— அ. தேவதாசன் —
திரு.செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக்கட்சி திரு. ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸ், திரு.தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளையும் இணைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கியது. தமிழர்களுக்கான விடுதலை என்பது தனித்தமிழீழமே எனப்பிரகடனப்படுத்தியது. இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் இனவாத விசத்தை ஏற்றியது.
அக்காலங்களில் இலங்கை வட பகுதியில் சாதிய ரீதியாக தாழ்த்தப்பட்ட மக்கள் இலங்கை இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்களாகவும், ஆதரவாளர்களாகவும் இருந்தனர். இதற்கு அடிப்படை காரணமே சாதிய தீண்டாமைதான். தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரஸ் கட்சியும் தமது அதிகார சுவையை அனுபவிப்பதற்காகவே தமிழர் உரிமை எனும் சுலோகத்தை முன்வைத்து பேசினார்கள். இவ்விரு கட்சிகளும் சாதியக் கட்டமைப்பை பாதுகாக்கும் கட்சிகளாகவே கட்டமைக்கப்பட்டிருந்து. இதனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் தமக்கான ஒரு தலைமையை உருவாக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். இடதுசாரிக் கருத்துக்களில் ஈர்க்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அக்கருத்தியலின் தலைமையை ஏற்றுக்கொண்டு சாதிய கொடுமைகளுக்கு எதிராக உருவாகிய சிறுபான்மை தமிழர் மகாசபை, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் போன்றவைகளில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். ஒழுங்குபடுத்தப்பட்ட போராட்டங்களை தொடர்ச்சியாக நடாத்தி வந்தனர். இதன்போது பல உயிர்த்தியாகங்களையும் பல இழப்புகளையும் கடந்து வெற்றிகளையும் பெற்றனர்.
வடபகுதியில் தீண்டாமைக்கு எதிரான தொடர் வெற்றிகளும் அவர்களின் வளர்ச்சியும், இலங்கையில் இடதுசாரிக் கட்சிகளின் வளர்ச்சியும் தீவிர வலதுசாரிக் கட்சிகளான தமிழரசுக்கட்சி, தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. எப்போதும் இவர்களது நட்பு சக்தியான தீவிர வலதுசாரி கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதிகார அரியணை அழிந்து போய்விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டது. இதனாலேயே தரப்படுத்தல், சிங்களக்குடியேற்றம் போன்ற பிரச்சனைகளை முன்வைத்து தமிழீழப் பிரகடனம் செய்யப்பட்டது.
இக்கோசம் சிங்கள இனவாதக் கட்சிகளுக்கு குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு இலங்கை அதிகாரத்தை கைப்பற்ற பெரும் வாய்ப்பாக அமைந்தது. தமிழீழக் கோசம் வலுப்பட வேண்டுமெனில் எப்படியாவது தாழத்தப்பட்டவரையும் தமது பக்கம் திருப்ப வேண்டியது அவசியம். இல்லாது போனால் பாராளுமன்றத்தில் சிங்கள அரசியல்வாதிகளின் யாழ்ப்பாணத்து சாதிக்கொடுமை பற்றிய நகைப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய அவலம் ஏற்படும். இதற்காக பல முயற்சிகள் செய்தனர். அம்முயற்சிகளில் முக்கியமானது சமபந்தி போசனம் என்பதாகும். ஊர், ஊராக சமபந்தி போசனம் நடத்தினார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திரு.ராஜலிங்கம் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் ஆக்கினார்கள். இவைகள் ஊடாக இடதுசாரி அரசியல் நெருக்கத்தில் இருந்த தாழ்த்தப்பட்ட மக்களை ஓரளவு பிரித்தார்கள். அவர்களுக்கான வலுவான தலைமைத்துவத்தை வளர விடாமல் முடக்க முயற்சி செய்தார்கள். சாதிய விடுதலைப்போராட்டம் பின்தள்ளப்பட்டு, தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்வைத்தார்கள்.
சாதிய விடுதலைக்கான தனித்துவமான போராட்டங்களை இல்லாமல் செய்து தாங்களே சாதிய தீண்டாமையை அழிக்கும் வல்லமை படைத்தவர்கள் போன்ற மாயையை உருவாக்க முயற்சித்தார்கள். அவர்களது தந்திர வேலைகளில் ஓரளவு வெற்றியும் பெற்றார்கள். இவைகள் யாவும் மேலோட்டமாக நாங்களும் சாதியத்தை எதிர்கிறோம் என்பதை காட்டும் முயற்சியே தவிர, சாதிய கட்டமைப்பை தகர்க்கும் செயல்திட்டங்கள் எதிலும் அவர்கள் கை வைக்கவில்லை. காரணம் ஒன்றே ஒன்றுதான்!. தமிழர் விடுதலைக் கூட்டணி கலப்படமில்லாத வெள்ளாளியக் கருத்தியலையும் அதன் இருப்பையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அமைப்பு.
தேசிய விடுதலைப் போராட்டத்தை உண்மையாகவும், நேர்மையாகவும் முன்னேடுத்துச் சக ல்வில்லை என்பதாகக் கூறி இவர்களால் இனவாத விசம் ஏற்றப்பட்ட இளைஞர்களாலும் மற்றும் முற்போக்கு பார்வை கொண்ட இளைஞர்களாலும் தமிழீழம் அல்லது ஈழம் என்கிற இலக்கை நோக்கி ஆயுதப்போராட்டம் உருவாக்கப்பட்டது. ஜெயவர்தன தலைமையில் யாழ்ப்பாணம் பொது நூலக எரிப்பும் யூலைப் படுகொலையும் அலை அலையாக இளைஞர்களை ஏதோ ஒரு இயக்கங்களில் இணைக்கத்தூண்டின. இதனால் இயக்கங்கள் வீங்கிப் பெருக்க வழி கோலியது. இந்தியாவும் கண்களை மூடிக்கொண்டு இயக்கங்கள் வளர வழி செய்தது. இதில் அனைத்து இயக்கங்களும் சாதியம் அற்ற சமத்துவ விடுதலை என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டன. இவைகளில் EROS, EPRLF அமைப்புக்கள் சாதியக் கட்டுமானத்தை உடைக்கும் அமைப்புகளாக உருவாக்கப்பட்டிருந்தன.
பல இயக்கங்கள் பல கோணங்களில் போராடினாலும் விடுதலைப்புலிகள் தவிர மற்றைய இயக்கங்களின் ஆயுள் குறைவாகவே இருந்தது. தமிழர் விடுதலைக்கு ஒரே இயக்கம், ஒரே தலைவர், ஒரே தலைமை என்கிற பிரபாகரனின் தத்துவத்திற்கு இணங்க அனைத்து இயக்கங்களும் அழிக்கப்பட்டு, விடுதலைப்புலிகள் மட்டுமே ஏகப் பிரதிநிதிகளாக தங்களை உருவாக்கிக் கொண்டனர்.
முப்பது வருடங்களுக்கு மேலாக புலிகளது கண் அசைவுக்குள்ளேயே தமிழ்மக்கள் கட்டுப்பட்டு கிடந்தனர். இலங்கை மட்டுமின்றி தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் உலக நாடுகள் அனைத்திலும் இவர்கள் ஆதிக்கம் பரவியது. சிறு பெட்டிக்கடை வைத்திருந்தவர்கள் தொடக்கம் பெரு வியாபாரம் செய்தவர்கள் வரை, இந்து ஆலயங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் என அனைத்தும் இவர்களது கட்டுப்பாட்டிலேயே இயங்கின.
இந்தியாவில் குறிப்பாக ஈழத்தமிழர்கள் விடுதலையை நேசிக்கும் தமிழ் நாட்டு மக்களிடத்தில் தமிழீழத்தில் தலைவர் சாதியை அழித்து விட்டார் எனும் செய்தி பரப்பப்பட்டது. இதனால் விடுதலைப்புலிகளுக்கு இன்னும் அதிக ஆதரவு பெருகியது. இதன் மறுபக்கம் தமிழர் வரலாற்றை மீட்டெடுப்பதற்கான எந்த வேலைத்திட்டங்களிலும் கவனம் செலுத்தாமல் இராணுவ சிந்தனைகளில் மட்டுமே ஊறிக் கிடந்தனர். மக்களை அடிமையாக வைத்து ஆட்சி செய்த எல்லாளன், சங்கிலியன் போன்ற மன்னர்கள் பெயரில் படையணிகளை உருவாக்கி அவர்களது பெயர்களுக்கு புகழ் தேடினார்கள். மதங்களுக்குள் புதைந்து கிடந்த தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தவறிவிட்டார்கள்.
புலம் பெயர்ந்த நாடுகளில் தமது ஆதிக்கத்தில் இருந்த ஆலயங்களில் தமிழர்களுக்கு புரியாத மொழியில் ஓதப்படும் மந்திரங்களை நிறுத்தி தமிழில் மந்திரங்களை ஓதும் முறைமை உருவாக்கியிருக்கிலாம். கருவறைக்குள் பிராமணர் என்கிற சாதியைச் சேர்ந்தவர்தான் கடவுளின் தூதராக இருக்கும் நிலையை மாற்றி இந்துவாக இருக்கக்கூடிய எவரும் கருவறைக்குள் சென்று மந்திரம் ஓதலாம், கடவுளின் தூதராக இருக்கலாம்… என்கிற நிலையை உருவாக்கியிருக்கிலாம். இவைகளை துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்தாமலே செயற்படுத்தியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. தமது கட்டுப்பாட்டில் இருந்த ஈழத்தில் தமிழ் பாடசாலைகளிலும் சரஸ்வதி சிலைகளுக்கு பதிலாக திருவள்ளுவர் சிலையோ அவ்வையார் சிலையோ வைக்க உத்தரவிட்டிருக்கலாம். சரஸ்வதி சிலை எடுப்பதை மக்கள் விரும்பவில்லை எனில் சரஸ்வதி சிலைக்கு அருகிலாவது தமிழர் வரலாற்று குறியீடாக தமிழ் மூதாதையரை வைக்கும்படி கட்டளை இட்டிருக்கலாம். ஏன் செய்யவில்லை?
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழுக்கு பெருமை சேர்த்த மாமனிதர்களை புறந்தள்ளிவிட்டு, தமிழ் தெரியாத வட இந்தியாவில் இருந்து வந்த இந்துமத சரஸ்வதிக்கு தமிழர் கல்விச்சாலைகளிலும் தமிழ் நூலகத்திலும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை ஒரு கேள்வி இன்றியே கேள்விக்கு உட்படுத்தாமலேயே, விடுதலைப்புலிகள் முப்பது வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களை ஆட்சி செய்த அரசியலுக்குப் பின்னால் இருந்த வலுவான சக்தி எது?
இப்படியான ஒரு கேள்வியை முன் வைத்தால் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களிடமிருந்தோ தமிழ்த்தேசியவாதிகளிடமிருந்தோ ஒரு கேள்வி வேகமாக பாயும். மக்களின் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக இயக்கம் செயற்பட்டால் தமிழீழம் எனும் இலட்சியத்திற்கு குந்தகம் ஏற்பட்டுவிடாதா?
ஏன் குந்தகம் ஏற்படும், எப்படி ஏற்படும்? கோயிலை இடிப்பது தவறு, மக்கள் விரும்பிய கடவுளை வணங்க மறுப்பது தவறு என்றால், தமிழில் வழிபடுவதும் தமிழர் வரலாற்றை மீட்பதும் தவறாகுமா? ஏன் செய்யவில்லை இதற்கு தடையாக இருந்த சக்தி எது?
பல நூறு மாற்று இயக்கப் போராளிகளை அளித்தபோது வராத எதிர்ப்பு, வேறு நாட்டின் தலைவரை அழித்த போது வராத எதிர்ப்பு, சொந்த இனத்தின் பல தலைவர்களை அழித்தபோது வராத எதிர்ப்பு, தமிழர் வரலாற்றை மீட்கும் பணியில் வருமெனில் இவர்களுக்கு பின்னால் இருந்து வழி நடாத்திய சக்தி எது? இந்தக் கேள்விகள் பல ஆண்டுகளாகவே எனக்குள் குடைந்து கொண்டே இருக்கின்றன.
விடுதலைப்புலிகளுக்கு பின்னால் இருந்த ஊடக பலத்தின் சக்தி எதுவோ, பொருளாதார பலத்தின் சக்தி எதுவோ, ஆலோசனை பலத்தின் சக்தி எதுவோ, இச்சக்திகள்தான் தமிழர் வரலாற்றை மீட்டெடுக்க விரும்பாத சக்தி இச்சக்தி என்பது இந்து வேளாளிய கருத்தியல் சக்தி….
(தொடரும்…)