கொவிட் : இழக்கப்போவது யார்?

கொவிட் : இழக்கப்போவது யார்?

— சிக்மலிங்கம் றெஜினோல்ட் —  

மறுபடியும் கொவிட் 19 சூழல் பற்றியே எழுத வேண்டியுள்ளது. இந்த இரண்டாவது அலையில் மரணங்களும் கூடியுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான பெண்ணொருவரும் கொவிட் 19 க்குப் பலியாகியுள்ளார். பல பிரதேசங்கள் மீளவும் முழு முடக்கத்துக்கு வந்துள்ளன. அந்தளவுக்குக் கொரோனா எல்லோரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதிகம் ஏன் நாட்டையே அது முடக்கியிருக்கிறதல்லவா. இப்படியொரு நிலை வரும் என்று மருத்துவர் சங்கத்தினர் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டேயிருந்தனர். ஆனால் அதை அரசாங்கம் கேட்கவில்லை. சனங்களும் கேட்கவில்லை. விளைவு இந்தத் தொடர் முடக்கம். இந்த அனர்த்தங்கள். இந்தத் தேவையில்லாத உயிரழப்புகள். இதெல்லாம் எப்போது முடியும்? எதுவரையில் கொண்டு போய் விடும்? இடையில் என்னென்னவெல்லாம் நடக்கும் என்று யாராலும் மதிப்பிட முடியாது. 

ஆனால் இந்தியாவில் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தால் நாமும் நிறைய விலையைக் கொடுக்கப் போகிறோம் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இப்படியொரு அழிவைச் சந்திப்பதும் பெரியதொரு உயிர் விலையைக் கொடுப்பதும் முட்டாள்தனத்தின் விளைவே. ஏறக்குறைய பொறுப்பின்மையே இதற்குக் காரணம். தெரிந்து கொண்டும் தெரியாததைப் போல இருந்த – இருக்கின்ற ஒரு வகையான விட்டேத்தி அல்லது திமிர்த்தனத்தின் பெறுபேறே இது. இதற்காக சாதாரண அப்பாவிச் சனங்களும் பாதிக்கப்பட வேண்டியுள்ளது என்பதே ஆகப் பெரிய கவலை. 

இதற்கு யார் பொறுப்பேற்பது? அப்படிப் பொறுப்பேற்றாலும் ஆகப்போவதென்ன?இழக்கப்பட்ட உயிர்களையும் பின்னடையும் பொருளாதார இழப்பையும் எப்படி ஈடுசெய்வது?இதை யார் செய்வது? 

இப்பொழுதான் விழித்துக் கொண்டதைப்போல ஜனாதிபதி அதிரடியாக உத்தரவுகளை விடுக்கிறார். தான் பயணிக்கும்போது மருத்துவர்களுக்கான குறியீடுகளைப் பயன்படுத்தும் வாகனங்கள் பெருமளவில் தெருக்களில் கண்டதாகவும் இப்படி அவசர காலத்தில் இவ்வளவு மருத்துவர்களும் வெளியே திரிய வேண்டிய காரணம் என்ன? என்று கேட்கிறார். அல்லது மருத்துவர்களைப்போல தங்களுடைய வாகனங்களை மாற்றிக் கொண்டு பொதுமக்கள்தான் இப்படித் திரிகிறார்களா? என்றும் அவர் கேட்கிறார். இதையெல்லாம் கண்காணிப்பதற்கு நாடு முழுவதிலும் இராணுவத்தையும் விமானப்படை கடற்படையினரையும் களத்தில் இறக்கியுள்ளார். 

இதெல்லாம் இதுவரையான அசட்டைக்குப் பிறகான அந்தரிப்பின் விளைவுகள். இந்த அசட்டைக்குச் சில காரணங்களுண்டு. ஒன்று கடந்த ஆண்டு கொவிட் 19 முதலாவது அலையை இலங்கை வெற்றிகரமாக தடுத்து, வரும் கொவிட்டின் நெருக்கடிகளை எப்படியோ சமாளித்துக் கொள்ளலாம் என்ற அசட்டுத் துணிச்சல். அது இப்படி ஒரு விபரீத நிலையை எட்டும் என்பதைப் பற்றி யோசிக்காதிருந்தது. 

இரண்டாவது காரணம், மருத்துவர் சங்கத்தின் எச்சரிக்கையைக் கேட்டாலும், அதில் உள்ள அபாயத்தை உணர்ந்து நடவடிக்கை எடுக்க முடியாமைக்குக் காரணம், பொருளாதார நெருக்கடி. குறிப்பாக சாதாரண மக்களின் வாழ்க்கையைப் பற்றி அரசாங்கம் கவலைப்பட்டதையும் விட பெரிய முதலீட்டாளர்கள், வணிகர்களின் நலனைப் பேண வேண்டும் என்ற அரசாங்கத்தின் அக்கறை. இதற்கு ஏராளம் ஆதாரங்களுண்டு. நம்முடைய சூழலைப் பொறுத்தவரையில் ஆடைத்தொழிற்சாலைகளின் இயக்கம் நிறுத்தப்படக் கூடாது என்பது. 

வடக்குக் கிழக்கில் அதிகமான தொற்றாளர்கள் இந்த ஆடைத்தொழிற்சாலைகளின் வழியேதான் உருவாகினார்கள். ஏன் தெற்கிலும் ஆடைத்தொழிற்சாலைகளே பெருமளவு உண்டாக்கின. அடுத்தது சந்தைகள். இப்போது கூட ஆடைத்தொழிற்சாலைகள் போன்ற பெருந்தொழில் நிறுவனங்களின் உற்பத்தி கெட்டுவிடக் கூடாது என்ற சிந்தனையே பெரிய இடத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்தாத வரையில் – மாற்றாத வரையில் தொற்றினை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது. 

இதைப்பற்றி எதிர்க்கட்சிகளும் சரி அந்தந்த மாவட்டங்களில் தலைமைப்பொறுப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர்களும் சரி இந்த விசயங்களைப் பற்றிப் பேசுவதே இல்லை. நாட்டில் இப்படியொரு நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது. மக்கள் மரண அபாயத்தின் மேலே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். நாளாந்த உணவுக்கே பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கஸ்ரப்படுகின்றன. இளைய தலைமுறையின் கல்வியும் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. உற்பத்தியாளர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் நட்டமடைகிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் நமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியாமலிருக்கிறது. அவர்கள் தங்கள் பாட்டில் ஏதோவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். இது ரோம் எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்ததற்குச் சமம். இவர்கள் முன்பும் அப்படித்தான். இப்பொழுதும் அப்படித்தான். வன்னியில் இறுதி யுத்தச் சூழலில் சனங்கள் செத்துக் கொண்டிருந்போதும் பிறகு முகாமில் அடைபட்டிருந்தபோதும் இப்படித்தான் வாழாவெட்டிகளாகவே இருந்தவர்கள். ஆனாலும் எப்படி இவர்களால் இப்படித் தொடர்ந்தும் கண் மூடிக் கொண்டிருக்க முடிகிறது. 

குறைந்த பட்சம் இவர்கள் மக்களுக்கு அறிவூட்டலாம். அரசாங்கத்தின் கட்டுப்பாடு விதிப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் தாங்களும் மக்களுக்கு வெளி நடமாட்டத்தைக் குறைக்குமாறு அறிவூட்ட வேண்டும். அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மட்டுமல்ல, வறிய நிலையிலுள்ள மக்களின் உணவுத் தேவைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். முதல் அலையின்போது ஏராளமான பொது அமைப்புகளும் புலம்பெயர் உறவுகளும் இந்த உதவியைத் தாராளமாகச் செய்தனர். ஆனால் இப்பொழுது அந்த நிலை மிகமிகக் குறைவடைந்துள்ளது. அரசாங்கம் கொடுக்கும் அவசர உதவிப் பணம் எந்த மூலைக்கும் காணாது. அப்படியென்றால் இந்தப் பணியைச் செய்து சனங்களைக் காப்பாற்றுவது யார்? அந்தப் பொறுப்பை இவர்கள்தானே எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு அரசாங்கம்தான் முழுப்பொறுப்பை ஏற்க வேண்டும் என்றால் அரசாங்கமே எல்லாப் பொறுப்புகளையும் ஏற்றுச் செய்து விடலாமே! பிறகெதற்கு நமக்கு என்று தனியாக அதிகாரமும் கோரிக்கைகளும்? 

எல்லாவற்றையும் விடுவோம். நமது மக்கள் மிகப் பெரிய இடரில் நம் கண்முன்னால் சிரமப்படுகிறார்களே. ஒரு வேளை உணவுக்கே கஸ்ரப்படுகிறார்களே. இவர்கள்தானே வாக்களித்து நம்மை இந்த இடத்துக்கு (பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களாகவும்) கொண்டு வந்தவர்கள். அப்படியானவர்கள் இடர்படும்போது அவர்களுக்கு உதவ வேண்டும் என்று சிந்திக்க வேண்டாமா? மனச்சாட்சியின் கதவுகளைச் சற்றாவது திறக்க வேண்டாமா? பாருங்கள், புதுக்குடியிருப்பிலும் கிளிநொச்சியிலும் உள்ள ஆடைத்தொழிற்சாலைகள் கொவிட் தொற்றுக்களின் கொத்தணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை இடைநிறுத்தி பணியாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறையை அளிக்குமாறு ஒரு எம்பி கூடக் குரல் கொடுக்கவில்லை. ஆனால் தன்னுடைய ஒரு புகைப்பட நிருபர் கொவிட் தொற்றினால் உயிரிந்ததற்கு ஆனந்த விகடன் பத்திரிகை நிறுவனம் இரண்டு ஆண்டு சம்பளமும் பிள்ளைகளின் படிப்புச் செலவும் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. இப்படிப்பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுடைய நலன்களைப் பேணுகின்றன. இதை இங்கேயும் நடைமுறைப்படுத்துவதைப் பற்றி நம்மூர் அரசியல்வாதிகள் அக்கறைப் படாதிருப்பது ஏன்? “அட சனங்கள் செத்தால் இவங்களுக்குத்தானே வாக்குக் குறையும். அதைப்பற்றிக் கூட இவங்கள் கவலைப்படுகிறமாதிரித் தெரியேல்லையே. அந்தளவுக்கு மூடர்களா? அல்லது பொறுப்பற்ற இரக்கமில்லாதவர்களா?” என ஒரு நண்பர் எரிச்சலோடு கேட்கிறார். எருமை மாட்டுக்கு எவ்வளவு தண்ணீரை ஊற்றினாலும் அதுக்கு நனைந்த உணர்வு வராது என்பார்கள். சனங்கள்தான் இதைப் புரிந்து கொள்ள வேணும். 

மூன்றாவது, எந்தச் சவாலையும் முறியடிப்போம் என்ற இராணுவ நிலைப்பட்ட சிந்தனை. புலிகளை வெற்றி கொண்ட எமக்கு இந்தக் கொவிட்டை எதிர்கொள்வதொன்றும் பெரிய விசயமில்லை என்று அரச உயர் பீடம் கடந்த ஆண்டு சொன்னதை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். அப்போதே அது ஒரு பெரிய பகடியாக மக்களால் உணரப்பட்டது. இப்படியான பொறுப்பற்ற சிந்தனையின் வழியேதான் இந்த இரண்டாவது, மூன்றாவது அலையைப் பற்றியும் இவர்கள் மதிப்பிட்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில்தான் படைத் தளபதிகளையும் அதிகாரிகளையும் கொவிட்டைக் கட்டுப்படுத்த –கொவிட்டுடன் போர் செய்ய அரசாங்கம் அவர்களை நியமித்திருக்கிறது. ஆனால் கண்ணுக்குத் தெரியும் எதிரி வேறு. கண்ணுக்குத் தெரியாத எதிரி வேறு என்பதை யார்தான் புரிய வைப்பது? 

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், அது மிகப் பிந்தியே நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. இது வெள்ளம் வந்த பின் அணைகட்டுவதற்குச் சமம். ஆனால் கொவிட் 19 நெருக்கடியை உலகின் வேறு நாடுகள் எப்படிக் கையாண்டு மீண்டன என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியம். பிரிட்டனில் கடந்த ஆண்டு கொரோனா மரணங்கள் அந்த நாட்டையே உலுக்கின. சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட தீவிர முடக்கம் இன்று பிரிட்டனை மீட்டெடுத்துள்ளது. அவுஸ்திரேலியா மீண்டு விட்டது. நாம் உடனடியாகவே சுற்றுலாப்பயணிகளுக்குக் கதவுகளைத் திறந்து விட்டோம். கட்டுப்பாடுகளைத் தளர விட்டோம். இன்று தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு என்ன நடக்குமோ? ஏது ஆகுமோ என்று ஒன்றும் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். 

இதிலே முழுவதும் நாம் அரசைக் குற்றம் சாட்டிவிட முடியாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். சனங்கள் அதிகமதிகம் பொறுப்பற்றுத் திரிகிறார்கள். இளைஞர்கள் விளையாடுகிறார்கள். மரண நிகழ்வுகள், திருமண வைபவங்கள் போன்றவற்றைக் கூட பிரமாண்டமாகவே நடத்தப்படுகின்றன. அரசுக் கட்டுப்பாடு இல்லை என்றால் இந்த மாதிரி அமர்க்களங்களுக்குக் குறைச்சல் இல்லை. இதில் ஆகப்பெரிய கேவலம் என்னவென்றால், இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் வெள்ளையும் சொள்ளையுமாக நம்முடைய அரசியற் பிரமுகர்கள் ஆளணி அம்பு சேனையுடன் சென்று திரும்புகிறார்கள். 

இன முரண்பாட்டு அரசியலினாலும் அதன் விளைவான போரினாலும் ஏராளம் மரணங்களையும் தாங்கிக் கொள்ளவே முடியாத இழப்புகளையும் சந்தித்தவர்கள் நாம். அந்தத் துன்பியலிலிருந்து இன்னும் சரியாக நாம் மீளவில்லை. இடையில் சுனாமி அனர்த்தமும் அழிவும் இழப்பும் வேறு. இப்படியெல்லாம் இருந்தும் மரணத்தோடு விளையாடும் ஆசை இன்னும் நமக்குத் தீரவில்லையா? அல்லது, மரண விளையாட்டு என்பது நமக்கு ஒரு வகையான ருசியாகி விட்டதா? 

அப்படியென்றால் நாம் பெரிய விலையைக் கொடுத்துத்தான் இந்த ருசிக்கான பசியைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.