மாறும் நாகரிகமும் மறைந்து போகும் ஸ்ரைல்களும்

மாறும் நாகரிகமும் மறைந்து போகும் ஸ்ரைல்களும்

  — வேதநாயகம் தபேந்திரன் —  

 மனிதனின் அடிப்படைத் தேவைகளில் இரண்டாவது தான் ஆடை.  ஆங்கில மொழியில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் மட்டுமே ரவுசர் (Trouser) எனப்படும் நீளக் காற்சட்டையை எமது நாட்டில் போடலாமென்ற வழமை ஒரு காலம் இருந்தது. ஆனால் இன்று யாவரும் ரவுசர் அணிகின்றனர். நீளக் காற்சட்டையான இதனை லோங்ஸ் (Longs) எனவும் அழைக்கும் வழக்கமும் உள்ளது. 

டெனிம் துணியில் தைக்கப்பட்ட இறுக்கமான நீளக் காற்சட்டைக்கு மட்டுமே ஜீன்ஸ் என்ற பெயர் உள்ளது. டெனிம் ஜீன்ஸ் எனத்தான் அழைப்பார்கள். ஆனால் இன்று எல்லா ரவுசர்களுக்கும் ஜீன்ஸ் என்ற பொதுப்பெயர் வழங்கப்படுகின்றது. 

எமது பண்பாட்டில் ரவுசர் ஆண்களுக்கு உரிய ஆடையா? அல்லது பெண்களுக்குரிய ஆடையா? எனக்கேட்டால் ஆண்களுக்குரிய ஆடைதான் என ஒரு காலத்தில் பதில் சொல்லி இருப்பார்கள். 

தற்காலத்தில் ”ரவுசர் ஆண், பெண் இருபாலாருக்கும் உரிய ஆடைதான்” எனக் கூறுவார்கள். 

தாயகத்தில் சேலை, சுடிதார் (பஞ்சாபி), பாவாடை தாவணி, கவுணுடன் இருந்த எம் குலத்துப் பெண்கள் எல்லாம் புலம்பெயர்ந்த போது டெனிம் ஜீன்ஸ் அணிந்து கோலம் மாறினார்கள். 

காலம் மாற்றவில்லை. குளிர்கால நிலை, அந்தந்த நாட்டு நாகரிகங்கள் அவர்களின் கோலத்தை மாற்றிவிட்டது. 

ஆரம்பத்தில் கொழும்பு போன்ற பெருநகரங்களில் தான் தமிழ் பெண் பிள்ளைகள் டெனிம்  ஜீன்ஸ் அணிந்தார்கள். 

தற்போது எல்லா இடங்களிலும் வளர்ந்த பெண் பிள்ளைகள் பலர் ரியூசன், பல்கலைக்கழகம்  உட்பட பொது இடங்களுக்கும் ஜீன்ஸ் போட்டுச் செல்வதைச் சாதாரணமாகக் காணலாம்.  

வேட்டியுடன் வாழ்ந்த எமது நாகரிகங்கள் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் என மாறி மாறி வந்த காலனித்துவ ஆட்சிகள் காரணமாக மெல்ல மெல்ல நீளக் காற்சட்டைக்கு மாறின. 

குடியேற்ற ஆட்சிக்காலங்களில் லோங்ஸ்சுடன் வரும் எம்மவர்களில் பலர் தமக்குள் ஆங்கிலத்தில் மட்டும் கதைப்பார்கள். தமிழ் தெரியாதது போல நடப்பார்கள். 

வெள்ளைத் துரைமாரால் அங்கீகரிக்கப்பட்ட கறுப்புத் துரையாகத் தம்மைக் காட்டிக் கொள்வார்கள். 

 யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் சப்பல் வீதி, முதலாம் குறுக்குத் தெரு, இரண்டாம் குறுக்குத் தெரு, வேம்படி வீதி போன்ற வீதிகளில் வசித்தவர்களில்  பறங்கி இனத்தவர்களும் குறித்த வீதத்தில் இருந்தார்கள். அவர்களில் மிக மூத்த தலைமுறையினர் அந்நிய மொழிகளில் கதைப்பார்கள். கட்டைக் காற்சட்டை போடுவார்கள். ஜீன்ஸ் போல நீளக் காற்சட்டையும் அணிவார்கள். 

அந்தப் பிரதேசத்தை யாழ்ப்பாணத்தின் கொழும்பு -7 என்பார்கள். 1980களின் ஆரம்பத்தில் துப்பாக்கிகள் வெடிக்க ஆரம்பிக்க அவர்களில் பலர்  தமது பரம்பரைத் தொடர்பு உள்ள மேற்கு ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்றுவிட்டார்கள். 

ஏனையவர்கள் பின்னாளில் தமிழர்களுடன் கலந்து விட்டனர்.  

கட்டைக் காற்சட்டையை சோர்ட்ஸ் (Shorts) எனவும் நீளக் காற்சட்டையை பெல்ஸ் அல்லது பெல்போட்டம் எனவும், பிற்காலத்தில் ஜீன்ஸ் எனவும் அழைத்தார்கள். 

ஆனால் இந்த நீளக் காற்சட்டைகளின் நீள அகலங்கள், தையல் மாதிரிகள், அலங்காரங்கள், துணி வகைகள் காலத்துக்குக் காலம் மாறுபட்டன. 

உடையலங்கார நிபுணர்கள், தையல்காரர்கள் புகுத்தும் நவீனங்கள் அழகான இளைஞர்கள், இளம் பெண்கள் அணிந்து உலாவர அது பிரபலமாகிவிடுகின்றது. 

முன்னாளில் மேற்கில் உருவான ஒரு நாகரிகம் கடல் கடந்து, கண்டம் கடந்து எம் போன்ற கீழைத்தேய நாடுகளுக்கு வந்து பரவலாகப் பல மாதங்கள் எடுத்தது. 

தற்போது உலகமயமாதலும் சமூக வலைத்தளங்களது வளர்ச்சியும் ஒரு புதிய ஸ்ரைல் எமது நாட்டை எட்டிப்பார்க்க ஒரு சில நிமிடங்கள் போதும்.  

அது நாடெங்கும் பரவ ஒரு சில மணித்தியாலங்கள் போதும். 

”கிழிஞ்சதைப் போட்டால் வறுமை. கிழிச்சுப் போட்டால் நாகரிகம்” ஏழ்மையும், பணக்காரத்தனமும் ஆடையால் ஒப்பிடப்பட்டே சமூக வலைத்தளங்களில் பதிவு வருகின்றது. 

1970களின் பிற்பகுதியில் எமது நாட்டில் பெல்போட்டம் பிரபலமாக இருந்தது. 

நீளக் காற்சட்டையின் கீழ் கால் பகுதி அகன்று இருப்பதை பெல்போட்டம், பெல்ஸ் என்பார்கள். எனது சிறு வயதில் அதனை அணிந்து மகிழ்ந்துள்ளேன். 

1980களின் ஆரம்பத்தில் கால்பகுதி ஒடுக்கமான ரவுசர் பிரபலமாகத் தொடங்கியது. இந்த வகை நீளக் காற்சட்டையில் கீழ் கால் பகுதி அகலமாக இருக்காது. கால் பாதம் புகக்கூடியதான அளவாக இருக்கும். 

இந்த ரவுசர் வரத் தொடங்கிய காலத்தில் ஹொட்றொயில் (Hotroil) துணியில் தைக்கப்பட்ட   ரவுசர் பிரபலமாக இருந்தன. 

டெனிம் ஜீன்ஸ் இன்று வரை பிரபலமாக இருக்கின்றது. குளிர் நாடுகளில் குளிரைத் தாங்கக் கூடிய ஒரு வகைத் துணியாக டெனிம் அன்றும் இன்றும் இருக்கின்றது. 

ஹொட்றொயில் துணியிலான உடுப்புகள் ஒரு சில வருடங்களின் பின்பாகப் பிரபலம் இழந்து போனது. 

பின்னாளில் இத் துணியைக் காணமுடியவில்லை. அது போல ஜெலோலைன், கறா எனத் துணி வகைகள் காலத்துக்குக் காலம் ஸ்ரைலாக பிரபலமாக வந்தன. 

பிளிற்ஸ் வைத்துத் தைப்பது ஒரு காலத்தில் ஸ்ரைலாக இருந்தது. பின்னொரு காலத்தில் பிளிற்ஸ் வைக்காமல் தைப்பது ஸ்ரைலாக மாறியது. 

ரவுசருக்கு இடுப்புப் பகுதியில் இரண்டு பக்கமும் சிறியதொரு தகடு வைத்துத் தைத்து அதில் வைத்து இறுக்கிக் கட்டுவார்கள். பெல்ற் தேவைப்படாது. 

இப்படியே ஸ்ரைலுகள் காலத்துக்குக் காலம் மாறும். 

பாரதிராஜாவின் நிறம் மாறாத பூக்கள் படத்தின் நாயகன் சுதாகர் இடுப்பில் பெல்ற் இல்லாமல் வருவார். 

ரவுசர், ஜீன்ஸ்க்கு பெல்ற் அணிவது ஒரு ஸ்ரைலாகப் பார்க்கப்பட்டாலும் இடுப்பிலிருந்து ஜீன்ஸ் வழுகிக் கீழே இறங்காமல் பாதுகாக்கும் ஒரு கவசமே பெல்ற் எனலாம். 

வன்முறைக் காட்சிகளில் பெல்ற்ரால் ஒருவரை அடிப்பதைக் காணலாம். தனிப்பட்ட வாழ்விலும் இது போன்ற நிகழ்வுகளைக் காணலாம். 

ரவுசரில், ஜீன்சில் தையல் நாகரிகங்கள் பல விதத்தில் வரும். 

எமது பாடசாலைக் காலத்தில் ஓ.எல் பரீட்சை வரையும் காற்சட்டை போட்டோம். உயர்தர வகுப்பு வந்ததும் மெல்ல மெல்ல நெளிந்து நெளிந்து வெள்ளைக் கலரில் ரவுசர் போட்டோம். 

உயர்தர பரீட்சை எடுத்ததன் பின்னர்தான் ரவுசர்  போட்டவர்களும் உண்டு. 

இன்று ஓ.எல் (சாதாரண தரம்) படிக்கும் காலத்திலேயே மாணவர்கள் நீளக் காற்சட்டையாம். ரவுசர் போடும் பழக்கம் சாதாரணமாகி விட்டது. 

எமது காலத்தில் யாழ்ப்பாண நகரத்தின் முஸ்லீம் பிரதேசத்தில் ஆப்தீன் ரெயிலர்ஸ் எனும் பெயரில் ஆப்தீன் என்பவர் கடை வைத்திருந்தார். அவரே முன்னணி ரெயிலராக இருந்தார். அவரிடம் தைத்தால் ரவுசர் நேர் சீராக இருக்கும்.  

இன்று இடுப்பு, தொடை, கால் எல்லாம் இறுக்கிப் பிடிக்கும் ரவுசர்கள், ஜீன்சுகள்தான் பாசன். அதனைப் படாத பாடுபட்டு இளசுகள் போடப்படும் பாடு இருக்கிறதே பார்க்கப் பார்க்கச் சிரிப்பு வரும். ஆனால், இதே இறுக்கமான ரவுசர்கள் எமது அப்பாக்கள் காலத்திலும் இருந்துள்ளது. கொஞ்சம் வித்தியாசம். அதற்கு முன்னதாக கொழுகொழுத்த ரவுசர்கள். இப்படி ரவுஸரின் ஸ்டைல் காலத்துக்கு காலம் மாறி, அல்லது மீண்டு வந்திருக்கிறது. 

ஜீன்ஸ், ரவுசர் தொடர்பான நினைவலைகள் மிக நீளமானவை. உங்களுக்கும் மாறுபட்ட அனுபவங்கள் இருக்கும்.