— அழகு குணசீலன் —
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை ………….!
வாகரை!
மட்டக்களப்பு தமிழகத்தின் வடக்கே ஒரு குக்கிராமம் மட்டுமல்ல பண்டைத் தமிழர் வரலாற்றின் சாட்சியமும் கூட. கடந்த வாரத்தில் உலகத் தமிழர் மத்தியிலும், சர்வதேச அரசியலிலும் பேசப்பட்ட ஒரு கிராமம். தான் பிறந்த அந்த மண்ணை சர்வதேச பேசுபொருளாக்கிய பெருமைக்குரியவர் ஜோர்ஜ் கபிரியேல் என்ற அந்த மண்ணின் மைந்தன்.
இந்த பத்தியை எழுதத் தூண்டியது ஜோர்ஜ் வாகரையில் இருந்து வெள்ளை மாளிகை வரை படைத்த வரலாற்று சாதனை எனினும், எனக்கும் கபிரியேல் ஐயா குடும்பத்திற்கும் இருந்த எள்ளளவான தொடர்பும், மட்டக்களப்பின் படுவான்கரையின் மற்றொரு மூலையில் அமைந்திருந்த நான் பிறந்த முனைக்காடு குக்கிராமத்திற்கும் கபிரியேல் ஐயாவுக்கும் உள்ள தொடர்பும் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
1960களின் இறுதி ஆண்டுகள் அவை. முனைக்காடு மெ.மி.த.க. பாடசாலையின் அதிபர் ஓய்வு பெற்று செல்கிறார். பாடசாலைக்கு புதிய அதிபர் ஒருவர் வருகிறார். அவர்தான் ஜோர்ஜின் தந்தை கபிரியேல் ஐயா. நல்ல உயரம், பஞ்சு மெத்தை தலைமுடி, வெள்ளை வேட்டி, வாலாமணி அனேகமான அன்றைய ஆசிரிய அடையாளம்.
இத்தனைக்கும் தமிழ் ஆசிரியன் அல்ல. ஆங்கில ஆசிரியன். ஆங்கில மொழிவளம் வற்றாத நதியாய் சலசலத்து பாயும். அப்போதுதான் கல்வியின் அர்த்தத்தை முனைக்காடு புரிந்துகொண்டு கண்களைத் திறந்து கொண்டது.
உடல், உளம், மூளையை ஒருங்கிணைத்த முழுமைப் படுத்தப்பட்ட கல்வி.
வழமையான வகுப்புக்கல்வி, பாடசாலை முடிந்த பின் வீட்டுவேலையும், மேலதிக ஆங்கில வகுப்பும், இன்னும் மாலையில் கலைப்பயணம்.
வசந்தன், கும்பி, கோலாட்டம். கிராமத்தின் சிந்தாத்துரை ஐயாவும், சிவசம்பு ஐயாவும் கபிரியேல் ஐயாவின் கலைக்கல்விக்கு உறுதுணையாக இருந்தார்கள்.
பாடசாலைக்கு வருகைதராத மாணவர்களின் வீடுகளுக்கு எங்களையும் அழைத்துக்கொண்டு செல்வார். பெற்றோரோடு பேசுவார். பிள்ளைகள் வருகை தராத காரணத்தை கேட்டறிந்து தீர்வு காண்பார். இரவில் குப்பி விளக்கில் இரவுப்படிப்பு இடம்பெறும். படிப்பு முடிந்த பின்னர் நாங்கள் ஆண் மாணவர்கள் அவரோடு பள்ளியிலேயே தங்கிவிடுவோம்.
இத்தனைக்கும் கல்குடா தொகுதியின் அன்றைய அரசியல்வாதி அவரை தண்ணியில்லாத ஊருக்கு — முனைக்காட்டிற்கு அரசியல் இடமாற்றம் செய்திருந்தார். ஆனாலும் அவர் தன் கல்விப்பணியில் எந்த சோர்வையும் காட்டவில்லை. சம காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட பிரயாணிகள் சங்கத் தலைவராகவும் இருந்தார். பின்னர் அவர் பன்குடாவெளி பாடசாலையில் இருந்து ஓய்வு பெற்ற பின், கல்குடா தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் பொதுத்தேர்தலில் போட்டியிட்ட போதும் வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதிகாலை எழுந்து உடற்பயிற்சி முடித்து அதற்குப் பின் வீடு சென்று மீண்டும் வருவோம். பாடசாலை தொடங்கும். வெள்ளிக்கிழமை வாகரைக்குப் போவார், ஞாயிறு மாலை திரும்புவார். அவரை அழைத்து வருவதற்கு ஞாயிறு மாலை தோறும் சுமார் இரு மைல்கள் கால்நடையாக மண்முனைத் துறையடிக்கு சென்று அழைத்து வருவோம். மீண்டும் இரு மைல்கள் எங்களோடு சேர்ந்து நடப்பார்.
வார இறுதியிலும், பாடசாலை விடுமுறையிலும் மட்டும்தான் நாங்கள் வீட்டில். கபிரியேல் ஐயா எங்களுக்கு தாயாகவும், தகப்பனாகவும் இருந்தார். பாடசாலை விடுமுறைக்காலத்தில் நான் பல தடவைகள் வாகரைக்கு சென்றிருக்கிறேன். அதனால் அவரின் குடும்பத்தினரை அறிந்திருக்கிறேன். அந்த நாட்களில் ஜோர்ஜ்ஜை சந்திக்கின்ற வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.
“தந்தை மகற்காற்றும் உதவி தன் மகனை அவையத்து முந்தி இருக்கச் செயல்.” கபிரியேல் ஐயா தனது பிள்ளைகளுக்காக மட்டும் இந்த குறளை வரையறுத்துக் கொள்ளவில்லை. ஆயிரக்கணக்கான கிராமிய மாணவர்களை அவையில் முந்தி இருக்கச் செய்திருக்கிறார். அவர் முனைக்காட்டில் இட்ட விதை அப்பாடசாலையை தேசிய மட்டத்திலான ஒரு விருட்சமாக இன்று உயர்த்தி இருக்கிறது.
“மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல்லெனும் சொல்.” ஜோர்ஜ் கபிரியேல் அதிவிசேடமான வகையில் தந்தைக்கு இந்த மதிப்பையும் மரியாதையையும் வழங்கியிருக்கிறார். அவரது ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும் அவர் ஒரு கல்வித்தந்தையாக இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஊரார் பிள்ளைக்கு கல்வியூட்டினால் உன் பிள்ளை தானாக கற்கும் என்பார்கள். கபிரியேல் ஐயாவின் ஆசிரிய வாழ்விலும், ஜோர்ஜ்ஜின் இன்றைய வளர்ச்சியிலும் இது முற்றிலும் உண்மை.
PRESIDENT FELLOWSHIPS PROGRAMM:
இந்த நிபுணத்துவ புலமைப் பயிற்சி திட்டம் 1964 இல் ஆரம்பிக்கப்பட்டது. அன்றைய அமெரிக்க ஜனாதிபதி LYNDON B. JOHNSON இதனை ஆரம்பித்தார். அமெரிக்காவில் பல்வேறு புலமை ஊக்குவிப்புத் திட்டங்கள் உள்ள போதும் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியில் அதிமுக்கியத்துவம் கொண்ட சமஸ்டி அரச திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தலைமைத்துவம், பொதுச்சேவை, ஆளுமை, அனுவம் நிபுணத்துவம் ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஜனாதிபதியின் தேசியத் திட்டம் இது.
ஒவ்வொரு ஆண்டிலும் இந்த புலமைப் பயிற்சியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அமெரிக்க தலைமைத்துவத்திற்கு புடம் போடப்படுகிறார்கள். ஒரு வகையில் இது அமெரிக்க கருத்தியலை உட்பாய்ச்சுகின்ற மூளைச்சலவை. அந்த வகையில் இந்த ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட இருபத்தியிரண்டு பேரில் கலாநிதி ஜோர்ஜ் கபிரியேல் ஒருவராக ஜனாதிபதிபதி ஆணைக்குழுவால் 04.06.21இல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பரந்தளவான பின்னணி அறிவியல், நிறைந்த அனுபவம், அதிவிசேட தொழில்சார் தகுதி என்பவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கி இத்தேர்வு இடம்பெறுகிறது. அந்த வகையில் ஒரு இலங்கை அமெரிக்கருக்கு, அதுவும் மட்டக்களப்பு மண்ணின் சமூக, பொருளாதார, அரசியலில் பின் தங்கிய வாகரைக்கிராமத்தின் மண்ணின் மைந்தனுக்கு கிடைத்திருக்கின்ற இந்த வாய்ப்பு ஒரு வரலாற்றைப் பதிவு செய்கிறது.
இந்த வரலாற்றை ஜோர்ஜ் கபிரியேல் எழுதியிருக்கிறார் என்பது மட்டக்களப்பு மண்ணுக்கு கிடைத்த பெருமை மட்டுமன்றி, முழு இலங்கைத்தீவுக்கும் கிடைத்திருக்கின்ற பெருமையாகும்.
அமெரிக்காவை வேறுபட்ட பன்மைத்தன்மை ஆளுமை ஊடாக ஒரு பலமான நாடாக்குதல் என்பது இதன் அடிப்படை. இவர்கள் பயிற்சிக்குப் பின் வெள்ளை மாளிகை நிர்வாகத்தில், அமெரிக்க மத்திய சமஷ்டி நிர்வாகத்தில் தலைமைத்துவம் ஏற்று செயற்படுகின்ற அதி உயர் சமஷ்டி அதிகாரிகளாக இருப்பார்கள். இதற்கு ஜோர்ஜ் கபிரியேல் அவர்களின் நாற்பதாண்டுகால ஆய்வு அனுபவமும், இருநாட்டு சமூக, பொருளாதார, அரசியல் அனுபவமும் பெரும் பங்களிப்பைச் செய்யும் என்று பைடனின் வெள்ளைமாளிகை நிர்வாகம் எதிர்பார்க்கின்றது.
இவர்கள் அமெரிக்க கட்சி அரசியலுக்கு அப்பால் வெள்ளை மாளிகையில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் நிர்வாகத்திலும், அமெரிக்க காங்கிரஸில் குடியரசு, ஜனநாயக தரப்பினருடனும் அமெரிக்க நலனை முதன்மைப்படுத்திய பொதுச்சேவை தலைமைத்துவ அதி உயர் அதிகாரிகளாக இருப்பார்கள்.
இது பின்கதவால் இடம்பெறும் அரசியல் நியமனம் அல்ல. பகிரங்கமாக விண்ணப்பம் கோரப்பட்டு தேர்வு இடம்பெறுகிறது. விண்ணப்பிப்பவர்கள் ஆகக் குறைந்தது பின்வரும் தகுதிகளைக் கொண்டிருக்கவேண்டும்.
1. விண்ணப்பதாரி அமெரிக்க பிரஜையாக இருக்கவேண்டும்.
2. மத்திய சமஷ்டி அரசாங்கத்தில் வேலை செய்த அனுபவம் அல்லது முப்படைகளில் கடமையாற்றிய அனுபவம் தேவை.
3. ஆகக்குறைந்தது பல்கலைக்கழக இளமானி பட்டம்.
4. வயது எல்லை கவனத்தில் கொள்ளப்படுவதில்லை ஏனெனில் அனுபவம் இங்கு முக்கிய தகுதியாக கொள்ளப்படுகிறது.
5. விண்ணப்பத்துடன் மூன்று REFERENCE நபர்கள் பெயர் குறிப்பிடப்படவேண்டும். இவர்களில் ஒருவர் விண்ணப்பதாரியின் தொழில்துறை நிபுணத்துவம் சார்ந்தவர், ஒருவர் விண்ணப்பதாரியின் பூர்வீக சமுதாய அறிவுசார்ந்தவராக, மற்றையவர் விண்ணப்பதாரியின் தற்போதைய தொழில் துறை சார்ந்தவராக இருக்கவேண்டும்.
சராசரியாக ஆயிரம் விண்ணப்பங்களில் இருந்து வருடாவருடம் பதினொன்று முதல் பத்தொன்பது பேர் தெரிவுசெய்யப்படுவர். இம்முறை இருபத்தி இரண்டு பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயிற்சிக் காலம் முடிந்த பின்னர் வெள்ளை மாளிகை சிரேஷ்ட நிர்வாகியாக, அமைச்சுகளின் செயலாளர்களாக, அல்லது சமஸ்டி அரசாங்கத்தின் அதி உயர் அதிகாரிகளாக நியமனம் பெறுவர்.
கடந்த 55 ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட 816 பேரில் இன்னும் 763 பேர் உயிருடன் இருக்கின்றனர். இது வரையில் தேர்வு செய்யப்பட்டவர்களில் அதிகமானவர்கள் ஆபிரிக்க அமெரிக்கர்கள். இரண்டாவது இடத்தில் ஆசிய அமெரிக்கர்களும், மூன்றாவது இடத்தில் தென்னமெரிக்க அமெரிக்கர்களும், நான்காவது இடத்தில் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவர்களும் உள்ளனர்.
ஆசியா இரண்டாவது இடத்தில் உள்ளபோதும் இலங்கையர் ஒருவருக்கு அதுவும் ஒரு மட்டகளப்பாருக்கு கிடைத்திருப்பது எம் எல்லோருக்கும் பெருமையைத் தருகிறது. இத்திட்டம் வெளிநாடுகளின் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வியல் தத்துவங்களை புரிந்து கொண்டு உலக வல்லரசு ஒன்று தனது ஆதிக்க அரசியலை விரிவுபடுத்துவதற்கான ஒரு திட்டம் என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.
தென்கிழக்காசிய நெருக்கடியும், ஜோர்ஜ் கபிரியேலின் தெரிவும்
அமெரிக்க ஜோ பைடன் – கமலா ஹரிஷ் நிர்வாகத்திற்கு தென்கிழக்காசிய சமகால நெருக்கடிகளை கையாள்வதற்கு ஒருவர் தேவை. பிராந்திய பொருளாதார, அரசியலை மட்டுமன்றி சமூக விழுமியங்கள், மக்களின் வாழ்வியல் தத்துவங்கள், மதகோட்பாட்டு பெறுமதிகள், அதன் பின்னால் உள்ள உளவியல் என்பனவற்றை நன்கறிந்தவராக அவர் இருக்க வேண்டும். அந்த விழுமியங்களில் பிறந்து வளர்ந்த, அதேவேளை அமெரிக்க அரசியல் உளவியலை அறிந்தவரும், அந்த இடைவெளியை நிரப்பக் கூடியவருமாக ஜோர்ஜ் கபிரியேல் உள்ளார் என்பதுதான் இந்த நியமனத்தின் முக்கியத்துவம்.
தென்கிழக்காசிய பிராந்தியத்தில் சீனா, இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிக்கிறது. சர்வதேச எதிர்பார்ப்புக்களை மீறி மியான்மார் இராணுவ ஆட்சி தொடர்கிறது. கொங்கொங் விவகாரத்தில் சீனா கடுமையான போக்கை கொண்டுள்ளது. இந்தியா பசுபிக் பிராந்திய ஒத்துழைப்பு என்ற அமைப்பின் தோற்றத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் பட்டுவீதி விரிவாக்கம் தொடர்கிறது. சீனா பசுபிக் பிராந்திய ஒத்துழைப்பு கூட்டமைப்புக்கு தலைமை தாங்குகிறது.
இந்த அனைத்து விவகாரங்களிலும் இந்து சமுத்திர – அரபுக்கடல் பிராந்தியத்தில் இலங்கையின் அமைவிடம் அதி முக்கிய இடத்தை வகிக்கிறது. எனவே இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒருவரின் ஊடாக, பொதுவாக பிராந்தியத்திற்கும் சிறப்பாக இலங்கைக்கும் பொருத்தமான ஒரு அமெரிக்க அணுகுமுறை கொள்கை வகுப்பில் தேவையாக உள்ளது.
இலங்கைக்கு கொடுக்கப்படுகின்ற அமெரிக்க அழுத்தம் என்பது மறைமுகமாக சீனாவுக்கு கொடுக்கப்படுகின்ற அழுத்தம். ஐ.நா.வின் மனித உரிமைகள் தொடர்பான பிரேரணைகள், இந்திய இலங்கை உறவில் ஏற்பட்டுள்ள வெடிப்பு, போர்ட் சிட்டி விவகாரம், உள்ளிட்ட பிராந்திய அழுத்தங்கள் மட்டும்தான் என்று சொல்வதற்கில்லை.
அமெரிக்க காங்கிரஸில் தமிழீழம் குறித்த பிரேரணை, ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் நிறைவேற்றிய இலங்கை பயங்கரவாத சட்டம் குறித்த பிரேரணை, ரணிலின் பாராளுமன்ற பிரவேசம் எல்லாம் சோழியன் குடும்பி சும்மா ஆடவில்லை என்பதற்கான ஆதாரங்கள்.
இலங்கைக்கு இந்தியாவை விடவும் சீனா முக்கிய கூட்டாளியானது ஏன்…..?
சர்வதேச விவகாரங்களில் இந்தியாவால் இலங்கையைக் காப்பாற்ற முடியாது. வீட்டோ அதிகாரம் கொண்ட சீனாவும், ரஷ்யாவும் தான் காப்பாற்ற முடியும். இதை அமெரிக்கா நன்கு புரிந்து வைத்துள்ளது.
இந்த அசாதாரண கொரோனா சூழலில் தமிழ்தரப்புக்கு சாதகம் போன்ற தீர்மானங்களை நிறைவேற்றி தமிழ் – சிங்கள உறவை சிதைத்தல், பயங்கரவாத சட்டத்தை தளர்த்த வேண்டும் என்ற அழுத்தத்தின் ஊடாக சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க முடியாத சூழலை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான நம்பிக்கையை சீர்குலைத்தல், இந்தியாவுடன் இணைந்து போர்ட் சிட்டி விவகாரத்தை தென் இலங்கையில் அரசியலாக்கல் என்பனவற்றின் மூலம் அமைதியின்மையை ஏற்படுத்தி ராஜபக்சே அரசாங்கத்தை பதவியில் இருந்து அகற்றுதல்.
இதனால் இலங்கையில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மையை தளம்பச் செய்து சீனா உள்ளிட்ட சர்வதேச முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் முதலீடு செய்யக்கூடிய ஸ்த்திரத்தன்மை இல்லை என்று பிரச்சாரம் செய்து நேரடியாக இலங்கை மீதும் மறைமுகமாக சீனாமீதும் பொருளாதார அழுத்தத்தை அதிகரித்தல்.
இந்த விடயங்கள் இரவோடிரவாக இன்றைக்கிருந்து நாளை நடப்பவை அல்ல. இது ஒரு நீண்ட கால அணுகுமுறை. எதிர்வரும் ஒரு வருடகாலத்தில் ஜோர்ஜ் கபிரியேல் இந்த அணுகுமுறைக்குள் உள்வாங்கப்படாவிட்டாலும் அதற்கான பயிற்சிகளை பெற்றுக் கொள்வார். அதற்குப் பின்னர் அவரின் பங்கு இந்த பிராந்திய அமெரிக்க அரசியல் தீர்மானங்களில் முக்கியத்துவம் பெறும் என்பதை மறுப்பது கடினமானது.
இது ஜோர்ஜ் கபிரியேல் மீதான விமர்சனம் அல்ல அமெரிக்க ஆதிக்க போட்டி அரசியல் மீதான விமர்சனம். ஜோர்ஜ் அல்ல வேறு எவர் இந்த இடத்தில் இருந்தாலும் அதைச் செய்யவேண்டிய கடமையும் பொறுப்பும் அவர்களுக்கு உண்டு.
எது எவ்வாறாயினும் அமெரிக்க அரசியல் மீதான காலக்கண்ணாடியின் அனைத்து விமர்சனங்களுக்கும் அப்பால் கலாநிதி ஜோர்ஜ் கபிரியேல் அவர்களின் இந்த நியமனத்தையும், கிடைத்துள்ள வாய்ப்பையும் இலங்கையர்கள் பாராட்டாமல் இருக்க முடியாது.
ஏனெனில் அமெரிக்க கொள்கை வகுப்பில் அவரும் ஒருவரேயன்றி அவர்தான் முற்றுமுழுதான கொள்கை வகுப்பாளர் அல்ல, நாம் அவரை குற்றம் சாட்டுவதற்கு.
இதுதான் கொழும்பு அரசியலில் உள்ள தமிழ் கொள்கை வகுப்பாளர்களின் நிலையும். அரசாங்கத்தின் கொள்கையை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் அதிகாரிகள் என்ற வகையில் அவர்களுக்கு உள்ளது அதுதான் ஜதார்த்தம்.
ஆக, பெருமை கொள்கிறாள் ………….., ———————————- சான்றோன் எனக்கேட்ட தாய்…!
வாழ்த்துக்கள் கலாநிதி ஜோர்ஜ் கபிரியேல் அவர்களே!
********* மட்டுநகர் அன்னை வாழ்த்துகிறாள் .***********