(சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (24)) சூறாவளியால் ஏற்பட்ட அரசியல் மாற்றம்

(சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (24)) சூறாவளியால் ஏற்பட்ட அரசியல் மாற்றம்

— பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா —

‘இது என் கதையல்ல, என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை’ 

1978ஆம் ஆண்டு நொவெம்பர் மாதம் 23ஆம் திகதி, கிழக்கு மாகாணத்தில் வீசிய சூறாவளி ஏறத்தாழ ஆயிரம் மனித உயிர்களைக் காவு கொண்டதுடன், மக்களின் உடைமைகளையும், பொருளாதாரத்தையும் சீரழித்தது மட்டுமல்லாமல், இலங்கை அரசியலிலும்-குறிப்பாகத் தமிழ் மக்களின் அரசியலில் – என்றுமே இடம்பெறாத பாதிப்பு ஒன்று உண்டாவதற்கு வழியினையும் ஏற்படுத்தியது.    

சிதைந்த நாட்டைச் சில வருடங்களில் கட்டியெழுப்ப முடிந்தது. மக்களின் வீடுகளைச் செப்பனிட முடிந்தது ஆனால் அரசியலில் வீசிய புயலின் விளைவுகளை எப்போதும், யாராலும் மாற்றமுடியாமல் போயிற்று என்பதுதான் வரலாறு. நாட்டில் வீசிய புயல் இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்டது. அது தணிந்துவிட்டது. அழுக்காறு, அவா, இன்னாச் சொல் கொண்ட மனிதர்களால் உருவாக்கப்பட்ட புயல் இன்னும் தணிந்தபாடில்லை. இனித் தணிவதற்கு இடமும் இல்லை. 

அப்பொழுது தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக இருந்தவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள். 1977 ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற இனக்கலவரமும், அதனைத் தொடர்ந்து நிலவிய அரசியல் சூழ்நிலைகளும் காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் அமைச்சர்கள் எவருடைய பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்ற எழுதப்படாத தீர்மானம் ஒன்றினை எடுத்திருந்தனர்.  

இப்படியிருக்கையில்தான், சில மாதங்களில், கிழக்கு மாகாணம் முழுவதையும் நிர்மூலமாக்கிய சூறாவளி வீசியது.  

அதனால், அப்போது பிரதமராக இருந்த ஆர்.பிரேமதாச அவர்கள், சூறாவளி அனர்த்தத்தினைப் பார்வையிடுவதற்காக மட்டக்களப்பிற்கு வந்திருந்தார். எந்த ஒரு தொகுதிக்கும் அமைச்சர்கள் வருகை தரும்போது, அந்தத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினருக்கு, அவர் எந்தக்கட்சியாக இருந்தாலும், அறியத்தருவதும், அமைச்சர் என்ற ரீதியில்  நடத்தப்படும் அரசாங்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுப்பதும் அந்தக்காலத்தில் வழமையாக இருந்தது.  

அதுவும் சூறாவளி அனர்த்தம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், நாட்டின் பிரதமராக இருக்கும் ஒருவர் அந்த அனர்த்த நிலைமைகளைப் பார்வையிடுவதற்காக வருகைதரும்போது அப்பகுதிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறியத்தருவதும், பிரதமரை அவர்கள் சந்திப்பதும் இன்றியமையாத செயற்பாடாக இருந்தது. அந்த வகையில் இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவரும், 1956ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அந்தப் பதவியில் இருந்துவந்தவருமான திரு. செல்லையா இராசதுரை அவர்கள், மட்டக்களப்பிற்கு வருகை தந்திருந்த, பிரதமர் ஆர்.பிரேமதாச அவர்களைச் சந்தித்தார். புயலில் சேதமடைந்த பகுதிகளை பிரதமருக்குக் காண்பித்தார்.  

புயலால் இடம்பெற்ற சேதங்களைப் பார்வையிட வந்த பிரதமர் அவர்களைப் பாராளுமன்ற உறுப்பினர் இராசதுரை அவர்கள் சந்தித்துப் பேசிய விடயம், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவராக இருந்த அ.அமிர்தலிங்கம் அவர்களுக்கு மகிழ்வைக் கொடுக்கும் செய்தியாக இருந்திருக்க வேண்டும். ஏற்கனவே, திரு.இராசதுரை அவர்களை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கத்தில் 1977 தேர்தலில், அவருக்கு எதிராக உணர்ச்சிக் கவிஞர் திரு.காசி ஆனந்தன் அவர்களைக் களம் இறக்கிய தனது முயற்சி தோல்வியடைந்ததில் தாங்கொணா ஏமாற்றத்தில் தவித்துக்கொண்டிருந்த அமிர்தலிங்கம் அவர்களுக்கு, பிரேமதாச – இராசதுரை சந்திப்பு விடயம் மற்றுமொரு முயற்சியில் இறங்குவதற்கான உபாயத்தை உருவாக்குவதற்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடிக்க வைத்தது. 

அதன்படி பிரதமரைச் சந்தித்தமையை ஒரு குற்றச்சாட்டாக வைத்து, திரு. செல்லையா இராசதுரை அவர்களைக் கட்சியில் இருந்து விலக்குவதற்கான முயற்சி முடுக்கிவிடப்பட்டது. அவ்வாறு அவர் கட்சியில் இருந்து விலக்கப்பட்டுவிட்டால், 1978ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி கொண்டுவரப்பட்ட புதிய அரசியல் அமைப்பின்படி அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இழக்கவேண்டி வரும். எனவே தேர்தல் மூலம் தோற்கடிக்க முடியாத இராசதுரை அவர்களை, அரசியலமைப்பு விதிகளின் மூலம் பதவியிழக்கச் செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.  

உண்மையில் குறிப்பிட்ட அரசியல் அமைப்பு நிறைவேற்றப்பட்டதிலிருந்தே, அதனை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி இராசதுரை அவர்களின் பதவிக்கு ஆபத்து வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உணரப்பட்டதாகவும், அத்தகைய ஆபத்தினை ஏற்படுத்த நினைத்தவர்களுக்குச் சூறாவளி ஒரு சூழலை உருவாக்கிவிட்டதாகவும் அறியப்பட்டது. இதுபற்றி திரு. இராசதுரை அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். 

——- ——- —— 

‘…………தேர்தலின்போதும், அதன் பின்பும் தொகுதியில் சிலராலும், கட்சியின் மேலிடத்து மற்றும் சிலராலும் புறக்கணிக்கப்பட்டு வந்த நான் நிலைமை மாறுமென்று ஒரு வருடகாலம் பொறுத்திருந்தேன். அதன் பின்பும் அவர்கள் மனம் மாறவில்லை. என்னை ஒழித்துக் கட்டுவதொன்றையே இலட்சியமாகக் கொண்டு செயற்பட்டு வந்தார்கள் என்பதை நான் அறியக் கூடியதாக இருந்தது. 

ஓரு சந்தர்ப்பத்தில் மட்டக்களப்புத் தொகுதியில் பட்டிருப்பு எம்.பி. திரு.பூ.கணேசலிங்கத்தின் வீட்டில் நடைபெற்ற ஒரு செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வருமாறு நண்பர் அமிர்தலிங்கமும், வேறு சிலரும் என்னை வந்து அழைத்தார்கள். அப்பொழுது பெருந்தன்மையோடு எனக்கிழைக்கப்பட்ட அநீதிகள், அலட்சியங்கள்,  உபவத்திரங்கள், உத்தரிப்புக்கள், கழுத்தறுப்புக்கள் எல்லாவற்றையும் மறந்து செயற்குழுவில் கலந்துகொள்ள அவர்களுடன் சென்றேன். அன்று எனக்கு திரு.கணேசலிங்கம் வீட்டில் நடந்த அவமானம் மறக்கமுடியாததொன்றாகும். 

செயற்குழுக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திட்டமிட்டு ஏற்கனவே அழைத்துக்கொண்டு வந்து கூட்டம் நடைபெற்ற வீட்டுக்கு முன்னாலுள்ள வீட்டிலும்,  அத்தெருவிலும் குவிக்கப்பட்டிருந்த அரசியல் எதிரிகளால் நானும், என்னோடு சேர்ந்தவர்களும் கேவலப்படுத்தப்பட்டோம். அன்று பிற்பகல் எனது தொகுதிக்குள்ளேயே நடத்தப்பட்ட ஊர்வலத்தில் நான் சேர்த்துக்கொள்ளாது ஒதுக்கப்பட்டேன். அன்று மாலை எனது தொகுதியில் பாட்டாளிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எனக்கு மட்டும் பேசச்சந்தர்ப்பம் மறுக்கப்பட்டது. என்னோடு போட்டியிட்டு மக்களால் ஒதுக்கப்பட்ட காசி ஆனந்தனுக்கே பேச சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதே கூட்டத்தில் கட்சியின் தலைவர் திரு.சிவசிதம்பரம் அவர்களும் கட்சியின் செயலாளர் நாயகம் திரு.அமிர்தலிங்கம் அவர்களும் அங்கு இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 

இந்தச் சந்தர்ப்பத்தில் தந்தை செல்வாவின் தலைமையின் சிறப்பையும், பெருந்தன்மையையும் நான் குறிப்பிடவேண்டியவனாக இருக்கிறேன். தந்தை செல்வா உயிரோடிருந்தபோது மட்டக்களப்புத் தொகுதியில் திரு.காசி ஆனந்தன் ஒரு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். அக்கூட்டத்திற்கு என அச்சிடப்பட்டிருந்த துண்டுப்பிரசுரத்தில் வழக்கம்போல் என்னுடைய பெயர் இடம்பெற்றிருக்கவில்லை. அன்றைய தினம் மட்டக்களப்புக்கு சாலை ரயிலில் வந்திருந்த தந்தை செல்வா மட்டக்களப்புத் தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில் மட்டக்களப்புப் பிரதிநிதி திரு.இராஜதுரையின் பெயர் சேர்க்கப்படவில்லையென்றால் தாமும் அக்கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று காசி ஆனந்தனிடம் முகம் சுண்டி அதிருப்தியோடு கூறிவிட்டு கூட்டத்தில் கலந்துகொள்ளாமலே மாலை ரயிலில் கொழும்புக்கு திரும்பிச் சென்றார்.  

சின்னத் தனத்தோடு நடக்கும் மற்றையோரின் சிறுமையையும் எண்ணிச் சலிக்கின்றேன். 

இந்தப் பின்னணியெல்லாம் அறிந்த எனது ஆதரவாளர்கள் 1978ஆம் ஆண்டு செப்டம்பர்  7ஆந் திகதி புதிய அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் நிறைவேறவிருந்ததை அறிந்ததும், புதிய அரசியலமைப்பிலிருந்த ஒரு சரத்தைச் சுட்டிக்காட்டி, நான் கூட்டணியிலே தொடர்ந்து அங்கம் வகிப்பது ஆபத்து என்றும், அப்போதே நான் வெளியேற வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள். அப்போது அவர்கள் சுட்டிக்காட்டிய அந்தச் சரத்து, ஓர் அரசியல் கட்சியின் செயலாளர் விரும்பினால், அக்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரை விலக்கிவிட்டு அந்த இடத்தில் தமக்குப் பிரியமான ஒருவரை நியமிக்கலாம் என்பதாகும். 

‘இந்த சரத்தின்படி நீங்கள் பழிவாங்கப்படுவீர்கள் கட்சியிலிருந்து இராஜினமாச் செய்யுங்கள்’ என்று எனது தொகுதியில் மட்டுமல்ல நாடு முழுவதிலுமிருந்த எனது அபிமானிகள் கேட்டுக்கொண்டார்கள். அப்படியிருந்தும் அதாவது கட்சிக்கு உள்ளும், புறமும் எனக்கு இழைக்கப்பட்டு வந்த இடர்பாடுகளையும், இடுக்கண்களையும் பொறுத்துக்கொண்டேன். கட்சியிலிருந்து விலக என்மனம் இடம்தரவில்லை………..’ 

——- ——- —— 

அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளக் கூடாது என்பது தமிழரசுக் கட்சியினதோ, த.வி.கூட்டணியினதோ யாப்பில் உள்ள சரத்து அல்ல.  

ஒரு தற்காலிகத் தீர்மானம்தான். சூறாவளியால் கிழக்கிலங்கை சின்னாபின்னப்பட்டுக் கிடக்கின்ற அனர்த்தமான சூழ்நிலையில், கிழக்கு மாகாணத்தையும் உள்ளடக்கிய முழு இலங்கையினதும் அரசாங்கத்தின் பிரதம அமைச்சராக இருக்கின்ற ஒருவர், அந்த இடங்களையும், மக்களையும் பார்க்க வரும்போது அத்தகைய தீர்மானம் காலத்தின் தேவை கருதி விலக்கிக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் அல்லது கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்தத் தீர்மானத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே அரசியல் ஆய்வாளர்கள் முதல் சாதாரண பொதுமக்கள் வரை பெரும்பாலானவர்கள் அந்த நேரத்தில் கொண்டிருந்த கருத்தாக இருந்தது. அதேவேளை தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அமைச்சர்களின் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்திருக்கிறார்கள், அமைச்சர்களைச் சந்தித்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் எவருக்கும் எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பவற்றையெல்லாம் திரு.இராசதுரை அவர்கள் தனது பாராளுமன்றப் பேச்சில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளதிலிருந்து அறியமுடிகிறது.  

——- ——- —— 

‘……..மட்டக்களப்பின் பரிதாப நிலையை நான் எடுத்துக்கூறக் கேட்ட பிரதமர், மட்டக்களப்பின் முன்னேற்றத்திற்காகத் தாம் தக்க நடவடிக்கை மேற்கொள்வதாக வாக்குறுதியளித்தார். மக்கள் பிரதிநிதி என்ற வகையில் இப்படி நான் செய்தது கூட்டணியின் மேலிடத்துக்குப் பிடிக்கவில்லை. ‘ஏன் இப்படிச் செய்தாய்?’ என விளக்கம் கேட்டார்கள். அப்படிக் கேட்டவர்கள் இப்படியான குற்றத்தை இழைக்காதவர்களாக இருந்திருந்தால் நான் கவலைப்பட்டிருக்கமாட்டேன். அவர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்திருப்பேன். ‘உங்களில் விபச்சாரத்தைப் புரியாதவர்கள் முதற்கல்லைவிட்டு எறியட்டும் மரியா மத்தலெனா மீது’ என்று சொன்னார் யேசுகிறிஸ்து. அந்த பைபிள் கதைதான் எனக்கு ஞாபகம் வந்தது. என்னிடம் விளக்கம் கேட்டவர்கள் மந்திரிகளின் வரவேற்புக்களில் கலந்துகொள்ளாதவர்களா? மந்திரிகள் அளித்த ஹோட்டல் பார்ட்டிகளில் கலந்து உண்டும்,  குடித்தும், உறவாடியும் களிக்காதவர்களா? மந்திரிமார்களின் படிகளிலேறி உத்தியோகமும், நியமனங்களும், அரசாங்க போர்டுகளில் பதவிகளும் யாசகமாகக் கேட்காத தியாக சீலர்களா?……….’ 

கேட்ட கேள்விக்குப் பதில் கொடுக்க நான் முப்பது நாள் அவகாசம் கேட்டேன். முப்பது வருடம் வளர்த்தவனுக்கு 30 நாளென்ன, 300 நாள்தான் கொடுத்தால் என்ன குறைந்துவிடுமா? சற்றும் எதிர்பாராதபடி இடையில் ஏற்பட்ட பெரும் சூறாவளியின் அனர்த்தங்களை முன்னிட்டாவது நான் கேட்ட அவகாசத்தைக் கொடுத்திருக்கலாமல்லவா? அப்படிச் செய்யாமல் கட்சியில் நான் வகித்த பதவியையும், செயற்குழு அங்கத்துவப் பதவியையும் பறிமுதல் செய்ததோடு, எனக்கு கல்தா கொடுத்துவிட்டதாகப் பத்திரிகைகளில் செய்தி வெளிவரும்படியும் செய்தார்கள். என்னுடைய அரசியல் ஆளுமையையே இதன் மூலம் தவிடுபொடியாக்க முயன்றார்கள். ஏன் இந்த அநியாயம்? ஏன் இந்த நிஸ்டூரம்? ஏன் இந்த சித்திரவதை? ஏன் இந்த சிலுவை ஏற்றம்? எனக் குமுறிக் குமுறிக் கேட்டது என் மனம். அதற்குக் கிடைத்த தவிர்க்க முடியாத பதில்தான் நான் இம்மாதம் 9ஆம் திகதி சமர்ப்பித்த இராஜினமா……’ 

——- ——- —— 

இராஜதுரை அவர்கள் அரசாங்கத்தில் இணைந்து பத்து ஆண்டுகள் அமைச்சர் பதவியில் இருந்தமையை மட்டும் தெரிந்துகொண்டிருக்கும் இன்றைய தலைமுறையினர், அவர் அமைச்சர் பதவியை விரும்பியே கட்சி மாறியதாகவும், தமிழரசுக் கட்சிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் துரோகம் இழைத்ததாகவும், அவர் ஒரு துரோகி என்றும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், திரு. இராஜதுரை அவர்கள் கட்சி மாறியவரல்ல, கட்சி மாறவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டவர்.  

ஒரு கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிப் பாராளுமன்ற உறுப்பினராகிய ஒருவர் தாமாகவே விரும்பி, அந்தக் கட்சியியிருந்து வேறு கட்சிக்கு -பெரும்பாலும் ஆளும் கட்சிக்குத் – தாவிச் சென்றால் அத்தகையவரே கட்சி மாறியவராவார். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை, 1977 ஜூலை தேர்தலில் வெற்றிபெற்றுப் பொத்துவில் தொகுதியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சீ.கனகரெத்தினம் அவர்கள் 1977 டிசம்பர் மாதம் தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாறி, மாவட்ட அமைச்சரானார். 1970 மே மாதத்தில் நடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டுப் பட்டிருப்புத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான சோ.உ. தம்பிராசா அவர்கள் சில மாதங்களில் ஆளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்து கொண்டார். 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 21 திகதிய பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டுப் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட திரு.எஸ்.வியாழேந்திரன் அவர்கள், 2018 ஒக்டோபர் மாதம் த.தே.கூட்டமைப்பை விட்டு விலகி, ஆளும் கட்சியில் சேர்ந்து, அப்போது ஏற்பட்ட அரசியல் நெருக்கடிச் சூழல் காரணமாக ஆட்சிக்கு வந்த அமைச்சரவையில் கிழக்கு மாகாணத்திற்கான பிரதேச அபிவிருத்திப் பிரதி அமைச்சரானார்.   

இவையெல்லாம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாமாகவே சிந்தித்து, விரும்பிச் செயற்படுத்திய கட்சி மாறல்கள். ஆனால் திரு செல்லையா இராசதுரை அவர்களது கட்சி மாறல் அவ்வாறு நிகழ்ந்த ஒன்றல்ல. அவரது பதவியைப் பறிப்பதற்காகத் திட்டமிடப்பட்ட தொடர் முயற்சிகளின் உச்சக்கட்டமாக, அரசியலமைப்பின் சரத்தினையும், புயலின் வரத்தினையும் கொண்டு, எடுக்கப்பட்ட செயற்பாட்டின் மூலம், 1979ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம், திரு இராசதுரை அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, அதனால்,அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்கவேண்டிய நிலைமை  ஏற்பட்ட கடைசித் தறுவாயில், அவருக்கு வேறு எந்த வழியும் இன்றி,  தான் வளர்த்த கட்சியிலிருந்து விலகி அரசாங்கக் கட்சியில் சேரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.  

அரசியலமைப்பின் எந்தச் சரத்தின் அடிப்படையில் அவரது பதவியைப் பறிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டனவோ. அந்தத் சரத்திற்கு, 1979 பெப்ருவரி 22ஆம் திகதி, ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. எந்த ஒரு கட்சியிலும், அதீத செல்வாக்குமிக்கவராக அல்லது கட்சியைத் தன்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்ற ஒரு செயலாளரின் தாந்தோன்றித்தனமான தீர்மானத்தினால், கட்சியின் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரையும் அவ்வளவு எளிதாகப் பதவி நீக்கம் செய்யமுடியாதவாறு ஏற்படுத்தப்பட்ட அந்தத்திருத்தத்தின் பயனாக இராசதுரை அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிக்க இயலாமல் போயிற்று. 

அத்துடன் 1956 முதல் 1989 வரை 33 வருடங்கள் தொடர்ந்து மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த அவரது நீண்டகால அரசியல் அனுபவத்தின் காரணமாக அவர் அமைச்சர் அவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். புதிதாக உருவாக்கப்பட்ட, பிரதேச அபிவிருத்தி, தமிழ்மொழி அமுலாக்கல் மற்றும் இந்து சமய விவகார அமைச்சுக்கு அமைச்சரானார். அந்தப் பதவியில் பத்து வருடங்கள் தொடர்ந்து பணியாற்றினார். 

அவர் அமைச்சராக இருந்த காலத்தில், கிழக்கு மாகாண மக்களுக்கு மட்டுமன்றி முழு இலங்கைத் தமிழ் மக்களுக்கும் அளப்பரிய பயனுள்ள பணிகளை ஆற்றுவதற்கான வாய்ப்புக்கள் அவருக்குக் கிடைத்தன என்பது இன்று வரலாறாகியுள்ளது.  

மேலும், அதன்பின்னர், மலேசிய நாட்டுக்கான இலங்கைத் தூதுவராகப் பலவருடங்கள் கடமை புரிந்தார். 

திரு இராசதுரை அவர்கள், நகரசபையாக இருந்த மட்டக்களப்பு உள்ளூராட்சிச் சபை 1967இல் மாநகர சபையாகத் தரமுயர்த்தப்பட்டபோது, அதன் முதலாவது நகரபிதாவாகப் பதவியேற்று 1968 வரை அந்தப் பதவியில் இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  

எனவே, 1978ஆம் ஆண்டு இயற்கை சீற்றம் கொண்டதால் அடித்த புயலால் ஊர்கள் அழிந்தன, உடைமைகள் அழிந்தன, உயிர்கள் இறந்தன, வீடுகள் சிதைந்தன. அவை மட்டுமல்லாமல், அழுக்காறு கொண்டிருந்த அரசியல் தலைமையின் அநியாயத்தால் தமிழ் மக்களின் அரசியலில், குறிப்பாகக் கிழக்கு மாகாண அரசியலில் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட சேதம் அரசியல் வரலாற்றினையும் திசை திருப்பியது.  

(நினைவுகள் தொடரும்)