— வி.சிவலிங்கம் —
வாசகர்களே!
தமிழ் அரசியலின் உள் முரண்பாடுகளைத் தெளிவாக அடையாளம் கண்டால் மாத்திரமே அவை முன்னேறிச் செல்வதற்கான பாதைகளைக் கண்டறிய முடியும். கடந்த கட்டுரைகளில் தமிழரசுக் கட்சிக்குள் மற்றும் கூட்டமைப்பிற்குள் இரு வேறு குழுக்கள் செயற்படுவதாகவும், அவை சுமந்திரன் மற்றும் மாவை தலைமையிலான பிரிவுகளாகி ஒன்றை ஒன்று தடுத்து வருவதால் அரசியல் முன்னேற்றம் சாத்தியமற்றுக் காணப்படுவதையும் அடையாளப்படுத்தினோம்.
இங்கு சில அரசியல் யதார்த்தங்களை முதலில் நாம் ஏற்றாக வேண்டும். அதாவது தற்போதுள்ள அரசியல் போக்கின் அடிப்படையில் தேசிய இனப் பிரச்சனைக்கான நீண்டகாலத் தீர்வுகள் குறித்து அரசுடன் பேசி முடிவு செய்ய முடியாது என்பதை நாம் ஏற்றாக வேண்டும். ஏனெனில் அதன் அரசியல் வியூகம் அதற்கான இடத்தை வழங்கவில்லை. மறு புறத்தில் இந்த அரசினால் மட்டுமே ஓர் குறிப்பிட்ட காலத்தை நோக்கிய குறைந்த பட்சத் தீர்வையாவது முன்வைக்க முடியும். தற்போது காணப்படும் சிங்கள பௌத்த பெருந்தேசியவாத அரசியல் அலையைத் தணிப்பதே உடனடி அரசியல் தேவையாக உள்ளது. தற்போதைய எதிர்க் கட்சியினர் பெருமளவிலான சிங்கள பௌத்த வாக்குகளை இழந்துள்ளனர். இந் நிலையில் இப் பெருந்தொகையான வாக்குகளைத் தமது பக்கம் திருப்புவதற்கு எவ்வாறான அரசியலைப் பயன்படுத்துவார்கள்? என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.
எனவே இதற்றைக் கையாள்வதற்கான அரசியல் ராஜதந்திரம் வகுக்கப்பட வேண்டும். சுமந்திரன் தலைமையிலான பிரிவினர் 21ம் நூற்றாண்டில் மாறி வரும் உலக அரசியலைக் கவனத்தில் கொண்டு பிரிவினை, வன்முறை என்பவற்றிற்கு எதிராக தமிழ் அரசியல் மாற்றமடைந்தால் மாத்திரமே தேசிய இனப் பிரச்சனைக்கான மாற்றங்களைக் காண முடியும் எனக் கருதுகின்றனர்.
இத் தரப்பினர் இரண்டு முக்கிய அம்சங்களைக் கருத்தில் கொண்டுள்ளதாகக் காண முடிகிறது. அதாவது உள்நாட்டு அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களில் காத்திரமான பங்களிப்பை மேற்கொண்டு தேசிய அளவிலான ஜனநாயக தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வது,அடுத்ததாக தேசிய பொருளாதாரத்தைப் புனர் நிர்மாணம் செய்வதற்கான தேசிய பங்களிப்பை வழங்கும் விதத்திலான அரசியல் மற்றும் பொருளாதார அம்சங்களை நோக்கிய பொறிமுறைகளை வகுப்பதில் தமது கவனத்தைச் செலுத்துவதாகும். தற்போதைய சூழலில் அரசின் இனவாத அம்சங்களை விமர்ச்சிக்கும் வேளையில் தேசிய நலன் கருதி வெளிநாடுகளிடம் உதவிகளை வழங்கும்படி கோருவது ஒருவகை ராஜதந்திரமாக அமையும். குறிப்பாக தேசிய அளவிலான அமைதியை விரும்பும் சகல தரப்பாரும் இவ்வாறான இணைந்த செயற்பாட்டையே எதிர்பார்க்கின்றனர். இதனையே தற்போதைய எதிர்க் கட்சியினரும் நாடு மிக மோசமான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருப்பதால் அரசியல் போட்டிகளைப் புறந்தள்ளி சகல கட்சிகளையும் இணைத்து செயற்படுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும்படி கோரி வருகின்றனர்.
திட்டமிடல் அற்ற எதிர்ப்பு அரசியல் பயன் தராது
தமிழ் அரசியலில் காணப்படும் குறுந்தேசியவாத அரசியலைத் தோற்கடிப்பதாயின் நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார தேவைகள் குறித்த காத்திரமான கொள்கைகளை முன்வைத்து மக்களை அணி திரட்டுவதே பொருத்தமான பணியாக அமையும். எவ்விதமான திட்டமிடுதலும் இல்லாமல் வெறுமனே எதிர்ப்பு அரசியலை மட்டும் மக்கள் தொடர்ந்து ஆதரிப்பது மிகவும் கடினமாக அமையும். குறுந்தேசியவாத அரசியலுக்கு எதிராக மிகவும் காத்திரமான, யதார்த்தமான அரசியலை முன் தள்ளுவதற்கான பொருத்தமான தருணம் இதுவாகவே அமையும்.
குறுந்தேசியவாதிகளால் ஏனைய சிறுபான்மையை தலைமை தாங்க முடியாது
சிங்களத் தரப்பில் காணப்படும் பெருந்தேசியவாத சிந்தனைகள் பலமடைந்து வருவதால் தமக்கான பாதுகாப்பை நோக்கி தமிழ் மக்களை அல்லது இதர தேசிய சிறுபான்மை இனங்களை அழைத்துச் செல்வதாக குறுந்தேசியவாதிகள் தரப்பினர் வாதிக்கின்றனர். ஆனால் இலங்கையின் இதர தேசிய இனங்களான மலையக மற்றும் முஸ்லீம் மக்களின் இருப்பு என்பது முற்றிலும் வேறானது. அம் மக்கள் முற்றிலும் பெரும்பான்மைச் சிங்கள மக்களோடு வாழ்கின்றனர். இதனால் சகவாழ்வு என்பது அவசியமாகிறது. எனவே குறுந்தேசியவாத அரசியலை அவர்களால் ஏற்க முடிவதில்லை. தற்போதைய குடிசனப் பரம்பலை ஆதாரமாகக் கொண்டு பார்க்கையில் இந்த இரு சாராருடன் இணைந்தே அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது அவசியமாகிறது. எனவேதான் பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் ஜனநாயக தீர்வை நோக்கிய அரசியல் பாதை தேவையாகிறது.
கிழக்கு அரசியல்
ஆனால் தமிழ் அரசியல் தொடர்ந்து கூறுபட்டுச் செல்வதால் அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்தும் பேச வேண்டி உள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாண அரசியல் குறித்த விவாதங்கள் படிப்படியாக கைவிடப்பட்டுச் செல்கிறது. தமிழ் அரசியல் மிக அதிகளவில் வடமாகாணத்தைச் சுற்றியே செல்கிறது. இதனால் கிழக்கு மாகாண அரசியல் தனித்து விடப்படுவதும், இத் தாக்கங்களால் எழுந்துள்ள நிலமைகளை தமிழ் அரசியல் வெறுமனே பிரதேசவாதமாக குறுக்குவதும் நிகழ்கிறது.
இங்கு நாம் இரண்டு முக்கியமான அம்சங்கள் குறித்து ஆழமாக விவாதிக்க வேண்டிய நிலையிலுள்ளோம். முதலாவது பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதாயின் இப் பிளவுபடாத இலங்கை என்பது பலமான ஜனநாயக கட்டுமானங்களை உடையதாக அமைவது பிரதான தேவையாகிறது. அடுத்தது நாம் எதிர்பார்க்கும் ஜனநாயக கட்டுமானங்கள் என்பது தேசிய பொருளாதார வளர்ச்சியில் சகல சமூகப் பிரிவினரதும் பங்களிப்பை உறுதி செய்வதாக அமைதல் தேவையாகிறது. இதுவே தமிழ் அரசியலின் பிரதான கோட்பாடாக மாற வேண்டும்.
எனவே இன்றைய தேசிய அரசியல் என்பது அரசியல், சமூக, பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதாக, தேசிய பொருளாதார திட்டமிடல் என்பது தேசத்தின் சகல பிரிவினருக்கும் வாய்ப்பளிக்கும் விதத்தில் வரையப்பட வேண்டியுள்ளது. ஆனால் தற்போதைய அரசியல் சூழலில் குறிப்பாக தேசிய உற்பத்தி மிக மோசமான பாதிப்பில் இருக்கையில் பிரதேசங்கள் ஒன்றுகொன்று போட்டியிடும் நிலையிலும், இதற்காக ஜனநாயக அரசியல் அடிப்படைகளிலிருந்து விலகிச் செல்லும் போக்கும் காணப்படுகிறது.
பிரதேசவாதம்?
உதாரணமாக தற்போது நாட்டின் அரசுக் கட்டுமானம் என்பது ஒரு கட்சி ஆதிக்கமாகவும், தனி ஒருவரிடம் அதிகாரம் குவிக்கப்பட்டதாகவும் உள்ள நிலையில் ஜனநாயக ஆட்சிமுறை பலவீனப்பட்டுச் செல்கையில் பல குழப்பங்களுக்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றுதான் பிரதேசவாதம் என்பதாகும். இப் பிரதேசவாதம் பல்வேறு காரணிகளால் ஊக்குவிக்கப்படுகிறது. வாக்குப் பலத்தை அதிகரித்தல், அரசியல் கட்சிகளின் பலத்தை அதிகரித்தல், உட் கட்சிகள் மத்தியில் முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்துதல், சிறுபான்மையினரின் குரலை ஒடுக்குதல் எனப் பல அம்சங்கள் உள்ளன.
இங்கு தற்போது தமிழ் அரசியலில் காணப்படும் கிழக்கு மாகாணம் சார்ந்த அரசியல் பிரதேசவாதம் என்ற அடையாளத்திற்குள் சென்றிருப்பது மிகவும் துர்அதிர்ஸ்டமானது. சிங்கள பௌத்த பெருந்தேசிய இனமையவாதம் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் மிக நீண்ட காலமாகக் காணப்பட்ட ஐக்கியப்பட்ட நிலமைகளை உடைக்க மிகவும் திட்டமிட்டே செயற்பட்டு வருகிறது. ஒரு புறத்தில் தமிழ்ப் பிரதேசங்களில் குடியேற்றத் திட்டங்களை ஆரம்பித்தார்கள். இன்னொரு புறத்தில் முஸ்லீம் மற்றும் மலையக அரசியல் கட்சிகளிடம் இணக்க அரசியல் என்ற போர்வையில் பிளவுகளை ஏற்படுத்தினார்கள். பின்னர் போர்க் காலத்தில் இச் சிறுபான்மைத் தேசிய இனங்களை ஒன்றுடன் ஒன்று மோதும் தந்திரங்களைப் பயன்படுத்தினார்கள். இதன் விளைவாக நாட்டின் தேசிய சிறுபான்மை இனங்களின் இன நல்லுணர்வு மிக மோசமான நிலையிலுள்ளது.
இதன் விளைவாக உட் கட்சிகளுக்குள்ளும் முரண்பாடுகள் அதிகரித்தன. பாராளுமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்பட்டார்கள். சலுகைகள் வழங்கப்பட்டன. இதனால் தேர்தலின் பின்னர் பலர் கட்சி தாவினார்கள். அரச ஆதரவு காரணமாக தமது தேர்தல் பிரதேசங்களில் அவர்களுக்கு சில சேவைகளை மேற்கொள்ள வாய்ப்புகள் கிடைத்தன. இதனால் கட்சிகள் சீரழிக்கப்பட்டன. கட்சிகளின் நீண்டகால அரசியல் அபிலாஷைகள் மறைந்து குறுகிய நலன்கள் பிரதானமானவையாக மாறின.
பிரதேச அடிப்படையில் கட்சிகள் பிரிந்த வரலாறு
இங்கிருந்தே பிரதேசவாதம் ஆரம்பமாகிறது. சமீப காலமாக கிழக்கு அரசியலில் எழுந்துள்ள நிலமைகளை அவதானிக்கும்போது பல போலி நிலமைகள் வெளிப்படுகின்றன. உதாரணமாக, கிழக்கின் சில அரசியல் கட்சிகள் அல்லது குழுக்கள் வடக்கில் பலமடைந்துள்ள அரசியல் கட்சியான தமிழரசுக் கட்சி அல்லது கூட்டமைப்பினரின் பலவீனங்களை மையமாக வைத்து தமது புதிய அரசியலிற்கான அடித்தளங்களை இடுகின்றனர். குறிப்பாக சுதந்திரத்திற்குப் பின்னர் காணப்பட்ட மற்றும் பிரித்தானியர்களின் சூழ்ச்சி அரசியலிற்குள் சிக்குண்ட சிங்கள, தமிழ் அரசியல் சக்திகள் தத்தமது ஆதிக்கத்தை நிலைநாட்டும் பொருட்டு அரசியல் வியூகங்களை வகுத்தனர். பலமடைந்து சென்ற சிங்கள பௌத்த மேலாதிக்க அரசியல் அணிவகுப்பிற்கு எதிராக ஏனைய தேசிய சிறுபான்மை இனங்களும் இணைந்து செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன.
இதன் விளைவாக மலையக மக்கள் தொழிற்சங்க அடிப்படையில் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் என்ற பெயரில் ஜனாப் அஸீஸ் தலைமையிலும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற பெயரில் சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையிலும் இணைந்தனர். இவை தொழிற் சங்கங்களே தவிர அரசியல் கட்சிகள் அல்ல. அத்துடன் மலையக மக்கள் தமது வாக்குரிமைகளையும் இழந்திருந்தனர். ஆனால் மறு பக்கத்தில் கிழக்கில் செறிந்திருந்த முஸ்லீம் மக்கள் தமிழ்பேசும் மக்கள் என்ற வகையில் தமிழரசுக் கட்சியை ஆதரித்துச் சென்றனர். கிழக்கு மாகாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் மிகவும் இணைந்து வாழ்ந்த பின்னணியில்தான் இந்த அரசியல் சாத்தியமானது.
ஆனால் ஏற்கெனவே குறிப்பிட்டது போல சிங்கள, பௌத்த பெருந்தேசியவாத சூழ்ச்சிகள் இன்று மிகவும் பிளவுபட்ட சூழலைத் தோற்றுவித்துள்ளது. குறிப்பாக முஸ்லீம் மக்களின் அரசியல் தலைமைகள் சிங்கள அரசியல் கட்சிகளுடன் ஏற்படுத்திய இணக்க அரசியல் காரணமாக முஸ்லீம் பிரதேசங்கள் நியாயமான அபிவிருத்தியைப் பெற்றன. தமக்கான அரசியல் உரிமைகளை விட அபிவிருத்தி அரசியல் மூலம் தமது இருப்பைத் தக்க வைக்கலாம் என்ற அணுகுமுறையே அரசியலாக அமைந்தது.
முஸ்லிம்களின் அபிவிருத்தி
முஸ்லீம் பிரதேசங்களின் அபிவிருத்திகள் கிழக்கு மாகாணத்தில் பாரிய விவாதங்களைத் தூண்டின. அரசுடன் மேற்கொண்ட இணக்க அரசியலே இவ்வாறான அபிவிருத்திக்கான பிரதான காரணம் என்ற கருத்துக்கள் பலமாக காணப்பட்டன. முஸ்லீம் பிரதேசங்களின் அபிவிருத்தி, வேலைவாய்ப்புகள், கல்வி வளர்ச்சி போன்றன மிகத் துலாம்பரமாக வேறுபடுத்திக் காட்டின. கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலான தமிழ் உரிமை அரசியல் என்பது அபிவிருத்தியை இரண்டாம் பட்ச நிலையில் வைத்திருந்தது. அரச பதவிகளிலும், வர்த்தக நடவடிக்கைகளிலும், புலம்பெயர் மக்களின் வருமானங்களிலும் அதிகளவு தங்கி வாழ்ந்து வரும் வடபுல தமிழ் மக்கள் தமது அரசியல் அடிப்படை உரிமைகளுக்கே முக்கியத்துவம் வழங்கினர். ஆனால் கிழக்கு மாகாண மக்களின் பொருளாதார வாழ்வு முற்றிலும் மாறுபட்ட நிலையில் இருந்தமையாலும், தமிழ் பிரதேசத்திலிருந்து முஸ்லீம் பிரதேசங்களைக் கடந்து செல்லும் ஒருவர் மிகவும் வெளிப்படையாகவே பொருளாதார, சமூக மாற்றங்களை அவதானிக்கவும், கிழக்கு மாகாண தமிழ் இளைய தலைமுறையினர் தமது வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருப்பதற்கான பிரதான காரணி யார்? எவை? என்பதைக் காணவும் முடிந்தது.
கிழக்கின் மாற்றங்களை கண்டும் காணாத வடக்கு தலைவர்கள்
வடக்கு மாகாண அரசியல் தலைமைகள் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டு வரும் அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களைக் கண்டும் காணாதது போல செயற்பட்டனர். கிழக்கில் அதிகரித்துச் சென்ற இன விரிசல்களைத் தணிக்க எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. பதிலாக தமிழ் மற்றும் முஸ்லீம் அரசியல் தலைமைகள் இப் பிளவுகளைத் தமது அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்தினர். தமது அரசியல் உரிமைகளும் இல்லாமல், அபிவிருத்தியும் இல்லாமல் இரண்டும் கெட்டான் நிலையை புதிய தலைமுறையினர் உணர்ந்தமையால் முஸ்லீம் அரசியலின் வழியில் அரசியல் செய்யத் தலைப்பட்டுள்ளனர். இதன் விளைவாக தமது அரசியல் தலைமைகளுடன் தற்போது போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
தமிழ் அரசியல் தலைமைகளுடன் முரண்பாட்டை அதிகரித்துச் செல்லும் கிழக்கின் புதிய இளம் தலைமுறையினர், கடந்தகால அரசியலைப் புரிந்துள்ள விதம் பற்றியே எமது கவனங்கள் செல்கின்றன.
கிழக்கின் அரசியல் போக்கு
தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகளின் போக்குப் பற்றி கிழக்கில் மட்டுமல்ல, வடக்கிலும் பெரும் விவாதங்கள் ஆரம்பித்துள்ளன. ஆனால் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு எதிரான விவாதங்கள் வடக்கிலும், கிழக்கிலும் தொடர்கின்ற போதிலும் அங்கு இவை முற்றிலும் முரண்பட்டுச் செல்லும் போக்கே மிகவும் விசித்திரமாக உள்ளது. குறிப்பாக கிழக்கிலிருந்து எழும் விவாதங்கள் தமிழ்ச் சமூகத்தில் உள்ள சாதி மற்றும் சமய ஆதிக்க சக்திகளைக் குறி வைத்து ஒருவகையில் ‘மேட்டுக்குடி’ அரசியல் எனவும் அவர்களே கிழக்கினைப் புறக்கணிக்கிறார்கள் என வர்ணித்துச் செல்லப்படுகிறது. இங்கு பிரதேசம் என்ற சொற் பிரயோகம் இரு புறத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
அதாவது கிழக்கு மாகாணத்தின் சுயாதீன அரசியல் செயற்பாட்டை வடக்கு அரசியலாதிக்கம் முடக்க முனைகிறது எனக் கூறி கிழக்கு மாகாண மக்கள் வடபகுதி ஆதிக்க சக்திகளால் பிரதேச அடிப்படையில் புறக்கணிக்கப்படுவதாக ஒரு புறத்திலும், மறு புறத்தில் கிழக்கின் புதிய அரசியல் சக்திகள் தற்போது பெருந்தேசியவாத சக்திகளுடன் மறைமுகமாக ஏற்படுத்தியுள்ள உறவுகளை மறைக்கும் விதத்திலும், சிங்கள பௌத்த பெருந்தேசியவாத சக்திகளின் விசுவாசிகளாக தம்மை அடையாளப்படுத்தும் வகையிலும், தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளைக் கைவிட்டு பிரதேச அபிவிருத்தி என்ற பெயரில் புதிய அரசியல் செய்வது பிரதேசவாதமே தவிர தேசிய இனங்களின் ஜனநாயகம் சார்ந்த அரசியல் அல்ல என வடக்கு விவாதங்கள் கூறுகின்றன.
பிரதேச வாதமா? அல்லது ஜனநாயக பற்றாக்குறையா?
தமிழ் அரசியலில் குறிப்பாக ஊடகப் பரப்பில் வடக்கு, கிழக்கு அரசியல் குறித்து பல்வேறு வகையில் விவாதங்கள் நகர்த்தப்படுகின்றன. கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சிக்குள் இடம்பெற்ற விவாதங்களும், மோதல்களும் சுதந்திரத்திற்குப் பின்னதான அப்போதைய தமிழ்ச் சமூகத்தில் காணப்பட்ட சாதி மேலாண்மையுடன் பொருத்திப் பார்க்கும் அரசியலாக தற்போது வெளிப்படுகிறது. குறிப்பாக தமிழரசுக் கட்சிக்குள் அல்லது பிற் காலத்தில் கூட்டமைப்பிற்குள் காணப்படும் அணுகுமுறைகள், பாரபட்சங்கள், பிராந்திய புறக்கணிப்புகள் போன்றன சாதிய கட்டமைப்பின் வழியில் விளக்கப்படுகின்றன. வடபகுதி சாதித்துவ ஆதிக்க அணுகுமுறை கிழக்கு மாகாணத்தைப் புறக்கணித்துச் செல்வதாக தற்போது விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும் இவ்வாறான சாதி ஆதிக்கத்தின் அடிப்படையிலான புறக்கணிப்புகளுக்கான வலுவான நியாயங்கள் எதுவும் இதுவரை முன்வைக்கப்படவில்லை. குறிப்பாக தமிழ் அரசியலில் சாதித்துவ அரசியல்தான் கிழக்குப் புறக்கணிப்பிற்கான வலுவான காரணம் எனில் அதற்கான ஆதாரங்கள் காத்திரமான விதத்தில் முன்வைக்கப்படுதல் அவசியம். அத்துடன் அவ்வாறான பிரதேச புறக்கணிப்பிற்கான அரசியல் தீர்மானங்களாவது ஆதாரமாக முன்வைக்கப்படுதல் அவசியம். குறிப்பாக கிழக்கில் எழுந்துள்ள இன முறுகல் நிலை குறித்து தமிழரசுக் கட்சிக்குள் அல்லது கூட்டமைப்பிற்குள் விவாதங்கள் எழுந்ததாகவும் தகவல்கள் இல்லை.
கிழக்கு அரசியல்
இவ்வாறான ஆதாரமற்ற கருத்துக்கள் பல சந்தேகங்களை எழுப்புகின்றன. தமிழ் தேசிய அரசியலில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படுவதாக உணரப்படுவதும் அதற்கு மாற்றீடாக முன்வைக்கப்படும் இன்றைய கிழக்கு அரசியல் இவ்வாறான மேலாதிக்க அடிப்படைகளிலிருந்து விலகிச் செல்வதாகவும் கூறும் நியாயங்கள் இதுவரை காணப்படவில்லை. இவ்வாறான குற்றங்கள் மட்டும் புதிய அரசியலாக மாற்றம் பெற முடியாது. புதிய அரசியல் மாற்றங்களின் புதிய பாதைகளைத் தர வேண்டும். குற்றங்களின் பட்டியல் நீழ்கிறதே தவிர காத்திரமான மாற்று யோசனைகள் இதுவரை இல்லை.
தற்போதைய விவாதங்களில் பல தனிநபர்களைச் சார்ந்ததாக அல்லது அவர்கள் கட்சிகளின் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட விபரங்களாகவும் கட்சி அரசியலில் ஏற்பட்ட பிணக்குகளை முன்வைப்பதாகவும் உள்ளதே தவிர பிரதேசவாதம் என்பது கட்சியின் தீர்மானங்களில் ஏற்படுத்திய தாக்கங்கள் மற்றும் அதற்கு எதிராக எழுந்த போராட்டங்கள் போன்ற எவையும் அடையாளப்படுத்தப்படவில்லை.
இவை தொடர்பாக சில கேள்விகளை நாம் எழுப்பலாம். எக் காலகட்டத்திலிருந்து இப் பிரதேசவாத அடையாளங்கள் ஆரம்பமாகின? கட்சியின் முக்கிய முடிவுகளில் வெளிப்பட்ட பிரதேசவாத அடையாளங்கள் என்ன? இவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ.ராஜதுரை அவர்களின் விலக்கத்திலிருந்து ஆரம்பமானால் அவர் இப் பிரதேச பாகுபாடு பற்றி எதுவும் பேசவில்லையே ஏன்? காசி ஆனந்தன் இவை குறித்து அவ்வளவாகப் பேசியதில்லையே ஏன்? இவற்றின் பின்னரான காலத்தில்தான் கருணா அம்மான், பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தன் என்போர் விடுதலைப்புலிகளில் இணைந்து செயற்பட்டார்கள். மிக நீண்ட காலம் செயற்பட்டார்கள். தாம் விலகிய பின்னரே பிரதேச பாரபட்சம் குறித்துப் பேசினர். இதனை இவர்கள் தமக்கென தனித்தனியான கட்சிகளை ஆரம்பிப்பதற்கான போலி நியாயங்களாக ஏன் கருத முடியாது? கிழக்கிலங்கை முஸ்லீம்களும் தமிழரசுக் கட்சியில் செயற்பட்டுள்ளனர். பிற்காலத்தில் தமக்கென தனிக் கட்சியை ஆரம்பித்தனர். இருப்பினும் அவ்வாறான பிரிவின்போது பிரதேசவாதம் குறித்து அம் மக்கள் பேசவில்லையே ஏன்? கட்சிகளில் அல்லது குழுக்களில் சில தனிநபர்கள் புறக்கணிக்கப்பட்டதற்கான நியாயங்களை பிரதேசவாதம் என்ற பரந்த வரையறைக்குள் உள்ளடக்க முடியுமா?
ஜனநாயகப் பற்றாக்குறை
தமிழ் அரசியலில் பிரதேசவாதம் காணப்படுவதாக விவாதிப்பது அடிப்படையில் சில முக்கிய அம்சங்கள் குறித்த மயக்க நிலையே என்பது எனது கருத்தாகும். தமிழரசுக் கட்சியின் ஆரம்பத்திலிருந்து அல்லது அதன் பிற்கால கூட்டமைப்பு கட்டுமானம் வரை அக் கட்சிக்குள் ஜனநாயகம் ஒருபோதும் இருந்ததில்லை. இந்த ஜனநாயக மறுப்பு என்பது பல்வேறு வடிவங்களில் செயற்பட்டது. அதில் பிரதேச வாதமும் ஒன்று. இங்கு பிரதேசவாதத்தை முன்னிறுத்தி அங்கு காணப்பட்ட ஜனநாயக மறுப்புகளைக் கண்டுகொள்ள மறுப்பதன் பின்னணியே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சமீபகாலமாக கிழக்கு மாகாணத்திற்கான சுயாதீன அரசியலின் தேவை குறித்த விவாதங்களில் கட்சி அரசியலில் காணப்படும் ஜனநாயகமற்ற சூழல் குறித்த எந்த விவாதங்களும் இல்லை. அத்துடன் தற்போது அடையாளப்படுத்தப்படும் அரசியல் சக்திகள் மற்றும் கட்சிகளின் ஜனநாயகம் குறித்தோ அல்லது தேசிய அளவிலான ஜனநாயகம் குறித்தோ அதிகம் விவாதிப்பதில்லை. இவற்றை அரசியல் என்பதா? அல்லது எதிர்ப்பு என்பதா?
எனவே கிழக்கு மாகாண மக்கள் பிரதேசவாதம் காரணமாகப் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதைத் தற்போது முன்னிறுத்தவதற்கான காரணம் பிரதேசவாதம் எனக் குற்றம் சாட்டுபவர்களும் அவை குறித்துப் பேசுவோர்களும் ஜனநாயகத்தில் இன்னமும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.
சாதி மேலாதிக்க அரசியல் குறித்து அதிகம் சிலாகித்து வரும் கிழக்கு அரசியலின் பிரிவினர் யாழ். மேலாதிக்க அரசியலை விட மிக மோசமான சிங்கள பௌத்த மேலாதிக்கம் குறித்து அடக்கி வாசிப்பதும் அல்லது அபிவிருத்தி அரசியல் என்ற போர்வைக்குள் மறைந்து செயற்படுவதும் அவநம்பிக்கைகளையே அதிகம் தருகிறது.
தமிழரசுக் கட்சிக்குள் அல்லது கூட்டமைப்பிற்குள் ஜனநாயகம் இல்லை எனப் பேசுவதற்கான அல்லது அதற்கான போராட்டங்கள் உள்ளே நடத்தப்பட்டன என வாதிடுவதற்கான எந்த ஆதாரங்களும் இவர்களிடம் இல்லை. கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் அரசியல் ஜனநாயக விழுமியங்களைப் புறக்கணிப்பதாகவும், தமிழ்த் தேசியம் என்ற பெயரில் சமூக உட்கூறுகளின் ஜனநாயக உரிமைகளுக்கு வாய்ப்புகள் அளிக்காமலும், அதே போலவே பரந்த பிராந்திய அளவிலான ஜனநாயக கட்சிக் கட்டுமானங்களைக் கொண்டிராத காரணத்தால் புறக்கணிப்புகள் பல்வேறு வகைகளில் நடந்தேறுகின்றன என்பதே உண்மை நிலையாகும்.
ஜனநாயக அடிப்படைகளையும், வெளிப்படைத் தன்மைகளையும் கொண்டிராத அரசியல் கட்சிகள் அல்லது குழுக்கள் சகல சமூகங்களையும் இணைத்துச் செல்லும் பண்பை இழந்து விடுகின்றன. கிழக்கு சமூகத்தின் கோரிக்கைகள் ஜனநாயக அடிப்படைகளைக் கொண்டிருக்கும் போதுதான் வடக்கினதும், சிங்கள ஜனநாயக சக்திகளினதும் ஆதரவைப் பெற முடியும். அதற்கான அடிப்படைகள் இதுவரை தோற்றுவிக்கப்படவில்லை.
வடபுல அரசியலின் நேர்மறை அரசியல்
ஐம்பதுகளில் நாட்டில் காணப்பட்ட மத எழுச்சிகள், சிங்களப் பகுதிகளிலும், தமிழ்ப் பகுதிகளிலும் பாரிய எழுச்சிகளை ஏற்படுத்தின. சிங்களப் பகுதிகளில் பிரிவேனா பாடசாலைகளும், தமிழ்ப் பகுதிகளில் சைவ பாடசாலைகளும் தோற்றுவிக்கப்பட்டன. அதே போலவே கிறிஸ்தவ பாடசாலைகளும் தோற்றின. சமூக மாற்றம் இவ்வாறு நிகழ்ந்த நிலையில் ஆறுமுக நாவலரைப் பன்முக அடிப்படையில் அணுகாமல் யாழ். மேலாதிக்கத்தின் அடையாளமாக வர்ணிப்பது வரலாற்றைப் புரிந்து கொள்ள மறுப்பதாகவே உள்ளது. நாம் இன்று மகாவம்சம் குறித்து சிங்கள பெருந்தேசியவாதிகள் விளக்கமளிப்பதை ஏற்றுக்கொள்வதற்கு ஒப்பானதாகவே இவ் வாதங்கள் அமைகின்றன.
சில அடிப்படைகள்
இங்கு சில கருத்துக்கள் தெளிவாக முன்வைக்கப்பட வேண்டியுள்ளன. அதாவது தமிழ் அரசியலில் பிரதேச வேறுபாடுகள் இல்லை என நிராகரிக்க முடியாது. ஆனால் இப் பிரதேச வேறுபாடுகள் என்பது தமிழ்ச் சமூகத்தில் இயல்பாகவே உள்ள சாதி ஆதிக்க நிலையே பிரதான காரணம் என முன்வைக்கும் ஒற்றை நிலை விவாதங்கள் ஏற்க முடியாதன. சாதி ஆதிக்க சக்திகள் மத்தியில் அவ்வாறான போக்கு இல்லை என மறுதலிக்க முடியாவிடினும், இப் பிரதேசவாத சிந்தனையை தமிழ் மக்களின் ஒட்டுமொத்த சிந்தனையாக தொடர்ந்தும் இன்றுவரை முன்வைப்பது, அங்கு எழுந்து வரும் போராட்ட உணர்வுகளை இவ்வாறான சிறு வரையறைக்குள் அடக்க முயற்சிப்பது பரந்த அரசியல் விவாதத்திற்கு உதவாது.
கிழக்கிற்கென புதிய அரசியல் வியூகத்தைத் தோற்றுவிக்க யாழ் மேலாதிக்கத்தை முன்னிலைப்படுத்துவது மிக மலிவான அரசியல் மட்டுமல்ல, அம் மக்கள் தொடர்பான முற்போக்கு இயங்கு நிலையை அவமானப்படுத்துவதாகும். அங்கு தமிழ் அரசியலில் காணப்படும் ஜனநாயக மறுப்பு அரசியலை முன்னிலைப்படுத்த அல்லது அதனை அடையாளப்படுத்தத் தவறியிருப்பது மிகப் பலவீனமான அணுகுமுறையாகும்.
வடபகுதி அரசியல் என்பது எப்போதுமே பல சமூக சக்திகளின் போராட்டக் களமாக இருந்து வருகிறது. சாதி ஒழிப்புப் போராட்டம் முதல் ஏகாதிபத்திய எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு மற்றும் சிங்கள பௌத்த பேராதிக்க எதிர்ப்பு வரையான அரசியலின் களமாக அது உள்ளது. ஓர் சமூக மாற்றத்திற்கான போராட்ட களமாக பல்வேறு பிற்போக்கு கூறுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் செயற்படுகிறது. இவ்வாறான மிக முற்போக்குப் பாத்திரத்துடன் தம்மை அடையாளப்படுத்தாமல் மரணப்படுக்கையை நோக்கிச் செல்லும் யாழ். மேலாதிக்க சிந்தனையுடன் மல்லுக்கட்டுவது இலகுவான எதிரியைச் சிருஷ்டித்து, கற்பனை வடிவிலான விவாதத்தை, அவசியமற்ற போராட்டத்தை நகர்த்துவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
மேலாதிக்க கருத்தியல்
இவை யாழ். மேலாதிக்கத்தின் தாக்கங்களைக் குறைத்து மதிப்பிடுவது என்பதை விட அதைவிட மிக மோசமான மேலாதிக்கம் நாட்டின் சகல மக்களின் இருப்பிற்கும் அச்சுறுத்தலாக வளர்ந்து வருகையில் அவை குறித்து எவ்வித பாரிய தாக்குதல்களும் அற்றுக் கடந்து செல்ல முயற்சிப்பது புதிய அரசியல் அணுகுமுறைகளில் நியாயமான சந்தேகத்தை எழுப்புகிறது.
‘அரங்கம்’ என்ற ஊடகமும், பிரதேசவாதமும்
இக் கட்டுரையைத் தாங்கி வரும் அரங்கம் ஊடகம் குறித்தும் அதன் அரசியல் இலக்குக் குறித்தும் கட்டுரைகள் வெளிவந்தன. குறிப்பாக பிரதேச வாதத்தினை ஊக்குவிப்பதாக குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஏற்கெனவே தமிழ் அரசியலில் காணப்படும் பல்வேறு அரசியல் சிக்கல்களை இந்த ஊடகத்தில் வெளியான பல கட்டுரைகள் உணர்த்தியுள்ள நிலையில் ‘அரங்கம் ஒரு பிரதேசவாத ஊடகம்?’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியிருந்தது. இக் கட்டுரையைப் படித்ததும் பல்வேறு கேள்விகள் என்னுள் எழுந்தன. குறிப்பாக இவ் மின்னியல் ஊடகத்தின் இலக்கு ஏன் கேள்விக்குட்படுத்தப்படுகிறது? உண்மையில் பிரதேசவாதத்தினை உற்சாகப்படுத்துகிறதா? அல்லது அப் பிரதேசத்தின் தனித்துவமான அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார விழுமியங்களைப் பரந்த மக்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறதா? அல்லது அது ஓர் அரசியல் கருத்தியலை ஆதரித்துச் செயற்படுகிறதா? என்ற கேள்விகள் எழுந்தன.
இந்த இலத்திரனியல் ஊடகத்தின் ஆசிரியரோடு மிகக் கணிசமான காலம் தொடர்புள்ளவன் என்ற வகையிலும், அவரது ஊடக பரந்த அறிவும், தாம் வாழ்ந்த மண்ணின் உயற்சியை, தனது மக்கள் அனுபவிக்கும் வாழ்வுச் சுமைகளை ஊடக மூலம் வெளிப்படுத்த எண்ணுவதுடன் காத்திரமான உலக மாற்றங்களை தமிழ் சமூகத்திடம் எடுத்துச் செல்லவேண்டும் என்ற வேணவாவைத் தவிர எதையும் காணவில்லை.
வரலாற்று மாற்றங்கள்
தற்காலத்திலும் குறிப்பாக கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நவதாராளவாத பொருளாதார சிந்தனைகள் நாடு தழுவிய அடிப்படையில் செயற்படும் வேளையில், இந்த 40 ஆண்டுகளில் சுமார் 30 ஆண்டுகள் தமிழ் சமூகம் போருக்குள் சிக்கிய நிலையில் மற்றும் இவ்வாறான சாதிய மேலாதிக்க சிந்தனையை வளர்க்கும் அல்லது ஊக்குவிக்கும் சமூகப் பிரிவினரான தமிழ் மத்தியதர வர்க்கத்தின் பெரும்பகுதி புலம்பெயர்ந்து சென்றுள்ள நிலையில் சாதிய ஆதிக்க சிந்தனையை வளர்ப்பதற்கான ஆதிக்க கட்டுமானங்களும் அழிந்தே உள்ளன. இந் நிலையில் தொடர்ந்தும் சாதி அடிப்படையிலான மேலாதிக்க சிந்தனையின் ஆதிக்கம் அரசியலில் இருப்பதாக முன்வைக்கும் விவாதங்கள் பொருத்தமானதாக இல்லை. ஏனெனில் சமூக நிறுவனங்களே ஆதிக்கச் சிந்தனைகளின் இருப்பிடங்களாக உள்ளன. இவை மாற்றமடையும்போது அல்லது இல்லாதொழியும்போது இச் சிந்தனைகள் வாழ்வதற்கான தளம் அற்றுப் போகிறது. இவை சாதி ஆதிக்க சிந்தனை இல்லை என்பதாகவோ அல்லது பிரதேசவாத மனோபாவம் இல்லை என்பதாகவோ அர்த்தம் கொள்ள முடியாது.
கிழக்கு அரசியலும், ஜனநாயக அம்சங்களும்
தமிழ் அரசியலில் குறிப்பாக பெருந்தேசியவாத சிந்தனைகள் ஆழமாக விதைக்கப்படும்போது இதர சமூகங்களிடையே இவ்வாறான மாற்றங்கள் தவிர்க்க முடியாமல் எழுகின்றன. ஒரு புறத்தில் தேசிய அளவில் தேசிய சிறுபான்மை இனங்கள் எந்த அடிப்படையில் இணைந்து செயற்படுவது? தேசிய அரசியலை எந்த அளவில் ஜனநாயகத்தை நோக்கி மாற்ற உதவுவது? இனவாதத்தைக் கட்டுப்படுத்துவது எவ்வாறு? தேசிய பொருளாதாரக் கட்டுமானம் என்பது சகல சமூகங்களின் பங்குபற்றலுக்கான வாய்ப்புகளை வழங்குவதற்கான பொருளாதார, அரசியல் கோட்பாட்டு அம்சங்கள் என்ன? தற்போதுள்ள நிலமைகளை மாற்றுவதற்கான உபாயங்கள் என்ன? என்பது போன்ற விவாதங்கள் சகல அரசியல் சக்திகள் மத்தியிலும் எழுந்துள்ளன.
வரலாறு உணர்த்தும் பாடம்
யாழ். மேலாதிக்க சிந்தனையை மதவாதம், இனவாதத்துடன் ஒப்பீடு செய்யும் அளவிற்கு சில கருத்துக்கள் அங்கு முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால் தென்னிலங்கை அரசியல் அதைவிட மோசமாக இருப்பதையும், அதன் பக்கமாக சில கிழக்கிலங்கை அரசியல்வாதிகள் சரிந்து செல்வதையும் மிக இலகுவாகவே தட்டிக் கழித்துச் செல்வதாகவே அவை காணப்படுகின்றன. விவாதங்கள் ஒரு புறத்தில் சாதி மேலாதிக்கத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும் அதேவேளை, மறு புறத்தில் அதைவிட மோசமான மேலாதிக்கம் குறித்து அலட்சியமாக இருப்பது அல்லது இலகுவாகவே கடந்து செல்வது என்பது கிழக்கின் புதிய அரசியல் சிந்தனைக்கான களத்தைத் திறப்பதற்கு முதலில் முன்னால் உள்ள எதிரியை அவமானப்படுத்துவது அதாவது ஏற்கெனவே ஆதிக்கத்திலுள்ள கருத்தாடலை நிராகரிக்கும் தந்திரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை 1978இல் நிறைவேற்று அதிகாரமிக்க சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதற்கு முன்பதாக பாராளுமன்ற ஆட்சி தோல்வியடைந்துள்ளதாக ஜே ஆர் 1977களில் முன்வைத்த வாதங்களுக்கு ஒப்பானதாகும். இவ் விவாதங்களில் ஜனநாயகத்தின் அடிப்படைகள் தொலைக்கப்படுகின்றன. கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான அரசியலில் காணப்படும் ஜனநாயக அம்சங்கள் எதுவுமே காணப்படவில்லை. இதுவே இன்றைய அரசியல் குறித்த அணுகுமுறைகள் பற்றிய மயக்க நிலையாகும். ஜனநாயகமும், வெளிப்படைத் தன்மையும் அரசியலில் பின்பற்றப்படாத வரை எந்த விவாதமும் காலூன்ற முடியாது.
கிழக்கு மாகாண அரசியல் புதிய அடித்தளங்களை நோக்கிச் செல்ல வேண்டும். ஜனநாயக விழுமியங்களுக்கான அடிப்படைகள் அற்ற அரசியலே தமிழ் அரசியலின் சாபக்கேடாக இன்றுவரை தொடர்கிறது. இந் நிலையில் யாழ். மேலாதிக்க, மேட்டுக்குடி வாதங்கள் மலட்டுத் தன்மையையே கொண்டிருக்கும். இவை எதனையும் பிறப்பிக்க மாட்டா. இவற்றை வெறுமனே கூட்டமைப்பைப் பேய், பூதம் எனக் கூறி விரட்டி அதில் அரசியல் செய்ய முடியாது. மிக அழுத்தமான ஜனநாயக விழுமியங்களுடனான விவாதங்கள் அவசியம்.
கிழக்கு மாகாண அரசியலுக்கான அடித்தளங்கள் என்ன? தேசிய இனப் பிரச்சனையில் எடுத்துள்ள நிலைப்பாடு என்ன? தேசிய இனப் பிரச்சனையில் மிகவும் மோசமான நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கும் அரசு குறித்து எமது பார்வை என்ன? பாராளுமன்றம், ஜனாதிபதி ஆட்சிமுறை என்பவற்றில் எமது தெரிவு என்ன? அபிவிருத்தி அரசியலையும், அடிப்படை அரசியல் உரிமை குறித்தும் எடுக்க வேண்டிய கொள்கைகள், மூலோபாயங்கள் என்ன? வடக்கு, கிழக்கின் இணைப்பின் மூலக்கூறுகள் என்ன? வெறுமனே கூட்டமைப்பைத் திட்டித் தீர்ப்பது அல்லது அவர்களை யாழ். மேட்டுக்குடிகளாக வர்ணித்து அனைத்து மக்களையும் அவ்வாறாக ஒரு கூடைக்குள் போட்டு அரசியல் புனைவது இன்னொரு ஏமாற்று அரசியலாகும். இச் சகதிக்குள் இனியும் மக்களை அழைத்துச் செல்வது ஓர் நேர்த்தியான அரசியல் பணியின் ஆரம்பமாக அமைய முடியாது.