— அ. தேவதாசன் —
தமிழர்கள் கலாச்சாரம் காப்பாற்றப்படவேண்டும் எனும் பேசு பொருள் தமிழ்த்தேசிய பற்றாளர்கள் மற்றும் கலாச்சார காவலர்களால் அதிகம் தூக்கிப்பிடிக்கப்படுகிறது.
கலாச்சாரம் என்பது ஒரு மனித இனத்தை எவ்வாறு வழிநடத்துகிறது, வழிநடத்தப்படும் சமூகம் அதனூடாக எவ்வாறு மேம்படுகிறது, மற்றைய இனக்குழுக்களுக்கு எவ்வாறு முன்னுதாரணமாக திகழ்கிறது, அதிலிருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது போன்ற பல கேள்விகள் உள்ளன.
கலாச்சாரம் என்பது ஒரு மனிதக் குழுவின் வாழ்க்கை முறை என்று எடுத்துக்கொண்டாலும் தமிழ் பேசும் இனக்குழுக்கள் எவ்வகையான கலாச்சார வாழ்க்கை முறையை பின்பற்றுகின்றனர் என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது அவசியம்.
மனித வாழ்க்கை முறை என்பது காலத்திற்கு காலம் அரசியல், பொருளாதார, சமூக, சூழலியல் நிலைமைகளுக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும்.
சங்க காலத்தில் இருந்த கலாச்சார வாழ்வியல் வேறு, ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு, சிறுதெய்வ வழிபாட்டுக் காலங்களில் இருந்த வாழ்க்கைமுறை வேறு, இப்போதுள்ள தொழில்நுட்ப யுக வாழ்க்கைமுறை வேறு, இதுவும் மாற்றம் பெறும். ஆகவே தமிழர்களுக்கு என்று ஒரு நிலையான கலாச்சாரம் இருந்ததில்லை தமிழருக்கு மட்டுமல்ல சகல இனக்குழுக்களின் நிலையும் இதேதான்.
இன்றைய காலத்தில் தமிழர்களது வாழ்க்கைமுறை கலாச்சாரம் என்பதை இந்துத்துவ பார்ப்பனிய சனாதன கருத்தியலுக்குள் ஊறிப்போன ஒன்றாகவே பார்க்க முடியும். கலாச்சாரத்தின் பெயரில் நடாத்தும் அனைத்துக் கொண்டாட்டங்களும் இதிகாச புராண புனைவுகளுக்குட்பட்ட முறைப்படியே தான் நிகழ்கின்றன.
ஒரு குழந்தை பிறந்து மொட்டையடிப்பதில் இருந்து வயதாகி இறக்கும் வரை நடக்கும் நிகழ்வுகளில் அதிகமானவை பிராமணர் என்கிற சாதியினரை அழைத்து புரியாத மொழியிலேயே பூசைகள் நடைபெறுகின்றன.
கிறிஸ்தவ மதங்களிலும் அம்மதத்திற்கான பிறப்பிலிருந்து இறப்பு வரையான சடங்குகள் நிகழ்கிறது. அத்துடன் சாமத்தியச் சடங்கு, தாலிகட்டுதல், குறிப்பு எழுதுதல் போன்ற இந்துத்துவ சடங்குகளும் தமிழ்க் கலாச்சாரம் எனும் பெயரில் நடைபெறுகின்றன. ஆனாலும் அவர்களது அனைத்துப் பூசைகளும் தமிழில்தான் நடக்கின்றன. தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் மதத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மறைத்தோ பிரித்தோ பேசுவதில்லை. எந்த மொழி பேசினாலும், எந்த நாட்டில் வாழ்ந்தாலும் மத வழிகாட்டியே எங்கள் வாழ்க்கை முறை என்பதில் வெளிப்படைத்தன்மை உள்ளவர்கள். அவர்கள் தமிழ்க் கலாச்சாரத்திற்கு உரிமை கோரியவர்கள் அல்ல.
ஆனால், வர்ணாச்சிரம கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பனியத்தையும் சமஸ்கிருதத்தையும் முன்வைத்து சடங்குகளை நடாத்தும் இந்துக்கள் மட்டும் தமிழ் முறை என்கிறார்கள். ஒரு பொது நிறுவனத்திற்கு அத்திவாரக்கல் வைப்பது, புதிய வீதி உருவாக்கத்திற்கான கல் வைப்பது, பொது நிகழ்வுகளை தொடங்கி வைப்பது போன்ற விடயங்கள் தமிழ் கலாச்சாரம் என்ற பெயரில் இந்துத்துவ முறைப்படியே நடக்கிறது.
இந்துக்கள் தங்கள் மதத்தின் மீது நம்பிக்கை வைத்து சொந்த வாழ்க்கையில் கடைப்பிடிப்பது அவர்களது சுதந்திரம், அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் பொது நிழ்வுகளில் நடாத்தும் இச்சடங்கு முறைகள் தமிழ் முறையென பொத்தம்பொதுவாக ஒட்டு மொத்த தமிழ்ப் பேசும் மக்கள் மீதும் தூக்கி நிறுத்தவது சமூக நல்லிணக்கத்திற்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிரானது. இச்சடங்குகள் ஊடாக சாதியம் மேலும் மேலும் தற்காத்துக் கொள்ளப்படுவதுடன்,மற்றைய மதத்தவர்களை தமிழர்கள் எனும் குடையின் கீழ் அமரவிடாமல் தூரத்தே தள்ளி விடகின்றது.
சாதியத்தை கட்டுமானமாகக்கொண்ட ஒரு மதத்தையும் அதன் வழி முறையான வாழ்க்கைமுறையையும் தமிழ்பேசும் மக்களின் ஒருபகுதியினர் பின்பற்றுகின்றனர். இவர்கள் இதுவே தமிழ்க் கலாச்சாரம் என்பதாகவும் நிலைநிறுத்தி உள்ளனர். புனிதங்களால் கட்டப்பட்டிருக்கும் இவ்வடிவம் எந்த விதமான முற்போக்கான அம்சங்களும் இல்லாதிருக்கிறது.
இப்படி உருவாக்கப்பட்டிருக்கும் கற்பிதம் தமிழ்தேசியத்தை கட்டியெழுப்பவோ, சாதியற்ற சமூகத்தை உருவாக்கவோ, பால் சமத்துவத்தை பேணவோ எந்த வகையிலும் பொருத்தமற்றது. ஆனாலும் இவர்களே தமிழ்த் தேசியத்தின் ஏகப்பிரதிநிதிகளாகவும் இருக்கின்றனர். இதுனாலேயே தமிழர்கள் தமக்கு நியாயமானதாக முன்வைக்கும் உரிமைப் போராட்டம் தொடர்ச்சியான தோல்விகளையே பரிசளிக்கிறது.
இலங்கையில் உள்ள தமிழ்த் தலைமைகள் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓடுகிறார்கள் என வைத்துக்கொண்டாலும் சமுத்திரத்துக்குள் சுழி ஓடி சுறா பிடிக்கக்கூடிய சூழலில் வாழும் பும்பெயர்ந்தோர் சாதியத்தகர்ப்பு பற்றி எவ்வாறு சிந்திக்கிறார்கள் எவ்வாறு செயற்படுகிறார்கள் என்பது பற்றிய கேள்வி முக்கியமானது.
சாதியத்தை மக்கள் மனதிலிருந்து பிடுங்கி எறிவதற்கு பதிலாக அதை தண்ணீர் ஊற்றி வளர்ப்பதற்கே பெரும் முயற்சி எடுக்கிறார்கள். சாமி தூக்க ஆளில்லாத கோயில்கள் எல்லாம் புலம் பெயர்ந்தவர்களால் கோபுரங்களால் நிரம்பி வழிகிறது. அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட சாமி வலம் வரும் வாகனங்கள் கோயில்களுக்குள் உழுத்து உருக்குலைகிறது. கண்டு கொள்ளாமல் இருந்த பல கோயில்கள் புனருத்தாரணம் செய்யப்பட்டு, புதிய விதிகள் உருவாக்கப்பட்டு தீண்டாமை புதிய வடிவங்களில் செயலப்படுத்தப்படுகிறது. இதன் வெளிப்பாடே இயந்திரம் மூலம் தேர் இழுத்தமை. இராணுவத்தை அழைத்து தேர் இழுத்ததும் கோயில் கேணியையச்சுற்றி இரும்புக்கம்பிகளால் கூடு அடைத்ததும் உலகம் அறிந்த செயற்பாடுகள். புலம் பெயர்ந்த தேசங்களில் காட்ட முடியாத சாதிய திமிர்களை ஊரில் உள்ள இவர்களது சகாக்கள் மூலம் செயற்படுத்தி இன்பம் அடைகின்றனர்.
இதுமட்டுமின்றி கலாச்சாரத்தை காப்பாற்றும் இறை தூதர்களாக தங்களை முன்னிறுத்திக் கொண்டு ஈழத்தில் பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும், கல்வி கற்க வேண்டும், எப்படி நடக்க வேண்டும் போன்றவற்றிற்கு வகுப்பு எடுப்பவர்களாகவும் உள்ளனர். தமது பொருளாதார பலத்தின் ஊடாக ஈழத்து ஏழைப்பிள்ளைகளை “கலாச்சாரம் காப்பாற்றும் பாவப்பிறவிகளாக” பயன்படுத்துகிறார்கள்.
நடுத்தர வர்க்க சமூகமாக இருந்த யாழ்ப்பாண சமூகத்தை ஏழை பணக்கார வர்க்கமாக பிரித்த பெருமை புலம் பெயர்ந்த தமிழர்களையே சாரும்.
1982க்கு முற்பட்ட காலங்களில் யாழ் குடாநாடு தமிழர்களால் தென்னிலங்கையில் நடாத்தப்பட்ட பல தொழில் நிறுவனங்கள் ஊடாகவும், அரச நிர்வாகிகள் ஊடாகவும் பெருமளவு நிதி மணியோடர் மூலம் யாழ்ப்பாணத்தை வந்து சேர்ந்தது. அதுவே யாழ்ப்பாணத்து பொருளாதார வலுவாக இருந்து. இப்போது புலம் பெயர்ந்த தேசங்களில் இருந்து பெருமளவு நிதி மணிக்கிராம்,உண்டியல் மூலம் யாழ்ப்பாணம் வந்து சேருகிறது. இது பலரை எந்த விதமான உடல் உழைப்போ, மூளை உழைப்போ இன்றி சொகுசு வாழ்வுக்கு இட்டுச் செல்கிறது. இதன் எதிரொலியாக பொருளாதாரத்தில் மிகவும் நலிந்த குடும்பத்து சில இளைஞர்கள் களவு, கொள்ளை போன்ற சட்டவிரோத செயல்களுக்கு தூண்டப்படுகிறார்கள். புலம்பெயர்ந்தோர் நிதி சரியான முறையில் பயன்படுத்தாமை எதிர்காலத்தில் பாரிய பக்க விளைவுகள் ஏற்பத்தும் அபாயமும் உள்ளது.
(தொடரும்….)