—- எழுவான் வேலன்—-
மேற்படி கட்டுரைத் தலைப்பைப் வாசிக்கும் ஒரு பொது வாசகன் தமிழ் அரசியலை முன்னோக்கி நகரவிடாது தடுக்கும் உள்முரண்பாடுகள் பிரதேசவாதமா அல்லது ஜனநாயகப் பற்றாக்குறையா என்பதை விவாதித்து இவை இரண்டில் எது உண்மையில் நகரவிடாமல் தடுக்கின்றது என்பதை நிறுவுவதாக அமையும் என்று விளங்கிக் கொள்வர்.
ஆனால் கட்டுரையின் முன் அரைப்பகுதியும் அதனுடைய உபதலைப்புகளும் எமக்கு ஏமாற்றமளிப்பதாகவே உள்ளன. தமிழ் அரசியலின் உள் முரண்பாடுகள் பற்றிப் பேச வேண்டிய கட்டுரை இலங்கைத் தேசிய அரசியலின் தற்போதைய நிலையினைக் கூறி, சுமந்திரன் அணியினரை நியாயப்படுத்தி, குறுந்தேசிவாத அணியினரால் சிறுபான்மையினருக்கு தலைமைதாங்க முடியாது என்றும் கூறுகின்றது. இந்தக் குறுந்தேசிவாத அணி யார் என்பதைக் கூட கட்டுரை அடையாளப்படுத்தவில்லை. வெளிப்படைத் தன்மையும் ஜனநாயகம் பற்றியும் பேசும் கட்டுரையாளர் இவ்வாறு அடையாளப்படுத்தாமல் விடுவது அவர் பேசுகின்ற வெளிப்படைத்தன்மைக்கு முரணானதாகும்.
தேசிய அரசியலின் போக்குப் பற்றியும் தமிழ் அரசியல் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் எழுதப்பட வேண்டிய விடயங்கள்தான் அல்லது சுமந்திரன் அணியினரை எவ்வளவுக்கு தூக்க வேண்டுமோ அவ்வளவுக்குத் தூக்குவதற்கும் குறுந்தேசியவாதிகளை எவ்வளவுக்கு விமர்சிக்க முடியுமோ அவ்வளவுக்கு விமர்சிப்பதற்கும் கட்டுரையாளருக்கு உரிமையும் சுதந்திரமும் உண்டு என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அவர் மேற்படி தலைப்பை எடுத்துக் கொண்டு அத் தலைப்புக்குப் பொருத்தமில்லாது இவ்விடயங்கள் பற்றிப் பேசும் போது எமக்கு ஒரு கேள்வி உண்டாகிறது; அதாவது கட்டுரையின் மையப் பொருளை அணுகவிடாது தடுக்கும் கட்டுரையாளரின் உள்முரண்பாடு எது என்பதாகும். ஏனென்றால் முரண்பாடுகளற்ற தெளிவான சிந்தனையைக் கொண்டவர்களால்தான்; மிகத் தெளிவாகவும் எளிமையாகவும் தாம் எடுத்துக்கொண்ட விடயத்தினை விளக்க முடியும். ‘தான் போக வழியைக் காணல்லையாம் தவில் போலையாம் மாராப்பு‘ என்றொரு பழமொழி கூறுவார்கள். அது போல் சிவலிங்கம் அவர்கள்; முதலில் தான் போவதற்கான வழியை சீரமைத்துக் கொள்ள வேண்டும் அதன் பின்பு மற்றவர்களை கூட்டிச்செல்வது பற்றி யோசிக்க முடியும்.
தொடர்ந்து கட்டுரையாளரின் உள் முரண்பாடுகளையும் அதற்கான காரணத்தினையும் கட்டுரையை வாசித்து முடிக்கும் போது அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. அவை பற்றி இனி நோக்கலாம்.
நான் எனது “அரங்கம் ஒரு பிரதேசவாத ஊடகமா?“ எனும் கட்டுரையில் ‘ஈழத்தில் பிரதேசவாதத்தினை அறிமுகப்படுத்திய பெருமை ஆறுமுகநாவலரையே சேரும். அவர் முன்வைத்த ‘சைவமும் தமிழும்‘எனும் கருத்துநிலை இதில் முக்கியமானதாகும்.‘ எனக் கூறியிருந்தேன். அதற்குக் காரணம் எம்மைப் பிரதேசவாதிகள் என்று கூறுபவர்கள் பிரதேசவாதத்தின் மூல ஊற்று எங்கிருந்து எதை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கிறது என்ற உண்மையை அறிந்து கொள்வதற்காகும்.
அந்தக் கட்டுரையில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களையும் உதாரணங்களையும் தர்க்கரீதியாக மறுக்காமல் சிவலிங்கம் அவர்கள் பிரதேசவாதத்தின் தோற்றத்திற்கான காரணத்தினை பின்வருமாறு கூறுகின்றார். ‘தற்போது நாட்டின் அரசுக் கட்டுமானம் என்பது ஒருகட்சி ஆதிக்கமாகவும், தனி ஒருவரிடம் அதிகாரம் குவிக்கப்பட்டதாகவும் உள்ள நிலையில் ஜனநாயக ஆட்சிமுறை பலவீனப்பட்டுச் செல்கையில் பல குழப்பங்களுக்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றுதான் பிரதேசவாதம் என்பதாகும்.‘ என்கின்றார். இதனைச் சரி என ஏற்றுக்கொண்டால் இலங்கையிலுள்ள எல்லா இனங்களும் எல்லாப் பிரதேசங்களும் பிரதேசவாதத்தினைக் கொண்டிருக்க வேண்டும். அதாவது கண்டிச் சிங்களவர் தெற்குச் சிங்களவர் அல்லது கரையோரச் சிங்களவர் என்ற முரண்பாடுகள் உருவாகி சிங்களக் கட்சிகள் அவ்வாறு உருக்கொண்டிருக்க வேண்டும் அல்லது அந்தக் கட்சிகளிடம் அவ்வாறான உட்பூசல்கள் நடந்துகொண்டிருக்க வேண்டும். அதேபோன்று வடக்கு முஸ்லிம்கள், கிழக்கு முஸ்லிம்கள், கண்டி முஸ்லிம்கள் என்ற பிரதேசவாதம் உருவாகி அவர்களுடைய கட்சிகளும் அவ்வாறு உருவாகியிருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் வடகிழக்குத் தமிழர்களிடம் வடக்குக் கிழக்கு என்ற பிரதேசவாதத்தினைத் தவிர மற்றவர்களிடம் இது அரசியல் ரீதியாக இல்லை என்பது மிகத் தெளிவான உண்மையாகும்.
ஆனால் சுதந்திரத்துக்கு முற்பட்ட இலங்கையில் கண்டிச் சிங்களவர் கரையோரச் சிங்களவர் என்ற பிரதேச வேறுபாடு மிகக் கூர்மையாகத் தொழிற்பட்ட ஒன்றாகும். தமிழர்கள் சுதந்திர ஐக்கிய இலங்கையைக் கோரியபோது கண்டிச் சிங்களவர்கள் கண்டி, கரையோரம், வடகிழக்கு என்ற மூன்று மாகாண அரசுகளைக் கோரியிருந்தார்கள் என்பதை அனேகர் அறிவர். முஸ்லிம்களிடத்திலும் மலாய் முஸ்லிம்கள், இலங்கை முஸ்லிம்கள் என்ற வேறுபாடு இருந்தது. ஆனால் சுதந்திர இலங்கையில் மற்றைய இனங்களிடம் இந்தப் பிரதேச வேறுபாடுகள் இல்லாமல் போக இலங்கைத் தமிழர்களிடத்தில் மாத்திரம் இந்தப் பிரதேச வேறுபாடு கூர்மையடைந்து வந்து கொண்டிருக்கும் சமூகவரலாற்றுப் போக்கினை மறுத்து, ஜனாதிபதி ஆட்சிமுறைதான் பிரதேசவாதத்தினைத் தோற்றுவித்தது என்கின்ற புதுச் சிந்தாந்தத்தினை சிவலிங்கம் அவர்கள் உருவாக்கியிருக்கிறார்.
சுதந்திரத்துக்கு முற்பட்ட இலங்கையில் காணப்பட்ட இந்த பிரதேச தனித்துவங்களையும் வேறுபாடுகளையும் இலங்கைத் தேசியவாதம் எவ்வாறு ஒன்றாக்கியது என்ற புரிதலும், தமிழர்களிடத்தில் அது இன்னும் வேர் கொண்டிருப்பதன் அடிப்படையையும் விளங்கிக் கொண்டால் மாத்திரமே பிரதேசவாதத்தினை நாம் இல்லாமல் செய்யமுடியும் அல்லது அதனை வெற்றி கொண்டு எம்மால் முன்னோக்கிச் செல்ல முடியும். அதன் காரணத்தினால்த்தான் ஆறுமுகநாவலரின் ‘சைவமும் தமிழும்‘ எனும் கருத்தியல் பற்றி எனது கட்டுரையில் கூறியிருந்தேன். அது பற்றி மேலும் தெளிவுபடுத்த வேண்டிய தேவை சிவலிங்கம் அவர்களின் கட்டுரைக்குப் பின்பு உருவாகியிருப்பதால் அது பற்றி மேலும் கூறவிரும்புகின்றேன்.
ஆறுமுகநாவலரின் “சைவமும் தமிழும்”
ஒரு சமூகம் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் தனது பெருமையினைப் பேசுவதற்கும் அந்தப் பெருமையுடன் வாழ்வதற்கும் அதன் வாழ்வுத் தொடர்ச்சிக்கும் அந்தச் சமூகம் கொண்டிருக்கின்ற கருத்து நிலைத் தளம்முக்கியமானதாகும். இந்தக் கருத்து நிலைத் தளம் வரலாற்று நிகழ்ச்சிச் சம்பவங்கள், தொன்மைச் சடங்குகள், படிமங்கள், ஐதீகங்கள், கருத்துக்கள், எண்ணக்கருத்துக்கள், வாய்மொழிக் கதைகள் என்பவற்றின் ஊடாக தனது தேவைக்கேற்ப அந்தச் சமூகம் உருவாக்கிக் கொள்கின்றது. இதனை வெகுசன மட்டத்தில் கொண்டு செல்வதற்கும் அவற்றை சமூகநிலைப்படுத்தி அந்தச் சமூக உறுப்பினர் ஒவ்வொருத்தர்களின் உணர்வுநிலைப் படுத்துவதற்கும் ஏற்புடமையாக்குவதற்கும் அச்சமூக நிறுவனங்களான குடும்பம், மதம், பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள், அறிவுஜீவிகள், சமூகத் தலைவர்கள், ஊடகங்கள் என அனைத்தும் ஒருமித்துச் செயற்பட்டு இந்தக் கருத்து நிலைத்தளத்தை அந்தச் சமூகப் பண்பாட்டின் அடித்தளமாக ஆக்கிவிடுகின்றன.
அந்தவகையில் தமிழர்களுக்கான கருத்தியல் தளமாக ஆறுமுகநாவலரால் முன்வைக்கப்பட்ட ‘சைவமும் தமிழும்‘இருக்க சிங்களவர்களுக்கான கருத்தியல் தளமாக குணானந்த தேரரால் முன்வைக்கப்பட்ட ‘சிங்களப் பௌத்தம்‘என்பது இருக்கின்றது. 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்த்தான் இவை நிறுவனமயப்பட்டு ஒர் அரசியல் நடவடிக்கையாக உருப்பெறுகின்றன. காலனியத்துவத்துவத்தின் கருவிகளான கிறிஸ்தவத்துக்கும் ஆங்கில மொழிக்கும் எதிரான ஒரு நிறுவனமயப்பட்ட நடவடிக்கையாக இக்கருத்து நிலைத்தளங்களை அடிப்படையாகக் கொண்ட அடையாள அரசியல் நடவடிக்கைகள் மேற்கிளம்புவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
அந்தவைகயில் ஆறுமுகநாவலரே இதனை முதன்முதல் முன்னெடுத்தவராகும்.
சைவப் பிரகாச வித்தியாசாலை
‘1848ல் கார்ல் மார்க்சும் ஏங்கெல்லுசும் கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்ட அதே ஆண்டில் ஆறுமுகநாவலர் (1822 – 1879) யாழப்பாணம் வண்ணார்பண்ணையில் சைவப் பிரகாச வித்தியாசாலையைத் தொடங்கினார் என்பது நம்மைப் பொறுத்தமட்டில் ஒரு குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்ச்சியாகும். தமிழ் அடையாள வரலாற்றில் இச் சம்பவம் ஒரு முதல் புள்ளியாக அமைகிறது‘ என்பார் பேராசிரியர் ந.முத்துமோகன். இங்கு பேராசிரியர் ந.முத்துமோகன் குறிப்பிடுகின்ற ‘தமிழ் அடையாள வரலாற்றில்‘ எனும் விடயம் மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. அதாவது சிங்கள மக்களிடத்தில் சிங்கள பௌத்த கருத்துநிலைத் தளம் ஒன்று அடிப்படையாக இருக்கும் போது நாவலர் தமிழர்களுக்கான கருத்து நிலைத் தளமாக அவர்களின் வரலாற்று நிலைப்பட்ட இருப்புக்கும் தனித்துவத்திற்கும், ஒருமைப்பாட்டுக்குமான தமிழ் அடையாளத்தை முன்வைத்தாரா என்பதுவே அதுவாகும்.
ஆறுமுகநாவலரை நியாயப்படுத்தும் சிவலிங்கம் அவர்கள் ‘ஐம்பதுகளில் (எந்த ஐம்பது எனக் குறிப்பிடவில்லை) நாட்டில் காணப்பட்ட மத எழுச்சிகள், சிங்களப் பகுதிகளிலும் தமிழ்ப் பகுதிகளிலும் பாரிய எழுச்சிகளை ஏற்படுத்தின சிங்களப் பகுதிகளில் பிரிவேனாப் பாடசாலைகளும்; தமிழ்ப் பகுதிகளில் சைவப் பாடசாலைகளும் தோற்றுவிக்கப்பட்டன. சமூகமாற்றம் இவ்வாறு நிகழ்ந்த நிலையில் ஆறுமுகநாவலரைப் பன்முக அடிப்படையில் அணுகாமல் யாழ் மேலாதிக்கத்தின் அடையாளமாக வர்ணிப்பது வரலாற்றைப் புரிந்து கொள்ள மறுப்பதாகவே உள்ளது.‘ என்கின்றார்.
யாழ். வெள்ளாளர் பிடி தளர்வதை விரும்பாத ஆறுமுகநாவலர்
ஆறுமுகநாவலர் காலனிய ஆட்சிக்கெதிரான ஒன்றாகவோ அல்லது நேரடியாக சிங்கள பௌத்தத்திற்கு எதிரான ஒன்றாகவோ சைவப் பிரகாச வித்தியாசாலையை ஆரம்பிக்கவில்லை. அவர் காலனித்தவ ஆட்சியை ஏற்றுக்கொண்டார். ஆனால் காலனித்துவத்தினூடு வந்த கிறிஸ்தவமும் ஆங்கிலக் கல்வியும் யாழ்ப்பாண அதிகாரச் சமூகப்படிநிலைக் கட்டமைப்பை குலைப்பதையோ அல்லது அதில் சலனத்தை ஏற்படுத்தவதையோ அவர் விரும்பவில்லை. குறிப்பாக சாதிரீதியான ஏற்றத்தாழ்வுகள் குறைவதனையும் அதற்கூடாக யாழ் வெள்ளாளருடைய பிடி தளர்வதையும் அவர் விரும்பவில்லை. அவருடைய கல்விக் கொள்கையும் எல்லா மக்களுக்குமுரியதல்ல. இதனால் யாழ்ப்பாணச் சமூக அதிகாரப் படிநிலையினைக் கட்டிக்காக்கவும் பேணவும் வளர்த்தெடுக்கத் தக்கதுமான கருத்து நிலையே அவருடைய ‘சைவமும் தமிழும்‘ எனும் கருத்து நிலையாகும்.
இந்தக் கருத்துநிலையின் அரசியல் பிரதிநிதியாக ஆறுமுகநாவலரால் கொண்டுவரப்பட்டவர்தான் சேர்.பொன்.இராமநாதன் அவர்களாகும்.
இச் ‘சைவமும் தமிழும்‘ எனும் கருத்துநிலையின் பிரதிநிதியான சேர்.பொன்.இராமநாதன் அவர்களின் நடவடிக்கைகளாக பின்வருவனவற்றை உதாரணமாகக் குறிப்பிட முடியும்.
1. ‘1920 – 1930களில் பாடசாலைகளிற் சாதியமைப்பை ஊறு செய்யும் வகையில், பள்ளிப் பிள்ளைகளுக்குச் சமாசனம், சமபோசனம் வழங்கப்படுவதற்கு எதிரான இயக்கம் இருந்தது. கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் காலாசாலையில் சேர்க்கப்பட்ட வெள்ளாளரல்லாத மாணவர்களுடன், வெள்ளாள மாணவர்களுக்கு சமபோசனம் வழங்குவதை எதிர்த்து 1930இல் சேர்.பொன்.இராமநாதன் தேசாதிபதியைச் சந்தித்தார்.
2. தேசவழமைப்படி உயர்ந்த சாதியினரின் இறுதிக் கிரியை முறைகளுக்குப் பாத்தியதையற்ற சாதியைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவியின் இறுதி ஊர்வலத்தைப் பறை முதலியவற்றுடன் கொண்டு சென்று, சடலத்தை எரிக்க முற்பட்ட பொழுது, அதனை எதிர்த்தவர்கள் ‘சட்ட விரோதமற்ற‘ வகையில் எதிர்த்தனர் என அவர்களுக்கெதிராகப் போடப் பெற்ற வழக்கில் அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். வழக்கு மேன்முறையீட்டுக்குச் சென்ற பொழுது இராமநாதன் எதிரிகள் தேசவழமைப்படி அந்த மரண ஊர்வலத்தை நிறுத்த உரிமையுடையவர்கள் என்று வாதிட்டார்.
3. சர்வஜன வாக்குரிமை வழங்கப்படக்கூடாது என இராமநாதன் கருதினார். இராமநாதனும் மற்றும் பல பழமைபேண் வாதிகளும் (செல்லத்துரை, சிறிபத்மநாதன், ஆர்.தம்பிமுத்து இதற்கு புறநடையானவர்கள்) வெள்ளாளரல்லாத சாதியினருக்கும் பெண்களுக்கும் வாக்குரிமை அளிப்பது கும்பலாட்சி (Mobrule)க்கு இடம் கொடுக்கும் ஒரு பாரிய பிழையென்று நம்பினர், வாதிட்டனர், சிறப்பாக இராமநாதனோ, அவ்வாறு வாக்குரிமை வழங்குவது இந்து வாழ்க்கை முறைக்குப் பழிகேடு விளைவிப்பது என்று கருதினார்.‘ (கா.சிவத்தம்பி)
எனவே இந்தச் ‘சைவமும் தமிழும்‘ என்ற கருத்து நிலையை முன்னெடுத்தவர்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று ஒட்டுமொத்தத் தமிழர்களின் அபிவிருத்தி சமூக முன்னேற்றம் என்றில்லாது மிகக்குறுகிய ஒரு சமூகக்குழுவை முன்னிலைப்படுத்தி இயங்கியுள்ளமை தெளிவாகின்றது.
எனவே இவ்வாறு ஆதாரங்கள் இருக்கும்போது ‘ஆறுமுகநாவலரை யாழ் மேலாதிக்கத்தின் வடிவமாக வர்ணிப்பது வரலாற்றைப் புரிந்து கொள்ள மறுப்பதாகவே உள்ளது.‘ என கடந்து போக முற்படுவது சமூகவரலாற்றுப் போக்கை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு அழகல்ல.
இந்தச் ‘சைவமும் தமிழும்‘ என்ற கருத்து நிலைக்கு பேராசிரியர் சிவத்தம்பி கூறியது போன்றே ‘சிங்களப் பௌத்தம்‘என்பதும் இலங்கையின் பிரதான மதமரபினையும் சிங்கள மொழிப் பண்பாட்டையும் இணைந்து நோக்குகின்ற ஓரு போக்காகும். இதன்படிக்குச் சிங்களமும் பௌத்தமும் ஒன்றிலிருந்து மற்றது நீக்கப்பட முடியாததாய், ஒன்று மற்றதில்லாமல் பூரணத்துவம் அடைய முடியாததாய் இருக்கும். ஒரு மதப் பண்பாட்டு இணைவு நிலையாகும். இந்த நோக்கு சிங்கள இனத்தினதும், பௌத்தத்தினதும் முழுவரலாற்றையும் உள்ளடக்கியதாகும். எனக் கூறலாம்.
காலனித்துவ ஆட்சியை ஏற்று கிறிஸ்தவத்தை நிராகரித்தவர்கள்
எவ்வாறு ஆறுமுகநாவலர் சைவமும் தமிழும் என்பதை முன்னிலைப்படுத்தி இயங்கினாரோ அது போல் தென்னிலங்கையில் சிங்களப் பௌத்தக் கருத்து நிலையின் அடைப்படையில் மிகெத்துவத்த குணானந்த தேரர் கிறிஸ்தவ எதிர்பியக்கத்தில் இயங்கினார். இருவரும் காலனித்துவ ஆட்சியை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவத்தினையே எதிர்த்தனர். ஆறுமுகநாவலர் கிறிஸ்தவத்தினால் தமிழ்ச் சமூக அமைப்பு சிதையக்கூடாது என்பதற்காக கிறிஸ்தவத்தை எதிர்க்க குணானந்த தேரர் கிறிஸ்தவர்களே இலங்கையின் அரசியல் சமூக பொருளாதார விடயங்களில் முன்னிலை பெறுவதனால் எதிர்த்தார்.
எனவே இருவருடைய எதிர்ப்பின் அடிப்படைகள் வேறுபட்டதாகும். ஆறுமுகநாவலர் தமிழ் சமூகத்தைக் கூறுகளாகப் பிரிக்க, குணானந்த தேரர் சிங்கள மக்களை சாதி, பிரதேச வேறுபாடுகளைக் கடந்து சிங்கள பௌத்தம் எனும் கருத்து நிலைக்குள் ஒன்றிப்பதைக் காணலாம். அதாவது சிங்கள பௌத்தக் கருத்தியலில் பெரும்பாலான சிங்கள மக்களின் அரசியல் சமூக பொருளாதார முன்னேற்றம் என்ற ஒரு தோற்றப்பாடு அடிப்படையாக இருப்தைக்காணலாம். இதனால் பெருமக்கள் திரளுகை சிங்களப் பௌத்தக் கருத்தியலுக்குச் சாத்தியமாயிற்று.
இவருக்குப் பின் இக்கருத்தியலை தீவிரமாக முன்னெடுத்தச் சென்றவர் அநாகரிக தர்மபால ஆவார்.
‘சிங்களப் பௌத்தம்‘ என்பதை முதன் முதலில் பயன்படுத்தியவர் இவரே ஆவார். 1906ம் ஆண்டில் ‘சிம்ஹல பௌத்தய‘ (Simhala Bauddhaya) என்றொரு பத்திரிகையை ஆரம்பித்தார். இதுவே சிங்களவர்களின் முதன்முதலான அடையாள அரசியல் நடவடிக்கையாகும். இது கிறிஸ்தவ மதத்துக்கு மாறாமல் எவ்வித சலுகைகளும் பெறாமல் வாழும் சிங்கள மக்களுக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்கி அவர்களின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்துக்கும் உழைப்பதற்கான மக்கள் திரளினை ஒன்று திரட்டுவதற்கான ஒன்றாக இருந்தது.
அநாகரிக தர்மபால ‘சிங்களவர்களே! விழிப்புறுங்கள்‘ என்ற தனது சுலோகத்திற்கு அமைய ‘அரசன் துட்டகைமுனுவை ஆத்மீகரீதியாக நீங்கள் தரிசித்து பௌத்தத்தையும் தேசிய வாதத்தையும் இருளில் இருந்து மீட்ட அம் மகா மன்னனின் சிந்தனைகளோடு உங்களை அடையாளம் காணுங்கள்‘ என்று இளைஞர்களை அவர் பணித்தார்‘.(டபிள்யு.ஐ.சிறிவீர)
சிங்களவர் மத்தியில் குறைந்துபோன பிரதேசவாதம்
இந்த சிங்கள பௌத்தக் கருத்தியலுக்குள் நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால் தமிழ் எதிர்ப்புணர்வை அது தனது மதக்துக்குள்ளால் கூறுவதாகும். இதனால் சாதி, பிரதேச வேறுபாடுகளைத் தாண்டி சிங்களவர்களை மொழிரீதியாகவும் மதரீதியாகவும் ஒன்றிணைத்து அவர்களுக்கு எதிரானவர்களாக தமிழர்களை முன்னிறுத்துவது இலகுவானதாக இருந்தது.
இங்கு எல்லாளன் அல்லது தமிழர்கள் சிங்களவர்களுக்கு எதிரான ஒரு குறியீட்டுப் படிமமாகப் பார்க்கப்படுகின்றனர். சிங்களப் பௌத்த அதிகாரத்திலும் அதன் அபிவிருத்தியிலும் யார் குறுக்கிட்டாலும் அவர்கள் அகற்றப்பட வேண்டியவர்கள் என்பதையே இது காட்டுகின்றது. இந்தக் கருத்தியலின் வெளிப்பாடுதான் மகிந்தராஜபக்ச அவர்கள் துட்டகைமுனுவாகப் பார்க்கப்பட்டதும் ஆகும்.
எனவே ‘சிங்களப் பௌத்தம்‘ எனும் கருத்து நிலைத்தளம் ஏற்கனவே சிங்கள மக்களிடமிருந்த பிரதேச, சாதி வேறுபாடுகளை அரசியல் ரீதியாக முன்னுக்குக் கொண்டுவரமுடியாத கருவியாகச் செயற்பட்டது. இதனால்தான் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட இலங்கையில் சிங்களவர்களிடம் பிரதேசவாதம் முகிழ்ப்புப் பெறவில்லை.
தமிழ் சமூகத்தின் பெரும்பாலான மக்களை வெளியே நிறுத்திய “சைவமும் தமிழும்”
ஆனால் தமிழர்களின் சைவமும் தமிழும் எனும் கருத்துநிலைத் தளம் மதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அந்த மதம் முன்வைக்கின்ற வர்ணாச்சிரம தர்மத்தை விட்டு விலகாத தன்மையினால் தமிழ் சமூகத்தின் பெரும்பாலான மக்களை அது தனது வட்டத்துக்கு வெளியிலே நிறுத்தியது.
தமிழர்களின் ஒன்றுபட்ட திரளுகை எப்போது நிகழுகின்றது என்றால் சுதந்திரத்துக்குப் பின் ஏற்பட்ட சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளின் இன ஒடுக்குதல் காரணமாக அந்தத் திரளுகை சாத்தியமாகின்றது. ‘தமிழர், தமிழ் பேசும் மக்கள்‘ என்ற கருத்துநிலைத் தளங்கள் இந்தத் திரளுகைக்கு அடிப்படையானதாக அமைகின்றன.
சைவத்தை விட்டு தமிழை பிடித்தனர்
அதாவது ‘சைவமும் தமிழும்‘ என்ற கருத்து நிலையில் “சைவ”த்தை விட்டு “தமிழை”ப் பிடித்துக்கொள்கிறார்கள். தமிழரசுக் கட்சி இந்தக் கருத்து நிலையின் அரசியல் பிரதிநிதியாக உருவாகின்றது. தமிழ்த் தலைமை தமிழரும் சைவருமான சேர்.பொன்.இராமநாதன் அவர்களிடமிருந்து கிறிஸ்தவரான எஸ்.ஜே.செல்வநாயகம் அவர்களுக்கு கைமாறுகின்றது. எஸ்.ஜே.செல்வநாயகம் கிறிஸ்தவராக இருந்தாலும் அவரை வேட்டி சால்வை அணிந்த தமிழராகத்தான் யாழ் வேளாள சமூகம் ஏற்றுக்கொண்டது.
செல்வநாயகம் அவர்களுடைய ஆரம்பகால அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் பரந்துபட்ட தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதிலும் பார்க்க தமிழ் காங்கிரஸ்சிக்கு எதிராக எவ்வாறு தமிழர்களை தம் பக்கம் கவர்ந்திழுத்து, அதிக ஆசனங்களைப் பெறலாம் என்பதிலேயே தங்கியிருந்தார். அதனால்தான் சிங்களவர்களிடத்தில் சமஸ்டிக் கட்சி என்றும் தமிழர்களிடத்தில் தமிழரசுக் கட்சி என்றும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
தமிழ் பேசும் மக்களில் இருந்து தமிழர் என்று ஆகுதல்
இதன் அடுத்த கட்டமாக தமிழ் பேசும் மக்கள் என்ற கருத்து நிலை விடுபட்டு ‘தமிழர்‘ என்கின்ற கருத்து நிலை முன்கொண்டு வரப்படுகிறது. இந்தக் கருத்து நிலை கூட அனைத்து தமிழர்களையும் ஒன்றித்து முன்கொண்டு செல்கின்ற கருத்து நிலையாக இல்லாமல் ஒரு குறிப்பிட்ட சமூகம் அதாவது யாழ் வேளாள சமூகம் தமிழர் என்று ஒரு திரளுகையை ஏற்படுத்தி, அதனால் கிடைக்கின்ற நலன்களையெல்லாம் அனுபவிப்பவர்களாக இருந்து வருகிறார்கள். உதாரணத்துக்கு கல்வியில் தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்ட போது அது யாழ் மாவட்டத்தைத் தவிர்ந்த மற்றைய மாவட்ட தமிழ் மக்களுக்கு நன்மையளிப்பதாகவே இருந்தது. உண்மையில் பரந்து பட்ட தமிழ் மக்களின் நலனில் அக்கறையுள்ள தமிழ்த் தலைமையாக இருந்திருக்குமானால் அதனை ஏற்றுக்கொண்டு யாழ்மாவட்டத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களும் பல்கலைக்கழகம் செல்வதற்கான வழிவகைகளை அரசுக்கு முன்வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை விடுத்து கல்வியில் தரப்படுத்தல் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எதிரானது என்று திரிபுபடுத்தி தமிழ்மக்களை உணர்ச்சியேற்றி பாராளுமன்றக் கதிரைகளை அலங்கரித்தார்கள்.
இதுபோன்றே தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது சிங்களத்துடன் சேர்ந்து தமிழையும் அரசகரும மொழியாக்குங்கள் எனக் கோரவில்லை. காரணம் இவர்களுக்கு தமிழ் மீதிருந்த பற்று அல்ல மாறாக ஆங்கிலம் போனால் சிங்களவர்களை மேய்க்க முடியாதே என்ற அச்சமாகும். இதனால் சாதாரண தமிழ் மக்கள் சிங்களம் கற்பதை தடைசெய்ததோடு கிழக்கில் ஒரு இனக்கலவரத்துக்கும் வித்திட்டார்கள். ஆனால் கொழும்பில் இருந்து தங்கள் பிள்ளைகளுக்கு மூன்று மொழிகளும் கற்றுக்கொடுத்து அரச உத்தியோகங்களும் பெற்றுக் கொடுத்து நன்மையடைந்தார்கள்.
‘முதல் கோணல் முற்றும் கோணல்‘ என்பது போல் ஆறுமுகநாவலரில் தொடங்கிய குறுகிய நலவாதம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதனால்தான் நாம் அந்தக் கருத்தியலையும் அது உருவாக்கிய மேலாண்மை வாதத்தையும் எதிர்க்கின்றோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பெரியார், அம்பேத்கார் கூறியது போல் நாம் சாதியை எதிர்க்க வேண்டுமாக இருந்தால் அதனைப் பேணுகின்ற மதத்தினையும் எதிர்க்க வேண்டும் என்பதற்கு ஒப்பானதே இதுவாகுமே தவிர சிவலிங்கம் அவர்கள் குறிப்பிடுவதனைப் போன்று மகாவம்சத்தை ஏற்றுக்கொண்டதற்கு ஒப்பானது அல்ல என்பதையும் விளங்கிக் கொள்தல் வேண்டும்.
நாம் இவ்வாறு கூறும்போது சிவலிங்கம் அவர்கள் பின்வரும் இரு விடயங்களைக் குறிப்பிடுகின்றார்.
- ‘கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சிக்குள் இடம்பெற்ற விவாதங்களும் மோதல்களும் சுதந்திரத்துக்குப் பின்னதான அப்போதைய தமிழ்ச் சமூகத்தில் காணப்பட்ட சாதி மேலாண்மையுடன் பொருத்திப் பார்க்கும் அரசியலாக தற்போது வெளிப்படுகிறது‘
2. ‘வடபகுதி சாதித்துவ ஆதிக்க அணுகுமுறை கிழக்கு மாகாணத்தைப் புறக்கணித்துச் செல்வதாக தற்போது விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும் இவ்வாறான சாதி ஆதிக்கத்தின் அடிப்படையான புறக்கணிப்புகளுக்கான வலுவான நியாயங்கள் எதுவும் இதுவரை முன்வைக்கப்படவில்லை. குறிப்பாக தமிழ் அரசியலில் சாதித்துவ அரசியல்தான் கிழக்குப் புறக்கணிப்பிற்கான வலுவான காரணம் எனில் அதற்கான ஆதாரங்கள் காத்திரமான விதத்தில் முன்வைக்கப்படுதல் அவசியம். அத்துடன் அவ்வாறான பிரதேச புறக்கணிப்பிற்கான அரசியல் தீர்மானங்களாவது ஆதாரமாக முன்வைக்கப்படுதல் அவசியம்‘ எனக் குறிப்பிடுகின்றார்.
வடக்கின் சாதித்துவ அணுகுமுறை கிழக்கை புறக்கணிக்கிறதா?
இதில் முதலாவதை எடுத்துக் கொண்டோமானால் ‘சுதந்திரத்துக்குப் பின்னதான அப்போதைய தமிழ்ச் சமூகத்தில் காணப்பட்ட சாதி மேலாண்மை‘ என்பதை நாம் மிகக் கவனமாக அவதானிக்க வேண்டும். அதாவது இங்கு சுதந்திரத்துக்குப் பின்னதான என்று குறிப்பிடுவதனால் சுதந்திரத்துக்கு முன்பு சாதிய மேலாண்மை இல்லை என்பதும் அது போன்று அப்போதைய தமிழ்ச் சமூகம் எனக் குறிப்பிடுவதால் இப்போதைய தமிழ்ச் சமூகத்தில் சாதி மேலாண்மை இல்லை என்றும் அர்த்தமாகிறது. அப்படியென்றால் தமிழ்ச் சமூகம் தங்கள் திருமண விடயத்தில் இன்னும் ஏன் தங்கள் தங்கள் சாதியைப் பார்த்து திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றும் அதிலும் மட்டக்களப்பாரை அவ்வளவு இலகுவாக ஏற்றுக்கொள்கிறார்களா என்றும் யாழ்ப்பாணத்தில் வெக்கோ இயந்திரத்தைக் கொண்டு தேர் இழுத்ததற்கான காரணங்களையும் சிவலிங்கம் அவர்களால் முன்வைக்க முடியுமா என அறியவிரும்புகின்றேன்.
இரண்டாவது விடயத்தில் வலுவான ஆதாரங்களைக் கோரும் சிவலிங்கம் அவர்கள் ‘தமிழரசுக் கட்சியின் ஆரம்பத்திலிருந்து அல்லது அதன் பிற்கால கூட்டமைப்பு கட்டுமானம் வரை அக்கட்சிக்குள் ஜனநாயகம் ஒரு போதும் இருந்ததில்லை. இந்த ஜனநாயக மறுப்பு என்பது பல்வேறு வடிவங்களில் செயற்பட்டது. அதில் பிரதேசவாதமும் ஒன்று‘ என்றும் ‘தமிழ் அரசியலில் பிரதேச வேறுபாடுகள் இல்லை என நிராகரிக்க முடியாது‘ என்றும் ‘ஆனால் இப்பிரதேச வேறுபாடுகள் என்பது தமிழ்ச் சமூகத்தில் இயல்பாகவே உள்ள சாதி ஆதிக்க நிலையே பிரதான காரணம் என முன்வைக்கும் ஒற்றை நிலை விவாதங்கள் ஏற்க முடியாதன கூறுபவர் உடனே அடுத்த வரியில் சாதி ஆதிக்க சக்திகள் மத்தியில் அவ்வாறான போக்கு இல்லை என மறுதலிக்க முடியாவிடினும்…..‘ எனவும் கூறுகின்றார். அதே நேரம், அதே கட்டுரையில் வரலாற்று மாற்றங்கள் எனும் உபதலைப்பில் ‘இவ்வாறான சாதிய மேலாதிக்க சிந்தனையை வளர்க்கும் அல்லது ஊக்குவிக்கும் சமூகப் பிரிவினரான தமிழ் மத்தியதர வர்க்கத்தின் பெரும்பகுதி புலம்பெயர்ந்து சென்றுள்ள நிலையில் சாதிய ஆதிக்க சிந்தனையை வளர்ப்பதற்கான ஆதிக்க கட்டுமானங்களும் அழிந்தே உள்ளன. இந் நிலையில் தொடர்ந்தும் சாதி அடிப்படையிலான மேலாதிக்க சிந்தனையின் ஆதிக்கம் அரசியலில் இருப்பதாக முன்வைக்கும் விவாதங்கள் பொருத்தமானதாக இல்லை. ஏனெனில் சமூக நிறுவனங்களே ஆதிக்க சிந்தனைகளின் இருப்பிடங்களாக உள்ளன. இவை மாற்றமடையும் போது அல்லது இல்லாதொழியும் போது இச்சிந்தனைகள் வாழ்வதற்கான தளம் அற்றுப் போகிறது.‘ என்று மிக உறுதியாகக் கூறிய அவர் அடுத்த வசனமாக ‘இவை சாதி ஆதிக்க சிந்தனை இல்லை என்பதாகவோ அல்லது பிரதேசவாத மனோபாவம் இல்லை என்பதாகவோ அர்த்தம் கொள்ள முடியாது.‘ என்கின்றார். இவ்வாறு தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாக எழுதிக் கொண்டு போவதை வாசகர்கள் கவனித்திருப்பர்.
எனவே, ‘பிரதேச வேறுபாடுகள் உண்டு என்றும் பிரதேச வேறுபாடுகள் இல்லை என நிராகரிக்க முடியாது என்றும் சாதி ஆதிக்க சக்திகள் மத்தியில் அவ்வாறான போக்கு உண்டு என்றும் பிரதேசவாத மனோபாவம் இல்லை என்பதாகவோ அர்த்தம் கொள்ள முடியாது.’ என்று கூறும் சிவலிங்கம் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்தெல்லாம் எந்த அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில் என்பதை தெளிவுபடுத்துதல் வேண்டும். மற்றவர்களிடம் ஆதாரத்தையும் வலுவான நியாயங்களையும் வேண்டி நிற்கும் அவர் அதே கருத்தை அவர் முன்வைக்கும் போது அவை எந்த அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டது என்பதை ஆதாரபூர்வமாகக் காட்டுதலே முறையாகும்.
மேலும், சாதிய ஆதிக்க சிந்தனையை வளர்க்கும் அல்லது ஊக்குவிக்கும் சக்திகள் புலம் பெயர்ந்து சென்றுவிட்ட நிலையில் அச்சிந்தனைக் கட்டுமானங்கள் அழிந்துள்ளன எனக்கூறும் சிவலிங்கம் அவர்கள் புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களால்தான் அவர் ஏற்கனவே குறிப்பிட்ட குறுந்தேசியவாத அரசியல் முன்னெடுக்கப்படுவதை அறியாமல் இருப்பது ஆச்சரியமளிப்பதாகவே உள்ளது.
அத்துடன் தனிநபர்களுக்கும் கருத்தியல் தளத்துக்குமான தொடர்புகளையும் விளங்கிக் கொள்ளாதவராக இருக்கின்றார். அவருடைய கருத்தின்படி இன்றைக்கு யாழ்ப்பாணம் அல்லது ஈழத்தமிழர்கள் சாதிகளற்ற சமூகமாக இருக்கின்றார்கள் என்பதாகும். கனவு காண்பதற்கும் ஒரு எல்லையுண்டு அளவுக்கு மீறிய கனவுகளும் கற்பனைகளும் சமூக அரசியலுக்கு பொருத்தமல்ல. தாம் புலம் பெயர்ந்த தேசங்களிலும் சாதியத்தை வர்த்துப் பேணுவதுடன் நின்றுவிடாது அதே சாதியத்தை இலங்கையிலும் தொடர்ந்து பேணுவதற்கும் வளர்ப்பதற்கும் கோடிக்கணக்கான நிதியினையினை அனுப்பிக் கொண்டிருக்கிறார் என்ற விடயங்களைத்தானும் கட்டுரையாளர் அறிந்து வைப்பது அவருக்கு எதிர்காலத்தில் பயனுள்ளதாக அமையும்.
குடும்பம், கோயில், ஊடகம், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற சமூக நிறுவனங்கள் அனைத்தும் சமூக நிறுவனங்கள்தான் இவையெல்லாம் சாதியக் கருத்து நிலையில் இயங்குபவைதான். சமூகம் என்று ஒன்று இருக்கும்வரை சமூக நிறுவனங்களும் இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் கொள்ளத் தேவையில்லை. இந்த சமூக நிறுவனங்களின் கருத்தியல் தளத்தினை முற்போக்கானதாக, சமூக ஜனநாயகம் வாய்ந்ததாக மாற்றி இயங்கவைக்க வேண்டியதே முற்போக்கு சிந்தனையாளர்களினதும் அச்சமூகத்தை நேசிப்பவர்களின் கடமையாக இருக்க வேண்டும். இதன் பொருட்டுதான் நாம் ஈழத்தமிழர்களின் புதிய கருத்தியல் தளமாற்றத்துக்கான தேவைப்பாட்டினை வற்புறுத்துகின்றோம். அது சமூக ஜனநாயகமாகும். இது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
(தொடரும்…)