தேடிவர யாருமில்லை ! (சிறுகதை)

தேடிவர யாருமில்லை ! (சிறுகதை)

    — அகரன் — 

ஒரு இரவு – பகல் நான் அறியாமல் தொலைந்துவிட்டது. அது என்னை முழுமையாக தின்றுவிட்டது. ஒரு வெயில் மாலையில் விழுந்து அழ ஆரம்பித்தேன். தலையணை கண்ணீர் வாடையை தருகிறது.  

சூரியன் இருக்கிறது. வெயிலைக் காணவில்லை. இருட்டிக் கிடக்கிறது உலகம். மழை பெய்த வாசம் வருகிறது. உண்மை! நிலமெங்கும் நனைந்திருக்கிறது. என்னைப்போலவே கண்ணீர் பெய்து களைத்துக் கிடக்கிறது வானம். ஒரு அகண்ட மௌனம் எங்கும் பரவி என்னை கட்டி வைத்திருக்கிறது. 

கஞ்சத்தனம் மிக்கவன் வைத்த ஜன்னல் மட்டும் திறந்திருக்கிறது. நேற்று அறைந்து சாத்திய கதவு தானாகத் திறக்காது தானே? 

அப்படி இந்த நிலத்தில் என்னைத் தேட யார் இருக்கிறார்? யாருக்கும் அவசியமான எதுவும் என்னிடம் இல்லை. அக்கறை கொள்ள இருந்த கடைசி உயிரும், என்னைத் தந்த முதல் உயிருமான என் அம்மா 2009இல் இறந்தார். அவரை எந்தக் குண்டும் துளைக்கவில்லை. பட்டினியால் அந்த முள்ளிவாய்க்கால் நிலத்தில் இருந்த அரச மரத்தின் கீழ் இறந்ததாக பின்னர் அறிந்தேன்.  

அதற்குப் பிறகு நேற்றுத்தான் அழுதேன். இந்தப் பாலை நிலத்தில் வளர்ந்த ஒரே ஒரு பேரீச்சம் மரமும் என்னை விட்டுப் போய்விட்டது. அவளை வழியனுப்பி வைத்தது நான்தான். அவள் என் ‘சசி’. ஐரோப்பா செல்கிறாள். வேறு எதற்காக?திருமணத்திற்காகத்தான். எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. எங்கள் பேரன்பை பேசி பிரிந்துவிட்டோம். நடந்தது எல்லாமே நாம் தீர்மானிக்க முடியாதவை. இருவரும் பல்கலைக்கழகப் படிப்பை முடித்து விட்டோம். பாருங்கள் எங்களை இந்த உலகம் வாழவிடவில்லை. 

எங்களை முட்டாள்கள் என்று சொல்லாதீர்கள். நடந்தது எல்லாம் தான் முட்டாள் தனமானவை. முட்டாள்கள் தீர்மானிக்கும் நிலையில் இருந்தால் இந்தச் சின்ன உயிர்களால் என்ன செய்துவிட முடியும்?  

அவசரப்படாதீர்கள்! கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். என்னால ஒழுங்காக சொல்ல முடியவில்லை. தடுமாறுகிறேன். ஆயுதங்களோடு பிடிப்பட்ட போராளி போல் படபடக்கிறது என் இதயம். அது வெடிக்க முதல் எல்லாவற்றையும் சொல்லி விடுகிறேன். பொறுத்துக் கொள்ளுங்கள். 

** 

யாழ் பல்கலைக்கழக நூலகத்தில் தான் சசியை சந்தித்தேன். கால் மார்ஸ்க் இன் ‘’மூலதனத்தை’’ முடித்துவிட வேண்டும் என்று தினமும் சென்று கொண்டிருந்தேன். அங்கே பல ஆண்கள் படிப்பதுபோல் நடிக்கவும், படிக்கும் பெண்களை பிடிக்கவும் வந்து கொண்டிருந்தார்கள். நான் பொய் சொல்ல முடியாது. எனக்கும் அந்த எண்ணம் இருந்தது. ஆனால் காற்று என்னை தூக்கி எறியும் நிலையில் நான் இருந்ததால், என்னை யாரும் பார்க்க நான்கு கண்கள் வேண்டும். யாரும் பார்க்க முடியாத தோற்றத்தில் தான் நான் இருந்தேன். 

அன்று மாலை மாற்றத்திற்காக நேரு எழுதிய ‘உலகவரலாறு’ படித்துக்கொண்டிருந்தேன். நூலகம் பூட்டுவதற்கு ஒரு மணி நேரம் இருந்தது. அதிகமாக யாரும் இல்லை. வழமைக்கு மாறாக ஒரு மெல்லிய சத்தம் என்னைக் குலைத்துக்கொண்டிருந்தது. மூளை வாசிக்க முடியாமல் அலமந்தமாய் நின்றது. மனம் அந்த சத்தத்தின் மூலத்தைத் தேடிக்கொண்டிருந்தது. நடுச்சாமத்தில் தண்ணீர் துளியின் சத்தம் போல அது இருந்தது. என் எதிரில் இருந்த புத்தக அலமாரியின் மறுபக்கத்திலிருந்து அந்த சத்தம் வந்தது.  

நேருவை மூடிவைத்துவிட்டு காந்தியின் நடையில் நகர்ந்தேன். புத்தகத்தை விரித்துவைத்து அதன் மறைவில் அழுதுகொண்டிருந்தாள். என் சசி! சசிவதனா! 

அவள் முன் அமர்ந்தேன். வெள்ளை சுடிதாரை கறுத்த நீண்ட முடி காவல் காத்துக் கொண்டிருந்தது. முகம் குருதி நிறைந்து கண்ணீர் வழிந்து மாறியிருந்தது. எனக்கு பதட்டம் அதிகமாகியது. 

ஒருவனின் வருகையை உணர்ந்து, கண்களை ஒற்றி இறுக்கமாக புத்தகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். கண்ணீர், காயவைத்த நெல்லை கொத்தும் கோழிபோல புத்தகத்தை கொத்திக்கொண்டிருந்தது. 

அணங்கு ஒருத்தியின் தனிமையான கண்ணீர் எவ்வளவு கொடியது என்பதை எனக்கு புரியவைத்துக்கொண்டிருந்தாள். எப்படியாவது அதன் காரணம் அறிய துடித்தேன். ஆனால், அதை அவள் விரும்புவாளா? பேசமுடியுமா? என்ற பதட்டத்தையும், ஏக்கத்தையும் தந்தது. 

ஒருவாறு அடித்தொண்டையில் இருந்து வாடகைக்குரலில் ‘’ஏன் அழுகிறீர்கள்?’’ என்றேன். அவள் பேசவில்லை. என்னை பார்க்கவில்லை. குனிந்தே இருந்தாள். அந்த நேரத்தில்தான்  நேர்த்தியான உடையணிந்த அமைதிக்கே பழக்கப்பட்ட நூலகரின் குரல் வந்தது. ‘’பிள்ளையள் ஐந்து நிமிடத்தில் பூட்டப்போறம்’’. கண்களை வெள்ளையும், ரோசா நிறமும் கொண்டகைக் குட்டையால் துடைத்துக்கொண்டே என்னை மதிக்க அவசியமற்ற பூச்சி போல மாற்றியவாறு, அவளின் பின்தோற்றத்தை மட்டும் எனக்காக விட்டுவிட்டு  வெளியேறினாள். நீண்டு பின் பகுதியை மறைத்த அளகத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னர் நானும் வெளியேறினேன். 

அந்த இரவு தூக்கமே வரவில்லை. ஒரு பெண்ணின் தனிமையான கண்ணீர், கடைசி அத்தியாயம் கிளிக்கப்பட்ட நாவலை வாசித்தவன்போல வதைத்தது. 

அடுத்த நாள் மதிய நேரம் நூலக வாசலில் இருந்து தாஸ்ததாவெஸ்கியின் ‘’வெண்ணிற இரவுகள்‘’ வாசித்துக்கொண்டிருந்தேன். அவள் இன்றும் வருவாள். எப்படியாவது கண்ணீரின் காரணம் கேட்டுவிடவேண்டும். அவள் சொல்லாவிட்டால் கெஞ்சுவதற்கும் தயாராகவே இருந்தேன். வெண்ணிற இரவுகள் போல என் கதை இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. 

அவள் வந்தாள். மஞ்சள் தாவணி வெண்மை மஞ்சள் குளித்த துப்பட்டா. தண்டவாளத்தில் நகரும் வண்டி போல எங்கும் அசையாமல் அதே இடத்தில் சென்று அமர்ந்தாள். பின்னால் சென்று முன்னால் அமர்ந்தேன். அவள் பார்க்கவில்லை. பேச மாட்டாள் என்பதற்கு அடையாளம் தெரிந்தது. திடீரென்று விரல்களை மூளை ஆக்கி ஒரு சிறு கடிதம் எழுதி யாருமறியாது உருட்டினேன்.  

அவள் முன் நானும் எங்கள் இருவரை பார்த்து இரண்டு புத்தகங்களும் இருந்தது. 

‘நீங்கள் ஏன் அழுதீர்கள்? சொல்லுங்கள்! என் தூக்கம் நேற்று இல்லை. சொன்னால் இன்று தூங்கமுடியும் ! ‘’ 

அப்போதுதான் இமைகள் நிமிர்த்தி என்னைப் பார்த்தாள். அது படித்து கறுத்த கருணைக் கண்கள். அப்படிப்பட்ட கண்கள் கண்ணீர் சிந்துவதை எந்த இளைஞன் ஏற்றுக்கொள்வான்? 

அவள், சிறிய தாளில் பதில் எழுதி உருட்டி விட்டாள். அது மிகச் சிறிய பதில் ‘’அது தனிப்பட்ட விடயம்’’  

என் மூளை கிறுக்குத்தனமாக வேலை செய்ய ஆரம்பித்தது. நான் எழுதினேன், 

‘நாட்டுப் பிரச்சனைக்கு இப்படி யாரும் கண்ணீர் சிந்த முடிந்தால் அது தீர்ந்து விடும்’ 

 அதைப் படித்ததும் அவள் சிரிக்கும்போது கன்னங்களில் குழி விழுந்தது. 

சற்று அமைதிக்கு பிறகு ஒரு துண்டில் எழுதினாள் 

‘’ஒன்றும் இல்லை. என்னை படிப்பிக்கும் உறவினர் ஐரோப்பாவில் இருக்கிறார். அவர் தொலைபேசி எடுத்தபோது நான் எடுக்கவில்லை. அவர் பேசி குறுஞ்செய்தி அனுப்பினார். அதுதான் தாங்க முடியவில்லை.’’ 

இதன் பின்னர் நாம் அறிமுகம் ஆனோம். சசியின் கதைகள் என் கதைகளோடு போட்டி போட்டன. 

சசியின் தந்தை அவள் பிறந்த சில மாதங்களில் இந்திய ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், வீடு திரும்பவில்லை. அவளது தந்தையின் தம்பியார் புளொட் அமைப்பில் இணைந்து பயிற்சிக்காக இந்தியா சென்றவர் திரும்பவில்லை. அவளது அண்ணா விடுதலைப்புலிகளின் வீரனாகி முல்லைத்தீவு முகாம் தாக்குதலில் வீரமரணம். இப்போது தாயும் சசியும் மட்டுமே தலைமுறையின் நீட்சி. 

கல்வியே துணையான சசிக்கு அவளது மச்சான் முறையான 10 வயது மூத்த மைத்துனர் கல்விக்கு பண உதவி செய்கிறார். அவர் அழைத்தபோது அவள் குளித்துக்கொண்டு இருந்திருக்கிறாள். குளிக்கும் வேளைகளிலும் தொலைபேசும் வசதி யாழ்ப்பாணத்தில் இல்லை என்பது ஐரோப்பிய மச்சானுக்கு தெரியவில்லை. அவரின் கோபம் வசைச் சொற்களாக வந்திருக்கிறது. அந்தச் சொற்களே சசியை அழ வைத்தன. 

நாங்கள் நூலகம் சென்று படிக்க ஆரம்பித்தோம். இருவரது கதைகளையும். அவளது ஆரம்பக் கதையையும், எனது முடிவுக் கதையையும் இணைத்தால் அது நாவலாக மலர்ந்து நம்மில் பரவியது.   

சிவப்புக் கொய்யாப்பழம் போன்ற உதடுகளையும், மாநிறத்தையும் வைத்திருந்த சசி, என் வசந்த காலமாக மாறிப்போனாள். 

“என் அம்மாவை நினைத்தபோதெல்லாம் ‘குண்டுமணி போல கண்கள் மாறிவிடும். போராளிகள் பகுதியிலிருந்து நான் பல்கலைக்கழகம் வந்தேன். இறுதி யுத்தத்தில் அம்மா தனியே யுத்தத்தில் சிக்கி முள்ளிவாய்க்கால் பகுதியில் உணவு இன்றி இறந்ததை என்னால் ஏற்க முடியவில்லை. எவ்வளவு கருணையான உலகம்! எதிரிகளை கருவிகளால் எதிர்க்க போராளிகள் காத்திருக்க, பட்டினி குண்டுகளையும் அரசாங்கம் போட்டு விளையாடியது. எவ்வளவு விவேகிகள் அவர்கள்?.” 

இப்படியான என் புலம்பல்களில் சசி, ‘’நாங்கள் இருக்கிறம்‘’ என்பாள். அது ஒரு சாமியின் அசரீரிபோலவே என் ஆன்மாவை நனைக்கும். 

நாம் சொல்லிக் கொள்ளாமலேயே ஒருவரையொருவர் நெருங்கிய உறவுகளாக நினைக்க ஆரம்பித்தோம். என்னை தன் தாய்க்கு அறிமுகப்படுத்தினாள். அவர் கருணைமிக்க தோற்றத்தில் இருந்தார். அதுவரை யாழ்ப்பாண வாழைப்பழங்களே என் பசியை போக்கியபடி இருந்தன. யாழ்ப்பாணத்தில் ஆக மலிந்த உணவு அதுதான். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சசி வீட்டில் எனக்கு அன்னதானம் வழங்கினார்கள். பெரிய மனதோடு ஏற்றுக்கொண்டேன். கிழமைக்கு ஒரு தடவைதான் அந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்கினேன். அவள் குடும்பத்தில் ஒருவன்போல் செம்புலப்பெயல் நீர்போலானேன். 

நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, ஒருநாள் கோவில் வாசத்தோடு வந்து வாழை இலையில் சுற்றிய பொங்கலும் மோதகமும் தந்தாள். “சாமிகளை எனக்கு பிடிக்காது. பொங்கலும் மோதகமும் பிடிக்கும்” என்று அவளுக்கு தெரியும். சசி தன் அழகுக் கண்களால் என்னை நேரில் பார்த்து ‘’உன்னைத்தான் நான் திருமணம் செய்வேன்’’ என்றாள். 

இப்படி ஒரு “சாமிதரிசனம்” கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. நீண்ட காலத்தின் பின்கோவிலுக்கு செல்லும் அவசியம் ஏற்பட்டது. இடைவெளி இல்லாத மகிழ்ச்சியை இதயம் பெய்தது. இந்த உலகம் திடீரென அழகாகியது. 

அது நீடிக்கவில்லை. வானவில்லின் மீதே இடியேறு வீழ்ந்தது. இருண்ட மேகம் வண்ணங்களை தின்றது. ஆம்! எம்மை சாத்தான் துரத்த ஆரம்பித்தார். சசிக்கு பணம் அனுப்பிய 10 வயது கூடிய, ஐரோப்பாவில் உள்ள மச்சான் சசியை திருமணம் செய்ய ஆசைப்பட்டுவிட்டார். 

** 

நான் பல்கலைக்கழகம் முடித்துவிட்டு செருப்புக் கடையில் வேலை செய்தேன். சசி கண்ணீரோடு காத்திருந்தாள். தன் தாய்க்கும் என்னை விரும்புவதை சொல்லிவிட்டாள். தாய்க்கும் சம்மதமாயிருந்தது. டொமினிக் ஜீவாவின் காதலியின் தாய்போல் சசியின் தாய் இருக்கவில்லை. 

என் கன்னங்களை வருடியபடி சசியின் அம்மா “தம்பி உன்னை போல் யாரும் பிள்ளைக்கு இருக்காயினம். ஆனால் கை நீட்டி காசு வேண்டிட்டம். அவர்கள் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். நான் என்ன செய்வேன்?” அந்தத் தாயின் கண்ணீர் கொடுமையைத் தந்தது. 

நேற்றைய முதல் நாள் சசியை விமான நிலையத்தில் வழியனுப்பி விட்டேன். துப்பட்டா தோயும்வரை அழுதாள். கைகூப்பி “என்னை மன்னித்து விடு” என்றாள். நான் அழவில்லை. “உனக்கு விசரா?  நீ மகிழ்ச்சியாய் இரு. அது போதும்.” என்றேன்.  

“நீ திருமணம் செய்து வாழ வேண்டும்!” என்றாள். என் கண்கள் சிவந்தது. ஆனால் அழவில்லை. சசியின்  வாழ்வை சசி தீர்மானிக்க முடியவில்லை. அதைத் தீர்மானிக்கும் பொருளாதாரம் என்னிடம் இல்லை. என் சசி குறுகிய காலம் ஆயினும் என் வாழ்வை அழகாக்கியவள். 

** 

அறைக்கு வந்த நேற்றுக்காலை சாத்திய கதவுக்குள் அழுது.. அழுது தூங்கிப்போனேன். மாலை வந்து, இரவு வந்து, காலை வந்து மாலையும் வந்துவிட்டது. நானறியாமல் என் வாழ்வில் ஒரு நாள் என்னை விட்டுத் தொலைந்துவிட்டது. சசி வானத்தில் பறந்துகொண்டிருப்பாள். நான் பூமியில் புதைந்துகொண்டிருக்கிறேன். 

பொறுங்கள்! பொறுங்கள்! ஏதோ சத்தம். கதவுதட்டப்படுகிறது. என்னைத் தேடிவர இப்போ யாருமில்லையே….