வன்முறைகள், ஊடுருவல்கள், ஆலய அழிப்புகள் மூலம் ஒடுக்கப்பட்ட கல்முனைத் தமிழர்: (சொல்லத் துணிந்தேன்-74)

வன்முறைகள், ஊடுருவல்கள், ஆலய அழிப்புகள் மூலம் ஒடுக்கப்பட்ட கல்முனைத் தமிழர்: (சொல்லத் துணிந்தேன்-74)

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்—  

‘கல்முனை வடக்கு பற்றிய தவறான கருதுகோள்’ எனும் தலைப்பிலே ‘அரங்கம்’ மின்னிதழில் 25.05.2021 அன்று வெளியாகியிருந்த எனது ‘சொல்லத் துணிந்தேன்-72’ பத்தி எழுத்தைப் படித்துவிட்டு எனது கூற்றுக்களை மறுதலித்து எம்.எம். ரியாஸ் எனும் முஸ்லிம் அன்பர் ஒருவர் ‘கல்முனைக் குடியும் கல்முனையும்’ என்ற தலைப்பிலே கட்டுரையொன்றினைத் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.  

எனது பத்தி எழுத்தில் நான் குறிப்பிட்டிருந்த குவிமையக்கூற்றுகள் இரண்டு. ஒன்று, கல்முனைக் கிராமமும் கல்முனைக்குடி கிராமமும் இரு வெவ்வேறு தனித்தனிக் கிராமங்கள் என்பது. மற்றது, கல்முனைக் கிராமம் தமிழர்களின் பூர்வீகம் என்பது. அன்பர் றியாஸ் அவர்கள்  எனது பத்தியினைக் கருத்தூன்றிப் படித்தாரோ தெரியவில்லை, எனது கூற்றுகளுக்குத் தர்க்கரீதியாகப் பதிலளிக்காது சுற்றிவளைத்துக் குதர்க்கம் பேசியுள்ளார். பெரும்பாலான இவரது பதில்கள் தர்க்கரீதியாக இல்லாமல் குதர்க்கமான கூற்றுக்களாகவே உள்ளன. எனது வாதம் என்னவெனில், 1897.02. 19 அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம் ‘கல்முனை’ என்ற பெயரில் உருவாக்கப்பட்ட சனிட்டரி வோட் (Sanitary Board) இன் எல்லைகளும் கல்முனைக் கிராமத்தின் எல்லைகளும் ஒன்றல்ல. இந்த சனிட்டரி வோட்டின் உள்ளூராட்சி நிர்வாகத்தின் கீழ் கல்முனைக் கிராமமும் கல்முனைக்குடிக் கிராமமும் அடங்கியிருந்தன. ‘கல்முனை’ என்ற பெயரில் அமைந்த சனிட்டரி வோட்டின் தெற்கு எல்லைதான் சாய்ந்தமருது கிராமமே, அதாவது தற்போதைய சாஹிராக் கல்லூரி வீதியே தவிர, அதுவே கல்முனைக் கிராமத்தின் தெற்கு எல்லையாக ஆகிவிடாது. அது போல்தான் ‘கல்முனை’ என்ற பெயரில் அமைந்த சனிட்டரி வோட்டின் வடக்கு எல்லை தாளவெட்டுவான் வீதியே தவிர அதுவே கல்முனைக்குடிக் கிராமத்தின் வடக்கு எல்லையாக ஆகிவிடாது. அன்றியும், கல்முனையையும் கல்முனைக்குடியையும் இணைத்து ‘கல்முனை’ என்ற பெயரில் அமைந்த சனிட்டரி வோட்டின் எல்லைகள்தான் உரிய வர்த்தமானியில் குறிப்பிடப்படுமே தவிர கல்முனைக் கிராமத்தின் எல்லைகள் தனியாக அதில் உள்ளடங்க வேண்டிய அவசியமில்லை. இதுவே 1920இல் கல்முனை என்ற பெயரில் உருவான உள்ளூர் சபைக்கும்  1947இல் உருவான கல்முனைப் பட்டினசபைக்கும் பொருந்தும். எனவே, மேற்படி வர்த்தமானியில் கல்முனைக் கிராமத்தின் தெற்கு எல்லை கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதியெனக் காட்டப்படவில்லையென்ற அன்பர் ரியாஸின் வாதம் பொருந்தாது.  

கல்முனை என்ற பெயரில் அமைந்த சனிட்டரி வோட், உள்ளூர் சபை மற்றும் பட்டின சபை மூன்றுமே கல்முனை எனும் தனிக் கிராமத்தை மட்டும் உள்ளடக்கியிருக்கவில்லை. அவை கல்முனை மற்றும் கல்முனைக்குடி ஆகிய வெவ்வேறு தனித்தனிக் கிராமங்களையே உள்ளடக்கியிருந்தன எனும் உண்மையை அன்பர் ரியாஸ் தனது வசதிக்காக மறந்து விடுகிறார்.  

மேலே குறிப்பிடப்பட்ட சனிட்டரி வோட்டும் உள்ளூர் சபையும் அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில்தான் இயங்கி வந்ததென்ற அவரது கூற்று சரியானது. ஆனால், இதற்கும் வாதப் பொருளுக்கும் சம்பந்தமில்லை.  

தமிழருக்கு எதிரான சதி 1947இல் 

திட்டமிட்ட சதி என நான் குறிப்பிட்டது 1947இல் கல்முனைப் பட்டின சபை உருவாக்கத்தின் போது கல்முனைத் தமிழர்களுக்கு நடந்த பாரபட்சத்தைத்தான். அதனைச் சற்று விளக்கவேண்டியுள்ளது.  

‘குறிச்சிகள்’ என அழைக்கப்பட்ட மூன்று கிராமத்தலைவர் பிரிவுகளைக் கொண்ட கல்முனைத் தமிழ்க் கிராமத்தையும் அதேபோல் ஐந்து குறிச்சிகளைக் கொண்ட கல்முனைக்குடிக் கிராமத்தையும் உள்ளடக்கித்தான் 1947இல் கல்முனைப் பட்டின சபை உருவாக்கப்பட்டது. கல்முனைப் பட்டின சபைக்குரிய வட்டாரங்கள் வகுப்பின் போது தமிழர்கள் பாதிப்புற்றார்கள். உண்மையில். கல்முனையின் மூன்று குறிச்சிகளும் கல்முனைக்குடியின் ஐந்து குறிச்சிகளும் இணைந்ததாக 1947இல் உருவான கல்முனைப் பட்டின சபையானது அதன் முதலாம் இரண்டாம் மூன்றாம் வட்டாரங்கள் தமிழ்ப் பெரும்பான்மை வட்டாரங்களாகவும் நாலாம், ஐந்தாம், ஆறாம், ஏழாம், எட்டாம் வட்டாரங்கள் முஸ்லிம் பெரும்பான்மை வட்டாரங்களாகவும் மொத்தம் எட்டு வட்டாரங்கள், அதில் மூன்று தமிழ்ப் பெரும்பான்மை வட்டாரங்களாகவும் ஐந்து முஸ்லிம் பெரும்பான்மை வட்டாரங்களாகவும் அமையுமாறு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி நடைபெறவில்லை. மாறாக தமிழர் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்காகக் கல்முனை மூன்றாம் குறிச்சியை ‘மாரியார் வீதி’ எனப்படும் வீதியை எல்லையாகக் கொண்டு இரண்டாகப் பிரித்து வடக்கே உள்ளவர்களைக் கல்முனை இரண்டாம் குறிச்சியோடு சேர்த்துக் கல்முனைப் பட்டின சபையின் இரண்டாம் வட்டாரம் எனவும் தெற்கே உள்ளவர்களைக் கல்முனைக்குடியின் முதலாம் குறிச்சியோடு சேர்த்துக் கல்முனைப் பட்டின சபையின் 3ம் வட்டாரம் எனவும் வகுத்து இரண்டு வட்டாரங்களைத் தமிழ்ப் பெரும்பான்மையாகவும் ஐந்து வட்டாரங்கள் முஸ்லீம் பெரும்பான்மையாகவும் மொத்தம் 7 வட்டாரங்கள் அமையுமாறு கல்முனைப் பட்டின சபை உருவாக்கப்பட்டது. கல்முனைப் பட்டினசபையில் தமிழ் உறுப்பினர்களைக் குறைக்கும் திட்டமே இது. இதனையே நான் திட்டமிட்ட சதியெனக் குறிப்பிட்டேனே தவிர, 1897இல் உருவாக்கப்பட்ட சனிற்ரறி வோட்டையோ அல்லது 1920இல் உருவான உள்ளூர் சபையையோ அல்ல. அன்பர் றியாஸ் அவர்கள் எனது கூற்றைத் தவறாக விளங்கிக் கொண்டார் போலும். 

மேலும், அப்போதைய ஆங்கில ஆட்சியின் நிர்வாக முறையின் கீழ் அப்போதைய மட்டக்களப்பு மாவட்டம் வடக்கே வெருகல் ஆற்றிலிருந்து தெற்கே குமுக்கன் ஆறு வரை நீண்டிருந்தது. இம் மாவட்டம் ‘வன்னிமைகள்’ என அழைக்கப்பெற்ற ஒன்பது நிர்வாகப் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வன்னிமையும் ‘உடையார் பிரிவு’ என அழைக்கப்பட்ட உப பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இவ் உப பிரிவின் தலைவர்கள் ‘உடையார்’ என அழைக்கப்பட்டனர். இவ் உடையார் பிரிவுகள் மேலும் குறிச்சிகள் என அழைக்கப்பெற்ற பொலிஸ் உப பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இவ் உப பொலிஸ் பிரிவின் தலைவர்கள் (Village Headman) கிராமத் தலைவர்கள் என அழைக்கப்பட்டனர். ஒவ்வொரு குறிச்சிக்கும் பொறுப்பாகக் கிராமத் தலைவர்கள் பணியாற்றினர். கல்முனைக் கிராமம் மூன்று குறிச்சிகளைக் கொண்ட ஒரு தனியான உடையார் பிரிவாக இருந்தது. சமகாலத்தில் கல்முனைக் கிராமத்தின் அயல் கிராமமான கல்முனைக்குடிக் கிராமம் ஐந்து குறிச்சிகளைக் கொண்டிருந்தது. இந்த இரண்டு கிராமங்களுக்கும் இடையிலான எல்லையாக கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோவில் வீதியே விளங்கிற்று. கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோவில் சுமார் 400 வருடங்கள் பழமை வாய்ந்ததாகும். கல்முனைக்குடியில் அமைந்த ‘கோப்பை உடைத்தான் சந்தி’ என முன்னர் அழைக்கப்பட்டதும் தற்போது ‘செய்லான்’ வீதி என அழைக்கப்படுவதுமான இடத்திலிருந்துதான் கல்முனைத் தமிழர்களின் வாழ்விடப் பிரதேசம் வடக்கு நோக்கியிருந்தது. கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதிக்கும் அதற்குத் தெற்கே தற்போது செய்லான் வீதி என அழைக்கப்படும் வீதிக்கும் இடையேயான இடப்பரப்பில் கல்முனை -அக்கரைப்பற்று பிரதான வீதியை அண்டி கல்முனைத் தரவைப் பிள்ளையார் ஆலயத்திற்கான மடமும் அதற்குரிய வளவும்  அதைச்சுற்றி சுமார் நூறு தமிழ்க் குடும்பங்களும் இருந்தன. இப்பகுதியில் வாழ்ந்த தமிழர்களுக்குக் கல்முனை மூன்றாம் குறிச்சிக் கிராமத் தலைவரே கடமைகள் செய்துவந்தார்.  

கலவரங்கள் மூலம் துரத்தப்பட்ட தமிழர் 

பொதுமராமத்து இலாகாவினால் (Public Works Department) நிர்மாணிக்கப்பெற்ற ‘கல்முனை’ ஊர்ப் பெயர்ப் பலகை முன்பு கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோவிலடியில் கொழும்பு-இரத்மலானை- வெல்லவாய மட்டக்களப்பு வீதி- ‘சி.ஆர்.டபிளியூ.வி’ றோட் (CRWB Road) அமைந்திருந்தது. கல்முனை ஊர் என்பது கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோவிலடியிலிருந்துதான் ஆரம்பித்து வடக்கு நோக்கிக் கல்முனைத் தாளவட்டுவான் சந்தி வரை இருந்தது. கல்முனைத் தாளவட்டுவான் சந்தியிலிருந்துதான் பாண்டிருப்பு கிராமம் வடக்கு நோக்கி ஆரம்பிக்கிறது. அதாவது, கல்முனைக் கிராமத்தின் தெற்கு எல்லை கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதியும் வடக்கு எல்லை தாளவட்டுவான் வீதியும் ஆகும். மேலே குறிப்பிட்ட கல்முனை ஊர்ப்பலகை இப்போது கல்முனைக்குடிக் கிராமத்தைக் கல்முனையுடன் சேர்த்துக்  கல்முனை எனும் தனிக் கிராமமாகச் சித்தரித்துக் காட்டும் தந்திரோபாயமாக முஸ்லிம் அரசியல்வாதிகளின் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திச் சாய்ந்தமருதுக்கு அதாவது சாகிராக் கல்லூரி வீதிச் சந்திக்கு நகர்த்தப்பட்டுள்ளது.  

சுமார் 250 வருடங்களுக்கு முன்னரே தமிழர்கள் கல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருது முஸ்லிம் கிராமங்களுக்கிடையேயும் பரந்து வாழ்ந்தனர். 1956இல் நடைபெற்ற சாய்ந்தமருது (கரவாகு தெற்கு) கிராம சபைத் தேர்தலை அடுத்தும் 1967இல் ஏற்பட்ட கலவரங்களையடுத்தும் கல்முனைக்குடி-சாய்ந்தமருது எல்லையில் வாழ்ந்த தமிழ்க் குடும்பங்கள் அனைத்தும் இப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தன. தமிழர்கள் வாழ்ந்த இப்பகுதி ‘கரவாகு’ என அழைக்கப்பட்டது. இப்பகுதியில் இன்றும் காணப்படும் ஆலய இடிபாடுகள் இதற்குச் சான்றுகளாகும். சுமார் மூவாயிரத்து ஐந்நூறு பேரைக் கொண்ட சுமார் அறுநூறு தமிழ்க் குடும்பங்கள் கரவாகு கிராமத்தில் வசித்தன. இக் குடும்பங்கள் பின்னாளில் கல்முனை முதலாம் குறிச்சி, பாண்டிருப்பு, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஓந்தாச்சிமடம் போன்ற இடங்களில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டனர். இன்று கல்முனைக்குடி- சாய்ந்தமருது எல்லையில் பிரபல கல்லூரியாக விளங்கும் பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி அமைந்துள்ள இடத்தில் முன்பு அரசாங்க தமிழ்க் கலவன் பாடசாலை அமைந்திருந்தது. பிரதான வீதியையொட்டியதாக அரசடி ஐயனார் கோயில், பிள்ளையார் கோயில் (தற்போது எரிபொருள் நிரப்பு நிலையம் உள்ளது) என்பன இருந்தன. சாஹிராக் கல்லூரிக்குச்  செல்லும் பாதையையொட்டிப் பிரதான வீதியிதிலிருந்து உள்ளே விஷ்ணு ஆலயமும் அதற்குரிய வளவும் இருந்தன. 1967 கலவரத்தில் இவையெல்லாம் தமிழர்களால் இழக்கப்பட்டன. இக்கலவரத்தில் கரவாகு கிராமத்தில் மூன்று இந்துக் கோவில்கள் எரியூட்டி அழிக்கப்பட்டன. இன்று இவையெல்லாம் காலவோட்டத்தில் முஸ்லீம் மயமாகிவிட்டன. கல்முனைக்குடி எல்லைக்குள் கரவாகு எனும் பெயர் கொண்டிருந்த பழந்தமிழ்க் கிராமம் இன்று இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது.  

கல்முனை பட்டினசபை தேர்தலை அடுத்த வன்செயல் 

முதலாவதாக நடந்த கல்முனைப் பட்டினசபைத் தேர்தலின்போது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்செயலினால் கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதிக்கும் செய்லான் வீதிக்கும் இடைப்பட்ட பகுதியில் கல்முனைக்குடியில் பிரதான வீதியையொட்டியதாக வாழ்ந்த தமிழ்க் குடும்பங்கள் பாதிப்புற்றுப் பயத்தினால் இடம்பெயர்ந்தனர். இவர்களில் ஒரு பகுதியினர் மன்னாருக்குச் சென்று குடியேறினார்கள். இவ்வாறு இடம்பெயர்ந்த தமிழர்களின் காணிகள் முஸ்லிம்களினால் அரசியல் செல்வாக்கு மற்றும் பொருளாதார வசதிப் பின்னணியில் ‘அறாவிலை’க்குக் கொள்வனவு செய்யப்பட்டன.  

சந்தையில் ஊடுருவல் 

கல்முனைப் பட்டின சபையின் முதலாவது நடவடிக்கை, தமிழ்க்குறிச்சியான கல்முனை இரண்டாம் குறிச்சியில் அமைந்திருந்த கண்ணகி அம்மன் ஆலயத்திற்கருகில் கடற்கரையோரம் இரண்டு ஏக்கர் நிலம் முஸ்லிம் மையவாடிக்கு ஒதுக்கப்பட்டது. முஸ்லிம் கிராமமான கல்முனைக்குடியில் கடற்கரையோரம் போதுமான நிலமிருந்தபோதிலும் இது தமிழர்களுக்கு எதிராகவும் தமிழர் வாழ்விடங்களுக்குள் முஸ்லிம் ஊடுருவலை நோக்கமாகக் கொண்டும் கல்முனைப் பட்டின சபை நிர்வாகத்தினால் வேண்டுமென்று செய்யப்பட்டது. இது மட்டுமல்லாமல் கல்முனைக்குடியிலே முஸ்லிம்களுக்கென்றிருந்த சந்தையை 1950இல் மூடிவிட்டு முஸ்லிம் உறுப்பினர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கல்முனைப் பட்டின சபையின் அனுசரணையுடன் தமிழர்களின் கல்முனை சந்தையில் முஸ்லீம் வர்த்தகர்கள் ஊடுருவி  அங்கிருந்த தமிழ், சிங்கள வர்த்தகர்களை இடம்பெயரச் செய்தார்கள்.  

அத்துமீறிய குடியேற்றம், ஆலய எரிப்பு  

1967ஆம் ஆண்டு கல்முனை முதலாம் குறிச்சியில் அடங்கிய கடற்கரைப் பகுதியின் அரச காணியில் சுமார் முந்நூறு முஸ்லிம் குடும்பங்கள் அத்துமீறிக் குடியேற்றப்பட்டு இப்பகுதிக்குக் ‘காரியப்பர்புரம்’ எனப் பெயரிடப்பட்டது. இதனைத் தமிழர்கள் எதிர்த்தார்கள். இதனால் ஏற்பட்ட கலவரத்தின் போது கல்முனையின் தென் எல்லையான கல்முனை மூன்றாம் குறிச்சியைச் சேர்ந்த தமிழர்கள் அதாவது கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதியை அண்டி அதற்கு வடக்கே வாழ்ந்த தமிழர்கள் தாக்கப்பட்டும் பொருட்கள் நாசமாக்கப்பட்டும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டும் அவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதால் அம்மக்கள் அகதிகளாகி அண்டைய தமிழ்க் கிராமங்களில் தஞ்சம் அடைந்தனர். கலவரம் அடங்கிய பின் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்பிய தமிழர்கள் பலர் பயத்தின் காரணமாகக் குறைந்த விலையில் முஸ்லீம்களுக்குத் தங்கள் வீடுகளை விற்றுவிட்டு வேறு இடங்களுக்குச் செல்லலாயினர். இக்கலவரத்தில் சுமார் முப்பத்தியாறு தமிழ்க் குடும்பங்கள் இடம் பெயர்ந்தன. நாகதம்பிரான் கோயில் எரியூட்டப்பட்டது. கண்ணகை அம்மன் ஆலயமும் தரவைப் பிள்ளையார் கோயிலும் சேதப்படுத்தப்பட்டன. இவ்வாறு இடம்பெயர்ந்த தமிழர்கள் சிலர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனைப் பகுதியைச்  சேர்ந்த கறுவாக்கேணிப் பகுதியில் குடியேறி வாழத் தொடங்கினர். 

 1970-1977 காலப்பகுதி  

நீர்ப்பாசனத் தேவைகளுக்காகவும் வெள்ளத் தடுப்பிற்கும் பயன்பட்டுவந்த பல சிறிய நீர்ப்பாசனக் குளங்கள் சங்கிலிக் கோர்வை போல் (Chain of Tanks) கல்முனை-அக்கரைப்பற்று பிரதான வீதி மற்றும் கல்முனை- கிட்டங்கி வீதியையண்டியதாக அமைந்திருந்தன. இக்குளங்களின் படுக்கைகள் (Tank beds) அரசியல் செல்வாக்கின் பின்னணியுடன் அப்போது இருந்த அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் முஸ்லிம் வர்த்தகர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. தாளையடிக் குளம், சந்தாங்கேணிக்குளம், மொகிரான்கேணிக் குளம், கல்லடிக் குளம், பனையான்குஞ்சுக்குளம், ஏத்தாலக் குளம் என்பன அக்குளங்களில் அடங்கும். பகிர்ந்தளிக்கப்பட்ட இந் நீர்ப்பாசனக் குளங்களின் படுக்கைகள் பின்பு மண் நிரப்பப்பட்டு கடைத் தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டன. நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி இது நடந்தது. அரசியல் செல்வாக்கும் பொருளாதார பலமுமற்றிருந்த தமிழர்களால் இதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. கல்முனை நகர்ப் பகுதியை மேலும் முஸ்லீம் மயப்படுத்தும் நோக்கமே இது.   

1977-1989 காலப்பகுதி  

இக்காலத்தில் கல்முனை முதலாம் குறிச்சியில் வாடிவீடு, கிறவல் குழி மற்றும் சவக்காலையை அண்டிய பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசத்தில் முஸ்லிம் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு இம் முஸ்லிம் குடியேற்றப்பகுதிக்கு ‘இஸ்லாமாபாத்’ எனப் பெயரிடப்பட்டது. இப்பகுதி முன்னர் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கென ஒதுக்கப் பெற்றதாகும். முஸ்லிம்களால் குடியேற்றப்பட்ட இப்பகுதியிலும் கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோவில் வீதியையொட்டியதாகக் கல்முனையின் தெற்கு எல்லையிலும் இப்போது முறையே KP 59A, மற்றும் KP 59 எனும் இலக்கங்கள் உடைய இரு முஸ்லிம் கிராம சேவகர் பிரிவுகள் சட்டத்துக்குப் புறம்பாக ஏற்படுத்தப் பெற்றுள்ளன. இவ்விரு கிராமசேவகர் பிரிவுகளும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அங்கீகரிக்கப்படாதவை. இவ்விரு பிரிவுகளும் உண்மையில் முறையே கல்முனை 1 அல்லது KP 61-1, மற்றும் கல்முனை 3 அல்லது KP 59-1 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்குள் அடங்க வேண்டியவையாகும். 

மேலும், கல்முனை நகரில் கத்தோலிக்கத் தேவாலயத்துக்குப் பின்னால் தேவாலயத்திற்குச் சொந்தமான பள்ளப் பூமி இருந்தது. இது உண்மையில் வயல் ஆகும். இப்பூமியில் முன்பு கிறிஸ்தவ இல்லச் சிறுவர்களுக்கான உணவுத் தேவைக்காக வேளாண்மை செய்யப்பட்டது. இப் பூமி பின்னர் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டு இபோச அலுவலகம் மற்றும் மடுவம் மற்றும் அரசாங்க அலுவலகங்கள் பல அமைக்கப்பட்டதுடன், கல்முனை- கிட்டங்கி வீதியையும் கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியையும் இணைத்துப் புதிய பாதை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு அதற்கு ‘ஹிஜ்ரா’ வீதியெனப் பெயரிடப்பட்டது. இவ்வாறுதான் முன்பு நூறுவீதம் தமிழர்களைக் கொண்டிருந்த கல்முனைக் கிராமம் காலவரையில் முஸ்லீம்களால் ஊடுருவப்பட்டது. இவற்றையெல்லாம் முஸ்லிம் தரப்பினர் தங்கள் வசதிக்காக இன்று மூடி மறைத்துவிட்டுக் கல்முனை தங்கள் பூர்வீகம் எனக் காட்ட முனைகிறார்கள்.  

மேலும், அன்பர் ரியாஸ் அவர்கள் தனது முகநூல் பதிவில் கடற்கரைப் பள்ளிவாசல் 1520களில் நிர்மாணிக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இருக்கலாம். இதனை நான் கேள்விக்குட்படுத்தவில்லை. இது கல்முனை-கல்முனைக்குடி எல்லையில் கடற்கரையோரம் கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதியின் கிழக்கு அந்தத்தில் உள்ளது. இது வாதப் பொருளுடன் சம்பந்தப்படாத ஒரு விடயம். கடற்கரைப் பள்ளிவாசல் நிர்மாணிப்பதற்கான நிலம் தமிழர்களால் அன்றிருந்த இன நல்லுறவுச் சூழலில் நல்லெண்ண அடிப்படையில் வழங்கப்பட்டதெனவும் வாய்மொழிக் கதைகள் உண்டு. 

‘கல்முனை நகர்ப் பள்ளிவாசல் 1834ஆம் ஆண்டு பக்கீர்தம்பிமரைக்கார், பிச்சத்தம்பி மரைக்கார் ஆகிய இரு முஸ்லிம் பெரியார்களின் காணியிலேயே நிர்மாணித்தனர். இதனை 1854ஆம் ஆண்டின் PP294 ஆம் இலக்க வரைபடத்தின் மூலம் கண்டு கொள்ளலாம்’ என்றும் அன்பர் ரியாஸ் அவர்கள் பதிவிட்டுள்ளார். பள்ளிவாசல் அமைந்த காணி தமிழர்களிடம் இருந்தும் கொள்வனவு செய்யப்பட்டிருக்கக் கூடும். இதனையும் நான் கேள்விக்குட்படுத்தவில்லை. காரணம், 1520களில் கடற்கரைப் பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டது என்பதற்காகவோ அல்லது 1834ஆம் ஆண்டு கல்முனை நகர்ப் பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டது என்பதற்காகவோ இருவெவ்வேறு தனித்தனிக் கிராமங்களான கல்முனைக் கிராமமும் கல்முனைக்குடிக் கிராமமும் இணைந்து கல்முனை என்று தனி ஒரு கிராமமாக ஆகிவிட முடியாது. அன்பர் றியாஸ் அவர்கள் முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போட முனைகிறார். அதனால்தான் இவ்விரு விடயங்களும் வாதப்பொருளுக்குப் பொருந்தாதவை என்பதால் நான் கேள்விக்குட்படுத்தவில்லை.  

இது சம்பந்தமாக, இரண்டு விடயங்களை அன்பர் ரியாஸ் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.  

ஒன்று, கல்முனை- கல்முனைக்குடி எல்லையில் அதாவது கல்முனைக் கிராமத்தின் தெற்கு எல்லை அல்லது கல்முனைக்குடிக் கிராமத்தின் வடக்கு எல்லையில் கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதியில் கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதியின் மேற்கு அந்தத்தில் அமைந்துள்ள கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் சுமார் 400 வருடங்கள் பழமை வாய்ந்ததாகும்.  

மற்றது, மட்டக்களப்பில் புளியந்தீவில் அமைந்துள்ள ‘பசாரில்’ முஸ்லிம் பள்ளிவாசல் நெடுங்காலமாக இருந்து வருகிறது. இதனை வைத்துக்கொண்டு மட்டக்களப்புப் புளியந்தீவு முஸ்லிம்களின் பூர்வீகம் என்று கூற முடியுமா? புளியந்தீவு ‘பசாரில்’ முன்பு முஸ்லிம்கள் வர்த்தக நிலையங்களை வைத்திருந்தார்களென்பதால்- தற்போது முஸ்லிம்களே பெரும்பாலான வர்த்தக நிலையங்களை வைத்திருக்கிறார்களென்பதற்காகப் புளியந்தீவு முஸ்லிம்களின் பூர்வீகம் என்று கூற முடியுமா?  

இலங்கையில் நிறைவேற்றப்பட்ட (1948/1949) இந்திய பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டத்தின் காரணமாகக் கல்முனை பசாரில் வர்த்தகம்செய்த இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் தங்கள் வர்த்தக நிலையங்களை உள்ளூர்வாசிகளுக்கு விற்றுவிட்டுத் தமது சொந்த நாட்டுக்குச் சென்றது போலவே மட்டக்களப்பு புளியந்தீவு ‘பசாரி’லும் நடந்தது.  

‘கல்முனைக் கிராமத்தின் பழைய கிராமத் தலைவர்கள் பிரிவுகள் மூன்றும் கல்முனை முதலாம் குறிச்சி, கல்முனை இரண்டாம் குறிச்சி, கல்முனை மூன்றாம் குறிச்சி, எனவும்  கல்முனைக்குடிக் கிராமத்தின் பழைய கிராமத் தலைவர்கள் பிரிவுகள் கல்முனைக்குடி முதலாம் குறிச்சி, கல்முனைக்குடி இரண்டாம் குறிச்சி, கல்முனைக்குடி மூன்றாம் குறிச்சி, கல்முனைக்குடி நான்காம் குறிச்சி, கல்முனைக்குடி ஐந்தாம் குறிச்சியெனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டமை கல்முனையும் கல்முனைக்குடியும் இரு வெவ்வேறு தனிக் கிராமங்கள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.’ என்ற எனது கூற்றிற்கு அவர் தந்துள்ள பதில் முழுவதுமே குதர்க்கமாக உள்ளதால் அதற்குப் பதிலளிக்க நான் விரும்பவில்லை. இது நேர விரயமாகும். 

முன்பு முழுக் கல்முனைத் தொகுதியையும் உள்ளடக்கியதாக அமுலிலிருந்த முஸ்லிம் பெரும்பான்மைக் கல்முனை (கரவாகுப் பற்று) உதவி அரசாங்க அதிபர் பிரிவிலிருந்து (பிரதேச செயலகப் பிரிவு) புதிய தனியான நூறு வீத முஸ்லிம் மக்களைக்கொண்ட சாய்ந்தமருது உதவி அரசாங்க அதிபர் பிரிவு (பிரதேச செயலகப் பிரிவு) உருவாதல் நியாயமென்றால் கல்முனை வடக்குத் தமிழர்களுக்கென தமிழ்ப் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவொன்றினைக் கல்முனைத் தமிழர்கள் அவாவி நிற்பதில் தவறென்ன? புதிய நிர்வாக அலகொன்றினை (பிரதேச செயலகப் பிரிவொன்றினை) ஒரு குறிப்பிட்ட பிரதேச மக்கள் கோருகின்றார்களென்றால் அது அப்பிரதேசத்துடன் தொடர்புடைய மக்கள் கூட்டத்தின் சமூக பொருளாதார அரசியல் அபிலாசைகளுடன் தொடர்புபட்டதேயொழிய, அதில் இனவாதத்தையோ மதவாதத்தையோ அல்லது பிரதேச வாதத்தையோ முதன்மைப்படுத்தக் கூடாது. சாய்ந்தமருதுப் பிரதேச செயலகத்திற்கு ஒரு நியாயம் கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்திற்கு வேறொரு நியாயமா?  

மேலும், ஒரு முக்கியமான விடயத்தை இங்கு பதிவிட வேண்டியுள்ளது. சனிட்டரி போர்ட், உள்ளூர் சபை, பட்டின சபை என்பன உள்ளூராட்சி நிர்வாகத்துடன்- பொது வசதிகளுடன் சம்பந்தப்பட்டது. அதனைப் பொது நிர்வாக அலகுக்கும் பிரதேச செயலகப் பிரிவு விவகாரத்திற்கும் பொருத்திப் பார்ப்பது பொருத்தமானதாகத் தெரியவில்லை. ஏனெனில், பொது நிர்வாகத்தைப் பொறுத்தவரை கல்முனைக் கிராமமானது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ‘கரவாகு- நிந்தவூர் பற்று’ வன்னிமைக்குள் அடங்கியிருந்தது. அப்போதைய நிர்வாக அலகான வன்னிமையைத் தற்போதைய பிரதேச செயலகப் பிரிவுடன் ஒப்பிடலாம். இந்த வன்னிமையின் கீழ்தான் கல்முனைக் கிராமம் தனியான உடையார் பிரிவாக நிர்வகிக்கப்பட்டது. பின்பு இலங்கை அரசாங்கம் வன்னிமை நிர்வாக முறைமையைப் பிரதேச இறைவரி உத்தியோகத்தர் அல்லது பிரிவுக் காரியாதிகாரி  DRO (Divisional Revenue Officer) முறைமைக்கு 1946 ஆம் ஆண்டு மாற்றியமைத்தது. 1946இல் பிரிவுக் காரியாதிகாரி முறைமை (டிஆர்ஓ டிவிஷன்) அறிமுகம் செய்யப்பட்டபோது, கரவாகு- நிந்தவூர் பற்று காரியாதிகாரிப் பிரிவு (டிஆர்ஓ டிவிஷன்) வடக்கே கல்லாறு தாம்போதியிலிருந்து தெற்கே நிந்தவூர் களியோடைப் பாலம் வரைக்கும் நீண்டிருந்தது. 1946ஆம் ஆண்டு வரை கல்முனைக் கிராமத்தின் மூன்று கிராமத் தலைவர் பிரிவுகளும் (குறிச்சிகளும்) நூறு வீதம் தமிழர்களையே கொண்டிருந்தன.  

பின்னர், டிஆர்ஓ டிவிஷன் முறைமை உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளாக மாற்றமடைந்த போது முழுக் கல்முனைத் தேர்தல்த் தொகுதியும் (பெரியநீலாவணை, மருதமுனை,நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது ஆகிய கிராமங்கள் அடங்கிய) ‘கரவாகுப்’ பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவாக மாற காரைதீவு மற்றும் நிந்தவூர் உள்ளடங்கிய பகுதி ‘நிந்தவூர் பற்று’ உதவி அரசாங்க அதிபர் பிரிவு என மாறி இரு வெவ்வேறான தனித்தனி நிர்வாக அலகுகளாகின. பின்னர், நிந்தவூர்ப் பற்றிலிருந்து காரைதீவு தனியான நிர்வாக அலகாகப் பிரிந்தது. அதேபோல், கரவாகுப்பற்றிலிருந்து சாய்ந்தமருது தனியான நிர்வாக அலகாகப் பிரிந்தது. இந்த வரலாற்று ஒழுங்கில் பார்க்கும்போது தற்போதைய அதாவது (பிரதான) கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவானது கல்முனை தெற்குப் பிரதேச செயலகப் பிரிவு மற்றும் கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவு என்று இரு தனித் தனியான நிர்வாக அலகுகளாகப் பிரிவதில் எந்தத்  தடையும் இல்லையே.  

மேலும், நண்பர் ரியாஸ் அவர்கள் 1946இல் கல்முனைப் பட்டின சபை உருவாக்கப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட குடிசனப் பரம்பலில் முஸ்லிம்கள் 5231, தமிழர்கள் 1773 எனவும் காட்டுகிறார். இது உண்மையில் கல்முனையையும் கல்முனைக்குடியையும் சேர்த்த குடிசனப் பரம்பலே என்பதைத் தனது வசதிக்காக மறைத்து விடுகிறார்.   

உண்மையில், கல்முனைக் கிராமம் இவ்வளவு காலமாக இவ்வளவு தூரம் முஸ்லீம் மயப்படுத்தப்பட்டும் கூட அதன் தற்போதைய குடிசனப் பரம்பல் அதாவது கல்முனை முதலாம் இரண்டாம் மூன்றாம் குறிச்சி எல்லைக்குள் வதியும் மக்களின் குடிசனப் பரம்பல் பின்வருமாறு 

தமிழர்கள் 9,537,  முஸ்லிம்கள் 5,196, சிங்களவர்கள் 134, ஏனையோர் 575. மொத்தம் 15,412. இன்றும்கூட கல்முனையின் மொத்தச் சனத்தொகையில் கிட்டத்தட்ட மூன்றிலிரண்டு பங்கு தமிழர்களே உள்ளனரென்பதை மேற்படி விபரங்கள் சுட்டுகின்றன. இந்த எல்லைக்குள் அதாவது கல்முனைக் கிராமத்தில் சட்டத்திற்குப் புறம்பாக ஏற்படுத்தப்பட்ட கல்முனை முஸ்லிம் பிரிவு இலக்கம் KP 59, இஸ்லாமாபாத் + கல்முனை நகர் இலக்கம் KP 59 எனும் இரு கிராம சேவகர் பிரிவுகள் உட்பட 13 கிராம சேவகர் பிரிவுகள் அடங்குகின்றன. இஸ்லாமாபாத்தும் கல்முனை நகரும் நிலத் தொடர்பற்ற கிராம சேவகர் பிரிவாக உள்ள அதேவேளை மேற்கூறப்பட்ட இரு கிராமசேவகர் பிரிவுகளும்கூட நிலத்தொடர்பற்றமுறையிலே கல்முனைப் தெற்கு பிரதேச செயலகப் பிரிவின் கீழ் நற்பிட்டிமுனை, மருதமுனை கிராமங்களுடன் சேர்த்து நிர்வகிக்கப்படுகிறது. இது நிர்வாக நடைமுறைக்கு முரணானதாகும்.  

நிறைவாக, உத்தேச கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைச் சட்டரீதியாக எல்லைகள் வகுத்து வர்த்தமானி அறிவித்தல் செய்து உருவாக்கும், (தரம் உயர்த்தும்) விடயத்தில் பின்வரும் விடயங்கள் அடிப்படையாகக் கொள்ளப்படுதல் வேண்டும். அப்போதுதான் அது பிரச்சனைக்கான நடைமுறைச் சாத்தியமான பேண்தகு தீர்வைத் தரும்.  

1. கல்முனைக் கிராமம் வேறு, கல்முனைக்குடிக் கிராமம் வேறு. இரண்டும் தனித்தனிக் கிராமங்கள். இரு கிராமங்களையும் பிரிக்கும் எல்லை கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதியாகும். 

2. கல்முனை வடக்குப் பிரதேசமென்பது கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதிக்கு வடக்கே கல்முனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பாகும். இதன் எல்லைகள் வருமாறு. வடக்கு -மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் எல்லை (பெரியகல்லாறு கிராமம்), தெற்கு- கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதி, கிழக்கு- வங்காள விரிகுடாக் கடல். மேற்கு- கிட்டங்கி வாவி. 

குறிப்பு:- 

இதில் மருதமுனையை மையமாக வைத்துத் தனியான பிரதேச செயலகப் பிரிவும் இவ் உத்தேச மருதமுனைப் பிரதேச செயலகம் தவிர்ந்த மீதிக் கல்முனை வடக்குப் பிரதேசத்திற்குத் தனியான பிரதேச செயலகப் பிரிவும் ஏற்படுத்தப்படல் வேண்டும். இதுவே நடைமுறைச் சாத்தியமான பேண்தகு தீர்வாகும். 

 3. கல்முனை தெற்குப் பிரதேசமென்பது கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதிக்குத் தெற்கே கல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருது கிராமங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பாகும். இதன் எல்லைகள் வருமாறு. வடக்கு- கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதி. தெற்கு- காரைதீவு பிரதேச செயலகப் பிரிவின் வடக்கு எல்லை. கிழக்கு- வங்காள விரிகுடாக் கடல். மேற்கு- கிட்டங்கி வாவியில் விழும் வடிச்சல் வாய்க்கால்.  

குறிப்பு:-  

2001 இல் சாய்ந்தமருதுக்கென தனியான பிரதேச செயலகப் பிரிவு ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டு விட்டது. கல்முனை தெற்கு பிரதேசத்தில் மீதமாக உள்ள கல்முனைக்குடியை உள்ளடக்கிய தனியான பிரதேச செயலகப் பிரிவு (கல்முனை தெற்குப் பிரதேச செயலகப் பிரிவு) தற்போது உள்ளபடி தானாகவே அமையும். கல்முனை வடக்குப் பிரதேச ஆள்புல எல்லைக்குள் அமையும் எந்தவொரு கிராம சேவகர் பிரிவும் நிலத் தொடர்பற்ற முறையிலே கல்முனை தெற்குப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் நிர்வகிக்கப்படும் பிரச்சனையும் எழமாட்டாது.  

4. கல்முனை வடக்குப் பிரதேச ஆள்புல எல்லைக்குள் அமையும் எந்தக் கிராமசேவகர் பிரிவுகளும் நிலத் தொடர்பற்ற முறையிலே வேறு எந்தவொரு பிரதேசச் செயலக பிரிவின் நிர்வாகத்தின் கீழும் அமைதல் ஆகாது. ஏனெனில், இது நிர்வாக நடைமுறைகளுக்கு முரணானதும் எதிர்காலத்தில் நிர்வாகச் சிக்கலுக்கு வழிவகுப்பதுமாகும்.