தமிழ் அரசியலின் இன்றைய பிளவு நிலமைகள்: (உள் நோக்கிய பார்வை)

தமிழ் அரசியலின் இன்றைய பிளவு நிலமைகள்: (உள் நோக்கிய பார்வை)

   — வி. சிவலிங்கம் — 

இன்று இலங்கை அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அவதானிக்கும்போது மிகவும் ஆபத்தான ஓர் எதிர்காலம் உருவாகி வருவதை பலரும் உணர்வர். குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் சமூக மற்றும் அரசியல் மாற்றங்கள் அதனை உணர்த்துவதாகவே உள்ளன. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நாட்டில் நிலவி வரும் திறந்த நவ தாராளவாத பொருளாதாரமும், செயற்பாட்டிலுள்ள நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ஆட்சி முறையும் நாட்டின் பாதையை மாற்றி அமைத்து வருகின்றன. இந்த நாற்பது ஆண்டுகளில் சுமார் முப்பது ஆண்டுகள் நாடு உள்நாட்டுப் போரிற்குள்ளும் சிக்கியிருந்தமையால் சிங்கள சமூகத்திற்குள் மிகவும் காத்திரமான சமூக மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தற்போதைய பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் அணுகுமுறைகள் சிங்கள அரசியலில் பல்வேறு விவாதங்களைத் தோற்றுவித்துள்ளதை நாம் காணலாம். உதாரணமாக தேர்தலின் மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது கைப்பற்றப்பட்ட விதம், அரசியல் யாப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள 20வது திருத்தம் அதன் பின்னர் கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான மசோதா போன்றன நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் எதிர்காலம் தொடர்பான அடிப்படை விவாதங்களை நோக்கி நகர்த்தி வருகின்றன.  

தேசிய அளவில் தேசிய அரசியலின் போக்கு மாறிச் செல்கையில் சிறுபான்மை இனங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் போக்கில் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக முஸ்லீம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் கடந்த காலங்களில் சிங்கள தேசியக் கட்சிகளுடன் ஏற்படுத்திய உறவுகளைத் தொடர்ந்து வைத்திருக்க முடியுமா? சிங்கள அரசியலில்  பலமடைந்து வரும் சிங்கள பௌத்த பெருந்தேசியவாத சிந்தனைகளுக்கு எதிராக குறிப்பாக இக் கட்சிகள் காத்திரமான நிலைப்பாடுகளை மேற்கொள்ளுமா? என்ற கேள்விகள் எழுகின்றன. அதே போலவே தமிழ் அரசியலில் இலங்கை ஒற்றை ஆட்சி கட்டமைப்பிற்குள் இலங்கை – இந்திய ஒப்பந்தம் வழங்கிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வுகளை நோக்கிச் செல்வதா? அல்லது சமஷ்டி அரசியலை வற்புறுத்திப் பிரிவினை அரசியலை முன் நகர்த்துவதா? என்ற வாதங்கள் நிகழ்கின்றன.  

இப் பிளவு நிலமைகள் தொடரும் வரை தமிழ் அரசியல் காத்திரமான இடத்தை நோக்கி நகர முடியாது. இவ்வாறான இறுக்கமான நிலமைகள் தொடர்வதையே சிங்கள பௌத்த பேருந்தேசியவாதமும் விரும்புகிறது. இவை தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடைகளாகவே அமையும். எனவே மாறிவரும் உலகச் சூழல், அதில் இலங்கையில் ஏற்படக்கூடிய அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார மாற்றங்கள் என்பவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ் அரசியல் இந்த இறுக்கமான நிலமைகளை உடைப்பது காலத்தின் தேவையாக உள்ளது. அதற்கான வாய்ப்புகளை நோக்கிய பார்வையாகவே இக் கட்டுரை அமைகிறது.         

தந்திரோபாய அரசியல் 

பொதுஜன பெரமுன தற்போது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் பயன்படுத்திய தந்திரோபாயங்கள், அணுகுமுறைகள் என்பன போர்க் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தந்திரோபாயங்களின் அடிப்படையிலேயே மேலும் தொடர்கின்றன. போர்க் காலத்தில் போரை நடத்துவதற்கான ஆளணி, அதற்கான மக்கள் ஆதரவு, நிதி திரட்டல், அதற்கான பலமான தலைமை என்பவற்றை மிகவும் காத்திரமான கருத்தியல் அடிப்படையிலேயே ஒன்றிணைக்க முடிந்துள்ளது. இக் கருத்தியல் என்பது ராணுவ அடிப்படையிலான மிக இறுக்கமான கட்டுமானத்தை நோக்கியதாக அமைந்தது. தலைமை என்பது ஒரு குடும்பத்தை மையமாகவும், கருத்தியல் என்பது இலங்கை சிங்கள பௌத்தர்களின் ஒரே நாடு என்பதாகவும், விடுதலைப்புலிகளைத் தோற்கடித்ததன் மூலம் தேசம் இரண்டாவது சுதந்திரத்தைப் பெற்றுள்ளதாகவும், இச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தவர்கள் ராணுவத்தினரே என்பதாகவும் புதிய கருத்தியல் வடிவம் பெற்றது.  

நலன்சார் குழு ஆதிக்கம் 

இப் பலமான கருத்தியல் தற்போது தேசத்தின் பொருளாதாரத்தை வடிவமைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நாட்டின் பொருளாதாரத்தில் பல்வேறு நலன்கள் சார்ந்த குழுவினரின் ஆதிக்கம் தொடர்ந்து உள்ளது. தற்போது போர் முடிவடைந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் பிரிவினர் மத்தியில் போட்டிகள் ஏற்பட்டுள்ளன. போரின் வெற்றியின் பங்காளர்கள் மத்தியில் அப் போட்டிகள் ஆரம்பித்துள்ளன. கடந்த முப்பது ஆண்டுகால போரின்போது தமது பொருளாதார நலன்களை அதிகரித்துக்கொண்ட மத்தியதர வர்க்கம், இம் மத்தியதர வர்க்கத்திற்கான அரசியல் தலைமையை வழங்கும் சிங்கள பௌத்த பெருந்தேசியவாத குழுவினர், இப் பிரிவினரின் இருப்பினை உறுதி செய்யும் வகையில் செயற்படும் ராணுவம் என்பன  பிரதான கூறுகளாகும்.    

இவ்வாறு நாட்டின் பொருளாதார கட்டுமானங்கள், அரசியல் கட்டுமானங்கள், ராணுவக் கட்டுமானங்கள் என்பன ஒரு சிறு குழுவினரின் கைகளில் சென்றுள்ள நிலையில் முப்பது வருட போர்க்காலம் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை முடக்கி, ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பலப்படுத்தவும் உதவியது. இதன் விளைவாக 80 களுக்கு முன்னரான காலத்தில் மேற்குலக ஆதரவு சக்திகளின் ஆதிக்கத்திலிருந்த தேசத்தின் பொருளாதாரக் கட்டுமானங்கள் தற்போது படிப்படியாகவே அவை புதிதாக உருவாகிய சிங்கள பௌத்த தேசிய முதலாளித்துவ சக்திகளின் ஆதிக்கத்திற்குள் புதிதாக உருவாகிய புதிய முதலாளித்துவ கட்டுமானத்தைக் கொண்ட சீன ஆதரவைச் சென்றடைந்துள்ளது. 

எனவே இலங்கை அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்பன மிகவும் காத்திரமான அடிப்படை மாற்றங்கள் என்பதனையும், அவற்றை வெறுமனே ஒரு சில தனி மனிதர்களை நோக்கியதாக அல்லாமல் அவை ஒரு ஆதிக்கமிக்க குழுவினரை நோக்கியதாக மாற்றமடைந்துள்ளதை நாம் காணலாம்.  

புதிய இலக்குகளை நோக்கி உருவாகும் குழுசார் அரச நிர்வாகங்கள் 

இங்கு எனது பிரதான விவாதம் எதுவெனில் தற்போது உருவாகி வரும் அரசியல், சமூக, பொருளாதார, ராணுவக் கட்டுமானம் என்பது மிக விரைவாகவே மக்களின் சம்மதத்தைப் பெற்று வருவதால், குறிப்பாக சிங்கள பௌத்த பெருந்தேசிய மையவாத அரசியல் பலமடைந்து வருவதால் இம் மாற்றங்களால் பாதிப்படைந்து வரும் மக்கள் பிரிவினர் மற்றும் குறிப்பாக சிறுபான்மைத் தேசிய இனத்தவர் தமது எதிர்காலம் குறித்து மிக வேகமாகச் சிந்திக்க வேண்டிய நிலையிலுள்ளனர். இவ் விவாதங்கள் இரண்டு பிரதான அம்சங்களை நோக்கியதாக உள்ளன.  

முதலாவது பலமடைந்து செல்லும் சிங்கள பௌத்த பெருந்தேசிய மையவாதத்தினை அதுவும் ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடையாளங்களை நிராகரித்துச் செல்லும் போக்கு ஆகும். அடுத்தது இச் சிங்கள பௌத்த பெருந்தேசிய மையவாதம் சிங்கள மக்களையும் பொருளாதார அடிப்படையில் கூறுபடுத்திச் செல்லும் விளைவுகளாகும். இதனை தற்போதைய கொரொனா தொற்று வியாதி மக்களைத் தாக்கிய வேளையில் அச் சமூகத்தின் ஒரு பிரிவினர் தனது மக்கள் மீது கலப்பட வியாபாரம், கறுப்பு வியாபாரம், அரச அதிகார துஷ்பிரயோகம், உல்லாசப் பயணத்துறையைப் பயன்படுத்திய விபரங்கள், மத்திய கிழக்கில் சிக்கிய மக்களை நாட்டிற்குள் எடுத்து வருவதில் செயற்பட்ட பாரபட்சம் மற்றும் பணம் வசூலித்த முறைகள், ராணுவத்தினர் சட்டம், ஒழுங்குமுறைகளைப் பாரபட்ச விதத்தில் அமுல்படுத்திய விதங்கள், அரச கொடுப்பனவுகளில் அரசியல் தலையீடுகள், தொழிற்சாலைகளில் நோய்க் காலங்களில் தொழிலாளர்கள் நடத்தப்பட்ட விதங்கள், நோய்த் தடுப்புத் தொடர்பாக குறிப்பாக தடுப்பூசி வழங்குவதில் காணப்படும் ஒழுங்கீனங்கள் எனப் பல நிகழ்வுகளை அவதானிக்கும்போது சிங்கள பௌத்த பெருந்தேசிய மையவாதத்தின் போலித் தன்மை மிக வெளிப்படையாகத் தெரிந்தது. அது மட்டுமல்ல ஆட்சியாளரின் “குழு ஆதிக்க மனோபாவம்” மிகவும் அப்பட்டமாகவே புலப்பட ஆரம்பித்துள்ளது. உதாரணமாக தேர்தலுக்கு முன்பதாக மக்களின் சுகாதாரத்தில் காட்டிய அனுதாபங்கள் தேர்தலின் பின்னர் படிப்படியாகவே இல்லாதொழிந்து நோய்த் தடுப்பு என்பது முற்றிலுமாகவே சாமான்ய மக்களின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. அதேவேளை இக்கொடிய நோயின் காரணமாக அவதியுறும் மக்கள் எந்த மருந்தைப் பாவித்தாலும் கவலையில்லை என்ற நிலமைக்கு சுகாதார அறிவுறுத்தல்கள் மாற்றமடைந்துள்ளன. 

போலி பெருந்தேசியவாத முன்னெடுப்புகள்    

எனவே சிங்கள, பௌத்த, இனமையவாதம் என்பது சிங்கள மக்களை மிகவும் கூறுபடுத்திச் சென்றுள்ளதை நாம் காணும்போது இங்கு சில பொதுத் தன்மை வெளிப்படுகிறது. அதாவது சிங்கள, பௌத்த இனமையவாதம் என்பது ஒரு வகைப் போலி முகமூடி என்பதனையும்,நாட்டின் பொருளாதார மையங்களைக் கட்டுப்படுத்தி அதிக லாபமீட்டுவதையே அதன் அடிப்படையாகக் கொண்டிருப்பதையும், இப் பிரச்சனையில் சிங்கள, தமிழ், முஸ்லீம் தரப்பினரில் பெரும்பான்மையானோர் ஒரே விதமான பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்திருப்பதனையும் காணமுடிகிறது. அதே போலவே இப் பாதிக்கப்பட்ட பெரும்பான்மைப் பிரிவினர் மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்தாதவாறு சிங்கள பௌத்த பெருந்தேசிய மையவாதம் பெரும் சுவராக அமைந்துள்ளதையும் காணலாம்.  

மக்களிலிருந்து விலகிச் செல்லும் போலி தமிழ் தேசியவாதம்  

நாம் மறு பக்கத்தில் மேற்குறித்த பிரச்சனைகள் ஒட்டுமொத்த நாட்டையும் அச்சுறுத்தும் வேளையில் தமிழ் அரசியல் தனது கவனத்தை எங்கு குவித்துள்ளது? என்பதை ஆராய வேண்டியுள்ளது.  

தமிழ்ப் பகுதிகளில் விவாதிக்கப்படும் அம்சங்களை அவதானிக்கும்போது இப் பகுதிகளில் பொருளாதாரப் பிரச்சனைகள் இரண்டாவது நிலையிலிருப்பதைக் காண முடிகிறது.  

நாடு முழுவதும் பொருளாதாரப் பிரச்சனைகளால் அவதிப்படும் வேளையில் தமிழ்ப் பகுதிகளில் மட்டும் இன்னமும் அரசியல் உரிமைகள், மாகாணசபைத் தேர்தல்கள், அரசியல் கூட்டணி அமைத்தல் என்பனவே விவாதப் பொருளாக அமைந்து வருவதை அவதானிக்கையில் தமிழ் அரசியல் கட்சிகள், அதன் தலைவர்கள், ஆதரவாளர் என்போர் தமிழ் சமூகத்தின் கீழ்மட்ட மக்களின் பிரச்சனைகளைத் தவிர்த்துச் செல்வதைக் காணமுடிகிறது. ஏனெனில் சமான்ய மக்களின் பிரச்சனைகள் எதுவும் அவர்களின் கவனத்திலில்லை. மக்களின் சுகாதாரப் பிரச்சனைகள் முதல் விலைவாசி உயர்வு, வேவையில்லாத் திண்டாட்டம், கல்வி மற்றும் போக்குவரத்துப் பிரச்சனைகள் என பல இடர்கள் மக்களை வருத்தும் நிலையில் அவை குறித்து அரசியல்வாதிகளோ அல்லது ஊடகங்களோ கவனத்தைச் செலுத்துவதாக இல்லை.  

இவற்றை அவதானிக்கையில் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் என்போர் அதிகாரத்தை நோக்கிய கவனத்தில் உள்ளார்களே தவிர மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் தொடர்பாக மாற்று ஏற்பாடுகளை நோக்கிய சிந்தனைகளில் செல்வதாக இல்லை. இதற்கான பிரதான காரணங்களில் ஒன்றாக கடந்த 70 ஆண்டு காலத்திற்கு மேலாக தமிழ் அரசியலில் காணப்படும் பொருளாதாரம் சாராத குறும்தேசியவாத அரசியல் அணுகுமுறைகளைக் கூறமுடியும். தமிழ் அரசியல்வாதிகள் தாம் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் பற்றிப் பேசுவதற்காக மட்டும் அனுப்பப்பட்டவர்களாகவும், சுதந்திர காலம் முதல் அரசிற்கு எதிராகவே அந்த அரசியல் சென்றமையால் மக்களின் பொருளாதார வாழ்வு தொடர்பாக அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்ற கருத்துருவாக்கம் இணைந்து பயணித்துச் சென்றிருக்கிறது. இதனால் தமது பிரதேச வளர்ச்சி குறித்தோ அல்லது பொருளாதார தாக்கங்கள் குறித்தோ தமது பிரதிநிதிகளிடம் பேசிப் பயனில்லை என்ற முடிவுக்கு மக்கள் சென்று விடுகின்றனர்.  

போலி அபிவிருத்தி அரசியல் 

ஆனால் போர்க் காலத்தில் வெவ்வேறு காரணங்களால் அரசோடு இணைந்து செயற்பட வாய்ப்புக் கிடைத்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் சில குழுக்கள்  போன்றன பல்வேறு இக்கட்டான நிலையிலும் அரசின் ஆதரவைப் பெற்று மக்களுக்குத் தேவையானவற்றை முடிந்தளவு மேற்கொண்டனர். இவ் வகை அபிவிருத்தி அரசியல் போலித் தன்மையான தேசியத்தை, மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற போலிக் கவசங்களுடன் மக்களை ஏமாற்றியது. மத்தியில் கூட்டாட்சியும் இல்லாது, மாநிலத்தில் சுயாட்சியும் தொடர்ந்து மறுக்கப்படுகையில் அபிவிருத்தி அரசியலின் அடிப்படைகள் தொலைக்கப்படுகின்றன. இதனை எவ்வாறு ஆதரிப்பது? பிரதேச அபிவிருத்தியில் அப் பிராந்திய மக்களின் அபிப்பிராயங்கள் பெறப்படாமல் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் அம் மக்களின் தேவைகளை எவ்வாறு நிறைவேற்ற உதவும்? அங்கு அம் மக்களின் ஜனநாயக உரிமை முற்றிலுமாக மறுக்கப்படுகிறது. அம் மக்களின் தேவைகளை யாரோ தீர்மானிக்கிறார்கள். எதை உற்பத்தி செய்வது? ஏதை சந்தைப்படுத்துவது? என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்? இங்கு அபிவிருத்திக்கு எதிராக குரல் என்பதில் காணப்படும் ஜனநாயக அம்சங்களை ஏன் கண்டுகொள்ள முடிவதில்லை?     

தற்போது காணப்படும் பொதுவான அரசியல் சூழலில் மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் அக் கரையை நோக்கிச் சென்றதால், மக்கள் ஆதரவு வளர்ச்சி தமிழ்க் கட்சிகளின் ஆதரவுத் தளத்திற்கு ஆபத்தாக மாறிய வேளையில் அல்லது மக்கள் அரச ஆதரவுக் கட்சிகளை நோக்கித் திரும்பியதன் காரணமாக அரசியல் பார்வையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் அரசு வழங்கும் கொடுப்பனவுகள் உரிய வகையில் மக்களைச் சென்றடைந்துள்ளதா?வைத்தியசாலைகளில் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றனவா? என்பதைக்கூட கண்காணிப்பதில்லை. மக்களும் அவற்றில் அக்கறை செலுத்துவதில்லை.   

போரின் பின்னதான அரசியல் 

2009ம் ஆண்டிற்குப் பின்னரான அரசியல் என்பது தமிழ் அரசியலின் போக்கை மாற்றி அமைத்தது. பிளவுபடுத்தப்படாத ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கல், அதிகார பகிர்வு போன்ற சமஷ்டி அடிப்படையிலான தீர்வுகளின் அடிப்படையில் பிரச்சனைகளை அணுகும் வகையில் மாற்றங்கள் ஏற்பட்டன. இதனை மறைமுகமாக கூறுவதாயின் ஏற்கெனவே குறிப்பிட்ட வகையிலான தீர்வுகளை நோக்கிய எந்த அரசுடனும் இணைந்து செயற்படத் தயார் என்பதை அறிவிப்பதாகவே அமைந்தது. 

இங்கிருந்தே தமிழ் அரசியலின் புதிய பயணத்திற்கான முயற்சிகளின் பெறுபேறுகளை ஆராய வேண்டும். கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் அரசியலில் காணப்பட்ட எதிர்ப்பு அரசியல் அதன் தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளதாகவே நாம் கொள்ளல் வேண்டும். இருப்பினும் அதாவது 2009ம் ஆண்டின் பின்னர் தமிழ் அரசியலில் அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் அவை முழுமையாக கீழ் நோக்கிச் சென்றடையவில்லை. இதனால் பிளவுபடுத்தப்படாத ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பரவலாக்கம், அதிகார பகிர்வு என்ற சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்பது தமிழர் கூட்டமைப்பிற்குள் காணப்பட்ட பிளவுகளின் வெளிப்பாடாகவே இதுவரையும் உள்ளது. 

மாவை – சுமந்திரன் அணிகள் 

நாம் ஏற்கெனவே கூறிய பிளவுகளை அதாவது பிளவுபடுத்தப்படாத ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பரவலாக்கம், அதிகார பகிர்வு என்ற சமஷ்டி அடிப்படையிலான தீர்வுகளின் அடிப்படையில் பிரச்சனைகளை அணுகப் போவதாகக் கூட்டமைப்பினர் கூறிய நிலையில் மேற்கூறிய வாசகங்களின் வெவ்வேறு பகுதிகளைத் தத்தமது நியாயங்களாகக் கொண்டு கூட்டமைப்பிற்குள் பிளவுகள் ஏற்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.  

உதாரணமாக பிளவுபடுத்தப்படாத, ஐக்கிய இலங்கை என்ற அடிப்படையை மிகவும் ஆழமாக அழுத்தி தேசிய அடிப்படையிலான ஜனநாயக மாற்றங்களோடு, தேசிய இனப் பிரச்சனைகளையும் இணைத்துச் செல்லும் அணியாக சுமந்திரன் தலைமையிலான பிரிவினரும், அதேவேளை அதிகார பரவலாக்கம், அதிகார பகிர்வு என்ற சமஷ்டி அப்படையிலான தீர்வுகள் என்ற பிரிவை மையமாக வைத்து அங்கு முன்வைக்கப்பட்டுள்ள சமஷ்டி என்ற வார்த்தைப் பிரயோகத்தை மேலும் அழுத்தி பிரிவினையைக் கைவிடவில்லை என்ற செய்திக்கு தலைமை தாங்க மாவை அணியினர் செயற்படுவதையும் காணலாம். இங்கு இந்த இரண்டு பிரமுகர்களையும் அங்கு காணப்படும் இரண்டு பிரதான அரசியல் கருத்தோட்டங்களுக்கான அடையாளங்களாகவே குறிப்பிடுகிறேன். இவை இவ் அரசியல் போக்குகளை மேலும் தெளிவாக்குவதற்கு இலகுவாகவே அமையும் என்பதால் அவ்வாறு அடையாளம் செய்துள்ளேன்.  

சுமந்திரன் அரசியல் 

தற்போதைய அரசியல் மாற்றங்களோடு அவதானிக்கையில் சுமந்திரன் தலைமையிலான அரசியல் அணுகுமுறைகள் மிகவும் பாரிய நெருக்கடிக்குள் சிக்கியிருப்பதை நாம் காணலாம். அதாவது ஐக்கிய இலங்கைக்குள் அவ்வாறான சமஷ்டி அடிப்படையிலான தீர்வுகள் சாத்தியமா? என்ற கேள்விகள் உண்டு. இங்கு தீர்வுகள் சாத்தியமா? என்பதை விட இலங்கையில் தற்போது பலமடைந்து வரும் சிங்கள, பௌத்த பெருந்தேசிய மையவாத போக்குகளுக்குப் பலமான, காத்திரமான, சர்வதேசம் ஏற்றுக் கொள்ளும் வகையிலான, நாட்டைப் பிளவுபடுத்தவில்லை என்பதை மிகவும் இறுக்கமாக முன் வைக்கும் வகையிலும், சிங்கள பௌத்த பெருந்தேசியவாத சக்திகள் அப்போக்கை ஏற்க மறுப்பதோ அல்லது ஏற்பதோ என்பது அவர்களின் பிரச்சனை என்ற விதத்திலும், ஜெனீவா தீர்மானங்களை நிறைவேற்றும் வகையில் உள்நாட்டு அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையிலும் முன்வைக்கப்படும் பலமான அரசியல் யதார்த்த நிலைப்பாடு இதுவாகவே அமைய முடியும். தீர்வு சாத்தியமா? என்ற கேள்வி இங்கு எழ நியாயமில்லை. ஏனெனில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் அரசியல் தலைமைகள் பல்வேறு தீர்வுகளுடன் அரசோடு பேசிய வேளையில் சாத்தியமா? என்ற கேள்விகள் எழுந்ததில்லை. இருந்த போதிலும் அவை சாத்தியமாகவில்லை. ஆனாலும் தொடர்ந்து பேசியே சென்றார்கள். எனவே சாத்திமானதா? என்பதை விட நியாயமானதா? இலங்கைத் தேசியத்தைப் பிளவுபடுத்துமா? இலங்கைத் தேசிய இனங்களின் பாதுகாப்பிற்கு இத் தீர்வுகள் மேலும் பலம் சேர்க்குமா? தேசிய இனப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான நியாயமான அணுகுமுறைகளைத் திறப்பதற்கும், பிரிவினை தொடர்பான சந்தேகங்களுக்கும் சேர்த்துப் பதிலளிப்பதாயின் இதுவே பொருத்தமான தீர்வாகவும், அணுகுமுறையாகவும் அமையும்.  

இனி இத் தீர்வு சாத்தியமா? என்ற கேள்வியை நோக்கிச் செல்வோம். 2015ம் ஆண்டு மைத்திரி – ரணில் தலைமையிலான அரசு அமைந்த வேளையில் அதற்கான சாத்தியத் தன்மை மிக அதிகமான அளவில் காணப்பட்டது. ஓர் நிலையான ஜனநாயக அடிப்படையிலான அரசைத் தோற்றுவிப்பதற்குத் தேவையான அடிப்படை அம்சங்களை அப்போதைய ஆட்சியாளர்கள் நன்கு புரிந்தே செயற்பட்டனர். மக்களும் அதற்கு ஆதரவாகவே வாக்களித்தனர். எனவே தேசிய இனப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வெளி எப்போதுமே அங்கு காணப்படுகிறது. ஆனால் இருபுறமுமுள்ள இனவாத சக்திகள் அதற்கான வாய்ப்புகளைத் தொடர்ந்து தடுத்தே வருகின்றன. எனவே கட்சிகள் மத்தியிலும், அங்கு காணப்பட்ட இனவாத சக்திகள் மத்தியிலும் காணப்பட்ட அதிகார வெறி இனவாதத்தை அதன் இயல்பான எல்லைக்கு அப்பால் எடுத்துச் சென்றதால் ஏற்பட்ட மாற்றங்கள் என்பவை முழுமையானவை, தீர்வுகளுக்கு வாய்ப்பே இல்லை என முன்வைக்கும் வாதங்களை நாம் ஏற்க முடியாது. தேசத்தின் வளர்ச்சியிலும், தேசிய நல்லிணக்கத்திலும் நம்பிக்கையுள்ள அரசியல் சக்திகள் நாடு முழுவதும் பலமாக உள்ளன. அவற்றின் மீது நாம் நம்பிக்கை கொள்ளாத வரை இவ்வாறான சந்தேகங்கள் தொடர்ந்து நிலவும். இங்கு பிரதானமான அம்சம் எதுவெனில் எவை தேசிய இனப் பிரச்சனைக்கான இடையூறுகளாக உள்ளனவோ அவற்றை நீக்குவதற்கான முயற்சிகளை நாட்டின் சிறுபான்மைத் தேசிய இனங்களும் இணைந்தே அகற்ற முயற்சிக்க வேண்டும். அத்துடன் இலங்கையில் ஒர் ஸ்திரமான அரசை நிர்மாணிக்கவும், அங்கு ஜனநாயக அடிப்படைகள் பலமாக அமைவதற்கான தீர்வுகளை முன் வைத்தல் அவசியமாகும். அதனடிப்படையில் பார்க்கும்போது ஐக்கிய இலங்கை என்பது அர்த்தமுள்ளதாகவும், பிளவுபடுத்துவதற்கான எந்த வாய்ப்பிற்கும் இடமளிக்க முடியாத வகையில் அதே வேளை தேசிய சிறுபான்மை இனங்கள் ஜனநாயக அடிப்படையில் அமைதியோடு வாழ்வதற்கான தீர்வை நோக்கிய அடிப்படைகளை வற்புறுத்துவதாகவே அரசியல் அணுகுமுறைகள் அமைதல் அவசியம்.  

இவ்வாறான அணுகுமுறைகள் தமிழ் தேசிய நீக்க அரசியல் என ஒரு சாராராலும் மறு புறத்தில் பேரினவாதத்துடனான இணக்க அரசியல் எனவும் வர்ணிக்கும் போக்கும் காணப்படுகிறது. இருப்பினும் அவற்றின் உண்மையை எதிர்கால வளர்ச்சிப் போக்கே தீர்மானிக்க முடியும்.    

மாவை அரசியல் 

தமிழ் அரசியலில் காணப்படும் போக்குகளில் மாவை தலைமையிலான அணியினர் கடந்த 70 வருடத்திற்கு மேற்பட்ட குறுந் தேசியவாத அரசியலிலிருந்து மாறுபடத் தயாராக இல்லை. இக் குறும்தேசியவாத அரசியல் அவர்களைத் தலைவர்களாகவும், தேசிய அளவிலான முக்கியஸ்தர்களாகவும் அமர்த்தியிருக்கிறது. எனவே அவ்வகை அரசியல் அவர்களின் சுய தேவைகளை நிறைவேற்றியுள்ளது. இங்கு சில காரணிகள் அவ்வாறன நம்பிக்கைக்குத் துணை புரிகின்றன.  

அதாவது சிங்கள பௌத்த பெருந்தேசிய மையவாதம் மிகவும் உக்கிரமான நிலையிலிருப்பதால் அதனை எதிர்ப்பது தவிர்க்க முடியாத தேவையாக உள்ளது. பிரிவினை என்ற அச்சுறுத்தல் தொடர்ந்து காணப்பட்டால் மாத்திரமே சிங்கள பௌத்த பெருந்தேசிய மையவாதம் எச்சரிக்கையோடு செயற்படும். எனவே எதிர்ப்பு அரசியலிற்கான பாத்திரம் இன்னமும் உள்ளது. ஆனால் எதிர்ப்பு அரசியல் மட்டும் வளர்ந்து வரும் சமூகத் தேவைகளை நிறைவேற்ற உதவுமா? பிரதேசம் முழுவதும் அபிவிருத்தி பற்றிய கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் அவற்றை நிறைவேற்றுவதற்கான மூலோபாயம் என்ன?    

இதனை ஓர் விவாத நிலையில் அணுகும்போது, எதிர்ப்பு அரசியல் பொருத்தமானதாக அமையலாம். ஆனால் எதிர்ப்பு அரசியல் என்பது வெறுமனே எதிர்ப்பாகவே மட்டும் காணப்படுவதும்,எவற்றைப் பாதுகாப்பதற்காக உதாரணமாக, குடியேற்றம், ராணுவக் குவிப்பு, சிங்கள மொழித் திணிப்பு, நில அபகரிப்பு போன்றவற்றை எதிர்க்கின்ற போதிலும் அவை படிப்படியாகவே உள்நுழைந்து ஆதிக்கம் பெற்றுச் செல்கையில் எதிர்ப்பு என்பது அர்த்தமற்ற ஒன்றாக மாறி வெறும் அரசியல்வாதிகளின் கூக்குரலாக மாற்றம் பெற்று வருகிறது.   

எதிர்ப்பு அரசியல் என்பதன் உள்ளார்ந்த ஆபத்துகளை மக்கள் தெளிவாக உணர்ந்த போதிலும், அதனை வீதியில் நின்று தடுக்கும் நிலையில் மக்கள் இல்லை என்ற நிலை காணப்படும்போது அவை மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்குமிடையே பாரிய இடைவெளியை அது ஏற்படுத்துகிறது. வெறுமனே வாக்குச் சேகரிப்பதற்காக எழும் குரல் என அசட்டையாக உள்ளனர். இதுவே இன்றைய அரசியல் யதார்த்தம். அரசியல்வாதிகள் ஊடகங்களில் அறிக்கைகளை விடுவது அல்லது சில நூறு ஆதரவாளர்களுடன் எதிர்ப்பதாக ஊடகங்களில் அறிக்கையிடுவது அல்லது ஊடகவியலாளர்களின் படையோடு சென்று தாம் எதிர்ப்பதை பகிரங்கப்படுத்த எண்ணுதல் என்பதோடு அவை முடிவடைகின்றன.  

போலித் தேசியவாதமும்மக்கள் இடர்களும் 

இவ்வாறான அரை வேக்காட்டுச் செயற்பாடுகள் சாமான்ய மக்களுக்கு மிகவும் இடையூறாக அமைகின்றன. அரசாங்கம் சாமான்யர்கள் மீது பழிவாங்கல்களை மேற்கொள்கிறது. அவர்களை யாரும் பாதுகாப்பதாக இல்லை. அது மட்டுமல்ல, அரசாங்கம் தனது பொருளாதார செயற்பாடுகளால் நாட்டின் பிரதான பாகங்களை மிகவும் இணைத்து வருகிறது. உதாரணமாக, பெரும் தேசிய நெடுஞ்சாலைகள் நாட்டின் சகல பாகங்களையும் இணைத்துள்ளன. தொலைபேசி இணைப்புகளும் அவ்வாறே இணைத்துள்ளன. இதனால் வர்த்தகம், போக்குவரத்து, சந்தைச் செயற்பாடுகள் என்பன தேசிய அளவில் மாற்றமடைந்து ஒன்றில் ஒன்று தங்கிச் செயற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. போதாக் குறைக்கு ராணுவ செயற்பாடுகள், முகாம்கள், ராணுவ உற்பத்தித் துறைகள், அதில் அப் பிரதேச மக்களுக்கான வேலை வாய்ப்புகள், உல்லாசப் பயணத்துறையில் ராணுவத்தின் முதலீடுகள், சிங்கள குடியிருப்புகள் என்பன போன்ற பல அம்சங்கள் தமிழ்ப் பிரதேசங்களை மிக இறுக்கமாகவே தேசிய அளவில் இணைத்து வருவதால் பிரதேசங்கள் ஒன்றிற்கொன்று தங்கிச் செயற்படும் நிலையிலுள்ளன. உதாரணமாக, ராணுவத்தினர் மிக அதிக அளவில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். அவற்றில் அப் பிரதேச மக்களே வேலைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் வறுமையிலுள்ள மக்கள் ஓரளவு சீரான வருமானத்தைப் பெறுகின்றனர். இந் நிலையில் அரசியல்வாதிகள் ராணுவ முகாம்களை அகற்றுங்கள் என முறையிடும்போது அங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கையைப் பற்றி அதிகம் கவனம் செலுத்துவதில்லை. இதனால் அரசியல்வாதிகளுக்கும், பொது மக்களுக்குமிடையே முறுகல் ஏற்படுகிறது. இதனையே சிங்கள பௌத்த பெருந்தேசிய மையவாதிகள் எதிர்பார்க்கின்றனர். இதுவே இன்று பாலஸ்தீனத்திலும் காணப்படும் மிக முக்கிய பிரச்சனையாகும்.  

எனவே மாவை தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்படும் பிரச்சார உத்தியிலான அரசியல் படிப்படியாகவே மக்களிலிருந்து விலகிச் செல்வதைக் காண முடியும். அரசியல் தீர்வு என்பது மக்களுக்கானதாக இருப்பின் அவை மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பதாக அம் மக்களால் தொடர்ந்து உணரப்படுகையில் அது எவ்வாறு நியாயமான அணுகுமுறையாக கருத முடியும்?  

மக்களிலிருந்து விலகிச் செல்லும் அரசியல் 

இங்கு தமிழ் தேசியவாதம் என்பது ஒட்டு மொத்த மக்களின் நலன்களுக்கானதாக,சமூகத்தின் சகல பிரிவினரையும் இணைத்துச் செல்லும் கோட்பாடுகளைக் கொண்டிருப்பதாக அல்லது அம் மக்களின் நலன்களை இணைத்துச் செல்வதாக அம் மக்கள் கருத வேண்டும். தேசிய அளவிலான சமூக இணக்கத்தையும், ஜனநாயக அம்சங்களையும் வலியுறுத்துவதாக அமைதல் வேண்டும். ஆனால் மாவை தலைமையிலான குழுவினரின் அணுகுமுறைகள், கோட்பாடுகள், விவாதங்கள் யாவும் எதிரிகளைத் தொடர்ந்து உற்பத்தி செய்வதாகவே உள்ளன. இதுவே அதன் மிகவும் பலவீனமான அம்சமாக உள்ளது. தற்போது தமிழ் அரசியல் என்பது ஒட்டு மொத்த மக்களின் தேவைகளின் அடிப்படைகளை நோக்கியதாக அமையாமல் ஒரு சிறு பிரிவினரின் அபிலாஷைகளை நோக்கியதாக மாற்றம் பெற்று வருகிறது. அதுவும் சிங்கள அரசியல் போலவே ஒருவகை குழுவாத அரசியலாக மாற்றம் பெற்றுள்ளது. இதனாலேயே தமிழ்த் தேசியவாதம் மிகவும் குறுகிய அரசியல் விளக்கத்திற்குள் பிரவேசித்து வருகிறது. இதன் பக்க விளைவே கிழக்கு மாகாணத்தில் எழுந்துள்ள விவாதங்களாகும்.   

ஒரு புறத்தில் தமிழ்த் தேசியத்திற்குள் வாழும் சகல சமூகப் பிரிவினரின் அபிலாஷைகளைப் புறக்கணித்துச் செல்வதாகவும், இன்னொரு புறத்தில் அதன் குறுகிய விளக்கங்கள் சாமான்ய சிங்கள மக்களைத் தமிழ் சாமான்ய மக்களின் எதிரிகளாக முன்னிறுத்தும் குறும் தேசியவாதம் முன்வைக்கப்படுகிறது.  

இவை தேசிய அளவிலான நல்லிணக்கத்திற்கு சாதகமானதாகவோ அல்லது தேசிய சிறுபான்மை இனங்கள் மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்த உதவுவதாகவோ அல்லது பிராந்தியங்களிடையே இணக்கத்தை ஏற்படுத்துவதாகவே இல்லை. அத்துடன் ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வுகளை நோக்கிச் செல்வதற்கான பாதைகளைத் திறக்க உதவும் என எண்ணவும் முடியவில்லை. 

தமிழ் அரசியலின் மூன்றாவது அணி   

இதுவரை தமிழர் கூட்டமைப்பிற்குள் காணப்படும் இருவேறு அணிகள் பற்றிய அவதானிப்புகளுக்கு வெளியில் மூன்றாவது தரப்பு ஒன்று உள்ளது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ‘ஒரு நாடு, இரு தேசம்’ என்ற கோட்பாட்டினை வற்புறுத்தும் அரசியல் உள்ளது. இவை தனியாகவே ஆராயப்படவேண்டும். இருப்பினும் இவ் அரசியல் கூறுகளில் காணப்படும் பொதுவான உடன்பாட்டு அம்சம் எதுவெனில் சகல தரப்பாரும் ஒற்றை ஆட்சித் தத்துவத்தை பலமாக வற்புறுத்தும் இலங்கை அரசியல் யாப்பு வழங்கியுள்ள பாராளுமன்ற ஆட்சியில் பங்குபற்ற நடைபெறும் போட்டிகளாகும். 

முடிவுரை    

இலங்கையின் அரசுக் கட்டுமானம் பாராளுமன்ற ஆட்சி முறையிலிருந்து மிக அதிகளவு விலகிச் செல்கையில் தமிழ் அரசியல் அவை பற்றிக் கண்டுகொள்ளாது அல்லது அம் மாற்றங்கள் பற்றி மௌனமாகக் கடந்து செல்லும் வழிமுறை மிக மோசமான அரசியல் பாதிப்புகளை ஏற்படுத்தும். ஏற்கெனவே குறிப்பிட்டது போல அரசியல் யாப்பு வழி மூலமான சர்வாதிகாரமும், ராணுவ அணுகுமுறைகளும் தேசிய இனங்களின் இருப்பிற்கு அச்சுறுத்தலாக மாறி வருகையில் தமிழ்த் தேசியம் குறித்துப் பேசும் இத் தரப்புகள் மாற்று வழிகள் குறித்துப் பேசவோ செயற்படவோ தயாராக இல்லை. இம் மாதிரியான அரசியல் போக்கு என்பது அடிப்படை மக்களிலிருந்து மிகவும் விலகிச் செல்வதை உணர்த்துகிறது. இவை குறித்து சிறுபான்மைச் சமூகங்களில் செயற்படும் கல்விச் சமூகம் அல்லது அரசியல் செயற்பாட்டுப் பிரிவினர் மௌனமாக காணப்படுவது மிகவும் வேதனைக்குரிய நிலைப்பாடு ஆகும்.