இலங்கையை அழிவுப்பாதயில் கொண்டு செல்லும் சக்தி?

இலங்கையை அழிவுப்பாதயில் கொண்டு செல்லும் சக்தி?

  — கருணாகரன் — 

இலங்கையில் அமைதிக்கும் சமாதானத்துக்கும் அரசியல் தீர்வுக்குமாக வேலை செய்வது மிக மிகக் கடினமானது. இனவாதத்தைத் தொடருவது இலகுவானது. இதை விளங்கிக் கொள்வதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் ஒன்றும் தேவையில்லை. அதிகமாகப் படித்திருக்க வேண்டியதுமில்லை. மிகச் சாதாரணமாகக் கவனித்தாலே இதைப் புரிந்து கொள்ள முடியும். 

முதலில் நீங்கள் படிக்கின்ற பத்திரிகைகள், இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றைக் கவனியுங்கள். இதில் 99 வீதமானவையும் சமாதானத்தைக் குறித்து – அதை வலியுறுத்திச் செய்திகளை வெளியிடுவது குறைவு என்பதைக் கண்டு பிடித்து விடலாம். அத்தனையும் இனவாத அடிப்படையிலேயே செய்திகளை எழுதுகின்றன – தயாரிக்கின்றன. இதற்குக் காரணம், பெரும்பாலான ஊடகவியலாளர்கள் இனத்துவ அடிப்படையிலேயே இயங்குகிறார்கள். இவற்றில் அரசியல் ஆய்வுகளை எழுதுவோரில் 99 வீதமானவர்களும் இன நிலைப்பட்டே தங்கள் கருத்துகளையும் நிலைப்பாடுகளையும் முன்வைக்கின்றனர் என்பதே. மறந்தும் சமாதானத்துக்கான வலியுறுத்தலையும் அதற்கான வழிப்படத்தையும் அதற்கான அர்ப்பணிப்பையும் இவர்கள் முன்வைப்பதில்லை. வேண்டுமென்றால் மாறுதலாக சமாதானத்துக்கும் தீர்வுக்குமாக முன்வைக்கும் ஊடகங்களையும் ஆய்வாளர்களையும் அரசியல் கருத்துரைஞர்களையும் ஒரு சிறிய பட்டியிட்டுப் பாருங்கள். சமாதானத்துக்கான முயற்சிகள் எவ்வளவு பலவீனமானவை என்று தெரியும். 

இது ஒரு பக்கமென்றால் அடுத்த பக்கத்தில் நீங்கள். அதாவது, உங்களைப் பற்றியது. அமைதிக்கும் அரசியல் தீர்வுக்கும் சமாதானத்துக்குமாக நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் ஒவ்வொரு குடும்பமும் எவ்வளவு வேலைகளைச் செய்கிறீர்கள்? இதற்காகக் கொஞ்ச வேலையாவது நாம் செய்ய வேண்டும் என்ற  சிந்தனையாவது உங்களிடம் உள்ளதா? குறைந்த பட்சம் இனவாத சக்திகளை விட்டு உங்களைத் தூர வைக்க வேணும் என்ற எண்ணமாவது உங்களிடம் உள்ளதா? மெய்யாகவே அமைதிக்கும் சமாதானத்துக்கும் அரசியல் தீர்வுக்குமாகச் சிந்திக்கின்ற –இனவாதமற்ற சக்திகளை ஆதரிக்க வேண்டும் என்று சிந்தித்துள்ளீர்களா? அவ்வாறான சக்திகளை இனங்கண்டுள்ளீர்களா? அவை சிறிய சக்திகளாக இருந்தாலும் அவற்றின் மீது நம்பிக்கை வைத்து அவற்றை வளர்த்தெடுக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? நீங்கள் வீட்டில் ஒரு தென்னையை வளர்க்கும்போது அது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பயன் தரும் என்று தெரிந்துதானே நம்பிக்கையோடு அதைச் செய்கிறீர்கள். பிறகு அந்தத் தென்னை உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் தலைமுறைகளுக்கும் அது பயன் தருகிறது. அப்படியென்றால் சமாதானத்துக்கான – மக்கள் அரசியலுக்கான சக்திகள் – கட்சிகள் – சிறியவை என்றாலும் அவற்றை ஒரு தென்னையைப்போல, பனையைப் போல நீடித்துப் பயன்தரக் கூடியவையாகக் கருதி அவற்றை நாம் ஆதரிக்க வேண்டும். அப்படிச் செய்கின்றவர்கள் எத்தனை பேர்? 

இவற்றுக்கான பதிலைக் கண்டாலே நாம் அரசியல் தீர்வுக்காகவும் மெய்யான சமாதானத்துக்குமாக வேலை செய்கிறோம், அதை நோக்கி நகர்கிறோம் என்று அர்த்தமாகும். 

ஆனால் அப்படியல்ல அல்லவா! 

ஏனென்றால் ஒவ்வொரு தேர்தலின்போதும் வெற்றியடைவது இனவாதச் சக்திகளே. அதனால்தான் இனவாதமும் தீர்வுக்கு எதிரான போக்கும் வளர்கிறது. இனவாதிகள் கொழுக்கிறார்கள். இனவாதத்தை வளர்க்கும் ஊடகங்கள் செழிக்கின்றன. இதில் ருசிப்படப்பட ஒவ்வொரு கட்சியும் ஏட்டிக்குப் போட்டியாக இனவாதத்தை வளர்க்கும் விதமாகவே பேசுகின்றன. அந்தப் போக்கிலேயே செயற்படுகின்றன. இனவாதத்தில் உள்ளோடியிருக்கும் ஏட்டிக்குப் போட்டித்தன்மை என்பது கேட்பதற்கும் பார்ப்பதற்கும் நன்றாகவே இருக்கும். ஏனென்றால் அதிலே உள்ள எதிரும் புதிருமான தன்மை என்பது நம்முடைய ரத்தத்தைச் சூடாக்குவது. இரத்தம் சூடாகுவது என்பதே ஒரு போதைதான். மதுவை நாம் பருகும்போது உண்டாகும் கிளர்ச்சியைப் போலத்தான் இதுவும். 

இல்லையென்றால் இலங்கைத்தீவிலே இனவாதத்தை வளர்த்து போர் வரை அதைக் கொண்டு வந்து பெரும் அழிவில் இந்த நாட்டை விட்டதற்கு மூன்று பெருங்கட்சிகள் பொறுப்பெடுக்க வேண்டும். ஒன்று ஐ.தே.க. மற்றது சிறிலங்கா சுதந்திரக்கட்சி. மூன்றாவது தமிழரசுக்கட்சி. இவை மூன்றும்தான் ஏதோ வகையில் மறுபடியும் இப்பொழுது அரசியல் அரங்கில் தலைமைச் சக்திகளாக உள்ளன. அப்படியென்றால் எப்படி நாடு உருப்படும்? 

இப்பொழுது உங்களுடைய இதயத்தைத் தொட்டுச் சொல்லுங்கள், இலங்கையில் இனவாதமல்லாத, மெய்யாகவே அரசியல் தீர்வுக்காக உழைக்கின்ற கட்சிகள் எவை என்று? எந்தத் தலைவர்கள் அமைதிக்கும் சமாதானத்துக்குமாகத் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள் என்று. எது வந்தாலும் இனவாதத்தைக் கடந்து ஒரு நீதியான தீர்வை, சமாதானத்தை எட்டுவோம், இந்த நாடு ஒரு பல்லின சமூகங்கள் வாழ்கின்ற நாடு,பன்மைத்துவமே இங்கே பொருத்தமான –சரியான தீர்வு என்று நம்புகின்ற – அதை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்ற தலைவர்கள் யார்? கட்சிகள் எவை? இந்த நோக்கில் இவை இதுவரையில் ஒரு வார்த்தையேனும் பேசியிருக்கின்றனவா? இப்போது கூடப் பேசத் தயாரா? இன்னும் பௌத்தத்துக்கு முன்னுரிமை என்று சொல்லிக் கொண்டே சிங்களத்தரப்பிலுள்ள அநேக கட்சிகளும் இயங்குகின்றன. சிங்கள இடதுசாரிகள் கூட இதைக் கடந்து சிந்திக்கத் தயாரில்லை. இது தவறு. இப்படி ஒரு மதத்துக்கு முன்னுரிமை கொடுப்பதென்பது நாட்டை அழிக்குமே தவிர, பாதுகாக்காது என்று சொல்வதற்கு எந்தக் கட்சியும் தயாரில்லை. எந்தத் தலைவரும் தயாரில்லை. இளைஞர்களை அதிகமாகக் கொண்ட ஜே.வி.பியினால் கூட இதற்கு முடியவில்லை. 

தமிழ்த்தரப்பிலும் இதுதான் நிலை. சமஸ்டி, ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்று வெளியே சொன்னாலும் நடைமுறையில் செயற்பட்டுக் கொண்டிருப்பது அதற்கு மாறாகவே. தனி இலக்கை நோக்கியே. இந்தத்தனி இலக்கு எதுவும் இனிச் சாத்தியமில்லை என்று உங்களுக்கும் தெரியும். இந்தத் தலைவர்களுக்கும் தெரியும். துயரம் என்னவென்றால் இவ்வளவு பேரழிவைச் சந்தித்த அனுபவங்களுக்குப் பிறகும் பழியுணர்ச்சியே மேலோங்கியுள்ளது. பகை மறப்பல்ல. சமாதானம் அல்ல. இளைய தலைமுறையும் புத்தியைத் தீட்டுவதற்குப் பதிலாகக் கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் தெரிந்து கொண்டும் ஒரு பொய் நாடகத்தை ஒவ்வொருவரும் ஆடிக் கொண்டேயிருக்கிறோம். 

இப்படி எல்லோரும் சமாதானத்துக்கும் தீர்வுக்கும் எதிரான திசையில் நின்று கொண்டு அமைதியே வா. சமாதானமே மலர். தீர்வே கனிந்து விடு என்றால்…எப்படி அது கிடைக்கும்? 

சிலர் சொல்கிறார்கள் வெளிச்சக்திகளின் தலையீட்டினால் நிச்சயமாக இலங்கைத்தீவில் சமாதானம் எட்டும் என்று. இதைக் கூடுதலாக நம்புவது தமிழர்கள். ஆனால் இந்த வெளிச்சக்திகள் எது? இந்தியாவா? இந்தியா என்றால் அது கொண்டு வந்த மாகாணசபையே 34 வருசங்களாகியும் அதிகாரங்களைச் சரியாகப் பெற முடியாத நிலையில் உள்ளது. அப்படியென்றலால் மேற்குலகமா?பலஸ்தீனத்தில் இப்போது நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தாலே புரியும். மேற்குலகின் கரிசனைகள் எப்படி எப்படியானவை என்று. பெரிதாக நம்பப்பட்ட ஐ.நா வோ இலங்கையின் இனப்படுகொலை நடந்தது என்று கூற்றை ஏற்றுக்கொள்ளாமல் அது போர்க்குற்றமே என்று சாதுரியமாகத் தவிர்த்துக் கொண்டிருக்கிறது. இது மீள நிகழாமல் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறதே தவிர அதை உறுதிப்படுத்தும் பொறிமுறைகள் எதையும் அழுத்தமாகப் பிரயோகிக்கவில்லை. அதற்குத் தயாருமில்லை. அப்படியென்றால் இனப்பிரச்சினைக்குத் தீர்வும் சமாதானமும் எப்படி வரும்? எங்கிருந்து வரும்? 

எனவேதான் துணிந்து சொல்கிறோம், இலங்கையில் சமாதானம் இப்போதைக்கு இல்லை என்று. சமாதானம் இல்லை என்றால் தீர்வும் இல்லை. தீர்வு இல்லை என்றால் அமைதி இல்லை. இந்த அமைதியற்ற நிலையையே நாம் எல்லோருமாக வளர்த்துக் கொண்டிருக்கிறோம். 

போர் முடிந்து பன்னிரண்டு ஆண்டுகளாகி விட்டன. இது ஒரு தசாப்தத்துக்கும் மேலான காலம். இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளிலும் அமைதியை நோக்கியும் சமாதானத்தை நோக்கியும் தீர்வை நோக்கியும் ஒரு படியில் கூட ஏற முடியவில்லை. அதற்காக ஒரு தலைவர் கூடத்தன்னைத் தியாகம் செய்யவில்லை. ஒரு பத்திரிகை கூட இயங்கவில்லை. இப்படியொரு நிலை உலகில் வேறு எங்கும் நடக்காது. இப்படியொரு வாய்ப்பை இழந்த நாடு வேறொன்றுமில்லை. 

இதனால்தான் இலங்கை வல்லரசுகளின் விளையாட்டுத்திடலாகவும் போட்டிக்களமாகவும் மாறியுள்ளது. நாடு பொருளாதாரத்தில் அடிமை நிலையில் நீடிக்கிறது. நமக்குள் ஐக்கியப்படவும் அமைதி கொள்ளவும் தயாரில்லாமல் ஒரு சாரார் இந்தியாவின் பக்கமாகவும் ஒரு சாரார் சீனா சார்பாகவும் நிற்கிறார்கள். இது மாதிரிச் சிரிப்புக்கும் முட்டாள் தனத்துக்குமான சங்கதி அன்றி  வேறென்ன?