— சிக்மலிங்கம் றெஜினோல்ட் —
யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகளாகி விட்டன. 1981 ஜூன் 31இல் எரிப்பு நடந்தது. இந்த எரிப்பு நாளை நினைவு கொண்டு தமிழ் இணையப் பொதுவெளியிலும் ஊடகங்களிலும் ஏராளமான பதிவுகளும் வெளியாகியிருக்கின்றன. தமிழ் அரசியற் கட்சிகளும் வழமையான முறையில் தங்கள் கண்டனப் பதிவுகளைச் செய்து வரலாற்றுப் பணியை ஆற்றியுள்ளன. (சிரிப்பு வந்தால் அடக்கிக் கொள்ளுங்கள். அழுகை வந்தால் கண்களைத் துடைத்துக் கொள்ளுங்கள்).
ஈழத்தமிழ்ச் சூழலில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மாதிரி அரச ஒடுக்குமுறையையும் அழிப்பு வன்முறைகளையும் நினைவூட்டியும் பகிரங்கமாக வெளிப்படுத்தியம்பியும் வருகின்ற மரபொன்று உண்டு. ஒடுக்குமுறைக்குள்ளாகிய மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட – இழைக்கப்படுகின்ற அநீதியை வெளிப்படுத்துவதும் அதை நினைவிற் கொள்வதும் தவிர்க்க முடியாது. ஆனால் இதைச் செய்வதால் மட்டும் அந்த மக்கள் தமது விடுதலையைப் பெற்று விடமுடியாது. அரசியல் அரங்கை வெற்றிகரமாகக் கையாளவும் முடியாது. அப்படிச் செய்து கொண்டிருந்தால் அது வெறும் புலம்பலாகவும் பலவீனமாகவுமே முடியும். கேலியாகத்தான் மற்றவர்களால் பார்க்கப்படும். அதாவது ஒன்றுக்கும் லாயக்கற்ற மக்கள் கூட்டம் என்று.
ஈழத்தமிழ்ச் சூழலில் விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பிறகு இரண்டு வகையான அரசியலே மேற்கொள்ளப்படுகிறது. ஒன்று அரச எதிர்ப்பு அரசியல் என்ற பேரில் மேற்கொள்ளப்படும் புலம்பல் அரசியல். இதனுடைய முதன்மைச் செயற்பாடு நினைவு கூரலாகும். இதை அது நினைவேந்தல் என்ற பேரில் நடத்துகிறது. இன்னொரு வகைச் செயற்பாடு கண்டன அறிக்கை அல்லது கடையடைப்பு என்பதாக.
இரண்டாவது அரச ஆதரவு அரசியல். அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துவது. அல்லது அதற்கு ஒத்துழைப்பது. இதில் தனித்துவத்தைப் பேணி ஒரு சுயாதீனத்தை உருவாக்கும் முனைப்பு இந்த அரசியலை முன்னெடுப்போரிடத்திலே இல்லை.
இந்தப் பின்னணியில் இந்தப் பத்தி எரிக்கப்பட்ட நூலகத்தை மையப்படுத்தி தமிழ்ச் சூழலின் இயங்குநிலை பற்றிச் சுருக்கமாக விளக்க முற்படுகிறது. யாழ்ப்பாண நூலகம் 1981 இல் ஆட்சியிலிருந்த ஐ.தே.க அரசாங்கத்தினால் எரிக்கப்பட்டது. இந்த எரிப்புக்கு தலைமை தாங்கியது அந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த காமினி திஸநாயக்கவும் சிறில் மத்தியூவும் என்று பகிரங்கமாகவே கூறப்படுகிறது. ஆக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் இருவர் நேரடியாக யாழ்ப்பாணத்துக்கு வந்து இந்த எரிப்பை திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது குற்றம். நிச்சயமாகக் கண்டனத்துக்குரியது. மறக்கவே முடியாது. மிகப் பெரிய அநீதி. நூலகத்தை மட்டுமல்ல யாழ்ப்பாண நகரையும் நகரத்திலிருந்த புத்தகக் கடையான பூபாலசிங்கம் புத்தகசாலையும் கூட இந்தக் கும்பலால் எரிக்கப்பட்டது.
இதில் நூலகமும் யாழ் மாநகரக் கடைத் தொகுதியும் அரச உடமைகள். அரச உடமைகளை அரசாங்கமே – அதன் அமைச்சர்களும் படைகளுமே எரித்தழித்தது என்பதை என்னவென்று சொல்வது. இதை விடக் கேவலமும் முட்டாள்தனமும் தவறும் வேறு என்ன?
இதையொட்டி அப்பொழுதே ஏராளமான எதிர்ப்புப் பிரதிகள் வெளிவந்தன. முக்கியமாக செங்கை ஆழியானின் யாழ்ப்பாணம் எரிகிறது என்ற புத்தகம், எம்.ஏ. நுஃமானினின் புத்தரின் படுகொலை, சு.வில்வரெத்தினம், சோ.பத்மநாதன் போன்றோரின் கவிதைகள் தொடக்கம் சுஜாதாவின் ஒரு லட்சம் புத்தகங்கள் என்ற கதை வரை ஏராளம் பதிவுகளும் வெளிப்பாடுகளும் வந்தன. இது இன்றளவும் தொடர்கிறது. அதாவது நூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் கடந்த பின்னும். அந்த நூலகம் மீளப் புதுப்பிக்கப்பட்டு மீள இயங்கிக் கொண்டிருக்கும் நிலையிலும். சான்றாக கீழே உள்ளன மேலும் இரண்டு புதிய கவிதைகள்.
(01)
தூக்கமற்ற இரவு
அன்று முழுப்போதையிலிருந்தது.
நகரத்தில்
ரோந்து சென்ற காவலரும் செல்லாத காவலரும்
போதையிலிருந்தனர்.
நகரத்துக்கு வந்திருந்த அமைச்சர்களும்
அடியாட்களும்
போதையிலிருந்தனர்.
அரசே போதையிலாடியது.
அன்றுதான் நகரமும்
நூலகமும் எரிக்கப்பட்டன.
எல்லாவற்றையும் எரித்ததற்கு அடையாளமாக
வழியில் எதிர்ப்பட்ட நாயை
சுட்டுப் பார்த்தான் ஒரு பொலிஸ்காரன்.
அது தப்பியோடவும்
எதிர்ப்பட்ட ஆளொருவனைச் சுட்டான்.
அவன் செத்து மடியவும்
மேலுமொரு மதுக் கிண்ணத்தைக்
கையிலேந்தினர் எல்லோரும்.
மகிழ்ச்சித் தீ
கொழுந்து விட்டெரிந்தது.
தூரத்தே எரியும் தீ
காற்றின் அதிசயம் என்று சொல்லியாடினர்.
தீயின் வெம்மையில்
கனவும் நினைவுமெரியத்
திடுக்கிட்டெழுந்த மதகுரு
அதிர்ச்சியில் தடக்கி
மரணக் குழியினுள் வீழ்ந்து மடிந்தார்.
நாற்பதாண்டுகள் கழிய
தூக்கமற்ற இரவை மோப்பம் பிடித்துச் சென்றவன்
தப்பிச் சென்ற அந்த நாயின் கண்களில்
உறக்கத்திலும் விழிப்பிலும்
தூக்கமற்ற இரவும்
படைகளும்
அரசும்
போதையிலின்னும்
ஆடிக் கொண்டேயிருப்பதைக் கண்டான்.
எந்த வேளையிலும் வெடிக்கக் கூடிய
குண்டின் அருகில்
தூக்கமற்ற இரவும்
போதையாடிகளும்
இருப்பதைக் கண்டவனின்
கடைவாயில் சிந்தியது மென்னகை
—- கருணாகரன்
(02)
விழித்தெழுந்த போதே
உணர்விருப்பதையும் இரவு தூக்கமற்றிருந்ததையும்
புரிந்து கொள்ள முடிந்தது.
நாட்களைக் கணக்கிட்டுத்
தூக்கத்தைத் தொலைப்பதில்
கிடைக்கும் போதை
ஒரு குவளை மதுவில் அறிய முடிவதில்லை.
தேசத்தின் வேலிகளில் தான்
கொழுவியிருக்கிறது மதுக் குவளை.
வெறியாட முன்னர் தொலைந்து போன குவளைகளை
யார் வீட்டில் தேடுவது?
நாற்பது ஆண்டுகளில் இடம் மாறிய குவளைகளை
யார் நினைவூட்டிக் கொள்வது?
பாதைகளின் இருமருங்கிலும்
நெளியும் குழந்தைகளின் கைதவறிப் போன கனவை
அறியாதவர்களல்ல நீங்கள்.
புத்தகங்களின் நினைவு உங்களுக்கு மட்டுமா?
உங்கள் போதையாடிகள் யார் அறிவைத் தொலைத்தார்கள்?
கவட்டினுள் ஒளிந்திருந்த வெடிகுண்டை அறியாது
வேறொரு பெருங்குண்டை
நினைந்தழுவதில் தொலைவதா தூக்கம்?
எங்கிருந்து எங்கு சென்றான் கொலைஞன்?
அங்கிருந்து இங்கு வந்தவனுக்கும்
இங்கிருந்து அங்கு சென்றவனுக்கும்
இடையில் தூக்கமற்ற இரவுகளா சாட்சி?
தூக்கமற்ற இரவில்
சாட்சியமே விழித்திருக்கும்.
——- கற்சுறா
இந்த இரண்டு கவிதைகளும் இரண்டு விதமான பார்வைகளையும் இரண்டு விதமான அரசியலையும் முன்வைத்து உரையாட முற்படுகின்றன. இதற்குக் காரணம், யாழ்ப்பாண நூலகமும் தமிழ் அரசியலும் அந்தளவுக்குப் பின்னாளில் சீரழிவு நிலைமைகளுக்குள்ளாகியதேயாகும்.
நூலக எரிப்பு பெரும் அரசியல் நெருக்கடியைக் கொடுக்கும் என்று சிங்களத் தரப்பு – குறிப்பாக அரசாங்கம் கருதவில்லை. ஆனால் அது சர்வதேசப் பரப்பில் அன்று கடுமையானதொரு விமர்சனத்தை அரசாங்கத்துக்கு உண்டாக்கியது. இன்றும்தான். எரிக்கப்பட்ட நூலகத்தை ஒடுக்குமுறைக்கான அடையாளமாக நெடுங்காலமாக தமிழ்த்தரப்புகள் பயன்படுத்தின. இன்றும்தான்.
எனவே இதற்கொரு பரிகாரம் காண வேண்டும் என்பதோடு 1994 இல் முன்னெடுக்கப்பட்ட அரசியல் தீர்வு முயற்சிக்கான நல்லெண்ணத்தை உண்டாக்குவதற்குமாக சந்திரிகா அரசு இந்த நூலகத்தை முழுமையாகப் புனரமைப்புச் செய்தது. இதற்காக அது சிங்கள மக்களிடம் 10 ரூபாய் காசும் ஒரு செங்கல்லும் வாங்கியது. மங்கள சமரவீர இதற்குத் தலைமை தாங்கினார். இது ஏனென்றால் தமிழர்களுடைய நூலகத்தை எரித்ததற்கான பொறுப்பை முழுச் சிங்களச் சமூகமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில். இது ஒரு சிறந்த முன்மாதிரியான நடவடிக்கை.
ஆனால் நூலகத்தை எரிந்த நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தமிழ்த்தரப்பில் ஒரு சாராருடைய நிலைப்பாடாக இருந்தது. இருந்தும் சேகரிக்கப்பட்ட நிதி மற்றும் பொருட்களின் அடிப்படையில் புனரமைக்கப்பட்டது நூலகம். புனரமைக்கப்பட்ட நூலகத்தைத் திறப்பதில் வந்தது பிரச்சினை. அது சாதியப்பிரச்சினையாகவும் விடுதலைப்புலிகளுக்கும் புலிகளுக்கு எதிரான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையிலான பிரச்சினையாகவும் மாறி இழுபறிகள் நடந்தன. பிறகு எப்படியோ நூலகம் சீராக்கப்பட்டு மீள இயங்கிக் கொண்டிருக்கிறது.
இப்பொழுது இந்த நூலகத்தை வந்து பார்த்துச் செல்கிறார்கள் சிங்கள மக்கள். தாங்கள் கொடுத்த அந்த ஒரு செங்கல்லும் 10 ரூபாய் காசும் எப்படியாகி உள்ளது என்பதை விட அன்றைய அரசினால் எரிக்கப்பட்ட நூலகம் இதுவா என்றுதான் அவர்கள் ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள்.
ஆனால் இதையெல்லாம் வைத்து பல விதமான அரசியலைத் தமிழ்த்தரப்புச் செய்து வருகிறது. அதன் வெளிப்படே மேற்படி இரண்டு கவிதைகளும்.
நூலக எரிப்பைப்பற்றிப் புலம்பல் அரசியலைச் செய்யும் தமிழ் மக்களும் சரி தமிழ்க்கட்சிகளும் சரி அதற்குப் பதிலாக வேறு பல நூலகங்களை உருவாக்கியிருக்கலாம். நீங்கள் ஒரு நூலகத்தை எரித்தால் நாங்கள் ஊர் ஊராக நூறு நூறு நூலகங்களை உருவாக்குவோம் என்று செய்து காட்டியிருக்கலாம். அதுதான் சரியான எதிர்ப்பு நடவடிக்கை. உண்மையான விடுதலைச் செயற்பாடு.
ஆனால் அப்படி எதுவும் – எந்த அதிசயமும் நடக்கவில்லை. மீளப்புதுக்கப்பட்ட நூலகத்தில் மட்டுமல்ல வேறு இடங்களில் அங்கங்கே இருக்கின்ற நூலகங்களுக்குக் கூடத் தமிழர்கள் செல்வது குறைவு. தலைவர்கள் மறந்தும் நூலகத்தின் பக்கம் தலை வைத்தே படுப்பதில்லை. ஒரு மிகச் சிறிய வட்டத்தினரே நூலகங்களைப் பயன்படுத்துகின்றனர். நூலகங்களின் விரிவாக்கத்துக்கும் புத்தகக் கொள்வனவுக்கும் வடக்கு கிழக்கு உட்படத் தமிழ்த்தரப்பினரால் ஒதுக்கப்படுகின்ற நிதியும் குறைவு. பலர் இதைப் பொருட்படுத்துவதே இல்லை. நான் அறிய இடதுசாரியக் கட்சிகளைத் தவிர வேறு எந்தவொரு தமிழ்த் தேசியக் கட்சியும் புத்தகப் பண்பாட்டையும் நூலகச் செயற்பாட்டையும் முன்னெடுத்ததாக இல்லை. ஒரு கட்சி கூட ஆண்டொன்றுக்கு குறைந்தது ஒரு லட்சம் ரூபாய்க்காவது புத்தகங்களைக் கொள்வனவு செய்வதோ நூலகங்களுக்குப் புத்தகங்களை வழங்குவதோ கிடையாது.
ஆக இவை அரசை எதிர்ப்பதற்கு மட்டுமே நூலக எரிப்பை பயன்படுத்திக் கொள்கின்றன.
உண்மையில் தமிழ் மக்களின் அறிவுப் பொக்கிசமாக நூலகத்தைக் கருதினால் அந்த அறிவுச் தமிழ்ச்சமூகத்தில் நூலகப் பண்பாட்டை சவாலாக வளர்த்திருக்க வேண்டும். புத்தகங்களை வாங்கும் பழக்கத்தை உருவாக்கியிருக்க வேணும். ஜனநாயகத்தை வளர்த்திருக்க வேண்டும். சாதியத்தை ஒழித்திருக்க வேண்டும். பெண்ணொடுக்குமுறையை விலக்கியிருக்க வேண்டும். வெறுப்பு வாதத்தைக் களைந்திருக்க வேண்டும். மக்களை மூட நம்பிக்கைகளிலிருந்தும் தவறான தெரிவுகளிலிருந்தும் மீட்டிருக்க வேண்டும். அறிவார்ந்து சிந்திக்கும் ஒரு பண்பாடு வளர்ந்திருக்க வேண்டும். அது அனைவரையும் சமநிலை நோக்கோடு சமத்துவமான வாழ்க்கை நோக்கை உருவாக்கியிருக்க வேண்டும். விடுதலை அரசியலை அழிப்புகளிலிருந்தும் அழிவுகளிலிருந்தும் மீட்டிருக்க வேண்டும்.
மட்டக்களப்பு நூலகம்
அப்படியெல்லாம் நடந்திருக்கிறதா? இல்லையே! அப்படியென்றால் ஒப்புக்கு அழுவதன்றி வேறென்ன? நடிப்பும் நாடகமும்தானே! இதற்கு இன்னொரு செழிப்பான உதாரணம், மட்டக்களப்பு நகரில் மிகப் பெரிய நூலகமொன்றை சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கிழக்கின் முதலமைச்சராக இருந்தபோது ஆரம்பித்தார். பின்னர் அவர் அரசியற் கைதொன்றினால் சிறை சென்றபின் அந்த நூலகத்தின் பணியைத் தொடர்வதற்கு இந்தச் செம்மல்களுக்கு மனசு வரவில்லை.
இப்படித்தான் தமிழ்ச்சமூகத்தின் கண்டனங்களும் அரசியற் பார்வையும் ஏனைய நினைவு கூருதல்களும் (நினைவேந்தல்களும்) அரசியல் நாடகத்துக்குரியதாக அர்த்தமிழக்கப்பட்டுள்ளன.
அரசியற் பெறுமானங்களை அரசியற் பலவீனங்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். இதையே இரண்டு கவிதைகளும் சொல்கின்றன. இதிலாவது தங்களையும் வரலாற்றையும் படித்துக் கொள்ள வேண்டும் தமிழர்கள். புதைகுழியின் இருளிலிருந்து இவர்கள் எப்பொழுதுதான் மேலெழுந்து வரப்போகிறார்களோ!