— என்.செல்வராஜா, நூலகவியலாளர்—
கடந்த இதழில் மட்டக்களப்பில் விரைவில் புதிதாக மலரவுள்ள பொது நூலகத்திற்கான அவசர நூலீட்டல் தேவை பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். கைமேல் பலனாக, மட்டக்களப்பு பொது நூலகர் சிவராணி அவர்களின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் திரு. தியாகராஜா சரவணபவன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கொழும்புத் தமிழ்ச் சங்கம், யாழ்ப்பாணப் பொது நூலகம் ஆகிய நிறுவனங்களுடன் தொடர்புகொண்டுள்ளமை மிகவும் வரவேற்கத் தகுந்தது.
தமிழ்ப் பிரதேசங்களில் வெற்றிகரமாக இயங்கிவரும் பல பொது நூலகங்கள் காலம் தோறும்தாம் சார்ந்த பிரதேசப் பிரமுகர்களின் தனிப்பட்ட நூற்சேர்க்கைகளை அன்பளிப்பாகப் பெற்றுத் தமது சேர்க்கையை வளர்ப்பதில் அக்கறை கொண்டுவந்துள்ளன. நூலகங்களின் வருடாந்த பாதீட்டில் கொள்வனவு செய்யப்படும் நூல்கள் சமகால பிரசுரங்களாகவே இருக்க வாய்ப்புள்ளது. சில சந்தர்ப்பங்களில் தனியார் சேகரிப்புகளை மதிப்பீடு செய்து குறித்த நிர்ணயிக்கப்பட்ட விலையில் அவற்றை விலைக்கு வாங்கிய சந்தர்ப்பங்களும் உள்ளன. இத்தகைய பிரமுகர்களின் நூற்சேர்க்கைகளை நூலகங்கள் பெற்றுக்கொள்ளும் போது, சந்தையில் இல்லாத பல அரிய நூல்களையும் ஆவணங்களையும் தமது நூலக இருப்பில் சேர்த்துக்கொள்ளும் அரிய வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.
யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் உருவாக்கத்தின்போது பெறப்பட்ட ஆரம்பகால சேர்க்கைகளில் வணக்கத்துக்குரிய கலாநிதி தம்பையா அவர்கள், நாயன்மார்கட்டு வைத்தியர் இராமநாதன், வித்தியாதரிசி நல்லூர் கந்தையா, வணக்கத்துக்குரிய நல்லூர் ஞானப்பிரகாசர், ந.சி.கந்தையாபிள்ளை, சட்டத்தரணி T.U.சுப்பையா ஆகியோர் உபகரித்த நூல்கள் இடம்பெற்றிருந்ததாக மூதறிஞர் க.சி.குலரத்தினம் அவர்கள் யாழ்ப்பாண நூலக வரலாறு பற்றிய தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பின்னாளில் கலாநிதி ஆனந்த குமாரசுவாமி அவர்களின் சுமார் 700 நூல்கள் கொண்ட நூற்தொகுதி (இது மலேசியாவைச் சேர்ந்த திரு.துரைராஜசிங்கம் அவர்களின் அன்பளிப்பாகும்), திரு சி.வன்னியசிங்கம் அவர்கள் உபகரித்த சுமார் 100 நூல்கள் கொண்ட நூற்றொகுதி, திரு ஐசாக் தம்பையா அவர்கள் உபகரித்த சமயம், தத்துவம் பற்றிய சுமார் 850 நூல்களை உள்ளடக்கிய நூற்தொகுதி, திரு. கதிரவேற்பிள்ளை அவர்கள் வழங்கிய சுமார் 600 நூல்கள் கொண்ட நூற்தொகுதி என்பன சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தன. (எஸ்.எம்.கமால்தீன். ‘நான் கண்ட யாழ்ப்பாண நூலகம்’, வீரகேசரி வார வெளியீடு, 19.07.1981).
மட்டக்களப்புப் பொது நூலகமும் அப்பிரதேசத்தின் பிரமுகர்களின் குடும்பத்தினருடன் உரையாடி, அவர்களது குடும்ப நூற்றொகுதிகளையும் இவ்வாறே தேடிப் பெற்றுக்கொள்ள முயற்சிகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளவேண்டும்.
இனி இவ்விதழில் மட்டக்களப்பு பொது நூலகத்தின் பாரிய கட்டிடத்தினுள்ளேயும் வெளியேயும் அமையவேண்டியுள்ள நூலகப் பிரிவுகள் பற்றி எமது பார்வையைச் செலுத்துவோம்.
ஒரு சிறிய சனசமூக நிலைய நூலகத்தில் பத்திரிகை, சஞ்சிகைகளை வாசிப்பதற்கு வசதியாக ஒரு விறாந்தை அல்லது காற்றோட்டமான இடம், அவற்றையும், மேலும் சில நூறு நூல்களையும் பாதுகாத்து வைப்பதற்கான ஒரு அறை, அந்த அறைக்குள் நூல்கள், சஞ்சிகைகளை பாதுகாத்து வைக்கக்கூடிய ஒரு அல்மாரி என மிகவும் எளிமையான வசதிகளைக் கொண்ட கட்டட அமைவு காணப்படும்.
புதிய மட்டக்களப்பு நூலகம் போன்ற பிரம்மாண்டமான கட்டிடங்களில் அவற்றின் சேவைப் பரப்புக்கும், சனத்தொகைக்கும் ஏற்ப நூலகப் பிரிவுகள் அதிகமானதாகவும், சிக்கலானதாகவும் காணப்படுவதை தவிர்க்கவியலாது. இரண்டு மாடிகளையும், ஒரு குவிமாடத்தையும் உள்ளடக்கிய மட்டக்களப்பு பொதுநூலகத்தைப் பொறுத்தவரை, அதன் சேவை மற்றும் பணிகளுக்கான அலகுகளை கீழ்க்கண்டவாறு வகுக்கலாம்:
உடமைகள் பாதுகாப்பிடம், நூல்கள் பாதுகாப்பிடம், காட்சிக்கூடம், நூல் இரவல் வழங்கும் பிரிவு, வாசிகசாலைப் பிரிவு, சிறுவர் நூலகப் பிரிவு, மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவு, நூற் களஞ்சியப் பிரிவு, பருவ இதழ்ப் பிரிவு, உடனுதவும் சேவைப் பிரிவு, விஷேட சேர்க்கைப் பகுதி அல்லது விஷேட ஆவணப் பிரிவு, கட்புல செவிப்புல சாதனப் பிரிவு, படிப்போர் கூடம், நிர்வாகப் பிரிவு, நூலகர் அலுவலக அறை, கலைக்கூடம், கேட்போர் கூடம்,கண்காட்சிப் பகுதி, படியெடுக்கும் அறை, அல்லது பிரதியெடுக்கும் பகுதி, கணனிப் பிரிவு, நடமாடும் நூலக சேவைப் பிரிவு, உணவுச்சாலை அல்லது பணியாளர் ஓய்வு அறை, ஆண்-பெண் கழிப்பிடங்கள், வாகனத் தரிப்பிடம், நூலகப் பூங்காவும் சிறுவர் பூங்காவும்.
மேலே குறிப்பிடப்பட்ட பிரிவுகளில் பொதுவாக எத்தகைய சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும், அதற்குத் தேவையான வரையறுக்கப்பட்ட விஷேட நியமங்களையும், தேவையான அம்சங்களையும், அடிப்படையாகக் கொண்டு நூலகக் கட்டிடத்தின் எந்த மாடியில், அல்லது எந்தப் பகுதியில் அப்பிரிவை நிர்மாணிக்கலாம் என்பதையும், எத்தனை சதுர மீட்டர் பிரதேசத்தை அதற்காக ஒதுக்கலாம் என்பதையும் பார்ப்போம்.
உடமைகள் பாதுகாப்பிடம்
நூலகத்தின் எப்பகுதியினையும் உபயோகிக்க விரும்பும் வாசகர்களது சொந்தப் பொருட்கள் யாவும் நூலகத்தின் பாதுகாப்புக் கருதி, இப்பகுதியில் வைத்துச்செல்ல வேண்டப்படுவர். நூலகப் பயனாளிகளின் வசதியையும், நூலகத்தினரின் பாதுகாப்புத் தேவையினையும், வசதியையும் கருத்திற்கொண்டு ‘உடமைகள் பாதுகாப்பிடம்’ பொது நூலகக் கட்டிடத்தின் நுழைவாயிலை அண்டியோ, நூலகத்துக்கான பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பரணை அண்டியோ இப்பிரிவு அமையலாம். இப்பிரிவினை நிர்வகிக்கும் பொறுப்பு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கையளிக்கப்படுவது பொதுவான நடைமுறையாகும். நூலக வாடிக்கையாளர்கள் நூலகத்தினுள் பயன்படுத்தத் தேவையேற்படாத ஹெல்மெட், குடை, கைப்பை போன்ற தனிப்பட்ட பொருட்களை உடமைகள் பாதகாப்பிடத்தில் கையளித்தபின் நூலகக் கட்டிடத்தினுள் ஒருவர் உட்பிரவேசிக்கும் வழிமுறைகள் அங்கு பின்பற்றப்படும்.
இலங்கையில் சில இடைநிலை நூலகங்களில் நூலக நுழைவாயிலில் ஒரு மேசை போட்டு அதன் பின்னால் வைப்பிடப்படும் வாசகரின் உடமைகளுக்காக ஒரு இறாக்கையை வைத்து இச்சேவையை நடாத்துவதை கண்டிருக்கிறேன். அங்கு பணியில் இருக்கும் பணியாளர் சோர்வு மிகுதியால் பெரும்பாலும் தூங்கிவழிந்து கொண்டிருப்பதையும் நூலகப் பாவனையாளர்களின் ஹெல்மெட், குடை, உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் அங்கு இறாக்கைகளில் ஒழுங்கற்று வைக்கப்பட்டிருப்பதையும் கண்டிருக்கிறேன். இத்தகைய காட்சிப் படிமங்கள் நூலகக் கட்டிடத்தின் அழகியலுக்கு பெருமளவில் குந்தகம் விளைவிப்பதாயும், நூலகத்தின் சொத்துக்களின் பாதுகாப்பு பற்றிய மக்களின் எதிர்பார்ப்பினை குறைத்து மதிப்பிட வாய்ப்பளிப்பதாயும் இருக்கும். எனவே நூலகக் கட்டிடத்தின் பாதுகாப்பினை மாத்திரமல்லாது, நூலகத்தின் பாவனையாளரின் நம்பிக்கையையும் உறுதிப்படுத்திக்கொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் நூலகத்தின் பிரதான கட்டிடத்திற்கு வெளியிலேயே உடமைகள் பாதுகாப்பிடம் தனித்தனி பாதுகாப்பு பெட்டக அறைகளுடன் வடிவமைக்கப்படுவது நன்று. இது நூலகத்தின் பிரதான கட்டிடத்தின் அழகியலையும் பாதிக்காதிருப்பதை உறுதி செய்யக்கூடியதாகவும் விருக்கும்.
பாதுகாப்பு ஊழியர் உடமைகளைப் பொறுப்பேற்று ஒரு இலக்கத் தகட்டினை இதற்குரிய ‘டோக்கனாக’ வழங்குவார். நூலகப் பாவனையாளர் மீண்டும் வெளியே செல்லும் பொழுது இவ்விலக்கத் தகட்டினை மீளவழங்கி தமது உடமைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
நூல்கள் பாதுகாப்பிடம்
இலங்கையில் பொது நூலகத்திற்கு வரும் வாசகர்கள் உசாத்துணை சேவையினைப் பெற்றுக்கொள்ளவும், நூல்களை இரவல்பெற்றுச் செல்வதற்கும் மாத்திரம் நூலகத்திற்கு வருவதில்லை. பாடசாலை மாணவர்கள் தமது பாடங்களை அமைதியான சூழலில் இருந்து தனித்தோ, நண்பர்களுடன் இணைந்தோ, இரைமீட்டுக் கொள்வதற்காகவும் நூலகத்தை நாடுவது வழக்கம். சிறிய நூலகங்களில் உசாத்துணைப் பிரிவிலேயே இவர்களையும் அனுமதிப்பதுண்டு.
ஆனால் மாநகரசபை நூலகங்களில் இவர்களுக்கென தனிப்பிரிவு ஒதுக்கப்படுவது வழமை. இவர்களுக்கான ‘படிப்போர் கூடம்’ அல்லது ‘படிப்பகம்’ பற்றி இத்தொடரில் அடுத்ததாக விபரிக்கப்பட்டுள்ளது. வெளியிலிருந்து வந்து படிப்பகத்திற்கு மாத்திரம் செல்பவர்கள் தமது சொந்த நூல்களை உடமைகள் பாதுகாப்பு பிரிவின் அனுமதியுடன் எடுத்துச் செல்வதற்கான ஒழுங்குகள் சில இடங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும். அவர்களது சொந்த நூல்கள் பற்றிய குறிப்புகள் இங்கு பதிவுசெய்யப்படுவதில்லை. சில சமயங்களில் நூலகத்தின் இரவல் வழங்கும் பிரிவிலும், சிறப்புச் சேர்க்கைப் பிரிவிலும் இருந்து நூல்களை குறுகிய காலப் பயன்பாட்டுக்கென இரவலாகப் பெற்று படிப்பகத்துக்கு அவற்றை எடுத்துச் சென்று பயன்படுத்திவிட்டு மீள ஒப்படைக்கும் வசதிகளும் நூலகங்களில் இருக்கின்றன. நூலகத்தின் ஏனைய பகுதிகளிலிருந்தும் எடுத்துச் செல்லும் ‘நூலகத்துக்குச் சொந்தமான’ நூல்கள் யாவும் நூல்கள் பாதுகாப்பிடம் என்றழைக்கப்படும் இப்பகுதியில் வைத்துப் பதிவுசெய்துவிட்டே Self Study hall இற்குச் செல்ல மாணவர்கள் வேண்டப்படுவர். படிப்பகத்தின் அமைவிடமும் மேற்கண்ட செயற்பாடுகளை கருத்திற்கொண்டே வசதிக்கேற்ப தீர்மானிக்கப்படவேண்டும்.
படிப்பகம் அல்லது படிப்போர் கூடம் (Self Study hall)
ஒரு சமூகத்தின் அறிவு வளர்ச்சியானது அச்சமூகத்தின் இளையோருக்கு வழங்கப்படும் கல்வி வாய்ப்பிலும் கற்றல் வசதிகளிலும் அதிகம் தங்கியுள்ளது. பொது நூலகங்களும் மாணவர்களின் கல்வியறிவு விருத்தியில் விஷேட கவனம் செலுத்துவதில் அதிக அக்கறை கொண்டவையாகவே உள்ளன. மாணவர்களுக்கான கற்றல் வசதிகளை பொதுநூலகத்தின் வசதியானதும் பொருத்தமானதுமான ஒரு மூலையில் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் பொது நூலகங்கள் இவ்விடயம் தொடர்பாகத் தமது பங்களிப்பை ஆற்றுகின்றன.
அமைதியான, பாதுகாப்பான சூழலில் இருந்து வாசிக்க மாணவர்களுக்கு இடம் கொடுப்பதுடன் மாத்திரம் நில்லாது, அவர்களுக்கான உப பாட நூல்களையும், பிற உசாத்துணை நூல்களையும் வழங்கி அவர்களது வாசிப்பை மேம்படுத்துவதும் நூலகர்களின் கடமையாகின்றது. பாடசாலை மாணவர்கள் மாத்திரமல்லாது உயர் பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள அரச ஊழியர்களும், வளர்ந்தோரும் இப்பிரிவை பயன்படுத்துவது வழமையாகும். பல்வேறு பரீட்சைகளுக்குத் தயார் செய்வோர் நூலகத்தில் தகவல்களைத் தேடுவதுடன் சந்தடிகள், இடையூறுகள் இல்லாமல் தாம் அமைதியாக இருந்து படிப்பதற்கு வசதியாக நூலகங்களில் படிப்போர் கூடங்கள் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நூலகத்தின் இப்பிரிவில் தமது சொந்த நூல்கள் மற்றும் குறிப்புக்களுடன் ஒருவர் வசதியாக இருந்து படிக்க முடியும். இப்பகுதியின் இருப்பிடம் நூலகத்தின் உசாத்துணைப் பகுதி மற்றும் விசேட சேர்க்கைப் பகுதி என்பவற்றுடன் பெரும்பாலும் இணைந்திருப்பதால் படித்துக் கொண்டிருக்கும் போது அப்பாடம் தொடர்பாகத் தேவைப்படும் விடயங்களை உடனுக்குடன் நூலகத்தின் பிற பிரிவுகளிலிருந்து பெற்றுக் கொள்ள வசதியாக இருக்கும். ஆயினும் இத்தகைய உதவி வாய்ப்புகளின் போது நூலகத்தின் முக்கிய உசாத்துணை சேர்க்கைகளையும் இழந்துபோகும் ஆபத்துக்களைத் தவிர்க்கும் வழிமுறைகளையும் உரிய சட்ட திட்டங்களையும் தீவிர கண்காணிப்புடன் பயன்படுத்தி நூலகர்கள் பயனீட்டாளர்களைக் கையாளவேண்டியும் ஏற்படலாம்.
முன்னர் சொல்லப்பட்ட நூல்கள் பாதுகாப்பிடம் இத்தகைய பாதுகாப்பு வழிமுறைகளில் ஒன்றாகும். நூலகத்தில் இருந்து தமக்குரிய உபபாட நூல்களைப் பெற்றுப் படிப்பகத்தினுள் நுழையும் மாணவர்கள் தாம் எடுத்துச் செல்லும் நூல்களை படிப்பகப் பிரிவில் உள்ள நூலக உதவியாளரிடம் கொடுத்துப் பதிந்து செல்வதும், பின்னர் படித்துவிட்டு வெளியேறும் போது அவர் பதிந்து சென்ற நூல்களை மீள உரிய பிரிவுகளில் மீள ஒப்படைத்துவிட்டு வெளியேறுவதையும் கண்காணிப்பதன் மூலம் படிப்பகத்தினூடாக நூல்களை நூலகம் இழப்பதை தடுக்கமுடிகின்றது. புதிய கட்டிடத்தின் பொருத்தமான ஒரு பகுதியில் நூறு இருக்கை வசதிகள் வரை கொண்ட படிப்போர்கூடம் அமைக்கப்படுவது பொருத்தமாக இருக்கும். சொந்தப் பாட நூல்களையும், பயிற்சி நூல்களையும் கொண்டுசெல்ல இங்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். இப்பிரிவு பரீட்சைக் காலங்களில் திருவிழாக் கோலம் பூண்டு களைகட்டுவதனை அவதானிக்கலாம். இங்கு பயனாளிகளாக உள் நுழையும் மாணவர்கள் அப்பிரிவிற்குப் பொறுப்பான நூலகரின் சிறந்த அணுகுமுறையால் நூலகத்தின் பிற பகுதிகளுக்கான தீவிர வாசகராகவும், பெறுமதிமிக்க நூலக அங்கத்தவராகவும் பின்னாளில் மாற்றம்பெறுவதை நூலகர்கள் அனுபவபூர்வமாக அறிவர். படிப்பகங்கள் ஒரு நூலகத்தின் தீவிர வாசகர்களை உருவாக்குவதற்கேற்ற விளைநிலங்களாகும். படிப்பகப் பிரிவினை பொது நூலகக் கட்டிடத்தின் எவ்விடத்தில் நிறுவுவது என்று தீர்மானிக்கும் வேளையில், படிப்பகத்தை மாத்திரம் பயன்படுத்திச் செல்லும் மாணவர்களுக்கு வசதியாகவும், அவர்கள் உள்நுழையும் மற்றும் வெளியேறும் பாதைகளையிட்டும் அவர்களால் ஏற்படுத்தப்படும் சந்தடியையும் நூலக நிர்வாகத்தினர் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.
காட்சிக்கூடம்
லண்டனிலுள்ள பிரித்தானிய நூலகத்தின் காட்சிக்கூடம் உலகப் பிரபல்யமானது. நூலகத்திற்குள் நுழைந்ததும் ஒதுக்குப்புறமாக இக்காட்சிக்கூடம் அழகான நிரந்தர பளிங்குச் சிற்பங்களாலும், சிறிய உள்ளக செயற்கை நீர்ச்சுனையாலும் மனோ ரம்மியமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மண்டபத்தில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு கண்காட்சி நூலகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும். சர்வதேச தினங்கள், உலக நாடுகளின் சுதந்திர தினங்கள், பிரபலங்களின் நினைவுதினங்கள் என நூலகத்துக்குச் செல்லும் வாசகர்களைச் சற்றுநேரம் தனது பிடியில் கைப்பற்றி வைத்திருக்க இக்காட்சிக் கூடத்தின் அன்றாட நிகழ்வுகள் தவறுவதேயில்லை. அங்குள்ள இருக்கைகளில் அமர்ந்திருந்து மணிக்கணக்கில் செலவிடும் மக்களை நான் கண்டு மகிழ்ந்துள்ளேன்.
மட்டக்களப்பு மாநகரசபை நூலகத்தின் பிரதான வரவேற்பு மண்டபத்தை இத்தகையதொரு மனோரம்யமான காட்சிக் கூடமாக நாம் ஒழுங்குசெய்யலாம். பிரதான நூலக கீழ்த்தரை நடுமண்டபமே காட்சிக் கூடமாக அமைய பொருத்தமான இடமாகும். நூலகத்திற்கு வரும் எவரும் நூலகத்தின் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் முன்னர் மட்டக்களப்புப் பிரதேசம் பற்றியும் அந்த மண்ணின் மக்கள் பற்றியும் அறிந்துகொள்ள இம்மண்டபம் வாய்ப்பளிக்க வேண்டும். இனத்திற்கும் மொழிக்கும் தொண்டாற்றிய பெரியோர்களது உருவப் படங்களை இப்பகுதியின் சுவர்களில் இடம்பெறச் செய்யலாம். இப்பொழுதே மட்டக்களப்பு நகரசபை நிர்வாகத்தினர் அவற்றைத் தேடிப்பெற்று மெருகூட்டும் ஒழுங்குகளை மேற்கொள்ளத் தொடங்கவேண்டும்.
இப்பபகுதியில் புராதனகால மட்டக்களப்பின் வரலாறு கூறும் நூல்களும், ஏட்டுச் சுவடிகளும், கையெழுத்துப் பிரதிகளும், கலாச்சாரத்தை விளங்கவைக்கும் கைப்பணிப் பொருட்களும் இங்கு கண்ணாடி அல்மாரிகளுக்குள் காட்சிக்கு வைக்கப்படலாம். நூலகத்திற்குப் புதிதாகச் சேர்க்கப்பட்ட நூல்களும் காட்சிக்காக இங்கு வைக்கப்படும் வழமையும் உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டப் படைப்பாளிகளின் நூல்களையும், மட்டக்களப்பு சார்ந்து வெளியிடப்பட்ட நூல்களையும், தமிழ் மக்களதும், மீன்பாடும் தேன்நாட்டினதும் சிறப்பினை எடுத்துக்காட்டும் காட்சிப்படங்களையும் (Picture Postcards) இங்கு விற்பனை செய்யும் வசதியை ஏற்படுத்தித் தரலாம். இதற்காக சுற்றுலாப் பயண நிறுவனங்களின் உதவியையும் பங்களிப்பையும் நிர்வாகத்தினர் கோரலாம். காட்சிக்கூடத்தில் அழகியலுக்கு முக்கிய இடத்தினை வழங்கவேண்டும் என்பது முக்கியமான விதியாகும்.
அடுத்த இதழில் இரவல் வழங்கும் பிரிவு, உசாத்துணைப் பிரிவு ஆகியவற்றின்பால் எமது கவனத்தைக் குவிப்போம்.
(தொடரும்)