— கருணாகரன் —
“தென்னாசிய நாடுகளின் தலைவர்கள் தம்மைத் தீவிர மதவாதிகளாகக் காட்டிக் கொண்டாலும் அவர்கள் கடவுளுக்கோ மனச்சாட்சிக்கோ பயப்படுவதாக இல்லை” என்று மருத்துவர் தங்கமுத்து கோணேஸ்வரன் தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தார். இது உண்மை மட்டுமல்ல துல்லியமான மதிப்பீடும் துணிச்சலான வெளிப்பாடுமாகும்.
இலங்கை, இந்தியா, பர்மா, பாகிஸ்தான் என இந்த மதப்பற்றுத் தலைவர்கள் ஆட்டம்போடுகின்ற நாடுகளை விரிவாகப்பட்டியலிட்டுக் கொண்டு போகலாம். இதனால்தான் “ஜே.ஆர்.ஜெயவர்த்தனா உண்மையில் பௌத்தராக – தர்மிஸ்ரராக இருந்திருந்தால் நாம் ஆயுதம் ஏந்த வேண்டியிருந்திருக்காது” என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாரகன் சொல்ல வேண்டியிருந்தது.
தம்மை ஒரு தீவிர பௌத்த மதப் பற்றாளராகக் காட்டிக் கொண்ட ஜெயவர்த்தனாவின் ஆட்சிக்காலத்தில்தான் சிறைச்சாலைப் படுகொலைகள், நூலக எரிப்பு, கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டு மனிதர்கள் வேட்டையாடப்பட்டது எல்லாமே நடந்தன. மேலும் விமானக்குண்டு வீச்சுகள் ஆரம்பிக்கப்பட்டமை, கடல் வலயத் தடைச்சட்டம் தொடக்கம் பயங்கரவாதத் தடைச்சட்டம் வரையான அத்தனை ஒடுக்குமுறைச் சட்டங்களும் மேற்கொள்ளப்பட்டது என அத்தனை மானுட விரோதச் செயல்களும் அரங்கேற்றப்பட்டன. ஏன் ஒபிரேஷன் லிபிரேஷன் என்ற பேரில் வடமராட்சி மீதான படையெடுப்பை மக்கள் மீது தொடக்கி வைத்ததும் இந்த ஜே.ஆர்.தானே.
அன்றைய ஜே.ஆர் மட்டுமல்ல, அதற்கு முன்னிருந்த – பின்வந்த இலங்கையின் தலைவர்கள் அனைவரும் தம்மை பௌத்தத்துக்கு நெருக்கமானவர்களாகவே காண்பித்துள்ளனர். காண்பித்து வருகின்றனர். அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை என்பதிலிருந்து ஆட்சியமைக்கும்போதும் ஆட்சி புரியும்போதும் மதபீடங்களுக்குச் சென்று வணங்கி ஆசி பெறும் காட்சிகள் உங்களுடைய நினைவுக்கு வரலாம்.
இந்த ஆசி என்பது தாம் மேற்கொள்ளுகின்ற அத்தனை தவறுகளுக்கும் மக்கள் விரோத – தேச விரோதச் செயற்பாடுகளுக்கும் சேர்த்தே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இங்கே பௌத்த பீடங்களில் உள்ள துறவிகளிடம் பெறுகின்ற ஆசி போதாதென்று இந்தியாவுக்குச் சென்று திருப்பதியிலும் ஆசியைப் பெறுகிறார்கள். சிலர் சாயிபாபாவிடம் ஆசி பெற்றதும் உண்டு.
இப்படி ஆசி பெற்றவர்கள் தங்களுடைய ஆட்சியை எப்படி நடத்தினார்கள்? கடவுளுக்கு விசுவாசமாக அதைச் செய்தார்களா? அல்லது குறைந்த பட்சம் தங்களுடைய மனச்சாட்சிக்குப் பயந்தாவது அதைச் செய்தார்களா?
அதிகாரத்துக்கு வந்து விட்டால் தமக்கு அசுர பலமுண்டு என்று நினைத்துக் கொண்டு ஆட்சியை நடத்தியவர்கள்தானே அனைவரும். ஏன் இப்போது மட்டும் என்ன குறை? இவர்களும் அப்படித்தான். முழந்தாழில் மண்டியிட்டு, துறவிகளிடம் ஆசியைப் பெற்றபின், மக்களுக்கு எதிராக –தேசத்துக்கு எதிராகவே செயற்படுகிறார்கள். இது ஒரு மகா நடிப்பன்றி, மோசமான செயலன்றி வேறென்ன?
இந்த நடிப்பையும் இந்த நடிகர்களையும் இந்த மதபீடங்களும் கேள்வி கேட்பதில்லை. இதே நிலைதான் இந்தியாவிலும். அங்கே மோடி ஒரு தீவிர இந்துமதப்பற்றாளர். பி.ஜே.பி வெளிப்படையான மதவாதக் கட்சி. அது டில்லியில் பாபர் மசூதியை உடைத்து ராமர் கோயிலைக்கட்டியதிலிருந்தே மாபெரும் எழுச்சியடைந்தது. ஆனால் பி.ஜே.பியின் ஆட்சியில்தான் முன்னெப்போதையும் விட மத வன்முறைகளும் தலித்துகள் என்ற பிற்படுத்தப்பட்ட மக்களின் மீதான மிகக் கொடூரமான ஒடுக்குமுறைகளும் மேற்கொள்ளப்படுகிறது. இதையிட்டு மோடியோ பிஜேபியோ கண்டு கொள்வதேயில்லை. மறைமுக ஆதரவை மட்டும் தாராளமாக வழங்குகிறது.
ஆட்சியிலிருப்போரிடம் மட்டும்தான் இந்தக் குறைபாடு இருக்கிறது என்றில்லை. ஆட்சிக்கு வெளியே உள்ள கட்சிகள், அரசியல் தலைவர்கள் தொடக்கம் சமூகத்தில் உள்ள மக்கள் அமைப்புகள், மத நிறுவனங்கள் மற்றும் மக்களில் அதிகாரமும் படிநிலை உயர்வும் உள்ளவர்களிடத்திலும் இந்த முரணும் நாடகத்தன்மையும் உண்டு.
தமிழ்ப்பரப்பில் கடவுள் நம்பிக்கை, மதப்பற்றுள்ள அரசியல்வாதிகளே அதிகமுண்டு. அவர்களிடம்தான் சாதியதிகாரமும் சர்வாதிகார மனநிலையும் தளைத்தோங்கியிருக்கிறது. தங்கள் கண்ணுக்கு முன்னே மதத்தின் பேராலும் சாதியின் பேராலும் பிரதேசம் மற்றும் பால் வேறுபாடு போன்றவற்றின் பேராலும் நடத்தப்படும் எந்த ஒடுக்குமுறையையும் இவர்கள் எதிர்ப்பதில்லை. மறைமுகமாக அவற்றை ஆதரிக்கின்றனர். அப்படியென்றால் இவர்களுடைய உண்மையான முகம்தான் என்ன? இவர்கள் வலியுறுத்துகின்ற நீதியும் அறமும் எத்தகையது? விடுதலையின் பொருள் என்ன?
குறைந்த பட்சம் மேலோட்டமான ஜனநாயகப் பண்பைக் கூட இவர்களிடம் நாம் காண முடியவில்லையே! ஆக, இவர்களும் தமக்குள்ள அதிகாரத்துக்கேற்ற விதத்தில் விலக்கல்களையும் ஒடுக்குமுறைகளையும் தாராளமாகவே செய்கிறார்கள். இவர்களுக்கு அதிகாரம் மேலும் கூடுமாக இருந்தால் ஒடுக்குமுறையின் – அதிகாரப் பிரயோகத்தின் எல்லையும் தன்மையும் கூடும். ஏன் தம்முடைய சக சிறுபான்மைத் தேசிய இனங்களான முஸ்லிம்களையும் மலையக மக்களையும் இவை நோக்கும் விதம் எத்தகையது?
என்ன செய்வது, குதிரையின் குணம் அறிந்து தம்பிரான் கொம்பைக் கொடுக்கவில்லை இவர்களுக்கு என்று சொல்லி நாம் ஆறுதலடைய வேண்டியுள்ளது. இது ஆறுதல் அல்ல உண்மையில் பெரிய மகிழ்ச்சியே.
இருக்கின்ற அதிகாரத்துக்குள்ளாகவே தமது ஆட்களுக்கு (சாதி ரீதியாக) என காணி வழங்குவது தொடக்கம் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது, அரச உத்தியோகத்தின் மூலம் சமூக அதிகாரத்தைப்பெற எத்தனிப்பது என அத்தனையையும் மிகச் சாதுரியமாகச் செய்து கொண்டேயிருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் புறக்கணிக்கப்படுவது பகிரங்கமாகவே தொடர்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்த்தரப்பில்தான் கோயிலுக்குள் அனுமதிக்காத – பாடசாலைகளிலும் சாதி பேதம் பார்க்கின்ற இழிகாரியங்கள் எல்லாம் நடக்கின்றன. இதன்போது இவர்களுடைய கடவுள் பக்தியும் நீதியுணர்வும் அறமும் எங்கே போய் விடுகிறது?
இது மிதவாத அரசியலில் உள்ள குறைபாடு என்றால் விடுதலை அரசியலை முன்னெடுத்தோரின் கதையும் நிலையும் இதுதான். இவர்கள் புரட்சிகரமாக கடவுள் மறுப்பாளர்களாகவும் மத வெறுப்பாளர்களாகவும் முற்போக்குச் சிந்தனையோடு அரசியலாட்டத்துக்குள் பிரவேசித்தவர்கள். தங்களுடைய புரட்சிகரச் சிந்தனையின் அடையாளமாக தொடக்கத்தில் முற்போக்காகவும் சீர்த்திருத்தமாகவும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டதுமுண்டு. ஜே.வி.பி தொடக்கம் தமிழ் இயக்கங்கள் வரையில் எல்லாற்றுக்கும் ஒரு முற்போக்குப் பாத்திரம் இருக்கிறது. ஆனால் இது ஒரு கட்டம் வரைக்கும்தான். பின்னரோ நிலைமை தலைகீழ்.
அதாவது யாரெல்லாம் தவறானவர்கள், எதெல்லாம் தவறானவை என்று தமது மாற்று அரசியலை தொடங்கினார்களோ அதையெல்லாம் மிஞ்சும் வகையிலேயே பின்னாளில் நடந்து கொண்டனர். இன்றைய ஜே.வி.பி இதற்குச் சிறந்ததொரு உதாரணம். ஐ.தே.க, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன போன்றவற்றுக்கு எந்த வகையில் குறைந்தது ஜே.வி.பி? அதனுடைய இன்றைய முற்போக்கு அம்சங்கள் என்ன? குறிப்பாக இன ஒடுக்குமுறைக்கு எதிரான அதனுடைய நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பில் பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற ஐ.தே.க, பெரமுன, சு.க போன்றவற்றிலிருந்து ஜே.வி.பி எந்தளவில் விலகுகிறது?
மேலும் இலங்கையின் பல்லினத் தன்மையை அங்கீகரிப்பதிலும் பன்மைத்துவத்தைப் பேணுவதிலும் ஜனநாயக விழுமியத்தைக் காப்பதிலும் ஜே.வி.பியின் நிலைப்பாடு என்ன? பாத்திரமும் பங்களிப்பும்?
இதை அப்படியே தமிழ் இயக்கங்களுக்கும் போட்டுக் கொள்ளலாம். விடுதலை அரசியல் பேசி ஆயுதம் ஏந்திய போராளிகள் கொலைகார்களாக மாறி கொலை வெறித் தாண்டவமாடியதுதானே வரலாறு. சாதி, பிரதேச வேறுபாடுகளைக் களைவதில் இந்த இயக்களுக்கு ஒரு முற்போக்குப் பாத்திரமிருந்தாலும் அது இவற்றின் அரசியற் தவறுகளால் இடைநின்று போன – அரைகுறை வேட்காட்டு வேலையாகத்தானே மாறியது. முக்கியமாக ஜனநாயகத்தை அப்படியே உயிரோடு குழிதோண்டிப் புதைத்தவை இவைதானே. ஜனநாயகத்தைப் புதைத்து விட்டு விடுதலையைப்பற்றியும் மானுட மகத்துவத்தைப் பற்றியும் எப்படிப் பேச முடியும்?
இதில் சிலருக்கு ஒரு குழப்பம் உண்டு. ஜனநாயகம் என்பது மேற்குலகின் ஒரு சதிகாரக் கட்டுக்கதை, அது மேற்குலகின் தந்திரமான ஒடுக்குமுறை முகம் என. ஆனால் உண்மையான முற்போக்காளர்களும் புரட்சியாளர்களும் ஜனநாயகத்தை மறுதலித்துப் புரட்சியையும் போராட்டத்தையும் மக்கள் விடுதலையையும் மாற்றத்தையும் உருவாக்கலாம் என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். விமர்சனத்தையும் பொறுப்புக் கூறுதலையும் மறுதலிக்கார்.
எனவே இலங்கையிலும் தென்னாசியப் பிராந்தியத்திலும் மதத்தின் பேராலும் விடுதலையின் பேராலும் ஒடுக்குமுறையும் அழிப்புகளும் நடக்கின்றனவே தவிர, ஆக்கபூர்வமான அரசியல் முன்னெடுப்பென்பது குறை நிலையிலேயே உள்ளன. இலங்கையில் இது இன்னும் தீவிரம். இதனால்தான் இலங்கை மேலும் மேலும் நெருக்கடியைச் சந்திக்கிறது. இலங்கையர்கள் வீழ்ச்சியடைந்தோராக இருக்கின்றனர்.
இதில் மாறுதல் வேண்டும் என்றால் அதற்கான பயணத் திசைபற்றி திறந்த மனதோடு வெளிப்படையாகச் சிந்திக்கவும் பேசவும் வேண்டும். பல கைகள் இணைய வேண்டும்.