும். மேன்மை தங்கிய அரசரின் அரசாங்கம் இலங்கையிலுள்ள செல்வர், கற்றறிவுள்ளோர் ஆகியோர்க்கு மட்டும் அரசாங்கமன்றி, மக்கள் தொகையில் பெரும்பாலோராயமைந்த நாட்டவர், கூலிகள், எளியவர், யாவருக்கும் பாதுகாப்பாயுள்ளதென்பதை நாங்கள் இங்கு எடுத்துக் கூறவேண்டியதில்லை. பிற்கூறிய ஏழை மக்களின் நலன் யாவற்றையும் முன்கூறிய வகுப்பினரின் கட்டில்லாத அதிகாரத்தில் விட்டுவிடுவது நம்பிக்கைப் பொறுப்பற்ற முறையாகும். ஆயினும் வாக்குரிமையை விரிவடைய ஒத்துக்கொள்ளாது, முழுப் பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்திற்கு உரிமைகொண்டாடியவர்கள், மேற்கூறிய விடயத்தின் இயல்பினை நன்கறிந்தவர்களாகத் தோன்றவில்லை’
‘பிரதானமாக, வடமாகாணத்திலும் கீழ் மாகாணத்திலும் காணப்படும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் நிலை எமக்கு மிகுந்த கவலையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது….. அவர்கட்கென எவ்வகையான ஒரு பிரதிநிதித்துவத்தையேனும் ஏற்படுத்துதல் வேண்டுமோ என்பது பற்றியே நாம் இங்கு ஆராய்தல் வேண்டும். நாம் காட்டிய பொதுக்காரணங்களைத் தவிர்த்தாலும், அம்மக்கட்கு வாக்குரிமை அளிக்கப்படுதலும், அவர்கட்குச் சமமான போதிய கல்வி வாய்ப்புக்கள் அளிக்கப்படுதலுமே அவர்களின் நிலையைச் சீர்திருத்துவதற்கான வழிகள் என்று நாம் கருதுகிறோம்.‘ (தொனமூர் அறிக்கை)
எனவே இங்கு நாம் போற்றிக் கொண்டாடுகின்ற தேசபிதாக்களை விட எம்மை பொருளாதார ரீதியாகச் சுரண்டி ஆட்சி செய்த காலனித்துவ வாதிகள் மக்களின் அரசியல் சுதந்திரத்தையும் சமூக விடுதலையையும் கூடுதலாக நேசித்துள்ளார்கள் என்பது தெளிவாகின்றது.
இவ்வாறு சுதந்திர இலங்கைக்கு முற்பட்ட காலம் தொடக்கம் யாழ்ப்பாண அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் கிழக்கு மக்களை ஒரு பொருட்டாக கணக்கிலெடுக்காததுடன் அவர்களுக்கான உரிமைகளையும் சுதந்திரங்களையும் இல்லாமலாக்குகின்ற நடவடிக்கைகளையே மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். இவ்வாறான நடவடிக்கைகளை அவரவர் தனிமனித நடத்தை அல்லது தவறு என்று இலகுவாகக் கடந்து போக முற்படுவது யாழ் மேலாதிக்கவாதத்தை பாதுகாக்கின்ற கபடத்தனமே தவிர வேறில்லை.
வடக்கிலிருந்து கிழக்கின் வேறுபட்ட பண்பாடு, கிழக்கு மக்களை இனம், மதம், மொழி என்ற வேறுபாடுகள் கடந்து மனிதத்துவம் என்கின்ற உயர்ந்த பண்பாட்டுக்குரியவர்களாக ஆக்கியிருப்பதையும் நாம் கிழக்குப் பண்பாட்டில் காணக்கிடக்கின்றது.
‘கி.பி.1626 – மட்டக்களப்புத் தேசத்தில் முஸ்லிம்களின் குடியேற்றம் நிகழ்கிறது. சுமார் 4000 பேர் குடியேற்றப்படுகின்றனர். வடமேற்குப் பிரதேசத்திலிருந்து போர்த்துக்கீசரால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை கண்டி மன்னன் மட்டக்களப்பு வன்னியர்களின் துணைகொண்டு குடியேற்றினான் எனக் கூறப்படுகின்றது’ (வெல்லவூர்க் கோபால், மட்டக்களப்புத் தேசம் வரலாறும் வழக்காறும்) ஆனால் சங்கிலியனுடைய ஆட்சிக் காலத்தில் மன்னார் மாவட்டத்தில் போத்துக்கீசரால் மதம் மாற்றப்பட்ட தமிழர்கள் 1000க்கு மேற்பட்டவர்கள் சிரச்சேதம் செய்யப்பட்டார்கள் என்ற தகவலையும் அறியக் கூடியதாக இருக்கின்றது.
இந்த இரு சம்பவங்களிலிருந்தும் நாம் அறிவது என்னவென்றால் மட்டக்களப்பு மக்களிடம் இனம், மதம், பிரதேசம் என்ற பாகுபாடுகளைக் கடந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் கொடுத்துதவிய மனிதாபிமானத்தைக் காண்கின்றோம். ஆனால் யாழ்ப்பாணத்து மக்கள் மதவெறி பிடித்து தங்கள் சொந்த இனத்தை, சொந்த மொழியைக் கொண்டிருந்த தமது சகோதரர்களையே கொலை செய்திருக்கிறார்கள்.
இது போன்றே, சாதியமைப்பை யாழ்ப்பாணத்து வேளாளர்கள் அனைவரும் வலுவாகக் கடைப்பிடித்துப் பேணிய போது மட்டக்களப்பில் பிறந்த விபுலாநந்தர் அதனை தூக்கியெறிந்து விட்டு எல்லோரையும் சமமாகப் பேணிய முறையினைப் பார்க்கின்றோம்.
‘1930இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக கடமைபுரிந்த காலத்தில் திருவேட்களத்தில் ஒதுக்கப்பட்ட ஆதித் திராவிடர்கள் வாழுகின்ற சேரிகளுக்குச் சென்று பாலர்கள் படிக்க பள்ளிகள் ஏற்படுத்தினார். இதனால் கல்வியறிவு பெறவாய்ப்பில்லாது ஒதுக்கப்பட்டிருந்த தாழ்த்தப்பட் மக்களுக்கு கல்வியறிவு கிடைக்க வழி காட்டினார். அவருக்கு சிதம்பரம் தாலுகா வேட்களம் ஆதித் திராவிடர்களின் சார்பாக அளிக்கப்பட்ட பிரிவுரை வாழ்த்தில், ‘தம் நலம் பேணும் பார்ப்பனர்களால் சண்டாளர்கள் என்றழைக்கப்படும் எங்களை அழைத்துத் தங்கள் வீட்டினுடனிருத்தி விருத்துண்ட சாட்சியும் உவகையும் எங்கள் கண்களையும் மனதையும் விட்டு அகலுமோ?… எங்கள் முன்னேற்றத்துக்கென தங்களால் தொடங்கப்பட்ட இரவுப் பள்ளி என்றும் வளர்ந்து ஓங்குவதற்குரிய வழியொன்று தாங்கள் தேடுவதோடு, ஈழத்தீவிலும் தங்களால் நடாத்தப்படும் பள்ளிகளில் எங்குல மாணவர் பலரை சேர்த்துக்கொள்ளும் படியும் வேண்டுகிறோம்.’ கூறப்பட்டதாக பேராசிரியர் சி.மௌனகுரு குறிப்பிடுகின்றார்.
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் நண்பராகிய யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மரணமடைந்த பின்பு அவர் ஞாபகமாக எழுதிய,
‘ஒழுக்கத் துயர்குலமாம் ஓங்குபுக ழுண்டாம்
இழுக்கத் திழிகுலமாம் என்றே – விழுப்பத்து
நூற்குலத்தை யெல்லாம் நுணுகியறிந் தாறுமுகன்
மேற்குலத்த னானான் விரைந்து’
என்ற இந்தப் பாட்டுக்கள் அச்சாகி வெளிவந்ததுதான் தாமதம் முதலியாரும் இந்து வாலிப சங்க நிருவாகிகளும் முண்டியடித்துக் கொண்டு வந்து என்னை இந்து வாலிபர் சங்கத்திலிருந்து வெளியேற்றிவிட்டார்கள். இதுதான் அரை நூற்றாண்டின் முன்பிருந்த யாழ்ப்பாணச் சமூகநிலை. மட்டக்களப்பில் இந்த ஏற்றத் தாழ்வு கிடையாது. மட்டக்களப்பின் இந்தச் சமூக வாழ்க்கை நிலை தென்னகத் தமிழ் மக்களும் தெரிந்து கொண்ட செய்தியாகும்’ (பெரியதம்பிப்பிள்ளை.ஏ. உள்ளதும் நல்லதும்)
இந்தச் சம்பவத்தினால் பாதிப்புற்ற புலவர்மணியவர்கள் மட்டக்களப்பின் பெருமைபற்றி பின்வருமாறு பாடுகின்றார்.
‘கோயிலிலும் பள்ளி
குளங்களிலும் நீர் பெருகிப்
பாயும் நதியில்வயற்
பண்ணையிலும் – போயொருங்கோர்
தாய்வயிற்றுப் பிள்ளைகள்போல்
சார்ந்துசம மாயெவரும்
நேயமுடன் வாழும்
நிறைநாடு – தூயமனச்
சிட்டர் புகழும்
திருநாடு செந்தமிழ்வாழ்
மட்டக் களப்பென்னும்
மாநாடு’
நான் வெளியேறியதைப் பற்றிய கவலை எனக்கில்லை. விசாலமான இந்த உலகத்திலே மக்கள் பலர் ஏன் ஒடுக்கமான கொள்கையுடன் வாழ்கிறார்கள்? என்பது பற்றிய கவலைதான் எனக்கு.’ (பெரியதம்பிப்பிள்ளை.ஏ. உள்ளதும் நல்லதும்)
தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தளவில் மேற்படி சிந்தனையும் மனிதாபிமானமும் கிழக்குச் சமூகத்தில் பிறந்து வளர்ந்தவர்களிடத்தில்தான் வரமுடியும் என்பதற்கு சுவாமி விபுலாநந்தரும் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையும் உதாரணங்களாக இருக்கின்றனர்.
எனவே எல்லாவகையிலும் வடக்கும் கிழக்கும் இருதுருவங்களாகவே இருந்து வந்திருக்கின்றன. இந்த இரு துருவநிலையில் பதவியிலும் பணத்திலும் செல்வாக்கிலும் கூடிய யாழ் வேளாளர்கள் கிழக்கை எவ்வளவுக்கு தீர்த்துக் கட்ட முடியுமோ அவ்வளவுக்குத் தீர்த்துக்கட்டியே வந்துள்ளனர். இதனை நல்லையா போன்ற தலைவர்கள் நன்கு விளங்கிக் கொண்டனர். ஆதனால்தான் 1944ம் ஆண்டு மட்டக்களப்பில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் அங்குரார்ப்பணக் கூட்டத்தினை ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் கூட்டியபோது ‘நல்லையா மேசையொன்றின் மேல் எழுந்து நின்று கைத்தடியால் மேசையைத் தட்டி ஆரவாரித்து ‘இங்கே யாழ்ப்பாணத்தாருக்கு என்ன அலுவல்? எல்லோரும் வெளியேறுங்கள்’ என தன் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார். இவ்வாறு நல்லையா அவர்கள் நடந்து கொண்டமைக்குக் காரணம் வரலாறு முழுக்க இந்த மேலாதிக்க வாதிகளால் கிழக்குக்கு ஏற்பட்ட கெடுதல்களினாலேயாகும்.
தமிழரசுக் கட்சியினர் தமிழீழப் பிரகடனத்தை மேற்கொண்ட போது, ‘இது நடைமுறைக்கு ஒவ்வாது எமது நாட்டைச் சீரழித்து விடும்’ என கே.டபிள்யூ.தேவநாயகம் கூறி அதனை தீர்க்க தரிசனத்துடன் ஏற்றுக்கொள்ள மறுத்ததும் இந்த வராலற்றுப் பட்டறிவின் காரணத்தினாலேயாகும்.
எனவே பிரதேசவாதத்தின் தொடக்கம் என்பது கட்சி அரசியலில் இருந்தோ அல்லது கிழக்கின் தனிநபர் அரசியலில் இருந்தோ அல்ல. மாறாக அது யாழ்ப்பாணப் வேளாளப் பண்பாட்டிலிருந்து உருவாகியிருக்கின்றது. இந்தப் பண்பாடும் அவர்களது தலைமைத்துவமும் கிழக்கு மக்களை மட்டும் சீரழிக்கவில்லை ஒட்டுமொத்த ஈழத் தமிழர்கள் அனைவரையுமே சீரழிக்கின்றது. இந்தச் சீரழிவிலிருந்து நாம் மீண்டு வருவதற்காகவே நாம் யாழ் மேலாதிக்கத்தை தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாக்குகின்றோம். அடுத்த பதிவில் சுதந்திர இலங்கையில் யாழ் மேலாதிக்கம் மொத்த தமிழர்களுக்கும் செய்த துரோகத்தனங்கள் பதிவிடப்படும்.
(தொடரும்…)