— சிக்மலிங்கம் றெஜினோல்ட் —
லொக்டவுணில் சில திரைப்படங்களைப் பார்த்தேன். அதில் ஒன்று “நாம் பிறந்த மண்”. சிவாஜி, ஜெமினி, கமல், கே.ஆர்.விஜயா, நாகேஸ், படாபட் ஜெயலட்சுமி நடித்த படம். வின்ஸன்ட் இயக்கியது. 1977இல் வெளியானது. முன்பு இதை 1980களின் தொடக்கத்தில் பார்த்திருந்தேன். இயக்கங்கள் புத்தெழுச்சியோடு உலவிய 1980களின் முற்பகுதியில் நாம் பிறந்த மண், கண் சிவந்தால் மண் சிவக்கும், இனியொரு சுதந்திரம், ஊமை விழிகள் போன்ற படங்கள் புரட்சிப்படங்களாக இளைஞர்களால் பார்க்கப்பட்டன.
தமிழ்ப்படங்களுக்கு அப்பால் உமர் முக்தார், பைவ் மான் ஆமி (Five Man Army), ஜெயில் பிறேக் (Jail Break), கண்ஸ் ஒவ் நவரோன் (Guns of Navoron) போன்ற படங்களும் பரபரப்பாக இளைஞர்களிடையே உலாவின.
இந்தப் படங்களை அப்பொழுதும் இப்பொழுதும் பார்ப்பதற்கும் இடையில் பெரிய வித்தியாசங்கள் உண்டு. நாம் பிறந்த மண்ணை மீண்டும் பார்க்கும்போது உடனடியாகச் சில விசயங்கள் புரிந்தன. ஒன்று, கமல்ஹாசன் தன்னுடைய தேவர் மகனுக்கான புள்ளியை நாம் பிறந்த மண்ணில் இருந்தே எடுத்திருக்கக்கூடும். மிடுக்கான – ஊர் மதிக்கின்ற தேவராக சிவாஜியும் மகனாகக் கமலும் நாம் பிறந்த மண்ணில் வருகிறார்கள். தேவர் மகனிலும் அப்படித்தான். கதையும் களமும் அது பேசும் காலமும் வேறாக இருந்தாலும் பாத்திரங்களின் உருவாக்கமும் அதிலோடும் தேவர் சாதியப் பெருமிதங்களின் அடிப்படையும் ஒன்று.
இரண்டாவது, சுதந்திரப் போராட்டத்தில் (விடுதலைப் போராட்டத்தில்) ஈடுபட்டோரின் நிலை பற்றியது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் அவர்களுடைய குடும்பமும் பின்னாளில் பொருளாதார ரீதியிலும் அதிகாரத்திலும் எப்படிக் கீழிறக்கம் கண்டு குடும்பத்திலேயே நெருக்கடிகளையும் மன உளைச்சலையும் பெறுகின்றனர் என்பது. தந்தை தேவர் (சிவாஜி) சுதந்திரப் போராட்டத்தில் செயற்பட்டு, அதற்காகக் கூடப் பிறந்த தங்கையையும் இழந்து, சிறை வரை சென்று மீண்டு வந்தால் விடுதலைக்குப் பிந்திய சமூகத்தில் பொறுப்பின்மையும் ஊழலும் முறைகேடுகளும் பொருளாதார நெருக்கடிகளும் வேலை வாய்ப்பின்மையும் எப்படி அந்தக் குடும்பத்தை வதைக்கின்றது என்பது.
முக்கியமாக இலட்சியவாதத்துடன் வாழ்ந்த – இறுதி வரையில் அப்படியே வாழ முற்படும் தந்தைக்கும் எல்லாமே மாறி, சீரழிவே சமூகமாகிய சூழலில் அதனோடு கரைந்தும் கலந்தும் போக முற்படும் மகனுக்குமிடையிலான மோதலை – முரணை முன்வைப்பது.
ஏறக்குறைய இதையொத்த – இந்த- நிலையை நாம் நம்முடைய சூழலிலும் பகிரங்கமாகக் கண்டு கொண்டிருக்கிறோம். முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள் பின்னர் சமூகத்தாலேயே கைவிடப்பட்டு, அநாதரவான நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இது தனியே விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளுக்கு மட்டும் நேர்ந்ததல்ல. அத்தனை விடுதலை இயக்கங்களையும் சேர்ந்தவர்களுக்கும் நேர்ந்திருக்கும் அநீதி. அவர்களுக்கு மட்டுமல்ல, இடதுசாரிய அரசியலை ஆத்ம சுத்தத்தோடும் அர்ப்பணிப்போடும் முன்னெடுத்தவர்களுக்கும் நேர்ந்திருக்கும் அநியாயம்.
சொந்த மண் மீதான நேசமும் தங்களுடைய உயிர் மூச்சென இலட்சியவாதத்துடன் வாழ்க்கையைத் தொடங்கியவர்கள், பின்னாளில் நாளாந்த வாழ்க்கையை ஓட்டுவதற்கே சிரமப்படுகிறார்கள் என்பது எவ்வளவு கொடுமையானது. ஆனால் இதையெல்லாம் கண்டு கொண்டே கடந்து செல்கின்றனர் பலரும். பதிலாக புதிதாக அரசியலில் முளைத்தவர்களும் போராட்ட அரசியலுக்கு அப்பாலிருந்தவர்களும் போராளிகளை மனதிற் கொள்ளாதவர்களுமே இன்று அதிகாரத்திலும் அரசியலிலும் செல்வாக்குச் செலுத்துகின்றனர். இந்தியாவில் காந்தியும் காந்தியமும் எப்படி பின் வந்த அரசியலாளர்களுக்கு உபயோகப் பொருளாகப் பயன்பட்டனவோ, அப்படி அதையொத்ததாகவே இங்கே புலிகளும் (விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர்களும்) புலிகளின் தலைவர் பிரபாகரனும் பயன்படுத்தப்படுகின்றனர். ஒரு தோற்ற மாயையின் மூலம் மக்களை மயக்க நிலைக்குட்படுத்தி தமது அதிகாரத்தையும் அதன் வழியான நலனையும் இவர்கள் கட்டமைக்கின்றனர்.
ஏறக்குறைய இதை ஒத்த போக்கினை –உண்மையினைச் சொல்லும் இன்னொரு படம் இனி ஒரு சுதந்திரம். மணிவண்ணனின் இயக்கத்தில் உருவாகிய இந்தப் படத்தில் சுதந்திரப் போராட்ட வீரராக – தியாகியாக சிவகுமார் நடித்திருந்தார். பின்வந்த காலத்தில் ஊழலும் அரசியல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளும் எப்படி உள்ளன என்பதைச் சுட்டும் பாத்திரங்களில் வினுசக்கரவர்த்தியும் ராஜாவும் நடித்திருந்தனர். பின்காலத்தில் நிலவும் மோசமான அரசியல், நிர்வாகச் சீர்கேடுகளில் உழலும் பாத்திரங்களாக –மனிதர்களாக சந்திரசேகர், நளினி, ரேகா போன்றோர் நடித்திருந்தனர். சுதந்திரத்துக்காகப் போராடியவர்கள் (விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள்) துயரத்திலும் அவமானத்திலும் வாழ்ந்து மடிவதாக இந்தப் படம் உண்மையைச் சொன்னது. இதே உண்மைதான் இன்று இங்கே –நம்முடைய மண்ணிலும் யதார்த்தமாகியுள்ளது. நம்முடைய கண்ணுக்கு முன்னே போராளிகளாக இருந்தவர்கள் இன்று படுகின்ற அல்லல்கள் ஏராளம். அன்று மதிக்கப்பட்டவர்கள் இன்று கவனிக்கப்படாமல் விடப்படுகிறார்கள். தங்களுடைய நாளந்த வாழ்வுக்காக இவர்கள் படுகின்ற பாடுகள் கொஞ்சமல்ல.
பள்ளிப் பருவத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டதால் தொடந்து படிக்கவோ ஒரு தொழிலைப் பயிலவோ முடியாத நிலை இவர்களுக்கிருந்தது. அதனால் போர் முடிந்த பிறகு இயல்பு வாழ்வில் இணைய முடியாமல் – ஒரு தொழிலை முறையாகப் பெற்றுக் கொள்ள முடியாமல் பலர் துன்பப்படுகிறார்கள். பலர் விழுப்புண்ணடைந்த நிலையில் – கை, கால், கண் என உடல் உறுப்புகளை இழந்த நிலையில் இன்னும் சிரமப்படுகிறார்கள். பல பெண் போராளிகள் திருமண வயதைக் கடந்து தனித்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களைப் பொருட்படுத்தாதவர்களெல்லாம் உயிர் நீத்தவர்களை நினைவு கூர முண்டியடிக்கிறார்கள். இதற்குப் பின்னே ஒரு வலுவான அரசியல் உண்டு. இறந்தோரை நினைவுகூர்வதென்பது அரசை எதிர்ப்பதாகவும் செலவுகளற்றதாகவும் இருக்கிறது. உயிரோடுள்ளோருக்கு வேலை செய்வதென்பது செலவையும் அர்ப்பணிப்பையும் கோருவது. முன்னதுக்கு அரசைப் பொறுப்பாக்கி விட்டுத் தப்பி விடலாம். பின்னதுக்கு நாமே பொறுப்பேற்க வேண்டும். அது கடினமானதல்லவா. ஆகவேதான் இந்தக் கீழ்மை.
இதையெல்லாம் பேசுவதற்கு நமது கலை இலக்கியப் பெருவெளியும் தயாராக இல்லை. நம்முடைய மனவெளியிலும் இடமில்லை. நமது ஊடக, அரசியல் கலாச்சார வெளியிலும் கவனமில்லை. ஆனால் இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு அங்கே நடந்த நியாய மறுப்புகளையும் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அல்லது வீரர்கள் அவமதிக்கப்பட்டதையும் குறித்து ஏராளமான மறுகுரல்கள் எழுந்திருக்கின்றன.
சினிமாவாக, கதைகளாக, அரசியல் முன்வைப்புகளாக, நாடகங்களாக எனப் பல வடிவங்களில். ஒரு மனச்சாட்சியுள்ள சமூகம் அப்படித்தான் இருக்கும். அப்படித்தான் இயங்கும். தனக்கு முன்னே நடக்கும் நியாய மறுப்புகளை அது எதிர்க்கும். நியாயத்துக்காகக் குரல் கொடுக்கும். அதுதான் ஜனநாயக ரீதியிலும் சரியானது. முக்கியமானது.
அண்மைக்காலமாக இந்திய சினிமாக்களிலும் (தமிழ் சினிமாக்களிலும்) சரி, தமிழக ஊடகப் பொதுவெளியிலும் சரி அரசியற் பரப்பிலும் சரி சாதியப் பிரச்சினைகள் தூக்கலாகப் பேசப்படுகின்றன. அங்கே சாதிய அடிப்படையில் கட்சி அரசியல், தேர்தல் அரசியல், வேட்பாளர் தெரிவுகள் போன்றவை நடந்தாலும் அவற்றைக் குறித்த எதிர்ப்புக் குரல்களும் முன்வைக்கப்படுகின்றன. அண்மையில் வெளியாகிப் பெரு வெற்றியைப் பெற்ற –முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் பலவும் சாதியப் பிரச்சினையை மையப்படுத்தியவையே.
ரஜினியின் காலா, கபாலி, தனுஷின் அசுரன், கர்ணன் தொடக்கம் காதல் வரையில் ஏராளம் படங்கள். ஆனால் இங்கே – தமிழீழப் பரப்பில்? கள்ள மௌனம் காக்கப்படுகிறது. கள்ளத்தனமாக விசம் வளர்க்கப்படுகிறது. சாதியம், பிரதேச வாதம், விடுதலைப் போராளிகளை ஒதுக்குதல், பெண்களை ஒடுக்குதல், மாற்று அரசியலை நிராகரித்தல், அதைத் துரோகச் செயற்பாடாக அடையாளப்படுத்தல் என்று ஜனநாயக மறுப்புச் செயற்பாடுகள் தாராளமாக நடக்கிறது. பதிலாக மறுவளத்தில் விடுதலை வேண்டும் என்ற கூக்குரல்கள் ஒலிக்கின்றன. இவை எல்லாவற்றையும் மறைப்பதற்காக அரச எதிர்ப்பு வாதத்தைத் தூக்கி நிறுத்துகிறார்கள். கூடவே தமிழ்த் தேசியம் என்ற திரைச் சீலை தொங்க விடப்படுகிறது.
ஒரு பக்கத்தில் விடுதலைக்கு எதிராக, பிறருடைய உரிமைகளுக்கு எதிராகச் செயற்பட்டுக் கொண்டு மறுபக்கத்தில் விடுதலை வேண்டும் என்று குரல் எழுப்புவது என்பது எவ்வளவு கீழான செயல்? எவ்வளவு அயோக்கியத்தனமானது? ஏனிந்த முரண்?ஏனிந்த இரட்டை முகம்? ஏனிந்த நாடகம்?
இதேவேளை இந்தியச் சூழலில் எல்லாம் மிகச் சரியாக நடக்கிறது என்றில்லை. அங்கும் மிக மோசமான ஒடுக்குமுறையும் முரண்களும் போலிடத்தனங்களும் நிறையவுண்டு. ஆணவக் கொலைகள் உச்சமாக நடக்கிறது. ஆனால் அதையெல்லாம் எதிர்க்கவும் பேசும் கூடிய சூழலும் அங்குண்டு. அதாவது அங்கே எதுவும் திரையிழுத்துப் போர்த்தி மறைக்கப்படவில்லை. அதுதான் ஜனநாயகம். அதுதான் ஊடகப் பண்பாடு. அதுதான் அறிவியல்.
இதற்கெல்லாம் அகவிழி (நெற்றிக் கண்) திறப்பது எப்போது?