அருள் தருவாய் கண்ணகைத் தாயே!

அருள் தருவாய் கண்ணகைத் தாயே!

(பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா, அவுஸ்திரேலியா) 

பாரெல்லாம் கொரோனா வைரஸ் பரவல் அடங்கவில்லை 

ஊரெல்லாம் கூடி அம்மாளே! உனை வணங்க முடியவில்லை 

யாரெல்லாம் எஞ்சுவரோ யாருக்கும் தெரியவில்லை 

போரெல்லாம் வந்தபோதும் உன் பூசை குறைந்ததில்லை 

காவியத்தைப் பலர் பாடச் சிலருக்குக் கண்ணீரோ வழிந்தோடும் 

கூவியங்யொரு பெண்கள் கூட்டம் குரவையிட்டுக் கும்பிட்டு உனைப்போற்றும் 

காவடிகள் ஆடிவரும், ஆண்கள் படை அங்கம் புரண்டு சுற்றும் 

தீவட்டி ஏந்துவோரும் வலம்வருவார், சிறப்பம்மா உன்சடங்கு! 

சீரோடும் சிறப்போடும் பலர்கூடிச் செவிக்கும் நாள் வருமா? 

ஊரோடிச் சென்றவர்கள் ஊர்வந்து உனை வணங்கும் நாள் வருமா? 

தேரிழுத்துக் கால்வெட்ட ஊர்வலமாய் செல்லுமந்த நாள் வருமா? 

சீரழுத்திக் காவியத்தை இளைஞர்படை சேர்ந்து பாட நாள் வருமா? 

ஓடியங்கே வருவதற்கும், உன்கோயில் வீதியிலே கால் மடித்து உட்கார்ந்து இருப்பதற்கும்,  

கூடியங்கே பெண்கள் நின்று குடிவரிசை உலக்கை பெற்று நெல்லளந்து குற்றுவதைப் பார்ப்பதற்கும்,  

காலையிலே குழுத்தியாடல் கண்டுமனம் களிப்பதற்கும், 

தீர்த்தமதை கையேந்திக் குடிப்பதற்கும், வேளையது வந்திடுமா?

கண்ணகையே! தாயே உன் பாதமலர் வேண்டிப் பணிகின்றோம். 

கட்டுண்டோம் தாயே நாம் உனைக்காணக்  கண்கலங்கி நிற்கின்றோம் 

மட்டில்லா உன் கருணை நாடெங்கும் மழைபோலப் பொழியட்டும் 

பட்டதெல்லாம் போதுமம்மா மக்களிப்போ படும்பாட்டைப் பார்த்திடம்மா! 

இட்டமுடன் ஓடிவந்து உன் தலத்தில் இறைஞ்சவழி பண்ணிடம்மா!