பேரிடர் கால நெருக்கடியை எப்படிக் கையாள்வது?

பேரிடர் கால நெருக்கடியை எப்படிக் கையாள்வது?

— கருணாகரன் — 

கொவிட் 19 – பேரிடர் கால நெருக்கடியை எப்படிக் கையாள்வது? என்பது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து கொண்டேயுள்ளன. எதிர்பார்க்கப்பட்டதை விட நிலைமை விபரீதமாக உள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏகப்பட்ட குழப்பங்கள். இரண்டாவது அலையின் ஆரம்பத்தில் துறைசார் நிபுணத்துவத்தைக் கொண்ட மருத்துவச் சங்கத்தினரின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல்களைச் சரியாக எடுத்துக் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இந்தளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்காது என்கிறார்கள் சிலர். அது மறுக்க முடியாத உண்மையே. துறைசார் நிபுணர்களே அவற்றைப் பற்றி நன்கறிந்தவர்கள். அவர்கள்தான் பின்னர் நெருக்கடிக்கு முகம் கொடுத்துக் கொண்டிருப்பதுமாகும். 

சிலர் இதை வேறு விதமாகவும் மறுத்துரைக்கின்றனர். நோய் நெருக்கடி என்பது குறிப்பிட்ட காலத்துடன் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும். அல்லது தீர்ந்து விடும். குறிப்பாக ஒரு கட்ட தீவிர நடவடிக்கையோடும் தடுப்பூசி ஏற்றுதலோடும். இதையே பொருளாதாரம் சார்ந்து சிந்திப்போர் முன்னிறுத்தினர். 

கொவிட் 19 நெருக்கடியில் உலகம் முழுவதிலும் மோதிக்கொண்டிருப்பது இரண்டு தரப்புகள். ஒன்று மருத்துவத்துறை. மற்றது பொருளாதாரத்துறையினர். அரசுகளுக்கு இந்த இரண்டு துறையினரையும் சமாளிப்பது என்பது பெரிய சவால். அதிலும் செல்வாக்குள்ள தரப்பு பொருளாதாரத்துறையே. காரணம், பல நாடுகளிலும் ஆட்சியைத் தீர்மானிக்கும் தரப்பினராக பொருளதாரத்துறையினரே உள்ளனர். ஆகவே அவர்களுடைய ஆலோசனைகளையும் நிபந்தனைகளையுமே அரசுகள் கேட்க வேண்டியுள்ளது. ஆனால் பேரிடர் என்பது வேறு. பேரிடர் நிலைமைகளின்போது சரிநிகரான பெறுமானத்தை மருத்துவத்துறை பெறுவதுண்டு. கொவிட் 19 அப்படியான ஒன்றே. எல்லாவற்றுக்கும் அப்பால் உயிர் முக்கியமானது அல்லவா. அந்த உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்றால் அதற்குப் பொறுப்பான –அதற்குரிய துறைதானே பங்களிக்க வேண்டும். எனவேதான் மருத்துவத்துறையின் ஆலோசனைகள் கவனிக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. 

எப்படியோ இப்பொழுது நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அதைக் கண்காணிப்பதற்கு படையினரும் பொலிஸ் தரப்பும் வீதிகளில் நிற்கிறது. கொவிட் 19 பரவல் தடுப்புப் பணிகளில் படைத்தரப்பே பெரும் பொறுப்பையும் ஏற்றுள்ளது. அல்லது அதனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

ஆனாலும் இப்போதைய நிலையில் பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும்போதும் தொற்றின் வேகம் கட்டுப்பட்டது என்றில்லை. தினமும் வெளியாகும் விவரங்களைப் பார்த்தால் இப்போதைக்கு நோய்த் தொற்றுத் தணியும்போலத் தெரியவில்லை. 

இதனால்தான் பயணத் தடையை குறிப்பிட்ட நாளில்  நீக்காமல் அரசாங்கம் அதை மேலும் நீடிக்கிறது. இந்த நீடிப்பு எதுவரை நீடிக்கும் என்றும் தெரியவில்லை. இது அடுத்த  கட்டமாக ஊரடங்கு உத்தரவில் போய் முடியக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்பொழுது தெருவெங்கும் வாகனங்களையும் சனங்களையுமே பார்க்க முடிகிறது. இப்படி எல்லோரும் நடமாடிக் கொண்டிருந்தால் எப்படித் தொற்றுக் கட்டுப்பாட்டுக்குள் வரும்? இதுதான் பாரிய பொருளாதாரப் பிரச்சினையையும் பாரிய மருத்துவப் பிரச்சினையையும் கொண்டு வரப்போகிறது. 

இந்தப் பொறுப்பின்மையை என்னவென்று சொல்வது? 

வெளியே செல்வதற்கு ஒவ்வொருவருக்கும் காரணங்களிருக்கலாம். ஆனால் அதைக் கூடுமானவரையில் தவிர்த்துக் கொள்வதே நலம். அல்லது அதைக் குறைத்து மட்டுப்படுத்தலாம். இப்போது கூடத்தினமும் வெளியே போய் பொருட்களையும் கறிகளையும் வாங்கி வருவோரைப் பார்க்கிறேன். கையில் காசில்லாதவர்கள், அது கிடைக்கும்போதுதானே வாங்க முடியும் என்பது வேறு. காசிருந்தாலும் உடன் மீன், உடன் மரக்கறிதான் வாங்க வேண்டும் என்பதற்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. இது பழக்கத்தோசம். இந்தப் பழக்கதோசம் தீராத நோய்த்தோசத்தை தமக்கும் பிறருக்கும் கொண்டு வந்து விடும். ஆகவே இதைத் தவிர்ப்பதாக இருந்தால் பயணத்தடையில் இறுக்கத்தைக் கொண்டு வரவேண்டும். அதோடு சனங்களும் பொறுப்போடு நடக்க வேண்டும். 

இது முதலாவது. அதாவது தொற்றை எப்படிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்பதைப்பற்றியது. இதில் அரச உத்தரவு – அறிவிப்பு – நடவடிக்கை என்பதோடு மக்களுடைய ஒத்துழைப்பும் சமவிகிதத்தில் வேண்டும். அப்படியில்லை என்றால் அரசுக்கும் மக்களுக்கும் இடையில் மோதல்களே வெடிக்கும். அதை விட மக்கள் தமக்குரிய பொறுப்பை எடுத்துக் கொள்ளவில்லை – பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை என்றால் அதன் முழுப்பாதிப்பையும் மக்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். 

பிற நாடுகள் சிலவற்றில் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தடுப்பூசி போடுவதைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இது சாதுரியமான செயல். இதுதான் பொருத்தமான நடடிவடிக்கையுமாகும். முழுக்கட்டுப்பாட்டுக்குள் நோய்ப்பரவலைக் கொண்டு வந்து விட்டோம் என்று சொல்லிக் கொண்டிருந்த அவுஸ்திரேலியாவிற்குள் ஒரு மனிதர் கொண்டு வந்த தொற்று அங்குள்ள மெல்பேண் நகரை முடக்கத்திற்குள்ளாக்கியுள்ளது. மட்டுமல்ல அவுஸ்திரேலியாவே முழுமையான அதிர்ச்சிக்குள்ளாகி ஆட்டம் கண்டுள்ளது. இவ்வளவுக்கும் இலங்கையை விட இன்றைய நிலையில் மிகுந்த வளமும் பொருளாதார பலமும் உள்ள நாடு. 

ஆகவே இந்தத்தொற்றுப் பிரச்சினை என்பது எளிதானதல்ல. இலகுவிற் கடந்து விடுவதற்கு.        

இரண்டாவது, அரசாங்கம் பிற தரப்புகளின் ஒத்துழைப்பை முழுமையாகக் கோருவதாகும். ஏனெனில் சந்தித்துக் கொண்டிருப்பது ஒரு பெரிய தேசிய நெருக்கடியை. இதைப்பற்றி முதற் தொற்றுக் காலத்திலும் குறிப்பிட்டிருந்தோம். 

தேசிய நெருக்கடியை எதிர்கொள்வதற்கு அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைப்பதே சிறந்த வழி. இதில் எந்தக் கௌரவக் குறைச்சலுக்கும் இடமில்லை. அனைவரையும் ஒருங்கிணைத்து அனைவருக்கும் பொறுப்புகளைப் பகிர்ந்து அனைவருடைய ஒத்துழைப்பு –கூட்டுழைப்பின் மூலம் நெருக்கடியைத் தணிக்கலாம். இதில் தனியே அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மட்டுமன்றி பிற அரசியற் கட்சிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றத்தினர் எனச் சகல தரப்பையும் உள்ளடக்கலாம். அவர்களும் இதில் தயக்கமின்றி –  பொறுப்பின் அடிப்படையில் ஒத்துழைக்க வேண்டும். 

இதுதான் மக்கள் பணி. மாண்புறு செயல். ஏன் இந்த மாதிரியான செயற்பாடுகளின் மூலமாக நல்ல பல புரிந்துணர்வுகளே ஏற்பட வாய்ப்புண்டு. இதன் மூலம் இன நெருக்கடியும் இன முரணும் கூட நல்லதோர் தீர்வுத் திசையை நோக்கி நகரக் கூடியதாக அமையலாம். 

இதில் முதற்கட்டப்பணியாக – குறிப்பாக மக்களை விழிப்புணர்வூட்டுதல், பொறுப்புணர்வுடன் நடக்க வைத்தல், பொருளாதார வசதியற்ற குடும்பங்களின் வாழ்வாதார நிலைகளைக் கவனித்தல், அடங்கியிருத்தலினால் உண்டாகும் உடற்சோர்வு உளச்சோர்வு போன்றவற்றை நீக்கும் வழிகளைக் காணுதல், மருத்துவ உதவிகளுக்கான அல்லது  அனுசரணைகளை வழங்குதல் என பல பணிகள் உண்டு. 

இவற்றில் ஒவ்வொருவரும் தமக்குச் சாத்தியப்பட்டளவுக்குச் செயலாற்ற முடியும். அதற்காக இவர்களே வெளியுலாவி நோய்த்தொற்றைப் பரப்புவதற்கும் தமக்கு அரசியல் ஆதாயம் தேடுவதற்கும் முற்படக் கூடாது. இதேவேளை பிற சக்திகளை இந்தத் தேசிய நெருக்கடியில் ஒருங்கிணைப்பதன் மூலம் அவை தமக்கான அரசியல் ஆதாயத்தைத் தேடிவிடும் என்று அரசாங்கம் அச்சமடைவதும் தவிர்க்கப்படுதல் வேண்டும். 

முதலில் எரியும் வீட்டை அணைக்க வேண்டும். மூழ்கும் படகை மீட்க வேண்டும். இது முதலுதவி. அவசியப்பணி. இதில் எந்தக் கை முதலில் நீள்வது என்பதல்லப் பிரச்சினை. 

இலங்கையில் உள்ள தீராத வியாதிகளில் ஒத்துழையாமையும் ஒன்று. எதற்கும் எதிர்த்துக் கொண்டிருப்பதும் சந்தேகப்படுவதும் பழக்க தோசமாகி விட்டது. ஆகவே இந்தப் பழக்க தோசத்தைக் கை விட்டு புதிய பண்பாட்டுக்குள் நுழைய வேண்டும். அதொன்றும் கடினமானதல்ல. ஏனென்றால் எல்லோருக்குமான கூட்டு ஆபத்தே இது. ஆகவே கூட்டு ஆபத்தைக் கூட்டாக எதிர் கொள்வதே சிறந்த வழி. அந்தச் சிறந்த வழியைக் குறித்துச் சிந்திப்பதே சிறந்தது. 

அப்படி ஒன்று நிகழுமாக இருந்தால் பேரிடர் நெருக்கடி தணிவது மட்டுமல்ல, இந்த நாட்டிலுள்ள பல பேரிடர்களுக்கான பிரச்சினைகளும் தணிவதற்கான சுவடுகள் பதிவதாக அமையும்.