சீன, இந்திய, அமெரிக்க தலையீடுகள்: நம் தலையில் நாம் போட்ட மண்

சீன, இந்திய, அமெரிக்க தலையீடுகள்: நம் தலையில் நாம் போட்ட மண்

  — கருணாகரன் — 

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் பற்றி அதிகமாகப் பேசப்படுகிறது. இதொன்றும் புதிய விசயமல்ல. 1970 களில் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சுதந்திரக் கட்சி ஆட்சியிலிருந்த போது அது சீனாவுடன் மிக நெருக்கமான உறவைப் பேணியது. அதற்கு அடையாளமாக கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் தொடக்கம் நாட்டில் பல பகுதிகளிலும் உள்ள கட்டிடங்களைக் காணலாம். வடக்கே கிளிநொச்சி நகரில் கூட சீன மாதிரியில் சந்தையும் பொது நூலகமொன்றும் அமைக்கப்பட்டது. அப்பொழுது தபால் தந்தி அமைச்சராக இருந்த செல்லையா குமாரசூரியர் கிளிநொச்சியில் அதிக செல்வாக்கைச் செலுத்தினார். அதனால் கிளிநொச்சிக்கு அந்தக் கட்டிடத் தொகுதி வந்தது. பின்னாளில் அதைப் புலிகள் அழித்தே விட்டனர். 

தொடர்ந்து சீனாவிலிருந்தும் பர்மாவிலிருந்துமே 70 களில் அரிசி இறக்குமதி நடந்தது. வெள்ளைப் பச்சை அரிசி இந்த இரண்டு நாடுகளிலிருந்துமே இலங்கைக்கு அதிகளவில் அறிமுகமானது. இப்படியே இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. சீனா அப்போதே வல்லரசு. அது உலகப் பொருளாதார விஸ்தரிப்புக்கான முனைப்பிலிருந்தது. அதற்கான நிகழ்ச்சி நிரலின்படி அது செயற்பட்டு வந்தது. சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் ஆட்சியிலிருந்திருந்தால் அப்போதே சீனாவின் செல்வாக்கு பெருகியிருக்கும். 

ஆனால் 1977 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் ஐ.தே.க தலைமையிலான அரசாக மாறியது. அதன் தலைவராக ஜே.ஆர். ஜெயவர்த்தனா இருந்தார். ஜே.ஆர் எப்போதும் மேற்குமயச் சிந்தனையாளர். மேற்கின் ஆதரவாளர். ஐ.தே.கவே மேற்கின் விசுவாசக் கட்சிதானே. கூடவே ஜே.ஆர் யப்பானுடன் நெருக்கமான உறவாளர் வேறு. 

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு யப்பானைத் தனிமைப்படுத்தும் பிரேரணை வந்தபோது ஐ.நாவிற்கான இலங்கையின் பிரதிநிதியாக இருந்த இளவல் ஜெயவர்த்தனா யப்பானை அப்படித் தனிமைப்படுத்துவது நியாயமில்லை என்று வாதிட்டிருந்தார். வேண்டுமானால் அதற்கு நிபந்தனைகளை விதிக்கலாமே தனிமைப்படுத்துவது பொருத்தமான நடவடிக்கை இல்லை என்றார். இது யப்பானுக்கும் ஜெயவர்த்தனாவுக்கும் இடையிலான மறக்கமுடியாத உறவை உருவாக்கியது. ஜெயவர்த்தனா பதவியேற்றவுடன் அந்த நன்றிக்கடனை ஜே.ஆருக்குச் செலுத்த முற்பட்டது. அதன் விளைவே இன்று நாம் பார்க்கின்ற ஜெயவர்த்தனபுரத்திலுள்ள பாராளுமன்றக் கட்டிடம் தொடக்கம் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்கான ஏராள உதவிகள் வரையில் செய்யப்பட்டன. ஜப்பான் பெருமளவு நிதியுதவியைக் கூட இலங்கைக்குச் செய்திருந்தது. திடீரென யப்பானிய வாகனங்கள் தெருக்களில் பெருகின. யப்பானியப் பொருட்கள் சந்தையில் குவிந்தன. பின் வந்த பதினேழு ஆண்டுகால ஆட்சியிலும் இதுதான் நிலை. இதுதான் கதை. மேற்குலகும் யப்பானும் இணைந்தொரு சமாந்தரப் பயணத்தை இலங்கையில் செய்தன.  

இது அப்பொழுது இந்தியாவின் பின்பக்கத்தைச் சூடாக்கிக் கொண்டேயிருந்தது. ஏனென்றால் இந்தியா அப்பொழுது சுயசார்ப்புப் பொருளாதாரத்தில் எழுச்சியடைந்து கொண்டிருந்தது. அதற்குச் சந்தை தேவை. கூடவே மேற்கும் யப்பானும் இணைந்து தனக்குப் பக்கத்திலிருக்கும் இலங்கையில் செல்வாக்கைச் செலுத்துவது அதனுடைய பிராந்தியப் பாதுகாப்புக்கும் நல்லதல்ல என்ற எண்ணம் மேலெழுந்தது. அது இந்திரா காந்தி இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பிலிருந்த காலம். 

இலங்கையில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகும் அதன் இணைப் பயணியுமான யப்பானும் செல்வாக்குச் செலுத்துவதென்பது ஏறக்குறைய இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதுடன் பக்கத்திலுள்ள சந்தையை இழப்பதுமாகும் என்று இந்திரா காந்தி சிந்தித்தார். விளைவு இலங்கையின் இன முரண்பாட்டை –இனப்பிரச்சினையைப் பயன்படுத்தினார். அதன் விளைவே கொழும்பை ஆட்டிப்படைப்பதற்கான – வழிக்குக் கொண்டு வருவதற்கான தமிழ் இயக்கங்களை இந்தியா பாலூட்டி வளர்த்த கதை. 

இதை இரண்டு வழிகளில் இந்தியா செய்தது. ஒன்று இந்தத் தமிழ் இயக்கங்களுக்கு ஆயுதப்பயிற்சி. அதையும் ஒரு இயக்கத்துக்கு வழங்கி அதைப்பலப்படுத்தி, அது தனக்குக் கட்டுப்படாமல் போனாலும் என்ற எச்சரிக்கையினால் ஒன்றை ஒன்று பலன்ஸ் பண்ணக் கூடியமாதிரிப் பல இயக்கங்களை ஒரே நேரத்தில் வளர்த்தது. இதன் மூலம் உள்நாட்டில் ஆயுத ரீதியான நடவடிக்கை மூலம் கொழும்பு அரசுக்கு – ஜே.ஆர் அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுப்பது. இரண்டாவது, இலங்கையின் உள்நாட்டுப் போர் உண்டாக்கும் அதிர்வு, அகதிகள் பெருக்கம், அந்த அகதிகள் தமிழ் நாட்டில் குவிவது என்ற காரணங்களை வைத்து கொழும்பை ராஜதந்திர ரீதியாக அழுத்தத்திற்குட்படுத்துவது. 

1980களைத் தெரிந்தவர்கள் இதை நினைவு கூர முடியும். இந்திய வானொலியின் ஆகாஸவாணி மற்றும் மாநிலச் செய்திகளில் இலங்கை விவகாரமே அதிகமாகப் பேசப்பட்டது. பின்னர் இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்த கதையும் பின்னாளில் இந்தியப்பொருட்களுமே எங்கள் சந்தையுமாகிய கதைகளை நாம் நன்றாக அறிவோம். நம்முடைய தெருக்களிலிருந்து நாம் உடுக்கும் உடைகள், உண்ணும் உணவில் பாதி வகைகள், வீட்டிலுள்ள புழங்கு பொருட்கள் என எல்லாமே இந்தியப் பொருட்களே.  

1980கள் வரையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உள்ளுர் உற்பத்திகள் மற்றும் கைத்தொழில்கள் எல்லாம் உள்நாட்டுப் போரினாலும் இந்தியப் பொருட்களின் மலிவான இறக்குமதிகளினாலும் அப்படியே செத்தொழிந்தன. 

தற்போது கண்டி தொடக்கம் யாழ்ப்பாணம் வரையில் இந்திய உதவித்திட்டங்கள் ஏராளமாக நடக்கின்றன. யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள கலாச்சார மத்திய நிலையத்தையே இந்தியாதான் நிர்மாணித்துக் கொடுத்துள்ளது. பல்கலைக்கழகத்திற்குக் கூட பல உதவிகள். 

இதற்கெல்லாம் காரணம், இலங்கையைத் தன்னுடைய பிடிக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே. 

இது பின் வந்த எந்த ஆட்சியாளரையும் விட்டு வைக்கவில்லை. சர்வதேச அரசியலும் செப்ரெம்பர் 11 மற்றும் சோவியத் யுனியனின் வீழ்ச்சி, பனிப்போரில் ஏற்பட்ட மாற்றம் போன்ற சர்வதேச அரசியல் சூழமைவுகளால் இந்தியாவை எந்த ஆட்சியாளரும் புறக்கணிக்க முடியாமல் போய் விட்டது. இந்தியாவும் மேற்குச் சாய்வாகி விட்டது. 

இந்தப் பழைய கதைகளை எல்லாம் இங்கே ஏன் சொல்ல வேண்டியிருக்கிறது என்றால் ஒவ்வொரு தரப்பும் தத்தமது நலன்களுக்காகவே பாடுபடுகின்றன. பொறிகளை வைக்கின்றன. உதவுவதாகத் தாராள நிலையைக் காண்பிக்கின்றன என்பதை நினைவூட்டுவதற்காகவே. 

ஆனாலும் இலங்கை ஒரு வேறு விதமான நாடு. அதிலும் கொழும்பின் இயல்பே வேறு. அது தேவைக்கு ஏற்ப அவ்வப்போது தனக்கிசைவான தரப்புகளோடு ஒட்டி உறவாடுமே தவிர, அப்படியே தன்னைச் சரணாகதிக்குள்ளாக்குவதில்லை. கொழும்பை ஆட்டிப்படைக்கும் வகையில் புலிகளின் யுத்த முனைப்பிருந்த போது கூட இலங்கை ஒரு நேரத்தில் மேற்கையும் கிழக்கையும் மத்திய நாடுகளையும் தன்னோடிணைத்து வைத்துக் கொள்ளும் ஒரு ராஜதந்திரத்தையே பேணியது. இலங்கை இந்திய உடன்படிக்கையின்போது இந்தியாவின் அழுத்தம் காரணமாக திருகோணமலைத் துறைமுகத்தை அண்மித்த பகுதியை எண்ணெய்க்கு தங்களை அமைக்கக் கொடுத்திருந்தது. அதையொட்டிய காலச் சூழலில் புத்தளத்தில் அமெரிக்காவுக்கு (Voice Of America) ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் கொடுத்தது. இதைத் தவிர வேறு எதுவும் பெரிதாக வெளியாருக்குக் கொடுத்ததாக இல்லை. 

ஆனால் இது இரண்டுமே தவறு. நாட்டை வெளிச்சக்திகளுக்குத் தாரை வார்ப்பதற்குச் சமம் என்று சில சக்திகள் எதிர்த்தன. இதில் முக்கியமானது ஜே.வி.பி. அதிலும் இந்தியா இராணுவத்தின் வருகையை ஜே.வி.பி கடுமையாகவே எதிர்த்தது. அப்போது இந்தியப் பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யக் கூடாது. அவற்றை யாரும் வாங்கிப் பாவிக்கக் கூடாது என்ற கட்டளையை ஜே.வி.பி பிறப்பித்திருந்தது. அது அப்பொழுது ஆயுதந் தாங்கியிருந்ததால் இந்த நிலைப்பாட்டில் அதிக செல்வாக்கைச் செலுத்தியது. ஆனாலும் ஜேவிபியினால் இதில் வெற்றியடைய முடியவில்லை. ஜேவிபியே இரண்டு மூனறாக உடைந்து சிதறியதே மிச்சம். இந்தியா தன்னுடைய செல்வாக்கை தீவிரப்படுத்திக் கொண்டிருந்தது. 

இருந்தும் பின் வந்த உச்சமான போர்க்காலத்திற் கூட தன்னை முழுதாக எந்தவொரு நாட்டின் கீழும் இலங்கை வைத்துக் கொண்டதில்லை. ஆனால் போர் முடிந்த பிறகு இலங்கையில் யார் செல்வாக்கைச் செலுத்துவது என்ற போட்டி நிலவியது. உண்மையில் இந்தப் போட்டி கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலானது. இப்பொழுது அது வெளிப்படையாக நடக்கிறது. போருக்குப் பிறகுநாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பெருமளவு நிதி தேவைப்பட்டது. அதைச் செய்வதற்கு சீனா முன்வந்தது. இந்தியாவும் பெருமளவு நிதியை அள்ளிக் கொட்டியதுதான். 50 ஆயிரம் வீடுகளைக் கட்டியது தொடக்கம் ஏராளமான உதவிகளை இந்தியா செய்தது. இன்னும் செய்து கொண்டிருக்கிறது. ஆனாலும் சீன உதவி யானையைப் போலப் பிரமாண்டமானது. அது உதவியாகவும் பெருங்கடனாகவும் வந்து கொண்டேயிருந்தது. 

விளைவு அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடக்கம் கொழும்பு போட் சிற்றி வரை வந்திருக்கிறது. இந்தியாவும் குறைந்ததல்ல. அதுவும் இதற்குப் போட்டியாக தன்னுடைய பங்கைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.  

ஆக மொத்தத்தில் உள்நாட்டில் வளங்களையும் அதிகாரத்தையும் பகிரத் தயாரில்லாததன் விளைவே நீடித்த போரும் அழிவும் பொருளாதாரப் பின்னடைவும். அதன் தொடர்ச்சியான விளைவுகளே இப்போது நடந்து கொண்டிருக்கும் உள் நுழைவு அல்லது தலையீடு அல்லது ஆக்கிரமிப்பு அல்லது தாரை வார்த்தல். எதுவோ, நம்முடைய தலையில் நாமே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறோம். 

நமோ நமோ லங்கா தாயே…