— அழகு குணசீலன் —
பாலஸ்தீனம் எரிகிறது. ஹாமாஸ் கடந்த சில தினங்களில் சுமார் 3500 ராக்கட்டுக்களை இஸ்ரேலை நோக்கி வீசியிருக்கிறது. பதிலடியாக வழக்கம்போல் இஸ்ரேலின் விமானங்கள் பாலஸ்தீனத்தை தவிடுபொடியாக்குகின்றன.
ஒரு தரப்பில் ஹாமாஸ் பயங்கரவாதம். மறுதரப்பில் இஸ்ரேலின் அரசபயங்கரவாதம். இவற்றிற்கு பின்னால் இருந்து செயற்படுகின்ற சக்திகள் எவை? அரபுலகம் கைகட்டி, வாய்பொத்தி, வாளாவிருக்க மேற்குநாடுகளில் மக்கள் போராட்டங்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இடம்பெற்றுள்ளன. ஆனால் மேற்குலக அரசுகளோ இஸ்ரேலைத் தோளில் தட்டிக் கொடுக்கின்றன.
உலக மக்களால் ஜனாதிபதி ட்ரம்க்கு மாற்றீடாக கருதப்பட்ட ஜோன்பைடன் தானும் அமெரிக்க மேலாதிக்கத்தின் பிரதிநிதி என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளார். உண்மையில் கீழ் வரும் வார்த்தைகளை ஜோன்பைடனிடம் இருந்து சர்வதேசம் எதிர்பார்க்கவில்லை.
“ஹாமாஸ் தாக்குதல்களில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்கின்ற தற்காப்பு உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது” – இது பைடன்-.
இந்த உரிமை பாலஸ்தீன தரப்பிற்கும் உண்டு என்று அவர் சொல்லவில்லை. ஹாமாஸ் குறித்த அனைத்து விமர்சனங்களுக்கும் அப்பால் ஜோ பைடனின் கருத்து ஒருபக்கச் சார்பானதாகவே தெரிகிறது. இங்கு பேசப்படுகின்ற தற்காப்பு உரிமை ஹாமாஸ்க்கு உரியதல்ல பாலஸ்தீன மக்களுக்கு உரியது. ஹாமாஸை அழிப்பதாகக்கூறி பாலஸ்தீன மக்களை அழிக்க இது வழிவகுக்கிறது. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு காட்டியுள்ள தவறான சைகை இது.
“நாங்கள் ஊடகவியலாளர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அல்ஜஸீரா மீது தாக்குதல் நடாத்துமாறு இஸ்ரேலுக்கு சொல்லி உள்ளோம்” -இதுவும் பைடன் நிர்வாகம் வெளியிட்ட இன்னொரு கருத்து.-
இது மரத்தால் விழுந்தவனை மாடேறிமிதித்த கதையாக இல்லையா?
ஆக, இது குறித்து பைடன் நிர்வாகத்திற்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது. அமெரிக்காவின் ஆசியோடுதான் இத்தாக்குதல் இடம்பெற்றது.
அல்ஜஸீரா தொலைக்காட்சி கட்டிடம் மீது மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலின் தாக்குதல் 2001 செப்டம்பர் 11ஐ நினைவுபடுத்துவதாக உள்ளது. இரட்டைக்கோபுரம் சரிந்து வீழ்ந்தது போன்ற காட்சி. இஸ்ரேலின் இத் தாக்குதல் யாரின் தற்காப்பிற்காக?.
அதாவது பயங்கரவாதத்தை பயங்கரவாதத்தால் எதிர்கொள்ளல். போராட்ட அமைப்புக்களின் தாக்குதல்கள் இலகுவாக பயங்கரவாத தாக்குதல்களாகின்றன. அரச தாக்குதல்கள் சுலபமாக தற்காப்பு தாக்குதல்கள் ஆகின்றன. அரச பயங்கரவாதம் சட்டரீதியான அங்கீகாரத்தைப் பெறுகிறது. அமைப்புக்களின் தாக்குதல்கள் சட்டம் ஒழுங்கை மீறியவையாகின்றன. இதுதான் சர்வதேசத்தின் பார்வை.
பாலஸ்தீன விடுதலைப்போராட்ட வரலாற்றில் தற்கொலைத்தாக்குதல் ஒரு கருவியாக எப்போதும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால் அந்த தாக்குதல்களே இன்றைய பாலஸ்தீனத்தின் அரசியல் தற்கொலையாகவும் அமைந்துவிடுமா? என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.
இன்றைய பிராந்திய, சர்வதேசிய பூகோள அரசியலில், உலகமயமாக்க சமூக, பொருளாதார கட்டமைப்பில், அணுவாயுத பலம் கொண்ட ஆயுதப்போட்டியில் பாலஸ்தீனம் அரசியல் தற்கொலையில் சிக்குமா? அதற்கு ஹாமாஸ் ஒரு காரணமாகுமா? என்பதுதான் மத்திய கிழக்கின் இன்றைய ஜதார்த்தம்.
கைநழுவிய சந்தர்ப்பங்கள்
(1) 1947 இல் பிரித்தானிய ஆட்சியாளர்கள், ஐ.நா. ஊடாக தமது ஆட்சிக்குட்பட்டிருந்த பாலஸ்தீன தேசத்தை இரு நாடுகளாகப் பிரிக்கும் திட்டத்தை முன் வைத்தனர். அதாவது யூதர்களுக்கு ஒரு நாடு, அராபியர்களுக்கு ஒரு நாடு. இந்தத் தீர்வுத்திட்டத்தை அராபியர்கள் நிராகரித்தனர். பிரித்தானிய ஆட்சிக்குட்பட்ட முழு பாலஸ்தீனமும் தமது தாயகம் என்றும் யூதர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் அராபியர்களால் வாதிடப்பட்டது.
யூதர்கள் ஹிட்லர் ஆட்சியில் இன அழிப்புக்கு உட்பட்டு நாடற்றவர்களாக உள்ளனர் என்ற உண்மையை உணர்ந்து, மனிதாபிமான அடிப்படையிலான தீர்வு ஒன்றுக்கு இணங்கி இருந்தால் பாலஸ்தீனம், இஸ்ரேல் போன்று ஒரு இறைமையுள்ள நாடாகி இன்று 75 ஆண்டுகளைத் தொட்டிருக்கும். இந்த வாய்ப்பை தவறவிட்டதன் விளைவாக பாலஸ்தீனர்கள் அதற்கு கொடுத்த விலையும் கொடுத்துக்கொண்டிருக்கின்ற விலையும் வரலாற்றில் மதிப்பிடமுடியாதது.
1948, மே, 14இல் சந்தர்ப்பத்தை பயன்படுத்திய யூதர்கள் இஸ்ரேலை தனிநாடாக பிரகடனம் செய்தனர். உலகம் முழுக்க, நாடற்றவர்களாக சிதறிக்கிடந்த யூதர்களின் ஆதரவோடும், கிட்லரின் இன அழிப்பு அனுதாபத்தோடும், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவோடும் இஸ்ரேல் விரைவில் பிராந்தியத்தில் ஆயுதபலம் கொண்ட அமெரிக்க நண்பனாக உருவாகியது அல்லது உருவாக்கப்பட்டது.
பூகோள அரசியலில் அரபு உலகிற்கு நட்டநடுவே ஒரு எதிரியை தாமாகவே உருவாக்கினார்கள் அராபியர்கள். விளைவு முழு மத்திய கிழக்கும் பாலஸ்தீன டயஸ்போராவால் நிரம்பி வழிகிறது. மாறாக யூத டயஸ்போரா திட்டமிட்டு இஸ்ரேலின் வளர்சிக்கு கைகொடுத்து நிற்கிறது. ஆயுத பொருளாதார பலம் கொண்ட நாடாக வளர்கிறது இஸ்ரேல்.
உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேல் என்ற நாட்டை இல்லாமல் செய்வதுதான் தங்கள் நோக்கம் என்று ஈரானும், ஹாமாஸும், அடிப்படைவாத தீவிரவாதிகளும் கூறுகின்றனர். இன்றைய பூகோள அரசியலில் இது எவ்வளவுக்கு ஜதார்த்தமானது? சாத்தியமானது? பென்சிலால் கீறப்பட்ட இஸ்ரேல் படத்தை அழிறப்பரால் அழிப்பது போல் அவ்வளவு இலகுவான காரியமா இது?
(2) 1988 நவம்பர் 15 இல் பி.எல்.ஓ. அல்ஜீரியாவில் வைத்து பாலஸ்தீனத்தை தனிநாடாகப் பிரகடனம் செய்தது. இந்த தேசிய பிரகடனத்தில் 1967 இல் இருந்து இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள காஸா, மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் உள்ளடங்கலாக பாலஸ்தீன தேசம் வரையறுக்கப்பட்டது. இதனை இஸ்ரேல் மட்டுமன்றி உலக நாடுகளும் அங்கீகரிக்கவில்லை. இது விடயத்தில் ஹாமாஸ் எந்த விட்டுக் கொடுப்புக்கும் தயாரில்லை என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது.
1974 இல் பாலஸ்தீன விடுதலை இயக்கங்களின் தலைவர் யாசீர் அரபாத் இஸ்ரேல் என்ற நாட்டை தாம் அங்கீகரிப்பதாக அறிவித்தார். ஆனால் ஹாமாஸும், கடும்போக்காளர்களும் இதற்கு எதிராகவே இன்றும் உள்ளனர். இதனால் இருதரப்பு இணக்கத்துடன் கூடிய தீர்வை அடைவது கல்லில் நார் உரிப்பதாக உள்ளது.
இது போன்ற பல சமாதான முயற்சிகளுக்கு ஹாமாஸ் குறுக்கவே நிற்கிறது. அப்பாஸ் தலைமையிலான மேற்குக்கரையை கட்டுப்பாட்டில் கொண்டுள்ள பாலஸ்தீன அரசு ஹாமாஸுக்கு எதிராக எதையும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. அமெரிக்க அதிபர் கிளின்டன் மேற்கொண்ட ராபினுக்கும் யாசீர் அரபாத்துக்கும் இடையிலான உடன்பாடு, நோர்வே சமாதான முயற்சிகள் அனைத்தையும் ஹாமாஸ் மூலையில் தூக்கிவீசிவிட்டது.
எல்லைகடந்த பயங்கரவாதம்
இஸ்ரேலுக்கு ஆதரவான மேற்கு நாடுகளிலும், வெளிநாடுகளில் உள்ள யூதர்களின் வழிபாட்டு தலங்கள், தூதரகங்கள், இஸ்ரேல் அதிகாரிகள் மீதும் இலக்கு வைத்து பாலஸ்தீன அமைப்புக்கள் தாக்குதல்களை மேற்கொண்டன.
1972 செப்டம்பர் 5ம் திகதி ஜேர்மனியில் இடம்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் அணிக்கு எதிராக மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதல் இதில் முக்கியமானது. இது போன்ற பல தாக்குதல்களை அமெரிக்க ஆதரவு மேற்குநாடுகளையும், இஸ்ரேல்-யூத இலக்குகளையும் குறிவைத்து பாலஸ்தீன அமைப்புக்கள் தாக்கியுள்ளன.
“கறுப்பு செப்டம்பர்” என்ற பாலஸ்தீன அமைப்பு இத்தாக்குதலை செய்திருந்தது. இதன் அன்றைய தலைவர் அலி ஹஸான் ஷலாமே.
இது பாலஸ்தீன விடுதலை இயக்கங்களை பயங்கரவாத அமைப்புக்களாக மேற்கு நாடுகள் பட்டியலிட வசதியாக அமைந்தது.
அமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதல்களுக்கு பின்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் குறிப்பாக ஹாமாஸ் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் முதன்மை பெற்றது.
ஹமாஸின் அதிதீவிரப் போக்கும், ஆயுத போராட்டமும் ஒருவகையில் பாலஸ்தீனத்தின் தற்காப்பிற்கு முக்கியமானதாக இருந்தபோதும், இன்னொரு வகையில் சமாதான முயற்சிகளுக்கு பாதகமாகவே இருந்து வருகிறது. ஹாமாஸின் தற்கொலைத் தாக்குதல்கள் இஸ்ரேலுக்குள்ளும், எல்லை குடியேற்றங்களிலும் நடாத்தப்பட்டன.
இவை அனைத்தும் பாலஸ்தீனத்தின் விடுதலையை விரைவுபடுத்துவதற்குப் பதிலாக, தள்ளித்தள்ளிப் போடுபவையாகவே அமைந்தன.
ஐ.நா.பிரகடனம்
ஐ.நா.பொதுச்சபையில் 2012 நவம்பர் 29 இல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மூலம் வாக்குரிமை அற்ற விசேட பார்வையாளர் அந்தஸ்து பாலஸ்தீனத்திற்கு கிடைத்தது. இதன்மூலம் பல நாடுகளில் பாலஸ்தீன தூதரகங்களும் திறக்கப்பட்டன. 138 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தும், 9 நாடுகள் மட்டுமே எதிர்த்தும் இருந்த நிலையில் 41 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
ஐ.நா.வின் 73 வீத நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டும், 27 வீத நாடுகளால் பாலஸ்தீன ஐ.நா. அந்தஸ்து அங்கீகரிக்கப்படாமலும் உள்ளது. எதிர்த்து வாக்களித்த நாடுகளில் அமெரிக்கா, கனடா, இஸ்ரேல் முக்கியமானவை. வாக்களிப்பில் கலந்து கொள்ளாதவையில் இங்கிலாந்து, ஜேர்மனி, அவுஸ்ரேலியா, கொரியா, சிங்கப்பூர் முக்கியமானவை.
நிலைமை இப்படி இருந்தும் முழுமையான அந்தஸ்தைப் பெறுவதற்குள்ள தடை என்ன?முக்கியமாக சுயநிர்ணய கோட்பாடு, அரசு ஒன்றின் செயற்பாட்டு கோட்பாடுகள் இரண்டும் இங்கு சர்வதேச ஆய்வாளர்களால் விவாதிக்கப்படுகின்றன. இந்த விடயத்திலும் ஹாமாஸின் வகிபாகம் பாலஸ்தீன அரசின் அங்கீகாரத்திற்கு தடையாகவே உள்ளது.
மரபு ரீதியான சுயநிர்ணய கோட்பாட்டை விடவும், சுதந்திரமான அரசு ஒன்றின் செயற்பாட்டு கோட்பாடு இங்கு முக்கியம் பெறுகிறது. பாலஸ்தீன தேசம் முழுவதும் பாலஸ்தீன ஆட்சிக்குட்பட்டு இல்லை.
மேற்கு கரையில் ஒருபகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலும், காஸா ஹாமாஸின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.
ஒரு தேசத்தின் முழு ஆள்புலமும் சரியாக வரயறுக்கப்படாத நிலையை முன்நிறுத்தியதாகவே அமெரிக்காவினதும் நட்பு நாடுகளினதும் வாதம் உள்ளது. ஹாமாஸின் கட்டுப்பாட்டில் இருந்து பாலஸ்தீன அரசு காஸாவை மீட்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
இது அப்பாஸ் அரசால் சாத்தியமா?
அல்லது தாமாகவே முன்வந்து காஸாவை அப்பாஸ் அரசிடம் ஒப்படைக்க ஹாமாஸ் விரும்புமா?
இதற்கும் இன்றைய கொதிநிலைக்கும் உள்ள தொடர்பு என்ன? ஹாமாஸை தனிமைப்படுத்த அமெரிக்கா நகர்த்தும் காய் என்ன?
அமெரிக்கா வழங்கிய தவறான சிக்னல்
அமெரிக்க ட்ரம்ப் நிர்வாகம் பாலஸ்தீனத்திற்கான உதவிகளை நிறுத்தியிருந்தது. இது ஹாமாஸுக்கு மட்டுமல்ல அப்பாஸ் நிர்வாகத்திற்கும் அமெரிக்கா கொடுத்த ஒரு அழுத்தம். சிவப்பு சிக்னல்.
மறு அழுத்தம் என்னவெனில் ஜெருசலேத்தை இஸ்ரேல் தலைநகராக அங்கிகரித்து அமெரிக்க தூதரகத்தை ரெல்அவிவ் இல் இருந்து ஜெருசலேம் நகருக்கு மாற்றியது. கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீன தலைநகர் என்று பாலஸ்தீனர்கள் கூறிவருகின்ற நிலையில் ட்ரம்ப் இதனைச் செய்தார். இது இன்னொரு சிவப்பு.
இந்த நிலையில் புதிய பைடன் நிர்வாகம் எந்த நிபந்தனைகளும் இன்றி மீண்டும் உதவிகளை பாலஸ்தீனத்திற்கு வழங்கியது. மக்களின் வாழ்வாதாரம் தொடர்பாகப் பார்க்கையில் இந்த அணுகுமுறையை சர்வதேசம் பாராட்டியது. இஸ்ரேல் கண்டித்தது. இது பாலஸ்தீனத்திற்கு பச்சை. இஸ்ரேலுக்கு சிவப்பு.
அமெரிக்க நிதி உதவியின் ஒருபகுதி “நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி புல்லுக்கும் அங்கு புசியுமாம்” என்பதுபோல் ஹாமாஸின் கைக்கும் எட்டியது. இதனைக் கொண்டு ஹாமாஸ் ஆயுதபலத்தை அதிகரித்ததாக இஸ்ரேல் ஆதரவாளர்கள் பைடனைக் குறை கூறுகின்றனர். இதைச் சரிசெய்வதற்காக மற்றொரு சிக்னலை இஸ்ரேலின் தற்காப்பு உரிமை என்று வழங்கினார் பைடன். இது இஸ்ரேலுக்கு பைடன் காட்டிய பச்சை விளக்கு.
ஒரு பக்கம் சிவப்பு, மறுபக்கம் பச்சை. இஸ்ரேல், ஹாமாஸ் வண்டிகள் மோதிக்கொண்டன. பாலஸ்தீனம் எரிகிறது.
இஸ்ரேலுக்கு ஆத்திரமூட்டி அதன்மூலம் அப்பாஸ் அரசின் மெத்தனப் போக்கை அம்பலப்படுத்தி, தான் தான் பாலஸ்தீனத்தின் பாதுகாவலன் என்ற பிரமையை பாலஸ்தீன மக்களுக்கும், தன்னைத்தவிர்த்து பாலஸ்தீனத்தில் ஒரு அணுவும் அசையாது என்று சர்வதேசத்திற்கும் சொல்லாமல் சொல்கிறது ஹாமாஸ்.
ஹாமாஸின் வியூகம்:
பாலஸ்தீனத்தில் ஹாமாஸுக்கும், அல்பத்தாவுக்கும் இடையிலான முறுகல் அதிகரித்து வருகிறது. இஸ்ரேலுடன் சமரசத்திற்கு தயாராகவுள்ள அப்பாஸ் அரசை அடிப்படைவாத தீவிரவாதிகள் விரும்பவில்லை. இவர்கள் ஹாமாஸுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால் மேற்குக்கரையை அப்பாஸ் அரசிடம் இருந்து கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் பாலஸ்தீனத்தை கொண்டுவருவது ஹாமாஸின் திட்டம்.
இதன்மூலம் ஹாமாஸ் சாதிக்கப்போவது என்ன?
* ஐ.நா. பிரகடன விவகாரத்தில் கூறப்படுகின்ற ஒரே ஆட்சி அதிகாரத்தின் கீழ் பாலஸ்தீன ஆள்புலம் இல்லை என்ற வாதத்திற்கு முடிவுகட்டுவது.
* யாசீர் அரபாத் இஸ்ரேலை அங்கீகரித்ததை மறுத்து, உலக வரைபடத்தில் இருந்து நீக்கும் கடும் போக்கை தொடர்வது.
* அப்பாஸின் அரசு ஹாமாஸிடம் விழும் பட்சத்தில் மிதவாத அரசியல் இன்றி தீவிரவாத அரசியலை இலகுவாக முன்னெடுக்க முடியும்.
* ஹாமாஸை தவிர்த்து பாலஸ்தீன விவகாரத்திற்கு தீர்வுகாண முடியாத அரசியல் சூழலை உருவாக்குவது.
* பாலஸ்தீனத்தின் அதிகாரபூர்வ ஏகபிரதிநிதி ஹாமாஸ் என்றாகும்.
ஆக, தற்கொலை அரசியல் பாலஸ்தீன விடுதலையைத்தருமா…..?
அல்லது ஹாமாஸின் அரசியல் தற்கொலையாக அது முடியுமா?
காலமே பதில் !