— அழகு குணசீலன் —
மட்டக்களப்பின் தெற்கில் கல்முனை பிரதேச செயலக விகாரம் வைக்கோல் இழுத்த வழியாக கிடக்கும் நிலையில், மட்டக்களப்பின் வடக்கில் வாழைச்சேனை பிரதேசசபை மற்றும் பிரதேச செயலக விவகாரம் பேசுபொருளாகி இருக்கிறது.
இங்கு இரு வேறுபட்ட பிரச்சினைகள் கவன ஈர்ப்பை பெற்றுள்ளன. சிலர் இவற்றிற்கு இடையே முடிச்சுப் போடமுயல்வது சமூக ஊடகப் பதிவுகள் சொல்லும் செய்தியாக உள்ளது. ஆனால் இவை இரண்டும் முற்றுமுழுதாக இருவேறு விடயங்கள். இரண்டையும் தொடர்புபடுத்துவது முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் இடையே போடும் முடிச்சு.
இந்த இருவிடயங்களும் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அதிகாரத்தில் இருக்கும் வாழைச்சேனை பிரதேச சபைக்குரியவை. அவை எவை?
பிறக்கும் போதே திரிக்கப்படும் வரலாறு
1. வாழைச்சேனை பிரதேசசபை எல்லைக்குள் அமைந்துள்ள, வாழைச்சேனை வைத்தியசாலையில் பிறக்கும் பிள்ளைகளுக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் உள்ள பிறந்த இடம் என்ற பிரிவில் ஓட்டமாவடி என்று பதியப்படுவது.
அத்தோடு வாழைச்சேனை பிரதேச செயலகத்துக்குரிய பிறப்பு- இறப்பு பிரிவு கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டு வந்திருப்பது.
உண்மையில் இது நிர்வாக ரீதியான மிகப் பாரிய தவறு மட்டுமன்று சட்டமீறலுமாகும். ஒருவர் பிறக்கும் இடமும், ஒருவர் இறக்கும் இடமும் அந்த நிகழ்வு சம்பவித்த இடம் என்பதை பிறப்பு இறப்பு சட்டம் தெளிவாக வரையறுத்துக் கூறும்போது, இந்த சட்ட மீறல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒரு பிள்ளை பிறக்கும் போதே அதன் வரலாறு திரிபுபடுத்தப்படுகிறது. நாளை அந்த குழந்தை வளர்ந்து ‘நான் ஓட்டமாவடி முஸ்லீம் கிராமத்திலா பிறந்தேன்’? என்று கேட்கும் போது பெற்றோர் அதற்கு அளிக்கக்கூடிய பதில் என்ன?
அந்த குழந்தையின் கேள்விக்கு தமிழ் அரசியல் கட்சிகளும், அவற்றை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் வாதிகளும் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? இதுவரை அறியாமையுடன் இருட்டில் அரசியல் செய்தவர்கள், இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள இந்த விடயத்திற்கு அளிக்கின்ற பதில் என்ன?
அவர்களிடம் இந்தக் கேள்விக்கு பதில் இருக்குமானால் அதை இன்றே சொல்வதும், நன்றே சொல்வதும் சிறந்தது.
1973 இல், கோரளைப்பற்று மேற்கு, தெற்கு, மத்தி என்று இன்று இருக்கின்ற மூன்று பிரதேச செயலகங்களும் அன்றைய உதவி அரசாங்க அதிபர் பிரதேசமாக ஒன்றாகவே இருந்துள்ளன.
1989 இல் வர்த்தமானி அறிவித்தலின்படி இவை இன்றைய கோரளைப்பற்று மேற்கு, கோரளைப்பற்று தெற்கு, கோரளைப்பற்று மத்தி என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
1997 இல்தான் கோரளைப்பற்று மேற்கு பிரிவு ஓட்டமாவடியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
பிரைந்துரச்சேனை என்ற பகுதியே இங்கு சர்ச்சைக்குரிய தாக உள்ளது.
இந்த பகுதியில் தான் வாழைச்சேனை புகையிரத நிலையம், வாழைச்சேனை வைத்திய சாலை என்பன அமைந்துள்ளன. உண்மையில் இந்த நிலப்பகுதி தரிசு நிலமாக இருந்ததால் பிறைன் என்ற இங்கிலாந்து அதிகாரி சேனைப்பயிர்ச்செய்கைக்கு வழங்கியதாக அறியக் கிடைக்கிறது. அவரை பிறைன் துரை என்று அழைத்து அவர் பெயரோடு சேனையை இணைத்துக் கொண்டுள்ளனர் மக்கள்.
இந்த நிலையில் ஏழு முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு 1973 இல் இருந்து இந்த முறையில்தான் பதிவு செய்யப்பட்டதாக பிறப்பு இறப்பு ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை எழுதி இருப்பதாகவும் தெரியவருகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பிர்களே பெரும்பாலும் இருந்திருக்கின்றனர். அப்படியானால் அதில் கையொப்பமிட்ட மற்றைய முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் யார்?
இவர்கள் யார் என்பது வெளிக் கொணரப்படுவதுடன் தவறான தகவலை ஆணையாளருக்கு வழங்கி, அவரை ஏமாற்றி, நம்பிக்கைத்துரோகம் செய்த குற்றத்திற்காக இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இது பாராளுமன்ற உறுப்பினர்களின் தகுதியையும், நேர்மையையும், பாராளுமன்றத்தையும் அவமதிப்பதாக அமைகிறது.
1997 இல் உள்வாங்கப்பட்ட கோரளை மேற்கு, எவ்வாறு 1973 இல் இருந்து பிறப்பு பதிவுகளைப் செய்தது என்று பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் பாராளுமன்றத்தில் எழுப்பி உள்ள தர்க்கரீதியான கேள்விக்கு இவர்களின் பதில் என்ன? இந்த விடயத்தில் மௌன விரதம் இருக்கும் மட்டக்களப்பின் மற்றைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதில் என்ன?
பிள்ளையான் வைத்த மடையில் சாமி கும்பிடலாம் என்று நினைக்கிறார்களா?
ஒரு கல்லில் இருமாங்காய் !
2. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வாழைச்சேனை பிரதேச சபை இரு அபிவிருத்தி திட்டங்களை, சபை உறுப்பினர்களின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தபோது அந்த பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த இரு அபிவிருத்தி திட்டங்களும் குறிப்பிட்ட கிராமங்களுக்கு மட்டுமன்றி பிரதேசசபைக்கும் முக்கியமானவை. உலக வங்கி நிதியுதவி அளிக்கும் திட்டங்கள்.
இவற்றில் ஒன்று: கும்புறுமூலையில் பத்து ஏக்கர் காணியைப்பெற்று அங்கு குப்பைகளைக் சேகரித்து, அவற்றைக் கொண்டு இயற்கைப் பசளை உற்பத்தியைச் செய்தல்.
இதன்மூலம் குப்பைகூழங்களால் ஏற்படும் நோய்களைத் தடுத்து எதிர்கால சந்ததிக்கு ஒரு ஆரோக்கிய வாழ்வை வழங்கமுடியும். இதற்கும் மேலாக அருமையான சுற்றாடல் மாசுபடல் பாதுகாப்பு திட்டமாகவும் இது அமைகிறது. ஒரு கல்லில் இருமாங்காய்!.
இரண்டாவது: மொறக்கட்டான் சேனைக்கிராமத்தில் இரண்டு கோடி எழுபது இலட்சம் ரூபாய் செலவில் சகல வசதிகளுடன் கூடிய கலாச்சார மண்டபம் ஒன்றை அமைத்தல்.
இவை இரண்டும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துபவை. கணிசமான நேரடி, மறைமுக வேலை வாய்ப்புக்களை இந்தப் பிரதேசத்திற்கு பெற்றுத் தரக்கூடியவை.
கொண்டாட்டங்களுக்கு தனியார் மண்டபங்களை வாடகைக்கு பெறுவது சாதாரண வறியமக்களுக்கு செலவு கூடியது. அத்தோடு பிரதேச சபைக்கும் ஒரு வருமான மூலமாகவும் அமையும். மண்டபத்தை சூழ உள்ளபகுதியும், மற்றும் கொண்டாட்டங்களுக்கான உணவு விநியோகம் போன்றவற்றிலும் கணிசமான வேலைவாய்ப்பும், வருமானமும் வறியமக்களுக்கு கிடைக்கும். இந்த மண்டபத்தை பல்நோக்கு மண்டபமாக பயன்படுத்த முடியும்.
வாக்களித்த மக்களுக்கு வயிற்றில் அடித்தல்:
வெறும் எதிர்ப்பு அரசியல் கலாவதியாகி கனகாலங்கள் கடந்து விட்டன. தமிழ் தலைமைகள் எழுபது ஆண்டுகள் காலம் கடந்த அரசியலை இன்றும் பேசிக்கொண்டிருக்கின்றன. மக்களின் விருப்பு, வெறுப்புக்களை புறக்கணித்து, கதிரைகளை ஆயுட்காப்புறுதி செய்யும் அரசியலாக இது உள்ளது.
வாழைச்சேனை பிரதேசசபை அபிவிருத்தி திட்ட முன்மொழிவு பிரேரணையின் தோல்விக்கு முஸ்லீம் உறுப்பினர்கள் மீது பழியைப் போட்டு தமிழ் தேசியம் தப்பிக்க முயற்சிப்பது அரசியல் சிறுபிள்ளைத்தனம். கட்சி அரசியலுக்கு அப்பால் மக்கள் நலன் சார்ந்து செயற்பட வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.
எந்த மக்களின் வாக்குகளைப் பெற்று கதிரையைப் பிடித்தீர்களோ, அதேமக்களின் வயிற்றில் அடித்திருக்கிறீர்கள். எதிர்ப்பு அரசியல் என்பது முற்றாகத் தேவையற்றது என்று கூறவில்லை. அதை எங்கே பயன்படுத்துவது என்ற அரசியல் சாணக்கியம் தேவை. இல்லையேல் குடலேறக் கொழுத்தாலும் குட்டி ஆடு, குட்டி ஆடு தான்.
இந்த இரு அபிவிருத்தி திட்டங்களையும் வெறும் கட்சி அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் தோற்கடித்த பெருமை உங்களைச் சேரட்டும்.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த அப்பாவி மக்களிடம் வாக்கு கேட்டு எந்த முகத்துடன் போகப்போகிறீர்கள். அவர்களுக்கு என்ன பதிலைச் சொல்லப்போகிறீர்கள்? மக்களே நீங்கள் வாக்களித்து ஏமாந்து போனீர்கள். ஏமாற்றப்பட்டு விட்டீர்கள்.
கடைசிச் சந்தர்ப்பமாக நீங்கள் வாக்களித்த பிரதேசசபை உறுப்பினர்கள் மீது அழுத்தங்களை பிரயோகிங்கள். நீங்கள் உண்மையான தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் என்றால் முற்றிலும் தமிழர்களுக்கான, தமிழ் பிரதேசத்திற்கான இந்த பிரேரணையை இரண்டாவது சமர்ப்பிப்பின் போது ஆதரிக்கவேண்டும் என்று கோருங்கள். காலம் இன்னும் கடந்து விடவில்லை.
நாங்கள் அல்ல முஸ்லீம்கள் தான் தோற்கடித்தார்கள் என்று உங்கள் பிரதிநிதிகள் பதிலளித்தால், நாங்கள் முஸ்லீம்களுக்கு வாக்களிக்க வில்லை என்று சொல்லுங்கள். உங்களுக்கு எதற்காக வாக்களித்தோம் என்று கேளுங்கள். மூன்றில் இரண்டு அறுதிப் பெரும்பான்மையுடன் தமிழர்கள் ஒற்றுமையுடன் நிறைவேற்றக்கூடிய இந்த வாய்ப்பை நீங்கள் இழப்பது அநியாயம்! அரசியல் அபத்தம்!!
நல்ல சமூக நலன் சார்ந்த திட்டங்களை கட்சி அரசியல் வேலியை உடைத்து சுதந்திரமாக மக்கள் நலன் சார்ந்து பணியாற்ற வேண்டிய காலம் இது. எதிர்க்க வேண்டியவற்றை எதிர்ப்பதும் ஆதரிக்க வேண்டிய வற்றை ஆதரிப்பதும் அரசியலில் ஒன்றும் புதிதல்ல. அதனால் அவமானப்படுவதற்கும் எதுவும் இல்லை. அப்படித்தான் அது உங்களுக்கு அவமானம் என்றாலும் உங்களுக்கு வாக்களித்த மக்களுக்காக அந்த அவமானத்தை தாங்கிக் கொள்வது தானே அரசியல் நியதி.
பல்வேறு ஆலோசனைகள் சமூக ஊடகங்களில் வெளிவருகின்றன. இணைந்து செயற்படுவது என்பது உங்கள் இரு தமிழ் கட்சிகளினதும் விடயம். பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டாது என்றால் அப்படியே உங்கள் அரசியலைச் செய்யுங்கள். ஆனால் தேர்வு செய்து மக்கள் நலன் சார்ந்து உங்கள் ஆதரவை அளியுங்கள்.
பிறப்பு பதிவு விடயத்தில் நியாயம் இல்லாத போதும், அது சட்டத்திற்கு முரணாக உள்ள போதும் முஸ்லீம் உறுப்பினர்கள் தங்கள் சமூகத்திற்கான ஆதரவை, சமூக நலன் சார்ந்த அரசியலை வெளிக்காட்டியிருக்கிறார்கள். தமிழ்ப் பிரதேசத்திற்கான பெறுமதி மிக்க இரு அபிவிருத்தி பணிக்கு குறுக்கே நின்று தோற்கடித்திருக்கிறார்கள்.
த.தே.கூ., த.ம.வி. இருதரப்புக்கும் இடையே ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு ஜனா பொருத்தமானவர் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் முஸ்லீம் உறுப்பினர்களின் முடிவுக்குப் பின்னால் இன்னுமொரு தமிழ் உறுப்பினர் இருப்பதாக தகவல்கள் உலாவுகின்றன. ஜனா மட்டக்களப்பு மாவட்ட அரசியல் அனுபவம் உள்ளவர். ஒரு போராளியாக மக்கள் நலனை முதன்மைப்படுத்தியவர்.
அது மட்டுமன்றி கல்குடா தொகுதிபற்றியும், முப்பது ஆண்டுகளுக்கு முன்னரான ஓட்டமாவடியும், வாழைச்சேனையும் அவருக்கு நன்கு தெரியும். ரேலோ இயக்கத்திற்கு அப்பகுதியில் கணிசமான செல்வாக்கும் உண்டு.
அதேவேளை இந்த விவகாரம் கல்குடா தொகுதி த.தே.கூ. தீர்மானிக்கின்ற விடயமாக இருக்கவேண்டும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன், சிறிநேசன், அரியநேந்திரன், செல்வராசா, கனகசபை போன்றவர்களுடன் முன்னாள் செயலாளர் துரைராசிங்கமும், இளையோர் பிரிவு சேயோனும் உள்வாங்கப்பட்டு விரைவாக ஒரு முடிவு எட்டப்படுவது அவசியம்.
இல்லையேல் மற்றொரு கல்முனையாக வாழைச்சேனை மாறாது என்பதற்கும், இரு அபிவிருத்தி திட்டங்களையும் காப்பாற்றமுடியுமா என்பதற்கும் எந்த உத்திரவாதமும் இல்லை.
இப்போது பந்து உங்கள் கரங்களில் உள்ளது.
நீங்கள் 15 தமிழர்கள் அந்த சபையில் எதற்காக இருக்கிறீர்கள்.? இது பாராளுமன்ற அரசியல் அல்ல. உங்கள் ஊர் அரசியல். உங்கள் உறவுகளின் வாழ்வியல் சார்ந்த அரசியல் என்பதை சிந்தியுங்கள்.
இறுதியாக முஸ்லீம் உறுப்பினர்களின் சமூகப் பற்று உங்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும். கட்சி அரசியலில் இருந்து விடுதலை பெறுங்கள்.
அந்த சமூக பொருளாதார அரசியல் விடுதலையை மக்களுக்காக செய்வீர்களா? இது உங்களுக்கு வாக்களித்த மக்களின் கேள்விமட்டுமல்ல. நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்.
அரசியல் என்பது சாக்கடையா? அல்லது மகத்தான சமூகப்பணியா?
இதில் உங்கள் தேர்வு எது…? நீங்களே சொல்லுங்கள்.!
வஞ்சனை செய்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரடி, என்ற பழி உங்கள் மனச்சாட்சியை துரத்த இடம் கொடுக்க மாட்டீர்கள் என்று மக்கள் நம்புகிறார்கள். அந்த மக்களின் நம்பிக்கை வீண்போகாது என்று நம்புவோமாக!