கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கான நியாயம் (சொல்லத் துணிந்தேன் – 73)

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கான நியாயம் (சொல்லத் துணிந்தேன் – 73)

 — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 

கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவது சம்பந்தமாகத் தமிழர் தரப்பிலிருந்து பேசுகின்ற அத்தனை அரசியல்வாதிகளும் அது சம்பந்தமாக ஊடகங்களுக்குக் கருத்துக் கூறுகின்ற -கட்டுரைகள் வரைகின்ற பிரமுகர்களும் பிரதேச செயலகத்திற்குக் காணி மற்றும் நிதி அதிகாரங்கள் வழங்கப்படாமை குறித்தும் (அவை வழங்கப்பட வேண்டுமென்றும்) கணக்காளர் நியமனம் குறித்தும் தற்போது கல்முனை வடக்குப் பிரதேசத்திலுள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளைத் தனது நிர்வாகத்தின் கீழ் கொண்டு இயங்குகின்ற கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவது குறித்துமே பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள்.  

இதிலேயுள்ள அடிப்படைத் தவறைச் சுட்டிக்காட்டி கல்முனை வடக்குப் பிரதேச செயலகக் கோரிக்கையின் உண்மையான தாற்பரியத்தை விளக்கவே இப்பத்தி துணிகிறது. 

‘கல்முனை வடக்குப் பிரதேசம்’ என்பது தமிழ்ப் பெரும்பான்மைக் கிராமமான கல்முனைக் கிராமத்திற்கும் அதன் அயல் கிராமமான முஸ்லிம்களை நூறு வீதம் கொண்ட கல்முனைக்குடிக் கிராமத்துக்கும் இடையில் எல்லையாக விளங்கும் கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயிலுக்கு வடக்கே நகர்ப்புறம் உள்ளடங்கிய கல்முனைக் கிராமம், பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, மருதமுனை மற்றும் பெரிய நீலாவணைக் கிராமங்களை உள்ளடக்கியதாகும். இப்போது இப்பிரதேச ஆள்புல எல்லைக்குள் KP/59 இலக்கமுடைய கல்முனை முஸ்லிம் பிரிவு மற்றும் KP/59A இலக்கமுடைய (இஸ்லாமாபாத் +கல்முனை நகர்) ஆகிய சட்டரீதியற்ற உள்ளூராட்சி அமைச்சின் அங்கீகாரம் பெறாத இரு கிராம சேவையாளர் பிரிவுகள் உட்பட மொத்தம் 44 கிராம சேவகர் பிரிவுகள் அமைந்துள்ளன. இந்த 44 கிராம சேவையாளர் பிரிவுகளும் நிலத் தொடர்புள்ளவை. ஆனால், இவற்றில் 29 தமிழ்ப் பெரும்பான்மைக் கிராம சேவகர் பிரிவுகள் கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தின் கீழும், 15 முஸ்லிம் பெரும்பான்மைக் கிராம சேவகர் பிரிவுகள் முழுக் கல்முனைக்குடியையும் உள்ளடக்கிய கல்முனைத் தெற்குப் பிரதேச செயலகத்தின் கீழும் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த 15 முஸ்லிம் கிராம சேவகர் பிரிவுகள் தமக்குள்ளே நிலத் தொடர்பற்றவையாக அமைந்துள்ளதோடு 15 கிராம சேவகர் பிரிவுகளும் நிலத் தொடர்பற்ற முறையிலேயே கல்முனை தெற்குப் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ளன. இது நடைமுறையில் முரணான நிர்வாக நடைமுறையும் எப்போதுமே நிர்வாகச் சிக்கலையும் ஏற்படுத்துவதுமாகும். இது உண்மையில் 1989ஆம் ஆண்டு நிலவிய சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிகமான ஒரு ஏற்பாடாகும். அந்தத் தற்காலிக ஏற்பாடு இன்று வரை தொடர்கிறது. ஆனால் இது நிர்வாக ரீதியாகத் தவறானதாகும். கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை எல்லைகள் வகுத்து வர்த்தமானி அறிவித்தல் மூலம் சட்டரீதியாக ஒரு முழுமையான பிரதேச செயலகமாக ஆக்கும்போது இந்தப் பதினைந்து முஸ்லிம் பெரும்பான்மைக் கிராமசேவகர் பிரிவுகளையும் நிலத் தொடர்பற்ற முறையில் கல்முனை தெற்குப் பிரதேச செயலகத்தின் கீழ் தொடர்ந்து நிர்வகிக்க விடுவது எதிர்காலத்தில் பல நிர்வாகச் சிக்கல்களை ஏற்படுத்தும் விவகாரமாகிவிடும். மட்டுமல்ல எதிர்காலத்தில் தமிழ்-முஸ்லீம் உறவிலும் இது பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் காரணியாகவும் தொடர்ந்திருக்கும். இதனைத் தவிர்ப்பதற்கான மாற்று வழி ஒன்று உண்டு. 

அது என்னவெனில், இப் 15 முஸ்லிம் பெரும்பான்மை கிராமசேவகர் பிரிவுகளில் 8 பிரிவுகள் (மருதமுனை + பெரியநீலாவணை முஸ்லிம் பிரிவுகள்) நிலத் தொடர்புள்ளவையாகவும் 17443 மக்கள் தொகையைக் கொண்டதாகவும் (100% முஸ்லிம்) அமைந்துள்ள காரணத்தால் இந்த 8 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கிய பிரதேசத்திற்கு புதிய தனிப் பிரதேச செயலகம் ஒன்றை உருவாக்குவதாகும். அப்படி ஆக்கும்போது தற்போது கல்முனை தெற்குப் பிரதேச செயலகத்தின் கீழ் நிலத் தொடர்பற்ற முறையிலும் அதேவேளை கல்முனை வடக்குப் பிரதேச ஆள்புல எல்லைக்குள் நிலத் தொடர்புள்ள முறையிலும் விளங்கும் மீதி 07 முஸ்லிம் பெரும்பான்மைக் கிராமசேவகர் பிரிவுகளையும் உத்தேச கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தின் கீழ் கொண்டுவருவதுமாகும். அப்படி ஆக்கும்போது உத்தேச வடக்குப் பிரதேச செயலகத்தின் கீழ் ஏற்கெனவே உள்ள 29 தமிழ்ப் பெரும்பான்மைக் கிராம சேவகர் பிரிவுகளுடன் இந்த 07 முஸ்லீம் பெரும்பான்மைக் கிராமசேவகர் பிரிவுகளும் சேர்ந்து மொத்தம் 36 கிராம சேவகர் பிரிவுகள் நிலத் தொடர்புள்ள முறையிலேயே அமைய நேரிடும். இதில் 70% தமிழர்களும் 30% முஸ்லிம்களும் அமைவர். இது ஒன்றே தமிழர்களைப் பொறுத்த வரையிலும் முஸ்லிம்களைப் பொறுத்தவரையிலும் நடைமுறைச் சாத்தியமான திருப்தியான பேண்தகு தீர்வாகும். 

அப்படி ஆகும்போது 14 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்ட முழுக் கல்முனைக்குடிக் கிராமத்தையும் உள்ளடக்கிய கல்முனை தெற்குப் பிரதேசத்திற்கு 23380 மக்கள் தொகையைக் கொண்ட ( நூறுவீதம் முஸ்லிம்) தனியான ‘கல்முனை தெற்குப் பிரதேச செயலகம்’ தானாக அமையும். 

தமிழ்ப் பெரும்பான்மைப் பிரதேச செயலகமொன்று நூறு வீதம் தமிழர்களைக் கொண்டதாகவோ அல்லது முஸ்லீம் பெரும்பான்மைப் பிரதேச செயலகமொன்று நூறுவீதம் முஸ்லிம்களைக் கொண்டதாகவோ அமைய வேண்டும் என்பது அவசியமல்ல.  

உதாரணத்திற்கு, அம்பாறை மாவட்டத்தில் தற்போதுள்ள பொத்துவில் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் பொத்துவில் நகர், வட்டிவெளி, குண்டுமடு, கிறவல்குழி, தாமரைக்குளம், கள்ளியாப்பத்தை, செங்காமம், இன்ஸ்பெக்டர் ஏத்தம், ஊரணி, கனகர்கிராமம், கோமாரி, சங்கமன் கண்டி போன்ற தமிழ்க் கிராமங்கள் அடங்கியுள்ளன. இத்தமிழ் கிராமங்கள் யாவும் நிலத் தொடர்புள்ள வகையிலேயே அயலில் உள்ள 100 வீதம் தமிழர்களைக் கொண்ட திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவு புவியியல் ரீதியாகவிருந்தும் கூட இவை நிர்வாக ரீதியாக திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழ்க் கொண்டுவரப்படவில்லை. 

அதேபோல், தற்போதுள்ள சம்மாந்துறை முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் புதுவளத்தாப்பிட்டி, வளத்தாப்பிட்டி, மல்லிகைத்தீவு, மல்வத்தை, புதுநகர், கணபதிபுரம், தம்பிநாயகபுரம், திருவள்ளுவர்புரம், வீரமுனை,சம்மாந்துறை தமிழ்க் குறிச்சி, மட்டக்களப்புத் தரவை, கோரக்கர் போன்ற தமிழ்க் கிராமங்கள் அடங்கியுள்ளன. இவற்றில் சம்மாந்துறைத் தமிழ்க் குறிச்சி, மட்டக்களப்புத் தரவை, கோரக்கர் தவிர்ந்த ஏனைய கிராமங்கள் யாவும் நிலத் தொடர்புள்ள வகையிலே அயலிலுள்ள நாவிதன்வெளித் தமிழ்ப் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவுடன் புவியியல் ரீதியாக இணைக்கப்படக் கூடியதாகவிருந்தும், இவை நிர்வாக ரீதியாக நாவிதன்வெளிப் பிரதேச செயலகப் பிரிவின்கீழ் கொண்டுவரப்படவில்லை. 

இறக்காமம் முஸ்லீம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் மாணிக்க மடு என்னும் தமிழ்க்கிராமம் உள்ளது. இதனை நிலத் தொடர்பற்ற முறையிலே அயலிலுள்ள ஆலையடிவேம்பு தமிழ்ப் பெரும்பான்மைப் பிரதேசச் செயலகப் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும்படி எவரும் கேட்கவில்லை. 

அட்டாளைச்சேனை முஸ்லீம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப்பிரிவில் அடங்கியுள்ள திராய்க்கேணித் தமிழ்க் கிராமத்தை நிலத் தொடர்பற்ற முறையிலே ஆலையடிவேம்பு தமிழ்ப் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவின் அல்லது காரைதீவு தமிழ்ப் பெரும்பான்மைப் பிரதேச செயலகப்பிரிவின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும்படி எவரும் கேட்கவில்லை. 

நிந்தவூர் முஸ்லீம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப்பிரிவில் அடங்கியுள்ள அட்டப்பள்ளம் தமிழ்க் கிராமத்தை நிலத் தொடர்பற்ற முறையிலே அயலிலே உள்ள காரைதீவுத் தமிழ்ப் பெரும்பான்மைப் பிரேதேச செயலகப் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரும்படி எவரும் கேட்கவில்லை. 

மறுதலையாக, உதாரணத்திற்குக் காரைதீவு தமிழ்ப் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவுக்குள் மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி ஆகிய முஸ்லிம் கிராமங்கள் அடங்கியுள்ளன. அதே போல்தான் நாவிதன்வெளி தமிழ்ப் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவினுள் கணிசமான முஸ்லீம்கள் உள்ளடங்குகின்றனர். இவற்றை நிலத் தொடர்பற்ற முறையிலே அயலில் உள்ள முஸ்லீம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப்பிரிவின் நிர்வாகத்திற்குள் கொண்டு வரும்படி எவரும் கேட்கவில்லை. 

ஒரு காலத்தில் முழு சம்மாந்துறை தொகுதியையும் உள்ளடக்கியிருந்த சம்மாந்துறை முஸ்லிம் பெரும்பான்மைத் தனிப் பிரதேச செயலகப் பிரிவிலிருந்துதான் தேவை கருதி இன்னொரு புதிய தனியான இறக்காமம் முஸ்லீம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவும் புதிய தனியான நாவிதன்வெளித் தமிழ்ப் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவும் பின்னாளில் ஏற்படுத்தப்பெற்றன. அதேபோல், பழைய நிந்தவூர் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவிலிருந்துதான் புதிய தனியான காரைதீவுத் தமிழ்ப் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவு உருவானது. முழுக் கல்முனைத் தேர்தல் தொகுதியையும் உள்ளடக்கிய முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவிலிருந்துதான் இன்னொரு புதிய 100 வீத முஸ்லிம்களைக் கொண்ட தனியான சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவு ஏற்படுத்தப்பெற்றது.  

எனவே, புதிய பிரதேச செயலகப் பிரிவு ஒன்றை ஏற்படுத்துவது அதனோடு தொடர்புடைய மக்களின் சமூக பொருளாதார அரசியல் அபிலாசைகள் குறித்த தேவைப்பாட்டுடன் தொடர்புடையதே தவிர அதில் தேர்தல் அரசியல் தேவைகளுக்காக இன நல்லுறவைப் பாதிக்கும் வகையில் இனவாதத்தையோ மதவாதத்தையோ முதன்மைப்படுத்தக் கூடாது. 

உத்தேச கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை மேற்குறிப்பிட்டவாறு எல்லைகள் வகுத்து தரம் உயர்த்தும் விவகாரத்திலுள்ள அதாவது மருதமுனைக்கெனத் தனியான 100 வீத முஸ்லிம்களைக் கொண்ட மருதமுனை பிரதேச செயலக பிரிவையும், மருதமுனை தவிர்ந்த கல்முனை வடக்குப் பிரதேசத்திற்கென 70% தமிழர்களையும் 30% முஸ்லீம்களையும் கொண்டதாக உத்தேச கல்முனை வடக்கு பிரதேச செயலகம் அமையுமாறு அதனை எல்லைகள் வகுத்துத் தரமுயர்த்துவதையும் கல்முனைக்குடியை உள்ளடக்கிக் கல்முனை தெற்குப் பிரதேச செயலகப் பிரிவு 100% முஸ்லிம்களைக் கொண்டதாக உருவாவதையும்- அவற்றிலுள்ள அடிப்படை நியாயங்களையும் தர்க்கங்களையும் உணர்ந்து முஸ்லீம் அரசியல்வாதிகள் ஆதரிக்க முன்வரவேண்டும்.  

தமிழர் தரப்பு அரசியல்வாதிகளும் ‘யானை பார்த்த குருடர்கள்’ மாதிரி எழுந்தமானமாகக் கோரிக்கைகளையும் அறிக்கைகளையும் முன் வைக்காமல் கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவை உருவாக்கும் விவகாரத்திலுள்ள உண்மையான தாற்பரியத்தைப் புரிந்து கொண்டு குறுகிய தேர்தல் அரசியலுக்காக அல்லாமல் தூர நோக்குடன் செயற்பட வேண்டும்.