சொந்த  மண்ணின் சுகந்த நினைவுகள்! (25)

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (25)

— பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா — 

‘இது என் கதையல்ல, என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை 

1970ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை சமஜமாஜக் கட்சியுடனும், கம்யுனிஸ்ட் கட்சியுடனும், கூட்டுச் சேர்ந்து வரலாறு காணாத வெற்றியைப் பெற்று ஆட்சிக்கு வந்தது. 116 பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டனர். ஜே.ஆர் ஜெயவர்த்தனா அவர்கள் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியடைந்தது. அதிலிருந்து பதினேழு பேர் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவானார்கள். சில மாதங்களில், பட்டிருப்புத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட எஸ்.யூ.தம்பிராசா அவர்களும், இரட்டை அங்கத்தவர் தொகுதியாகவிருந்த, மட்டக்களப்புத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராகிய, இராஜன் செல்வநாயகம் அவர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்து கொண்டார்கள். இத்தகைய கட்சித் தாவல்களினால் ஆளும் தரப்பின் பலம் மேலும் கூடியது. 

அரசாங்கத்தினால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் புதிதாக உருவாக்கப்பட்ட அரசியல் அதிகாரி என்ற பதவியில், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இராஜன் செல்வநாயகம் அவர்கள் நியமிக்கப்பட்டார். 

ஆட்சிக்கு வந்தகையோடு, இலங்கையைக் குடியரசாகப் பிரகடனம் செய்யும் தமது கொள்கையினை நிறைவேற்றுவதற்கான முன்னெடுப்புக்களில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக தலைமையிலான ஆட்சியாளர்கள் ஈடுபட்டனர். அத்தகையதொரு பிரகடனத்தைச் செய்வதற்கு அரசியலமைப்பை மாற்றியாகவேண்டும். அதனால், அரசாங்கத்தில் அங்கம்வகித்த லங்கா சமஜமாஜக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர். டீ.சில்வா தலைமையில் அமைக்கப்பட்ட குழு புதிய அரசியல் அமைப்பினைத் தயாரித்தது. அரசியலமைப்பை மாற்றும் சட்டத்தை நிறைவேற்றிப் புதியதொரு அரசியலமைப்பை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு மக்கள் பிரதிநிதிகள் சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும். ஆனால், அரசாங்கத்திற்கு அதற்கும் மேலான பெரும்பான்மை இருந்தமையால், 1972ஆம் ஆண்டுமே மாதம் 22ஆம் திகதி முதல், இலங்கை குடியரசாக மாற்றம் பெறுவதற்கான புதிய அரசியல் அமைப்பு பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை, செனட் சபை ஆகிய இரண்டு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதன்மூலம், “இலங்கை”ஜனநாயக சோசலிசக் குடியரசாகப் பிரகடனம் செய்யப்பட்டது. அதுவரை இலங்கை நாட்டின்மேல், மாட்சிமை தங்கிய மகாராணியாருக்கிருந்த அதிகாரங்கள், உரிமைகள் இல்லாதொழிக்கப்பட்டன.  

இந்த அரசியலமைப்பு ஆக்கப்படுகின்றபோதே, அது, முன்னைய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் குழிதோண்டிப் புதைக்கப் போகின்றதெனத் தமிழ் அரசியல் தலைவர்கள் அச்சமடைந்தனர். தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து இயங்கவேண்டிய கட்டாயத்தினை உணர்ந்தனர். அதன் விளைவாக, 1972ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் திகதி, எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் தலைமையிலான தமிழரசுக்கட்சி, ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் கட்சி, செளமியமூர்த்தி தொண்டமான்  அவர்களது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் மேலும் சில தமிழ் அமைப்புக்களும் ஒருங்கிணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி (Tamil United Front) என்னும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

ஜீ.ஜீ.பொன்னம்பலம்
செளமியமூர்த்தி தொண்டமான்

இந்தக் கூட்டமைப்பு, இலங்கையின் வடக்கு, கிழக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களின் சார்பில் அரசாங்கத்திற்கு ஆறு அம்சக்கோரிக்கையொன்றை முன்வைத்தது. அதனை அரசாங்கம் நிராகரித்தது. அதன் காரணமாக, இலங்கை தமிழ் மக்களின் கோரிக்கை சுயாட்சிதான் என்பதை உணர்த்துமுகமாக, தந்தை செல்வா அவர்கள், 1972 ஒக்டோபர் மாதம், “எங்களது கோரிக்கையை முன்வைத்து நான் போட்டியிடுகிறேன், முடியுமானால் இடைத்தேர்தலை நடாத்தித் என்னைத் தோற்கடித்துப் பாருங்கள்“ என்று அரசுக்குச் சவால் விடுத்துத் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தார்.  

தனது பதவியைத் துறந்த தந்தை செல்வா அவர்கள், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகள் முழுவதும் பயணம் செய்து மக்களைச் சந்தித்து வந்தார். அவ்வந்த தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழர் ஐக்கிய முன்னணிப் பிரமுகர்களும், தொண்டர்களும் அவரது பயணத்தின் ஒழுங்குகளைச் செயற்படுத்தினர். அந்தவகையில், மட்டக்களப்புத் தொகுதியில் இருந்து, பட்டிருப்புத் தொகுதிக்குள் அவர் நுழையும்போதிலிருந்து கல்முனைத் தொகுதிக்குச் செல்லும் வரையிலான ஏற்பாடுகள் தலைவர் இராசமாணிக்கம் அவர்கள் தலைமையில் நடந்துகொண்டிருந்தன. சி.மூ.இராசமாணிக்கம் அவர்களே அந்தக் காலகட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் இருந்தமையால் தந்தை செல்வா அவர்களின் முழுப் பயண ஏற்பாடுகளையும் நெறிப்படுத்தும் பொறுப்புக்குரியவராகவும் இருந்தார்.  

இப்படியிருக்கையில், தந்தை செல்வா அவர்கள் பட்டிருப்புத் தொகுதிக்கு வருவதற்கு முதல் நாள் மாலை நேரத்தில் தலைவர் இராசமாணிக்கம் அவர்களிடமிருந்து என்னை வருமாறு செய்திவந்தது. எனது வீட்டிலிருந்து ஏறத்தாழ முன்னூறு மீற்றரில் அல்லது ஐந்து நிமிட நடைத்தூரத்தில்தான் அவரது இல்லம் இருந்தது. உடனேயே விரைந்தோடிச் சென்றேன்.  

அப்போது அங்கே பெருந்திரளாகப் பிரமுகர்களும், தொண்டர்களும் இருந்தார்கள். தலைவர் அவர்களோடு பேசிக்கொண்டு நின்றார். என்னைக் கண்டதும், “சிறீ! இங்க வா” என்று, தன்னருகே வரச்சொன்னர். “நாளை தந்தை ஊர்வலமாகக் காரில் வரும்போது, அதற்கு முன்னால் செல்லும் ஒலிபெருக்கி பூட்டிய காரில் தந்தையின் வருகை பற்றியும், நோக்கம் பற்றியும், எல்லாம் விபரமாக நீ அறிவித்துக்கொண்டிருக்க வேணும். காலையில நேரத்தோட இங்க வந்திரோணும்” என்று சொல்லி, “என்ன சரிதானே?” என்று கேட்டார். நான் சரி என்று சொல்லிவிட்டு, அங்கே நடக்கும் ஒழுங்குகளை நோட்டம் விட்டபடி, சிறிது நேரம் அங்கு நின்றவர்களோடு கலந்தேன். அப்போதுதான் எனக்குத் தெரியவந்தது. யாரை அந்த வேலைக்கு விடுவது என்று ஆலோசித்தபோது, அங்கிருந்த இருவர் உட்படச் சிலரின் பெயர்கள் முன்மொழியப்பட்டதாகவும், அப்போது, தலைவர் இராசமணிக்கம் அவர்கள், “இல்லை… இது மிகவும் முக்கியமான வேலை…. மக்களுக்கு நல்லா எடுத்துச் சொல்லக்கூடிய ஆளாக இருக்க வேணும். போய் சிறிய வரச் சொல்லுங்க. அவன்தான் இதுக்குச் சரியான ஆள்” என்று சொன்னாராம். நவநாதபிள்ளை அங்கிளும், அருமைலிங்கம் அண்ணனும் பின்னர் இதுபற்றி என்னிடம் சொன்னார்கள். வெறும் பத்தொன்பது வயதே நிரம்பிய என்னில் தலைவர் இராசமாணிக்கம் அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை என்னை மேலும் உற்சாகப்படுத்தியது. 

மறுநாள் முற்பகல் பத்து மணியளவில் பட்டிருப்புத் தொகுதிக்குள், தந்தை செல்வா அவர்களின் பவனி நுழைந்தது.  

தள்ளாத வயதில், தளர்ச்சியடைந்த தனது உடல் நிலையுடன் ஊரூராக அவர் பவனிவந்தபோது வீதிகளின் இருபக்கங்களிலும் கூடிநின்ற மக்கள் ஆனந்தக்கண்ணீர் சொரிந்து வரவேற்றார்கள், வாழ்த்துக்கூறினார்கள். தந்தையின் முகத்தைக் கண்டதும் தாங்கொணாத உணர்ச்சிப் பெருக்கால் ஆயிரக்கணக்கான மக்கள் அழுத காட்சிகளை என்றும் மறக்கமுடியாது.  

எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் பாராளுமன்றப் பதவியைத் துறந்ததில் இருந்து கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள், காங்கேசன்துறைத் தொகுதி இடைத்தேர்தலை தேர்தலை நடத்தாமல் அரசாங்கம் இழுத்தடித்தது. இறுதியில் 1975 பெப்ரவரி 6ஆம் திகதி நடைபெற்ற இடைத்தேர்தலில் தந்தை செல்வா 15 ஆயிரத்திற்கும் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுத் தமிழ்மக்களின் அங்கீகாரத்தினை முழு உலகுக்கும் தெரியப்படுத்தினார். 

இதற்கிடையில், 1974ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி காலை, பேரிடியானதோர் அதிர்ச்சிச் செய்தி வந்தது. ஊரெல்லாம் சோகத்தில் அமிழ்ந்தது. சற்றும் எதிர்பாராதவிதமாக, தலைவர் சீ.மூ.இராசமாணிக்கம் அவர்கள் காலமானார்! 61 வயதே நிரம்பிய இராசமாணிக்கம் அவர்களின் இழப்பை யாருமே கனவில்கூட எண்ணிப்பார்க்கவில்லை. இலங்கைத் தமிழர்களின் அரசியலில் திடீரென ஏற்பட்டுவிட்ட வெற்றிடம், பட்டிருப்புத் தொகுதி அரசியலைத் திக்குமுக்காட வைத்துவிட்டது. இப்போதையைப் போல, அண்ணை எப்போது காலமாவான், திண்ணை எப்போது காலியாகும் என்று காத்திருப்போர் பட்டியல் அப்போதெல்லாம் இருந்ததில்லை.  

1976 மே மாதம் 14 ஆம் திகதி, யாழ்ப்பாணம், பண்ணாகத்தில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய முன்னணியின் தேசிய மாநாட்டில், “வட்டுக்கோட்டைத் தீர்மானம்” எனப்படும் வரலாற்று முக்கியம் வாய்ந்த தீர்மானம்” நிறைவேற்றப்பட்டது. அத் தீர்மானத்தின் மூலம் இலங்கையில் தமிழ்த் தேசத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திர, இறைமையுள்ள, மதச் சார்பற்ற, சோசலிசத் தமிழீழ நாட்டை மீள்விக்க வேண்டுமெனப் பிரகடனம் செய்யப்பட்டது. 

எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அந்த மாநாட்டில்தான், தமிழர் ஐக்கிய முன்னணி (TUF), தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) எனப் பெயர் மாற்றும் தீர்மானமும்  எடுக்கப்பட்டது.  

(ஆனால் இந்த இரண்டு பெயர்களும், முறையே, “தமிழர் கூட்டணி” என்றும், “தமிழர் விடுதலைக்கூட்டணி” என்றுமே தமிழ் மக்களிடையே வழங்கிவருகின்றன.)  

பழைய அரசியலமைப்பின்படி 1970ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ர உறுப்பினர்களதும், அரசாங்கத்தினதும் பதவிக்காலம் 1975ஆம் ஆண்டுடன் முடிவடைந்து அந்த வருடமே பொதுத்தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 1972ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியல் சட்டத்தின்படி, அது அமுலுக்கு வந்த நாளிலிருந்து(மேலும்) ஐந்து வருடத்திற்கானதாகப் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆக்கப்பட்டதால் 1977ஆம் ஆண்டு வரை தேர்தல் நடத்தப்படும் தேவைப்பாடு இல்லாதாக்கப்பட்டது. அதன்மூலம், 1970ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அரசாங்கத்தினது பதவிக்காலம் இரண்டு வருடங்களால் அதிகரிக்கப்பட்டு, பொதுத்தேர்தல் 1977ஆம் ஆண்டுக்குத் தள்ளிப் போடப்பட்டிருந்தது. 

அதனால், பட்டிருப்புத் தொகுதிக்கான தமிழரசுக் கட்சி வேட்பாளரை (பட்டிருப்புத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரை என்றுகூடச் சொல்லலாம்) கண்டுபிடிப்பதற்குச் சற்று அவகாசம் இருந்தது. தேர்தல் 1975இல் நடந்திருந்தால், பூ.கணேசலிங்கம் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக வந்திருக்கவே முடியாது. 

கிட்டத்தட்ட அந்த மூன்று வருடகால அவகாசத்தில் பல்வேறு நாடகங்களுக்கு ஒத்திகை பார்க்கும் வேலைகள், உள்ளூர்களிலும் வெளியூர்களிலும் அரங்கேறிக்கொண்டிருந்தன. கழுத்தறுப்புக்களும் குத்துவெட்டுக்களும் இடம்பெற்றுக்கொண்டிருந்தன.  

இந்த நிலையில், 1977 ஏப்பரல் 26ஆம் திகதி தந்தை செல்வா அவர்களின் மறைவு இன்னுமொரு பேரிடியாகத் தமிழ் மக்களின் தலையில் விழுந்தது. 

இறுதிக்காலத்தில் தந்தை செல்வா அவர்களின் உடல்நிலை அவரால் முழுமையாகச் செயற்பட முடியாத நிலைமைக்கு வந்ததும், 1977 ஏப்பிரல் 26ஆம் திகதி அவர் காலமானதும், அவருக்கு மிகவும் அணுக்கமாக இருந்து செயற்பட்ட, அ.அமிர்தலிங்கம் அவர்களுக்கு கட்சியின் அதிகாரத்தைத் தன் கையிலெடுத்துக்கொள்ள வாய்ப்பானது.  

இந்த நிகழ்வுகள் இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றில் எதிர்பாராத திருப்பங்களையும், விரும்பத்தகாத விளைவுகளையும் ஏற்படுத்தியது. 

1970ஆம் ஆண்டுத் தேர்தலில் ஏற்பட்ட வரலாறு காணாத முடிவு. 

1972ஆம் ஆண்டின் குடியரசு அரசியலமைப்பு 

1972ஆம் ஆண்டின் தமிழர் ஐக்கிய முன்னணியின் தோற்றம் 

1973ஆம் ஆண்டில் எஸ்ஜேவி செல்வநாயகம் அவர்களின் பதவி விலகல் 

1974ஆம் ஆண்டில் தமிழரசுக்கட்சித் தலைவர் சீ.மூ.இராசமாணிக்கம் அவர்களது மறைவு 

1976ஆம் ஆண்டில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி- பெயர் மாற்றம் 

1976ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானம் 

1977ஆம் ஆண்டில் எஸ்ஜேவி செல்வநாயகம் அவர்களின் மறைவு 

1977ஆம் ஆண்டு – 7 ஆண்டுகளுக்கு அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் நீடிக்கப்பட்டமை முதலிய, சம்பவங்கள் இடம்பெற்றதால்,  

1970ஆம் ஆண்டுக்கும் 1977ஆம் ஆண்டுக்கும் இடையான காலப்பகுதியில் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் போக்கும், அது செல்ல வேண்டிய திசையில் மிகப்பெரும் மாற்றத்தினை எதிர்கொண்டு நகர்ந்தது. 

அதிலும் குறிப்பாக, கிழக்குமாகாண அரசியலின் எதிர்காலத்தைப் புரட்டிப்போட்ட சம்பவங்களுக்குக் கால்கோள் இட்ட செயற்பாடுகள் ஏராளமாக இடம் பெற்றன. தலைக்கனம், எதேச்சாதிகாரம், வஞ்சகம், பொறாமை, நேர்மையின்மை முதலிய தீய பண்புகள் தமிழ்மக்களின் தலைமையில் தலைதூக்கியதால், நேர்மையும், உண்மையும் நிறைந்த அரசியல்வாதிகள் புறக்கணிக்கப்பட்ட, பழிவாங்கப்பட்ட, தொல்லைகளுக்கும் துயரங்களுக்கும் உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெறத் தொடங்கின. 

அவை அரசியலையும் மக்களையும் குழப்பமடையச் செய்தன. 

அவற்றின் தொடர்ச்சியாகவும், விளைவுகளாகவும் பொதுவாக இலங்கை அரசியலிலும், குறிப்பாகத் தமிழ் மக்களின் அரசியலிலும், எழும்பிய பூகம்பங்களைச் சுமந்தவாறு, 1977 சூலை 21ஆம் திகதி நடைபெற்ற, இலங்கையின் 8வது நாடாளுமன்றத் தேர்தல் பற்றிய விபரத்தை அடுத்த பகுதியில் காண்போம். 

(நினைவுகள் தொடரும்)