புலம் பெயர்ந்த சாதியம்- 9

புலம் பெயர்ந்த சாதியம்- 9

    அ. தேவதாசன் — 


இலங்கையின் வட புலத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு நீண்ட காலங்களாகவே முக்கிய பேசு பொருளாக இருந்து வருகிறது. இதற்கான காரணம். யாழ்ப்பாண குடாநாட்டில் வேளாளர் எனச்சொல்லப்படும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் இலங்கையின் மூலை முடக்கு முழுவதும் வியாபாரிகளாகவும், அரச நிர்வாகிகளாகவும் செயல்பட்டிருக்கிறார்கள். கல்வி வளர்ச்சியிலும் பொருளாதார வளர்ச்சியிலும் முதன்மை இடத்தில் இருந்திருக்கிறார்கள். இதன் காரணமாக தமிழ் பேசும் மக்களின் அரசியல் சமூகம் சார்ந்து முடிவெடுக்கும் பலம் இவர்களிடமே இருந்தது. இப்போதும் இருக்கிறது. வேளாளர் என்பது வெறும் சாதியக் குறியீடு மட்டுமின்றி ஒரு பலமான கருத்தியலும் அதற்குள் உருவாக்கப்பட்டிருக்கிறது. 

இந்தியாவின் பார்ப்பனியம் எப்படி இந்துத்துவத்தை முன் வைத்து இறுக்கமாக கட்டப்பட்டிருக்கிறதோ அதே அளவு வலிமையுடன் இலங்கை வடபுலத்தில் வெள்ளாளியக்கருத்தியல் கட்டப்பட்டிருக்கிறது. இதுவே இலங்கை தமிழ்பேசும் மக்களின் அரசியல் கலாச்சாரம் சார்ந்து முடிவெடுக்கும் அதிகாரத்தை தன்னகத்தே வைத்துள்ளது. இதனால் இவர்களை யாழ்ப்பாண மேட்டுக்குடி என பெருமைபடப்பேசுவதும் உண்டு. கல்வி வளர்ச்சி பரவலாக எல்லோருக்கும் கிடைத்து விட்ட இன்றைய சூழலில் மேட்டுக்குடி என பெருமை கொண்டிருந்தோர் மீது சாதியம், அரசியல், அதிகாரம் போன்ற பல விடயங்கள் சார்ந்து கேள்விக்கு உட்படுத்தப்படும் நிலை பரவலாக  எழுந்துள்ளது.

தமிழ் பேசும் மக்கள் சார்ந்து சகல அதிகாரங்களையும் தன்னகத்தே வைத்திருக்கும்  வேளாளர் சமூகத்தின் மீது  குற்றச்சாட்டு, அல்லது விமர்சனம், அல்லது கோபம், அல்லது வசை எதுவாக இருப்பினும் பொதுவாக யாழ்ப்பாணி, மேட்டுக்குடிச் சிந்தனை போன்ற சொற்பதங்களை பாவிப்பது வழக்கம்.

யாழ்ப்பாண குடாநாட்டில் வாழ்பவர்கள் எல்லோரும் மேட்டுக்குடியுமல்ல, யாழ்ப்பாணி எனும் சொற்பதங்களுக்குள் அடங்குபவர்களும் அல்ல… மாறாக வேளாளக் கருத்தியலால் தீண்டாமைக்கும், ஒடுக்குமுறைக்கும், சாதிய பாகுபாட்டுக்கும் முகம் கொடுத்து துன்பங்களை அனுபவிக்கும் மக்களும் இந்த நிலப்பரப்பில் தான் வாழ்கிறார்கள். வெள்ளாளிய சாதிய, வர்க்க, கலாச்சார ஆதிக்க செயற்பாடுகளை இவர்களாலேயே ஒடுக்கப்ட்ட சமூகத்தை சேர்ந்தவர்களும் தங்கள் தலையில் மீது சுமக்க வேண்டிய அவலம் இன்று வரை தொடர்கிறது. வேளாளியக் கருத்தியல் என்பது வெறுமனே யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் மட்டும் செயற்படும் அமைப்பல்ல உலக வரைபடங்களில் ஈழத்தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அது கட்டமைக்கப்பட்டுள்ளது. கோயில்கள், பாடசாலைச் சங்கங்கள், ஊர்ச்சங்கங்கள், தமிழச்சங்கங்கள் என பலதரப்பட்ட அமைப்புகளும் வேளாளக் கருத்தியலாகவே கட்டப்பட்டுள்ளன. இக்கட்டுமானத்திற்கு முன்வைக்கும் முதன்மைச் சுலோகம் தமிழ்த் தேசியம்… தமிழ் தேசியத்தை முன்வைத்தே வெள்ளாளியம் தனது கட்டமைப்பை தற்காத்துக்கொள்கிறது. 

கிழக்கு மாகாணம் பற்றிய பல வரலாற்றுப் பதிவுகளிலும் கிழக்கு மாகாண நண்பர்களடனான உரையாடல்கள் மூலமாகவும் கிழக்கு மாகாணம் தனக்கென தனித்துவமான கலாசார வாழ்க்கை முறை இருந்ததாக அறியப்படுகிறது. ஆனாலும் கிழக்கில் வியாபார நிறுவனங்களின் உரிமையாளர்களும், அரச நிர்வாகிகளும் யாழ் குடாநாட்டு வேளாளர் சமூகத்தினரே ஆதிக்கம் செலுத்தினர். அத்தோடு 
தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்ட காலங்களில் பெருந்தொகையான இளைஞர்கள் போராளிகளாக யாழ் குடா நாட்டுடன் நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டது. இக்காரணங்களினால் வேளாளியக் கருத்துக்கள் அவர்களுக்குள்ளும் புகுந்து விட்டதை இன்று அவதானிக்க முடிகிறது. 

ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் சிலர் புலம்பெயர்ந்து பணக்கார நாடுகளுக்கு சென்று ஓரளவு பொருளாதார வசதி அடைந்தவர்களும், இலங்கையில் ஓரளவு படித்து பலம் பெற்ற சிலரும் தாம் ஒடுக்கப்பட்டதை மறந்தும், மறைத்தும் வேளாளிய கருத்துக்குள் உள்வாங்கப்பட்டு நாங்களும் வேளாளராகிவிட்டோம் என்பது போல தமது சமூகத்திற்குள்ளேயே அந்நியத்தை உருவாக்கி எங்கும் ஒட்டாமல் உறவுகள் உடைபட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களும் உண்டு.

வேளாளியக் கருத்தியலை வேளாளர் எனும் சாதியில் பிறந்தவர்கள் யாவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதற்கில்லை. ஆனாலும் விரும்பியோ, விரும்பாமலோ இச்சாதி அமைப்பினூடாக 
ஏற்படும் நலன்களை அனுபவிப்பவர்களாகவே இருந்து வருகின்றனர்.

வேளாளியம் முழுக்க முழுக்க வர்ணாசிரம சனாதன கோட்பாடுகளால் உருவாக்கப்பட்ட இந்துவத்தை அப்படியே உள்வாங்கி அமைக்கப்பட்டது. இதனால் உயர்ந்தவர், தாழ்ந்தவரில் தொடங்கி புனிதம், தூய்மை, சொர்க்கம், நரகம், சடங்கு, சம்பிரதாயங்கள் அனைத்தும் இதற்குள் அடங்குகிறது. இது மனித நேயத்திற்கும், மனித நாகரீகத்திற்கும், மனித அறிவியலுக்கும் எதிரானது. மூடக்கருத்துக்களை விதைப்பது. இதனூடாக அறிவியல் வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் போன்ற மனிதமேம்பாடுகளை உருவாகுவதை தடுக்கும் சக்தியாகவே இருக்குறது. இன்று ஈழத்தமிழர்கள் மத்தியில் நிலை கொண்டிருக்கும் பலவகையான பிரிவுகளுக்கும் தலைமை தாங்கும் சக்தியாக வேளாளக்கருத்தியலே மூலகாரணமாக விளங்குகிறது.

ஈழத்தமிழர்கள் சமூகத்தில் மிகவும் பரிதாபகரமான, அல்லது கோபத்தை உண்டுபண்ணக்கூடிய விடயம் என்னவெனில்!.. இடது சாரியக்கருத்துகளை வலுவாக பின்பற்றுபவர்கள் என்போரும், முற்போக்காளர் என்போரும் வேளாளக் கருத்தியல் மீது எந்தக்கேள்வியும் இல்லாமல் வர்க்க விடுதலை, இன விடுதலை, சாதிய விடுதலை, பெண் விடுதலை பற்றி பேசுவது, எழுதுவது. நீண்ட காலமாக இது தொடர்கிறது.. 

இவர்களில் ஒருபகுதியினர் கார்ல் மாக்ஸை, லெனினை, மாவோவை, றொஸ்கியை, ஸ்டாலினை ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் அம்பேத்கரையோ, பெரியாரையோ ஏற்க மறுப்பார்கள். இதற்கான காரணம் தேடலின்மையா, ஏமாற்றா, இயலாமையா அல்லது வேளாளியத்திற்குள் தமது கொள்கைகளை வென்றெடுத்து விடலாம் என்கிற நம்பிக்கையா? அப்படி யாரவது நம்புவார்களெனில் அவர்களும் மனித மேம்பாட்டுக்கு எதுவும் செய்ய தகுதி அற்றவர்களாகவே கருதப்படுவார்கள்.  மாற்றுக்கருத்து பற்றி பேசுவோர் தமது கருத்துக்களை முன்வைத்து எவ்வளவு தூரம் செயற்படுகின்றனர் என்பதை உறுதிசெய்ய, இக்கட்டுரை எழுதும் வரை நம்பகமான செயற்பாடுகள் எதுவும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை.

அரச எதிர்ப்பு அரசியலாக தமிழ்த்தேசிய அரசியலும், அடிப்படை தேவை அபிவிருத்தி என்பதாக அரச ஆதரவு அரசியலுமாக இரண்டு அணிகள் மட்டுமே செயற்படுகின்றன. இந்த இரண்டையும் தாண்டி   மூன்றாவது அணி பற்றிய அவசியம் பலரால் புரிந்து கொள்ளப்படுவதில்லை.

புலம்பெயர் தேசங்களில் குறிப்பாக ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் குறிப்பிட்ட சிலர் நீண்ட காலமாக மாற்றுக்கருத்தின் அவசியம் பற்றி எழுதியும், பேசியும் வருகின்றனர். ஆனால் செயற்பாட்டு ரீதியாக எதனையும் முன்னகர்த்தவில்லை என்பதே உண்மை. 2009க்கு முன்பு வரை மாற்றுக் கருத்தாளர்கள் ஒன்றுபடுவதற்கு விடுதலைப்புலிகளின் ஆயுதம் தடையாக இருப்பதாக தெரிவித்த பலரும் புலிகள் தோற்கடிக்கப்பட்டு பன்னிரெண்டு வருடங்கள் கழிந்த நிலையில் எந்த நம்பிக்கை ஏற்படும் வகையிலும் நடந்து கொள்ளவில்லை. இலங்கையில் மாற்றுக் கருத்தாளர்களை கண்டறிந்து மூன்றாவது அணியை கட்டி எழுப்புவதற்கு புலம்பெயர்ந்து வாழும் மாற்றுக் கருத்தாளர்களின் பங்களிப்பு மிக அவசியம்…..
               

(தொடரும்………)