— சு.சிவரெத்தினம் —
மாட்டால் சூடு மிதித்து
வேலகாரன் கம்பால் வைக்கோல் வாட்டி
அவுரிவைத்து நெல்லுத் தூற்றி
கூளன்
பதறு
கால் வயிறன்
அரைவயிறன்
கந்துமுறி
முதலாம் பொலி
இரண்டாம் பொலி
என வகுத்து
குண்டு போல் நெல்லை
பட்டறையில் கட்டுவோம்.
பட்டறையை அவிட்டால்
முத்துப் போல நெல்மணிகள்
பொன்னாகக் குவிந்திருக்கும்.
இப்போ
வெட்டு மெசினால்
வெட்டிக் குவிக்கிறார்கள்
கூளன்
பதறு
கால் வயிறன்
அரைவயிறன்
புல்லுக் கொட்டை
எல்லாம் ஒரு மூட்டையில்
வக்கில் போட்டு வடித்தெடுத்தால் மட்டும்
நல்ல நெல்லை நாம் பார்க்கலாம்.
மெசின் வெட்டுப் போல
நமது சமூகம்
கூளன்
பதறு
கால் வயிறன்
அரைவயிறன்
புல்லுக் கொட்டை
நெல்லு
என எல்லாம் ஒன்றாய்
வக்கு
எனது அனுபவம்
தண்ணீரின் ஆழம்
எனது அனுபவத்தின் ஆழத்தைப் பொறுத்து
மூடை மூடையாகக் கொட்டுகின்றேன்
மூடை மூடையாக புல்லுக் கொட்டை
மூடை மூடையாகக் கூளன்
மூடை மூடையாகப் பதறு
மூடை மூடையாகக் கால் வயிறன் அரை வயிறன்
அங்கொன்றும் இங்கொன்றுமாக
ஓரிரு நெல் மணிகள்
எதை நோவேன்?
விவசாயியையா?
வெட்டு மெசினையா?
விளைவித்த வயலையா?
அல்லது
என் வக்கையா?