50 ஆண்டுகளாக மாறாத ஆட்டம்: அமிர்தலிங்கம் முதல் அடைக்கலநாதன் வரை…

50 ஆண்டுகளாக மாறாத ஆட்டம்: அமிர்தலிங்கம் முதல் அடைக்கலநாதன் வரை…

ஆடும் முறை மாறவில்லை! ஆனால் ஆட்டம் தொடர்கிறது!!

  — தேசம்நெட் ஆசிரியர் த. ஜெயபாலன் — 


கிரேக்கத் தத்துவஞானி சாக்கிரட்டீஸ் தன்னை ஒரு மேதை என்றார். அவர் தான் அவ்வாறு எண்ணியதற்கு என்ன காரணம் என்பதையும் மிகத்தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, “எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்கு நன்கு தெரியுமாதலால் நான் ஒரு மேதை – I know that I am intelligent, because I know that I know nothing” என்கிறார் சாக்கிரட்டீஸ்.  

தனக்கு ஒரு விடயம் தெரியாது என்பதை உணர்ந்த ஒருவரே அந்த விடயத்தைத் தேடுவதற்கும் அறிவதற்கும் தூண்டப்படுவார். அதன் மூலம் அறிவை வளர்த்துக்கொள்வார். ஆனால் தனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்று நம்புவவர்களிடம் தேடல் இருக்காது அறிவும் வளராது. இன்றும் சிறந்த விஞ்ஞானியாகக் கருப்படும் ஐசாக் நியூட்டன் கூட எமது மூதாதையர் குறிப்பிட்டது போல கற்றது கைமண் அளவு கல்லாதது உலக அளவு என்றே கூறுகின்றரர். இன்னும் கற்பதற்கும் அறிவதற்கும் நிறைந்த விடயங்கள் இருக்கின்றன என்பதையே அது குறிக்கின்றது.

ஆனால் தங்கள், தங்கள் கிணற்றுக்குள் வாழும் தமிழ் தேசிய வாதிகளோ தாங்கள் அனைத்தும் அறிந்துவிட்ட தோரணையில் அறிக்கைவிடுவதும் முடிந்த முடிவாக கருத்துக்களை முன்வைப்பதும் வேடிக்கையாக உள்ளது. இது ஒருவகை அதிமேதாவித்தனக் கோளாறு – superiority complex. பட்டும் இன்னமும் புத்தியில் தெளிவில்லை. சில சமயம் இது இவர்களுக்கு தீர்க்க முடியாத மரபணு சம்பந்தப்பட்ட பிரச்சினையாகவும் இருக்கலாம்.

இந்தப் பழமொழி அரசியல் அடிப்படையில் தவறு என்றாலும் தமிழ் தேசியத்திற்கு பொருத்தமாக இருப்பதால் குறிப்பிடுகிறேன். ‘குருடன் பெண்டிலுக்கு அடித்தது போல’ தமிழ் தேசியவாதிகள் எப்போதாவது சொல்லுவது, கத்துவது சரியாக இருந்துவிடுவதும் உண்டு. அதை வைத்துத்தான் அவர்களது அரசியல் பிழைப்பு நடக்கின்றது. ஆனால் தமிழ் மக்களுக்கு இவர்களால் எப்போதுமே இழப்புத்தான். உயிரை வகைதொகையின்றி இழந்தனர். அளவில்லாத உடைமைகளை இழந்தனர். இப்போது எஞ்சியிருக்கின்ற உரிமைகளை இழக்கின்றனர். பொருளாதாரத்தை இழக்கின்றனர். கல்வியை இழக்கின்றனர்.

தமிழ் மக்களின் உரிமைகளை, பொருளாதாரத்தை, கல்வியை அழிக்கின்ற விடயத்தை மிகச்சிரத்தையாக செய்துவருகின்றனர்இந்த தமிழ் தேசியவாதிகள்.  

பாராளுமன்றத்திலும் மாகாணசபையிலும் இவர்கள் தங்களை வளர்த்துக் கொண்டு மக்களை அழித்தனர். அரசியல் என்பதன் அடிப்படையே இயலாததை இயலுமாக்கும் திறன் – politics is the art of making imposible posible என்பதை உணராமல், தங்களை வளர்க்கும் திறன் என்று புரிந்து வைத்துள்ளனர். இவ்வளவு காலத்தில் இவர்கள் தங்களையும் ஒன்றும் பெரிய அளவில் வளர்த்துக் கொண்டதாகத் தெரியவில்லை. வைக்கோல் பட்டறையைச் சுற்றிச் சுற்றி வந்து குரைப்பவர்களாகவே உள்ளனர்.

இந்த லட்சணத்தில் மாவை சேனாதிராஜா வாரிசு அரசியலுக்கும் மகனைக் களமிறக்கி உள்ளார். மாவை சேனாதிராஜா ஒன்றும் தன் திறமையால் முன்னுக்கு வந்தவரல்ல. தனக்கு மேலுள்ளவர்கள் சுட்டுக்கொல்லப்பட, படிப்படியாக முன்னுக்கு நகர்ந்தவர். இதேபாணியில் இப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி எப்போது பாடையில் ஏறுவார் தான் எப்போது பதவியேற்கலாம் என்று லண்டனில் இருந்து வந்த சாதிமான் எஸ்.அரவிந்தன் கிளிநொச்சியில் காத்துக்கிடக்கின்றார். இவருக்கு அரசியலுக்கு வர உள்ள ஒரே தகுதி யாழ்ப்பாண மேயர் செல்லன் கந்தையனை தன்னுடைய நண்பர் தங்கமுகுந்தனோடு சேர்ந்து அடித்ததே.

தங்கமோ பித்தளையோ முகுந்தன் யாழ்பாண நூலகம் எரிக்கப்பட்ட நாளை மாற்றி வைப்பேன் என்று சன்னதம் ஆடுகின்றார். மே 31 1981இல் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதை யூன் 1இல் எரிக்கப்பட்டது என்று எழுதி நூலக எரிப்பின் சூத்திரதாரிகளான காமினிதிஸ்சநாயக்காவைவும் சிறில் மத்தியூவையும் காப்பாற்ற முனைகின்றார். அ.அமிர்தலிங்கம் மே 31 முதல் யூன் 2 வரை நடந்த சம்பவங்களை தொகுத்து குறிப்பிட்டுள்ளார். அதில் அ.அமிர்தலிங்கத்திற்கே எந்த நாள் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது என்பதில் உறுதி இருக்கவில்லை. அப்போதைய ஈழநாட்டின் தவறான செய்தியின் அடிப்படையிலேயே இந்தக் குழப்பம் ஏற்பட்டது. இவ்வாறு தான் தமிழ் தேசியம் புனைவுகளையே வரலாறாக்க கொக்கரிக்கின்றது. இப்படி சொந்த விடயங்களிலேயே விவரம் போதாதவர்கள் தற்போது வெளிவிவகாரம் பற்றியும் பேச ஆரம்பித்து விட்டனர்.

தமிழ் தேசியம் எப்போதும் பிரச்சினைகளைத் தணிக்க அல்லது தீர்த்துவைக்க விரும்புவதில்லை. எப்போதும் முரண்பாட்டை மோசமடையச் செய்யும் வகையிலேயே செயற்படும். அதற்கு அவர்களது அரசியல் போதாமை முக்கியகாரணம். 1980களில் அவர்களுடைய சமன்பாடு ‘எதிரியின் எதிரி, தங்களின் நண்பன்’. இந்த உளுத்துப்போன சமன்பாட்டைத்தான் அவர்கள் இன்றும் கடைப்பிடிக்கின்றனர். இலங்கை அமெரிக்காவின் நண்பன். இந்தியாவின் எதிரி. அதனால் இந்தியாவுக்கு சேவகம் செய்து, இந்தியாவை தமிழர்களின் நண்பனாக்கினால் தமிழர்களின் பிரச்சினையை, இந்தியா தீர்த்து வைக்கும். இதுதான் அன்று முதல் இன்று வரை தமிழ் தேசியம் பின்பற்றுகின்ற சமன்பாடு.

இந்தியாவின் அரசியல் வாரிசான ராஜீவ் காந்தியயைப் படுகொலை செய்த பின்னரும் கூட இந்தக் கூட்டம் இந்தச் சமன்பாட்டை மாற்றவில்லை. ராஜீவ் படுகொலை ஒரு துன்பியல் சம்பவம். ”கள்ளத்தோணிகள், தோட்டக்காட்டான்கள், வடக்கத்தையான்’ என்றெல்லாம் நாங்கள் செல்லமாகத்தான் கூப்பிடுகிறோம். மற்றும்படி நாங்களும் நீங்களும் நண்பர்கள் தான். எங்களுக்கு ஒன்றென்றால் தமிழகம் கொந்தளிக்கும்” என்றெல்லாம் இவர்கள் சில பஞ்டயலக் வைத்து அரசியல் செய்ததைவிட இவர்களிடம் ஒரு துளி அரசியல் தெளிவும் இருந்ததில்லை.

சங்கானை நிச்சாமத்தில் சாதியப் போராட்டத்திற்காக குண்டெறிந்த பொழுது அ.அமிர்தலிங்கம் சங்கானையை சங்ஹாய் ஆக்குகிறார்கள் என்று புலம்பினார். இன்றோ யாழ்ப்பாணத்தில் சீனா பனிப்போர் தொடுக்கிறது என்று முன்னாள் மாகாணசபை அமைச்சர் அனந்தி அறிக்கை விடுகின்றார். கடந்த 50 ஆண்டுகளில் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் மாறியிருக்கிறார்களே அல்லாமல் அவர்களுடைய அரசியலில் எந்தவித மாற்றமும் இல்லை.

2009இல் தமிழ் தேசியம் முள்ளிவாய்க்காலில் மண் கவ்வியதை அவர்களால் இன்றும் ஜீரணிக்க முடியவில்லை. தங்களுடைய அரசியல் போதாமையின் விளைவே இது என்பதை அவர்கள் இன்றும் ஏற்றுக்கொள்ளவில்லை. கீ போர்ட் மார்க்ஸிட்டுக்களும் தமிழ் தேசியப் பூநூல் அணிந்த காலம் அது. மதியுரைஞர் பாலசிங்கத்தின் இடத்தை நிரப்ப கீ போர்ட் மார்க்ஸிட்டுக்களுக்கு ஊடகம் ஒன்றில் நேர்முகத் தேர்வுகள் பல நடந்தன. காற்றடிக்கும் பக்கம் சாய்ந்து இவர்கள் தமிழ் தேசியத்துக்கு மார்ஸிய மூலாம் பூசினர். பூசிய மூலாம் கழன்று, தமிழ் தேசியம் வேகமாகக் கறள்பிடித்தது. இந்த கீ போர்ட் மார்க்ஸிட்டுகள் இன்று கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சியில் ‘ஓர்கானிக்’ வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். வறுமையில் வாழும் மாணவர்களுக்கு கல்வியூட்டுவதே அரசுக்கு துணைபோகும் என்று புரட்சிகர தமிழ் தேசியம் பேசியவர்கள் இன்று, ஓர்கானிக் தமிழ் தேசியப் புரட்சியில் மும்மரமாக ஈடுபட்டு உள்ளனர்.

கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் தேசிய அரசியல்வாதிகள், ஆய்வாளர்கள், கீ போர்ட் மார்க்ஸிஸ்டுக்களும் அ.அமிர்தலிங்கம் விட்டுப்போன சமன்பாட்டையே பயன்படுத்துகின்றனர். இந்தச் சமன்பாட்டில் எதிரியும் நண்பர்களும் மாறிவிட்டனர். இலங்கைக்கு இப்போதும் இந்தியாதான் எதிரியாம். அமெரிக்கா உட்பட மேற்குநாடுகளும் இலங்கைக்கு எதிரியாம். சீனா தான் இலங்கையின் நண்பனாம். அதனால் சீனாவுக்கு எதிராக தமிழ் மக்கள் கிளர்ந்து எழுந்து இந்தியாவையும் அமெரிக்க நேசநாடுகளையும் குசிப்படுத்தினால், அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பார்களாம். இதுதான் தமிழ் தேசியவாதிகளான பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் முதல் அனைவரதும் முடிவான நிலைப்பாடு. இந்தப் பின்னணியில் தான் இவர்கள் இப்போது கத்தி வருகின்றனர்.

இந்தப் பின்னணியில் வைத்துத்தான் “தமிழ் தேசியவாதிகள் ஏன் அறிக்கை விடுகின்றனர்; கத்துகின்றனர்; ஏன் அறிக்கைவிடவில்லை; கத்தவில்லை” என்பதைப் பார்க்க வேண்டும். வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் “இலங்கை அரசாங்கம் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியாவை எதிர்த்து சீனாவின் பக்கம் நிற்பதனாலேயே கொரோனா தடுப்பூசிகளை வழங்க குறித்த நாடுகள் முன்வருவதில்லை” என்று முற்று முழுதான பொய்யான தகவலை வெளியிட்டது வேறொன்றுக்கும் அல்ல. அமெரிக்க, பிரித்தானிய நேச நாடுகளையும் இந்தியாவையும் குசிப்படுத்தி அவர்களுடைய தூதரகங்களில் கவனத்தைப் பெறவே.

உலகின் செல்வந்த நாடுகளான அமெரிக்க, பிரித்தானிய நேச நாடுகளின் கூட்டத்தொடர் பிரித்தானியாவின் சுற்றுலாக் கடற்கரைப் பிரதேசமான கோன்வோலில் நடைபெறுகின்றது. அங்கு வைத்துத் தான் இந்த நேசநாடுகள் ஒரு பில்லியன் (பத்துக்கோடி) வக்சீன்களை வறிய நாடுகளுக்கு வழங்க முன்வந்தன. இந்த உதவியைச் செய்ய முன் வந்தமைக்கு காரணமே எங்கே சீனா இந்நாடுகளுக்கு வக்சீனை வழங்கி ராஜதந்திர ரீதியில் தங்களை தோற்கடித்துவிடும் என்ற பயத்தினால் என்பதை பிரித்தானியாவின் முன்னணிப் பொருளியல் பத்திரிகையான ‘பினான்சியல் ரைம்ஸ்’ நேற்று முன்பக்கத்தின் தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. இன்னும் பல ஊடகங்களும் இதனை வெளியிட்டு இருந்தன. இந்த செல்வந்த நாடுகளின் மாநாட்டில் சீனா இடம்பெறாத போதும், இம்மாநாட்டில் சீனாவே ஆளுமை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஆபிரிக்க ஒன்றியம் இந்தச் செல்வந்த நாடுகளின் உதவியை வரவேற்றிருந்த போதும், இந்நாடுகளின் போக்கை ‘தடுப்பூசி இனவாதம்’ என பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் கண்டித்து இருந்தது. நோயைக் கட்டுப்படுத்தும் வக்சீனை ஏனைய நாடுகள் உருவாக்கத் தடைவிதித்துவரும் இந்தச் செல்வந்த நாடுகள், உலக சுகாதார ஸ்தாபனம் கேட்டுக்கொண்டதன் பத்து வீதத்தையே வறிய நாடுகளுக்கு கையளிக்க முன்வந்துள்ளன. அதுவும் எப்போது இந்நாடுகளைச் சென்றடையும் என்பது இன்னமும் புதிராகவே உள்ளது. சீனாவும் ரஸ்யாவும் தங்களது வக்சீனை வறிய நாடுகளுக்கு வழங்கி வருவதால் தான் இந்தச் செல்வந்த நாடுகள் தங்கள் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள குறைந்தளவு வக்சீனை அதுவும் காலதாமதமாக வழங்க முன்வந்தன.

யாழ்ப்பாணத்தில் இந்தியா – சீனா இடையே பனிப்போருக்கான வாய்ப்பு என்று அனந்தி சசிதரன் யூன் 11இல் யாழ் ஊடகம் ஒன்றில் வெளியிட்ட கருத்துக்களும் இந்தப் பின்னணியிலேயே நோக்கப்பட வேண்டும். செல்வந்த நாடுகளின் தூதராலயங்கள் சார்ள்ஸ் நிர்மலநாதன், அனந்தி சசிதரன் போன்ற விபரமும் விவேகமுமற்றவர்களைக் கொண்டு அந்தந்த நாடுகளில் தங்களுக்கான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றன.

திருகோணமலை சம்பூரில் அனல் மின்நிலையம் அமைக்கப்படுவது தொடர்பிலும் திருச்சியில் விடுதலை செய்யுங்கள் அல்லது எங்களை கருணைக்கொலை செய்யுங்கள் என்று கூறும் இலங்கைத் தமிழ் அகதிகள் விடயத்தில் தமிழ் தேசியவாதிகள் மௌனமாக இருப்பதும், இதனால் தான். இந்த அகதிகளோடு தொலைபேசியில் உரையாடியதாகக் கூறும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளிப்படையாக எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

இந்த ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற சமன்பாட்டில் அரசியல் விபரமும் விவேகமுமற்ற அ.அமிர்தலிங்கம் முதல் செல்வம் அடைக்கலநாதன் வரை பிரபாகரனின் முன்னாள் ஆலோசகர் மு.திருநாவுக்கரசு உட்பட எல்லாத் தமிழ் தேசியவாதிகளும் இந்தியாவின் தாளத்துக்கு தப்பாமல் ஆட்டத்தை தொடர்கின்றனர்.

அகர வரிசையில் அனந்தி முதல் உயிர்மெய் வரிசையில் கடைசியில் வரும் விக்கினேஸ்வரன் வரை தமிழ் தேசியத்தை தூக்கிப்பிடிப்பவர்கள் தாங்கள் வாழும் கிணற்றுக்கு வெளியே பெரியதொரு உலகம் இருக்கின்றது என்பதை ஒரு போதும் எண்ணிப் பார்க்காமலேயே வாழ்ந்தும் கத்தியும் பழகிவிட்டனர். இந்த இருவருக்கும் இடையேதான் மற்றைய தமிழ் தேசியவாதிகளும் தங்கள் தங்கள் கிணற்றுக்குள் வாழ்ந்தும் கத்தியும் வருகின்றனர். இவர்களது கத்தல்களையும் புலம்பல்களையும் காதுகுத்து மற்றும் மரணச் செய்திகளுக்கிடையே வெளியிடுவதற்கு சில ஊடகங்கள் காத்திருக்கும் அளவுக்குத் தான் தமிழ் தேசியத்தின் இருத்தல் இருக்கின்றது. தமிழ் தேசியத்துக்கு கிடைத்த ஒரேயொரு மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தையும் தலைவர் துரத்திவிட்டதும் அவர் இயற்கை எய்தியதும் வரலாறாகிப் போனபின் அந்த இடம் இன்னமும் வெற்றிடமாகவே உள்ளது. அந்த இடத்தை நிரப்ப பலர் போட்டி போட்டாலும் யாராலும் அதனை நிரப்ப முடியவில்லை. இப்போது அதற்குத் தேவையும் இல்லாமல் போய்விட்டது. தமிழ் தேசியம் இப்போது அல்ஸைமர் எனும் ஞாபகமறதி நோய் (தமிழில் அறளை பேர்ந்துவிட்டது என்றும் சொல்வார்கள்)க்கு ஆளாகிவிட்டது. அவர்களுக்கு பழையதும் ஞாபகம் இருக்காது. தாங்கள் என்ன கதைக்கின்றோம் என்பதும் ஞாபகம் இருக்காது. அதனால் அவர்கள் அரசியலில் இருந்து சுகவீன விடுமுறையில் செல்வது அவர்கள் தமிழ் மக்களுக்கு செய்யும் பேருதவியாக இருக்கும்.