‘வீட்டுக்குள் புகுந்த ஆமையும், நாட்டுக்குள் புகுந்த சீனாவும்’ — அது அந்தக்காலம்… (காலக்கண்ணாடி – 39)

‘வீட்டுக்குள் புகுந்த ஆமையும், நாட்டுக்குள் புகுந்த சீனாவும்’ — அது அந்தக்காலம்… (காலக்கண்ணாடி – 39)

— அழகு குணசீலன் — 

போர்ட் சிட்டி சட்டமூலம் எதிர்பார்த்தது போன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு பழைய கதையாகிவிட்டது.  

எனினும் மழைவிட்டும் தூவானம் விடாத தொடர்கதையாக போர்ட் சிட்டி தொடர்பான செய்திகளும், விமர்சனங்களும் வந்து கொண்டே உள்ளன. 

கிழக்காசியாவில் பாரிய முதலீட்டுத் திட்டம் என்று அடையாளப்படுத்தப்படுகின்ற இத்திட்டவரைபு குறித்து அனைத்து பொருளாதார, அரசியல் கோட்பாட்டு மரபுசார் வாதங்களுக்கும் அப்பால் சமகால யதார்த்தத்தை உள்வாங்கி நடைமுறைப்- பிரயோகப் பொருளாதாரம் (APPLIED ECONOMICS) சார்ந்ததாக நோக்க விளைகிறது காலக்கண்ணாடி. 

“ஆசியாவின் எதிர்காலம்” என்ற மகுடத்தில் டோக்கியோவில் நடைபெற்ற காணொளி ஊடான மாநாட்டில் சீனாவுடனான உறவு தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஜனாதிபதி அளித்த பதில் என்ன? 

“சீனாவுடனான எங்கள் ஒத்துழைப்பு எமது ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் வர்த்தகப்பாதைகளுக்கு இணையானது. பல நாடுகளைப் போலவே சீனாவும் இலங்கைக்கு ஒரு முக்கிய முதலீட்டுச் பங்காளியாக இருந்து வருகிறது. அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற வகையில் எமது அபிவிருத்தி அபிலாஷைகளை விரைவாக கண்காணித்தும், எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அனைத்து பங்காளி நாடுகளின் ஆதரவைப் பெற இலங்கை விரும்புகிறது….” 

எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாச தனது பாராளுமன்ற விவாதத்தில் என்ன சொல்கிறார்? 

“துறைமுக நகரத்திட்டமானது எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சக்தி என்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம். எவ்வாறாயினும் இந்தச் சட்டமூலம் தேசத்துரோகத்தின் வெளிப்பாடாகவும் உள்ளது”. 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கை கூறுவது என்ன? 

“தேசிய முக்கியத்துவம் கொண்டதும், பொருளாதார நன்மைகளை நாட்டுக்கு தரக்கூடியதுமான திட்டம் இது. எப்படி இருந்தபோதும் அதிகளவான சலுகைகளை இது முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது.” 

இவர்களின் வார்த்தைகள் போர்ட்சிற்றியின் பொருளாதார முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டுகின்றன. இவை அரச, எதிர், துறை சார் சிவில் அமைப்புக்கள் சார்ந்த கருத்துக்கள். ஒரு பொருளாதார அபிவிருத்திதிட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தும் போது பாதகமான விளைவுகளை முற்றுமுழுதாக தவிர்க்க முடியாது. இங்கு முக்கியமானது அவற்றை எவ்வாறு குறைக்க அல்லது குறைந்தபட்சம் தவிர்க்க முடியும் என்பதும் அதற்கான செயற்பாடுகளும். இதனால்தான் பொருளாதாரத் திட்டமிடல் வல்லுனர்கள் தேறிய நன்மை அபிவிருத்தி பொருளாதார கோட்பாட்டை பயன்படுத்துகின்றனர்.  

1978 இல் ஐக்கிய தேசியக் கட்சியே சுதந்திர வர்த்தக வலயம் மூலம் வெளிநாட்டு முதலீட்டை கூவி அழைத்தது. இன்று அதே வேலையை பொதுஜன பெரமுன செய்கிறது. அன்று வரவேற்றவர்கள் இன்று எதிர்க்கிறார்கள், எதிர்த்தவர்கள் வரவேற்கிறார்கள். இவை எல்லாம் கட்சி அரசியல் மட்டுமன்றி பிராந்திய, சர்வதேச அரசியலின் தட்டிக்கொடுத்தலும் கூட. 

ஆக, காலக்கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. பொருளாதாரக் கொள்கைகள் காலச்சூழலுக்கும், சமூக, பொருளாதார, அரசியல் நடைமுறைக்கும் தேவைக்கும் ஏற்பமாறிக்கொண்டிருக்கின்றன.  

சர்வதேச மாற்றங்களோடு இணைந்து ஓடவேண்டிய தேவை அனைத்து நாடுகளுக்கும் உண்டு. இதற்கு இலங்கை மட்டும் விதிவிலக்காக இருக்க முடியாது. இல்லையேல் அது நின்ற இடத்திலேயே நிற்கும், மற்றைய நாடுகள் ஓடி முந்தி விடும். இப்போதும் இலங்கை ஆசியாவில் கடைசி பஸ்ஸில்தான் ஏறியிருக்கிறது. வெறும் கோட்பாட்டு அரசியல் பொருளாதாரத்திற்கு கொர்பச்சேவின் காலத்திலே பாடை கட்டப்பட்டு விட்டது. உலகம் உலகமயமாக்கம் என்ற ஒரே குடையின் கீழ் கூடியுள்ளது. 

மரபுசார் கோட்பாட்டு பொருளாதார சிறையில் இருந்து ரஷ்யாவும் சீனாவும், வியட்னாமும் ஏன்?கியூபாவும் மற்றும் நாடுகளும் வெளியேறி மூன்று தசாப்தங்கள் கடந்து விட்டன. இன்றைய உலகின் ஒரே உச்சரிப்பு உலகமயமாக்க சர்வதேச நடைமுறைப் பொருளாதாரம். 

தேசிய எல்லைகள் திறந்து விடப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், ஆசியான், தென்கிழக்காசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு, ஆபிரிக்க, வட, தென் அமெரிக்க கூட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார ஒத்துழைப்பு கூட்டுக்கள் எமக்கு சொல்லும் செய்தி இது. 

இன்றைய பிராந்திய, சர்வதேச சூழலில் ‘வீட்டுக்குள் புகுந்த ஆமையும், நாட்டுக்குள் புகுந்த அமெரிக்காவும்’ என்ற அன்றைய அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பயன்படுத்திய வார்தைப் பிரயோகங்களை இன்று சீனாவுக்கு பிரதியீடு செய்து பயன்படுத்தமுடியுமா? என்ற கேள்வியை எழுப்பவேண்டியுள்ளது. இந்த வாதத்தை முன் வைக்கும் எத்தனை பேருக்கு ஆமை கூட வீட்டு வளர்ப்பு பிராணியாகிவிட்டது என்பதை தெரிந்திருக்கிறார்கள். ஆமைகள் வீட்டுக்குள் வரவேற்கப்படுகின்றன. 

அமெரிக்காவின் மற்றைய நாடுகளின் இறைமையை அங்கீகரிக்காத, சர்வதேச பொலிஸ்காரனாக சுய இராணுவ, எண்ணெய் வள பொருளாதாரத்திற்காகவும், குளிர் யுத்தகால படையெடுப்புக்களையும் மேற்கொண்டதற்கு எதிராக கூறப்பட்ட “ஆமையும், அமெரிக்காவும்” கருத்தை இன்றைய போர்ட் சிற்றி பொருளாதார ஒப்பந்தத்திற்கு பொருத்த முடியுமா? 

சீனா மேற்குலகு போன்று காலனித்துவ சுரண்டல் மூலம் திருடப்பட்ட வளங்களை கொண்டு, கைத்தொழில் புரட்சியின் ஊடாக பொருளாதார வளர்ச்சி கண்ட நாடல்ல. அதனுடைய அனுபவம் விவசாயப் புரட்சியின் ஊடானது. இதனால்தான் அதன் அனுபவங்கள் உலகின் விவசாய நாடுகளுக்குப் பொருந்திப்போகின்றது. இது நவகாலனித்துவமாகக்கூட இருக்கலாம். பொருளாதார சிறப்புத் தேர்ச்சி உற்பத்தியிலும், மூலவளப் பற்றாக்குறையிலும் இன்றைய உலகில் தங்கியிருப்பது என்பது தவிர்க்க முடியாதது. 

கூப்பன் அரிசி பொருளாதார அரசியல்: 

பிரித்தானிய காலனித்துவம் சுதந்திரம் என்ற பெயரில் நாட்டை விட்டு வெளியேறியபோது கூப்பன் அரிசி பொருளாதாரமும், அரசியலும்தான் எச்சமாக கிடைத்தது. அதற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களும் மாறி மாறி கூப்பன் அரிசி அரசியலையே மேற்கொண்டன.  

இந்த நிலையில் இருந்து இன்னும் முற்றாக விடுபடாத நிலையே காணப்படுகிறது. இந்த பொருளாதார அரசியலில் இருந்து விடுபடுவதற்கான வழி என்ன? 

அன்றைய காலனித்துவ அல்லது சுதந்திரத்திற்கு பின்னரான கடந்த ஏழு தசாப்த பொருளாதார முறைமை இன்னும் இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையமுடியுமா? 

ஆம்! என்றால் பொருளாதாரப் பிரச்சினைகள் தலைக்குமேல் வெள்ளமாய் ஓடுவது ஏன்? இல்லை! என்றால் மாற்றத்திற்கான மாற்று முறைமை ஒன்றை கண்டறிவதில் உள்ள தவறென்ன? 

ஆக, சமகாலப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு சமகால நடைமுறைப் பொருளாதாரக் கொள்கை ஒன்றின் மூலம்தான் ஓரளவுக்காவது தீர்வுகாண முடியுமே அன்றி, சமகாலப் பிரச்சினைகளுக்கு கடந்த காலத்தில் காலாவதியான கொள்கை ஒன்றின் மூலம் தீர்வுகாண முடியாது. 

அந்த சமகால பொருளாதார அணுகுமுறை என்ன? அதுதான் உலகமயமாக்கலுக்குட்பட்டதும் தேசிய பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வைத் தேடக்கூடியதுமான கொள்கை. அதற்கான கொள்கைத் திட்டமிடலின் ஒரு வெளிப்பாடுதான் போர்ட் சிட்டி பாரிய முதலீட்டுத் திட்டம். 

இலங்கை அபிவிருத்தி அடைந்து வருகின்ற ஒரு நாடு என்ற வகையில் முதலீட்டுப் பற்றாக்குறையும், வேலையின்மையும், அதனூடான வறுமையும் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் கொண்டதாக உள்ளது. 

இது சுற்றோட்டப் பாணியிலான ஒரு நச்சு வட்டம். இதனை முதலீட்டு ஊட்டத்தின் ஊடான உற்பத்தி பெருக்கத்தின் மூலமே உடைக்க முடியும். 

இதனை இலங்கை போன்ற ஒரு வறிய நாடு தனியாக அல்லது அதிகளவு சுய பாதுகாப்பு கட்டுப்பாட்டுப் பொருளாதாரக் கொள்கையின் ஊடாக எப்படிச் சாதிக்க முடியும்? ஆகவே பற்றாக்குறையான வளங்களை வெளிநாடுகளில் இருந்து உள்ஈர்ப்புச் செய்தும், மிகையாக உள்ள உள்நாட்டு வளங்களை பயன்படுத்தியுமே இதனைச் சாதிக்க முடியும். 

இதன் விளைவே வெளிநாட்டு முதலீடும், முதலீட்டாளர்களும் உள்நாட்டு நிலவளம், மனிதவளத்துடன் இணைக்கப்படுவதனூடான பொருட்கள், சேவைகள் உற்பத்தியாக்கம். போர்ட் சிட்டியின் நோக்கம் இதுவே. இவ்வாறான பாரிய முதலீடுகள் மூலம்தான் மேற்குறிப்பிட்ட நச்சுவட்டத்தை முற்றாக முறிக்காவிட்டாலும் ஆகக்குறைத்தபட்சமாவது வளைக்க முடியும். 

இதன்மூலமே கூப்பன் அரிசி பொருளாதார அரசியலில் இருந்து படிப்படியாக விடுபடமுடியும். சீனா உலகத்திற்குள்ளே புகுந்து இருக்கின்ற நிலையில் ஒரு சிறிய வறிய நாட்டுக்குள் புகுவதை தடுப்பது முதலீட்டை தடுப்பதாகவும், அபிவிருத்தியை தடுப்பதாகவும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வைத்தடுப்பதாகவும் அமையுமா? இல்லையா? இன்றைய உலகு கொரோனா மூக்கு கவசம் முதல் அணுவாயுதம்வரை சீனாவில் தங்கியிருப்பது தான் யதார்த்தம். 

இதை உறுதிப்படுத்துவதாகவே ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், சிவில் அமைப்புக்கள் மற்றும் பிரதமரின் பாராளுமன்ற உரைகளும் கருத்துக்களும் அமைந்துள்ளன. அதேவேளை போர்ட் சிட்டியின் மறுபக்கத்தில் மறைந்துள்ள சமூக பொருளாதாரப் பாதிப்புக்களையும் இவர்கள் பார்க்கத் தவறவில்லை. 

போர்ட் சிட்டியினால் ஏற்படக்கூடிய சுற்றாடல், சமூகப் பாதிப்புக்களையும் விடவும், தமிழ்த்தேசியவாதிகளின் சிங்களதேசம் மீதான அக்கறை வேறுவகையில் அரசியல் வியாபாரமாக உள்ளது. சட்டரீதியான வாதங்களை நீதிமன்றம் ஒருவழிக்கு கொண்டுவந்துள்ள நிலையில் வேலை இல்லாமல் போனதால் எதையோ உளறுகிறார்கள். வேருவல இரத்தினக்கல் வர்த்தக முதலைகளினதும், கொழும்பு மொத்த வியாபார சாய்மனைக்கதிரை முதலாளிகளினதும் நலன் சார்ந்து முதன்மைப்படுத்தப்படுத்தி வாதிடுவது வேடிக்கையானது. 

புலம் பெயர்ந்த தமிழர்கள் முதலீடு செய்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வேறு. 

20வது திருத்தத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் இரட்டைப் பிரஜாவுரிமை பெறுவதற்கும் அரசியலில் ஈடுபடுவதற்கும் வழி இருந்தது. 

இங்கே இரட்டை பிரஜாவுரிமை மூலம் சலுகைகளுடன் முதலீடு செய்ய வாய்ப்புண்டு. அதை எந்த தீர்க்க தரிசனமும் இன்றி எதிர்த்தவர்கள், ஆதரித்தவர்களையும் திட்டியவர்கள் இப்போது பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுகிறார்கள். 

இவர்கள் யாரின் நலன்களுக்காக பேசுகிறார்கள்? இவர்களின் முதுகுக்குப் பின்னால் மறைந்து நிற்கின்ற சக்திகள் எவை? என்பது மெல்ல மெல்ல வெளிச்சத்திற்கு வருகிறது. 

போர்ட் சிட்டி சாதிக்க வேண்டிய சாதனைகளும், சந்திக்க வேண்டிய சவால்களும் 

பிரதமர் மகிந்த ராஜபக்ச பாராளுமன்றத்தில் கூறியது போன்று தாய்நிலப்பகுதியுடன் 660 ஏக்கர்கள் புதிய நிலம் போர்ட் சிட்டி முதலீட்டுத் திட்டத்தினால் இணைந்துள்ளது. காலிமுகத்திடல் வரையிலான இந்த புது நிலப்பரப்பே ஆணைக்குழுவின் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதி. 

எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் 80 பில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்படும்போது, 15 பில்லியன் டொலர்கள் வருவாயைப் பெறமுடியும் என மதிப்பீட்டறிக்கை கூறுகின்றது. 

மொத்தமாக 2 இலட்சம் வேலைவாய்ப்புக்கள் கிடைக்கின்ற நிலையில் 83 ஆயிரம் வேலைவாப்புக்கள் நிரந்தர வேலை வாய்ப்புக்கள். அத்தோடு 75 வீதமான வேலைவாப்புக்கள் உள்நாட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

போர்ட் சிட்டி முதலீட்டு வலயம் ஐந்து முக்கிய பிரிவுகளில் முலீட்டை உள்வாங்கவுள்ளது. சுப்பர் மார்க்கட்களைக் கொண்ட பாரிய வர்த்தக மையம், விளையாட்டு, உடற்பயிற்சி, குறிப்பாக நீரியல் விளையாட்டுக்கள், ஆரோக்கியம் சார்ந்த பிரிவு, ஆடம்பர விடுதிகளும் தொடர்மாடி குடியிருப்புக்களும், சர்வதேச நிதிச்சந்தை, பொதுப் பூங்கா என்பனவற்றை கொண்டிருக்கும். இவை அனைத்தும் உல்லாசப் பிரயாணிகளைக்கவரும் காந்தமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

ஜப்பான், சிங்கப்பூர், கொங்கொங், இந்தியா, கட்டார், துபாய் போன்ற பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள நாடுகள் இங்கு முதலீடு செய்வதற்கு அதிகம் ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

சர்வதேச நிதிச்சந்தையில் முன்னணி வகிக்கின்ற மேற்குலக நிதி நிறுவனங்களும் கொழும்பு நோக்கி நகர்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. வழங்கப்படும் சலுகைகளின் வகிபாகம் இங்கு முக்கியமானது. 

தொழிலாளர் நலன் பேணல் குறைபாடுகள், நியாயமான சம்பளமின்மை போன்ற பிரச்சனைகள் இந்த முலீட்டுவலயத்திலும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஆனால் மகாவலி அபிவிருத்தித் திட்டம், சுதந்திர வர்த்தக வலையம் போன்றவற்றில் பெற்றுக்கொண்ட அனுபவங்களை இலங்கை இங்கு பயன்படுத்த முடியும்.  

சூதாட்டம், களியாட்டம், இரவு வாழ்க்கை போன்றவற்றினூடான சமூகப் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருக்கும். பாலியல் தொழிலை சட்டரீதியாக்கல் பேசுபொருளாக உள்ள இன்றைய சூழல் இங்கு நினைவூட்டத்தக்கது.  

துருக்கி, எகிப்து, மத்திய கிழக்கு உள்ளிட்ட அரபுலக நாடுகளிலும், தாய்லாந்து, கியூபா போன்றவற்றிலும் உல்லாசப்பிரயாணிகளுக்காக வரையறுக்கப்பட்ட தனியான களியாட்ட, இரவு வாழ்க்கை பிரதேசங்கள் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நாடுகளின் தேசிய வருமானத்தில் இது கணிசமானது. 

இவை எல்லாவற்றையும் விடவும் சுற்றாடல் பாதிப்பு பிரச்சினை முக்கிய சவாலாக அமையும். கடலரிப்பு, நிலச்சரிவு, மீன்வள பாதிப்பு, இயற்கையாக ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்தும் சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புக்களும், நிபுணர்களும் கவனத்தை திருப்பி இருக்கிறார்கள். கொழும்பு முதல் கல்கிசை வரையான சாதாரண மீனவர்களின் நலன் குறித்து இங்கு கவலை தெரிவிக்கப்படுகிறது. 

பல் துறைசார்ந்த அமைப்புக்களின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை அல்லது போதுமான அவகாசம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் நிறையவே உள்ளன. சீனாவின் ஆட்சி அதிகார முறையில் இப்பிரச்சினைகள் தீர்க்கப்படும் முறை ஜனநாயக நாடோன்றின் அணுகுமுறையில் இருந்து வேறுபட்டது என்பதும், சீன அனுபவங்களும் KNOW – HOW அணுகுமுறைகளும் கொழும்புக்கு எந்தளவுக்கு பொருந்திப் போகும் என்ற கேள்விக்கு விடைதேடுவது மிகப் பெரிய சவாலாக அமையும். 

இலங்கையின் பாரிய சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கு ஒரு சாதனையாக எழுந்துள்ள போர்ட் சிட்டி, இலங்கைக்கு சில பிரச்சினைகளை சவாலாக்கவும் தவறாது. தேறிய நன்மை நடைமுறை பொருளாதார அபிவிருத்தி கோட்பாட்டு தராசு கதிக்கப்போவது எந்தப்பக்கம்….? மிதக்கப் போவது எந்தப்பக்கம்….?