கூத்துக்கலையின் பிரமாண்டத்திற்கும் அப்பால் எஸ்.மௌனகுருவின் படைப்பு முகம்

கூத்துக்கலையின் பிரமாண்டத்திற்கும் அப்பால் எஸ்.மௌனகுருவின் படைப்பு முகம்

  — ஏ.பீர் முகம்மது (இலங்கை) —                                                    

இலங்கையின் கிழக்குத் திசையில் எழுவான் கரையும் மேற்கில் படுவான்கரையுமாக மல்லாந்து படுத்திருக்கிறது மட்டக்களப்பு வாவி. அதன் கிழக்குப்புறம் நோக்கி கடலை கொறிக்கும் தூரமாக சொட்டு நடந்தால் வரலாற்றில் வாழும் அமிர்தகழி நம்மை வரவேற்கும்.அதுவொரு புண்ணிய தலம். அதன் தீர்த்தக்கரையை ஒட்டியதாக சீலாமுனை என்னும் சிறிய கிராமம் உள்ளது. அந்த மண்ணிலே விளைந்தவர்தான் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள். இப்போது அவருக்கு 78 வயது. 

மட்டக்களப்புக்குப் பெருமை சேர்த்த பெரியார்களில் அவரும் ஒருவர். தமிழ்க்கூத்துக் கலையின் தலைநகரமென்று சர்வதேச உலகு அவருக்கு சபாஷ் போடுகின்றது. கூத்துக்கலையின் பிரமாண்டமே அவர்தான். இவையெல்லாம் உண்மைதான். அவரை அளந்து பார்த்தவர்கள்‘ கூத்துக் கலையோடு நின்று விட்டார்கள். ஆனால் கவிதை, சிறுகதை, நாவல் என்று அவருக்கு இன்னுமொரு படைப்பு முகமும் இருக்கிறது. அதுபற்றியதே இக்கட்டுரையின் மையமாகும்.                      

கவிதைவெளி

கவிதைவெளியில் அவரின் உதைப்பு எத்தகையது? முதலில் பேராசிரியர் மௌனகுரு அவர்கள் கவிஞனாக எச்சந்தர்ப்பத்தில் அடையாளம் காணப்பட்டார் என்பது இங்கு முக்கியமானதாகும்.                                                            

1961இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டப்பகலில் பாவலர்க்குத் தோன்றுவது‘ என்ற தலைப்பிலான கவியரங்கக் கவிதைப் போட்டியில் மௌனகுரு அவர்கள் கலந்து கொண்டு பரிசு பெறுகின்றார். இக்கவிதை இளங்கதிர் சஞ்சிகையில் பிரசுரமாகின்றது. அறுபது எழுபதுகள் கவியரங்கக் கவிஞர்களை கைதட்டி வரவேற்ற காலம். எனவே பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், கொழும்பு தமிழ் சங்கம் என்று மௌனகுருவின் கவியரங்கப் பயணம் குஞ்சம் கட்டி உலா வந்தது. 

இதற்கு முன்னரும் அவர் கவிதைகளை எழுதினார். ஐம்பதுகளில் இரண்டாம் கந்தாயத்தில் வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் பயின்ற காலத்தில் தேனருவி‘ என்ற கையெழுத்துச் சஞ்சிகையை வெளியிட்டு சிறிய கவிதைகளை அதில் எழுதி மகிழ்ந்தவர். வாராந்த பத்திரிகைகளில் அவர் கவிதைகளை எழுதினார் என்ற தகவலும் உண்டு. அப்போது அவர் கவிஞனாக இல்லை. மேற்சொன்ன பல்கலைக்கழகத்துக் கவியரங்கத்துடன்தான் கவிஞர் என்ற அங்கீகாரம் அவருக்குக் கிடைக்கின்றது.                                            

கவிஞனாகி அவர் தந்த கவிதைகள் எத்திசையில் பயணித்தன என்பதும் முக்கியமானதாகும். 

இன்றுவரை அவர் எழுதிய சுமார் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான கவிதைகளில் நமக்குக் கிடைத்தவற்றை ஒருசேரத் தொகுத்து நோக்குதல் இதற்கான தீர்வைத் தரும். 

மௌனகுருவின் கவிதைகள் மூன்று தொடைகளாகப் பிரிந்துள்ளன. ஒன்று தமிழ் உணர்வு மற்றும் தமிழ் தேசியம் சார்ந்தவை. இரண்டு இடதுசாரிக் கோட்பாட்டின் பின்னணியிலான பெண் விடுதலை உள்ளிட்ட சமூகவிடுதலை நோக்கியது. மூன்றாவுது வாழ்வியலைப் பேசும் கவிதைகள். 

முதலாம் நிலைக் கவிதைகள் வந்தாறுமூலை மத்திய கல்லூரிக் காலத்தில் ருதுவானவை. அவர் அக்கல்லூரியில் பயின்ற காலத்தில் பாடசாலை நூலகத்திலிருந்து பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை நூல்களைப் பெற்று விரும்பி வாசிப்பவராக இருந்தார். இவர்மீது பாரதிதாசனின் கவிதைகள் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தன என்று விசுவாசிப்பதற்கு இடமுண்டு.  

அத்துடன் தமிழ்ப் பிரதேசமெங்கும் தமிழ் தேசிய உணர்வும் விடுதலை வேட்கையும் மேலோங்கியிருந்த காலம் அது. எனவே மௌனகுரு அவர்கள் ஐம்பதுகளின் பின் அரைப்பகுதியில் தொடங்கி அறுபது அறுபத்தொன்றென அரும்பிய காலம்வரை எழுதிய கவிதைகளில் தமிழ்ப்பற்றும் இன விடுதலைக்கான வேர்விடுகையும் பேசுபொருளாயிருந்தன. தமிழ்க்கொடி என்னும் சஞ்சிகையில் (1961) வெளியான வெற்றிக்குரல், தமிழ்க்கொடி முதலான கவிதைகள் அவரின் தமிழுணர்வுக் கவிதைகளுக்குச் சோற்றுப் பருக்கைளாகும்.  

இரண்டாம் கட்டக் கவிதைகளின் ஆரம்பம் பேராதனையில் முளை விடுகின்றது. பல்கலைக்கழகம் சென்ற மௌனகுரு இடதுசாரிச் சிந்தனைகளின்பால் ஈர்க்கப்பட்டு, அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அவரின் முயற்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தனித்துவமான அபார ஆளுமைக்கும் பின்னணியில் பேராசிரியர்களான சு.வித்தியாநந்தன், க.கைலாசபதி மற்றும் கா.சிவத்தம்பி ஆகியோரின் தொடர்புகளே காரணமாயிருந்துள்ளன. குறிப்பாக பின்னிரெண்டு பேராசிரியர்கள் அவரின் மார்க்சீய சிந்தனை மீதான ஈடுபாட்டிற்கு உந்துதலாக இருந்துள்ளார்கள்.                                                        

அதன் காரணமாக அவர் எழுதிய கவிதைகள் சமூக விடுதலை, பெண் விடுதலை என்று பேசத் தொடங்கின. 1963 இல் வெளியான ஒரு கவிதையின் தலைப்பு சேச்சேச்சே நீங்களும் மனிதர்களா‘ என்பதாகும். வித்தியாசமான சாங்கத்தில் அது அமைந்துள்ளது. விதவையின் வாழ்வுக்காக ஏங்கும் ஒரு கவிஞனை அக்கவிதையில் நாம் தரிசிக்க முடியும்.                                   

அறுபத்தியொன்பதுகளில் மற்றும் எழுபதுகளின் முன் அரைக்கூறுகளில் எழுதிய அதிகமான கவிதைகள் சிவப்பு நிறக் கவிதைகளாகும். எம்.ஏ.நுஃமானின் பொறுப்பில் வெளியான கவிஞன் என்ற கவிதை இதழில் நிலவே உனைப்பாட நேரமில்லை‘ என்ற அவரின் கவிதை (1969) வெளிவந்துள்ளது. 

எனைச்சூழ வாழ்கின்ற ஏழையர்தம் நிலைமைதனைத் தீர்க்கும் வழியில் நான் நடக்கின்றே னிங்கே என்ற அக்கவிதையின் குரல் அவரின் அக்கால கவிதை வாழ்வை தெளிந்து கொள்ள உதவும். சமூகப்பற்றில் மூழ்கிய ஒரு கவிஞனின் பிரகடனத்தை இக்கவிதையில் நாம் நுகரலாம்.                                                                 

இச்சஞ்சிகையில் மௌனகுரு அவர்களோடு சேர்த்து ஜீவா ஜீவரத்தினம், மருதூர்க் கொத்தன், அண்ணல், சண்முகம் சிவலிங்கம், ஏ.இக்பால், மு.பொன்னம்பலம் ஆகியோரின் கவிதைகளும் பிரசுரமாகியிருந்தன. பலரும் அறிந்த  கவிஞர்களுடன் மௌனகுரு அவர்களும் ஒரே வரிசையில் உட்காந்திருந்தார் என்று கவிதைப் பரப்பில் அவரின் இருப்பின் திணிவைச் சுட்டவே இதனைச் சொல்ல வேண்டிவந்தது. 

தமிழ் நாடகம் மீதான முழுநேர ஈடுபாட்டின் காரணமாக 1975–2000ஆம் ஆண்டு வரையான காலத்தில் அவரில் இருந்து கவிதைகள் வரும் போக்கு குறைவாகக் காணப்படுகின்றது. ஒன்றிரெண்டு கவிதைகள் வெளிவந்திருக்கலாம். எனினும் அக்காலகட்டங்களில் வெளியான சங்காரம், மழை, சரிபாதி, சக்தி பிறக்குது, தப்பி வந்த தாடி ஆடு போன்ற நாடகங்களில் வெளிப்பட்ட கவிதை மணம் இந்த இடைவெளியை நிரப்பின. 

அவரது கவிதைப் பரப்பில் மங்கலாகத் தெரியும் இன்னுமொரு விடயம் சிறுவர் பாடல்களையும் அவர் எழுதினார் என்பதாகும். ஒரு காலத்தில் வானொலியில் ஒலிபரப்பான சின்னச் சின்னக் குருவிகள்சேருவோம் ஒன்று சேருவோம் போன்ற மெல்லிசைப் பாடல்கள் இதற்கான உதாரணங்களாகும்.  

2000ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலத்துக் கவிதைகளில் வாழ்வநுபவங்கள் இடம் பிடிக்கின்றன. இறுதியாக 2016ஆம் ஆண்டு தமிழ் மிரர்‘ பத்திரிகையில் அவரின் கவிதை பிரசுரமானது. கவிதைகள் மீதான விடுபட முடியாத ஏக்கம் அவருள் எப்போதும் இருந்தே வந்துள்ளது என்பதை அது எண்பித்தது.  

தமிழ்க் கூத்துக் கலையில் இவர் தொட்ட பிரமிப்பின் எல்லையை அவரது கவிதைகளால் எட்ட முடியவில்லையாயினும் கவனத்தை ஈர்க்கும் கவிதைகள் என்பதை மறுக்க முடியாது   

சிறுகதைகள்                                                                   

சிறுகதைகளைப் பொறுத்தவரையில் சமரசபூமிசலனம்இருள் இன்னும் முற்றாக விலகவில்லைஉலகங்கள் மூன்று ஆகிய நான்கு சிறுகதைகள் மட்டுமே தற்போது கைவசம் கிடைத்துள்ளன.   

கைகளைக் கீறி இரத்தத் திலகமிட்டு அரச காரியாலயங்களுக்கு முன்னால் அமர்ந்து கலகம் செய்த காலத்தில் சமரசபூமி‘ எழுதப்பட்டது. தினகரன் வாரமஞ்சரியில் அது பிரசுரமானது. பலராலும் பாராட்டிப் பேசப்பட்டது‘ என்ற குறிப்பு மௌனம்‘ மணிவிழா மலரில் காணப்படுகின்றது. 

சலனம் என்ற சிறுகதை பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் மொழி மாணவரிடையே 1960இல் நடைபெற்ற சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது. 1958இல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட மலையகக் குடும்பமொன்றின் தலைவியின் கதை. அகதி முகாமிலே தனது பழைய காதலனை கண்டு கொள்கிறாள். மனதிலே சலனம். அவனை ஆதரிக்க முடியாமலும் கட்டிய கணவனை நிராகரிக்காமலும் தாலியின் மகிமையைப் ஒலிபரப்பும் பண்பாட்டுக் கதை.  

உலகங்கள் மூன்று என்னும் கதை தாய், தந்தை, பிள்ளை எனும் பாத்திரங்களின் மோதுகையைச் சுட்டி நிற்கின்றது. மூன்று பாத்திரங்களினதும் வெவ்வேறு தனிப்பட்ட தேவையைச் சிறப்பாகப் படம் பிடிக்கும் உளவியல் கதை. 

இருள் இன்னும் முற்றாக விலகவில்லை என்பது பொலநறுவை பராக்கிரம சமுத்திரத்தின் கரையில் நின்று இன மோதல்கள் இன்னமும் முற்றுப் பெறவில்லையே என்ற ஆதங்கத்தை முறையிடும் கதை. இன ஐக்கியத்தை வலியுறுத்தியும் அதற்குத் தடையான காரணிகளைச் சுட்டியும் இக்கதை நகர்கிறது.  

உலகங்கள் மூன்று என்ற கதையைத் தவிர ஏனைய கதைகள் தமிழ் மக்களுக்கு எதிரான இனவிரோதத்தின் பின்னாலுள்ள அரசியலைப் பேசுகின்றது.  

புதினம்                                                                    

குறும்புதினம் என்ற வகையில் சார்வாகன் என்னும் அவரது பிரதி பலராலும் பேசப்பட்டதாகும். 2000ஆம் ஆண்டில் எழுதப்பட்டு, 2003இல் மௌனம் என்ற மணிவிழா மலரில் பிரசுரமாகி, 2016 இல் நூலாக வெளிவந்த இந்த நாவல் மௌனகுருவின் படைப்பு எத்தனத்தில் குறிப்பிடத்தக்க விளைச்சலாகும்.    

ஆன்மா, கடவுள், மேலுலகம், தேவர்கள் போன்ற நம்பிக்கைப் படிமங்களைப் புறமொதுக்கி இவ்வுலக மனிதர்களின் வாழ்வு மட்டுமே முதன்மையானது என்பதைப் பிரச்சாரப்படுத்திய இந்திய மெய்யியல் கோட்பாடுதான் சார்வாகம். 

மகாபாரதப் போரின் பின்னரான குருசேத்திரக் களத்தில் இருந்து மேற்கிளம்பும் சார்வாகன் என்னும் இந்நாவல் பாரதக் கதையை மறுவாசிப்புச் செய்கிறது. முதன்மைப் பாத்திரமாக சார்வாகன் நாவலில் உலா வருகிறார். சமகால பூகோள அரசுகளின் யுத்த நேய அணுகுமுறைகளுக்கு எதிராக சார்வாகனின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. 

பாத்திர வார்ப்பும் புனைவுமொழியும் நாவலில் மினுங்குவதற்கு மௌனகுரு அவர்களின் அரங்க அளிக்கை அநுபவங்கள் ஒத்தாசை வழங்கியுள்ளன எனல் தகும். 

அவர் வெளியிட்ட ஒரே நாவல் இதுதான். படைப்பாளனின் மேன்மை என்பது எண்ணிக்கையில் அளப்பதல்ல. படைப்பின் கனதியிலேயே தங்கியுள்ளது என்பதை சார்வாகன் ருசுப்படுத்துகின்றது.                                                             

தமிழ் கூத்துக்கலையில் பேரா.மௌனகுரு அவர்கள் அரியாசனம் பெற்று அமர்ந்திருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் இலக்கியப் படைப்பு உபாயங்களுக்காகவும் பேரா.மௌனகுரு அவர்கள் பேசப்பட வேண்டியவர் என்பதை அவரின் கவிதைகளும் புனைவுகளும் பிரேரிக்கின்றன என்பதும் மறுப்பதற்கில்லை.