— கருணாகரன் —
இன முரண்களை வளர்ப்பதிலும் போரை நடத்துவதிலும் அல்லது போருக்கு ஆதரவளிப்பதிலும் உள்ள ஆர்வம் சமாதானத்தின் மீது மக்களுக்கும் இல்லை. அரசியற் கட்சிகளுக்கும் இல்லை. தலைவர்களுக்கும் இல்லை. ஊடகங்கள், மத பீடங்கள் போன்றவற்றுக்கும் இல்லை. புத்திஜீவிகளுக்கும் இல்லை.
ஆகவே இலங்கையை சமாதானத்தின் மீது நாட்டமில்லாத நாடு என்றே குறிப்பிட வேண்டும். ஆனால் இலங்கைத்தீவு பிரித்தானியரிடமிருந்து விடுபட்ட பிறகு – 1948க்குப் பிறகு –உள்நாட்டு யுத்தத்தினால் லட்சக்கணக்கானோரை இழந்திருக்கிறது. இந்த இழப்பைச் சரியாகச் சொன்னால் அரசியற் கொலைகள் என்றே கூற வேண்டும். அரசுக்கும் ஜே.வி.பிக்கும் இடையிலான இரண்டு கட்ட மோதல்கள், தமிழ் விடுதலை இயக்கங்களுக்கும் அரசுக்கும் இடையிலான போர், இயக்கங்களுக்கிடையிலான மோதல்கள், அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான போர், அரசின் ஒடுக்குமுறையினால் ஏற்பட்ட கொலைகள் என பல வகையான அரசியற் கொலைகள் கடந்த அறுபது ஆண்டுகளில் நடந்துள்ளன. ஆயிரக்கணக்கானோர் காணாமலாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களும் இந்தக் கொலைப்பட்டியலில்தான் அடங்குவர். இதை விட லட்சம் வரையானோர் உடல் உறுப்புகளை இழந்தோராக உள்ளனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். பல ஆயிரம்பேர் உளச் சிதைவுக்குள்ளாகியுள்ளனர். அவ்வளவும் இலங்கையர்கள் தங்களுக்குள் தாங்கள் அடித்துக் கொண்டதும் கொன்றதுமாகும்.
சுதந்திர இலங்கையின் அபிவிருத்தியும் சுயாதிபத்தியமும் எப்படி இருக்கிறது என்று பார்த்தீர்களா? இவ்வளவுக்குக்கும் மிகச் சிறிய நாடும் மிகக் குறைந்த மக்களும் மிகக் குறைந்த இனங்களும் வாழ்கின்ற நாடு இது.
இந்த இடைப்பட்ட 60 ஆண்டு காலத்தில் (முரண்கள் உச்சமடைந்த சூழலில்) மேற்குலத்திற்கும் இந்தியாவுக்கும் இப்பொழுது சீனாவுக்கும் பணிந்தே இலங்கை செயற்பட்டு வருகிறது. அதாவது வெளிச்சக்திகளின் அழுத்தங்களுக்குப் பணிந்து, விட்டுக் கொடுத்தே நடந்து கொள்ள வேண்டியுள்ளது. இதை விட போர்க்குற்றங்கள் அல்லது இனப்படுகொலை என்ற விவகாரங்கள், மனித உரிமை மீறல்கள் என்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் இலங்கைக்கு மேலதிக வெளி நெருக்கடிகளை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன.
இதனால்தான் 1948க்குப் பின்னர் அமைதிச் சூழலும் பொருளாதாரமும் சுயாதீனமும் நெருக்கடிக்குள்ளாகி மிக மோசமாகச் சிதைந்த நாடாக இலங்கை உள்ளது. இதற்குப் பிரதானமான காரணம் இலங்கையில் பன்மைத்துவம் மறுக்கப்பட்டதேயாகும். பல்லின சமூகங்கள் வாழும் நாட்டின் பாதுகாப்பும் முன்னேற்றமும் பன்மைத்துவத்தைப் பேணுவதிலேயே அடங்கியுள்ளது. பன்மைத்துவமும் ஜனநாயகமும் சமத்துவமும் சரியாகப் பேணப்பட்டிருந்தால் இத்தனை பெரிய உயிரிழப்புகளும் வள அழிவுகளும் ஏற்பட்டிருக்கதல்லவா! இதை இவ்வளவு அழிவுகளையும் பாதிப்புகளையும் நேரடியாகச் சந்தித்த பிறகும் இலங்கையர்களுக்குப் புத்தி வந்திருக்கிறதா? இல்லையே. அல்லது பன்மைத்துவமும் ஜனநாயகமும் செழித்துள்ள நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களுக்கும் கூட அறிவு வந்திருக்கிறதா?
இன்னும் வரவர இனவாதமும் இன முரணும்தானே கூடிக் கொண்டிருக்கிறது. இன அடையாளக் கட்சிகள் வரவரப் பெருகுகின்றன. இனவாத ஊடகங்கள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு ஊட்டமூட்டும் காரியங்கள் தாராளமாக நடக்கிறது. இளைய தலைமுறை கூட அறிவு பூர்வமாகச் சிந்திப்பதற்குப் பதிலாக இனவாத அலையின் பின்னேதானே இழுபடுகிறது.
இதில் எந்த இனமும் குறைந்ததுமில்லை. வேறு பட்டதுமில்லை. சிலர் சொல்கிறார்கள், சிங்களத் தரப்பிடம்தான் சகிப்புத்தன்மையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கும் இல்லை. அவர்களே பன்மைத்துவத்தை மறுதலிக்கின்றனர். அவர்கள் ஆதிபத்தியத்தில் உள்ளனர். ஆகவே அவர்கள்தான் நீதியாக – விட்டுக் கொடுப்புகளோடு நடக்க வேண்டும் என.
ஆனால் இதே அதிகாரத் தன்மை தமிழ்த்தரப்பிடத்திலும் உண்டு. தமிழர்கள் முஸ்லிம் மக்களை மறுதலிக்கின்றனர். அவர்களுக்கான பன்மைத்துவ அடிப்படைகளை உறுதி செய்யத் தயங்குகின்றனர். வடக்குக் கிழக்கு என்பது தமிழரின் தாயகம் என்று கூறும்போது அங்கே உள்ள ஏனையோரின் ஜனநாய உரிமைகளும் அவர்களுக்கான பன்மைத்துவ அடிப்படைகளும் கேள்விக்குள்ளாகின்றன.
இப்படி ஒரு தரப்பை மறுதரப்பு மறுதலிக்கும்போது ஒரு தரப்பை மறுதரப்பு ஒடுக்க முனையும்போது எப்படி அமைதியைப் பேண முடியும்?
அரசியல் என்பதும் அதிகாரம் என்பதும் வரலாற்றின் அபூர்வ தருணங்களில் மட்டும்தான் நீதியோடும் அறத்தோடும் செயற்பட்டிருக்கிறது. அது அபூர்வமான மகான்களின் காலத்தில் மட்டுமே. மற்றும்படி ஒருவரை ஒருவர் ஒடுக்குவதும் ஒரு தரப்பை மறுதரப்பு சுரண்டுவதும் ஒன்றை ஒன்று நிராகரிப்பதும் ஒன்றினால் ஒன்று தோற்கடிக்கப்படுவதாகவே உள்ளது. இதற்குள் எப்படி நுட்பமாகவும் தந்திரோபாயமாகவும் வெற்றிகளைக் காண்பது? எப்படி தீர்வை எட்டுவது என்றே பார்க்க வேணும். இல்லையென்றால் தலையில் நெருப்புச்சட்டிதான்.
எனவேதான் கொந்தளிக்கும் நாடாக இந்தச் சின்னஞ்சிறிய தீவுத்தேசம் கிடந்து அல்லாடுகிறது.
இதற்குப் பரிகாரம் காண வேண்டும் என்றால் ஒரே வழி சமாதானத்தை நிலை நாட்டுவதே. சமாதானத்தை நிலை நாட்ட வேண்டும் என்றால் அதற்கான வழி பன்மைத்துவத்தையும் ஜனநாயகத்தையும் பேண வேண்டும். பன்மைத்துவத்தையும் ஜனநாயகத்தையும் பேண வேண்டும் என்றால் பல்லினத்தன்மையை அங்கீகரிக்க வேண்டும். பல்லினத்தன்மையை அங்கீகரிக்க வேண்டுமென்றால் இதையெல்லாம் கவனத்திற் கொண்ட அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
இதெல்லாம் நடக்கிற காரியமா? என்று உங்களுக்குள்ளே கேள்வி எழுகிறது அல்லவா! அப்படியென்றால் சமாதானமும் இல்லை என்ற முடிவுக்கு வர வேண்டியதுதான். சமாதானமும் அமைதியும் இல்லையென்றால் அழிவுதான். பேரழிவு. அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
இலங்கைக்கு நெருக்கடி என்றால் அது ஒட்டு மொத்தமாக அனைவருக்குமானதே. இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினை என்றால் அதனால் அனைத்துச் சமூகத்தினரும் பாதிக்கப்படுவர். அப்படித்தான் அனைவரும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்தப் பாதிப்புக்குக் காரணமான சக்திகள் எவை? அவை எப்படி எங்களால் ஆதரிக்கப்படுகின்றன என்று ஒவ்வொருவரும் சிந்தித்தால் நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் குறைந்திருக்கும். அப்படி பொது மக்களாகிய நாம் சிந்திக்க முடியாதவாறு இந்தச் சக்திகள் மிக நுட்பமாகவும் தந்திரோபாயமாகவும் செயற்படுகின்றன. நாமும் நம்மை அறியாமலும் அறிந்தும் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று எண்ணிக் கொண்டும் இந்தப் பிழையான – சமாதான விரோத – இனவாதச் சக்திகளை ஆதரிக்கிறோம். இது மாபெரும் தவறாகும். குற்றமாகும்.
தவறுக்கும் குற்றத்துக்கும் தண்டனை கிடைக்கும் அல்லவா! அந்தத் தண்டனையைத் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
அப்படியென்றால் இப்பொழுது என்ன செய்யலாம்? என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்தாடும்.
நாமே சமாதானத்துக்கான அழைப்புடன் களத்தில் இறங்க வேண்டியதுதான். என்ன நாமா? என்று நீங்கள் அதிர்ச்சியடையலாம். உங்களுடைய பிரச்சினைக்கு – உங்களுடைய வலிக்கு நீங்கள்தான் தீர்வைத் தேட வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். இதுவும் உங்களுடைய சொந்த வாழ்க்கைக்கான பணியைப் போன்றதே. அந்தளவுக்கு அவசியமானது. முக்கியமாக நீங்கள் உங்களுடைய பிள்ளைக்கு தகுதியான ஒன்றைப் பரிசளிக்க வேண்டாமா? உங்கள் பிள்ளைகளுக்காக சொத்துச் சேகரிப்பதற்குப் பதிலாக அவர்களுக்கென அமைதியையும் சமாதானத்தையும் சுயாதீனத்தையும் கட்டியெழுப்புங்கள். அது போதும். அதுதான் அவர்களுக்கான மகிழ்ச்சி. அவர்களுக்கான ஆறுதல். அவர்களுக்கான நம்பிக்கை. அவர்களுக்கான வாழ்க்கை. அதுவே அவர்களுக்கான பாதுகாப்பு.
கடந்த காலத்தில் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் நாம் காடு மேடெல்லாம் அலைந்தோமே. துயரத்தைச் சுமந்தோமே. அப்படியொரு வாழ்க்கையை நாம் விரும்புகின்றோமா?
எனவேதான் இது சமாதானத்தைப் பற்றி அதிகமாகச் சிந்திக்க வேண்டிய சூழல் என்கிறேன். அது கள்ளத்தனமானதாக –கயமை உடையதாக –தந்திரோபாயமானதாக – சூதானதாக இருக்கக் கூடாது. அல்லது கோர்த்த கைகளில் இரத்தக்கறை படிந்ததாக இருத்தல் பொருத்தமானதல்ல. பதிலாக வெளிப்படையானதாகவும் நேர்மையானதாகவும் உறுதியானதாகவும் இருக்க வேண்டும்.
இதற்கான பயிற்சி முக்கியம். அது போருக்கான பயிற்சியை விடவும் வலுவானதாக – சிறப்பானதாக இருக்கும். இதையெல்லாம் கருத்திலும் கவனத்திலும் கொண்டு முன்னகர்ந்தால் சமாதானத்துக்கான ஒரு படையணி உருவாகி விடும். அது சிந்தனையிலும் செயற்பாட்டிலும் வீரியம் கொள்ளும். இதைத் தவிர இலங்கைக்கு வேறு தெரிவுகளில்லை.
தீர்வுக்கு ஒரே வழி உண்மையை ஏற்றுக்கொள்ளுவதும் அதைப் பேசுவதும் அதை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிப்பதுமாகும். நீண்ட துயரங்களோடு போராடிக் கொண்டிருந்த நாடுகள் அந்தத் துயரங்களிலிருந்து மீண்டது சமாதானத்தின் மீது கொண்ட பற்றுறுதியினால்தான். இதை யார் செய்வது? யார் இதற்குப் பொறுப்பு என்று ஆளையாள் பார்த்துக் கொண்டிருக்காமல் அவரவர் பாத்திரங்களைச் செய்யத் தொடங்கினால் கனி கைகளில் கிட்டிவிடும்.
இதொன்றும் கடினமானதல்ல. அதாவது போரை விடவும் சுலபமானது. பாதுகாப்பானது. எங்கே உங்கள் முதற்காலடியை வையுங்கள் பார்க்கலாம். இது ஒரு கனவுதான் இப்பொழுது. ஆனால் அது உண்மையான யதார்த்தம். இந்த யதார்த்தம் வெற்றியளிக்கும்போது நாம் மகிழ்வோம். அந்த மகிழ்ச்சிக்கு ஈடில்லை.