சொல்லத் துணிந்தேன் – 76

சொல்லத் துணிந்தேன் – 76

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 

‘மாகாண அதிகாரங்கள் பறிப்புக்கு எதிராகச் சகலரும் அணிதிரள்வோம். முன்னாள் எம்.பி. சுரேஷ் அறைகூவல்’ என்ற தலைப்பில் மின்னிதழான ‘காலைக்கதிர்’ (31.05.2021 காலைப் பதிப்பு) செய்தி வெளியிட்டுள்ளது. 

மாகாண பாடசாலைகளைத் தரமுயர்த்தல் என்ற போர்வையில் மத்திய அரசு மாகாண பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக மாற்றி வரும் போக்குக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார். 

மாகாண அரசுகளின் நிர்வாகத்தின் கீழுள்ள பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக ஆக்கி அவற்றை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ்க் கொண்டுவருதல் அதிகாரப்பகிர்வுக் கோட்பாட்டுக்கு எதிரானதும் அது பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தினூடாக மாகாண சபைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை ஐதாக்குவதுமான செயற்பாடாகும் என்பதில் இருவேறுபட்ட கருத்துக்களிருக்க நியாயமில்லை. 

1987 இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் வாயிலாக 1988ல் ஏற்படுத்தப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண அரசை (தற்காலிகமாகவேனும் இணைக்கப்பட்ட) முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச 1990இல் கலைத்த பின்னர், இன்றுவரை முன்னாள் ஜனாதிபதிகளான பிரேமதாச மற்றும் டி.பி. விஜயதுங்க காலத்திலும்- சந்திரிகா விஜயகுமாரணதுங்க பண்டாரநாயக்கா மற்றும் மஹிந்த ராஜபக்ச காலத்திலும்- பின் வந்த மைத்திரிபால சிறிசேன காலத்திலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிர்வாகத்தின் கீழிருந்த பல பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டன. முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்களும்- பின்னால் வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்திய மாவட்டங்களிலிருந்து சில பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்தும்படி அரசாங்கத்திடமும் துறைசார் அமைச்சர்களிடமும் கோரிக்கை விடுத்த கடந்தகால சந்தர்ப்பங்கள் பலவுண்டு.  

இது எதனைக் காட்டுகிறதென்றால் முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பின்னால் வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கூட அதிகாரப் பகிர்வு குறித்த தெளிவான சிந்தனை இருக்கவில்லையென்பதையே. அப்போதெல்லாம் அவற்றைக் கண்டும் காணாமலிருந்த முன்னாள் பா.உ. சுரேஷ் பிரேமச்சந்திரன் இப்போதாவது ‘ஞானம்’ பெற்றெழுந்து மாகாண சபைகளின் நிர்வாகத்தில் உள்ள பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக்கி, அவற்றை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கு எதிர்ப்புக்குரல் கொடுத்தமைக்குப் பாராட்டுகள். முன்பு ஒரு காலகட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராகக்கூட சுரேஷ் பிரேமச்சந்திரன் விளங்கியவர். அப்போதெல்லாம் அவரது பாராளுமன்றச் சகாக்களுக்கு இதனை ஏன் எடுத்துக் கூறவில்லை என்பது புரியவில்லை. 

இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அனுசரித்துப் போய் அதன் அமுலாக்கலுக்குப் பாரிய பங்களிப்பை வழங்கிய தோழர் பத்மநாபா தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எஃப் இன்) மத்திய செயற்குழுவில் உறுப்பினராகவிருந்த- வரதராஜப் பெருமாள் முதலமைச்சராக விளங்கிய முதலாவதும் கடைசியுமான வடக்கு கிழக்கு மாகாணங்கள் (தற்காலிகமாகவேனும்) இணைந்த மாகாண சபையில் 1988இல் இருந்து 1989 பாராளுமன்ற பொதுத்தேர்தல் வரை உறுப்பினராகப் பதவி வகித்த-தோழர் பத்மநாபா உட்படச் சக தோழர்கள் பதின்மூன்று பேரையும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்நாடு சென்னை, சூளைமேட்டில் வைத்து 1990இல் படுகொலை செய்த பின்னர் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமாகி அக்கட்சிக்குத் தலைமையேற்ற- சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவுடன் கூட்டு வைத்து அப்போதைய வடகிழக்கு மாகாண அரசைக் கலைக்க வைத்து அதிகாரப்பகிர்வுச் செயற்பாடுகளை அழிவுக்குள்ளாக்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை 2001இல் எவ்வாறு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்று அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிலொன்றாகத் தனது தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியையும் இணைத்துக் கொண்டார்? 

உண்மையில் அவர் என்ன செய்திருக்க வேண்டுமென்றால் தோழர் பத்மநாபாவின் கொலை மரணத்தின் பின்னர் (அப்போது சுரேஷ் பிரேமசந்திரன் பாராளுமன்ற உறுப்பினராகவும், 1989இல் நடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈபிஆர்எல்எவ், ரெலோ மற்றும் ஈஎன்டிஎல்எவ் ஆகிய கட்சிகள் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி பட்டியலில் ஈபிஆர்எல்எஃப் சார்பில் போட்டியிட்டு வென்ற யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த நவரட்ணம், வன்னி மாவட்டத்தை சேர்ந்த ராஜகுகனேஸ்வரன் மற்றும் இமானுவேல் சில்வா, மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பிரின்ஸ் காசிநாதர் ஆகியோரை அவரது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாகக் கொண்டும் விளங்கினார். மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஈபிஆர்எல்எஃப் சார்பில் தெரிவான பா.உ. சாம் தம்பிமுத்துவும், யாழ் மாவட்டத்திலிருந்து ஈபிஆர்எல்எஃப் சார்பில் தெரிவான யோக சங்கரியும் புலிகளால் கொல்லப் பட்டிருந்தார்கள்) அவரது கட்சியின் சக பாராளுமன்ற உறுப்பினர்களையும் இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அனுசரித்துப் போய் 13வது அரசியல் சட்டத் திருத்தத்தையும் அதன் கீழமைந்த வட கிழக்கு இணைந்த மாகாண சபையையும் மனப்பூர்வமாக ஏற்றிருந்த ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு அதிகாரப்பகிர்வுச் செயற்பாடுகளுக்குத் தலைமை தாங்கியிருக்க வேண்டும். 

அதுதான் போகட்டும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பங்காளிக் கட்சியாகி அதன் பேச்சாளராகவும் விளங்கிய அவரைப் பின்னாளில் ஓரங்கட்டி இறுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) வெளியேற்றிய பின்னராவது அல்லது அவர் வெளியேறிய பின்னராவது தனது தவறுகளைத் திருத்திக்கொண்டு அதிகாரப் பகிர்வை அவாவி நின்ற அரசியல் சக்திகளுடன் இணைந்து அதிகாரப் பகிர்வுக்கான செயற்பாடுகளை முன்னெடுத்திருக்க வேண்டும். அதிகாரப் பகிர்வுக்குச் செயற்பாடுகளுக்குத் தலைமை தாங்கும் தகுதியும் அதற்கான அரசியலும் தோழர் பத்மநாபா காலத்திலிருந்தே ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியிடம் இருந்தது.  

அதனையும் செய்யாமல், வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உருவாக்கிய தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து இறுதியில் கடந்த 2020 பாராளுமன்றத் தேர்தலின்போது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பெயரைத் ‘தமிழ் மக்கள் தேசிய கூட்டணி’ எனவும் அதன் ‘பூ’ச்சின்னத்தை ‘மீன்’ சின்னமாகவும் மாற்றிக்கொண்டு ஈபிஆர்எல்எஃப் மறுவடிவம் எடுத்த தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைமைப் பதவியையும் சி.வி.விக்னேஸ்வரனிடம் பறிகொடுத்துவிட்டு அல்லது அடகு வைத்துவிட்டு அதனை மீட்க முடியாமல் இன்று ‘ஆப்பிழுத்த குரங்கு’ ஆகி அரசியலில்  கையறு நிலையில் கலங்கி நிற்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மீது ஆத்திரம் வரவில்லை. அனுதாபமே மேலோங்கி நிற்கிறது. 

சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் தத்துவார்த்தத் தெளிவும் அதிகாரப் பகிர்வு குறித்த ஆத்மார்த்தமான அக்கறையும் இருந்திருக்குமானால் 2001இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஈபிஆர்எல்எஃப் ஐப் பங்காளிக் கட்சியாக இணைத்திருக்க மாட்டார். அவரிடம் அன்றும் இன்றும் என்றும் மேலோங்கி நிற்பது தன்னலமே ஆகும். தன்னலம் காரணமாக தார்மீக பலத்தை அவர் இழந்துவிட்டார். மாகாண அதிகாரங்கள் பறிப்புக்கு எதிராகச் சகலரையும் அணி திரளுமாறு இன்று அவர் அறைகூவல் விடுப்பது வெறுமனே கோசமே தவிர அது எந்த நேர் விளைவையும் ஏற்படுத்தாது. அவர் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிப்போயுள்ளது. கொள்கையில்லாத அரசியல் அவருக்கும் உதவாது, மக்களுக்கும் உதவ மாட்டாது. அவரது அரசியல் பயணத்தில் அதுதான் நடந்திருக்கிறது. ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இது ஒரு பாடமாக அமையட்டும்.