போர்ட் சிட்டியும் பொருளாதார அறிவும்! ஏட்டுச்சுரக்காயும், நாட்டுச்சுரக்காயும்! — (காலக்கண்ணாடி 41)

போர்ட் சிட்டியும் பொருளாதார அறிவும்! ஏட்டுச்சுரக்காயும், நாட்டுச்சுரக்காயும்! — (காலக்கண்ணாடி 41)

—-அழகு குணசீலன் —- 

கந்தப்போடி….!

1980களின் ஆரம்பத்தில் கிழக்கு மாகாணத்தை ஒரு கலக்கு கலக்கிய மனிதன்.

தற்போது ஐம்பது வயதைத்தொட்டவர்களுக்கும், தாண்டியவர்களுக்கும் நன்கு பழகிப்போன பெயர். 

தோளில் ஒரு ஒற்றைக்குழல் துப்பாக்கியுடன் நடமாடிய இவன், தமிழ்நாட்டு காவல்துறைக்கு ஒரு வீரப்பன் போன்று, இலங்கைப் பொலிஸாருக்கு சிம்ம சொற்பனம்.

கொட்டியாரம் முதல் பாணமை வரையான, கந்தப்போடியின் காட்டுவழிப்பாதைதான் பிற்காலத்தில் இயக்கங்களின் குறிப்பாக புலிகளின் கிழக்கிற்கான இரகசியப் பயணப் பாதையானது.

வறிய மக்கள் அவனை நேசித்தார்கள். இத்தனைக்கும் அவன் செய்தது வசதியானவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட உணவுப் பொருட்களை, பணத்தை, வறிய மக்களுக்கு பங்கிட்டதுதான்.

இந்த பொருளாதார அறிவு அவனுக்கு எப்படி வந்தது. வசதியான தனியார் கல்லூரிகளிலோ, மேலைநாட்டு பல்கலைக்கழகங்களிலோ அவன் கற்கவில்லை.

முற்று முழுதாக அவன் பெற்றுக்கொண்ட வாழ்வியல் அனுபவம். அனுபவம் கற்றுத்தந்த பாடம். பொருளாதார ரீதியான சமூக ஏற்றத்தாழ்வை அடையாளம் கண்ட வர்க்கப்பார்வை. அவனுக்கு இது ஒரு மார்க்சிய கோட்பாடு என்பது தெரிந்திருக்காது. ஆனால் சமூக நீதி என்பது தெரிந்திருந்தது.  

இங்குதான் வெறும் புத்தகப் பூச்சி ஏட்டுச் சுரக்காய்க்கும், மக்களின் வாழ்வியல் அனுபவங்களை சுமந்து அந்த வறிய மக்கள் வர்க்கத்தில் ஒருவனாக செயற்படும் நாட்டுச் சுரக்காய்க்கும் உள்ள வேறுபாடு வெளிச்சத்திற்கு வருகிறது. நாட்டுப் சுரக்காயில் கறிசமைக்கலாம். ஏட்டுச்சுரக்காயில்….?

இந்த அடிப்படையிலேயே போர்ட் சிட்டிக்குள் அல்லது அதற்கு வெளியே மட்டக்களப்பு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுகின்றது. இங்கு இரு விடயங்கள் முக்கியமானவை. ஒன்று போர்ட் சிட்டி கொழும்பை மையப்படுத்திய ஒரு தேசிய அபிவிருத்தித் திட்டம். மற்றையது இது வெளிநாட்டு நிறுவனங்களுக்காகவும் உல்லாசப் பிரயாணிகளுக்காகவும் போடப்படுகின்ற ஒரு தூண்டில். இங்கு சர்வதேச மட்டத்திலான தரம் பேணப்பட வேண்டிய தேவை ஆணைக்குழுவுக்கு இருக்கிறது. 

இந்த நிலையிலும் தேசிய ரீதியில் பெறப்படுகின்ற நன்மைகள் பிராந்தியங்களுக்கு சற்றும் கிடைக்காது என்று வாதிடமுடியாது. குறிப்பாக நிர்மாண, உட்கட்டமைப்பு பிரிவுகளில் ஆரம்பத்தில் அதிகவேலை வாய்ப்புக்கள் ஏற்படும்.

பாரிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது இருவகையான வேலைவாப்புக்களுக்கு அங்கு இடமிருக்கிறது.

1. நேரடி வேலைவாய்ப்பு

2. மறைமுக வேலைவாய்ப்பு 

பொதுவாக திட்ட மதிப்பீட்டில் பேசுபொருளாக இருப்பதும் ஓரளவு புள்ளி விபரரீதியாக கணிப்பிடக்கூடியதாக இருப்பதும் நேரடி வேலைவாய்ப்பு.

ஆனால் மறைமுக வேலைவாய்ப்புக்களின் பங்கே அதிகமாக இருப்பது வழக்கம். இது கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து போர்ட் சிட்டி செயற்படும் போதே தெரியவரும். 

முதலில் இலங்கையின் இன்றைய ஏற்றுமதிப் பன்முகப்படுத்தலை காட்சிப்படுத்தி அதனூடாக போர்ட் சிட்டியின் பொருளாதாரப்போக்கு எப்படி அமையும் என்பதை எதிர்வு கூற – காட்சிப்படுத்த முனைகிறது காலக்கண்ணாடி.

மேற்குலக சுப்பர்மார்க்கட்டில் முருங்கையும், பொன்னாங்கண்ணியும்:

1990/2000களில் இருந்து மேற்குலகில் சைனாரவுன் வளாகங்கள், ஆசிய அல்லது இந்திய சுப்பர் மார்க்கட்கள் அதிகரித்துள்ளன. இதற்கு காரணம் அதற்கான சந்தைவாய்ப்பு. இது எப்படி ஏற்பட்டது.? சாத்தியமானது?

உலகமயமாக்க தாராள பொருளாதார கொள்கையால் மேற்குலகு நோக்கி ஏற்றுமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மனிதவளம் ஒருபுறம், பயங்கரவாதத்திற்கு எதிரான போர்ப் பிரகடனம் காரணமாக புலம்பெயர்ந்த அகதிகள் மறுபுறம் என குடியேறிகளின் தொகை அதிகரித்தது.

இதனால் இவர்களின் உணவுக் கலாச்சாரத்தைப் பேணும் வகையில் தடையற்ற ஏற்றுமதி இறக்குமதி மூலம் பாரம்பரிய உணவுப்பொருட்களை இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்படுகிறது. 

இது பல ஆசிய, ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகளின் மரபு ரீதியான ஏற்றுமதிக் கட்டமைப்பை மாற்றியமைத்தது.

இலங்கையில் நெல்வயல் வரம்பில் தானாக வளர்ந்த பொன்னாங்கண்ணியும், வேலிக்கு நாட்டிய முருங்கையின் இலையும், காயும், குளத்தில் முளைத்த திராயும், வேலிக்கு வேலி தாவிப்படர்ந்த குறிஞ்சா இலையும், கிணற்றடியில் வாழைக்குள் வளர்ந்த வல்லாரையும்  இலங்கையின் ஏற்றுமதிப் பட்டியலில் இடம்பெறும் என்று எங்களில் எவராவது கனவாவது கண்டிருப்போமா…? இது சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட மகத்தான மாற்றத்தின் விளைவு. இவற்றை உற்பத்தி செய்யும் சிறுவிவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததா? இல்லையா? அவர்களின் வருமானம், வாழ்க்கைத்தரம் உயர்ந்ததா? இல்லையா?

1960/1970களில் குளங்களிலும் வாவிகளிலும் மலிந்து கிடந்த மீன் எங்களில் பலருக்கு பரீட்சயமான ‘செல்வன்’ என்றும் ‘ஜப்பான்’ என்றும் அழைக்கப்பட்ட மீன். இன்றைய உலகில் வியட்நாம், தாய்லாந்து நாடுகளின் முக்கிய ஏற்றுமதிப் பொருள் இது. விலங்கியல் பெயர் ‘திலாப்பியா’.

அந்தக் காலத்தில் வறியவர்களின் முக்கிய மாமிச புரத உணவு. வசதியானவர்கள் வெட்கத்துடன் கைப்பையோடு வந்து கண்ணை மூக்கைப் பார்த்து வாங்குவார்கள். யாராவது கண்ணில் பட்டுவிட்டால் கொடுப்புக்குள் ஒரு கள்ளச்சிரிப்புடன் கூடவே ஒரு பச்சைப் பொய்யும் ‘இதை நாய்க்கு வாங்கிக்கொண்டு போறன்’ 

இன்று மேற்கின் சல்மோன் மீனோடு போட்டிபோடும் அளவிற்கு உலகச்சந்தை மரியாதை. நல்ல கொழுப்பும், புரதமும் என்று நம்மவர்களின் ‘நாயுணவை’ வெள்ளைக்காரர் விரும்பிச் சாப்பிடுகின்றனர். இவற்றை விடவும் தானியங்களும், கடலை, பருப்பு வகைகளும் பழவகைகளும் வேறு. ஆசிய மரக்கறி, இலைக்கறிகளுக்கு நல்ல கிராக்கி.

இதனால் நேரடி வேலைவாய்ப்பைப் பெற்றவர்கள் ஏற்றுமதி இறக்குமதி கம்பனிக்கார்கள். ஆனால் இலட்சக்கணக்கான வறிய விவசாயிகள் மறைமுகமான வேலைவாப்பைப் பெற்றார்களா? இல்லையா? எங்களது உற்பத்திகள் கொழும்புக்கு போகிறது என்பது மட்டும் தான் எங்களுக்கு தெரியும். ஐரோப்பிய சந்தைகளுக்கும், அரபுலகச் சந்தைகளுக்கும், அமெரிக்கச் சந்தைக்கும் போகிறது என்பது எங்களுக்குத் தெரியாது.

இந்த உற்பத்திகளுக்கான சந்தையை குடியேறிகள் தான் வழங்குகிறார்கள் என்பதல்ல. கீழைத்தேய ஆரோக்கிய வாழ்வும், ஆயுர்வேத, ஹோமியோபதி, சீன வைத்திய முறைகளும் விரைவாகப் பரவிவருகின்றன. இன்றைய உலகில் அதுவும் சமகால கொரோனா ஆண்டுகளில் மேற்கு நாட்டவர்களும் போட்டிபோட்டுக்கொண்டு வாங்குகிறார்கள்.

ஐரோப்பாவில் ஆசியன் சுப்பர் மார்க்கட் ஒன்றில் விற்கப்படும் பொன்னாங்கண்ணி உன்னிச்சை வறிய கிராமிய விவசாயி ஒருவரின் உற்பத்தியாக ஏன் இருக்கமுடியாது?

அதிகமாக இலங்கைக் குடியேறிகள் வாழும் அமெரிக்கத் தீவொன்றில் உள்ள தோசைக்கடையில் வன்னி உழுந்து தோசைக்கு வாடிக்கையாளர் வரிசையில் முண்டியடிக்கிறார்கள் என்ற உண்மை எத்தனை ஏட்டுச் சுரைக்காய்களுக்கு தெரியும்?

இவை எல்லாம் கிராமிய வறிய மக்களின் மறைமுக வேலைவாய்பின் ஊடாக அந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துமா? இல்லையா?

இந்தப் பாணியிலான அணுகுமுறையிலேயே போர்ட் சிட்டி மறைமுக வேலைவாய்ப்புக்களை நாம் நோக்க முடியும்.

போர்ட் சிட்டியில் பனங்கள்ளும், இறால் வடையும் 

போர்ட் சிட்டியின் நிர்மாணக் கட்டமைப்பில் ஆடம்பர ஹொட்டல்கள், தொடர்மாடி வீடுகள், ஆரோக்கிய நலவாழ்வு மற்றும் உடற்பயிற்சி, பொழுது போக்கு நீரியல் விளையாட்டுக்கள், பொழுதுபோக்கு பூங்கா, பாரிய வர்த்தக கடைத்தொகுதி என்பவை உல்லாசப்பிரயாணிகளின் கவனத்தை திருப்பக்கூடியவை.

இங்கு வருகைதரும் உல்லாசப் பிரயாணிகள் மேற்குலக வேலைப்பளுவை, இயந்திர வாழ்க்கையை கழுவிக்காலாற இங்கு வருகிறார்கள். ஆரோக்கிய அமைதிச் சூழலை அனுபவிக்க வருகிறார்கள். கைத்தொழில் மயமாக்க அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பான், சீன, இந்திய வருகையாளர்களதும், எண்ணெய் வள அராபியர்களினதும் உல்லாசப்பிரயாண எதிர்பார்ப்பும் அதுதான்.

இலங்கையின் உணவுக்கலாச்சார ஆயுர்வேத சமையல், ஆரோக்கிய உணவுகள் அவர்களைக் கவரக்கூடியவை. புற்றுநோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட மரவள்ளிக் கிழங்கும், நீரிழிவு நோய்க்கான பாவற்காயும், இரத்த கொழுப்பை குறைக்கும் வெண்டிக்காயையும், நோய் எதிர்புச்சக்திக்கான இஞ்சியும், மஞ்சளும், உள்ளியும் கொண்ட உணவை விரும்பும் போது கிராமங்களில் இவற்றின் உற்பத்தி அதிகரிக்கும். அதனூடாக ஏற்படும் கேள்விக்கு ஏற்ப நேரடி, மறைமுக வேலைவாய்ப்புக்கள் ஏற்படும்.

கடல் உணவுகள் உல்லாசப்பிரயாணிகள் விரும்பிச் சுவைக்கும் ஒன்று.

இலங்கையின் கடல் வளம் இதற்கொரு கொடையாக உள்ளது. இறால், நண்டு, கடல் அட்டை போன்றவற்றிற்கான தேவையும், பயன்பாடும் உயரும். இது மீனவர்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தும். தற்போது கணிசமான அளவு கடல் உணவுகள் கொழும்புக்கு ஏற்றப்படுகின்றன. இதன் அளவு அதிகரிக்க வாய்ப்புண்டு. 

சீனா, தாய்லாந்து, நாடுகளில் பொதுவாக வெள்ளை அரிசியே உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு மாறாக சிவப்பு- தவிட்டு அரிசியை  ஐரோப்பியர்கள் விரும்புகிறார்கள். இதனால் கிழக்கு மாகாணத்தில் சிவப்பு அரிசியின் உற்பத்திக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கலாம்.

இறால், நண்டுகள் உற்பத்திகளையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு ஆடை உற்பத்தி, சிறுகைத்தொழில் உற்பத்திகள், மட்டுமன்றி உள்ளூர் சுற்றுப்பயணங்களையும் அதிகரிக்க முடியும். வருகின்ற உல்லாசப்பயணிகள் போர்ட் சிட்டியில் மட்டும் அடைபட்டுக்கிடக்கமாட்டார்கள். நாட்டைச் சுற்றிப் பார்க்க புறப்படுவார்கள். இவர்கள் பாசிக்குடா, மட்டக்களப்பு, நிலாவெளி மற்றும் அறுகம்குடா கடற்கரைசார் சூழல்களை நாடுவார்கள். இது உள்ளூர் விடுதிகளில் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தும்.

இந்திய, சீன உல்லாசப்பயணிகள் இந்து ஆலயங்களை தரிசிக்கவும் விரும்புவார்கள். மட்டக்களப்பு ஹொட்டல்களில் இருந்து வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களை பார்வையிடுவதற்கான நாளாந்த பயணங்களை விடுதிகள் ஏற்பாடு செய்ய முடியும். கொக்கட்டிச்சோலை, மண்டூர், தாந்தாமலை ஆலயங்களுக்கான சுற்றுலாக்களை ஏன்? ஏற்பாடு செய்ய முடியாது?. இதை போல் மட்டக்களப்பு வாவியில் உல்லாசப்பிரயாணிகளுக்கான படகுச் சேவைகள் கவர்ச்சியாக அமையமுடியும்.

யாழ்ப்பாணம், வன்னி, திருமலையில் உள்ள வரலாற்று புகழ்மிக்க இடங்களையும் வெளிநாட்டவர் தரிசிக்க வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

எரிந்த நூலகத்தை, யுத்தத்தில் அழிந்த தேசத்தை, முள்ளிவாய்க்கால் மண்ணை எல்லாம் பார்வையிட வாய்ப்பை ஏற்படுத்தினால் யுத்தத்தின் சுவடுகளை அவர்களும் அறிவார்கள். ஆய்வாளர்கள், படைப்பாளிகள், பயணக்கட்டுரையாளர்கள் வருவார்கள். இவற்றில் சீன பல்கலைக்கழக மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

அராபியர்கள் காத்தான்குடி போன்ற இடங்களுக்கு வருகைதந்து இலங்கை முஸ்லீம்களின் வாழ்வியலை, மதவழிபாட்டை அறிய ஆர்வம் காட்டலாம். 

மேற்குலகின் உணவுக் கலாச்சாரத்தையும் புகைத்தலையும், பிரித்துப்பார்க்கமுடியாது. தங்கள் நாடுகளில் மேற்குலக குடிவகைகளை அருந்தியவர்கள் அலுத்துப்போன தமது மாதுபானங்களை தவிர்த்து உள்ளூர் உற்பத்திகளையும், அதற்கான கடிப்பான்களையும் விரும்பி பாவிக்கலாம். கியூபாவுக்கு போகும் அமெரிக்க உல்லாசப்பிரயாணி, புகையிலைப் சுருட்டடிக்கிறான், கரும்புச்சாராயத் தண்ணியடிக்கிறான்.

இந்த நிலையில் யாழ்.பனங்கள்ளும், மட்டக்களப்பு இறால் வடையும் கூட போர்ட் சிட்டியில் ஐந்து நட்சத்திர விடுதியில் நுகரப்பட வாய்ப்பு உண்டு.

கசிப்பு அடித்தவரும், பிட்டு தின்றவரும் …!

நோர்வே சமாதான பேச்சுவார்த்தைகளின் போது சமூகப் பிரச்சனைகள் பற்றிய கலந்துரையாடல் ஒன்றில் வடக்கில் நிலவிய /நிலவும் கசிப்பு பிரச்சினை பற்றி பேசப்பட்டதாம். 

எரிக் சொல்கைம்க்கு கசிப்பு விவகாரம் தலையைச்சுற்ற, அது என்ன சாமான்? என்று கேட்டு சற்று ரேஸ்ட் பண்ணியிருக்கிறார். அற்புதமான பானம்! எப்படி இதைச் செய்கிறார்கள்? என்று கேட்டவருக்கு பழங்களில் இருந்து என்று சொல்ல  VERY TEASTY AND HELTHY என்றாராம். 

அப்படித்தான் அமெரிக்க தூதுவர் பிட்டுக்கு மண் சுமந்த கதையாக பிட்டு விளம்பரம் செய்கிறார். போர்ட் சிட்டியில் வரும் அமெரிக்கன் வெள்ளவத்தையில் தோசைக்கடையை மட்டுமல்ல பிட்டுக் கடையையும் தேடப்போறான். 

‘தோசை வடை அப்பிட்ட எப்பா’ அந்தக்காலம் மலையேறிவிட்டது. போர்ட் சிட்டியில் சைவ ஹொட்டேல் ஒன்று அமையாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இந்திய முதலாளிகளே இதில் முதலிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சிங்களத்திற்கு தார்பூசியவரின் பரம்பரை சிங்களத்தில் வெளுத்து வாங்குகிறது. தனது சிங்கள கல்விக்கு கொள்ளி வைத்த கதையை மறந்து தமிழனின் கரகோசம் வானைப் பிளக்கிறது.

பேரன் சீனத்திற்கு தார்பூசும்….. இந்த அரசியல் பரம்பரைதான் முதலில் சீன மொழி கற்கப்போகிறார்கள்.

தமிழக நாவல் ஒன்று சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு சில வாரங்கள்தான் கடந்துள்ளது. நாங்களோ….?

அன்று சிங்களம் ‘அப்பிட்ட எப்பா…..’

இன்று சீனம் ‘அப்பிட்ட எப்பா…..’

ஆக, பொருளாதார அறிவு மிக்கது கறிக்குதவாத ஏட்டுச் சுரக்காயா….?

கறிக்குதவும் நாட்டுச் சுரக்காயா…..?